Saturday, April 14, 2018

கேட்ட ஞாபகம் இல்லையோ..?

கேட்ட ஞாபகம் இல்லையோ..?
ஏப்ரல் 24 ரேடியோவை கண்டுபிடித்த மார்கோனி பிறந்த நாளாம். எப்.எம்.ரேடியோ ஒன்றில் சொன்னார்கள். அதைக் கேட்டதும் பல பழைய நினைவுகள் கிளர்ந்தெழுந்தன.  நான் சிறுமியாக இருந்த பொழுது அதாவது 1960களில் ரேடியோ என்பது ஒரு ஆடம்பர பொருள். அப்பொழுதெல்லாம் ரேடியோ  வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் லைசென்ஸ் வாங்க வேண்டும். எங்கள் தெருவில் ராமையா மாமா என்பவர் வீட்டில்தான் ரேடியோ உண்டு. நல்ல கச்சேரிகள், கிரிகெட் மேட்ச் கமெண்ட்ரி இவைகளை அவர்கள் வீட்டு வாசல் திண்ணையில் ஸ்டூல் போட்டு அதில் ரேடியோவை வைத்து பெரிதாக ஒலிக்க வைப்பார்கள், விருப்பமுள்ளவர்கள் உட்கார்ந்து கேட்பார்கள். ஆனால் அவர்களுக்கு சினிமா பாடல்களில் விருப்பம் இல்லாததால் சினிமா பாடல்கள் கேட்க முடியாது. அந்த பாக்கியம் எங்கள் எதிர் வீட்டில் இருந்த ஸ்ரீனிவாச ஐயர் என்பவர் ரேடியோ வாங்கியவுடந்தான் கிட்டியது. அவர்கள் வீட்டில்தான் நேயர் விருப்பம், ஞாயிற்றுக் கிழமைகளில் ஒலிச்சித்திரம் அல்லது  நாடகம் இவைகளை கேட்போம். விடுமுறைகளில் ஊருக்குச் செல்லும் பொழுது தாத்தா வரும் வரை சினிமா பாடல்கள் அதுவும் வால்யும் குறைவாக வைத்து கேட்கலாம்.


எழுபதுகளில் நிலைமை மாறி ரேடியோ எல்லா வீடுகளிலும் ஒரு தவிர்க்கமுடியாத அங்கமாகி விட்டது. எழுபதுகளின் துவக்கத்தில் தொலை காட்சி பெட்டி சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு வந்து விட்டாலும் இப்போது அங்கு அது அடம்பர வஸ்து! மேலும் தொலை காட்சியில் ஒளி பரப்பு மாலை ஆறு மணிக்குத்தான் துவங்கும் ஆகவே ரேடியோ தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டது. அந்தக் காலத்தை ரேடியோவின் பொற்காலம்  என்றே கூறலாம்.  சிறிய  ட்ரான்சிஸ்டர் ரேடியோ பாத்ரூம் உட்பட எல்லா இடங்களுக்கும் எங்களோடு வரும். இதில் கவனிக்கப் பட வேண்டிய விஷயம் அந்த காலங்களில் ரேடியோவில் தண்ணீர் தெளிக்காமல் குளிக்க கூடிய அளவிற்கு குளியல் அறை அத்தனை பெரிதாக இருந்திருக்கிறது!!

வியாழக் கிழமைகளில் காலை 5:30க்கு சிலோன் ரேடியோவில் சாய் பஜன், கலை 7:20 க்கு விவித பாரதியில் 'சங்கீத் சரிதாவில் கேட்ட லதா மங்கேஷ்கர் பாடிய  சில மீரா பஜன்கள் இப்போதும் நினைவில் இருக்கின்றன. வெள்ளி கிழமைகளில் திருச்சி ரேடியோவில் காலை 8:30க்கு மங்கள வாத்தியம் என்று நாதஸ்வரம் ஒலிபரப்புவார்கள். அதைத் தவிர ரேடியோ விழா மற்றும் இசைவிழா கச்சேரிகள், சங்கீத உபன்யாசங்கள் கேட்க தடை எதுவும் கிடையாது. சினிமா பாடல்கள் மட்டும் பெரிதாக வைத்து விட முடியாது. "என்ன டீ  கடை மாதிரி அலறுகிறது .." என்று பட்டென்று ரேடியோவை நிறுத்தி விட்டு போய் விடுவார்கள் வீட்டு  பெரியவர்கள்.  நல்ல வேளை இளையராஜா வந்தார், அவருடைய காம்போசிஷன் என் அப்பாவுக்கு பிடித்தது. "இளையராஜா ஜீனியஸ்தான்" என்று அப்பா மெச்சிக் கொண்டதால்,'ஆயிரம் தாமரை மொட்டுகளே'வையும், செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றலையும் பெரிதாக வைத்து ரசிக்க முடிந்தது.

