கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, February 12, 2022

திரை விமர்சனங்கள்

நரை எழுதும் சுயசரிதம் 

ஜெய் பீம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மணிகண்டன் எழுதி இயக்கியிருக்கும் படம். 

ஒரு அலுவலகத்தில் பணியாற்றிய, ரிடையர்மெண்ட் வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒருவரை (டெல்லி கணேஷ்) கம்பெனியை கம்ப்யூடரைஸ் செய்யப் போகிறோம் என்ற காரணம் கூறி நிர்வாகம் கட்டாய ஓய்வு கொடுத்து அனுப்பி விடுகிறது. ஓய்விற்குப் பிறகு வீட்டில் தான் புறக்கணிக்கப்படுவதாக புழுங்கும் அவர் ஒரு நாள் தான் பணியாற்றிய அலுவலகத்திற்குச் செல்கிறார். அங்கும் அவமானப் படுத்தப்பட விரக்தியில் முதல்  முறையாக குடித்து விட்டு, மணிகண்டன் மீது டூ வீலரை மோதி இருவருக்கும் கைகலப்பாகிறது. பின்னர் அவர்களிடையே பூக்கும் நட்பால்  அவர்கள் அணுகுமுறையிலும், வாழ்க்கையிலும் ஏற்படும் மாறுதல்கள்தான் திரைப்படம். 

அதுவரை சிடுமூஞ்சியாக, பேத்தியோடு கூட பேசாதவராக இருந்தவர் கலகலப்பாக மாற முயற்சிக்கிறார். பேத்தியோடு விளையாடி, நெருங்குகிறார். 'ஓட ஓட ஓட பாதை முடியல..' என்னும் பாடலை மகன் ரசிக்கும் பொழுது திட்டியவர் அதே பாடலை மிகவும் ரசித்து பாடத்துவங்குகிறார்.

அதே போல் பரட்டை தலை, தாடி, மீசையோடு இருக்கும் மணிகண்டன் டெல்லி கணேஷ் உதவியோடு பளிச்சென்று மாறுகிறார். இந்த மாற்றங்களால் விளைவது என்ன? குடும்பத்தின் ரியாக்ஷன் என்ன? என்பது க்ளைமாக்ஸ்.

படத்தில் பாடல் கிடையாது, தனி காமெடி ட்ராக் கிடையாது. சண்டை கிடையாது ஏன் கதாநாயகியே கிடையாது. டெல்லி கணேஷ்தான் படம் முழுக்க. எப்போதும் போல கிடைத்த வாய்ப்பை செம்மையாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். மனைவி மீது கோபித்துக் கொண்டு நான்கு நாட்களாக பேசவில்லை என்றவரை மணிகண்டன் திட்டி மனைவியோடு பேசச் சொன்னதும், "பேசி விட்டேன்" என்று மணிகண்டனிடம் வெட்கப்பட்டுக் கொண்டே சொல்லும் இடம் ரசனைக்குரியது. 

இந்த படத்தில் ஒரு குறை இது திரைப்படமா? குறும்படமா? என்ற சந்தேகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. ஓ.டி.டி.யில் வெளியாகி விருதுகளை குவித்திருக்கிறது இந்தப்படம்.

Bro Daddy(மலையாள திரைப்படம்)

மலையாள நடிகரான பிருத்விராஜ் நடித்து இயக்கியிருக்கும் 'ப்ரோ டாடி' என்னும் நகைச்சுவை படத்தில் மோகன்லால், மீனா, லாலு அலெக்ஸ், கனிகா, கல்யாணி பிரியதர்ஷன் என்று பலரும் நடித்திருக்கிறார்கள். 

பெங்களூரில் ஒரு விளம்பர நிறுவனத்தில் வேலை பார்க்கும் பிரித்விராஜுக்கும், ஐ.டி. ஊழியரான கல்யாணி பிரியதர்ஷனுக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று குடும்ப நண்பர்களான அவர்களுடைய பெற்றோர்கள் பேசுகிறார்கள். அவர்களிடம் பிடி கொடுக்காமல் பேசும் பிரித்வியும், கல்யாணியும் மூன்று வருடங்களாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பது பெற்றோர்களுக்குத் தெரியாது. 

