கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, January 12, 2018

உங்களிடம் சில வார்த்தைகள் ... கேட்டால் கேளுங்கள் ...

உங்களிடம் சில வார்த்தைகள் ...
கேட்டால் கேளுங்கள் ...



அறிவுரை! இதற்கா பஞ்சம் நம் நாட்டில்? அதுவும் பெண்ணாக பிறந்தவர்களுக்கு? சிறு வயதிலிருந்து நிறைய கேட்டிருக்கிறோம். எப்படி உட்கார வேண்டும்?, எப்படி சாப்பிட வேண்டும்?,ஏன்? எப்படி தூங்க வேண்டும்? என்பது வரை பல பல அறிவுரைகள். 

வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் விசேஷமாக அறிவுரைகள் கிடைக்கும்."பத்து பேர் வந்திருக்கும் பொழுது குறுக்கும் நெடுக்கும் என்ன நடை?, கெக்கே பிக்கே என்று என்ன சிரிப்பு?" இவை எல்லாம் மற்றவர்கள் கவனத்தை கவரும் வகையில் பெண்கள் நடந்து கொள்ள கூடாது என்பதை வலியுறுத்தத்தான், ஸ்வாதீனம் இருப்பதால் கொஞ்சம் கோபமாக சொல்கிறார்கள் என்பதை புரிய வைத்தவர் எங்கள் குடும்பத்திற்கு  மிகவும் நெருக்கமான ஐயங்கார் மாமி.  நான் சிறுமியாக இருந்த பொழுது ஒரு முறை என்னை எதற்கோ என் மாமா திட்டிக் கொண்டே இருந்தார். எனக்கு பயங்கர எரிச்சல். ஐயங்கார் மாமியிடம் சென்று, "மாமா என்னை திட்டிண்டே  இருக்கா, எனக்கு பிடிக்கவே இல்லை", என்றதும், என்னை உற்றுப் பார்த்த மாமி, மெல்லிய குரலில்(மாமி கோபமாக குரலை உயர்த்தி பேசி நான் கேட்டதே இல்லை),

"நேத்திக்கு மாமா பானுவை டவுனுக்கு அழைச்சுண்டு போய், சோன்பப்டி, ரோஸ் மில்க் எல்லாம் வாங்கி கொடுத்தப்போ பானுவுக்கு மாமாவை பிடித்தது, இன்னிக்கு கோபித்துக் கொள்ளும் பொழுது மாமாவை பிடிக்கவில்லை,அப்படித்தானே?" என்றார். இந்த நிகழ்ச்சி நடந்த பொழுது நான் மிகவும் சிறியவள், பத்து வயது கூட ஆகவில்லை, ஆனாலும்  என் மனதில் ஆழப் பதிந்த விஷயம் நம்மை திட்டுகிறவர்கள் நம் எதிரிகள் அல்ல. 

என் பாட்டி இதையே வேறு விதமாக சொல்வார். வீட்டில் யாராவது நம்மை கோபித்து,அதற்காக நாம் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டால், உடனே என் பாட்டி,  "அழ அழ சொல்பவர்கள் நம் மனுஷா சிரிக்க சிரிக்க சொல்பவர்கள் அயலார்" என்பார்.

 நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு முறை என் பி.டி. டீச்சர் நான் அணிந்திருந்த சட்டை நீளம் குறைவாக இருக்கிறது என்று என்னைத் திட்டினார். அவருக்கு பயந்து நான் சட்டையை இன் பண்ணிக் கொண்டு, பாவாடை, தாவணி அணிந்து செல்வேன்.(இந்த விஷயத்தை என் மகளால் நம்பவே முடியவில்லை. தாவணி அணிந்து கொண்டா ஸ்கூலுக்குச் செல்வீர்கள்?) . அன்றைக்கு பி.டி. பீரியட் இல்லாததால் சாதாரண சட்டை அணிந்து கொண்டு சென்று விட்டேன். அதுவும் குட்டை சட்டை கிடையாது. அப்படி குட்டையாக சட்டை போட்டுக் கொள்ள வீட்டில் அனுமதிப்பார்களா என்ன? இருந்தாலும் சட்டையை இன் பண்ணிக்க கொள்ளவில்லை என்று டீச்சர் ஒரே திட்டு. வீட்டில் வந்து என் பாட்டியிடம்,

"பாட்டிமா இன்னிக்கு என்னை ஸ்கூலில் பி.டி. டீச்சர் திட்டினா பாட்டிமா" என்றதும் என் பாட்டி "ஏன்?" என்று கேட்கவில்லை, "நீ என்ன பண்ணின?" என்றுதான் கேட்டார். விஷயத்தை சொன்னதும், "நல்லதுக்குத்தானே சொல்றா, டீச்சருக்கு என்ன உன் மேல் விரோதமா? உன்னை திட்டணும்னு ஆசையா? புருஷாளோட(ஆண்களோடு) படிக்கிறோம், நாமதானே  ஒதுக்கமா இருக்கணும்?" என்று என் வாயை அடைத்து  விட்டார். 

