கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, August 25, 2017

ஒரு நடிகை நாடகம் பார்ப்பதை ஒரு ரசிகை நினைத்துப் பார்க்கிறாள்

ஒரு நடிகை நாடகம் பார்ப்பதை ஒரு ரசிகை நினைத்துப் பார்க்கிறாள் 


ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - திரைப்படமாக்கப்பட்ட ஜெயகாந்தனின் இன்னொரு கதை. 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படம் தந்த வெற்றியில்   இந்த கதையையும் படமாக்கினார்கள் போலிருக்கிறது, ஆனால் படம் வெற்றி பெறவில்லை. இந்த படத்தின் பலம் , வசனம்(இந்தப் படத்தை பார்ப்பதற்கு பதிலாக, எல்.பி. ரெகார்டாக வந்தால் போட்டுக் கேட்கலாம் என்று விகடன் விமர்சனத்தில் எழுதியிருந்தார்கள்)நடிப்பு, மற்றும் பாத்திரப் படைப்பு. இந்த படத்தில் வரும் கல்யாணியைப் போன்ற பெண் பாத்திரப் படைப்பை அதற்கு முன்னும் தமிழ் சினிமாவில் கண்டதில்லை, அதற்கு பின்னும் இது வரை காணவில்லை.

கல்யாணியை காதலித்து மணந்து கொள்ளும் பத்திரிகையாளன் ரெங்கா, அவளோடு ஏற்படும் கருத்து  வேற்றுமை காரணமாக," ஒரு நல்ல நட்பை நாம் அவசரப் பட்டு கெடுத்து விட்டோம், பிரிந்து விடலாம்" என்பான். அதற்கு அவள், நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நீங்கள்தான் சொன்னீர்கள், இப்போது பிரிந்து விடலாம் என்றும் நீங்கள்தான் சொல்கிறீர்கள், இதில் எனக்கு எதுவும் இல்லை" என்பாள்.

என்னைப் பிரிந்தால் நீ வருத்தப் படுவாயா? என்று கணவன் கேட்க, "இல்லை வருத்தப்பட மாட்டேன், உங்களோடு இருந்த நாட்களை நினைத்துக் கொண்டு சந்தோஷமாக இருப்பேன்" என்று அவள் கூறியதும், "உன்னுடைய இந்த பதில் எனக்கு ஏமாற்றமளிக்கிறது. அதுதான் ஆம்பள புத்தி" என்பான்.

விவகாரத்துக்காக அவர்கள் சந்திக்கும் ரங்காவின் நண்பரான வக்கீல்," நீங்கள் சொல்வதெல்லாம் விவாகரத்துக்கு போதுமான காரணம் கிடையாது. நீங்கள் இரண்டு பேரும் ஒரு வருடம் பிரிந்திருக்க வேண்டும்" என்று கூறி விடுகிறார். அந்த கால கட்டத்தில் கல்யாணிக்கு இடுப்புக்கு கீழே பாதிக்கப்பட்டு, நடக்க முடியாமல் படுத்த படுக்கையாகி விடுகிறார்.  அந்த செய்தியை கேள்விப் பட்டு அவளுக்கு உதவுவதர்க்காக வந்து அவளோடு சேரும் ரங்காவிடம் வழக்கறிஞர், "நீ கேட்ட விவாகரத்து கிடைப்பதற்கு இந்த ஒரு காரணம் போதும்" என்றதும், "வாழ இஷ்டமில்லாத இரண்டு பேரை இழுத்து பிடித்து வாழச் சொல்லி கட்டாயப் படுத்தும் உங்கள் சட்டம், எப்போது ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்கவேண்டுமோ அப்போது பிரிந்து போகலாம் என்கிறது" என்று சீறுவார்.  

