கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, September 11, 2018

பரவசம் தந்த நவ திருப்பதியும், நவ கைலாசமும் - 1

பரவசம் தந்த நவ திருப்பதியும், 
நவ கைலாசமும் - 1


செப்டம்பர் முதல் வாரத்தில் ஏதாவது கோவில்களுக்குச் செல்லலாம் என்று தோன்றியது. பல வருடங்களாக தரிசிக்க ஆசைப்பட்ட, திருநெல்வேலியை சுற்றி இருக்கும் நவதிருப்பதி 
தலங்களுக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தோம். வெகு சமீபத்தில் அங்கு சென்றுவிட்டு வந்திருக்கும் நெல்லை தமிழனிடமும், கீதா சாம்பசிவம் அக்காவிடமும் சில ஆலோசனைகள் பெற்றுக் கொண்டேன். கீதா அக்கா அங்கே நவ கைலாசம் எனப்படும் விசேஷமான சிவ ஸ்தலங்களும் இருப்பதாக கூறினார். எனவே அவைகளையும் தரிசனம் செய்து விட்டு வரலாம் என்று முடிவு செய்து பெங்களூரிலிருந்து நாகர்கோவில் எக்ஸ்பிரஸில்  கோகுலாஷ்டமி அன்று கிளம்பினோம். மாலை 5:15க்கு புகை வண்டி கிளம்பும் என்பதால் காலையிலேயே எங்கள் வீட்டுக்கு கிருஷ்ணனை வரவழைத்து விட்டோம். அவருக்கு பாயசம், பால், வெண்ணை, பழங்கள், அவல் மற்றும் ஏலக்காய் பொடி செய்து போட்ட சுத்தமான நீர் இவைகளை நிவேதித்து  விட்டு  பழங்களையும் குடி நீரையும் எடுத்துக் கொண்டோம். மறுநாள் காலை 6:30க்கு நெல்லையை அடைந்தோம். ஹோட்டலுக்குச் சென்று, குளித்து, சிற்றுண்டி அருந்தி கிளம்ப 8:30 ஆகி விட்டது.

முதலில் நாங்கள் சென்றது ஸ்ரீ வைகுண்டம் என்னும் ஷேத்திரம். இங்கு பெருமாள் சூரியனின் அம்சமாக இருக்கிறார். நின்ற திருக்கோலம். மூலவர் வைகுண்டநாதன், ஆதிசேஷன் குடை பிடிக்க நின்ற திருக்கோலம். உற்சவர் கள்ளர்பிரான். வைகுண்ட நாயகி, சோரநாத நாயகி(பூ தேவி)என்று இரண்டு தாயார்கள். நவ திருப்பதியில் முதலாவது ஷேத்திரம்.  நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.

பிரும்மா வசிக்கும் சத்யலோகத்தில் ஒரு முறை பிரளயம் ஏற்பட்ட பொழுது,சோமுகாசுரன் என்னும் அரக்கன் பிரும்மாவின்  படைத்த தொழில் பற்றிய ரகசிய ஏடுகளை கவர்ந்து சென்று விடுகிறான். அதை அவனிடமிருந்து மீட்கும் பொருட்டு தன பிரம்ம தண்டத்தை ஒரு பெண்ணாக்கி தான் பூமியில் தவம் செய்வதற்கு ஏற்ற இடத்தை  அறிந்து வரச் சொல்ல, அந்தப் பெண் தாமிரபரணி நதிக்கரையில் சோலைகள் சூழ்ந்த இந்த இடத்தை தேர்வு செய்து அவரிடம் தெரிவிக்கிறாள். பிரம்மா இங்கு வந்து மஹாவிஷ்ணுவை நோக்கி கடும் தவம் செய்ய, அவருக்கு வைகுண்டநாதனாக காட்சி அளித்த மஹாவிஷ்ணு சோமுகாசுரனிடமிருந்து ஸ்ருஷ்டி ரகசிய ஏடுகளை மீட்டுத் தருகிறார். தனக்கு காட்சி கொடுத்த கோலத்திலேயே பெருமாள் இங்கு எழுந்தருள வேண்டும் என்று பிரம்மா வேண்ட, பெருமாளும் அதற்கு சம்மதித்து அருளிய கோலம். மூலவர் விக்கிரஹத்தை பிரம்மாவே பிரதிஷ்டை செய்து, தன் கமண்டல நீரால் அபிஷேகம் செய்த தீர்த்தம் கலச தீர்த்தம் எனப்படுகிறது. 