பாட்டி எத்தனை நல்ல விஷயத்தை சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்பது என் மகன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பொழுது, ஒரு முறை பேரண்ட் டீச்சர்ஸ் மீட்டிங்குக்கு சென்ற பொழுதுதான்  புரிந்தது. என் மகனோடு படித்த ஒரு பெண்ணின் தாய் முதலில் நன்றாக பேசிக் கொண்டிருந்தார், அந்த வகுப்பாசிரியர் அவருடைய பெண்ணைப் பற்றிய குறைகளை சொல்ல ஆரம்பித்தோரா இல்லையோ இவருக்கு முகம் மாறி விட்டது. "complaining, complaining" என்று பொருமித் தள்ளினார். தன் பெண்ணை மேம்படுத்தவே அந்த ஆசிரியர் அந்த குழந்தை செய்த தவறுகளை சுட்டிக் காட்டுகிறார் என்பதை  கூட புரிந்து கொள்ள முடியாத தாய், அந்தப் பெண்ணை எப்படி நெறி படுத்துவார் என்று நினைத்துக் கொண்டேன்.  என் பாட்டி போல ஒரு பாட்டி அவர்கள் வீட்டில் இல்லையோ என்னவோ?

என் அப்பாவோ, அம்மாவோ அதிகம் அட்வைஸ் கொடுத்ததில்லை. அம்மா மிகவும் வேகமானவர். நான் என் அம்மாவை வந்தியத் தேவி என்பேன். ஏனென்றால், கல்கி, பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனைப் பற்றி "அவன் ஒரு செயலை செய்ய வேண்டும் என்று நினைப்பதற்கும், செய்து முடிப்பதற்கும் கால இடைவெளியே இருக்காது, ஒரு செயலை செய்ய வேண்டும் என்று நினைக்கும் பொழுதே அதை செய்து முடித்திருப்பான்" என்று வர்ணித்திருப்பார். என் அம்மாவும் அப்படித்தான். அவ்வளவு வேகமாக இருப்பவரர்களுக்கு மற்றவர்களுக்கு சொல்லித் தரும் பொறுமை இருக்காது. 
"மேயற மாட்டுக்கு கொம்பிலா புல் சுற்ற முடியம்?" என்பது என் அம்மாவின் கேள்வி. அம்மாவைப் பார்த்து கற்றுக் கொண்ட விஷயங்களுள் முக்கியமானது மற்றவர்கள் குறைகளை பெரிது படுத்தக் கூடாது என்பதுதான். அதை அம்மா வலியுறுத்துவாள் சொல்லிலும்,செயலிலும். 

சிறு வயதில் பல விஷயங்களை சொல்லிக் கொடுத்தவர் என் பெரிய மாமி. "சாப்பாட்டை மென்று சாப்பிட வேண்டும், ஆனால் சாப்பிடும் பொழுது சத்தம் வரக்கூடாது". "குளித்து விட்டு முகத்தை அழுத்தி துடைக்கக் கூடாது, மென்மையாக ஒற்றி எடுக்க வேண்டும்" என்று அவர் சொல்லி கொடுத்ததை இன்று வரை கடை  பிடிக்கிறேன். இதைத் தவிர 'குட் டச்', 'பேட் டச்' போன்ற விஷயங்களையும் சொல்லிக் கொடுத்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார்.

என் பெரிய அக்காவும் என்னைப் போலவே புத்தகப் பிரியை. புத்தகங்களை மடக்குவதோ, அடையாளத்திற்காக ஓரத்தை மடிப்பதோ அவருக்கு பிடிக்காது. அவருக்கு எந்த புத்தகம் படிக்க கொடுத்தாலும் உடனே அட்டை போட்டு விடுவார். புக் மார்க் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியவர் அவர்தான். புத்தகங்களில் கிறுக்குவது போன்ற விஷயங்கள் அவருக்கு கட்டோடு பிடிக்காது. பெயரைக் கூட முதல் பக்கத்தின் ஓரத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்பார். இன்றைக்கும் என் சேமிப்பில் இருக்கும் புத்தகங்கள் புதிது போலவே இருப்பதற்கு என் அக்காதான் காரணம்.

