கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, March 7, 2019

யாமறிந்த பெண் எழுத்தாளர்களிலே ....

யாமறிந்த பெண் எழுத்தாளர்களிலே ....


மகளிர் தினத்தை ஒட்டி ஒரு பெண்கள் பத்திரிகை வெளியிட்டிருந்த சிறப்பிதழில் 'தமிழ் சினிமா கதா நாயகிகள் பற்றிய ஒரு கட்டுரை வாசித்தேன். 
உடனே 'எழுத்துலகில் பெண்கள்' குறிப்பாக பெண் கதாசிரியைகளைப்  பற்றி எழுதலாமே என்று தோன்றியது. ஆனால் தமிழில் எழுதும் எல்லோருடைய எழுத்தையும் நான் படித்ததில்லை, அதுவும் சமீப கால எழுத்தாளர்களின்  படைப்புகளை படிப்பதே இல்லை என்று கூட சொல்லலாம். இந்த நிலையில்நியாயமான மதிப்பீட்டை தர முடியுமா என்று தெரியவில்லை. எனவே நான் படித்த வரையில் பெண் எழுத்தாளர்களைப் பற்றிய என் பார்வை இது.

வை.மு.கோதைநாயகி அம்மாள்:




தமிழில் முதல் பெண் எழுத்தாளர்(கதாசிரியர்) என்றால் அது வை.மு. கோதை நாயகி அம்மாள்தான். அந்தண குலத்தில் பிறந்து, ஐந்து  வயதில்  திருமணம் செய்து கொண்டு, அதற்குப்  பிறகு  கணவரின்  தூண்டுதலால்  படித்து கதாசிரியராக பரிணமித்தவர். 115 புத்தகங்களை பிரசுரித்திருக்கிறார். ஜகன்மோகினி என்னும் பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். எழுத்தாளர், பேச்சாளர்,சுதந்திர போராட்ட வீராங்கனை,பாடகி என்ற பன்முகங்கள் கொண்டவர். ஒரு பத்திரிகையின் ஆசிரியர் குழுமத்தில் இடம் பெற்ற முதல் எழுத்தாளர். சென்சார் போர்ட் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். இவருடைய  படைப்புகள்  சில  திரைப்படமாகவும்  வந்திருக்கின்றன. பிரமிக்க வைக்கும் சாதனையாளர்!

லக்ஷ்மி:

ஆனந்த விகடனின் ஆசி பெற்ற பெண் எழுதாளர்களில் முதன்மையானவர் லக்ஷ்மி! திரிபுரசுந்தரி என்னும் இயற் பெயர் கொண்ட இவர் ஒரு மருத்துவர். மெடிக்கல் காலேஜில் படிக்கும் காலத்திலேயே கதை எழுத ஆரம்பித்த இவரின் முதல் சிறுகதையான 'தகுந்த தண்டனையா'? மற்றும் முதல் நாவலான 'பவானி' இரண்டுமே ஆனந்த விகடனில்தான் வெளியாயின. பெண்களை மிகவும் கவர்ந்த நாவலாசிரியை.  இவருடைய  கதைகளில்  பவானி, மிதிலா விலாஸ்,  பண்ணையார்  மகள்  போன்றவை  பெரும்  வரவேற்பை பெற்றவை.   இவருடைய கதா நாயகிகள் அத்தனை பேருமே, "தற் காத்து, தற்  கொண்டார் பேணி, தகை சார்த்து, சொற் காத்து சோர்விலாள் பெண்" என்று  இலக்கணம் மாறாத பாரத நாரிகள். அடுத்தடுத்து துன்பங்களை அனுபவித்தாலும் இறுதியில் எல்லாம் சுபம் என்று முடியும் குடும்ப கதைகள்தான் இவருடைய களம்.


ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும் கோலோச்சிய பெண் எழுத்தாளர் இவர்.
இருபது வருடங்களுக்கும் மேலாக எழுதாமல் இருந்து விட்டு நீண்ட
இடைவெளிக்குப் பிறகு குமுதத்தில் இவர் எழுதிய 'அத்தை', ' என் பெயர் டீ.ஜி.கார்த்திக்' போன்ற நாவல்களும் பெரும் வரவேற்பை பெற்றது
இவருடைய எழுத்து திறனுக்கு ஒரு சான்று. 

இவருடைய காஞ்சனையின் கனவும், பெண் மனமும்(இருவர் உள்ளம்) திரைப்படங்களாகவும் வந்தன. பெண் மனம், மிதிலா விலாஸ் நாவல்கள் தமிழ் வளர்சிக் கழகத்தின் பரிசினையும், 'ஒரு காவிரியைப் போல்' நாவல் சாகித்திய அகடமியின் பரிசினையும் வென்றன. இவருடைய  கதைகளுக்கென்று ஒரு பார்முலா இருக்கும், அது  சுவாரஸ்யமாகவும்  இருக்கும் என்பதுதான் விஷயம்.

