கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, May 8, 2023

ஓடிஷா யாத்திரை - 5

 ஓடிஷா யாத்திரை - 5

ஸிலிகா ஏரி, பூரி சங்கர மடம், ப்ளூ ஃப்ளாக் பீச்:

சிலிகா பீச்சில் என்னோடு அறையை பகிர்ந்து கொண்டவர்

ஒரு வழியாக ஹோட்டல் அறைக்கு வந்து கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டு சாப்பிடச் சென்றோம். சூப் தொடங்கி, ஐஸ் க்ரீம் வரையான சுவையான உணவு. என் அறைத் தோழி “கோவில் இரவு 11 வரை திறந்திருக்குமாம், மீண்டும் ஒரு முறை செல்லலாமா?” என்றார். எனக்கு தூங்கினால் போதும் என்றிருந்தது.

மறுநாள் காலை 7:30க்கு ப்ரேக்ஃபாஸ்ட் ரெடியாகிவிடும். ரெஸ்டாரெண்ட் வந்து விடுங்கள் என்றதால், குளித்து ரெடியாகி கீழே வந்தோம். ப்ரெட், பட்டர், ஜாம், சாண்ட்விச், கார்ன் ஃப்லெக்ஸ், சாக்கோ ஃப்லெக்ஸ், இட்லி, வடை, சட்னி, சாம்பார், ஆலு பரோடா, வாழைப்பழம், தர்பூசணி துண்டுகள். ஆரஞ்சு மற்றும் திராட்சை பழச்சாருகள், வேகவைத்த முட்டை, காபி, டீ என்று ப்ஃபே முறையில் ராஜபோக காலை உணவு. அதை முடித்துக் கொண்டு சிலிகா ஏரிக்கு கிளம்பினோம்.



சிலிகா ஏரி 1,100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய ஏரி. அங்கு படகு சவாரி செய்யும் பொழுது  வித்தியாசமான பறவைகளை பார்க்கலாம். அதிர்ஷ்டம் இருந்தால் டால்ஃபின்களும் கண்ணில் படலாம் என்றார்கள். போகும் வழி எங்கும் மா, பலா,வாழை தோப்புகள், அதிகமாக பலா மரங்கள் அதிகம் கண்ணில் பட்டதால் தஞ்சை, மாயவரம், கும்பகோணம் பகுதியில் பயணம் செய்கிறோமொ என்று தோன்றியது. பூரியிலிருந்து சிலிகா ஏரி 70கி.மீ. தொலைவில் இருக்கிரது, பயண நேரம் கிட்டத்தட்ட 11/2 மணி நேரம். அந்த நேரத்தில் எல்லோரையும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொன்னார். எல்லோரும் தங்களைப் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொண்டோம்.

சிலிகா எரியை அடைந்த பொழுது, அங்கிருக்கும் கடைகளில் பறவைகளுக்கு போடுவதற்கு உணவு  சிறிய பாக்கெட்டுகளில் விற்கிறார்கள். அதைத் தவிர படகில் செல்லும் பொழுது அணிந்து கொள்ள தொப்பி வாடகைக்கு கிடைக்கிறது. தொப்பி இல்லாதவர்கள் வாடகைக்கு எடுத்துக் கொண்டார்கள். எங்கள் குழுவினருக்கு மொத்தம் மூன்று படகுகள் தேவையாக இருந்தது. படகில் சென்ற பொழுது பறவைகளுக்கான உணவை நீரில் போட்டதும், அவற்றை சாப்பிட பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து பரவசமூட்டின. டால்ஃபின் எதுவும் எங்கள் கண்களில் படவில்லை.

