கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, August 15, 2019

தேவிப்பட்டிணம் - நவ பாஷாணம்

தேவிப்பட்டிணம் - நவ பாஷாணம் 



ராமேஸ்வரம் யாத்திரை மேற்கொள்பவர்கள் முதலில் தேவி பட்டிணம் சென்று அங்கு ராமபிரான் ஸ்தாபித்த நவபாஷாண நவகிரகங்களை வணங்கி, பின்னர் திருப்புல்லாணி சென்று தர்பசயன ராமரை சேவித்து பின்னரே ராமேஸ்வரம் வந்து பர்வதவர்த்தினி சமேத ராமநாதரையும், அவருக்கு அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் காசி விஸ்வநாதரையும், விசாலாக்ஷியையும் வணங்க வேண்டுமாம். இந்த நடைமுறை எங்களுக்குத் தெரியாது. ஆனாலும் யதேச்சையாக இப்படி நேர்ந்தது இறையருள் என்றுதான் கூற வேண்டும். 

சென்னையிலிருந்து ராமேஸ்வரம் சென்றவுடன் தேவிபட்டிணம், உத்திரகோசமங்கை, திருப்புல்லாணி தலங்களுக்கு சென்றுவிட்டு வந்து விடலாம் என்று முடிவு செய்தோம்.

தேவிப்பட்டிணம் என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது நவபாஷாண நவக்கிரகங்கள். ஆனால் இந்த இடம் பல புராதன பெருமைகளை உடையது. மூல சேது என்று அழைக்கப்படும் இங்கு ஒரு முறை தர்ம தேவதை தன்மைகொண்டது நான்கு கால்களோடு தவம் புரிந்து சிவ பெருமானின் வாகனமாகிய ரிஷபமாகியதால் இதற்கு தர்ம தீர்த்தம் என்று ஒரு பெயர் உண்டு. 

காலவ மகரிஷி என்பவர் இங்கு மஹாவிஷ்ணுவை குறித்து அக்னிக்கு நடுவில் தவம் இயற்றிக் கொண்டிருந்த பொழுது, மிகுந்த பசியோடிருந்த துர்தமன் என்னும் அசுரன் பயங்கர சப்தம் எழுப்பியபடி இவரை விழுங்க வந்தான். அவன் எழுப்பிய சப்தத்தால் தவம் கலைந்த காலவ மகரிஷி அவனைக் கண்டு பயந்து போய் கண்களை மூடி  மஹாவிஷ்ணுவை மனதில் இருத்தி மீண்டும் தவத்தில் ஈடுபட, மஹாவிஷ்ணு தன் சக்ராயுதத்தால் துர்தமனை வதம் செய்தார். காலவ மகரிஷி சக்ராயுதத்தின் ஒரு பகுதி இந்த தீர்த்தத்தில் இருக்க வேண்டும் என்று வேண்டினார். அதன்படி சக்ராயுதத்தின் ஒரு பகுதி இந்த தீர்த்தத்தில் இருப்பதால் இது சக்ர தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. 

மஹிஷாசுரனுக்கும், அம்பிகைக்கும் யுத்தம் நடந்த பொழுது, மகிஷாசுரன் இங்கிருக்கும் சக்ரகுளத்தில் வந்து ஒளிந்து கொள்கிறான். அம்பிகை தனது வாகனமாகிய சிங்கத்திடம், இந்த குளத்தின் நீரை  குடிக்கச் செய்து மகிஷாசுரனை வதம் செய்கிறாள். எனவே இந்த குளம் வற்றி விடுகிறது. இந்திரன் முதலான தேவர்கள் தேவலோகத்திலிருந்து அமிர்தத்தை கொண்டுவந்து இதை நிரப்புகிறார்கள். ஏனவே இது அமிர்த தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.  மஹிஷனை அம்பிகை அழித்த இடமாகையால் தேவிப் பட்டிணம் என்னும் பெயர் பெற்றது. 





ராமபிரான், ராவணனோடு யுத்தம் செய்யவும் முன் இங்கு நவபாஷாணத்தால் ஆன நவகிரகங்களை அமைத்து,வழிபட்டுவிட்டு சென்றாராம். இப்போது தேவி பட்டினம் என்றால் எல்லோருக்கும் அதுதான் நினைவுக்கு வரும். முன்பெல்லாம் கடலுக்குள் இருக்கும் அந்த நவபாஷாண நவகிரகங்களை கடலுக்குள் இறங்கித்தான் வணங்க முடியும். இப்போது அதைச் சுற்றி பாலம் போல அமைத்து விட்டார்கள். இயலாதவர்கள் அந்த பாலத்தில் மேல் நடந்து சென்று நவகிரகங்களை சுற்றி வர முடியும். நாங்கள் அதைத்தான் செய்தோம். 

