கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, June 2, 2024

அலைகடலும்,ஆராவமுதனும்

அலைகடலும்,
ஆராவமுதனும்




சென்ற மாதம் சென்னை வந்திருந்த பொழுது மெரீனா பீச் சென்றிருந்தேன். ஓடி வந்து நம் கால்களில் மோதும் அலைகளில் நனைவது எப்போதுமே மிகவும் பிடிக்கும். ஏதோ சத்தியம் செய்து கொடுத்ததைப் போல எல்லை மீறாமல் நிற்கும் சமுத்திரத்தின் கட்டுப்பாடு எப்போதுமே வியக்க வைக்கும். ஒரு முறை மீறிய பொழுது நிகழ்ந்த பாதகங்களை பார்த்தோமே! வங்க கடலுக்கு கொஞ்சம் ஆக்ரோஷம் அதிகம்தான். அமைதியாக எழும்பி அடங்கும், ஆர்ப்பரித்து பயமுறுத்தும் அந்த அலைகள் எப்போதோ கேட்ட ஜெயராம சர்மா அவர்களின் உபன்யாசத்தை நினைவூட்டின. திருமாலின் பத்து அவதாரங்களை கடலின் அலைகளோடு அழகாக ஒப்பிடுவார்.

கடலின் நடுவில் தோன்றி, எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், கரைக்கும் வராமல், தோன்றிய இடத்திலேயே மறைந்து விடுபட போன்றவை மச்ச, கூர்ம, வராக அவதாரங்கள்.

சில அலைகள் நடுக்கடலில் தோன்றி அங்கேயே உயர்ந்து ஆர்ப்பரித்து அங்கேயே அடங்கி விடும். அதைப் போன்றது நரசிம்ம அவதாரம்.

சில அலைகள் வரும்பொழுது சிறியதாக வந்து, கரையைத் தொடும் பொழுது திடீரென்று உயர்ந்து நம்மை நிலைகுலையச் செய்யும். அதைப் போன்றது வாமனனாக வந்து, திரிவிக்கிரமனாக வளர்ந்த அவதாரம். 

சில அலைகள் பெரிய அலையோடு வந்து கரையைத் தொட்டுவிட்டுச் சென்றாலும் பெரிய பாதிப்பு இருக்காது. அவை போன்றவை ராம,கிருஷ்ண அவதாரங்களோடு சேர்ந்து வந்த பரசுராம, பலராமா அவதாரங்கள். 

சில அலைகள் நிதானமாக, கரையின் வெகுதூரம் வந்து நனைத்துவிட்டுச் செல்லும். இந்தியாவின் வடக்கே அயோத்தியில் பிறந்து, இந்தியாவின் தென்கோடி வரை நடந்த ராம அவதாரம் அதைப் போன்றது.

சில அலைகளோ கரையில் நிற்பவர்களை அப்படியே இழுத்து மூழ்கடித்து தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொண்டுவிடும். அதைப்போல கிருஷ்ணனோ தன்னை சரணடைபவர்களை தன்னிடமே ஐக்கியப்படுத்திக் கொண்டு விடுவான்.

ராதே கிருஷ்ணா!


12 comments:

  1. பானுக்கா விளக்கம் வாசிக்க நன்றாக இருக்கிறது.

    முதல் மூன்று, பரசு, பல ராம அவதாரங்களும் பொருத்திப் பார்த்து ஓரள்வு புரிகிறது.

    வாமன அவதாரம் ஒப்பீடு புரியவில்லை. அது போல கிருஷ்ண அவதார ஒப்பீடும். என் புரிதல் அறிவு ரொம்பக் குறைவாக இருப்பதால் என்று நினைக்கிறேன்.

    நடுக்கடலில் ஆர்பரித்தாலும் அதன் அதிர்வுகள் கரை வரை இருக்குமே சிறிதேனும் இல்லையா? என் அறிவு குறைவு என்பதால் புரியலையோ என்று நினைக்கிறேன். மீண்டும் வாசிக்க வேண்டும்.

    கீதா

    ReplyDelete
  2. அலைகடலும்,ஆராவஅலைகடலும்முதனும்
    மேலே தலைப்பு ஏதோ சரியில்லை போலிருக்கே
    கீழே சரியாக இருக்கிறது.


    நல்ல ஒப்பீடு. படிக்க சுவாரஸ்யமாக இருக்கு.


    ReplyDelete
    Replies
    1. திருத்தி விட்டேன், நன்றி

      Delete
  3. அருமையான கற்பனை. ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம். பாராட்டுக்குரியவர் ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மா அவர்கள்.

      Delete
  4. அலைகளை அவதாரங்களுடன் ஒப்பிட்டீர்கள். சில ஒப்பீடுகள் ஏற்கத்தக்கது என்றாலும் அலைகள் ஓய்வதில்லை என்பதால் அவதாரங்கள் மீணடும் மீண்டும் நிகழுமோ?
    படங்கள் அழகாக இருக்கின்றன.

    Jayakumar

    ReplyDelete
  5. //அவதாரங்கள் மீணடும் மீண்டும் நிகழுமோ?// என்ன சந்தேகம்? கீதாசார்யன் அதைத்தானே சொல்லியிருக்கிறார். (யதா யதா ஹி தர்மஸ்ய கிலானிர் பவதி பாரத, அப்யுதானாம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம் என்றும், பரித்ராணாய சாதூனாம்,விநாசாய ச துஷ்க்ருதாம், தர்ம சம்ஸ்தாபனாசாய சம்பவாமி யுகே யுகே)

    ReplyDelete
  6. அன்பு பானு
    கடல் அலைகளின் ஒவ்வொரு சீற்றத்தையும் பெருமாளின் பத்து அவதாரங்களோடு ஒப்பிடுதல் புதுமையான சிந்தனை. மிகவும் அருமை

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. ஜெயராம சர்மா அவர்களின் உபன்யாசத்தில் கேட்டதை பகிர்ந்திருக்கிறேன்.

      Delete
  7. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. பொருத்தமான தலைப்புடன் அலை கடலின் சீற்றங்களை வகைபடுத்திய விதத்தை படித்து மகிழ்ந்தேன். இறுதியில் இராமாவதாரமும், கிருஷ்ணாவதாரமும் மிக பொருத்தமாக உள்ளது. சர்வம் கிருஷ்ணார்ப்பணம். படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது. அருமையான பதிவுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  8. மிக்க நன்றி கமலா. பதிவின் சாரம் ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மா, படங்கள் கூகுள்.

    ReplyDelete