அங்கிருந்து அந்த ஏரி வங்காள விரிகுடாவில் கலக்கும் முகத்துவாரத்திற்கு அருகில் படகை நிறுத்திய அந்த படகோட்டி ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வந்தான். சிப்பிகள் நிறைந்திருந்த அந்த பாத்திரத்திலிருந்து சிப்பிகளை எடுத்து தட்டி தட்டி உடைத்தான். சில சிப்பிகளுக்குள் முத்து இருப்பது தெரிந்தது. சில முத்துக்கள் வெண்மை நிறத்திலும், சில சிப்பிகளுக்குள் கருப்பு நிற முத்துக்களும் இருந்தன. வெண்மை நிற முத்துக்கள், ரூ.ஐநூறும், கருப்பு நிற முத்துக்கள் ரூ.ஆயிரமும் சொன்னான். நாங்களும் வாங்கினோம். முத்துக்கள் விற்பனையானபின் மண் கட்டி போல ஒன்றை(பவளப்பாறை?) கொண்டு வந்து அதை உடைத்து பவளங்களும், பளபளவென்று கற்களும்(அதை நவரத்தினம் என்றான்) எடுத்தான். அவைகளும் முறையே ரூ.ஆயிரதிற்கும், அயிரத்து ஐநூறுக்கும் விற்க்கப்பட்டன.

அங்கிருந்து அந்த ஏரி கடலில் கலக்கும் முகத்துவாரத்தை பார்க்கச் சென்றோம். நல்ல வெய்யிலில் கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ மீட்டர் மணலில் நடந்து சென்றோம். கடற்கரைக்குச் சென்றோமே தவிர முகத்துவாரம் எது என்று தெரியவில்லை.

பூரி சங்கர மடம் முகப்புத் தோற்றம்

பூரி சங்கர மடத்தில் இருக்கும் பழமையான கிணறு


ஆதி சங்கரர் உறங்கியதாக கூறப்படும் சலவைக்கல் படுக்கை

ஹோட்டலுக்கு திரும்பி, உணவு உண்டு விட்டு, கொஞ்சம் ஒய்வெடுத்துக் கொண்டு மாலை பூரி சங்கர மடம் சென்றோம். சங்கர மடம் என்பது அஜென்டாவில் இல்லாததால் விரும்பியவர்கள் தனித்தனி குழுவாக சென்றோம். செல்லும் வழியில் பூரியின் கடற்கரையைத் தாண்டித்தான் செல்ல வேண்டியிருந்தது. அது பப்ளிக் பீச். எங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டது ப்ளு ஃப்ளாக் பீச் என்ற தனியார் பீச். அதை பார்த்து விட்டு புடவை ஷாப்பிங்க் என்று நினைத்துக் கொண்டிருந்தோம்.


நாங்கள் சங்கர மடத்திற்கு ஒரு ஷேர் ஆட்டோவில் சென்று விட்டோம். அந்த தெரு குறுகலாக இருந்ததால் ஆட்டோ நிற்க முடியாது என்பதால் அனுப்பி விட்டோம். திரும்பும் பொழுது ஆட்டோ கிடைக்காமல் நடக்கத் தொடங்கினோம். எதிரே வந்த சில ஆட்டோக்களை நிறுத்தி, சந்திரபாகா பீச் போக வேண்டும் என்றதும், எல்லோரும் தலை தெறிக்க ஓடி விட்டார்கள். சந்திரபாகா பீச் என்பது பூரியிலிருந்து புவனேஷ்வர் செல்லும் வழியில் இருக்கிறது. மயிலாப்பூரிலிருந்து மெரீனா பீச் போக வேண்டும் என்பதற்கு பதிலாக கோவளம் பீச் போக வேண்டும் என்றால் எந்த ஆட்டோக்காரர் வருவார்?

தப்பாக சொல்கிறோமோ என்ற சந்தேகத்தில் எங்கள் ஐடனரியை செக் பண்ணிய ஒரு பெண் ப்ளூ ஃப்ளாக் பீச் என்று கூற அதன்பின் ஆட்டோ கிடைத்து ப்ளூ ஃப்ளாக் பீச் சென்றோம். அங்கு குளிக்க, நீந்த ஐம்பது ரூபாய் கட்டணம், இல்லாவிட்டால் இருபது ரூபாய் கட்டணம். நாங்கள் இருபது ரூபாய் டிக்கெட் எடுத்துக்கொண்டு சென்றோம். இந்தியாவின் சுத்தமான கடற்கரைகளுள் இதுவும் ஒன்றாம். கோல்டன் பீச் என்றழைக்கப்படும் இந்த கடற்கரை இந்தியாவின் பெருமைக்குரிய ப்ளூ ஃபளாக் சர்டிஃபிகேட் பெற்ற எட்டு கடற்கரைகளில் ஒன்றாம். நாங்கள் சென்றபொழுது இருட்டி விட்டது. கடல் உள்வாங்கியிருபது போல் தோன்றியது. கடலுக்குள் அதிக தூரம் செல்ல வேண்டாம் என்று அங்கிருந்த பணியாளர்கள் எச்சரித்தனர். சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு ஹோட்டலுக்குத் திரும்பினோம்.