என் அண்ணா சிக்கலான சில நேரங்களில் முக்கியமான சில அறிவுரைகளை வழங்கியிருக்கிறார். அவைகள் மிகவும் ப்ரத்யேகமானவை என்பதால் பகிந்து கொள்ள முடியாது. என் கோபத்தை குறைத்துக் கொள்ளச் சொல்லி என்னை விட ஒரே ஒரு வயது மூத்தவளான என் கடைசி அக்கா எத்தனையோ அறிவுரைகளை கூறியும் நான் அவைகளை எடுத்துக் கொண்டதே இல்லை. அவளால் இயலாததை என் மகள் சாதித்தாள்.

ஒரு முறை எனக்கும் ஒரு ஆட்டோக்காரருக்கும் எங்களை சுற்றி கூட்டம் கூடும் அளவிற்கு பெரிய வாக்குவாதமாகி விட்டது. இறுதியில் அவர் கேட்ட தொகையை கொடுத்து விட்டு வரும்பொழுது, என் மகன்,"அம்மா நீ ரொம்ப கத்திவிட்டாய்" என்றான்.
"என்னடா, அவன் செய்தது சரியா?" என்றேன்
 உடனே என் மகள்,"அவன் செய்தது தப்புதான்மா , ஆனால் அதுக்காக நீ சண்டை போட்ட பொழுது உன்னை எல்லோரும் வேடிக்கை பார்த்தார்களே..! " என்றாள். 

என்னை யாரோ கன்னத்தில் ஓங்கி அடித்தது போல்  இருந்தது. அப்போது என் மகளுக்கு எட்டு வயதுதான், அந்த வயதில் அவ்வளவு மெச்சூரிட்டியோடு அவள் கூறிய அந்த அறிவுரை நம்முடைய கோபம் எத்தனைதான் நியாயமாக இருந்தாலும் பொது இடத்தில் கோபப படுவது அநாகரீகம் என்பதை உணர்த்தியது. 

படிப்பதில் ஆர்வம் உள்ள நான் எங்கே சென்றாலும் அங்கிருக்கும் புத்தகத்தை கையிலெடுத்துக் கொண்டு அதில் மூழ்கி விடுவேன். அங்கிருப்பவர்களோடு உரையாடுவதை விடுங்கள், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கூட பதில் சொல்ல மாட்டேன். அந்த கேள்விகள் என் காதில் விழுந்தால்தானே? இதற்காக கொஞ்சம் திட்டு, கொஞ்சம் கேலி இவைகளை வாங்கி கொண்டாலும் என்னால் அந்த பழக்கத்தை அறவே  விட முடியவில்லை. எங்கள் நண்பர்கள், நான் அவர்கள் வீட்டுக்கு வருகிறேன் என்றால் அவர்கள் வீட்டில் இருக்கும் புத்தகங்களை மறைத்து வைப்பார்கள். 

ஒரு முறை என் அக்காவின் வீட்டிற்குச் சென்ற பொழுது வழக்கம்போல் நான் புத்தகத்தில் மூழ்கி விட்டிருக்கிறேன், என் அக்காவின் மாமியார் என்னிடம் ஏதோ கேட்டிருக்கிறார், நான் வழக்கம் போல் மௌனம்.. வீட்டிற்கு திரும்பி வரும் பொழுது என் மகள், "அங்க வந்து நீ பாட்டுக்கு புத்தகம் படிக்க ஆரம்பித்து விட்டாய், மாமி உன்னிடம் ஏதோ கேட்கிறார், நீ பதிலே சொல்லாமல் புத்தகம் படிக்கிறாய்... மற்றவர்கள் வீட்டுக்கு போய் புத்தகம் படிப்பதென்றால் எதற்கு மற்றவர்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும்? வெரி ரூட்(rude) பிஹேவியர்! என்று அட்வைஸ் மழை பொழிந்து விட்டாள்.(காய்ச்சி எடுத்து விட்டாள் என்றா சொல்ல முடியும்?)அத்தோடு விட்டேன் போகும் இடத்திலெல்லாம் புத்தகம் படிக்கும் கெட்ட பழக்கத்தை.