படம் கொஞ்சம் மெதுவாகத்தான் நகரும். இருந்தாலும் எல்லா பாத்திர படைப்புகளுமே சிறப்பு. சொற்ப நேரமே வரும் தேங்காய் சீனிவாசன்,காந்திமதி போன்ற எல்லோருமே நன்றாக நடித்திருப்பார்கள். ஸ்ரீகாந்த் நடித்திருந்த ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று. லட்சுமியின் நடிப்பை பற்றி சொல்ல வேண்டுமா?  கதையை படிக்கும் பொழுது கல்யாணி, ரங்கா பாத்திரங்களைப் பற்றி நம் மனதில் வரும் பிம்பங்களை முழுமையாக லட்சுமியும் ஓரளவுக்கு ஸ்ரீகாந்தும்  திரையில் கொண்டு வந்திருப்பார்கள். ஆனால் படிக்கும் பொழுது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாத வக்கீல் கதா பாத்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு  நாகேஷ் நடிப்பில் விஸ்வரூபம் எடுத்திருப்பார்.

என்னுடைய கல்லூரி காலத்தில் பார்த்த படம் இது. இப்போதும் ஜெயா டி.வி.யில்(அதில் மட்டும்தான் போடுகிறார்கள்) ஒளிபரப்பும் பொழுதெல்லாம் பார்ப்பேன்.

இந்த படத்தில் இரண்டு பாடல்களை ஜெயகாந்தன் எழுதி இருக்கிறார். அதில் கடைசியில் வரும் பாடல் இது.





17 comments:

  1. முன்பே அறிந்த விடயங்களே...
    இப்பாடலை முதன்முறையாக கேட்கிறேன்.
    பாரதியார் பாடலைப்போன்ற சாயல் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அருமையான பாடல். "நம்மை என்பதும்,டீமை என்பதும் நாம் அணிந்திடும் வேடமே, இதில் வெல்வதென்னடி? தோல்வி என்னடி?
      மேடையில் ஓர் விளையாடலில்..?" எத்தனை அர்த்தம் பொதிந்த வரிகள்! வருகைக்கு நன்றி ஜி!

      Delete
  2. தொலைக்காட்சியே அதிகம் பார்ப்பதில்லை. பார்த்தாலும் பொதிகைத் தொலைக்காட்சி தான்! எப்போதேனும் ஓரிரு ஹிந்திப் படங்கள் ஜீ தொலைக்காட்சியிலோ சோனியிலோ வந்தால் நல்ல படமா எனத் தெரிந்து கொண்டு பார்ப்பேன். இப்போ செட் டாப் பாக்ஸ் போட்டதும் நிம்மதி! ரிமோட்டை வைத்துக்கொண்டு எப்படிக் கொண்டு வருவதுனு இன்னும் புரியலை! ஆகவே ரங்க்ஸ் போடறச்சே போடும் சானலைப் பார்ப்பது தான் ஒரே வழி! :) இந்தக் கதை தான் படிச்சிருக்கேன். படம் பார்த்ததில்லை! சில நேரங்களில் சில மனிதர்கள் சிறுகதை உருவம், நாவல் படித்தேன். படம் பார்த்தது இல்லை.

    ReplyDelete
    Replies
    1. நானும் பொதிகை பார்ப்பதுண்டு. ஆனால் இன்னும் பொதிகை மாறாமல் நிகழ்ச்சியின் பாதியில் கழுத்தை நெரிப்பதை நிறுத்தாமல் இருப்பதை பார்த்தால் எரிச்சல் வருகிறது. வருகைக்கு நன்றி!

      Delete
    2. ஹாஹா, எல்லா நிகழ்ச்சிகளையும் அப்படி நெரிப்பதில்லை. ஆனால் அரசுத் தொலைக்காட்சிகளுக்கு என நேரக் கட்டுப்பாடு உண்டே! தனியார் மாதிரி இஷ்டத்துக்குக் காட்ட முடியாது! விளம்பரங்களும் அதிகம் வராது! தனியார் தொலைக்காட்சியில் 30 நிமிடம் தொடர்கள் காட்டுவதில் 3 நிமிஷம் தொடரின் ஒரு பகுதி ஏழு நிமிடம் விளம்பரம்! விசேஷ நாட்கள் சனி,ஞாயிறு விடுமுறைச் சிறப்புக்களின் போது 2 நிமிஷமே தொடர், எட்டு நிமிடம் சில சமயம் அதற்கும் மேல் விளம்பரங்கள்! :(

      Delete
  3. அபிப்ராயத்தை மாற்றிக்கொண்டு மறுபடி ஒரு தரம் பார்க்கலாமா என்று யோசிக்கிறேன். சிறுவயதில் பார்த்தது என்பதால், அபிப்ராயம் இப்போது மாறலாமோ என்கிறது உங்கள் விமர்சனம். ஆனால் சி நே சி ம அப்போதே பிடித்ததே...!