சிவ சங்கரி:

அறுபதுகளின் இறுதியில் எழுத ஆரம்பித்த இவர் கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கும் மேலாக கொடி கட்டி பறந்தார். இவரை அறிமுகப்படுத்தியது கல்கி என்றாலும் மேலே தூக்கி விட்டதில் ஆனந்த விகடனுக்கும், பத்திரிகை ஆசிரியர் சாவிக்கும் பெரும் பங்கு உண்டு. 

150க்கும் மேற்பட்ட சிறு கதைகள்,குறுநாவல்கள், 36 நாவல்கள், பல்வேறு கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இலக்கியம் மூலமாக இந்திய ஒருமைப்பாடு என்னும் பெயரில் இவர் நம் நாட்டின் எல்லா மொழிகளிலும் உள்ள சிறப்பான கதைகளை தொகுத்து வெளியிட்டிருப்பது ஒரு நல்ல முயற்சி. இவருடைய சில கதைகள் திரைப்படமாகவும், டி. வீ. சீரியல்களாகவும் வந்துள்ளன.



ஆளுமை கொண்ட எழுத்து இவருடையது. 1997 ஆம்  ஆண்டு  நமது  நாட்டின் சுதந்திர பொன்விழாவின் போது ஆங்கில பத்திரிகை பெமினா
இந்தியாவை  உருவாக்கிய  ஐம்பது  பெண்மணிகளுள்  ஒருவர்  என்னும்  விருதை வழங்கியது.  1999 ஆம் ஆண்டு  அமெரிக்காவில்  உள்ள  டென்னசி  மாகாண கவர்னர் ஊக பிரிட்ஜ் நகரத்தின்  கௌரவ  பிரஜை  விருதை  வழங்கி கௌரவித்தார். இதைத் தவிர  பல விருதுகளும், கௌரவங்களும்  பெற்றுள்ளார். 

தியாகு என்பதை  த் ...யா.. கூ  என்று இவர் எழுதியதை ஒற்றெழுத்து வார்த்தையின்
துவக்கத்தில் வராது என்னும் இலக்கணம் தெரியாமல் எழுதுகிறார் என்று சிலர் கண்டித்தார்கள். 

ஒரு உயர்ந்த பீடத்தில் உட்கார்ந்து கொண்டு உபதேசம் செய்வதும்,கதையில் சமையல் குறிப்பு எழுதுவதும், கதை மாந்தர்கள் அமைப்பில் இவர் அதிகம் தெரிவதும் இவருடைய குறைகள். கதாசிரியராக தொடங்கிய  இவருடைய  பொது வாழ்க்கை சமூக  ஆர்வலராக  பரிணமித்தது.

இந்துமதி:


முதலில் கணையாழி போன்ற இலக்கிய பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்த இவர் அனந்த விகடன் மூலம் வெகுஜன பத்திரிகை உலகில் பிரவேசித்தார்.  கிடாரில் கர்நாடக சங்கீதம் வாசிப்பது போல துள்ளலும்,இளமையும், இனிமையும் கொண்டது இவருடைய எழுத்து. இவருடைய  'தரையில் இறங்கும் விமானங்கள்' மற்றும் 'வீணையில் உறங்கும் ராகங்கள்' இரண்டும் மிக நல்ல இலக்கிய படைப்புகள். என் வாசிப்பு அனுபவத்தை அடுத்த  படிக்கு  எடுத்துச்  சென்றவர்களில்  இவருக்கு முக்கிய இடம் உண்டு. இவர் எழுத்தை படித்து விட்டுதான் நான் தி.ஜானகிராமன் எழுத்துக்களை வாசித்தேன். அங்கிருந்தது கு.ப.ரா., புதுமைப்பித்தன் என்று என் வாசிப்பு விரிந்தது.

வாஸந்தி:

ஆனந்த விகடன் ஆதரவு பெற்ற மற்றொரு எழுத்தாளர். அதுவரையில் தமிழ் நாட்டை மட்டும் குறிப்பாக  சென்னையை மட்டும் சுற்றி வந்து கொண்டிருந்த தமிழ் கதையுலகை வட  இந்தியாவிற்கு கொண்டு சென்றவர். தன்னை பெமினிஸ்ட் என்று இவர் கூறிக்  கொண்டாலும் நடு நிலைமையில் நின்று எழுதக் கூடிய நல்ல எழுத்தாளர். அம்மணி போன்ற அருமையான நாவலை ஒரு பெமினிஸ்ட்டால் எழுதவே முடியாது. பெண்கள்  பிரச்சனைகளை  மட்டுமல்லாமல் பொதுவான சமூக பிரச்சனைகளையும் பற்றி எழுதியுள்ளார்.
சாதாரணமாக பெண் எழுத்தாளர்கள் தொடாத அரசியலை நிலை களனாக கொண்டு எழுதிய முதல் பெண் எழுத்தாளரும் இவர்தான். 



