Saturday, March 24, 2018

கோதண்டராமசாமி கோவில் - நந்தம்பாக்கம், சென்னை

கோதண்டராமசாமி கோவில் - நந்தம்பாக்கம், சென்னைசென்னையில் இருக்கும் புராதனமான கோவில்களில் நந்தம்பாக்கத்தில் இருக்கும் கோதண்டராமசாமி கோவிலும் ஒன்று. நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டருக்கு எதிரே உள்ள கோதண்டராமசாமி கோவில் சந்தில் அமைந்துள்ள இந்த கோவில் அளவில் மிகப் பெரியது என்று கூற முடியாது.

ராஜ கோபுரத்தை கடந்து உள்ளே சென்றதும் பலி பீடம், துவஜஸ்தம்பம் தாண்டி, கருங்கல் மண்டபத்தில் பெரிய திருவடியாகிய கருடாழ்வார் சன்னதி. மண்டபம் முழுவதும் கம்பி கேட்டால் மூடப்பட்டு பக்கவாட்டில் நுழைவு இருக்கிறது.கர்பக்ரஹத்திற்குள் நுழையும் முன் இடதுபுறம் திருக்கச்ச நம்பிகளுக்கு தனி சன்னதியும், வலது புறம் மணவாள மாமுனிவர் மற்றும் ராமானுஜர் இருவரும் ஒரு சன்னதியிலும், அதை ஒட்டி கண்ணாடி அறையும் இருக்கின்றன.

மூல ஸ்தானத்தில் கிழக்கு நோக்கி ஶ்ரீநிவாச பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். அவருக்கு வலது புறம் அலர்மேலுமஙகத் தாயாரும், இடது புறம் ஆண்டாளும் தனி சன்னதி கொண்டிருக்கிறார்கள். அருகிலேயே தெற்கு நோக்கி *மடியில் சீதா தேவியை இருத்தி, தன் தம்பிகளான லக்ஷ்மண, பரத, சத்ருகுணன் புடைசூழ அமர்ந்த கோலத்தில் ஶ்ரீராமசந்திரமூர்த்தி காட்சி அருளுகிறார். மலர்ந்த முகத்துடன் சிறிய மூர்த்தம்.  இந்த சன்னதிக்கு நேர் எதிரே கைகளை கூப்பிய வண்ணம் ஆஞ்சநேயர் பக்தி பரவசமாக விளங்குகிறார். எல்லோரையும் தரிசித்துக் கொண்டு வெளியே வந்தால் பிரகாரத்தில் சற்று பெரியவராக கைகளை கூப்பிய வண்ணம் நின்ற கோலத்தில் ஆனந்த ஆஞ்சநேயர் தனி சன்னதியிலும், சக்கரத்தாழ்வார் தனி சன்னதியிலும் எழுந்தருளியிருக்கிறார்கள்.பிரகாரத்தை வலம் வரும் பொழுது இடது புறம் உற்சவங்கள் நடத்த பெரிய மண்டபமும், சொர்க வாசலும் இருக்கின்றன. அதைத்தவிர வலதுபுறம் நம்மாழ்வாருக்கென்று தனி சன்னதியும், பிருந்தாவன கண்ணன் என்று கிருஷ்ணனுக்காக தனி சன்னதியும் இருக்கின்றன.


சிறிய அளவில் நந்தவனம் நன்றாக பராமரிக்கப்படுகிறது. கோவிலை இன்னும் கொஞ்சம் நன்றாக பராமரிக்கலாம். கோவிலுக்கு வெளியே இருக்கும் பெரிய குளம் எல்லா நகர குளங்களைப் போலவே வரண்டு கிடக்கிறது.

இப்போது ராமநவமி உற்சவம் நடப்பதால் பெருமாள் குதிரை வாகனத்தில் புறப்பாடு கண்டருள தயாராகிக் கொண்டிருந்தார். இரண்டு பெண்கள் கோவில் வாசலில் மிக அழகாக கோலமிட்டு க் கொண்டிருந்தனர்.உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது அவசியம் ஒரு முறை சென்று குடும்ப சகிதமாக இருக்கும் ஶ்ரீராமனை சேவியுங்கள். நம் குடும்ப ஒற்றுமை ஓங்கச்செய்து, நாம் இழந்த செல்வங்களை அவன் மீட்டுத் தருவான்.

*சீதையை தன் மடியில் வைத்த்தபடி ராமன் காட்சி அளிக்கும் அபூர்வமான தலங்களில் இது ஒன்று. மற்றொன்று பத்ராசலம்.

தலபுராணம்:

சீதையைத்தேடி தென்திசை வரும் ராமனும், இலக்குவனனும் அப்போது இங்கிருந்த ப்ருங்கி மஹரிஷியின் ஆஸ்ரமத்தில் தங்கினார்களாம். ப்ருங்கி மஹரிஷி ஆஸ்ரமம் இருந்த இடம் ப்ருங்கி மலை. அதுவே பின்னாளில் மருவி பரங்கி மலை என்றாகி விட்டது. ராமர் தங்கிய இடமே ராமாபுரம். அதற்கு அருகில் இருக்கும் ஶ்ரீதேவி குப்பம் என்னும் இடம் முன்னாளில் சீதாதேவி குப்பம் என்று அழைக்கப்பட்டதாம்.இதற்கு அருகில் இருக்கும் போரூரில் உள்ள சிவ பெருமானை வழிபட்டு ராவணனோடு யுத்தம் செய்ய ராமர் புறப்பட்டதாலேயே அது போரூர் என அழைக்கப்படுகிறது என்றும் ஒரு நம்பிக்கை.