திருமணமாகமலேயே கருவுறம் கல்யாணிக்கு கருவை கலைக்க மனம் வரவில்லை, இதற்கிடையில் பிரித்வியை அவசரமாக ஊருக்கு வரச்சொல்லும் மோகன்லால் தன் மனைவி மீனா அதாவது பிருத்வியின் தாயார் கருவுற்றிருப்பதாக கூறுகிறார். அவரிடம் தன்னுடைய காதல் கதையை பிரித்வி கூற மகன் காதலியை கை பிடிக்க லாலேட்டன் எப்படி உதவுகிறார் என்பதை நகைச்சுவையாக கொண்டு சென்றிருக்கிறார்கள்.

நடிப்பில் யாருமே குறை வைக்கவில்லை. மோகன்லாலுக்கு இதெல்லாம் ஜுஜுபி!. ஊதி தள்ளிவிட்டார். வில்லனாக நான் அறிந்திருந்த லாலு அலெக்ஸ் இதில் காமெடியிலும் கலக்கியிருக்கிறார். மீனாவுக்கும், கனிகாவுக்கும் பெரிதாக வேலை இல்லை. சின்ன ரோலாக இருந்தாலும் சார்லி நிறைவாக செய்திருக்கிறார். அதைப்போல வெட்டிங் இவெண்ட் மேனேஜ்மென்ட் செய்பவராக வருபவரும் சிறப்பாக செய்திருக்கிறார். கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.

இப்போது வரும் படங்களில் பெண்கள் குடிப்பது போலவும், லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் காண்பிப்பது கவலை அளிக்கிறது. நம் நாட்டில் மதிப்பீடுகள் அத்தனை குறைந்து விட்டதா? அல்லது எனக்கு வயதாகி விட்டதா? 

37 comments:

  1. ​முதல் பட விமர்சனம் பரிவை குமார் தளத்தில் முதலில் படித்ததன். பார்க்க விருப்பம். ஆனால் என்னிடம் சோனி இல்லை!

    ப்ரோ டாடி என் மகன் என்னை பார்க்க வைக்க பெருமுயற்சி செய்தான். பார்க்கவில்லை!

    ReplyDelete
    Replies
    1. ப்ரோ டாடி ஏன் பார்க்கவில்லை? உங்களுக்கும் வயதாகி விட்டதா? :))

      Delete
    2. ஏனோ பார்க்கத் தோன்றவில்லை.  வளவளவென்று போவது போல தோன்றியது. அலலது அவர்கள் நகைச்சுவை ரசிக்கவில்லை!!

      Delete
  2. மதிப்பீடுகளும் மாறும் கலாச்சாரமும் உண்மையில் இருக்கலாம்.  ஆனால் அதைப் பட்டவர்த்தனமாக்குவது இதை இன்னும் பரவலாக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட்! எங்கேயோ ஒரு மூலையில் நடப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் பொழுது மற்றவர்களுக்கும் துணிச்சல் வந்து விடுகிறது.

      Delete
  3. விமர்சனங்கள் நன்று... இரண்டாவது திரைப்படம் பார்க்க வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி. பாருங்கள் ரசிக்கலாம்.

      Delete
  4. //எனக்கு வயதாகிவிட்டதா?//- ஹா ஹா... ஒவ்வொரு செய்தியை நான் பார்க்கும் கொணம், மகள், அவ கசின் ஆகியோர் பார்க்கும் கோணமா வித்தியாசப்படுகிறது. இதெல்லாம் ஜெனரேஷன் இடைவெளிதான். ஆனாலும் இளைய தலைமுறைட்ட கத்துக்க நிறைய விஷயம் இருக்கு. அவங்கள்ட இல்லாத்து அனுபவம் மட்டுமே

    ReplyDelete
    Replies
    1. நம்மைப் பற்றியும் நமக்கு மூத்த தலைமுறையினர் இப்படி நினைத்திருக்கலாம்.

      Delete
    2. //ஆனாலும் இளைய தலைமுறைட்ட கத்துக்க நிறைய விஷயம் இருக்கு. அவங்கள்ட இல்லாத்து அனுபவம் மட்டுமே// இப்படி கூறும் நாமே "நம்முடைய பெரியவர்கள் நம்மை விட புத்திசாலிகள்.‌அவர்கள் சொன்னது எல்லாவற்றிர்க்கும் பொருள் உண்டு" என்றும் கூறுவோம்.