அடுத்து தர்பசயன ராமரை தரிசிக்கலாம்.

*கடைசி புகைப்படம் உபயம் கூகுள். 

21 comments:

  1. முதல் முதல் எண்பதுகளில் போனப்போ இந்த நவபாஷாண தரிசனம் மிகவும் அழகாயும் இயற்கையாயும் அமைந்திருந்தது. கடல் நீர் ஓடிக் கொண்டிருந்ததால் நன்றாக இறங்கி தரிசனம் செய்து பிரதக்ஷிணம் வரும்போது பிரச்னை இல்லாமல் இருந்தது. ஆனால் நாளாவட்டத்தில் இதன் முக்கியத்துவம் பத்திரிகைகள், ஊடகங்கள் வாயிலாகத் தெரியவரவும் அரசாங்கம் வருமானத்திற்காகக் கட்டுமானங்களை ஏற்படுத்தி நீரைத் தேக்கி அதில் நவபாஷாணக் கற்களை இருக்கும்படி வைத்துவிட்டார்கள். இப்போதெல்லாம் கீழே இறங்கவே பிடிப்பதில்லை. அதிலும் துணிகளைத் தூக்கிப் போட்டு விடுவார்கள்! நாங்க நாலைந்து முறை போயிருக்கோம். கடைசியாக 2014 ஆம் ஆண்டில் போனோம். எங்கள் பயணம் எப்போவுமே நீங்க குறிப்பிட்டாப்போல் தான்.

    ReplyDelete
    Replies
    1. //கீழே இறங்கவே பிடிப்பதில்லை// ரொம்ப அசுத்தமாக இருந்தது. கோவில் நிர்வாகத்தினர் நவகிரகங்களின் மீது நவதானியங்கள், பழம், வாழை இலை போன்றவைகளை போடாதீர்கள். நவகிரகங்களுக்கு அருகில் மலஜலம் கழிக்காதீர்கள்(இந்த கண்ராவி வேறா?)என்று அறிவிப்பு வந்து கொண்டே இருந்தது.

      Delete
  2. சக்ர தீர்த்தம் , அமிர்த தீர்த்தம் , தரும தீர்த்தம் ..அறிந்துக் கொண்டேன் ...

    சிறப்பான தகவல்கள் ...நன்றி மா

    ReplyDelete
  3. பலமுறை சென்றுள்ளேன். முதலில் சென்றபோது அந்த கற்கள் மட்டுமே தெரியும். அது ஒரு அழகு.

    ReplyDelete
    Replies
    1. நான் அப்படி எதிர்பார்த்துதான் சென்றேன்.

      Delete
  4. பாலம் அமைத்தது அழகு... அருமை...

    ReplyDelete
    Replies
    1. பாலம் ஃபோட்டோஜெனிக்காக இருக்கிறது. ஹஹாஹா. நன்றி

      Delete
  5. முன்பு படகில் போய் இறங்கி தண்ணீரில் நடந்து சுற்றுவோம். தடுப்பு சுவர் பாதை எல்லாம் கிடையாது. அப்போது நவகிரகங்கள் மட்டுமே கடலில் தெரியும்.
    நாங்கள் காசி போன போது இப்படி எல்லாம் யாரும் சொல்லவில்லை. இப்போது நிறைய சொல்கிறார்கள்.
    திருப்புல்லாணி இன்னும் பார்க்கவில்லை.

    தேவிப் பட்டிணம் வரலாறு, படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.


    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்டில் அப்பா, பெரியப்பா, மாமியார் எல்லோரும் இதை எல்லாம் வற்புறுத்திச் சொன்னார்கள். மாமியார் போனதில்லை! ஆனால் போனவர்கள் மூலம் தெரிந்து வைத்திருந்தார்கள். எண்பதுகளில் தான் முதல் முதல் ராமேஸ்வரம் போனோம். அப்போவே இங்கெல்லாம் போயிட்டுத் தான் ராமேஸ்வரம், தனுஷ்கோடி போனோம். தனுஷ்கோடியை அப்போப் பார்த்ததுக்கும் இப்போதைக்கும் எவ்வளவு வித்தியாசம். கடைசியாய் 2014 இல் போனப்போக் கூட வண்டியில் அதற்கென விடும் வண்டிகளில் போகும்போதே சிரமப்பட்டோம். இப்போப் போன வருஷம் என் தம்பி பையர் போயிட்டுப் புதுச்சாலையைப் படம் எடுத்துப் பகிர்ந்திருந்தார்.பிரமிப்பாய் இருந்தது. அதுக்காகவே மறுபடி ஒருதரம் போகணும்!பார்க்கலாம்! :)

