கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, March 20, 2025

இழந்த பொக்கிஷங்கள்

 இழந்த பொக்கிஷங்கள்


இதைப்பற்றி எழுத எத்தனையோ விஷயங்கள் உண்டு. நான் முக்கியமாக குறிப்பிட விரும்புவது கிணறு,  ஜட்கா வண்டி ,எனப்படும் குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டி பயணங்களை.

அப்போதெல்லாம் தனி வீடுகள். பெரும்பாலும் எல்லா வீடுகளிலும்  கிணறு இருக்கும். அந்த கிணற்றில் நீர் இரைத்துதான் குளிக்க, குடிக்க, சமைக்க என்று எல்லாவற்றிர்க்கும் பயன் படுத்துவோம். கிணற்றுக்கு அருகில் நெல்லி மரம் இருந்தால் அந்த கிணற்று நீர் சுவையாக இருக்கும்.

கிணற்றடியில்தான் வீட்டு வேலை செய்பவர் பாத்திரங்களை துலக்குவார்.  கோடையிலும், வாடையிலும் குளிக்க இதமாக இருக்கும் கிணற்று நீரை இரைத்து குளிப்பது அலாதி சுகம்.

பாரதி ஆசைப்பட்டது போல எங்கள் வீட்டு கிணற்றுக்கு அருகில் தென்னை மரம் உண்டு, வளர்பிறை நாட்களில் நல்ல முத்துச் சுடர் போல நிலா ஒளி கிணற்று நீரில் பிரதிபலிக்கும்.

கிணறு இருந்தால் அதில் தவறுதலாக சாமான்கள் விழுவது சகஜம். அதை எடுப்பதற்கு பாதாள கரண்டி என்று ஒன்று உண்டு. அது யார் வீட்டில் இருக்கிறதோ அவர்களிடம் போய் கேட்டால் நம் வீட்டிலிருந்து ஒரு சாமானை வாங்கி வைத்துக் கொண்டுதான் பாதாள கரண்டியைத் தருவார்கள். அப்போதுதான் மறக்காமல் திருப்பித் தருவோமாம்.

இப்போது  வாஸ்துவிற்காக மீன் தொட்டி வைக்கச் சொல்கிறார்கள். அப்போது கிணறு அந்தப் பணியாற்றியது. இப்போது தனி வீடுகளில் கூட கிணறு இல்லை. பம்பு செட்தான். Gone are those days.

குதிரை வண்டி, மாட்டு வண்டி:



எழுபதுகளின் ஆரம்பம் வரையில் குதிரை வண்டிகள் இருந்தன. பழனியில் மட்டும் சமீப காலம் வரை குதிரை வண்டிகள் ஓடிக் கொண்டிருந்தன. 'குதிரை கிச்சா' கதையில் சுஜாதா எழுதியது போல குதிரை வண்டி ஸ்டாண்ட் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிதான் இருக்கும். அந்த இடத்திற்கென்று பிரத்யேகமான வாசனை உண்டு. திருச்சி உறையூரில் நாங்கள் இருந்த பொழுது அழகிரி என்பவர்தான் எங்கள் ஆஸ்தான குதிரை வண்டிக்காரர்.


பிள்ளையார் சதுர்த்தி,தமிழ் வருடப் பிறப்பு நாட்களில் மாணிக்க விநாயகர் கோவிலுக்குச் செல்லவும், பாட்டியை குஜிலித் தெருவில் இருந்த டாக்டர் வீட்டிற்கு அழைத்துச் செல்லவும் அழகிரியின் குதிரை வண்டிதான். கூலி எட்டணாவோ, பத்தனாவோ. அதை வண்டிச் சத்தம் என்பார்கள். அது என்ன பாஷை?