இசை கச்சேரிகள் மட்டுமல்ல காரைக்குடி கம்பன் விழா பட்டிமன்றங்களும் ரசித்த விஷயங்கள். அவர்களில் நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் தவிர திருச்சி தேசிய கல்லூரி பேராசிரியர் திரு. ராதா கிருஷ்ணன், திரு. திருமேனி, திரு.சத்தியசீலன், குன்றக்குடி அடிகளார் போன்றவர்களின் பேச்சு மிகவும் ரசிக்கத்தக்க வகையில் இருக்கும்.

சினிமா பாடல்களை ஒலி பரப்பியதில் சிலோன் ரேடியோவுக்கு தனி இடம் உண்டு. பாடல்களை விரும்பி கேட்டவர்களின் பெயர்களை, "கலா,மாலா பாலா,லீலா... ராஜேந்திரன், மகேந்திரன், கிருபாகரன்.. என்று ரைமிங்காக அவர்கள் படிக்கும் அழகு..!  பாடல்களை மட்டும் ஒலி பரப்பாமல், அந்தப் பாடல்களை  எழுதிய கவிஞர்களின் கற்பனைத் திறன், சந்த சிறப்பு, இவைகளையும் நடு நடுவே விளக்குவார்கள். நிகழ்ச்சி முடியும் பொழுது, "ஐயோ ராஜா என்னை விட்டு போயிடீங்களா.."? என்று நீயா படத்தில் ஸ்ரீ பிரியா பேசும் டயலாக்கை ஒலி பரப்பி, உடனே, "இல்லை ஸ்ரீ பிரியா மீண்டும் அடுத்த வாரம் இதே நேரத்தில் சந்திக்கலாம்" என்று கூறிய ராஜாவின் சாதுர்யம் யாருக்குத்தான் பிடிக்காது !! ரேடியோ சிலோனின் ராஜாவும் மயில்வாகனனும் பலரைக் கவர்ந்த ரேடியோ ஜாக்கிகள்.

அப்படி நம்மூரில் பலரைக் கவர்ந்த செய்தி வாசிப்பாளர்கள் என்று சரோஜ் நாராயணசுவாமி, விஜயம், மற்றும் பத்மநாபன் இவர்களை குறிப்பிடலாம். "தனது அறிக்கையில் பிரதமர் திட்ட வட்டமாக அறிவித்தார்" என்று விஜயம்  செய்தி வாசிக்கும் பொழுது திட்டத்திலும், வட்டத்திலும் அவர் கொடுக்கும் அழுத்தம் இன்னும் என் நினைவு அடுக்குகளில் இருக்கிறது. வீட்டு பெரியவர்கள் ரேடியோவில் நியூஸ் கேட்கும் பொழுது கை குழந்தை கூட அழக் கூடாது என்பது அப்போது பல வீடுகளில் எழுதப்படாத சட்டம்.

ஞாயிற்று கிழமை மதியம் ஒலி பரப்பாகும் போர்ன்விட்டா க்விஸ் கான்டெஸ்ட், வெள்ளி இரவு ஒலி பரப்பான பின்னிஸ் டபுள் ஆர் க்விட்(Binny's double or quit) வினாடி வினா நிகழ்சிகளில் சரியான விடை அளித்து விட்டால் அப்பா லேசாக சிரித்தபடி தலை அசைப்பார்.