இவருடைய 'ஆகாச வீடுகள்' நாவல் ஆங்கிலம், இந்தி, ஜெர்மன், மொழிகளில்  மொழிபெயெர்க்கப் பட்டுள்ளது. பல விருதுகளுக்கு சொந்தக்காரர். இந்தியா டுடேயின் தமிழ் பதிப்பிற்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். ஜெய லலிதாவைப் பற்றி பென்குயின் பதிப்பகத்திற்காக இவர் எழுதிய,
'ஜெய லலிதா எ போர்ட்ரைட்' என்னும் புத்தகத்திற்கு ஜெயலலிதா  ஸ்டே ஆர்டர்  வாங்கியதால் அப்புத்தகம் வெளியிடப் படவில்லை. 

அனுராதா ரமணன்:



லே அவுட் ஆர்டிஸ்ட் ஆக  பத்திரிகை உலகில் நுழைந்தவர்  'விஜயாவின் டைரி' என்னும் தன்னுடைய  வாழ்க்கை குறிப்பை எழுதியதன் மூலம் எழுத்தாளராக மாறினார். பெரும்பாலும் குடும்ப கதைகளாக எழுதினாலும்
நகைச் சுவை உட்பட பல் வேறு சுவைகளிலும் எழுதி இருக்கிறார். சாதாரண கதைகளாகவே எழுதிக் கொண்டிருப்பவர் திடீரென்று ஒரு நல்ல கதை எழுதி  விடுவார். 

ரமணி சந்திரன்:



ஒரு முறை நான் லெண்டிங் லைப்ரரி சென்றிருந்த பொழுது அங்கு வந்த அத்தனை பெண்களும் ரமணி சந்திரன் நாவல்தான் வேண்டும் என்று கேட்டார்கள். (பெண் )வாசகர்கள் இடையே மிக அதிக வரவேற்பை பெறுவது  இவருடைய எழுத்து. இவருடைய எல்லா நாவல்களுமே மில்ஸ் அண்ட் பூன் பாணி அல்லது மௌன ராகம் பாணி கதைகள்தான். ஏதோ ஒரு காரணத்தால்
கணவன் மனைவி ஆகிவிடும் இருவரிடையே நடக்கும் பனிப் போர், இறுதியில்அது சுபமாக முடிவது என்று சலிக்காமல்  அவரும்  எழுதிக்  கொண்டே இருக்கிறார், அலுக்காமல்  பெண்களும்  படித்துக்  கொண்டே  இருக்கிறார்கள். எது எப்படியோ  மிக  அதிகமாக  விற்பனையாவது  இவருடைய நாவல்கள்தான்.

சீதா ரவி:




பாரம்பரியம் மிக்க பத்திரிகையான கல்கி குடும்பத்தைச் சேர்ந்தவர். அந்த பாரம்பரியம் இவருடைய எழுத்தில் வெளிப்படும். நூல் பிடித்தார் போன்ற தெளிவான நடை இவருடைய சிறப்பு. பழங்கால  எழுத்தாளரான  அனுத்தமவைப் போல என்று கூறலாம். கல்கி குழுமத்தை தாண்டியும் இவர்
வெளியே வர வேண்டும்.

மஞ்சுளா ரமேஷ்:



கல்கி குழுமம் என்றால் பெண்களுக்கு நினைவுக்கு வருவது மங்கையர் மலர். மங்கையர் மலர் என்றால் நினைவுக்கு வருபவர் மஞ்சுளா ரமேஷ். இவர்
ஆசிரியராக இருந்த பொழுது மங்கையர் மலர் அடைந்த வளர்ச்சி அபரிமிதம். 
கட்டுக்கோப்பான எழுத்து இவருடையது. இவருடைய ஆன்மீக கட்டுரைகள் சிறப்பானவை. 'மஞ்சுளா ரமேஷின் சிநேகிதி', மற்றும் 'ஞான ஆலயம்' ஆகிய
இரண்டு பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருக்கிறார்.

திலகவதி I.P.S.:




தமிழகத்தின் முதல் பெண் I.P.S. ஆன இவர் முன்னூறுக்கும் மேற்பட்ட சிறு கதைகளும், நிறைய நாவல்கள் மற்றும் கவிதைகள்   எழுதியிருக்கிறார். 2005 ஆம் ஆண்டு அவருடைய கல் மரம் நாவலுக்காக சாகித்திய அகடமியின் பரிசினை வென்றார்.  இவருடையதும் ஆளுமை கொண்ட எழுத்து.

ஆர்.சூடாமணி:



பெண் எழுதாளர்களில் இவர் வித்தியாசமானவர். பெண்ணியம் என்னும் விலங்கை மாட்டிக்கொள்ளாமல், புலம்பாமல், சாடாமல் தனக்கென ஒரு தனி
இடம் பிடித்தவர். கலைமகள், கல்கி, அமுதசுரபி  பத்திரிகைகளில்  இவருடைய  படைப்புகள் வெளியாகும். மனித  மனத்தின்  நுட்பங்களை  நுணுக்கமாக படைப்பதில் வல்லுநர். நிறைய  பரிசுகளும்  பாராட்டுகளும்  பெற்றிருக்கிறார். மிகச் சிறந்த இலக்கிய படைப்பாளி.