      Delete
    2. கீதாக்கா தனுஷ்கோடி அப்போல்லாம் கடல் கொண்ட சில வருடங்கள் என்பதால், மிஞ்சி இருந்தவை பல பாழடைந்து அங்கு செல்லும் ரோடும் ரொம்பவே மோசமாக இருக்கும். பல சமயங்களில் போக வேண்டாம் என்று கூடச் சொல்ல்பட்டதுண்டு. ஒரு அமானுஷ்யமாக இருக்கும். ஜன நடமாட்டமே இல்லாமல். அப்போதெல்லம் தனுஷ்கோடி செல்ல பாஸ் உண்டு என்ற நினைவு..
      வங்கக்கடலும், இந்துமகாசமுத்திரமும் இஇணையும் டிப்...ஒரு புறம் இந்து மகா சமுத்திரம் மற்றொரு புறம் வங்கக் கடல் என்று அழகோ அழகு...
      ஆனால் சமீபத்தில் மிக அழகான ரோடு போட்டுருக்காங்க போய்ட்டு வாங்க நீங்க ரொம்ப ரசிப்பீங்க இரு புறமும் கடல் நடுவில் சாலை இறுதியில் ஒரு ரவுண்டானா போல போட்டு அதைச் சுற்றி பேருந்துகள் மீண்டும் வந்த வழியே செல்லும்...அந்த டிப் நுனி முனை அத்தனை அழகு...இருபுறமும் கால் நனைக்க முடியும்...யு வடிவில் மூன்று புறமும் கடல் கடல் கடல்.....அந்த இடத்தில் மனம் அப்படியொரு மகிழ்வில் ஆனந்தத்தில் ஒருவித அமைதியில், இதன் முன் நாம் ஒன்றுமே இல்லை என்ற ஒரு அமைதியில் ஒன்றிவிடும். சேதுபந்தனும் பார்த்துவிடலாம் அப்படியே. இப்போதும் செக்கிங்க் இருக்கா என்று தெரியவில்லை...

      கீதா

      Delete
    3. தனுஷ்கோடிக்கு எங்களை முதல்முதல் அழைத்துச் சென்றது ராமேஸ்வரத்தில் கோயிலுக்கு அருகே உள்ள வீட்டில் இருந்த மணிகண்டு சாஸ்திரிகள். சிருங்கேரி மடத்தின் முத்ராதிகாரி. மடத்திலேயே தங்க இடம் ஏற்பாடு செய்து கொடுத்ததோடு அவர் வீட்டிலேயே சாப்பாடும் போட்டார். அவரிடம் சொந்தமாக ஒரு வண்டி, அப்போதைய மாதிரியில் நீரிலும் போகும், நிலத்திலும் போகும் வண்டி. அதில் நாங்கள் பதினைந்து பேர் போனோம். காலை ஒன்பது மணிக்குக் கிளம்பியவர்கள் திரும்பும்போது மதியம் ஒன்றரை ஆகி இருந்தது. அதன் பின்னர் இரு முறை வானில் போனோம். அதுவும் கடினமான பயணம் தான்! சேதுவுக்கு எல்லாம் 2,3 முறை போய்விட்டு வந்திருக்கோம்.

      Delete
  6. பானுக்கா இதுவா நவபாஷாணம்?!!!! கடவுளே!!!!

    படம் பார்க்கவே பிடிக்கவில்லை பானுக்கா. என் சிறு வயதில் என் மனதைக் கவர்ந்த இடம். நீங்கள் சொல்லியிருக்கும் எல்லா தலங்களுக்கும் சென்றுவிட்டுத்தான் மதுரைக்குள் நுழைவோம். இலங்கையிலிருந்து வரும் போது. கப்பலில் வந்து தோணியில் வந்து இராமேஸ்வரம் வந்துதானே வருவோம்.

    தண்ணீர் அடித்துக் கொண்டிருக்கும். அதில் நடந்து சென்றுதான் வணங்கிய நினைவு. சிறிய சிறிய அலைகள் வந்து செல்லும். அருமையான இயற்கையான இடம். இப்படி ஆக்கிவிட்டாங்களே...

    புராணக் கதைகள் அறிந்தேன் பானுக்கா.

    படங்கள் நன்றாக இருக்கின்றன.