நான் பெற்ற இன்னொரு முக்கியமான அறிவுரை ஸ்ரீரெங்கத்தில் நாங்கள் வசித்த பொழுது எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருந்த பௌராணிகரான  திருச்சி.கே.கல்யாணராமனின் தாயார் வழங்கியது. அவருக்கு என்னை மிகவும் பிடிக்கும். 
"நட்புக்கு வயது கிடையாது, பானு என்னுடைய ஃ பிரென்ட்" என்பார். அப்போது நான் கல்லூரி மாணவி. பரிச்சைக்கு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த கல்யாணராமனின் தாயார் என்னிடம்,
" நீ இப்போது எதைப்பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார். 
நான், நாளை பரீட்சை. அதில் என்ன கேள்விகள் வரும் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்" என்றேன். 
மாமி உடனே, " இப்போதுதான் ராமகிருஷ்ண பரமஹம்சரின் புத்தகத்தில் படித்தேன். உன்னிடம் யாராவது நீ எதை பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறாய்? என்று கேட்டால், நானா அந்தப் பூவை பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று வெளியே சொல்லும்படியாக உன் எண்ணம் தூய்மையாக இருக்க வேண்டும்" என்று அதில் இருந்தது. அதை உன்னிடம் பரிசித்துப் பார்த்தேன் என்றார். 

என்ன அழகான மெசேஜ்! இதை பின்பற்றினால் மனதில் கள்ளத்தனம் தோன்றுமா?   

என் தோழி ஒருத்திக்கு நாம் ஏதாவது பரிசளித்தால் அதை உடனே உபயோகித்து நம்மிடம் காட்டுவாள். உதாரணமாக நாம் அவளுக்கு புடவை வாங்கி கொடுத்தால், அதை உடனே உடுத்திக்கொண்டு நமக்கு காண்பிப்பாள். இதை அவளிடமிருந்து கற்றுக் கொண்டேன். 

இன்னொரு தோழியை தொலைபேசியில் அழைக்கும் பொழுது, எப்படி இருக்கிறாய் என்று கேட்டால், "நன்னா இருக்கோம் பானு" என்று நிறைவாக சொல்வாள். அது எனக்கு மிகவும் பிடிக்கும்.

விருமாண்டி படத்தில்,"நாம சந்தோஷமா இருக்கும் பொழுது பெரும்பாலும் அது நமக்குத் தெரிவதில்லை" என்று  ஒரு வசனம் வரும்.  நாம் சந்தோஷமாக இருக்கும் பொழுது, அதை உணர்வதும், கர்வமில்லாமல் அதை வெளிப்படுத்துவதும் பெரிய விஷயம் இல்லையா?

(ஸ்ரீராம் நான்  நண்பர்களை குறிப்பிட்டு விட்டேன்).

இதைத் தவிர வாழ்க்கை நிறைய அறிவுரைகளை வழங்குகிறது,  கற்றுக் கொடுக்கிறது.

பிறப்பில் வருவது யாதென கேட்டேன் 
பிறந்து பார் என இறைவன் பணித்தான் 
இறப்பில் வருவது யாதென கேட்டேன் 
இறந்து பார் என இறைவன் பணித்தான் 
மனையாள் சுகமெனில் யாதென கேட்டேன் 
மணந்து பார் என இறைவன் பணித்தான் 
அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில் 
ஆண்டவனே நீ ஏன் என்றேன் 
படைத்தவன் சற்றே அருகினில் வந்து 
அனுபவம் என்பதே நான்தான் என்றான் 

வாழ்க்கையை நன்றாக அனுபவித்தவன் வார்த்தைகள் இவை. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஓவ்வொரு அனுபவமும் ஏதோ ஒரு பாடத்தை நமக்கு வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது. நாம்தான் அதை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். 

அவற்றுள் மிக முக்கியமான பாடம், பெரிதாக கொண்டாடவோ, தூற்றவோ எதுவும் இல்லை என்பதுதான். 

