கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, October 29, 2024

பாட்டி GOAT!

பாட்டி GOAT!

சீருடை அணிந்து கொண்டு, காலில் ஷூவையும், முதுகில் பையையும் மாட்டிக் கொண்டு, பள்ளிக்கு கிளம்பிய என் பேத்தி, டி.வி. ரிமோட்டை என் கையில் கொடுத்து, "நௌ இட்ஸ் பாட்டி டைம்(டி.வி. பார்க்க என்பது தொக்கி நிற்கும் பொருள்)" என்றாள். அவள் வீட்டில் இருக்கும் பொழுது கார்ட்டூன்தான் ஓடிக் கொண்டிருக்கும். "ஆனால் பாட்டி ஷூட் நாட் வாட்ச் கிருஷ்ணா கார்டூன்" 

"ஏன்? பாட்டிக்கும் கிருஷ்ணா பிடிக்கும், ஷீ ஆல்சோ வாட்ச் கிருஷ்ணா கார்ட்டூன்" என்றான் என் மகன்.

"நோ, தட்ஸ் மை கிருஷ்ணா கார்டூன்.." என்றவள் கொஞ்சம் இடைவெளி கொடுத்து, "பாட்டி வில் வாட்ச் குக்கிங்" என்றதும், என் மகனும், நானும் அடக்க முடியாமல் சிரித்தோம்.

'வாசலில் கிடக்கும் 

பால் பாக்கெட்டை அம்மாவிடமும்

செய்தித்தாளை அப்பாவிடமும்

கொடுக்க வேண்டுமென்று

குழந்தைக்கு 

யார் சொல்லிக் கொடுத்தார்கள்?'

என்னும் புதுக்

கவிதை நினைவுக்கு வந்தது.'

எப்படியோ பேத்தியை சரிகட்டி GOAT(உம்) பார்த்து விட்டேன்.  அதற்கு வந்த விமர்சனங்கள் பயமுறுத்தின, ஆனால் அத்தனை மோசமான இல்லை. கிளைமாக்ஸ் இழுவை சகித்துக் கொள்ள வேண்டும். வெங்கட் பிரபுவின் படங்கள் அத்தனை மோசமாக இருக்காதே என்ற என் நம்பிக்கை பிழைத்தது. 

தங்கப்பதக்கத்தில் விஜய் நடித்தது போலிருந்தது என்று நான் கூறினால் சிவாஜி ரசிகர்களுக்கு கோபம் வரலாம். ஏன் எனக்குள் இருக்கும் சிவாஜி ரசிகையே ஏற்றுக்கொள்ளவில்லை. "எதை எதோடு ஒப்பிடுகிறாய்? என்ற கேள்வி வந்தது.  

நல்ல படம் வேறு, நல்ல பொழுதுபோக்கு படம் வேறு. GOAT இரண்டாம் ரகம்.

பி.கு: பாட்டி goat(greatest of all time) என்று நான் சொல்லவில்லை. பாட்டியும் கோட்டும் என்று புரிந்து கொள்ளுங்கள்.

Wednesday, October 16, 2024

Bad Newz (Hindi movie review)

 Bad Newz (Hindi movie review)




என் அக்கா ஸ்போக்கன் ஹிந்தி கற்றுக் கொள்கிறாள். அவளுடைய டீச்சர் "ஹிந்தி படங்கள் பாருங்கள்" என்றாராம். எனக்கு ஹிந்தி ஓரளவிற்கு புரியும், ஹிந்தி படங்களை சப் டைட்டில் இல்லாமல் பார்த்தால் ஹிந்தி அறிவு விருத்தியாகும் என்று 'Bad News' (பெயரைப் பார், சகுனமே சரியில்லை)என்று ஒரு ஹிந்தி படத்தை கிளிக்கினேன்.   ரொம்ப வித்தியாசமான ஒரு கதை.


ஒரு ஸ்டார் ஹோட்டலில் ஷெஃப் ஆக பணியாற்றும் சலோனி பாகாவிற்கு (திருப்தி டிம்ரி) தான் பணியாற்றும் ரெஸ்டெரெண்டிற்கு மெராக்கி ஸ்டார் டைட்டில் வாங்கித்தர வேண்டும் என்று ஆசை. ஆனால் அவள் திருமணம் செய்து கொண்ட Akil Chadda (ரிக்கி கௌஷல்) மனைவி மீது தனக்குள்ள காதலை வெளிப்படுத்த செய்யும் செயல்களால் அவள் பணியாற்றும் ரெஸ்டெரண்ட் மெராக்கி ஸ்டார் வாங்கும் வாய்ப்பை நழுவ விடுகிறது, அதனால்அவள் வேலையிலிருந்து தூக்கப்படுகிறாள். வெறுத்துப் போன அவள் விவாகரத்து செய்ய முடிவெடுத்து முஸ்ஸோரியில் குர்பீர் சிங் பன்னு(Ammy Virk) என்னும் சர்தார்ஜி நடத்தும் ஒரு ரெஸ்டாரெண்டிற்கு வேலைக்குச் செல்கிறாள்.


