கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, May 11, 2018

மாமி சொன்ன கதைகள் - 2

மாமி சொன்ன கதைகள் - 2


ஒரு ஊரில் இருந்த ஒரு பெற்றோர்களுக்கு ஒரே ஒரு மகன். கொஞ்சம் தாமதமாக பிறந்த அந்த பையன் மேல் அவன் பெற்றோர்களுக்கு மிகுந்த பாசம். அவனும் தன் பெற்றோர்களின் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்தான். வயதான தன்  பெற்றோர்களை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டியது தன்  கடமை என்று நினைத்தான். 

அவனுடைய மனைவியோ கணவன் இருக்கும் பொழுது மாமனார், மாமியார் மீது பக்தி கொண்டவள் போல, அவர்களுக்கு பணிவிடைகள் செய்வது போல நடிப்பாள். கணவன் அலுவலகம் சென்றதும் தான் எந்த வேலையும் செய்யாமல், கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்து கொண்டு எல்லா வேலைகளையும் அவர்களையே ஏவுவாள். 

ஒரு நாள் அலுவலகத்திலிருந்து ஏதோ காரணத்தினால் சீக்கிரம் வீடு திரும்பி விட்ட மகன் தன்  பெற்றோர்கள் தன் மனைவியிடம் படும் பாட்டை பார்த்து விடுகிறான். தன் மனைவிக்கு பாடம் புகட்ட நினைத்த அவன் தன்  மனைவியின் பெற்றோர்களுக்கு,"உங்கள் மகளுக்கு உடல் நலம் சரியில்லை, உயிருக்கே ஆபத்து. ஜோதிடர்களிடம் கேட்டதில் அவளுடைய பெற்றோர்களாகிய நீங்கள், வேப்பிலையை மட்டும் ஆடையாக உடுத்திக் கொண்டு, தாரை, தப்பட்டை எல்லாம் முழங்க தெருவில் நடனமாடிக்கொண்டே வரவேண்டும்" என்று கடிதம் போடுகிறான்.

அடுத்த வாரத்தில் தெருவில் தாரை, தப்பட்டை ஒலி கேட்டு என்ன விசேஷம் என்று வாயிலுக்கு வந்து பார்த்த அந்த கொடுமைக்கார மருமகள் திடுக்கிடுகிறாள். ஏனென்றால் தெருவில் எல்லோரும் வேடிக்கை பார்க்க, வேப்பிலை ஆடையில் நடனமாடிக் கொண்டு வருவது அவளுடைய பெற்றோர்கள் அல்லவா? இது என்ன கூத்து? என்று அவள் ஆச்சரியப் பட்டுக் கொண்டிருக்க,  உடல் நலம் சரியில்லை என்று கூறப்பட்ட தங்கள் மகள் ஆரோக்கியமாக இருப்பதை பார்த்து அவளுடைய பெற்றோர்களுக்கும் அதிர்ச்சிதான்.

"என்னடி? உனக்கு உடம்பு சரியில்லை என்றார்களே?" என்று கேட்கிறார்கள்.
"உடம்பா ? எனக்கா? நான் நன்றாகத்தானே இருக்கிறேன், நீங்கள் ஏன் இப்படி ஒரு கோலத்தில் நடனமாடிக் கொண்டு வருகிறீர்கள்?" என்று எதிர் கேள்வி கேட்க, அவள் கணவன், "நீ என் பெற்றோர்களை என்னவெல்லாம் இழிவு படுத்தினாய்? அதனால்தான் உன் பெற்றோர்களை அவமானப் படுத்தவே நான்தான் அவர்களுக்கு உனக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி, இப்படி வரச்  சொன்னேன்" என்று கூறுவான். (கதை இங்கே முடிந்து விடும். இதைக் கேட்டு அவன் மனைவி தன் தவறை உணர்ந்து மனம் திருந்தினாள் என்றெல்லாம் கிடையாது)

இந்த கதையை வெகு சுவாரஸ்யமாக சொல்லுவார் என் மாமி. அவர் ஒரு நல்ல கதை சொல்லி. கதையை பாவத்தோடு நேரில் பார்ப்பது போல சொல்லுவார். நான் நிறைய தடவை இந்தக் கதையை சொல்லச் சொல்லி கேட்டிருக்கிறேன்.    

அதே போல மஹாபாரத கதைகளும் சொல்லுவார். பீஷ்ம சபதம், பாண்டவர்கள் அரக்கு மாளிகையிலிருந்து தப்பித்த விதம், திரௌபதி சுயம்வரம், திரௌபதியை சூதில் பாண்டவர்கள் தோற்பது, கண்ணன் கருணையால் அவளுக்கு புடவை வளர்வது போன்ற காட்சிகளை மோனோ ஆக்டிங் போல கூறுவார். அதனால்தானே இன்றுவரை எனக்கு அந்த கதைகள் நினைவில் இருக்கின்றன.