இரவு 9:30க்கு விவித பாரதியில் வண்ணச்சுடர் என்று மேடை நாடகங்களை ஒலி பரப்புவார்கள். அதில் மனோகர் உட்பட விசு, மௌலி, ஒய்.ஜி.பி., எஸ்.வி.சேகர், பூர்ணம் விஸ்வநாதன், காத்தாடி ராமமூர்த்தி, போன்ற எல்லா பிரபல நாடக குழுக்களின் நாடகங்களையும் கேட்டு ரசிப்போம். வண்ணச்சுடர் ஒலிபரப்பாகும் நேரத்தில்தான் அப்பா சாப்பிட உட்காருவார். அப்போது ஏதாவது அழுகை வசனம் கேட்டது என்றால் அப்பாவுக்கு கோபம் வரும். "சாப்பிடும் நேரத்தில் என்னமா? அதை நிறுத்துங்களேன்.." என்று சத்தம் போடுவார் அதனால் ஒலி மிகவும் குறைந்து விடும்.

1981இல் டில்லியில் ஏஷியன் கேம்ஸ் நடந்த பொழுது கலர் டி.வி இந்தியாவில் அறிமுகம் செய்யப் பட்டது. கொடைக்கானலில் சாட்டிலைட் அமைக்கப் பட்டு ஹிந்தி நிகழ்சிகளை பார்க்கலாம் என்று வகை செய்யப் பட்டது. பெரும்பாலான வீடுகளில் தொலைகாட்சிப் பெட்டி ஒரு விருந்தினரைப் போல வந்தது. சென்னை வாசிகளைப் போல நாங்களும் மதியத்தோடு ரேடியோவுக்கு விடை கொடுத்து விட்டு மாலைகளில் தொலை காட்சி முன் உட்கார்ந்து புரிகிறதோ இல்லையோ ஹம் லோக், கர் ஜமாய், ஏக் கஹானி(இது நிஜமாகவே ஒரு நல்ல சீரியல்) போன்றவற்றை ரசிக்க ஆரம்பித்தோம். 87இல் தமிழ் நிகழ்சிகளையும் பார்க்கலாம் என்ற நிலை வந்தது. இனிமேல் ரேடியோவுக்கு என்ன வேலை? அது மட்டுமில்லை தொழில் நுட்பம் வளர வளர சினிமா பாட்டோ, கச்சேரியோ, புராண சொற்பொழிவோ ரேடியோவைத்தான் நம்பி இருக்க வேண்டும் என்ற நிலை மாறி விட்டது. இன்றைக்கு கைபேசியிலேயே நாம் கேட்க விரும்பிகிறவைகளை அப்லோட் செய்து கொள்ள முடியும். திடீரென்று ரேடியோ மிர்ச்சியின் தயவால் ஏகப்பட்ட எப்.எம்.கள்.  பெயர்தான் வேறு வேறாக  இருக்கின்றதே ஒழிய செயல்பாடு எல்லாவற்றுக்கும் ஒன்றுதான். ஓவர் டாகிங்+கலாய்ப்பு+சினிமா=எப்.எம். என்றாலும் அவ்வப்பொழுது கேட்பேன். சில நிகழ்ச்சிகளில் கலந்தும் கொள்வேன்.


    
பின் குறிப்பு:
இது ஒரு மீள் பதிவு. 

31 comments:

 1. அப்படியே என் கதைதான் உன கதையும் பாடல் நினைவுக்கு வருகிறது பானு மா.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லிம்மா! நன்றி!

   Delete
 2. தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!


  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா!