சலோனியின் மாஜி கணவன் அவளை வெறுப்பேற்றுவதற்காக நிறைய பெண்களொடு சந்தோஷமாக இருப்பது போல் புகைப்படமெடுத்து அவளுக்கு அனுப்ப, அதில் காண்டான சலோனி வோட்காவை குடித்துவிட்டு குர்பீர் சிங்கை பலவந்தப்படுத்தி அவனோடு இணைகிறாள். தன் ரூமிற்கு வந்தால் அங்கே மாஜி கணவன், அவளைத் தான் இன்னும் விரும்புவதாக கூற அவனோடும் உறவு கொள்கிறாள்(என்ன கஷ்டம்டா!). அறுபது நாட்களுக்குப் பிறகுஅவள் கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது. தான் போதையில் இருந்ததால் தான் யாருடைய குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அந்த இரவில் தான் உறவு கொண்ட இரண்டு ஆண்களையும் பேடர்னட்டி டெஸ்ட் செய்ய அழைக்கிறாள். அதில் என்ன டிவிஸ்ட் என்றால் அவள் வயிற்றில் உருவாகியிருப்பது இரண்டு குழந்தைகள் அதுவும் இரண்டும் இரண்டு ஆண்மகன்களுடையது(போதுமா?) heteropaternal superfecundation என்னும் அபூர்வ விஷயமாம். இதோடு முதல் பாதி முடிகிறது. அதன் பிறகு என்ன நடந்தது? யாரை அவள் மணந்து கொண்டாள்? அந்த குழந்தைகளை என்ன செய்தாள்? போன்றவை அடுத்த பாதியில் ஜவ்வாக இழுக்கப்பட்டிருக்கின்றன.


முதல் பாதி ஓகே! இரண்டாவது பாதியில் தனக்குதான் நல்ல துணவனாகவும், நல்ல தகப்பனாகவும் இருக்கும் தகுதி இருக்கிறது என்பதை நிரூபிக்க ரிக்கி கெளஷலும், அமி விர்கும் செய்யும் கோமாளித்தனங்கள் எரிச்சலூட்டுகின்றன. இந்த கூத்தில் படம் நகராமல் ஒரே இடத்தில் நிற்கிறது. 


ரிக்கி கெளஷலுக்கு கொ..ஞ்..ச..ம்.. ஓவர் ஆக்டிங் என்றாலும் நம்மூர் பிரகாஷ்ராஜ் மாதிரி நடிப்பு பிரவாகமாக வருகிறது. ஆமியும் தன் பங்கை செவ்வனே செய்திருக்கிறார். 


கடைசியில் சலோமி தன் முன்னாள் கணவனோடு இணைகிறாள், குர்பீர்சிங் பழைய காதலியோடு விட்டுப்போன உறவை புதுப்பித்துக் கொள்கிறான். இரண்டு குழந்தைகளையும் இரண்டு தம்பதிகளும் வளர்க்க முடிவு செய்கிறார்கள், சலோமி ஆசைப்பட்டபடி அந்த ரெஸ்டாரெண்டிற்கு மெராக்கி ஸ்டாரும் கிடைக்கிறது. All is well, they started living happily ever after என்று சந்தோஷமாகத்தான் முடித்திருக்கிறார்கள். நமக்குதான் எதிர்காலத்தில் இப்படியெல்லாம் நிஜமாகவே நடக்க ஆரம்பித்துவிடுமோ என்று நடுக்கமாக இருக்கிறது.


 

Wednesday, October 9, 2024

பெண்கள் திருவிழா

பெண்கள் திருவிழா


எனக்கும் என் தோழிக்கும் ஒரு விஷயத்தில் ரொம்ப ஒற்றுமை. எங்கள் இருவருக்குமே ஏதோ அந்தக் காலம் பொற்காலம் போலவும், அதில் தவறுகளே இல்லை என்றும், இன்றைய இளைய தலைமுறையை குறை கூறுவதும் கொஞ்சம் கூட பிடிக்காது. அப்படிப்பட்ட பதிவுகளை படிக்கும் பொழுதெல்லாம் நழுவி விடுவோம். எல்லா காலங்களிலும் நன்மை,தீமை இரண்டும் கலந்துதான் இருக்கும். இளைய தலைமுறையினார் எத்தனையோ விஷயங்களில் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களை நம்பி ஒரு வேலையை ஒப்படைக்கும் பொழுது, பொறுப்பு எடுத்துக் கொண்டு சிறப்பாக செயலாற்றுவார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. என்னுடைய இந்த நம்பிக்கை எங்கள் காலனியில் நடந்த நவராத்திரி விழாவில் நிரூபிக்கப்பட்டது.


நான் 2019ல் நான் ஸ்ரீராம் சம்மிட்டிற்கு வந்தேன். அந்த வருடம் எந்த விழாவிலும் பங்கு கொள்ள முடியவில்லை. 2020ல் பரிச்சயமான சிலர் நவராத்திரியின் பொழுது தாம்பூலம் வாங்கிக் கொள்ள அழைத்தார்கள். ஐந்து வீடுகளில் லலிதா சஹஸ்ரநாம பாராயணம் (+பிரசாதம்) செய்தோம். அடுத்த வருடம், ஒன்பது வீடுகளில் பாராயணம்+பிரசாதம். அதற்கு அடுத்த வருடம், நவராத்திரி பாராயணம் என்று வாட்ஸாப் க்ரூபில் அறிவிப்பு வெளியான உடனேயே எல்லா நாட்களுக்கும் புக் ஆகி விட்டது.

கன்யா பூஜை

அந்த சமயத்தில் கல்யாணி மாமி என்பவர் ஸ்ரீராம் சம்மிட்டிற்கு வந்தார். அவரும், உமாதேவி என்பவரும் “நவராத்திரியின் பொழுதுதான் லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் பண்ண வேண்டுமா? ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் எங்கள் வீட்டில் பாராயணம் வைத்துக் கொள்ளலாமே?” என்று அழைக்க கல்யாணி மாமி வீட்டில் வெள்ளிக்கிழமை லலித சஹஸ்ரநாம பாராயணம் தொடங்கப் பட்டது. பின்னர்,மற்றவர்களும் தங்கள் வீடுகளில் வைத்துக் கொண்டனர்.


இந்த குழுவில் இருந்த பத்மாவதி இதை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றார். அவருடைய ஆலோசனையின் பேரில் சென்ற வருடம் எங்கள் சொசைடியில் இருக்கும் கம்யூனிடி ஹாலை அரை நாள் மட்டும் எடுத்துக் கொண்டு பூஜை செய்தோம். பிரசாதங்கள் நாங்களே ஒவ்வொருவர் ஒவ்வொரு ஐட்டம் என்று செய்து கொண்டு வந்தோம். பூஜை மிகவும் சிறப்பாக நடந்தது.