11 comments:

 1. இந்தக் கதையும் நான் கேள்விப்பட்டதில்லை. என்றாலும் அந்த கணவன் செய்ததில் எனக்கு உடன்பாடில்லை. பழிக்குப்பழி என்பது தவறு என்பது ஒருபுறம், அந்த வயதான பெற்றோருக்கு தண்டனை கொடுப்பது என்ன நியாயம்!

  ஒருவேளை இது ஜென் டைப் கதையோ?

  ReplyDelete
  Replies
  1. ஜென் கதை என்று சொல்ல முடியாது. Off beat கதை என்று வேண்டுமானால் சொல்லலாம். இந்த கதையில் என்னை கவர்ந்தது என் மாமி சொன்ன விதம்தான்.

   Delete
 2. பிரசன்ட் சார்!

  ReplyDelete
  Replies
  1. வீட்டுப்பாடம் எழுதாமல் ப்ரெசென்ட் சார் என்றல் என்ன அர்த்தம்? 10 முறை இம்போசிஷன் எழுதுங்கள். நான்ரொம்ப ஸ்ட்ரிக்டு..ஸ்ட்ரிக்டு ..ஸ்ட்ரிக்டு

   Delete
 3. இந்தக் கதை இதுவரை கேட்டதில்லை. ம்ம்ம்ம்ம்ம் ஏனோ அவன் தன் மனைவியை வேறு விதமாகத் திருத்தியிருக்கலாமோ என்றும் தோன்றியது. நான் வாசித்து வரும் போது அப்படித்தான் நினைத்தேன் அவன் வேறு ஏதாவது யாரையும் பாதிக்காமல் அவளைத் திருத்துவான் என்று நினைத்தேன். அவள் பெற்றோர் என்ன தவறு செய்தார்கள். இவள்தானே தவறு செய்தாள் என்று தோன்றியது. இது Tit for tat போல இருந்தது...பானுக்கா..

  நான் குழந்தைகளுக்குக் கதை சொல்லுவது என்றால் கண்ணை உருட்டி, ஆக்ட் செய்து நடித்துச் குரலில் ஏற்ற இறக்கத்துடன், அந்தந்த வரிக்கு ஏற்றாற் போல வசனங்களை மாடுலேட் செய்து என்று....என் மகனும் அது போல எனக்குச் சொல்வதை டேப்பில் ரெக்கார்ட் பண்ணி வைத்திருந்தேன்...காணாமல் போய்விட்டது அந்த டேப்...அது போல சில கதைகளை நல்ல விதமாக மாற்றி உல்டா பண்ணியும் சொல்லுவது வழக்கம்.

  என் தம்பி பெண்ணிற்கு டைனோசர் கதையை 16 பாகங்கள் போலச் சொல்லி அதில் அவளையும் ஒரு கேரக்டராக உட்படுத்தி அவள் சமர்த்தாக இருப்பது போலச் சொல்லுவேன். அவள் அப்படியே ஏதோ கார்ட்டூன் பார்ப்பது போலக் கண் கொட்டாமல் பார்த்துக் கேட்டுக் கொண்டே திறந்த வாய் மூடாமல் அதில் அப்படியே சாப்பாடும் ஊட்டி என்று அதெல்லாம் ஒரு கனாக்காலம்!...கோல்டென் டேய்ஸ்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. // இது Tit for tat போல இருந்தது...பானுக்கா..// அப்போதே நீதி போதனை எதுவும் செய்யாமல் எதார்த்தமாக கதைகள் இருந்திருக்கின்றன. இதை நான் ரசித்தது என் மாமி சொல்லிய விதத்தில்தான்.

   Delete
  2. என் மகள் என்னிடம் அவள் மகளுக்காக கதை சொல்லி ரெக்கார்ட் பண்ணி வாட்ஸாப்பில் அனுப்ப சொல்லி கேட்டுக் கொண்டே இருக்கிறாள். அனுப்ப வேண்டும். குழந்தைகளுக்கு கதை சொல்வது கொஞ்சம் கஷ்டம். அவர்களுக்கு புரிய வேண்டும், போரடிக்காமல் இருக்க வேண்டும், ஒரு
   மாரலும் இருக்க வேண்டும், அதே சமயத்தில் நாம் அதை வலியுறுத்தக் கூடாது. பார்க்கலாம்.

   Delete
 4. சிறுவயதில் கதைகள் கேட்டதுண்டு. ஆனால் இந்தக் கதை இப்போதுதான் உங்கள் பதிவின் மூலம் அறிகிறேன். மலையாளத்துக் கதைகள் நாடோடிக் கதைகள் சில கேட்டுள்ளேன் ஆனால் தமிழ்தான் அதிகம். கேட்டதை விட நண்பர்கள் மூலம், அப்போதைய புத்தகங்களில் (தமிழ்) வாசித்த சிறுவர் கதைகள் தான் அதிகம்.

  துளசிதரன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க துளசிதரன், நாடோடி கதைகள் எப்போதுமே ஸ்வாரஸ்யம்தான்!

   Delete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
  Nice One...
  For Tamil News Visit..
  https://www.maalaimalar.com/ | https://www.dailythanthi.com/

  ReplyDelete