வால்மீகி ராமாயணத்தில் இந்த இடம் பிருந்தாரண்யம் என்றும், கம்பராமாயணத்தில் நந்தவனம் என்றும் குறிப்பிடப் படுகிறது. நந்தவனம் என்பதே நந்தம்பாக்கம் என்று மருவியிருக்கிறது.

கிருஷ்ண தேவராயரின் மாகாண பிரதிநிதியான சஞ்சீவி ராயரால் 750 ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்ட கோவில்.
பிருந்தாரண்ய க்ஷேத்திரம்
நளினக விமானம்
வைகானச ஆகமம்
நதி வன்மீக நதி(இன்றைய அடையாறு)
18 comments:

 1. பகிர்வுக்கு நன்றி. ஸ்ரீராமஜெயம் இங்கு ராமர் காலடி பட்டதாக அங்கு கோவிலில் புராணத்தில் படித்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நம்ம ஏரியா. அழகான கோவில்.

   Delete
 2. பகிர்வு பல நல்ல செய்திகளை தந்தது நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாசிப்புக்கு நன்றி

   Delete
 3. இந்தக் கோயில் பற்றி அறிந்திருந்தாலும் சென்றதில்லை...உங்க ஏரியாதான்...பலமுறை வந்திருந்தாலும் போனதில்லை...ஸ்ரீராம் சொல்லிருக்கும் தகவலும் நானும் கேளிவிப்பட்டுள்ளேன்..

  உங்கள் விவரணம் படங்கள் எல்லாமே சூப்பர் பானுக்கா..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அடுத்த முறை இந்தப்பக்கம் வரும் பொழுது சேர்ந்து போகலாம்.

   Delete
 4. விபரங்கள் ஓரளவு தெரியும். கோயிலும் கேள்விப் பட்டது. ஆனால் போனதில்லை. அது சரி, கோயிலுக்குப் போயிட்டு அப்படியே நண்பர் வீட்டுக்கும் போனீங்களா? :)

  ReplyDelete
  Replies
  1. முன் அறிவிப்பு இல்லாமல் சென்று நண்பரை சங்கடப் படுத்த வேண்டாம் என்பதால் செல்லவில்லை.

   Delete
 5. எ.பி.யில் இப்போத் தான் அப்டேட் ஆகி இருக்கு. காலம்பரப் பார்க்கலை. அதுக்குள்ளே நேத்தித் தேதியில் ஶ்ரீராம், கில்லர்ஜி கமென்டி இருக்காங்களே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. யார் கண்ணிலும் படாதது உங்கள் கண்ணில்பட்டுள்ளதே...!!🤔

   Delete
 6. அடுத்த பயணத்தில் போக வேணும்! மூளையில் முடிச்சு :-)

  நன்றீஸ் !

  ReplyDelete
  Replies
  1. Don't miss. அவசியம் பார்க்க வேண்டிய கோவில்தான்.

   Delete
 7. எனக்கென்னவோ கோவில்கள் எல்லாமே ஓரளவு ஒரே மாதிதான் தெரிகிறது உலகளந்த பெருமானின் அவதாரமாயிற்றே அவர் கால் படாத இடம் இருக்க முடியுமா

  ReplyDelete
  Replies
  1. இல்லை எல்லா கோவில்களும் அவை கட்டப்பட்ட காலத்தை பொருத்து மாறும்.

   முற்கால சோழர்கள் கட்டயவை சிறிய, சுதை கோவில்கள். நாயக்கர்கள் காலத்திற்கு பிறகுதான் பெரிய சிற்பங்கள் வடிக்கப்பட்டன. பிற்கால சோழர்கள் கட்டிய கோவில்கள் பெரிய கற்றளிகள்.

   தொண்டை மண்டல கோவில்களில் பெரும்பாலும் கஜ பிருஷ்ட விமானம் இருக்கும். சிவன் கோவில்களில் கோஷ்டத்தில் தர்க்கைக்கு பதிலாய் பிரும்மா இருப்பார்.

   ஶ்ரீரங்கம் கோவில் பல்வேறு கால கட்டங்களில் கொஞ்சம் கொஞ்சமாக விரிவுபடுத்தப்பட்டதாகும்.
   நவீன கோவில்கள் அபார்ட்மெண்ட் போல ஒரு கோவிலுக்குள்ளேயே சிவன், விஷ்ணு, ஐயப்பன், ஆஞ்சநேயர் என்று அத்தனை ரூபங்களையும் வைத்து, பளிங்கு தளம் போட்டு எந்தவித அடையாளமும் இல்லாமல் இருக்கின்றன.

   Delete
 8. உங்கள் பதிவைப் படித்ததுமே இந்தக் கோயிலுக்குப் போய தரிசிக்க வேண்டும் என்ற மனத்தில் ஆசை துளிர்த்திருக்கிறது.
  போரூருக்கு வந்த பிறகு அருகாமையில் இருக்கும் கோயில்களைத் தேடிக் கொண்டிருந்தவனுக்கு கலங்கரை விளக்கம். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. //உங்கள் பதிவைப் படித்ததுமே இந்தக் கோயிலுக்குப் போய தரிசிக்க வேண்டும் என்ற மனத்தில் ஆசை துளிர்த்திருக்கிறது//
   நான் பதிவு எழுதியதன் பலன் கிட்டிவிட்டது. 🙏🙏

   Delete
 9. பார்த்திராத கோயில். செல்லும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. விரைவில் அந்த நாள் அமைய அந்த ஶ்ரீராமனை வேண்டுகிறேன்.

   Delete