சென்னையில் கூட 1974 வரை குதிரை வண்டிகள் இருந்ததாமே? இப்போது இருக்கும் டிராஃபிக்கில் குதிரை வண்டிகளும் இருந்தால் எப்படி இருக்கும்? கார்கள், ஆட்டோக்கள், டூ வீலர்களுக்கிடையே குதிரை வண்டி.. நினைத்துப் பாருங்கள். இத்தனை ஆட்டோ மொபைல்களை பார்த்து குதிரை மிரளலாம், அல்லது குதிரையைப் பார்த்து டூ வீலர் குமரி மிரளலாம். அவளுடைய போனி டெய்லை புல் என்று நினைத்து குதிரை இழுத்து விட்டால் முடிந்தது கதை. எனிவே போன ஜட்கா வண்டி திரும்ப வரப்போவதில்லை.

விடுமுறைக்கு கிராமத்திற்கு போகும் பொழுதெல்லாம் மாட்டு வண்டியில் நிறைய பயணித்திருக்கிறோம். எங்கள் வீட்டில் தஞ்சை மாவட்டத்திற்கே உரிய மோழை மாடுகள் என்னும் கொம்பில்லா மாடுகள் நிறைய உண்டு. வில் வண்டி, மொட்டை வண்டி எனப்படும் மேற் கூரையில்லாத வண்டி இரண்டுமே இருந்தன. அந்த மொட்டை வண்டியின் மீது வளைவான கூரையை பொறுத்தி விட்டால் அது கூண்டு வண்டியாகி விடும். நிறைய பேர் சாமான்களோடு பயணிக்கலாம். பெரும்பாலும் ஊருக்குத் திரும்ப ரயில் நிலையத்திற்கு வருவதற்கு கூண்டு வண்டிதான். அது உயரமாக ஏறுவதற்கு கஷ்டமாக இருக்கும் என்பதால் ஒரு நாற்காலியை போட்டு ஏறச் சொல்வார்கள். வைக்கோல் பரப்பி, அதன் மீது ஜமக்காளம் விரித்து மெத்தென்று உட்காரும்படி செய்திருப்பார்கள்.

என்ன இருந்தாலும் வில் வண்டியின் கெத்து வருமா? வில் வண்டி வைத்திருப்பதே ஒரு அந்தஸ்தான விஷயம். எங்கள் ஊரில் இரண்டு வீடுகளில்தான் வில் வண்டி இருந்தது. அதில் ஒன்று எங்கள் மாமா வீடு. எங்களுடைய இரண்டாவது மாமாவுக்கு மாடுகள், வண்டிகள் இவற்றில் அதிக ஈடுபாடு. மாடுகளையும், வண்டியையும் விதம் விதமாக அலங்கரிப்பார். வில் வண்டியில் உட்கார மெத்தை, தலை இடிக்காமல் இருக்க குஷன் எல்லாம் இருக்கும். அதில் கடைசியில் உட்கார்ந்து கொண்டு பாதுகாப்பு கம்பியை லாக் செய்து கொண்டு,காலை தொங்க போட்டுக் கொண்டு ஸ்டைலாக உட்கார்ந்து வர ரொம்ப ஆசை. ஆனால் அந்த வாய்ப்பு கிடைப்பது துர்லபம்.முன்பாரம், பின்பாரம் என்றெல்லாம் சொல்லி எங்களை(குழந்தைகளை) நடுவில் தள்ளி விட்டு விடுவார்கள். ஒரே ஒரு முறை வண்டி ஓட்டுனருக்கு அருகில் முன்னால் உட்காரும் சான்ஸ் கிடைத்தது. காலை தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். எங்கேயாவது மாடு சாணம் போட்டு பாவாடையை நாசமாக்கிவிடப் போகிறதே என்று பயமாக இருந்தது. அப்படிப்பட்ட பயத்திற்கெல்லாம் இப்போது இடமில்லை. கிராமங்களில் கூட எந்த வீட்டிலும் மாட்டு வண்டிகள் இல்லை. அதன் இடங்களை டிராக்டர்களும், கார்களும் பிடித்துக் கொண்டு விட்டன. மாடுகள் என்னவாயின?

7 comments:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இழந்த பொக்கிஷங்களை நினைவுபடுத்தி விட்டீர்கள். விபரங்கள் படிக்கவே நன்றாக உள்ளது.