அசோகாமித்ரன் ஒரு கதையில்,"உண்மையில் புத்திசாலித்தனம், முட்டாள்தனம் என்று எதுவும் இல்லை. ஒரு காரியம் வெற்றி அடைந்து விட்டால் அது புத்திசாலித்தனம், தோல்வி அடைந்து விட்டால் அதுவே அசட்டுத்தனம்,முட்டாள்தனமாகி விடுகிறது" என்று எழுதி இருப்பார், எவ்வளவு உண்மை! இது புரிந்த பிறகு யாரையும் வியக்கவும் முடியவில்லை, யாரையும் இகழவும் முடியவில்லை.  காலம் சிலரை உயரத்தில் ஏற்றி உட்காரவைத்து விடுகிறது, சிலருக்கு அது வாய்ப்பதில்லை, அவ்வளவுதான். எனவே பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே! என்னும் முதிர்ச்சி இறையருளால் வாய்த்து விட்டது. 

இந்த Blogathan ஐ தொடங்கி வைத்த மதுரை தமிழனுக்கும், அதில் என்னையும் பங்கு கொள்ள அழைத்த ஸ்ரீராமுக்கும் என் மனமார்ந்த நன்றி! இந்த ஒலிம்பிக் ஜோதியை என் கையிலிருந்து வாங்கி தொடர,

திரு.ராய செல்லப்பாவையும், 
திரு.நடன சபாபதி அவர்களையும், 
திரு.ஜீ.வி. அவர்களையும், 
திருமதி மனோ ஸ்வாமிநாதன் அவர்களையும், 
திருமதி. மிடில்க்ளாஸ் மாதவி அவர்களையும்  
அழைக்கிறேன். 

39 comments:

  1. சூப்பர் fast அக்கா நீங்க அதுக்குள் எழுதிட்டீங்க

    //எப்படி உட்கார வேண்டும்?, எப்படி சாப்பிட வேண்டும்?,ஏன்? எப்படி தூங்க வேண்டும்? என்பது வரை பல பல அறிவுரைகள். //
    இப்போ நினைச்சாலும் கண்ணு பிதுங்கும் எனக்கு எவ்ளோ அட்வைஸ் மெதுவா நடக்க மெதுவா சிரிக்க ஆஅவ் :)
    அதையெல்லாம் கடந்து இப்போ பதிவில் நீங்கள் சொன்ன // நம்மை திட்டுகிறவர்கள் நம் எதிரிகள் அல்ல. //என்ற வார்த்தையை அதன் அர்த்தத்தை புரிந்துகொள்ளும்போது திட்டினவங்க யாரும் இப்போ இல்லையே என்ற கவலையும் வருது

    ReplyDelete
    Replies
    1. நான் சூப்பர் பாஸ்ட் என்றால் நீங்கள் டபுள் சூப்பர் பாஸ்டாக பதில் போட்டு விட்டீர்கள். நன்றி. தில்லையகத்து கீதா ஹிண்ட் கொடுத்தார், அதனால் கொஞ்சம் தயாராக இருந்தேன்.

      Delete
  2. எனக்கும் மகள் கிட்டயிருந்து அடிக்கடி அட்வைஸ் வரும் :)
    //எண்ணம் தூய்மையாக இருக்க வேண்டும்//
    எவ்வளவு அருமையான சம்பவம் இப்படி ஒவ்வொருவரும் இருந்தா எவ்வளவு அழகானதா இருக்கும் இந்த உலகம் .
    உங்கள் நட்பு //நன்னா இருக்கேன் //என்று சொல்லும்போது ஒரு ஹாப்பி ஃபீலிங் உங்களையும் தொற்றும் அதுவும் எத்தனை மகிழ்ச்சி தரும் இல்லையா .மிகவும் அழகான தொகுப்பு அக்கா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கண்டிப்பாக. எங்கள் உறவினர் ஒருவர் உண்டு. அவரிடம் வீட்டில் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்? என்று கேட்டால் ,"அவரவர், அவரவர் பிரச்சனையில் இருக்கிறார்கள். என்பார். பையன் புதிதாக வீடு வகி இருக்கான், அந்த பிரச்சனை, மாப்பிள்ளை வியாபாரத்தை விரிவு படுத்தி இருக்கார் அந்த பிரச்சனை, பேரன் +2வில் 95% மார்க் வாங்கியிருக்கிறான், அந்த பிரச்சனை,.. என்று எல்லாவற்றையும் பிரச்னையாகத்தான் பார்ப்பார்.