சாப்பிடும் பொழுது, “நாளை காலை அறையை காலி செய்து கொண்டு சீக்கிரம் கீழே வந்து விடுங்கள். ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டு விட்டு இங்கிருந்து எட்டு மணிக்குள் கிளம்பினால்தான் வெய்யிலுக்கு முன் கொனார்க் செல்ல முடியும்” என்றார் கைட். அதைப்போலவே எல்லோரும் சீக்கிரம் ரெடியாகி காலை உணவை முடித்துக் கொண்டு, டாணென்று எட்டு மணிக்கெல்லாம் ரெடியாகி விட்டோம். ஆனாலும் எங்களால் வெய்யிலுக்கு முன்னால் கோனார்க் செல்ல முடியவில்லை. ஏன் தெரியுமா?

-தொடரும்

15 comments:

  1. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது

    விவரணம் விவரிப்பு அருமை.

    ReplyDelete
  2. பீச் பெயரை மாற்றி கேட்டு ஆட்டோக்காரர்களை ஓடவிட்டது சுவாரஸ்யம்!  எவராவது சரி போகலாம் என்று வந்திருந்தால் என்ன ஆகி இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. அதேதான், எல்லோரும் பெண்கள், தப்பித்தோம் :))

      Delete
  3. பூரியில் பூரி சாப்பிடவில்லையா"!!!  புதிதாக எதுவும் முயற்சித்தேர்களா?  இல்லை அங்கும் இட்லி, சட்னிதானா?

    ReplyDelete
    Replies
    1. புதிதாக எதுவும் இல்லையே. இட்லியை விட முடியுமா? அதோடு, ஸ்ட்ஃப்டு பரோட்டா.

      Delete
  4. டால்பின்களுக்கு அன்று வாராந்திர விடுமுறையோ என்னவோ...   அவ்வளவு பறவைகள் வந்தும் ஏன் அவற்றை படம் எடுக்கவில்லை?

    ReplyDelete
    Replies
    1. வெய்யில் அதிகமாகி விட்டது. வேறு ஒரு போட்டில் இருந்தவர்கள் பார்த்ததாக சொன்னார்கள்.

      Delete
    2. //அவ்வளவு பறவைகள் வந்தும் ஏன் அவற்றை படம் எடுக்கவில்லை?// என் திறமை குறைவுதான் காரணம். நான் ஒரு பக்கம் ஃஃபோகஸ் பண்ணும் பொழுது பறவைகள் வேறு பக்கம் வரும், அந்த பக்கத்தில் யாரோ ஒருவருடைய தலையோ, கையோ மறைக்கும்.

      Delete
  5. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. பயணங்களின் விபரங்களை அழகாக சொல்லியுள்ளீர்கள். படங்கள் அனைத்தும் நன்றாக அழகாக இருக்கிறது. கடற்கரையில் இருக்கும் சிறபங்களா அவை..? அழகாக உள்ளன. அடுத்தப் பதிவுக்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், கடற்கரையில் இருந்த சிற்பங்கள்தான். தொடர்ந்து வருவதற்கு நன்றி.

      Delete
  6. சுவாரசியம். கோனார்க், புவனேஸ்வர் போக வாய்ப்பு கிடைத்ததா?
    -அப்பாதுரை

    ReplyDelete
    Replies
    1. கோனார்க் போனேன், புவனேஷ்வரில் சில கோவில்கள் மட்டும் பார்த்தோம்.

      Delete