இவரைப் போலவே ராஜம் கிருஷ்ணனும் சிறந்த இலக்கிய படைப்பாளி.

அம்பையும், ஜோதிர் லதா கிரிஜாவும் நல்ல எழுத்தாளர்கள்தான் என்றாலும் பெண்ணியத்தை சிலுவையாக சுமப்பதாலோ என்னோவோ அவர்கள்  எழுத்தில் கசப்பு வழியும்.

அமெரிக்காவிலிருந்து கொண்டு  எழுதும் கீதா பென்னட், துணிச்சலான எழுத்தாளர் என்றால், அமெரிக்காவின்  இன்னொரு  முகத்தை  நமக்கு  காட்டும் காஞ்சனா தாமோதரனும் ஒரு சிறந்த எழுத்தாளர். இவர்களைத் தவிர கமலா சடகோபன், விமலா ரமணி, கோமளா வரதன், ஸ்ரீரங்கம் எஸ்.பட்டமாள் போன்ற பலர் என்னைக் கவர்ந்த கதைகளை எழுதி இருக்கிறார்கள்.

ஒருமுறை எனக்குத்  தெரிந்த  ஒரு  பெண்  பத்திரிகையாளரிடம்,  "சுஜாதா ஒரு முறை சொன்னது போல பெண் எழுதாளர்களின் எழுத்து சமையலறையை தாண்டி வர மாட்டேன் என்கிறதே" என்றேன்,அதற்கு அவர், "வராது, வராது .. ஏனென்றால் நாம் அங்குதான் வாழ்கிறோம். ஒரு  கால்  சென்டரைப் பற்றி கதை  எழுத  வேண்டும்  என்றால்  ஆறு மாதமாவது  கால்  சென்டரில்  போய் வேலை செய்ய வேண்டும். எல்லாவற்றையும்  கற்பனை  செய்தே  எழுத முடியாது". என்றார்.  அதாவது எதற்கு எக்ஸ்போஷர் கிடைக்கிறதோ அதைப் பற்றிதான் எழுத முடியும் என்பது அவர் வாதம். அதே நேரத்தில் பெண் எழுதாளர்களுக்கு ஒரு குறை இருக்கிறது. "நாங்கள் புடவை கட்டி கொள்கிறோம் சரி, எங்கள்  எழுத்துக்களுக்கும்  புடவை கட்டி விடாதீர்கள்" என்கிறார்கள்.

இப்போது இருக்கும் பெண்களுக்கு எக்ஸ்போஷர் அதிகம் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்கள் மட்டுமல்ல அவர்களின் எழுத்தும் ஜீன்ஸ் போட்டுக் கொள்வதில் யாருக்கும் இப்போது ஆட்சேபனை இருக்காது.  தமிழில்  எழுத அவர்களுக்கு தமிழ் தெரிய வேண்டுமே என்பதுதான்
என் போன்ற வாசகர்களுக்கு கவலை. 

பி.கு. இது ஒரு மீள் பதிவு.

50 comments:

  1. நல்லதொரு எழுத்தாளர்களைப் பற்றிய அரிய விடயங்கள் அறிந்தேன் நன்று நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சியும், நன்றியும்.

      Delete
  2. கீதா பென்னட் இப்போது இல்லை. மற்றபடி நானும் ஒரு தொடர் பதிவில் பெண் எழுத்தாளர்களைப் பற்றி எழுதினேன். சில ஆண்டுகள் முன்னால் எழுதியது. சுட்டி கிடைத்தால் பகிர்கிறேன்.

    ReplyDelete
  3. ராஜம் கிருஷ்ணன் பெண்களின் பிரச்னைகள் குறித்து நன்கு அலசியவர். அவர் கணவர் இருக்கும்வரை அவருக்கு நல்ல துணையாகவும் ஆதரவாகவும் இருந்தது. அவர் திடீர் மரணத்தின் பின்னால் ரொம்பக் கஷ்டப்பட்டார். நிறைய விருதுகள் வாங்கியவர். திலகவதி தான் தெருவில் திரிந்து கொண்டிருந்தவரைத் தேடிக் கண்டு பிடித்து முதியோர் இல்லத்தில் சேர்த்து ஆதரவு காட்டினார்.