      Delete
  3. உண்மையில் புத்திசாலித்தனம், முட்டாள்தனம் என்று எதுவும் இல்லை. ஒரு காரியம் வெற்றி அடைந்து விட்டால் அது புத்திசாலித்தனம், தோல்வி அடைந்து விட்டால் அதுவே அசட்டுத்தனம்,முட்டாள்தனமாகி விடுகிறது" //

    நான் அடிக்கடி சொல்லுவது....ஏனென்றால் நான் சிறு வயதிலும் சரி, அதன் பின் இப்பவும் சரி பல சமயங்களில் பெரும்பான்மையோயான நேரங்களில் முட்டாள் புத்தி இல்லை என்று பிராண்ட்....ஹாஹாஹா..பள்ளியும் கல்லூரியும் மட்டுமே..என்னை சரியாக எடை போட்டவை....பானுக்கா..நாம் அன்புடன், விட்டுக் கொடுக்கும் மனதுடன், அமைதியாக வாதம் அல்லது நம் கருத்துகளை சரியாக..அதாவது டிஸ்கஷனில் சொல்லத் தெரியாமல் இருந்துவிட்டால், பிறர் மனம் நோகக் கூடாது என்று அல்லது விட்டுக் கொடுத்து சபமிசிவாக இருந்துவிட்டால் இப்படியான பெயர்.....

    அனைத்தும் நீங்கள் கலர் செய்திருப்பதை அனைத்தும் நான் கற்றது அனுபவத்தில் பெரும்பாளை அப்படியேதான்....

    ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க....புல்லட் ட்ரெயின்... ஹாஹாஹாஸ்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //நம் கருத்துகளை சரியாக..அதாவது டிஸ்கஷனில் சொல்லத் தெரியாமல் இருந்துவிட்டால், பிறர் மனம் நோகக் கூடாது என்று அல்லது விட்டுக் கொடுத்து சபமிசிவாக இருந்துவிட்டால் இப்படியான பெயர்.....// உண்மைதான்! ஆனால் அசோகமித்திரன் சொல்லியிருப்பது வேறு கான்டெக்ஸ்ட்டில் என்று நினைக்கிறேன்.

      ஒரு முறை எம்.எஸ். விஸ்வநாதனைப் பற்றி கண்ணதாசன்,"விசுவுக்கு இசையத் தவிர வேறு எதுவுமே தெரியாது. வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை என்கிறார்களே, அவன் நிஜமாகவே ஊமையா? என்று கேட்டான்.எ அந்த அளவு அப்பாவி!" என்றார். அப்படிப்பட்ட எம்.எஸ்.வி. தனக்கு திறமை இருந்த இசைத்துறையையே தேர்ந்தெடுத்ததால், வெற்றி பெற்று ஜீனியஸ் என்று புகழ் பெற முடிந்தது. அப்படி இல்லாமல் அவர் ஒரு குமாஸ்தாவாக பணியாற்ற நேர்ந்திருந்தால் என்னவாகியிருப்பார்? இது வெற்றி பெற்ற பலருக்கும் பொருந்தும்.

      Delete
  4. சிவப்புக் கலர் பின்னணி கொண்ட எழுத்துகளைப் படிப்பதில் சிரமம் இருக்கிறது. எழுத்துக்கு நிறம் தந்து பின்னணி நிறம் இல்லாமல் செய்யலாம்.

    ReplyDelete
    Replies
    1. மாற்றி விட்டேன். தகவலுக்கு நன்றி!

      Delete
  5. அய்யங்கார் மாமியோ, அம்மாவோ, பாட்டியோ சொல்லியிருப்பவை மனதில் பதியும் கருத்துகள். அந்தக்காலப் பள்ளி வாழ்க்கைக்கும் இந்தக் காலப் பள்ளி வாழ்க்கைக்கும் எவ்வளவு வித்தியாசம்...

    ReplyDelete
  6. குளித்து முடித்து முகத்தை ஏன் அழுந்தத் துடைக்கக் கூடாது? நான் கேள்விப்பட்டதில்லை.

    ReplyDelete
    Replies
    1. இது பெண்களுக்கு மட்டுமான பிரத்யேக அறிவுறை. பெண்களின் சருமம் மிருதுவானது என்பதால் முரட்டு டவல்களால் அழுத்தி துடைப்பதால் முகத்தில் ராஷஸ் வரலாம்.

      Delete
  7. மகளே உங்களுக்கு நல்ல டீச்சர் போல! அது சரி, எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்...

    ReplyDelete
    Replies
    1. Yes,she is my friend, philosopher and guide.Vice versa also.