    கீதா

    ReplyDelete
  7. @கோமதி அரசு: இப்போதெல்லாம் புத்தகங்களிலும், தொலைகாட்சியிலும் நிறைய விவரங்கள் வருகின்றன. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  8. @கீதா அக்கா: இப்போது மிக அழகாக சாலை போட்டிருக்கிறார்கள். கார்,பஸ்,ஆட்டோ எல்லாம் போகலாம்.

    ReplyDelete
  9. @கீதா ரங்கன்: நாங்கள் வைதீக காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் நீங்கள் குறிப்பிடும் டிப் பார்க்க முடியவில்லை. வருகைக்கு நன்றி கீதா.

    ReplyDelete
  10. நங்கள் சென்றிருந்தபொது கடலில் போட்டில் சென்று கடல் தர்ப்பை கொண்டு வர வேண்டு என்றார்கள் நினைவுகள்தவறாகலாம்

    ReplyDelete
  11. என் தளத்தில் உங்களைப் பார்த்து கொஞ்ச நாட்களாகி விட்டன. வருகைக்கு நன்றி. கடல் தர்ப்பை என்று ஒன்று உண்டா?

    ReplyDelete
  12. பதிவும் பின்னூட்டங்களும் சேர்ந்து நல்ல அனுபவத்தைத் தருகின்றன. பொதுவாகவே ஒரு கோயில் பிரபலம் அடைந்துவிட்டால் அருகிலுள்ள சில சிறு கோயிலகளையும் ஏதாவது வகையில் அதனோடு சம்பந்தப்படுத்திவிடுவார்கள். இது வணிகரீதியான ஏற்பாடு என்பதால் இம்மாதிரி சிறு கோயில்களுக்கு செல்வதை நான் முக்கியமாகக் கொள்வதில்லை. முக்கியமாக ராமேஸ்வரத்தைப் பற்றிச் சொல்வதென்றால் கடலில் கால்வைக்கும் இடமெல்லாம் கட்டிய துணிகளை அவிழ்த்துப் போட்டிருப்பது அருவருக்க வைக்கிறது. இங்கிருந்து இலங்கைக்குப் பாலம் கட்டவேண்டுமென்றால் அந்தத் துணிகளை வைதே கயிற்றுப் பாலமாக அமைக்கலாம் போல் அவ்வளவு அடர்த்தியான துணிமூட்டைகள்! கட்டிய ஜட்டியை அவிழ்த்துக் கடலில் போட்டால் பாவம் தொலைந்துவிடுமாம்- ஒரு வடக்கத்திய யாத்ரிகர் விள்க்கம் சொன்னார். இந்தி எதிர்ப்பு மாதிரி இதற்கும் திராவிடக் கட்சிகள் ஒரு வழிசெய்தால் பரவாயில்லை.

    ReplyDelete
    Replies
    1. செல்லப்பா சார்... இந்த பழைய துணியை நீர்நிலைகள்ல போட்டு நாசமாக்கறவங்களுக்காகவாவது, சமூகப் பெரியவர்கள், துணிகளை அல்ல, அவங்க அவங்க (அடுத்தவங்களோடதை அல்ல) கையை வெட்டி நீர்நிலைல போட்டீங்கன்னா இன்னும் புண்ணியம் என்று சொல்லலாம். ஒரு நீர் நிலையை மதிக்கத் தெரியாதவங்க கோவிலுக்குப் போனா என்ன இல்லை டாஸ்மாக்குக்குப் போனா என்ன.. இரண்டும் ஒன்றுதான்

      அதிலும் இந்த ஐயப்பன் கோவிலுக்குப் போயிட்டு வர்றவங்க பண்றது இன்னும் மோசம். அவங்க மாலை, துணிலாம் குளத்துல போட்டுடறாங்க. திருப்பதி புஷ்கரணி இதனால் கெட்டுப்போய் விட்டது. ஒவ்வொரு வருடமும் அதைச் சுத்தம் செய்து எல்லாக் குப்பைகளையும் அகற்றுகிறார்கள்.

      Delete
  13. சில நம்பிக்கைகள் கேடு விளைப்பவையாகவே இருக்கின்றன. நீர்நிலைகளில் துணியை விடுவதும் அப்படி ஒன்று. வடக்கேயும் இந்த மாதிரி நிறைய உண்டு.

    உங்கள் பதிவு மூலம் பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. ராமேஸ்வரம் சென்று வர ஆசையுண்டு. பார்க்கலாம் எப்போது அழைப்பு வரும் என்று.

    ReplyDelete