    ReplyDelete
  4. மாற்றுத் திறனாளியான ஆர்.சூடாமணியின் எழுத்தும் அற்புதமானது. அவர் கடைசி காலத்தில் தன்னுடைய இரண்டு கோடி மதிப்பு உள்ள சொத்துக்களைத் தானம் செய்தார். அநுத்தமா கேட்கவே வேண்டாம். குடும்பத்தில் இருந்தபடியே மாமனார், கணவர் ஆதரவுடன் பன்மொழித் திறனில் தேர்ந்து பல மொழி பெயர்ப்புகளையும் செய்தார். இவர்களில் நீங்கள் ஆரம்ப கால எழுத்தாளர்களான குமுதினியையும் அவர் மாட்டுப்பெண்ணான பிரேமா நந்தகுமாரையும் விட்டு விட்டீர்கள். வாசந்தியோடு வைத்துப் பேசக் கூடியவர் அம்பை! வாசவேஸ்வரம் எழுதிய கிருத்திகாவும் அறிவு ஜீவிகளில் ஒருவராகக் கருதப் பட்டவர்.பெண்களை ஒதுக்கி வைத்த சமுதாயத்தை எதிர்த்து எழுத்தின் மூலம் போராடியவர்களில் ஒருவர்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் மீள் வருகைகளுக்கும் நன்றி அக்கா. குமுதினி.. நான் படித்ததில்லை. ப்ரேமா நந்தகுமார் படித்த நினைவு இருக்கிறது.
      அம்பையின் எழுத்தில் ஒரு சினிசிஸம் இருக்கும். வாஸந்தியின் எழுத்துக்களில் கொஞ்சம் சோகம் இருந்தாலும் பாசிடிவிடியும் இருக்கும்.

      Delete
    2. இருக்கலாம் பானுமதி. ஆனால் நான் படித்தது அம்பையின் அந்திமாலை மட்டுமே! அதன் பின்னர் ஒரு சில சிறுகதைகள் படித்திருக்கிறேன். அவ்வளவாய்ப் படித்தது இல்லை. வாசந்தி எப்படி வேண்டுமானாலும் எழுதுவார். முக்கியமாய்ப் பெண்கள் குறித்தும் அவர்கள் பிரச்னைகள் குறித்தும், குடும்ப வாழ்க்கையில் படும் அவதிகள் குறித்தும்! இந்திராகாந்தி இறந்த பின்னர் நடந்த தில்லிக் கலவரம் பற்றியும் எழுதி இருக்கிறார். நேபாளத்தில் பல வருடங்கள் இருந்திருக்கிறார் என்பதால் காமாட்சி அம்மாவின் உறவோ எனக் கூட நினைப்பேன். வாசந்தியும் திருவண்ணாமலைப் பக்கம் தான் என நினைக்கிறேன்.

      Delete
  5. வணக்கம் சகோதரி

    மகளிர் தின பதிவாக தாங்கள் இங்கு அறிமுகபடுத்திய பெண் எழுத்தாளர்களைப் பற்றிய செய்திகளுக்கு மிக்க நன்றிகள். அனைத்தும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இங்கு குறிப்பிட்டிருக்கும் எழ்த்தாளர்கள் எழுதிய கதைகளை நானும் நிறைய படித்திருக்கிறேன். அனைவரின் எழுத்துகளும் மிகவும் வித்தியாசமாக நன்றாகவே இருக்கும். எழுத்தாளர் லட்சுமி அவர்களின் நாவல்களை விரும்பி படித்துள்ளேன். தங்கள் பதிவை படிக்கும் போது எனக்கும் கதை புத்தகங்கள் படித்த அந்நாளைய மலரும் நினைவுகள் வந்தன.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    தங்களுக்கும் மகளிர்தின நல்வாழ்த்துகள் சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், மகளிர் தின வாழ்த்துகளுக்கும் நன்றி. உங்களுக்கும் என் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

      Delete
  6. http://sivamgss.blogspot.com/2011/04/1.html

    http://sivamgss.blogspot.com/2011/04/2.html

    மற்றவை கிடைக்கவில்லை! உங்க அதிர்ஷ்டம்! :))))))))

    ReplyDelete
    Replies
    1. நன்றி. படித்து விட்டு கருத்து கூறுகிறேன்.

      Delete
  7. சூப்பர் பதிவு!!!!! பானுக்கா...

    வைமு கோ பற்றி அவரது வாழ்க்கை பற்றியும் சில வருடங்கள் முன் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. //இவருடைய காஞ்சனையின் கனவும், பெண் மனமும்(இருவர் உள்ளம்) திரைப்படங்களாகவும் வந்தன. // இதுவும் நினைவுக்கு வந்தது...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. லஷ்மியின் என்று அடித்தது காப்பி பேஸ்டடில் விடுபட்டு விட்டது அவர் கதைகள் படமாக வந்தது குறித்து சொன்ன கருத்தில்..

      கீதா

      Delete
  8. கீதா பென்னட் இப்போது இல்லை. காஞ்சனா வரதராஜன் பற்றி இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன் பானுக்கா...

    அம்பை...ம்ம்ம்ம் ஆமாம் நீங்கள் சொல்லியிருப்பது போலத்தான். சில கொஞ்சம் ஓவராகவே இருக்கிறது..நீங்கள் கொடுத்த புத்தகத்தை வாசித்தேன்...இன்னும் கொஞ்சம் இருக்கிறது...வாசிக்க

    திலகவதி எழுதியதும் வாசித்ததில்லை. ஜோதிர்லதா கிரிஜா தெரியும் ஆனால் என்ன கதை வாசித்திருக்கிறேன் என்று நினைவு இல்லை. பயணத்தின் போது வாங்கிய இதழ்களில் எப்போதோ.. வாசித்திருக்கிறேன் மற்றபடி வாசித்ததில்லை...