    இரண்டு மூன்று குடும்பத்திற்கு பொதுவாக கிணறு முன்பு எங்கள் அம்மா வீட்டின் வாசலில் இருந்தது.அந்த நீரை சுவையே தனி. வீட்டின் எல்லா உபயோகத்திற்கும் அதில் இறைத்த நீர்தான்.பின் மதுரை திருமங்கலத்தில் குடியிருந்த வீட்டிலும் கொஞ்ச வருடங்கள் கிணற்றின் பயன்பாடு.

    அது போல் மாட்டுவண்டி ஆகா...! அந்த சிறுவயது நினைவுகளை நன்றாக சொல்லியுள்ளீர்கள்.

    /சென்னையில் கூட 1974 வரை குதிரை வண்டிகள் இருந்ததாமே? /

    தகவலுக்கு நன்றி.

    ஆமாம். கூலியை வண்டி சத்தம் என்றுதான் குறிப்பிடுவோம் அதுபோல் அதில் ஏறி பயணம் செய்யும் போது தலையில் ஒரு "நொடி" . படாமல் பயணம் செய்ய முடியாது. குதிரை வண்டியும் அப்படித்தான். குதிரை வண்டி மாட்டு வண்டியை விட வேகம் அதிகம்.அதுவும் மாட்டு வண்டியை பிடித்தபடி அதன் பின்னாடியே உறவு குழந்தைகளோடு சாலையில் வேகமாக நடை போட்ட அனுபவங்களும் உண்டு.

    தங்கள் மாமா வீட்டின் வண்டி அனுபவங்கள் அனைத்தையும் படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. மாட்டு வண்டியிலும் குதிரை வண்டியிலும் சென்ற நினைவுகள் வந்தன.  கூடவே ஷோலே திரைப்படக் காட்சியும்...

    "தும்ஹாரா நாம் க்யாஹை பஸந்தி?"

    ReplyDelete
  3. "மாட்டு வண்டி பாதையிலே கூட்டு வண்டி போகுதம்மா..."
    "சாட்டை கையில் கொண்டு வாங்கக் கொண்டு காளை ரெண்டு.."
    ""பாரப்பா பழனியப்பா..  பட்டணமாம் பட்டணமாம்..."
    "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஒரு ராஜா.."
    "உன் பாட்டு உன் பாட்டு..  என்பாட்டு என்பாட்டு"
    "காங்கயம் காளைகளே..  ஒடுங்கடா கவர்மெண்ட்டு சாலையிலே..."
    "திண்டாடுதே  ரெண்டு கிளியே..."
    "பாப்பா பாப்பா கதை கேளு.."
    "கட்ட வண்டி..  கட்ட வண்டி.."

    சட்டென நினைவுக்கு வந்த சில பாடல்கள்...

    ReplyDelete
  4. தளத்தின் தோற்றம் சற்றே மாறி இருக்கிறதே.....   பெரிய எழுத்துகள்...

    ReplyDelete
  5. பஸ் ரயிலில் ஜன்னலோர ஸீட் பிடிப்பது போலதான் மாட்டு வண்டி குதிரை வண்டிகளில் பின்னால் 'கம்பி லாக் ஸீட்'..  குதிரை வண்டிகள் மாட்டு வண்டிகளைவிட சற்றே அந்தஸ்தானவை!!

    ReplyDelete
  6. ​பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல. கால வகையினானே. பொதுவாக அடிமை மிருகங்கள் அடிமை மக்கள் போல் இல்லாதாகிவிட்டன. அப்படி ஏதாவது இருந்தாலும் peta காரர்கள் சும்மா விட மாட்டார்கள்.
    காளை மாடுகள் கொஞ்சம் உண்டு என்றாலும் வேலை வாங்குவதில்லை.
    தற்போது யானைகள் மட்டும் கோயில்களின் பாதுகாப்பு வளர்ப்பில் உள்ளன. மனிதர்கள் யானை வளர்ப்பது இல்லை.
    நீங்கள் சைகிளை மறந்து விட்டீர்கள். சைகிளில் ஆபீஸ் போவது என்பது அறவே இல்லை.

    தற்போது குதிரை வண்டி (சாரட்) குடியரசு தலைவர் மட்டுமே பயன்படுத்துகிறார்.

    ReplyDelete