கால தூஷகன் என்னும் பெருமாளின் பக்தனான திருடன் ஒருவன் தான் கொள்ளையடிக்கும் செல்வங்களில் பாதியை பெருமாளுக்கு காணிக்கையாக தருவதை வழக்கமாக கொண்டிருந்தான். ஒரு முறை அரசனின் கருவூலத்தை கொள்ளையடிக்க முயன்ற பொழுது பிடிபடுகிறான். தன்னை காப்பாற்றும்படி  வைகுண்டநாதனிடம் வேண்டுகிறான். அவனுக்காக திருடன் உருவில் பெருமாளே செல்கிறார். அரசன்   வரும் பொழுது, தன்னுடைய சுய ரூபத்தை காட்டியருளுகிறார்.  தன்னுடைய செல்வத்தை கொள்ளையடிக்க ஏன் பெருமாள் வர வேண்டும் என்று கேட்க, தரும வழியில் செல்லாத அவனை தர்மத்தில் ஈடுபட செய்யவே தான் வந்ததாக கூறுகிறார். தனக்கு கிடைத்த பாக்கியம் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று  மன்னன், கள்ளர்பிரான் என்னும் திருநாமத்தோடு எழுந்தருளச் செய்கிறான். அழகான அந்த சிலா ரூபத்தை நாமும் வணங்குகிறோம்.

கோவில் ஓரளவிற்கு பெரியது. நிறைய பெரிய அழகான சிற்பங்கள். நாயக்கர் காலத்தவையாக இருக்கலாம். மூலவரை தரிசித்து விட்டு பிரகாரத்தை வலம் வரும் பொழுது இடது புறம் வைகுண்ட நாயகி சந்நிதியும்,  வலது புறம் சோரநாத நாயகி சந்நிதியும் இருக்கின்றன.  அதைத்தாண்டி  மண்டபம் உள்ளது. பல சிற்பங்களில் வானரங்கள் பிரதான இடம் பிடித்திருக்கின்றன.


தசாவதாரங்களில் மச்ச,கூர்ம அவதாரங்கள் மீன் போலவும், ஆமை போலவும் இருப்பதை பாருங்கள் 






யுத்த காட்சி 








15 comments:

  1. அழகான படங்கள். நாங்க சுமார் பனிரண்டு வருடங்கள் முன் சென்றதால் அப்போது ஃபில்ம் போடும் காமிரா தான்! அதையும் எடுத்துச் செல்லவில்லை. ஆகையால் படங்கள் ஏதும் அப்போ எடுக்கலை!:) படங்கள் அனைத்தும் அருமையா வந்திருக்கு! ஒவ்வொரு படத்துக்கும் விளக்கம் கொடுத்திருக்கலாமே!

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. படங்களே விளக்கமாக இருக்கிறது என்று நினைத்தேன். என் செல் ஃபோனில் தான் எடுத்தேன்.

      Delete
  2. படித்தேன். தொடர்கிறேன்.

    ReplyDelete
  3. தொடர்கிறேன். நினைவுகள் திரும்புகின்றன.

    ReplyDelete
  4. வரவர எல்லோருமே கோயில் தரிசனத்தில இறங்கிட்டீங்க... கீசாக்கா.. துரை அண்ணன்.. கோமதி அக்கா.. அந்த வரிசையில நீங்களும் கோயில் தரிசம் ஆரம்பிச்சிட்டீங்க...

    இருப்பினும் இத்தனை வருடமாக தமிழ் நாட்டில் இருந்தும்.. இப்போதான் திருநெல்வேலிக்கு தரிசனம் செய்திருக்கிறீங்களோ...

    அதுசரி நெல்லைத்தமிழன் மரக்கறி வாங்கும்போது பார்த்தனீங்களோ? வல்லாரை வாங்கிக் கொண்டு இருந்திருப்பார் அந்தக் கடையில:)..

    ReplyDelete
    Replies
    1. ப்ளாகில் என் முதல் இடுகையே கோவில் தரிசனம்தான் அதிரா. அஹோபிலம் சென்று விட்டு அந்த அனுபவங்களை எழுதினேன்.
      திருநெல்வேலி மட்டுமல்ல தமிழ் நாட்டில் நான் பார்க்க வேண்டிய இடங்கள் இன்னும் பல இருக்கின்றன.

      Delete
  5. சிறப்பான தொடக்கம். சிற்பங்கள் பார்க்க ரொம்பவே அழகு. நவதிருப்பதி, நவகைலாசம் - மேலும் தகவல்கள் அறிந்து கொள்ள தொடர்கிறேன்.

    எனக்கு இங்கே செல்ல எப்போது வாய்ப்பு கிடைக்குமோ - சிற்பங்களுக்காகவே இங்கே செல்லத் தோன்றுகிறது. பார்க்கலாம் எப்போது செல்ல முடிகிறது என.

    ReplyDelete
  6. கண்டிப்பாக ஒரு முறை சென்று விட்டு வாருங்கள். அவசியம் பார்க்க வேண்டிய தலங்கள்.

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரி

    அழகான படங்கள். கோவிலைப்பற்றிய விளக்கமான விபரங்கள். தூண்களும் சிற்பங்களும், மனதை கவர்கின்றன. இங்கெல்லாம் நானும் இது வரையச் சென்றதில்லை. செல்லும் ஆசையை தங்கள் பதிவும்,படங்களும் தூண்டி விடுகின்றன. எப்போது பிராப்தம் கிடைக்கிறதோ அப்போதுதானே எதுவும் அமையும். வரும் வரை காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  8. அழகான படங்களும்...சிறப்பான தகவல்களும்

    தொடர்கிறேன்..

    ReplyDelete