   Delete
 3. ஹார்லிக்ஸின் சுசித்ராவின் குடும்பத்தை விட்டுட்டீங்களே! :) எங்க வீட்டிலே ரேடியோவே வாங்கினது இல்லை. அக்கம்பக்கம் தயவு தான். எழுபதாம் வருஷம் அண்ணா தான் வாங்கின ட்ரான்சிஸ்டரை எனக்காகக் கொடுத்து அனுப்பித்தார். கல்யாணம் ஆகிப் போகும்வரை அதான் கேட்பேன். அதுவும் சத்தம் குறைவாக வைச்சுக் கேட்கணும். நீங்க சொன்ன பட்டிமன்றங்களெல்லாம் மிக அருமையாக இருக்கும். இப்போது வரும் பட்டிமன்றங்கள் போலெல்லாம் இருக்காது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா அக்கா!
   //ஹார்லிக்ஸின் சுசித்ராவின் குடும்பத்தை விட்டுட்டீங்களே!//
   அது கொஞ்சம் மொக்கை இல்லையோ?
   //நீங்க சொன்ன பட்டிமன்றங்களெல்லாம் மிக அருமையாக இருக்கும். இப்போது வரும் பட்டிமன்றங்கள் போலெல்லாம் இருக்காது.//
   அவையெல்லாம் இலக்கியத்தரமானவை. இப்போது கூட மெகா டி.வி.யில் கமபன் கழக பட்டிமன்றங்களை ஒளி பரப்புகிறார்கள்.

   Delete
  2. பொதிகையில் வருகின்றன கம்பன் கழகப் பட்டிமன்றங்கள் நேரடி ஒளிபரப்பாக. செய்தி தெரிந்தால் கட்டாயம் பார்த்துடுவேன்.

   Delete
  3. சுசித்ராவின் குடும்பம் "மொக்கை"? ஹிஹிஹிஹி

   Delete
 4. கடந்த கால நினைவலைகள் அருமை

  ReplyDelete
 5. ஏப்ரல் 24 டெண்டுல்கருக்கும் பிறந்த நாள். என் பாஸின் உயிர்த் தோழிக்கும் பிறந்த நாள்!

  ReplyDelete
  Replies
  1. ஓ! அப்படியா? என் வாழ்த்துக்களையும் உங்கள் பாஸின் உயிர்த் தோழிக்கு தெரிவிக்க சொல்லுங்கள்.

   Delete
 6. ரேடியோ இப்போதெல்லாம் கேட்பதே இல்லை. மேலும் இப்போது யாரும் மீடியம் அலைவரிசையில் வானொலி உபயோகிப்பதே இல்லை என்றும் நினைக்கிறேன். எல்லோரும் பண்பலை ஒலிபரப்பை மட்டுமே கேட்பார்கள். மீடியம் அலைவரிசை ஒலிபரப்பகிறதா என்றும் தெரியவில்லை!

  ReplyDelete
  Replies
  1. சமீபத்தில் ஒரு ட்ரான்ஸிஸ்டர் வாங்கலாம் என்று நினைத்து ஆன்லைனில் தேடினேன். அதில் பண்பலை மட்டுமே இருந்தது. செய்திகள் இன்று கூட ரேடியோவில் உண்மையாகவும், நடு நிலைமையோடும் இருப்பதாகத்தான் தோன்றுகிறது.

   Delete
 7. ஆம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனம் தமிழ்ச்சேவை இரண்டு அதிகம் கேட்டது. தமிழ்ச்சேவை ஒன்றில் என்ன வரும், கேட்டிருக்கிறோமா என்று கூட நினைவில்லை.

  ReplyDelete
 8. காலை எட்டு மணிக்கு ரங்காவளி. மூன்று நல்ல ஹிந்திப் பாடல்கள் வைப்பார்கள். அப்புறம் மதியம் ஒரு மணிக்கு மன் சாஹே கீத், இரண்டரை மணிக்கு மனோரஞ்சன் (இரண்டு மணிக்கு வரும் நிகழ்ச்சி கேட்க மாட்டோம்!) அதே போல இரவு ஏழு மணிக்கு வரும் ஹிந்திப் பாடல்கள் நிகழ்ச்சியின் பெயரும் மறந்து விட்டது. அப்புறம் பத்து மணிக்கு சாயா கீத், பத்தரை மணிக்கு ஆப் கே ஃபர்மாயிஷ்... பினாகா கீத் மாலா, வண்ணச்சுடர் ஒரு மண் நேர நாடகங்கள் எல்லாம் ரசித்த காலம் நினைவுக்கு வருகிறது!

  ReplyDelete
  Replies
  1. இத்தனை ஹிந்தி பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா? நான் அதிகம் ஹிந்தி பாடல்கள் கேட்டதில்லை. பினாக கீத் மாலா மிகவும் பாப்புலரான நிகழ்ச்சி. மனோ ரஞ்சன், ஆப் கி ஃபர்மயிஷ் போன்றவை கேள்விப்பட்டது போல இருக்கிறது.