இந்த வருடம் ஒரு நாள் முழுவதும் ஹாலை எடுத்துக் கொண்டோம். ஞாயிறு அன்று பூஜை. ஆனால் எங்களுக்கு சனிக்கிழமை இரவு 8:45க்குத்தான் ஹால் கிடைத்தது. மழை வேறு. எங்கள் குழுவின் இளம் பெண்கள் ரங்கோலி போடுவது(ராதா,சிவசங்கரி), ஹால் அலங்காரம், பேக் ட்ராப் (ஜெயஸ்ரீ,மாயா, ஸௌரா,அபூர்வா), அம்மன் அலங்காரம் (துர்கா, கீதா,பாரதி) போன்றவர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்கள். குழந்தை பிறந்து சொற்ப காலமே ஆகியிருந்தாலும் ஷோபனா என்பவர் கைக்குழந்தையை கணவரிடம் விட்டு விட்டு இங்கே வந்து பிரசாதம் வினியோகித்தல் போன்றவற்றை செய்தார்.

ஜீன்ஸ், பேண்ட்,டீ ஷர்ட், த்ரீ ஃபோர்த்,டீ ஷர்ட் அணிந்து கொண்டு வேலை செய்த இதே பெண்கள் காலையில், பட்டுப் புடவை, திலகம், பூ என்று மங்களகரமாக அமர்ந்து பூஜை செய்தார்கள். ஸமஸ்கிருத ஸ்லோகங்களை பிழையின்றி கூறினார்கள், பஜனை பாடல்களை ஸ்ருதியும், தாளமும் பிசகாமல் பாடினார்கள். இவர்களே மாலையில் குஜராத்தி பாணியில் சேலை கட்டிக் கொண்டு தாண்டியா ஆடிய அழகை ரசிக்காமல் இருக்க முடியுமா? எல்லா ஏற்பாடுகளும் பெண்களால் மட்டுமே செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

Backdrop தயாராகிறது

இதில் என்னை ஆச்சர்யப்படுத்திய விஷயம், இரவில் வேலை செய்த பொழுது, எந்தவித பதட்டமும் இல்லாமல் நிதானமாக, விரைவாக நேர்த்தியாக செய்தார்கள். எல்லோரும் வீட்டிற்கு தூங்கச் சென்ற பொழுது இரவு 1:30க்கு மேல் ஆகியிருக்கும். மறுநாள் முகத்தில் எந்தவித சோர்வும் இல்லாமல் எப்படி இருந்தார்கள்? அந்த உற்சாகமும், மகிழ்ச்சியும் நாள் முழுவதும் எப்படி இருந்தது? அதைத்தந்தது அவர்கள் ஆர்வமா? இறையருளா? முதல் நாள் மாங்கு மாங்கென்று செய்த அலங்காரங்களை மறுநாள் வெகு இயல்பாக கலைத்தார்களே அந்த பக்குவம் என்னை வியக்க வைத்தது. இதிலிருந்து எனக்கு ஒன்று புரிந்தது. இளைஞர்கள் சரியாகாகத்தான் இருக்கிறார்கள். கோவில்களுக்கும், புனித நிகழ்ச்சிகளுக்கும் செல்லும் பொழுது தலையை விரித்துப் போட்டுக் கொண்டு செல்லாதீர்கள் என்று நாம் சொன்னால் நிச்சயம் கேட்பார்கள். வேர்கள் மண்ணில் ஆழமாக புதைந்துதான் இருக்கின்றன, கிளைகள் வளைந்திருந்தால் என்ன?   


இளைய தலைமுறையை சிலாகிப்பதற்காக எழுதப்பட்டிருக்கும் இந்த பதிவில் யுவதிகளுக்கு ஆலோசனை கூறி வழிநடத்தியது, பஜனை, ஸ்லோகங்கள் முதலியவைகளை பயிற்றுவித்தது போன்றவைகளில் அவர்களுக்கு உதவிய சீனியர்களை நான் குறிப்பிடவில்லை. அவர்களும் அதைத் தவறாக நினைத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நம்புகிறேன். அதைப்போல இளைய தலைமுறையினரில் யார் பெயரையாவது குறிப்பிட விட்டுப் போயிருந்தால் மன்னிக்கவும்.

படிப்படியாக வடிவம் பெற்ற அம்மன்:














The entire team




Thursday, September 19, 2024

கொச்சிக்கு வந்த கொச்சு கிருஷ்ணனும் அம்மா கொண்டாடிய பொம்மை கிருஷ்ணனும்

 கொச்சிக்கு வந்த கொச்சு கிருஷ்ணனும் 

அம்மா கொண்டாடிய பொம்மை கிருஷ்ணனும்



கொச்சி விமானத்திற்காக லவுன்சில் காத்திருந்த பொழுது அந்த இளம் பெண்ணை பார்த்தேன். கையில் ஒரு சிறிய அழகிய பிரம்பு கூடையோடு நடந்து கொண்டிருந்தாள்(ர்). யாருக்கோ அன்பளிப்பாக கொடுக்க கொண்டு செல்கிறாள் என்று நினைத்தேன்.

விமானத்தில் எனக்கு அடுத்த இருக்கைகளில் அவளும், அவள் அம்மாவும் அமர்ந்து கொண்டிருந்தார்கள். அம்மாவும் பெண்ணும் ஏகப்பட்ட செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். விமானம் புறப்படும் நேரம் செல்ஃபோன், மடிக்கணிணி எதையும் பயன்படுத்தக் கூடாது என்னும் அறிவிப்பை சட்டை செய்யாமல் வீடியோ எடுப்பது, வீடியோகால் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டது எரிச்சலைத் தந்தது.

ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு முழித்துக் கொண்ட பொழுது அந்த பக்கத்து இருக்கை பெண் தன்னுடைய பிரம்புக் கூடையை சாப்பாட்டு மேஜையின் மீது வைத்து, அதன் மூடியை திறந்து வைத்திருந்தாள். அழகாக அலங்கரிக்கப்பட்ட சிறு விக்கிரகம்.

“துர்கையா?” என்று கேட்டேன்.

“இல்லை, கிருஷ்ணா” என்றாள்

“யாருக்காவது பரிசளிக்கப்போகிறாயா?” என்று கேட்டதும்

“மதுராவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்று என்னிடம் வினவினாள்.

“ஓ! ஒரு முறை சென்றிருக்கிறேன்.பர்த் ப்ளேஸ் ஆஃப் கிருஷ்ணா”

“அதுதான் என்னுடைய சொந்த ஊரும் கூட. இந்த கிருஷ்ணர் பதினைந்து வருடங்களாக எங்களோடு இருக்கிறார், எங்கள் குடும்பத்தில் ஒருவர். லட்டு கோபால்ஜி என்போம். லட்டு என்பது குழந்தைகளை செல்லமாக அழைப்பது. கோபால்ஜியை நாங்கள் செல்லமாக லட்டு கோபால்ஜி என்போம். இவருக்கு தினசரி உடை மாற்றுவோம், நாங்கள் சாப்பிடுவது எல்லாவற்றையும் இவருக்கும் கொடுப்போம்”. என்று கூடைக்குள் காட்டினாள். ஒரு கு..ட்..டி வெள்ளி டம்ப்ளர், இரு டப்பாக்கள். அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த கிருஷ்ண விக்கிரகம்.





அந்தப் பெண்ணோடு மேலும் பேசிக் கொண்டிருந்ததில் அவர் ஒரு மருத்துவர் என்பது தெரிந்தது. நீட் எழுதி பெங்களூர் மெடிக்கல் காலேஜில் மருத்துவம் படித்தாராம். இப்போது மருத்துவத்தில் பி.ஜி. படிப்பதற்காக நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறாராம். இவருடைய கிராமத்தில் இவர்தான் முதல் மருத்துவராம். எதிர்காலத்தில் தன்னுடைய சொந்த ஊரில் மருத்துவமனை வைக்க ஆசையாம். இதற்குள் கொச்சி வந்துவிட, அந்தப் பெண்ணுக்கு வாழ்த்து சொல்லி விடை பெற்றேன்.

அந்தப் பெண்ணுக்கு கண்ணன் மீது இருப்பது பக்தியா பாசமா? என் அம்மா கூட இப்படித்தான். கண்ணன் மீது பாசம் கொண்டவள். எங்கள் வீட்டில் ஒரு கிருஷ்ணர் பொம்மை உண்டு. அம்மா ரோஜாப் பூவை அந்த கிருஷ்ணன் பொம்மைக்கு வைத்து விட்டு, “கிருஷ்ணனுக்கு ரோஜா பூ வைத்தால் எவ்வளவு அழகாக இருக்கு!’ என்று ரசிப்பாள். கோகுலாஷ்டமிக்கு எத்தனை விதமான பட்சணம் செய்தாலும் போதும் என்றே தோன்றாது. தன்னுடைய குழந்தைக்கு ஆசை ஆசையாக செய்வது போலத்தான் செய்வாள். மாவடு போட்டால் உடனே தயிர் சாதம் பிசைந்து மாவடுவோடு நைவேத்தியம் செய்வாள். தினசரி நைவேத்தியம் உண்டு.

ஒரு முறை அம்மா ஊருக்குச் சென்றிருந்தபொழுது நான் குளிக்காமல் சமைத்தேன். அதனால் சுவாமிக்கு நைவேத்தியம் செய்யவில்லை. முதல் நாள் எதுவும் தெரியவில்லை, இரண்டாம் நாள் கிருஷ்ணன்(பொம்மை) முகம் சற்று வாடியிருப்பது போல தோன்றியது. மூன்றாம் நாள் இன்னும் அதிகமாக வாடி, குறிப்பாக பசியால் வாடியது போல தோன்றியதும் குற்ற உணர்ச்சி தோன்றி விட்டது. “ஐயோ! மூன்று நாட்களாக கிருஷ்ணரை பட்டினி போட்டு விட்டோமே?” என்று அடுத்த நாள் குளித்துவிட்டு சமைத்து, நைவேத்தியம் செய்ததும், நம்புங்கள் அந்த கிருஷ்ணன்(பொம்மை என்று சொல்ல மனம் வரவில்லை) முகம் மலர்ந்தது. அதுவும் பசியால் அழுத குழந்தைக்கு ஆகாரம் கொடுத்ததும் ஒரு மலர்ச்சி வருமே.. அதே மலர்ச்சி. அம்மா தன் பக்தியால் பொம்மைக்கு உயிர் கொடுத்து விட்டாளோ?

Sunday, August 11, 2024

ஆடிப் பெருக்கும் ஆதி ரங்கநாதரும்

 

ஆடிப் பெருக்கும் 

ஆதி ரங்கநாதரும்

 

ஸ்ரீரங்கபட்ணம், நிமிஷாம்பாள் கோயில்கள்


ஸ்ரீரங்கபட்டணம் பாலத்திலிருந்து காவேரி

சென்ற வாரம் சகோதரிகளுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது ஆடிப்பெருக்கை பற்றி நினைவு கூர்ந்தோம். திருச்சியில் வசித்தவர்களுக்கு ஆடிப்பெருக்கு ஒரு மறக்க முடியாத கொண்டாட்டம். பேசி முடித்த பொழுது “அப்போதெல்லாம் காவேரிக்குச் சென்றோம், இப்போது எங்கே போவது?” என்று ஏக்கத்தோடு முடித்தோம்.


எனக்கு, நாம் ஏன் ஸ்ரீரெங்கப்பட்டிணம் செல்லக்கூடாது? என்று தோன்றியது. என் மகனிடம் சொன்ன பொழுது, “பார்க்கலாம்..” என்றான். ஆடிப்பெருக்கு சனிக்கிழமை வந்ததால் மகன், மருமகள் இருவருக்கும் அலுவலகம் விடுமுறைதான். மருமகளின் பெற்றோரும் வருவதாக சொன்னார்கள். கலந்த சாதம் பிடிக்காத மகன் வெல்லசாதம், புளியஞ்சாதம், தயிர்சாதத்திற்கு தடா போட்டு விட்டதால் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் கிளம்பினோம்.


சனிக்கிழமை காலை எட்டு மணிக்கு கிளம்ப வேண்டும் என்று திட்டம். ஆனால் அப்படி இப்படி 8:45 ஆகி விட்டது. வழியில் அன்று பா.ஜ.க. ஏற்பாடு செய்திருந்த பாத யாத்திரை தொடங்கும் இடத்தில் ஏகப்பட்ட கார்கள். வேகமாக செல்ல முடியவில்லை. ஒரு வழியாக நீந்தி நெரிசலை கடந்து பாக சாலாவில் பகல் உணவுக்காக நிறுத்தினோம். நாங்கள் கேட்ட அக்கி ரொட்டி, நீர் தோசை எதுவுமே இல்லை. பகாளாபாத் காலை உணவாம்!! வேறு வழியில்லாமல் வழக்கமான இட்லி, தோசை, பூரிதான். என் மகன் கேட்ட மைசூர் மசாலா தோசையை வெஜிடெபிள் ஸ்பிரிங்க் ரோல் போல கொடுத்து அவனை ஏமாற்றதிற்கு உள்ளாக்கினார்கள். காபி நன்றாகத்தான் இருந்தது. அதை கொண்டு வந்த டம்ப்ளரை ஒரு சின்ன கிண்ணத்தில்(அதுதான் டபராவாம்) வைத்து கொண்டு வந்தார்கள். அதற்கு பக்கத்தில் இருந்த சென்னபட்ணா விற்பனை அங்காடியில் ஒரு குட்டி ஷாப்பிங் முடித்துக்கொண்டு ஸ்ரீரங்கப்பட்ணம் நோக்கி விரைந்தோம்.


நாம் ஸ்ரீரெங்கப்பட்டிணம் என்றாலும் உள்ளூர்வாசிகள் சிரங்கப்பட்ணம் என்கிறார்கள். தென்னிந்திய பாணியில் அமைந்திருக்கும் கோவில். சனிக்கிழமை என்பதாலோ என்னவோ ஓரளவு கும்பல் இருந்தது. ஆனால் தேங்காமல், நகரும் வரிசை. கோவில் ரொம்ப பெரியதும் இல்லை, சிறியதும் இல்லை, மீடியம் சைஸ். கொடிமரம் அமைந்திருக்கும் இடம் வித்தியாசமாக முற்றம் போல் திறந்தவெளி அருகில் பெரிய வட்ட வடிவ தூண்கள். பெரிய துவார பாலகர்களை பார்த்து பயந்த என் பேத்தி, “வொய் ஆங்க்ரி ஃபேஸ்?” என்றாள்.


 


கருவறையில் ஆதிசேஷன் மீது வலது கையை மடக்கி மலர்ந்த முகத்தோடு சயனித்திருக்கிறார். சாளகிராம விக்கிரகம் என்றார் பட்டாசாரியார். காலடியில் மகாலட்சுமியும், பூமா தேவியும். உள்சுற்றில் தனி சன்னதிகளில் லட்சுமி நரசிம்மர், யானையின் மீது கை வைத்து ஆசிர்வதித்தபடி அழகான கரி வரதர், கிருஷ்ணர் காட்சியளிக்கிறார்கள். வலதுபுற பிரகாரத்தில் பெருமாளின் பாதம். பிரகாரம் முடியும் இடத்தில் திருப்பதி வெங்கடேஸ பெருமாள், எதிரே ஆஞ்சநேயர் சன்னிதிகள். கொடிமரத்திற்கு அருகில் வணங்கி வெளியே வந்தோம். இரண்டு வாரங்களுக்கு முன்பு, திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கும் ஆதி ரங்கம் சென்றும் பிரும்மாணடமான ரங்கநாதரை தரிசித்தேன், இப்போது இந்த ஆதி ரங்கன்! அவன் அருள்தான்.


வெளியே பரப்பியிருந்த கடைகளில் ஒன்றில், ஸ்ரீரங்கத்தில் கொள்ளை விலை சொன்ன கல் சட்டி, சகாயமாக கிடைத்தது. பல வருடங்களாக தேடிக் கொண்டிருந்த மாக்கல் சொப்புகளும் கிடைத்தன. பானு ஹேப்பி!


கோவிலுக்கு அருகில் திப்பு சுல்தான் சமாதி இருக்கிறதாம். அங்கே செல்லவில்லை. காவேரிக்கு செல்ல விரும்பி எப்படி செல்வது என்று கேட்டபொழுது, “காவேரியில் தண்ணீர் அதிகமாக செல்வதால் அங்கு மக்களை அனுமதிப்பதில்லை, பாலத்திலிருந்து பாருங்கள்” என்றார்கள். பார்த்துவிட்டு திப்புசுல்தான் அரண்மனை கம் மியூசியம் சென்றோம்.


அரண்மனை என்றதும் பாஹூபலி, பொன்னியின் செல்வன் ரேஞ்சுக்கு கற்பனை செய்து கொண்ட எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது. திப்புவின் கோடைகால வாசஸ்தலமாம். சுவர்களில் ஹைதர் அலி, மற்றும் திப்பு சுல்தான் கலந்து கொண்ட போர்களின் காட்சிகள் வரையப்பட்டுள்ளன. பெரும்பாலான படங்களில் அவர் ஒரு ரோஜாவை முகர்ந்தபடி இருக்கிறார். மரத்தாலான பால்கனிகள். மரத்தாலான மாடிப்படிகள் கீழ்தளத்தில் மறைவாக இருக்கிறதாம். எங்கே என்று கண்டுபிடிக்க முடியவில்லை.