      Delete
  5. முதல் படம் குறித்த உங்கள் விமரிசனத்தை முகநூலிலும் படித்தேன். இன்னும் சிலரும் கூறி இருக்காங்க. தினமலரிலும் படிச்சேன். அடுத்த படம் தெரியாதது. ஆனால் இந்த லிவிங் டுகெதரைக் கொண்டு வந்தது என்ன இருந்தாலும் ஏற்க முடியாத ஒன்றே. பாம்பே சாணக்யா தன்னோட "விஸ்வரூபம்" தொடரில் சுமார் 20 வருஷங்கள் முன்னேயே கொண்டு வந்து விட்டார். அந்தத் தொடரே பாதியில் நின்று இப்போது யூ ட்யூப் மூலம் பார்த்துக் கொண்டிருக்கேன். 70 பகுதிகள் வரை பார்த்தாச்சு. அதன் பின்னர் உட்கார நேரம் சரியாக் கிடைப்பதில்லை. இந்தத் தொடரை அவசரம் அவசரமாப் பார்க்க முடியாது. ஆகவே காத்திருக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. 90களிலேயே ஆனந்த விகடனில் ஒரு தொடர்கதை வந்தது. அந்த கதையை மதனும், வேறு ஒருவரும் சேர்ந்து எழுதினார்கள் என்று செய்தி வந்தது. அதை படித்த பொழுது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. முடிவு படிக்கவில்லை.

      Delete
    2. அப்படியா? புதிய செய்தி எனக்கு. ஏனெனில் 90 களில் ஆனந்தவிகடன் இவ்வளவு மோசமாக இல்லையோ என நினைக்கிறேன். ஆனால் ஸ்டெல்லா ப்ரூஸ் தொடர்கதை ஒன்று மோசமாக இருந்தது எனவும் சொல்வார்கள். மதன் எழுதினார் என்பது எனக்குப் புதிய செய்தி. :(

      Delete
  6. லிவிங் டு கெதர் பற்றிக் கூறும் தேநீர் விளம்பரங்களை நீங்கள் பார்த்ததே இல்லையா? அதன் பின்னர் ஒரு தாய் தன் இரண்டாவது திருமணத்தையும் பற்றி மறைமுகமாகக் கூறும் விளம்பரம், இன்னும் சில!

    ReplyDelete
    Replies
    1. பார்த்திருக்கிறேன். இப்படிப்பட்ட விஷயங்கள் மீண்டும் மீண்டும் ஊடகங்களில் வருவதுதான் கவலை.

      Delete
  7. நமக்குத் தெரிந்து திரைப்படத்தில் வந்திருக்கு. ஆனால் நிஜத்தில் தெரியாமல் எத்தனையோ?

    ReplyDelete
    Replies
    1. இருக்கிறது என்கிறார்கள். எங்கேயோ நடப்பதை ஏன் வெளிச்சம் போட வேண்டும். அப்படி பார்த்தால் பழந்தமிழ் இலக்கியங்களிலேயே களவு என்று இல்லையா?

      Delete
    2. பழந்தமிழ் இலக்கியத்தின் களவை இதோடு ஒப்பிட முடியாது என நினைக்கிறேன்.

      Delete
  8. இரண்டு விமர்சனங்களும் நன்று. முதல் படம் குறித்து பரிவை சே குமார் தளத்திலும் பார்த்தேன். ஓடிடி என்னிடமும் கிடையாது. இணையத்திலும் சில தளங்களில் இருப்பதாக குமார் பின்னூட்டத்தில் சொல்லி இருந்தார். பார்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட். பரிவை.சே.குமாரின் தளத்திற்கு சென்று நாட்களாகி விட்டது.

      Delete
  9. அக்கா முதல் படத்தின் தலைப்பே ஈர்க்கிறது. வித்தியாசமான தலைப்பு. கதையும் நன்றாகவே இருக்கிறது. இந்தப் படம் இப்போதுதான் அறிகிறேன். ஓடிடி கிடையாதே என்னிடம்...வேறு எங்கேனும் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்.

    இரண்டாவது படமும் நன்றாக இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். நீங்களும் சொன்னீர்கள். பார்க்க எப்போது வாய்ப்புகிடைக்கும் என்று தெரியவில்லை.

