வரலக்ஷ்மி வருவாய் அம்மா..!
ஆடி மாதம் வந்துவிட்டாலே பண்டிகைகள் வரிசை கட்டி நிற்கும். முதலில் வருவது வரலக்ஷ்மி நோன்பு அல்லது வரலக்ஷ்மி விரதம். இந்த நோன்பு அனுசரிக்கும் சிலர், அதென்ன சிலர் என்கிறீர்களா? வரலக்ஷ்மி நோன்பு செய்யும் பழக்கம் குடும்பத்தில் இருந்தால்தான் கொண்டாடுவார்கள். மாமியார் அந்த விரதத்தை அனுஷ்டித்து வந்தால் மருமகளும் தொடர வேண்டும். திருமணம் ஆனவுடன் இதை எடுத்து வைப்பார்கள்.
இந்த வரலக்ஷ்மி விரதம் சில வருடங்கள் ஆடி மாதமும், சில வருடங்கள் ஆவணி மாதமும் வரும். திருமணம் ஆன வருடமே நோன்பு எடுத்துக் கொள்வதென்றால் எந்த மாதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மருமகளும் செய்ய ஆரம்பித்து விடலாம். முதல் வருடத்தை விட்டு விட்டால் எந்த வருடத்தில் ஆவணி மாதத்தில் வருகிறதோ அப்போதுதான் நோன்பு எடுத்துக் கொள்ள வேண்டும்(அதாவது செய்ய ஆரம்பிக்க வேண்டும்). மாமியார் வீட்டில் இல்லாவிட்டாலும் அம்மா செய்து கொண்டிருந்தால், அம்மாவிடம் இருந்து எடுத்துக் கொள்ளலாம். ஒரு முறை செய்ய ஆரம்பித்து விட்டால் எல்லா வருடமும் நிறுத்தாமல் செய்ய வேண்டும். ஏதாவது அசம்பாவிதத்தால் செய்ய முடியவில்லை என்றாலும் இந்த பூஜையை அனுஷ்டிக்கும் வேறு யாரிடமாவது அம்மன் முகத்தை பூஜிக்க கொடுத்து, பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். உண்மையில் இந்த விரதம் ஆந்திராவிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்திருக்க வேண்டும்.
![]() |
வாட்சாப் வந்த படம் |
இப்பொழுதெல்லாம் எல்லோரும் வரலட்சுமியின் முகத்தை வைத்துதான் பூஜிக்கிறார்கள். முன்பெல்லாம் சிலர் வீடுகளில் சுவற்றில் வரலட்சுமியின் முகம் வரைந்து அதை பூஜிப்பார்கள். என் அக்கா, அவர் கூட சில வீடுகளில் வரலக்ஷ்மி படம் வரைந்து தந்திருப்பதாக கூறினார். நிறைய வேலை வாங்கும் பூஜை இது. முன்பெல்லாம் இதை மூன்று நாட்கள் செய்வார்கள். முதல் நாள் வியாழக் கிழமை மாலை வீட்டை அலம்பி, இழை கோலம் போட்டு, செம்மணிட்டு, மாவிலைத் தோரணம் கட்டி, அம்மன் மண்டபத்தை அலங்காரம் செய்து, அம்மனையும் அலங்கரித்து, முதலில் வீட்டு வாசலில் ஒரு பகுதியில் ஒரு பலகையில் கோலமிட்டு அதில் அம்மனை எழுந்தருளச் செய்து, அம்மனுக்கு ஆரத்தி எடுத்து, இரண்டு பெண்களாக அம்மனை வீட்டுக்குள் அழைத்து வந்து மண்டபத்தில் எழுதருளச் செய்வார்கள். அம்மன் அலங்காரத்தில் தாழம்பூ வைத்து பின்னுவது முக்கியம். அதே போல அம்மனுக்கு பின்புறம் அந்த பின்னழகை காணும் வண்ணம் ஒரு கண்ணாடியும் வைப்பார்கள்.