 

திப்பு சுல்தான் கால வாள், கத்தி, அவர் சிரங்கப்பட்ண கோவிலுக்கு வழங்கிய வெள்ளி கிண்ணங்கள், பிரிட்டிஷ் ராணுவ மெடல்கள், திப்புவின் உடை, அவர் கால ஃபர்னிட்சர்கள் வெளியே அவர் காலத்து பீரங்கி முதலியவை காணக்கிடைக்கின்றன.


திப்புவால் ஸ்ரீரங்கநாதர்
 கோவிலுக்கு வழங்கப்பட்ட வெள்ளி கிண்ணங்கள்
திப்பு சுல்தான் பயன்படுத்திய வாள்

திப்பு சுல்தான் கால மரச்சாமான்கள்





ஈட்டி, சுருள் கத்தி போன்றவை

 

அருங்காட்சியகத்தின்

 வாசலில் கல் உருண்டைகள்

வெளியே வந்து பார்த்தால், காரின் இரண்டு புற கண்ணாடிகளிலும் இரண்டு உணவகங்களின் விசிட்டிங் கார்ட். அவற்றில் சுக் சாகர் என்ற பெயர் இருந்த உண்வகத்திற்குச் சென்றோம். வாயில் வைக்க வழங்காத உணவை விழுங்கி விட்டு, நிமிஷாம்பாள் கோவிலுக்குச் சென்றோம்.


சின்ன கோவில்தான். வழியெங்கும் காய்கறிகள் விற்றுக் கொண்டிருந்தார்கள். இங்கேயும் கும்பல் இருந்தாலும், தேங்காமல் நகர்ந்து கொண்டேயிருந்தது. சௌந்தர்யமே உருக்கொண்ட அம்மன். சிரித்த முகம். இவளிடம் நாம் செய்து கொள்ளும் பிரார்த்தனைகளை நிமிஷத்தில் நிறைவேற்றித் தருவதால் நிமிஷாம்பாள் என்ற பெயராம்.


அம்மன் சன்னதியை அடுத்து சிவ பெருமான், லக்ஷ்மி நாராயணர் சன்னதிகள். வணங்கி வெளியே வருகிறோம். பிராகாரம் துவங்கும் இடத்தில் சூரிய பகவான், அவருக்கு நேர் எதிரே விநாயகர், பிரகாரம் முடியும் இடத்தில் ஆஞ்சனேயர். வணங்கி வெளியே வருகிறோம்.


 விநாயகர்,அம்பாள், சிவ பெருமான், மஹாவிஷ்ணு, சூரிய பகவான் என்று பஞ்ச மூர்த்திகளையும் வழிபடும் பஞ்சாயாதன வழிபாட்டு முறையில் அமைந்திருக்கும் கோவில்.



வெளியே வந்தால் கரை புரண்டோடும் காவேரி. படித்துறையும் கண்ணில் பட்டது, ஆனால் அங்கே செல்லக் கூடாது என்று பாதையை அடைத்து வைத்திருந்தார்கள். காவேரிக் கரையில் அமைந்திருக்கும் கோவில். பல நாட்களாக செல்ல வேண்டும் என்று நினைத்திருந்த கோவிலை தரிசிக்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சியோடு வீடு திரும்பினோம்


Saturday, August 3, 2024

திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் (திருகோவிலூர் திவ்ய தரிசனம்)

 


திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் 
(திருகோவிலூர் திவ்ய தரிசனம்)


அன்று திருகோவிலூரில் நல்ல மழை. தங்க ஒரு இடம் தேடிய அந்த வைணவருக்கு ஒரு வீட்டின் இடை கழியில் இடம் கிடைத்தது. அங்கேயே படுத்துக் கொண்டார். சற்று நேரத்தில் கதவு தட்டப் பட்டது. திறந்தால்,  மழைக்கு ஒதுங்க இங்கே இடம் கிடைக்குமா? என்று கேட்டபடி வாசலில் ஒரு அந்தணர்! நான் ஒருவன் இங்கே படுத்துக் கொண்டிருந்தேன், நாம் இருவர் உட்கார்ந்து கொள்ளலாம் உள்ளே வாருங்கள் என்று அழைத்தார். அந்த இருவரும் அமர்ந்து கொண்டனர். மீண்டும் பட பட படபடவென்று கதவு தட்டப்பட்டது. திறந்தால் இம்முறையும் ஒரு வைணவர் நிற்கிறார். "வெளியே நல்ல மழை. அது நிற்கும் வரை இங்கே தங்கி விட்டு செல்லலாமா"? என்று வந்தவர் கேட்க, தாரளமாக... உள்ளே வாருங்கள், நாங்கள் இருவர் அமர்ந்து கொண்டிருக்கிறோம், நாம் மூவர் நிற்க முடியும் உள்ளே வாங்கள், என்று அவரையும் வரவேற்றனர். இருக்கும் இடத்தில் மூன்று பேரும் நெருக்கி அடித்து நின்று கொண்டிருந்தனர்,மழை சாரலைத் தவிர்க்க கதவையும் சாற்றியாகி  விட்டது. அகவே கும்மிருட்டு! இந்த நிலையில் அந்த மூவருக்கும் இடையே இன்னும் ஒருவர் புகுந்தது போல இட நெருக்கடி...சற்று தள்ளிதான் நில்லுங்களேன் ஏன் இப்படி நெருக்குகிரீர்கள்? நான் எங்கே ஐயா நெருக்குகிறேன்? நீங்கள் அல்லவா என்னை நெருக்குகிறீர்கள்? என்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்கின்றனர். அந்த மூவருக்கும் இடையே இன்னும் ஒருவரும் நிற்கிறார் என்பது எலோருக்கும் தெரிகிறது, ஆனால் அவருடைய உருவம் தென்படவில்லை. ஒரு விளக்கு இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது ஆனால் விளக்கிற்கு எங்கே போவது? முதலாமவர்க்கு சட்டென்று ஒரு எண்ணம் உதிக்க ஒரு பெரிய விளக்கை ஏற்றினார். ஆம் இந்த உலகத்தையே ஒரு விளக்காக்கி அதில் சமுத்திரத்தை எண்ணையாக ஊற்றி, கதிரவனையே விளக்காக ஏற்றிய விளக்கு.. அதில் அந்த மூவருக்கும் இடையே புகுந்தது யார் என்று ஓரளவுக்கு புலப்பட்டது என்றாலும் தெளிவாக தெரியவில்லை. இன்னொரு விளக்கு இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்த இரண்டாமவர் மற்றொரு விளக்கை ஏற்றினார் அன்பை விளக்காகவும் ஆர்வத்தை நெய்யாகவும் தம் சித்தத்தை திரியாகவும் கொண்ட விளக்கு.. அதை ஏற்றியவுடன் மூன்றாமவருக்கு பளிச்சென்று புலப்பட்டுவிட்டது. "திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்" என்று தொடங்கி தங்களுக்கு இடையே புகுந்திருப்பது சங்கும் சக்கரமும் ஏந்திய தடக்கையினனாகிய நாராயணனே என்று அறிவித்தார். இப்படித்தான் நாலாயிர திவ்ய ப்ரபந்தம் பிறந்தது. அந்த மூவரும் வேறு யாரும் இல்லை, பன்னிரெண்டு ஆழ்வார்களில் முதல் மூவரான பொய்கை ஆழ்வார் பூதத்தாழ்வார், மற்றும் பேய் ஆழ்வார், ஆகும். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த திருத்தலமான திருகோவிலூருக்கு  மீண்டும் செல்லும் பாக்கியம் கிடைத்தது.