    ReplyDelete
    Replies
    1. //ஆனால் சி நே சி ம அப்போதே பிடித்ததே...!// அப்போது பொறுமை இருந்திருக்காது. இப்போது ரசிக்க முடியும், பாருங்கள். வீடியோவை இணைக்க கற்றுக் கொடுத்ததற்கு நன்றி!

      Delete
  4. ஸ்ரீராம் எனக்கு இந்த ரெண்டு படங்களூமே ரொம்பப் பிடித்தது. ஒநநாபா வில் வசனங்கள் நச்...மிக மிக நான் ரசித்திருக்கிறேன்...

    உதாரணத்தை பானுக்காவே கொடுத்திருக்கிறார்..//, "வாழ இஷ்டமில்லாத இரண்டு பேரை இழுத்து பிடித்து வாழச் சொல்லி கட்டாயப் படுத்தும் உங்கள் சட்டம், எப்போது ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்கவேண்டுமோ அப்போது பிரிந்து போகலாம் என்கிறது" // எவ்வளவு அருமையான வசனம் இல்லையா...கதாநாயகியின்.கதாபாத்திரமும் அப்படித்தானே!

    பானுக்கா அருமையான விமர்சனம். பல வருடங்கள் ஆகிவிட்டது படம் பார்த்து. திருமணத்திற்கு முன் பார்த்தது. பானுக்கா ஒரு வேளை ஸ்ரீகாந்திற்குப் பதிலாக வேறு கதாநாயகர்கள் நடித்திருந்தால் இன்னும் நன்றாக ரீச் ஆகி வெற்றிப் பெற்றிருக்குமோ என்னவோ என்று எனக்குத் தோன்றியது அப்போதே. ஸ்ரீகாந்தின் நடிப்பு எனக்கு அவ்வளவு நிறைவாக இல்லை. லக்ஷ்மியும் நாகேஷும் டாப்!! நாவல்கள் படமாக எடுக்கப்படும் போது அதன் கதாப்பாதிரங்கள் உயிர் பெற்றால் மட்டுமே திரையில் வெற்றி பெறும். அது போன்று திரைக்கதை...

    ஸ்ரீராமிற்குப் போல் எனக்கும் பார்க்க வேண்டும் போல் உள்ளது ...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதா! பாருங்கள் பாருங்கள் ... என் பதிவால் கூட கொஞ்சம் உபயோகம் இருக்கு போலிருக்கிறதே,,!:))

      Delete
  5. சரியாப் போச்சு, ஒரே தலைப்பில் இரண்டு பதிவா? ஏமாந்துட்டேனே!

    ReplyDelete
    Replies
    1. அது வேறொன்றுமில்லை, வீடியோவை இணைக்கத் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன், ஸ்ரீராமிடம் கேட்டு, அவர் சொன்னபடி செய்ததும், அது பப்லிஷ் ஆகி விட்டது. பிறகுதான் புரிந்தது, எழுதி வேண்டியவைகளை எழுதி விட்டு, வீடியோவை இணைக்க வேண்டும் என்று.. ஹி! ஹி!

      Delete
  6. படம் பார்த்ததில்லை பார்க்கவும் தோன்றவில்லை

    ReplyDelete
  7. Replies
    1. முடிந்தால் பாருங்கள்.

      Delete
  8. நானோ பதிவுத் தலைப்பை ரசித்தேன்.

    ஜெயகாந்தனின் பாடல் வரிகள் உயிர்ப்புள்ளவை.

    ReplyDelete
  9. அருமையான படம். அருமையாக நடித்து இருப்பார்கள் எல்லோரும்.
    பாடல் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete