கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, July 27, 2020

கடலைக் கடந்து - 4

கடலைக் கடந்து - 4

பெயர் குழப்பம்:

நான் படித்தது கி.ஆ.பெ.விஸ்வனாதம் உயர் நிலைப் பள்ளியில். (K.A.P.VISWANATHAM HIGH SCHOOL) எஸ்.எஸ்.எல்.சி. சர்டிஃபிகேட்டிலும் அப்படித்தான் இருக்கும். ஆனால் அந்த பர்சனல் ஆஃபிசர் அதை ஒப்புக்கொள்ள மறுத்து K.A.P. என்பதை விரித்து எழுத வேண்டும் என்றார். அதன் விரிவாக்கமெல்லாம் யாருக்குத் தெரியும்? “வாட் இஸ் திஸ்? யூ டோண்ட் நோ யுவர் ஸ்கூல் நேம்?” மீண்டும் எள்ளல். என் ஸ்கூலின் பெயரே இதுதான் என்றால் ஏற்றுக் கொள்ளவில்லை. “உங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் யாரிடமாவது கேள்” என்றார். திருச்சியைச் சேர்ந்தவர்கள் சிலரிடம் கேட்டேன், யாருக்கும் தெரியவில்லை. திருச்சியைச் சேர்ந்த ஒரு உயரதிகாரி, “கரியமாணிக்கம், ஆராவமுதன், பிச்சமூர்த்தி என்று ஏதாவது எழுதுங்கள்” என்றார். அப்படியெல்லாம் செய்ய முடியுமா? கடைசியில் அந்த பெர்சனல் ஆஃபிசர் கே.ஏ.பி. என்பதை அடித்து விட்டு விஸ்வனாதம் உயர் நிலைப் பள்ளி என்று எழுதச் சொன்னார்.

அப்பொதைக்கு வேலை முடிந்து விட்டாலும் என் மண்டைக்குள் இந்த கேள்வி குடைந்து கொண்டே இருந்தது. பின்னாளில் கி.ஆ.பெ. விஸ்வநாதம் அவர்களின் பேத்தி எனக்கு நட்பானார். அவரிடம் அந்த கி.ஆ.பெ. எதைக் குறிக்கிறது என்று கேட்டு தெரிந்து கொண்டேன். அவர்கள் குடும்பத்தில் மூன்று தலைமுறை பெரியவர்களின் பெயரை இனிஷியலாக வைத்துக் கொள்வார்களாம். அதன்படி கிருஷ்ணன்.ஆறுமுகம்.பெரியண்ணா என்பதுதான் கி.ஆ.பெ. என்றார்.   

இந்த சமயத்தில் நம் ஊர் பெயர்கள் அவர்களை படுத்தி வைக்கும் பாட்டையும் சொல்லலாம் என்று தோன்றுகிறது. நான் வேலைக்கு சேர்ந்து கொஞ்ச நாளில் எங்கள் டிபார்ட்மெண்டின் டைரக்டர் என்னிடம் ஊர் பிடித்திருக்கிறதா? வேலை பிடித்திருக்கிறதா? என்றெல்லாம் கேட்டு விட்டு என் பெயரைக் கேட்டார். நான் என் பெயரைக் கூறியதும் ,”ஓ டிஃபிகல்ட், இண்டியன் நேம்ஸ் ஆர் டிஃபிகல்ட்” என்றார் அஹமது பின் அப்துல் காதர் அல் கசானி என்னும் பெயர் வைத்துக் கொண்டிருப்பவர்.

என்னுடைய பெயரில் இருக்கும் பானு என்பது அவர்களும் வைத்துக் கொள்ளும் பெயராக இருப்பதால் மதி தேவையில்லை என்று முடிவு செய்து விட்டார்கள். பானுமதியே கஷ்டம் என்றால் என் கணவரின் பெயராகிய கோவிந்தராஜபுரம் கிருஷ்ணமூர்த்தி வெங்கடேஸ்வரன் என்னும் பெயர் அவர்களை என்ன பாடு படுத்தியிருக்கும் என்று யோசித்துக் கொள்ளுங்கள். அதில் அவர்களுக்கு உச்சரிக்க தோதாக இருந்த மூர்த்தி என்னும் பெயரை மட்டும் எடுத்துக் கொண்டு மூர்த்தி என்றுதான் அழைப்பார்கள். நான் சில சமயங்களில் என்னுடன் பணியாற்றிய எகிப்தியர்களிடம்,”மூர்த்தியின் முழுமையான பெயரான கோவிந்தராஜபுரம் கிருஷ்ணமூர்த்தி வெங்கடேஸ்வரன் என்னும் பெயரை சரியாக சொல்லிவிடு, உனக்கு 100 ரியால் தருகிறேன் என்று விளையாடுவதுண்டு.

நான் வேலையில் சேர்ந்த சில நாட்களில் என்னுடன் பணியாற்றிய ஒரு எகிப்திய பெண்மணி,”பானு ஸ்பீக் டெலிஃஃபோன், ராகு காலிங்” என்றாள். நான் அதிர்ச்சி அடைந்தேன். மஸ்கட் வருவதற்கு முன் என் ஜாதகப்படி கேதுவுக்கு ப்ரீதி பண்ண வேண்டும் என்றார்கள், நானும் செய்தேன். அதனால் தன்னை புறக்கணித்ததாக கோபம் கொண்டு ராகு அழைக்கிறாரோ? என்று பயந்தபடி ஃபோனை எடுத்தேன். பேசியது ராஜு என்னும் ஒரு நண்பர். பிறகுதான் எனக்குத் தெரிந்தது எகிப்தியர்கள் ‘ஜ’ என்பதை ‘க’ என்றும், ‘க’வை ‘ஜ’ என்றும் உச்சரிபார்கள் என்று. இதை வேடிக்கையாக ராஜு என்னும் நண்பர், “ராஜு என்னும் என்னை ராகு என்கிறார்கள், கீதா, ஜீதா ஆகிவிடுவாள், அங்கே வராத ஜ இங்கே வந்து விடும்" என்பார்.

அவர்கள் மட்டும் தவறு செய்வதில்லை, நாமும் செய்கிறோம். அவர்கள் தந்தையின் பெயரை குறிப்பிட்டு அவர் மகன் என்று பொருள்பட பின்(Bin) என்று குறிப்பிட்டு தன் பெயரை குறிப்பிட்டுக் கொள்வார்கள். மகள் என்றால் பின்ட்(Bint)என்று குறிப்பிடுவார்கள். உதாரணமாக ஒசாமா பின் லேடன் என்றால் ஒசாமவின் மகன் லேடன் என்று பொருள். ஆனால் இதை அறியாத நம் ஊர் பத்திரிகைகள் அவரை பின் லேடன் என்றே குறிப்பிடும்.     


25 comments:

  1. சுவாரஸ்யம்.  பின்லேடன் விவரம் இன்றுதான் அறிகிறேன்!  நீங்கள் சொவ்லதுபோல நாம் அதையே பெயராகச் சொல்கிறோம்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம். மத்யமரில் ஒருவர், ஒசாமா பின் லேடன் என்றால் ஒசாமாவின் மகன் பின் லேடன் இல்லை, பின் லேடன் மகன் ஒசாமா என்று பொருள் என்று சொல்லியிருந்தார். எப்படியோ நாம் தவறாகத்தான் சொல்கிறோம்.  

      Delete
    2. வெகு வெகு சுவாரஸ்யம் அன்பு பானுமா.
      தங்கள் பெயரும், தங்கள் வீட்டுக்காரர் பெயரும் பட்ட பாடு மஹா
      நகைச்சுவை.

      ஒசாமா பற்றி அவர் இருந்தபோதும் இந்த செய்திகள்
      வந்தன.
      ரஷ்யாவிலும் தந்தையின் மகன் என்பதற்காக விச்
      என்ற பதத்தை சேர்த்துக் கொள்வார்கள்
      என்பது ஏதோ ஒரு நாவலில் படித்த செய்தி.
      ஜோகோவிச் நினைவு இப்போது வருகிறது:)
      மகளுக்கும் அது போல ஒரு அடைமொழி உண்டு.
      வாலண்டினா தெரஸ்கோவா என்றால் தெரஸ் என்பவரின் மகள்!!!

      நீங்கள் அவர்களை நையாண்டி செய்ததும் சிறப்பு.
      நன்றி பானுமா. அருமையான பதிவு.

      Delete
  2. இனிய காலை வணக்கம் பானுக்கா!!!

    பின்னாளில் கி.ஆ.பெ. விஸ்வநாதம் அவர்களின் பேத்தி எனக்கு நட்பானார். //

    ஆஹா பாருங்க எப்படி எல்லாம் நாம் நினைத்துக் கொண்டே இருப்பது ஏதோ ஒரு காலகட்டத்தில் நடக்கிறது!!! இப்படி நடப்பதுண்டு. அனுபவம் உண்டு.

    அக்கா நம்ம ஊர் பெயர் வெளிநாடுகளில்/அமெரிக்காவில் எல்லாம் உச்சரிக்க முடியாமல் படும் பாடு....paddy, maddy, morti, murti, naran, இன்னும் நிறைய இப்படி...