    மற்றவகளையும் பார்த்துவிட்டு வரேன்

    கீதா



    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், மீள் வருகைக்குக்கும் நன்றி.
      நான் குறிப்பிட்டிருக்கும் அமெரிக்க எழுத்தாளர் காஞ்சனா தாமோதரன் . காஞ்சனா வரதர்ராஜன் அல்ல.

      Delete
  9. லக்ஷ்மிம்மா அனும்மா சிவசங்கரி இந்துமதி நான் விரும்பும் எழுத்தாளர்கள் ..வித்யா சுப்பிரமணியம் , உஷா சுப்பிரமணியன் இவர்களையும் பிடிக்கும் எனக்கு .

    அருமையான தொகுப்பு பானுக்கா
    //"சுஜாதா ஒரு முறை சொன்னது போல பெண் எழுதாளர்களின் எழுத்து சமையலறையை தாண்டி வர மாட்டேன் என்கிறதே" என்றேன்,அதற்கு அவர், "வராது, வராது .. ஏனென்றால் நாம் அங்குதான் வாழ்கிறோம்// உண்மைதான்க்கா


    சிவசங்கரி// இனி //நாவலில் கதாநாயகி கிச்சனில் சிங்க்கை க்ளீன் பண்ணும் அந்த கிரஷர் ஒலி யை கூட நுணுக்கமா சொல்லியிருப்பார் :) அதேபோல் என்னை சோள ரொட்டியையும் சர்சோங்கையும் தேட வச்சவர் வாஸந்தி அவர்கள்

    ReplyDelete
    Replies
    1. வித்யா சுப்ரமணியம் இப்போதும் முகநூலில் மும்முரமாக இருக்கிறார். பல நாவல்களை வெளியிட்டிருக்கிறார். இப்போது சந்த சாத்திர நூல் வெளியீட்டில் மும்முரம். உஷா சுப்ரமணியமும் எங்களுக்குத் தெரிந்தவரே. அவர் ஏற்கெனவே அந்தப் பெயரில் கதைகள் எழுதிக் கொண்டிருந்ததால் வித்யா சுப்ரமணியம் தன்னுடைய உண்மைப் பெயரான உஷாவுக்குப் பதிலாகத் தன் பெண்ணின் பெயரான வித்யாவை இணைத்துக் கொண்டு வித்யா சுப்ரமணியம் ஆகி இருக்கிறார். உஷா சுப்ரமணியத்துக்கு இப்போது வயது ஆகி இருக்கும். இந்துமதி ஆன்மிகத்தில் தோய்ந்து விட்டார்.

      Delete
    2. ஆமாம் கீதாக்கா .வித்யா சுப்பிரமணியம் அவங்க பிளாகும் வச்சிருக்காங்க .
      முந்தி நான் பிளாக் ஆரம்பிச்ச புதிசிலே இவங்க பிளாக்கை தமிலிஷ் ல பார்த்து சேர்த்தேன் :) எங்கம்மா இவர்களின் தீவிர ரசிகை
      முகநூலிலும் நான் இருந்த வரைக்கும் தொடர்ந்தேன் .அழகான ஓவியங்கள் வரைவாங்க .

      Delete
    3. அப்புறம் அநுத்தமா அவர்களையும் வாசித்திருக்கிறேன் .இங்கே லண்டன் லைப்ரரி உபயத்தில்

      Delete
    4. வேளாங்கண்ணி மாதாவை வரைந்திருந்ததை வெளியிட்டிருந்தார்கள். அசந்து போயிட்டேன். உங்களைத் தான் நினைத்துக் கொண்டேன். ஆனால் நீங்க முகநூலில் இருக்கீங்களா, என்ன பெயர் என்றெல்லாம் தெரியாது. படம் அப்படியே அச்சு அசலாக, வெகு நுணுக்கமாக! அதே போல் நரசிம்மரை வரைந்திருந்ததும் பார்க்கவே மனதுக்கு சந்தோஷமாக இருந்தது. நாளைக்கு சந்த சாத்திர நூல் வெளியீடு. இவங்க தான் அதை ஏற்று நடத்துவதால் பிசி!

      Delete
    5. வித்யா சுப்பிரமணியம் மேடம் எங்கள் பிளாக் கேட்டு வாங்கிப் போடும் கதைக்கு முன்னர் ஒரு கதை தந்து உதவினார். அப்புறம் இரண்டு முறை கேட்டேன். அப்புறம் அவர்கள் பிஸியில் அவர்களைத் தொந்தரவு பண்ண விரும்பவில்லை. வல்லிம்மா வீட்டுக்கு அருகேதான் இவர்கள் வீடு.

