சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா...
என் கல்லூரி நாட்களில் தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய ஆளுமைகள் கமலும்,ரஜினியும். நிறைய இளம் பெண்களுக்கு கமலஹாசனை பிடிக்கும், எனக்கு ரஜினிகாந்தைப் பிடிக்கும். அதற்கு முக்கிய காரணம் நானும் அவரைப் போலவே வேகமாக பேசுவேன். அப்படி வேகமாக பேசியதால் நிறைய கிண்டல், கேலி, அவமானங்களுக்கு உள்ளாகி எனக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையே இருந்தது. வேகமாக பேசுமொரு ஆள் வெற்றிகரமான நட்சத்திரமானது அந்த தாழ்வு மனப்பான்மையை போக்கி நம்பிக்கை அளித்தது. அதுவே அவரை ரசிக்க முக்கிய காரணம்.
அண்ணாமலை படம் வெளியானபொழுது என் மகனுக்கு ஐந்து வயது. அந்தப் படம் அவனுக்கு அவ்வளவு பிடித்தது. நாங்கள் அப்போது மஸ்கட்டில் இருந்தோம். ஒரு தோழியின் வீட்டிற்கு முதல் முறையாகச் செல்கிறோம், தோழியின் கணவர் என் மகனிடம், "உன் பேர் என்ன?" என்று கேட்டதும், என் மகன், "என் பேரா? அண்ணாமலைனு வெச்சுக்கலாமே" என்றானே பார்க்கணும். தோழியின் கணவர் இன்றுவரை என் மகனை அண்ணாமலை என்றுதான் அழைப்பார்.
ஐந்து வயதாகும் என் பேத்தி சில சமயம் என்னுடன் படுத்துக் கொள்வாள். இரட்டைக் கட்டிலின் சுவரோரம் அவளை படுத்துக் கொள்ளச் சொல்லி விட்டு அவளுக்கு போர்த்தி விட்டேன். நான் இந்தப் பக்கம் இருந்ததால் இரண்டு கைகளாலும் போர்வையை பிடித்துக் கொண்டு, வலை வீசுவது போல் வீசினேன், போர்வை கச்சிதமாக அவள் மீது வீழ்ந்தது. மறுநாள் படுத்துக் கொண்ட என் பேத்தி, "கேன் யூ போர்திங் மீ லைக் ரஜினிகாந்த்?' என்றாள். எனக்கு ஒண்றும் புரியாமல் விழித்து,"வாட்?"என்றேன்.
"லைக் யெஸ்டெர் டே"
அப்போதும் புரியாமல் நான் விழிக்க, என் மகள், "நீ அவ்ளோ ஸ்டைலா போர்த்தி விடறயாம்.." என்று விளக்கினாள். தோடா! என்று நினைத்துக் கொண்டேன். அதன் பிறகு தினசரி அவளுக்கு அது வழக்கமாக போய் விட்டது. தூங்கச் செல் என்றால், "ஐ ஆம் வெய்டிங் ஃபார்ரஜினிகாந்த்" என்பாள். "அவர் சென்னையில் இருக்கிறாரோ, இமயமலையில் இருக்கிறாரோ?" என்பேன்.
இரண்டு நாட்கள் முன்பு அவளுக்கு போர்த்தி விடச் செல்ல நேரமாகி விட்டது, மாடிப்படியில் அமர்ந்த வண்ணம் உறங்கத் தொடங்கி விட்டாள். ஒரே வீச்சில் போர்வையை போர்த்த வராவிட்டால், "டு டே ரஜினிகாந்த் டின்ட் கம் ப்ராப்பர்லி" என்பாள்.
சித்திரம் மட்டுமா கைப்பழக்கம்? போர்வையை ஸ்டைலாக போர்த்தி விடுவதும்தான். இப்பொழுது நல்ல தேர்ச்சி அடைந்து விட்டேன். அதனாலோ என்னவோ, முந்தாநாள் "யூ ஆர் த பெஸ்ட் லேடி ரஜினிகாந்த்" என்றாள். ஆ! நயன்தாராவுக்கு போட்டியா??
இதில் என்னை ஆச்சர்யப்படுத்தும் விஷயம் என்னவென்றால், பொதுவாக ஒரு தலைமுறையினர் ரசிக்கும் நடிக, நடிகையர்களை அடுத்த தலைமுறையினரே ரசிக்க மாட்டார்கள். ஆனால், எனக்கும் ரஜினிகாந்தைப் பிடிக்கும், என் குழந்தைகளுக்கும் ரஜினிகாந்தை பிடிக்கும் இப்போது என் பேத்திக்கும் ரஜினிகாந்தை பிடித்திருக்கிறது. ஃபினாமினல்! தலைவா யூ ஆர் கிரேட்! Happy birthday!
Dec.12th நான் முகநூலில் எழுதியது.

No comments:
Post a Comment