    இங்குமே வட இந்தியாவில் தென்னிந்தியப் பெயர்கள் உச்சரிக்கப்படுவதைக் கேட்டிருப்பீர்களே!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. /ஆஹா பாருங்க எப்படி எல்லாம் நாம் நினைத்துக் கொண்டே இருப்பது ஏதோ ஒரு காலகட்டத்தில் நடக்கிறது!!! இப்படி நடப்பதுண்டு.// அதனால்தான் நல்லதை நினைக்க வேண்டும் என்பார்கள். 
      //இங்குமே வட இந்தியாவில் தென்னிந்தியப் பெயர்கள் உச்சரிக்கப்படுவதைக் கேட்டிருப்பீர்களே!!!// ஐயோ அதை ஏன் கேட்கிறீர்கள்? கண்டதேவி அழகிரிசாமி(இவர் எம்.எஸுக்கு வாசித்திருக்கிறார்) என்னும் வயலின் வாசிப்பவரின் பெயரை ஆல் இந்தியா ரேடியோவில் உச்சரிப்பார்களே..!இவ்வளவு ஏன்? என் மகனும் மகளும் பிரைமரி ஸ்கூலிங் மஸ்கெட்டில் படித்தார்கள். இங்கே சி.பி.எஸ்.சியில் படித்ததால்  தமிழ் முறையாக படிக்கவில்லை. நான்கொஞ்சம் கற்றுக்            கொடுத்தேன்.என் மகள் கே.வி.பி. வங்கியில்  திருவண்ணாமலையில் வேளையில் இருந்த பொழுது லூர்துசாமி என்னும் பெயரை(Lordusami) லார்டு சாமி, லார்டுசாமி என்று அழைத்திருக்கிறாள். யாரும் வரவில்லையாம். இவளின் சக ஊழியர்கள் சிரிக்கிறார்களாம்.  பின்னர் அவர் லார்டு சாமி இல்லை, லூர்துசாமி என்றார்களாம்.  

      Delete
  3. நான் வேலையில் சேர்ந்த சில நாட்களில் என்னுடன் பணியாற்றிய ஒரு எகிப்திய பெண்மணி,”பானு ஸ்பீக் டெலிஃஃபோன், ராகு காலிங்” என்றாள். நான் அதிர்ச்சி அடைந்தேன். மஸ்கட் வருவதற்கு முன் என் ஜாதகப்படி கேதுவுக்கு ப்ரீதி பண்ண வேண்டும் என்றார்கள், நானும் செய்தேன். அதனால் தன்னை புறக்கணித்ததாக கோபம் கொண்டு ராகு அழைக்கிறாரோ? //

    ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹையோ சிரிச்சு முடில பானுக்கா!!!!!

    கீதா

    ReplyDelete
  4. ஆமாம் அக்கா இந்த bin, bint பத்தி சில மகன் சொல்லியிருக்கிறான். அறிந்தேன். நான் ஏதேனும் ஒரு பதிவில் சொல்ல வேண்டும் என்று நினைத்து மறந்த ஒன்று....நீங்கள் சொல்லிட்டீங்க!! அவன் சொல்லிய அனுபவமும் நினைவுக்கு வந்தது. பதிவில் சொல்கிறேன். நன்றி அக்கா மறந்து போன ஒன்று இப்ப நீங்க இங்க சொன்னதும் நினைவுபடுத்தியது. மகன் நிறைய அனுபவங்கள் ஒவ்வொரு நாட்டினரின் அனுபவமும் அவனுடன் அவர்கள் பகிர்ந்து கொண்டதும் சொல்லியிருக்கிறான்.

    கீதா

    ReplyDelete
  5. கீதா என்பதை ஜீதா என்று உச்சரிப்பதைவிட ஜீடா என்று உச்சரிப்பவர்கள் அதிகம்.

    எனது பெயரில் தந்தை பெயர் முதலில் வருவதால் என்னை ஜானாபாதி (جاناباتي) என்பார்கள் அதாவது கணபதி.

    ReplyDelete
    Replies
    1. //என்னை ஜானாபாதி (جاناباتي) என்பார்கள் அதாவது கணபதி.// :)))

      Delete
  6. கி;ஆ.பெ-யின் விரிவு சரி. அவரைப் பற்றியாவது பிற்காலத்தில் தெரிந்து கொண்டீர்களா?

    இவருக்கும் அகில இந்திய வானொலிக்கும் தொடர்பு உண்டு.
    (தம்மாத்துண்டு க்ளூ)

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு முத்தமிழ் காவலர் என்ற பட்டப் பெயர் உண்டு என்பதும், உயிரோடு இருக்கும் பொழுதே தனக்கும் தன மனைவிக்கும் சமாதி கட்டி வைத்து விட்டார் என்பதும் தெரியும். வேறு விஷங்களை தெரிந்து கொள்ள ஏனோ ஆர்வம் இல்லை. வருகைக்கு நன்றி. 

      Delete
  7. இதுதான் இங்கு நகைச்சுவை...
    நானும் ராகு(ராஜூ)தான்...