      Delete
    6. ஓஹோ, அவங்க மைலாப்பூர்னு தெரியும். வல்லி வீட்டுக்குப் பக்கம்னு தெரியாது. வல்லிக்கு இந்தோனேஷியாவிலா? அவரோட பெரிய மகன் இருப்பது! அங்கே மருந்துகள் கிடைக்காமல் போய் வல்லி இவங்களைத் தொடர்பு கொண்டு, மருந்துக்கடையையும் தொடர்பு கொண்டு சொல்ல மருந்துகளை இவங்க தான் இந்தோனேஷியா போறச்சே எடுத்துச் சென்றார். முகநூல், இணைய நட்பு ஆபத்துக்காலங்களிலும் உதவிகளைக் கொண்டு வந்து சேர்க்கிறது.

      Delete
    7. நன்றி ஏன்ஜெல். உங்கள் தயவால் வித்யா சுப்ரமணியன் ஒரு ஓவியர் என்னும் தகவலும், வேறு சில தகவல்களும் அறிந்து கொண்டோம். நன்றி.

      Delete
  10. த் ...யா.. கூ//

    ஆஹா பானுக்கா நான் பல சமயங்களில் கதைகளிலும் கருத்துகளிலும் கூட இப்படி எழுதியிருக்கிறேன்…..ஒற்றெழுத்து தொடக்கத்தில். இனி நான் கவனமாக இருக்கனும்…..பெயர் கூட அப்படி எழுதக் கூடாது இல்லையா?
    நீங்கள் எபியில் ஏதோ கருத்தில் சொல்லி தரையில் இறங்கும் விமானங்கள் வாசித்தேன்……நீங்கள் அதில் கதாபாத்திரங்கள் யாரைக் மறைமுகமாகக் குறிக்கிறது என்பதையும் அப்போதூ எனக்குச் சொன்னீர்கள்….இப்போது வீணையிலுறங்கும் ராகங்கள் நெட்டில் பார்க்கிறேன்…
    வாஸந்தி குறித்து பல புதிய தகவல்கள் அக்கா…ஜெ பற்றி எழுதிய புத்தகம் வெளிவராதது…எல்லாம்..
    கீதா

    ReplyDelete
  11. ராஜம் கிருஷ்ணன் அவர்களின் கதைகள் பெண்களின் துயரங்கள் பேசப்படும் ...அவர் நேரில் சென்று கதைக்களத்தில் இருந்து (வடக்கே கிராமத்து வீடுகள் என்று நினைவு) பார்த்து கூட எழுதியதாகவும் கணவர் அதற்கு மிகுந்த உறுதுணையாக இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்த நினைவு. இவர் உங்க ஊராச்சே பானுக்கா....

    இவர் இறுதியில் ஏமாற்றப்பட்டு (கணவரின் மறைவுக்குப் பின்) மிகுந்த ஏழ்மையில் முதியோர் இல்லத்தில் வாழ்ந்து மறைந்தவர்...

    சுழலில் மிதக்கும் தீபங்கள் எப்போதோ வாசித்திருக்கிறேன். ஒரு கதையில் கூட அதில் வரும் வரிகளைப் பயன்படுத்தியிருந்தேன்....அந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.

    கீதா

    ReplyDelete
  12. அருமையான தொகுப்பு. கலக்கிட்டீங்க.

    ReplyDelete
  13. வைமுகோ எல்லாம் படித்ததில்லை. லக்ஷ்மியின் நாவல்களில் தொடர்கதையாகவே நான் முதலில் படித்தது அத்தை. அப்புறம் மீண்டும் வசந்தம்.ராமு ஓவியம்!

    ReplyDelete
  14. சிவசங்கரி இப்போது தினமணியுடன் இணைந்து இரண்டு வருடங்களாக லட்சரூபாய் சிறுகதைப்போட்டி நடத்துகிறார் தெரியுமோ.... தஞ்சையில் நாங்கள் குடி இருந்த வீட்டு ஓனரின் மருமகள். அப்போது நேரில் சந்தித்திருக்கிறேன். அப்பா உபயம்!

    ReplyDelete
    Replies
    1. //சிவசங்கரி இப்போது தினமணியுடன் இணைந்து இரண்டு வருடங்களாக லட்சரூபாய் சிறுகதைப்போட்டி நடத்துகிறார் தெரியுமோ//
      அப்படியா? தகவலுக்கு நன்றி.

      Delete
  15. இந்துமதி, வாஸந்தி குறைந்த அளவே படித்துள்ளேன். என்றால் உடனே நினைவுக்கு வருவது மூன்று விஷயங்கள். ஒரு சிறுகதையின் தலைப்பு தெரியாது. தந்தையோ, தாயோ உயிருக்கு போராடிக்கொண்டிருப்பார். சமீப காலமாக வழக்கமாகிவிட்ட இந்த நிகழ்வின்போது மகனிடம் போனால் காப்பாற்றி விடுவான் என்று நம்புவார் அந்த நோயாளி. மகனோ, அடுத்தமுறை இங்கு வராதே என்று சொல்லி இருப்பான். அதை அவரிடம் சொல்ல முடியாமல் மகனை அழைத்து வருகிறேன் என்று வந்து தெருமுனையில் அழுகை, துக்கத்துடன் நிற்பார் இவர் - அவரின் மரணம் சீக்கிரம் நிகழ்ந்துவிடும் என்றறிந்து, அதற்காய் காத்திருப்பார்...