வெள்ளிக்கிழமை வரலக்ஷ்மி பூஜை, சனிக்கிழமை புனர்பூஜை செய்துவிட்டு மாலை அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை கூப்பிட்டு வெற்றிலை பாக்கு கொடுப்பார்கள். அப்போது சுண்டல் உண்டு.
இப்போதைய அவசர காலத்திற்கேற்ப அம்மனை அழைப்பது, பூஜை, மாலையில் சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு கொடுப்பது என்று எல்லாமே ஒரே நாளில் முடித்து விடுகிறார்கள். அதே போல, ஐயருக்காக காத்திருக்க தேவையில்லாமல் பென் டிரைவ் உதவியோடு பூஜை நடந்து விடுகிறது. அம்மனை அலங்கரிக்க தேவையான எல்லாம் ரெடிமேடாக கிடைப்பதால் அதுவும் ஈசியாக முடிந்து விடுகிறது.
எங்கள் வீட்டில் வரலக்ஷ்மி பூஜை கிடையாது. எங்கள் கடைசி அத்தைக்கு உண்டு. அத்தையும் திருச்சியிலேயே இருந்ததால் நாங்கள் வரலட்சுமி நோன்பென்றால் அத்தை வீட்டிற்கு சென்று விடுவோம். எங்கள் அம்மா கோலம் போடுவது, அம்மன் அலங்காரம் போன்றவற்றில் திறமை மிகுந்தவர் என்பதால் அத்தைக்கு உதவி செய்ய முதல் நாளே சென்று விடுவார். நாங்கள் பெரும்பாலும் அடுத்த நாள் காலை செல்வோம். அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என் பெரிய அக்கா ஹாஸ்டலில் இருக்கும் தன் ஸ்நேகிதிகளைக் கூட அத்தை வீட்டிற்கு அழைத்து வருவார்.
முதல் நாள் பூஜைக்கான முன்னேற்பாடுகள் தவிர நைவேத்யத்திற்கான இட்லி, கொழுக்கட்டை போன்றவைகளுக்காக மாவு அரைத்து வைத்துக் கொள்ளுதல், கொழுக்கட்டைக்கு பூரணம் தயார் செய்து வைத்துக் கொள்ளுதல் என்று வேலை நீளும். வெள்ளிக்கிழமை காலை 10:30 முதல் 12 மணி வரை ராகு காலம் என்பதால் எல்லோரும் ராகு காலத்திற்கு முன் பூஜையை முடித்து விட வேண்டும் என்று துடிப்பார்கள். பூஜை செய்து வைக்கும் ஐயருக்கு அன்றைக்கு பயங்கர டிமாண்ட். சில சமயம் ஆவணி அவிட்டமும் அன்றைக்கே வந்து விடும். அவ்வளவுதான் கதை கந்தல்!
சில சமயம் ஆகஸ்ட் 15 அன்று வரலக்ஷ்மி விரத நோன்பு வந்துவிடும். அன்றைக்கு பள்ளிக்கு வந்தே தீர வேண்டும், என்று பள்ளியில் விரட்டுவார்கள். அதுவும் ஓரு பெண் பாடக்கூடிய பெண்ணாகவோ, சுதந்திர தின நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடிய பெண்ணாகவோ இருந்து விட்டால் பள்ளிக்குச் செல்லாமல் இருக்க முடியாது. வீட்டிலோ, "அப்படி என்ன ஸ்கூல்? ஒரு நாள் கிழமைக்கு கூட வீட்டில் இருக்க முடியாமல்? உங்க டீச்சரெல்லாம் பொம்மனாட்டிதானே?" என்று என்னவோ ஆசிரியைகள் ஆசைப்பட்டு விசேஷ நாளில் பள்ளிக்கு வருவது போலகேட்பார்கள். நிஜமாகவே பாவம் அந்த ஆசிரியைகள் எப்படி மேனேஜ் செய்தார்கள்?
படம் நன்றி கூகுள்