   Delete
 9. விவித்பாரதியின் உங்கள் விருப்பம் நிகழ்ச்சியின் அடையாள இசை இப்போதும் காதில் ஒலிக்கிறது! இரவு ஏழே முக்கால் முதல் ஒன்பதேகால் வரை!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் விருப்பம் நிகழ்ச்சியின் ஆரம்ப இசை எனக்கும் நினைவு இருக்கிறது. காலை வேளையில் பள்ளிக்கு கிளம்பும் பொழுது அந்த இசை ஒலிக்க ஆரம்பித்து விட்டால் எங்களுக்கு அலாரம். ஒரு பாட்டு ரெண்டு நிமிஷம் என்று கணக்கு வைத்துக் கொண்டு நடப்போம். பாதி வழி செல்லும் பொழுது ரெண்டு பாடல்கள் முடிந்திருந்தால் சேஃ ப்! மூன்றாவது பாடல் முடிந்து விட்டால் டேஞ்சர்.

   Delete
 10. செய்திகள், வாசிப்பது...........

  இவர் பெயரை நினைவு கொள்ளாமல் அந்நாளைய வானொலி பற்றிய தகவல்கள் முழுமை பெறாது.

  ReplyDelete
  Replies
  1. ஒரு க்ளூ. நாலெழுத்துக்காரர் அவர்.

   Delete
  2. இப்பொழுது தான் பார்த்தேன். நீங்களே அவரைப் பற்றிக் குறிப்பிட்டு விட்டீர்கள். அவரின் விசிறி நான்.

   Delete
  3. //செய்திகள், வாசிப்பது...........
   இவர் பெயரை நினைவு கொள்ளாமல் அந்நாளைய வானொலி பற்றிய தகவல்கள் முழுமை பெறாது.//

   நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள் என்று புரியாமல் மண்டையை குழப்பிக் கொண்டிருந்தேன். நல்லவேளை நான் அவரை குறிப்பிட்டிருக்கிறேன் என்பதை தெரிந்து கொண்டு விட்டீர்கள்.

   Delete
  4. நான் குறிப்பிட மறந்த ஒருவர் 'உங்கள் நண்பன் எல்.ஆர்.நாராயணன்'

   Delete
 11. ரேடியோ - எங்கள் வீட்டிலும் ஒரு வால்வு ரேடியோ இருந்தது - அதற்கு லைசன்ஸ் உண்டு - போஸ்ட் ஆஃபீஸில் சென்று நான் பணம் கட்டி இருக்கிறேன் - அப்பாவோடு போய்தான்.

  ரேடியோவை பிரித்து மேய்ந்ததும் நான் தான். அதற்கு தனி கவனிப்பு கிடைத்தது அப்பாவிடமிருந்து.

  இனிய நினைவுகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட் நன்றி!
   //ரேடியோவை பிரித்து மேய்ந்ததும் நான் தான். அதற்கு தனி கவனிப்பு கிடைத்தது அப்பாவிடமிருந்து.//
   ஹாஹாஹா! நீங்களா? நம்பவே முடியவில்லை.

   Delete
 12. துளசி: நான் அப்போது கேட்டது எல்லாம் இலங்கை தமிழ்ச்சேவை இரண்டு...அப்புறம் செய்திகள். தமிழ்நாட்டில் இருந்தவரை...இலங்கை வானொலிதான் அதிகம் கேட்டதுண்டு.

  அதன் பின் வேலைக்குச் சேர்ந்து பாலக்காட்டில் இருந்தவரை ரேடியோ இல்லாமல் குறிப்பாக கேரளத்துச் செய்திகள், சில ப்ரோக்ராம்கள் கேட்காமல் இருந்ததில்லை. வீட்டில் இதெல்லாம் பாசிபிள் இல்லை...அருமையான பதிவு.