புராதனமான கோவில். 192 அடி  உயரமுள்ள கிழக்கு கோபுரம் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் உயரமான  கோபுரத்தை உடைய ஒன்று. கருடாழ்வாரை சேவித்துக் கொண்டு மூலவரை தரிசிக்க உள்ளே செல்கிறோம். எந்த வைணவ கோவிலிலும் இல்லாத வழக்கமாய் அர்த்த மண்டபத்தில் விஷ்ணு துர்க்கை காட்சி அளிக்கிறாள். உலகளந்த அண்ணனுக்கு காவலாம் தங்கை!!  சுயம்பு உருவம் என்றார் பட்டாச்சாரியார். கிருஷ்ணன் அவதரித்த பொழுது அவனோடு அவதரித்த மாயாதான் இங்கே விஷ்ணு துர்கையாக எழுந்தருளியிருக்கிறாள் என்றார். தன்னைவணங்கும் பக்தர்களுக்கு கல்வி, உத்யோக ப்ராப்தி, திருமண பேறு, குழந்தை பாக்யம் என அணித்தையும் தருகிறவளாம். 

அவளை வணங்கி உள்ளே செல்கிறோம். பெருமாளின் த்ரிவிக்ரம கோலத்தை தரிசிக்க விரும்பிய ம்ருகண்டு முனிவருக்கு அவரின் தவத்தை மெச்சி பெருமாள் அளித்த தரிசனம்.  அடடா! என்ன திருக்கோலம்! பிரும்மாண்டமாய், இடது திருவடியை தரையில் ஊன்றி, வலது திருவடியை உயர்த்தி, வலது கையில் சங்கும் இடது கையில் சக்கரமும் ஏந்தி புன்னகை தவழும் திருமுகத்தோடு 20 அடி உயர மேனி பார்க்க பார்க்க பரவசமூட்டுகிறது! உயர்த்திய திருவடிக்கருகே மஹாலட்சுமி, உயர்த்திய திருவடியின் கீழே மஹாபலி, ஆதிசேஷன்,இடது திருவடியை பூஜிக்கும் பிரும்மா என்று அற்புத கோலம்!  அதைத்தவிர முதல் மூன்று ஆழ்வார்கள் மற்றும் மிருகண்டு முனிவர் பெருமாளுக்கு இடது புறம் இருக்கிறார்கள். பிரகாரத்தில் தனி சந்நிதியில் புஷ்பவல்லி தாயார். மற்ற கோவில்களில் பார்க்க முடியாத ஒரு அதிசயம், கொடி மரத்திற்கு எதிரே சற்று உயரத்தில் ஒரு சாளரம் போன்ற அமைப்பில் கையில் வெண்ணெய் ஏந்தியபடி நிற்கும் கண்ணனையும் காண முடியும். பின்புறத்தில் வாமன மூர்தியையும்தரிசிக்கலாம். பின்புறம் வாமன மூர்த்தி காட்சியளிக்கிறார். 
இந்த கோவிலின் மற்ற சிறப்புகள், 108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்று. அதே போல பஞ்ச கிருஷ்னாரண்ய ஷேத்ரங்களுள் ஒன்று. திவ்ய ப்ரபந்தம் தோன்றிய இடம். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. சாதாரணமாக எல்லா கோவில்களிலும் இருப்பதை போல வலது கையில் சக்கரம், இடது கையில் சங்கு என்றில்லாமல்,மாற்றி வலது கையில் சங்கை ஏந்தியிருப்பதால் ஞானத்தை அருளக் கூடியவர் என்று நம்பிக்கை. 

புன்னகை தவழும் பெருமாளின் மலர்ந்த முகத்தை தரிசனம் செய்தால் நம் கவலைகள் மறையும் என்று கோவில் தலபுராணம் தெரிவிக்கிறது. உண்மைதான்! உலகளந்த பெருமாளின் அழகை காணும் போது ,
மையோ, மரகதமோ, மறி
     கடலோ, மழை முகிலோ, 
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர்
     அழியா அழகு உடையான். 