    பங்களாதேஷி ஒருவன் செல்வராஜூ என்பதை ஷில்பா ராஜ் என்று மொழிபெயர்க்கப் போக இரண்டு ஆண்டுகள் அப்படியே அலைந்தேன்...

    ReplyDelete
    Replies
    1. //பங்களாதேஷி ஒருவன் செல்வராஜூ என்பதை ஷில்பா ராஜ் என்று மொழிபெயர்க்கப் போக இரண்டு ஆண்டுகள் அப்படியே அலைந்தேன்...// அடப்பாவமே! வருகைக்கு நன்றி சார். 

      Delete
  8. எகிப்தியர்கள் ‘ஜ’ என்பதை ‘க’ என்றும், ‘க’வை ‘ஜ’ என்றும் உச்சரிபார்கள் என்று. இதை வேடிக்கையாக ராஜு என்னும் நண்பர், “ராஜு என்னும் என்னை ராகு எங்கிறார்கள், கீதா, ஜீதா ஆகிவிடுவாள், அங்கே வராத ஜ இங்கே வந்து விடும் என்பார்.புதுமையாக இருந்தது .
    இதே போல் ஜப்பானிய மொழியில் ல கிடையாது ரா தான் அந்த இடத்தில் போடணும் லலிதா என்கிற பெயரை ரரிதா எடுத்தா ன் சொல்லணும் ரெட்சுமணன்.wrong ம் Long ம் ரொம்பவே குழப்பும்

    ReplyDelete
  9. வாங்க உமா மகேஸ்வரி. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனித்தன்மை. ஜப்பானியர்கள் புல்லெட் ட்ரெயின் என்பதை எப்படி உச்சரிப்பார்கள்? நன்றி.

    ReplyDelete
  10. சிலது பழக்கம் ஆகி விட்டால் வழக்கம் ஆகி விடும்...!

    ReplyDelete
    Replies
    1. அதுதான் பழக்க வழக்கமோ? கருத்துக்கு நன்றி டி.டி.

      Delete
  11. யோம் உல் ஜூம்மா எனில் வெள்ளிக்கிழமை..

    எகிப்தியன் இதனை -
    யோம் உல் ஹூம்மா (கும்மா!..) என்பான்...

    ReplyDelete
    Replies
    1. ஒரே தமிழை வேறு வேறு ஊர்க்காரர்கள் வேறு வேறு மாதிரி பேசுவதைப் போல் அரபியையும் பலுசிஸ்தானியர்கள் ஒரு மாதிரியும்,ஓமானியர்கள் ஒரு மாதிரியும், எகிப்தியர்கள் ஒரு மாதிரியும் பேசுவார்கள். நன்றி சார். 

      Delete
  12. வணக்கம் சகோதரி

    அலுவலக அனுபவங்கள் குறித்து சுவாரஸ்யமாக, அதே சமயம் தெரியாத விஷயங்களை தெளிவுபடுத்தியும் கூறுகிறீர்கள். நீங்கள் படித்த பள்ளி பெயருக்கு விளக்கமளிக்க அந்த பள்ளி உரிமையாளரின் பேத்தி தங்களுக்கு நட்பானது ஒரு அதியசந்தான். தங்களுக்குள்ளும் எழுந்த குழப்பத்தை தீர்க்க இறைவன் அளித்த சந்தர்ப்பம் அதுவென நினைக்கிறேன்.

    உச்சரிப்பு தவறுதலில்,"ராகு அழைக்கிறான்" என்ற விதத்தில் வந்த அழைப்புக்கு நீங்கள் எழுதிய நகைச்சுவையை ரசித்தேன்.

    இதன் முந்தைய பதிவும் நகைச்சுவை மிளிர எழுதிருந்ததை படித்து ரசித்தேன். வேலைக்கு செல்லுமிடங்களில், அதுவும் வெளிநாடுகளில் எத்தனை சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. அத்தனையையும் நீங்கள் சமாளித்து, அந்நாட்டில்,வேலைக்குச் சென்ற உங்கள் திறமைக்கு என் அன்பான பாராட்டுக்கள். இனித் தொடர்வதையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி கமலா.

      Delete
  13. அனுபவங்கள் புதுமை. ஒசாமா பின் லேடன் பெயர் விபரங்கள் தெரிந்து கொண்டேன். சிறப்பான சுருக்கமான பதிவு. முகநூலிலும் படித்தேன்.

    ReplyDelete
  14. தொடர் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. 

    ReplyDelete
  15. ஸ்வாரஸ்யமான அனுபவங்கள். ஒவ்வொரு ஊரிலும் இப்படியான அனுபவங்கள். தலைநகரில் தென்னிந்திய பெயர்கள் படும் பாடு! :) “ழ” இங்கே இல்லை என்பதால் ழ வரும் இடமெல்லாம் “ஜ” தான்! எஜில்மலை - எழில்மலை! :)

    ReplyDelete