  கீதா: ஆகாசவாணி சரோஜ் நாராயணசாமி தான் எங்கள் வீட்டில் அதிகம் ஒலிப்பார். எங்களுக்கெல்லாம் ரேடியோ நாட் அலவ்ட். வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லை என்றால் மட்டும் நாங்கள் கஸின்ஸ் எல்லோரும் இலங்கை வானொலி கேட்டதுண்டு. அப்போதுதான் என் ஆட்டம் எல்லாம் அம்மனோ சாமியோ....கே ஆர் விஜயா எல்லாம்...மற்றபடி வேறு ஒன்றும் கேட்டதில்லை. என் அப்பா வீட்டிலிருக்கும் நேரம் எல்லாம் சிறிய ட்ரான்ஸிஸ்டர் வைத்துக் கேட்பார்...அவர் மட்டும். கச்சேரிகள் ந்யூஸ் எல்லாம்...நாங்கள் எல்லாம் இந்திராகாந்தி ஆட்சியில் (என் அம்மாவின் அம்மா) அதுவும் 144 ல் வளர்ந்தோம் ஹா ஹஹா ஹா ஹா..அதில் என் அப்பாவுக்கும் தடா உண்டு. ஆனால் அவர் வைத்திருந்தது பாக்கெட் ட்ரான்ஸிஸ்டர்...ஹா ஹா ஹா..

  .பானுக்கா நீங்கள் சொல்லியிருப்பவை எல்லாம் டிவி முதற்கொண்டு ரொம்ப அனுபவம் இல்லை அப்போது...தோழிகள் சொல்லிக் கேட்டதுண்டு அவ்வளவே.

  ReplyDelete
  Replies
  1. நன்றி துளசி!
   கீதா, இந்திராகாந்தி ஆட்சியில்(உங்கள் பாட்டி) 1144 இல் வளர்ந்த பொழுதே அம்மனோ சாமியோ ஆட்டம் போட்டிருக்கிறீர்கள் என்றால்... ?? சரியான ரெட்டை வால்தான் போலிருக்கிறது. 'Don't judge a book by its cover' என்று சொல்லப் படுவது சரிதான் போலிருக்கிறது.

   Delete
  2. ஹா ஹா ஹா ஹா அக்கா அப்போ எல்லாம் நான் என் கஸின்ஸுடன் ரொம்ப விளையாடியிருக்கிறேன். என் எல்லோரும் ஒன்றாக வளர்ந்ததால்...பாட்டியிடம் பேசுவதற்கு நான் தான் தைரியசாலி என்பது மட்டுமல்ல அடி வாங்குவதிலும் நான் தான் ..ஹா ஹா ஹா அவர்களை விட்டுக் கொடுக்க மாட்டேன்..ஒரு புறம்...எவ்வளவுக்கு எவ்வளவு விளையாட்டோ அவ்வளவுக்கு அவ்வளவு மறுபுறம் அனுபவங்களினால் பெற்ற பக்குவமும் உண்டு...ஹிஹிஹி..
   கோல்டன் டேய்ஸ் அதெல்லாம்...பொதுவாக ஆண்கள் சொல்லுவாங்க திருமணம் ஆய்டிச்சுனா வாயைப் பொத்தி அமைதியாகிவிடுவார்கள்னு ஆனா நான் கப்சிப் அப்புறம்....ஆனா இப்போதும் என் கசின்ஸ் மட்டும் சேர்ந்தால் அவ்வளவுதான்...பாட்டும் டான்ஸும் என்று..வாய்ப்பு ரொம்பக் குறைந்துவிட்டது... அதுவும் என் அப்பா சைட் கஸின்ஸ் ரொம்ப ஜாலி...அம்மா சைட் கஸின்ஸ் முன்பு ஜாலி இப்போ எல்லாம் ரொம்ப அமைதி......

   கீதா

   Delete
 13. பதிவு சுவாரசியமாகவுள்ளது. தொடர்ந்தும் உங்களது படைப்புக்கள் வெளிவர எமது வாழ்த்துக்கள்.

  வணக்கம்,

  www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று

  வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான

  ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது.

  அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய

  நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

  உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள்,

  பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின்

  ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

  நன்றி..
  தமிழ்US

  ReplyDelete
  Replies
  1. I feel I am honoured. I'll definitely support. Thank you.

   Delete