      Delete
  8. நாம் நமது சந்தோஷத் தருணங்களை விட அது இல்லாத தருணங்களையே மனதில் நிறுத்திக் கொள்கிறோம்! அசோகமித்திரன் அவர்களின் வரிகள் பிரமாதம். மிக அழகாய் எழுதி இருக்கிறீர்கள். நிறைய கவர் செய்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. பராட்டுக்கும் வாய்ப்பு அளித்ததற்கும் நன்றி!

      Delete
  9. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் எழுதுகின்றீர்கள். உங்கள் பாணியில் வித்தியாசமாக உள்ளதைக் கண்டேன். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி!

      Delete
    2. நன்றி ஐயா!செல் ஃபோன் வழியாக பதில் அனுப்பியதில் உங்கள் பின்னூட்டத்திற்கு பதில் அனுப்ப விட்டுப்போய் விட்டது. மன்னிக்கவும்

      Delete
  10. >>> உன்னிடம் யாராவது நீ எதை பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறாய்? என்று கேட்டால்,

    நானா அந்தப் பூவைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன்!.. என்று வெளியே சொல்லும்படியாக உன் எண்ணம் தூய்மையாக இருக்க வேண்டும்...<<<

    பரமஹம்ஸரின் மகத்தான அருளுரை..

    இளமையில் இருந்தே பின்பற்றி வருகின்றேன்..
    ( அதற்காக வேறு எண்ணங்களே வந்தததில்லை.. - என்றும் சொல்லமாட்டேன்..)

    வித்தியாசமான படைப்பு. வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. //இளமையில் இருந்தே பின்பற்றி வருகின்றேன்.(அதற்காக வேறு எண்ணங்களே வந்தததில்லை என்றும் சொல்லமாட்டேன்// இவ்விடத்திலும் இதேதான். நன்றி ஐயா

      Delete

  11. பானுமதிம்மா பல அனுபவ அறிவுரைகளை இந்த பதிவின் மூலம் அறிந்துகொண்டேன் பகிர்ந்ததற்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  12. பெரிய புத்தங்களை படித்தாலும் அதில் இருந்து நாம் கற்றுக் கொள்வது ஒன்றோ இரண்டடோ ஆனால் இந்த் பதிவில் நிறைய கற்றுக் கொண்டதுமட்டுமல்லாமல் தனியாக சேமித்தும் வைத்து கொண்டேன் பயனுள்ள அறிவுறைகள்

    ReplyDelete
    Replies
    1. படிப்பறிவை விட பட்டறிவு மேலானதுதான்.

      Delete
  13. வணக்கம் !

    பங்கயம் பூத்துக் கங்கை
    ....பசுமையும் கொள்ளல் போல!
    மங்கலம் பெருகி மக்கள்
    ....மகிழ்வினால் நிறைந்து துள்ள !
    எங்கிலும் அமைதி வேண்டி
    ...இறைஞ்சிடும் எல்லோர் வாழ்வும்
    பொங்கலாம் இந்நாள் தொட்டுப்
    ...பொலிவுற வாழ்த்து கின்றேன் !

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் !

    ReplyDelete
    Replies
    1. அழகிய வாழ்த்துப்பாவை அன்போடு
      ஏற்றுக் கொள்கிறேன். தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! வாழ்க நலம்!

      Delete
  14. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா! என்னுடைய பொங்கல் வாழ்த்துக்களையும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் உரித்தாக்குகிறேன்.

      Delete
  15. நானும் என்னுடைய தங்கையும் நகமும் சதையுமாகதான் இருப்போம் எப்பொழுதும்.அவள் சின்னவளாக இருந்தாலும் பல சமயங்களில் எனக்கு கண்ணணாக இருந்திருக்கிறாள். சிறுவயதிலிருந்தே நான் புத்தகங்கள் படிப்பது கம்பியால். அது அதிகமான பக்கங்கள் இருப்பதாலேயே அதை படிக்க மாட்டேன்.இதுவும் என்னடாஇது இவ்வளவு பெரியதாக இருக்கிறதே என்று பார்த்தேன் ஆனால் படிக்க படிக்க மிகவும் அருமையாக இருந்தது.சரிதான் சில சமயங்களில் சிறுவர்கள் நமக்கு அழகாக அட்வைஸ் பன்னுவார்கள். என் தங்கை என்னை விட நன்றாக படிப்பாள். நான் அதை குறை பட்டுக் கொள்ளும்படி சொன்னால் அவள் கடவுள் ஒவ்ஒருவருக்கும் ஒரு திறமை கொடுத்திருக்கிறாற் நீ கோலம் நன்றாக போடுகிறாய் எனக்கு அது அவ்வளவு நன்றாக வராது என்பாள்.அவள் சொன்ன சின்ன சின்ன அட்வைஸ் எல்லாம் இன்னும் பல சமயங்களில் எனக்கு உதவியாக இருக்கிறது.இன்னும் இது போல் நிறைய உள்ளது. பானுமதி உங்கள் கட்டுரை மிகவும் அறுமை👌👏😊