    இந்த லிவிங்க் டுகெதர் எல்லாம் வந்து 4, 5 வருஷம்? இல்லை இல்லை நினைவுக்கு வருகிறது....எனக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு பையன் ...அவன் இப்படி இருப்பதாகச் சொல்லி 15 வருடங்கள் ஆகிவிட்டதே. அவன் அப்போது பங்களூரில் இருந்தான் கம்பெனி நடத்திக் கொண்டு. அதன் பின் தெரியவில்லை.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //இந்த லிவிங்க் டுகெதர் எல்லாம் வந்து 4, 5 வருஷம்? இல்லை இல்லை// இல்லை, அதற்கு மேலேயே ஆகி விட்டது. நீங்களே உங்கள் பதிவில் 15 வருடங்களுக்கு முன்பு என்று சொல்லியிருக்கிறீர்களே..?

      Delete
    2. கல்ஃபில் பிலிப்பினோஸ் இந்தியர்கள் இருவருக்குமிடையில் இது இருபது வருடங்களுக்கு முன்பே உண்டு. குழந்தை கூடாது என்பது புரிந்திணர்வு

      Delete
  10. எனக்கு வயசாகலை பானுக்கா!!! ஹாஹாஹாஹா....

    கீதா

    ReplyDelete
  11. நரை எழுதும் சுயசரிதம் என்பதைப் பார்த்ததும் கொஞ்சம் குழப்பம். புத்தகமோ என்று. இப்படி ஒரு படம் வந்திருப்பது இப்போதுதான் அறிகிறேன். வித்தியாசமான தலைப்பு. டெல்லி கணேஷ் மிகத் திறமையான கலைஞர்

    மோஹன்லால், பிருத்வி படம் பார்த்துவிட்டேன். இப்போதைய தலைமுறைக்கான கதை. இருந்தாலும் நீங்கள் சொல்லியிருப்பது போல் ஒரு முறை பார்க்கலாம். லாலு அலெக்ஸ் காமெடிபார்ட்டும் நன்றாகச் செய்வார். கேரக்டெர் ரோல்ஸும் சிறப்பாகச் செய்வார்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசிதரன். நான் மலையாள படங்கள் பார்ப்பதில் ஒரு கேப் வந்து விட்டது அதனால் லாலு அலெக்ஸின் மற்ற பரிமாணங்கள் தெரியவில்லை.

      Delete
  12. வணக்கம் சகோதரி

    நீங்கள் தந்த இரண்டு திரைப்பட விமர்சனங்களும் அருமையாக உள்ளது. நான் இதுவரை கேள்விப்படாத படங்கள்.எங்களிடமும் இந்த ஓடிடி என்ற வசதி இல்லையோ எனத் தோன்றுகிறது. வேறு எதிலாவது பார்க்க வேண்டும் என நினைத்தால் பார்த்து விடலாம். பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  13. வாங்க கமலா, நீங்கள் பார்த்திருந்தால் விளக்கமாக கருத்துரை எழுதியிருப்பீர்கள்.

    ReplyDelete
  14. // இப்போது வரும் படங்களில் பெண்கள் குடிப்பது போலவும், லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் காண்பிப்பது கவலை அளிக்கிறது.. //

    நவீன கல்வி முறை நமது சமுதாயத்திற்கு அளித்திருக்கும் கொடை இது...

    விலங்குகளில் நரியைத் தந்திரம் மிக்கது என்பார்கள்..

    நரி தனது இணையைப் பிரிந்தால் வேறொன்றைத் தேடாது என்றும் படித்திருக்கின்றேன்..

    புறாவும் அத்தகைய குணம் உடையதாம்!..

    ReplyDelete
    Replies
    1. //நவீன கல்வி முறை நமது சமுதாயத்திற்கு அளித்திருக்கும் கொடை இது...// ஹும்..!

      Delete
  15. பள்ளிக் கூடங்களே
    பள்ளிக் கூடங்கள் என்றாகிய பின் சொல்வதற்கு ஒன்றும் இல்லை..

    ReplyDelete
    Replies
    1. ஒன்றும் சொல்வதற்கில்லை..

      Delete
  16. அன்றைக்கு அவனோடு..
    இன்றைக்கு இவனோடு!..

    பட்டினத்தார் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன..

    ReplyDelete
  17. கருட புராணத்தின் தண்டனைகளுக்கு ஆள் வேண்டுமே..

    எல்லாரும் யோக்கியமாக இருந்து விட்டால் எப்படி!?...

    ReplyDelete
    Replies
    1. என்னவோ போங்கள்.. வருகைக்கு நன்றி

      Delete
  18. விமர்சனம் நன்று படங்கள் பார்க்கவில்லை.

    ReplyDelete