    இன்னொன்று அவரின் சிறை கதை.

    ReplyDelete
    Replies
    1. "சிறை" அனுராதா ரமணன் எழுதி விகடனில் வெளிவந்து பின்னர் லக்ஷ்மி நடிச்சுப் படமாக வந்தது.

      Delete
    2. ஆமாம், நினைவிருக்கிறது.

      Delete
    3. இந்துமதியின் வீணையில் உறங்கும் ராகங்கள் கதையும்,(அதற்குபி பிறகு அவர் பாணி கொஞ்சம் நீர்த்துப் போய் விட்டது.), வாஸந்தியின் அம்மணியும் நிச்சயம் படிக்கப்பட வேண்டியவை.

      Delete
  16. திலகவதி எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார். கனம் கோர்ட்டார் அவர்களே ரிலீசான சமயம். அந்தப் படம் பற்றி என்னுடன் பேசியிருக்கிறார்!

    அவர் முத்துகள் பத்து என்றொரு புத்தகம் வெளியிட்டுக்கொண்டிருந்தார். சிறந்த பத்து பத்து சிறுகதைகளாகத் தொகுத்துக் கொடுத்துக்கொண்டிருந்தார் - அவர் சொந்தப் பதிபப்கம் வாயிலாக என்று நினைவு.

    ReplyDelete
  17. ரமணிச்சந்திரன் யெஸ் மில்ஸ் அண்ட் பூன் போல என்று என் கல்லூரிக்காலத்தில் என் தோழிகள் விழுந்து விழுந்து வாசிப்பாங்க. என் கசினும். அப்போது அவர்கள் கொடுத்தார்கள் எனக்கும் வாசிக்க…ஏனோ என்னை ஈர்க்கவில்லை……எல்லா கதைகளும் ஒரே போல்தான் இருக்கும்…அதன் பின் தெரியவில்லை…..

    சீதா ரவி என்றதும் டக்கென்று தெரியவில்லை அப்புறம் கல்கி குடும்பம் என்றதும் புரிந்துவிட்டது.. மஞ்சுளா ரமேஷ் பற்றியும் ஓரளவு தெரியும்.

    கீதா

    ReplyDelete
  18. பானுமதி அக்கா.. இவ்ளோ பெண் எழுத்தாளர்களைப் பற்றி அலசியிருக்கிறீங்க.. இதில் எனக்கு கடசியாக இருக்கும் நால்வரையும் தெரியாது., முதலாவதாக இருப்பவரையும் தெரியாது.

    இதில் பெரிசாக பேச எனக்கு ஒன்றும் வருகுதில்லை, அதனால பேசாமல் ஓடிடுறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா! அதிரா அதிரா!

      Delete
  19. மகளிர்தின வாழ்த்துக்கள்.
    பெண் எழுத்தாளர்களை அழகாய் அறிமுகபடுத்தியமைக்கு நன்றி.
    கோமளா வரதன் எழுத்து மட்டும் இல்லாமல் ஓவியர், நடனமணி என்று பன்முக திறமை வாய்ந்தவர்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, நன்றி. கோமளா வரதன் ஒரு பன்முக கலைஞர்தான். உங்களுக்கும் என் மகளிர் தின நல்வாழ்த்துகள்

      Delete
  20. நல்ல பதிவிற்கு நன்றி. நீங்கள் வரிசைப் படுத்திய பெண் எழுத்தாளர்களில் வாஸந்தி, என் கணிப்பில், உச்சம் தொடுபவர். இந்துமதியின் "தரையில் இறங்கும் விமானங்கள்" புதுமையான நல்லதோர் படைப்பு; வெளிவந்த காலத்தில் பரவலான கவனனம் ஈர்த்தது என்பது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி.
      ஆனந்த விகடன் போன்ற ஜனரஞ்சக பத்திரிகையில் தரையில் இறங்கும் விமானங்கள் போன்ற கதை வந்து, வாசகர்களின் ஆதரவையும் பெற்றது. பின்னாளில் தொலைக்காட்சி தொடராகவும் வந்தது.

      Delete
  21. எங்கெங்கும் நலம் பெருகட்டும்...
    அன்பின் மகளிர் தின நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  22. வானவில் போல பூங்கதிர் போல அழகான தொகுப்பு...
    பழைய நினைவுகளை மீட்டெடுக்கின்றது...


    வாழ்க நலம்..

    ReplyDelete
  23. தொகுப்பு மிகவும் சிறப்பு...

    வாழ்த்துகள் அம்மா...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

      Delete
  24. பொருத்தமான நாளில், தொகுத்துத் தந்த விதம் அருமை.

    ReplyDelete