என்னும் கம்ப ராமாயணப் பாடல் நினைவுக்கு வருகிறது.  ராமனின் அழகை வர்ணிக்க முயன்ற கம்பர் முடியாமல் தோற்றுப்  போய்  "ஐயோ! இவன் அழகை எப்படி சொல்வேன்?" என்று முடித்திருப்பார். அதுதான் நினைவுக்கு வருகிறது. இந்தக் கால இளசுகளின் பாஷையில் சொன்னால்,"சான்சே இல்ல, அல்டிமேட்!"

பெருமாளின் திருமுகத்தைப் பார்க்கப் பார்க்க நம் மனதில் ஆனந்தம் பெருகுகிறது. எங்கே ஆனந்தம் இருக்கிறதோ அங்கே கவலைகள் இருக்குமா என்ன? ஒரு முறை திருகோவிலூர் சென்று உலகளந்த பெருமாளை தரிசித்து ஆனந்தம் அடையுங்கள்! விழுபுரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் திருக்கோவிலூருக்கு விழுப்புரதிலிருந்து ஏராள பேருந்துகள் உள்ளன! திருவண்ணாமாயிலிருந்தும் செல்லலாம். 

ஒரே ஒரு குறை, மூலவரை முழுமையாக தரிசிக்க முடியாமல் அவருக்கு முன்னால் ஒரு பெஞ்ச் போட்டு, அதில் உற்சவரை எழுந்தருள செய்திருக்கிறார்கள். திருவடியை குனிந்து தரிசிக்க வேண்டும். பெருமாளுக்கு வலது புறம் இருக்கும் மஹாலட்சுமி, மற்றும் பிரும்மாவையும்,  இடது புறம் இருக்கும் முதலாழ்வார்களையும், மிருகண்டு முனிவரையும் நாம் நமக்கு இரண்டு புறங்களிலும்  இருக்கும் தூண்களுக்கு 
அருகில் சென்று தரிசிக்க வேண்டும்.   அர்ச்சகர் காட்டும் அரை நிமிட தீபாதாரணைக்குள் கருவறையின் இருட்டிற்கு நம் கண்கள் பழகி, தரிசனம் செய்வது கஷ்டமாக இருக்கிறது, இதற்கு ஏதாவது செய்யலாம்.

Wednesday, July 31, 2024

ஆதி திருவரங்கம்

ஆதி திருவரங்கம்


திருவண்ணாமலை கோவிலில் தரிசனத்தை முடித்துக்கொண்டு, எங்களுக்கு தரிசனம் செய்வித்த அன்பர் வீட்டிற்குச் சென்று விட்டு வந்ததில் ஆஸ்ரமங்கள் எல்லாம் மூடி விட்டன, அதனால் நேராக ஆதி திருவரங்கம் சென்றோம். ஆதி திருவரங்கம் கோவில் காலை ஆறு மணிக்கு திறந்தால் இரவு எட்டு மணி வரை திறந்துதான் இருக்கும். நடுவில் நடை சாத்த மாட்டார்கள்.

இந்த கோவில் ஸ்ரீரெங்கத்திற்கும் முற்பட்டது. அதனால்தான் ஆதி திருவரங்கம் என்று பெயர். பாம்பணை மேல் பள்ளிகொண்ட பிரும்மாண்டமான ரங்கனாதர். 29 அடி நவபாஷண திருமேனியாம்! தாயாரின் மடியில் தலை வைத்து சயனித்திருக்கிறார். அவருடைய கால்மாட்டில் பூமா தேவி. தலைக்கு கீழே அவரை வணங்கியபடி கருடன். வலது கரத்தை தலைக்கு அணையாக கொடுத்து, இடது கை சற்று உயர்த்தி, நான்கு விரல்களை மடக்கியபடி உள்ளன. இது பிரம்மாவிற்கு உபதேசம் செய்யும் கோலம் என்றும், நான்கு விரல்கள் நான்கு வேதங்களை குறிக்கின்றன என்றும் கருத்துகள் உண்டு. கைக்கு அருகில் பிரும்மா.

சோமுகன் என்னும் அசுரன் பிரும்மாவிடமிருந்து வேதங்களை அபகரித்து சென்றுவிட, அவனை மத்ஸ்ய(மீன்)அவதாரம் எடுத்து, சோமுகனை அழித்து வேதங்களை மீட்டுக் கொடுத்து விட்டு ஓய்வெடுத்துக் கொள்ள, தாயாரின் மடிமீது தலை வைத்து படுத்ததாக ஐதீகம். தனி சன்னிதியில் கோவில் கொண்டுள்ள ரங்கநாயகி தாயார் படிதாண்டா பத்தினி. பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால்தான் இந்தக் கோவிலுக்கு வர முடியுமாம்.

தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இந்த கோவில் பராந்தக சோழனால் திருப்பணி செய்யப்பட்டதாம். பின்னர் விஜயநகர மன்னர்களால் விரிவு செய்யப்பட்டதாம். தற்பொழுது கும்பாபிஷேகத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.


கோவில் வாசலில் செங்கலால் கட்டப்பட்ட ஒரு பெரிய குதிர்(பத்தாயம்) இருக்கிறது. அந்தக் காலத்தில் தானியங்களை இதில் சேமித்து வைத்து, பஞ்சகாலத்தில் எடுத்து மக்களுக்கு வழங்குவார்களாம். இது உள்ளுக்குள் மூன்று அடுக்குகளாக அமைந்திருக்கும், கீழே நெல், நடுவில் கம்பு, மேலே கேழ்வரகு சேமிப்பார்கள் என்றும் கூறுகிறார்கள்.  

இப்படிப்பட்ட புராதன பெருமை வாய்ந்த கோவில்களுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று காட்ட வேண்டும்.