    ReplyDelete
    Replies
    1. நன்றி கலா!தாங்கள் தொடர்ந்து என் பதிவுகளை படித்து ஊக்கப்படுத்துவது சந்தோஷமளிக்கிறது.

      Delete
  16. மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள் பானுமதி வெங்கடேஸ்வரன்! கை தேர்ந்த ஒரு எழுத்தாளரின் திறமையை உங்கள் எழுத்தில் நான் உணர்ந்தேன்.

    //பிறப்பில் வருவது யாதென கேட்டேன்
    பிறந்து பார் என இறைவன் பணித்தான்
    இறப்பில் வருவது யாதென கேட்டேன்
    இறந்து பார் என இறைவன் பணித்தான்
    மனையாள் சுகமெனில் யாதென கேட்டேன்
    மணந்து பார் என இறைவன் பணித்தான்
    அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில்
    ஆண்டவனே நீ ஏன் என்றேன்
    படைத்தவன் சற்றே அருகினில் வந்து
    அனுபவம் என்பதே நான்தான் என்றான் //

    ரொம்ப நாட்களுக்குப்பிறகு இந்த வரிகளை மறுபடியும் படிக்க நேர்ந்ததில் மகிழ்வாக இருந்தது. உண்மையில் அனுபவங்கள் சொல்லும் படிப்பினையை விட வேறு எந்த புத்திமதியும் மனதில் ஆணியடித்தாற்போலப் பதிவதில்லை!

    என்னையும் ஜோதியில் வந்து கலந்து கொள்ள அழைத்ததற்கு அன்பு நன்றி! விரைவில் தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மனோ! கண்ணதாசனின் இந்த கவிதை my all time favourite.
      உங்கள் அனுபவத்தை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

      Delete
  17. மிக அருமையான உறவுகளையும் நட்புகளையும் பெற்றிருக்கிறீர்கள் பானுமதி.
    அதை அழகாகவும் எழுதி விட்டீர்கள்.
    மனம் நிறை வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. //மிக அருமையான உறவுகளையும் நட்புகளையும் பெற்றிருக்கிறீர்கள் பானுமதி// ஆமாம் வல்லி அக்கா! கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்!.
      மனப்பூர்வமான பாராட்டுக்கு உங்களுக்கும் நன்றி!🙏

      Delete
  18. மிக அருமையாக எழுதி இருக்கீங்க! இந்த அளவுக்கு யாரானும் எனக்குச் சொல்லிக் கொடுத்தாங்களா என்பதை யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஏற்கெனவே ஏஞ்சல் கூப்பிட்டாச்சு, அப்புறம் ஶ்ரீராமும் கூப்பிட்டாச்சு! நேரம் தான் வரலை! :)

    ReplyDelete
  19. பல சமயங்களில் நம்மை விடக் குழந்தைகள் சரியான கோணங்களில் சிந்தித்து முடிவு எடுக்கின்றனர். எனக்கும் பெண், பிள்ளை ஆகியோரிடமிருந்து புத்திமதிகள் வந்து கொண்டிருக்கின்றன! :)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்! எல்லோரும் தகப்பன் சாமி, தாய் சாமிகள்தான்.

      Delete
  20. இப்போது தான் பார்த்தேன். எழுதிய எழுத்தில் செயற்கைப் பூச்சு எதுவுமில்லாமல் உண்மைத்தன்மை கொண்டிருந்ததை மிகவும் ரசித்தேன். எதைச் சொல்கிறீர்களோ, அதற்கேற்பவான ஆப்ட் வார்த்தைகள் அங்கங்கே வந்து விழுந்திருந்தது இன்னொரு பிரமாதம்.

    உங்கள் அழைப்பு குறித்து சந்தோஷம். உடனே என்று இல்லாவிட்டாலும் இந்த மாதிரியான பொருளில் எப்பொழுது எழுதினாலும் 'நீங்கள் அழைத்து..' என்று நினைவு கொள்வேன். நன்றி.

    ReplyDelete