கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, September 24, 2021

ஈசாவாஸ்ய உபநிஷத் - பாபா காட்டிய விளக்கம்

 ஈசாவாஸ்ய உபநிஷத் - பாபா காட்டிய விளக்கம் 


சென்ற வாரம் நான் விளையாட்டாய் 'ஈசாவாஸ்ய உபநிஷத்' பற்றி எ.பி.யில் கேட்க முடியுமா? என்று கேட்க, அவர்கள் ஈசாவாஸ்ய உபநிஷத் பற்றி ஜடாயு அவர்களின் விளக்கத்தை பகிர்ந்து கொண்டிருந்தார்கள். நன்றாக இருந்தது. 

நேற்று சாய் சத் சரிதம் படித்த பொழுது ஷீர்டி சாய்பாபா அவருடைய சீடரான தாஸ்கணு என்பவருக்கு ஈசாவாஸ்ய உபநிஷதத்தின் பொருளை எங்கனம் உணர்த்தினார் என்னும் சம்பவத்தை படிக்க நேர்ந்தது. 

தாஸ்கணு என்பவர் ஈசாவாஸ்ய உபநிஷதத்தை மராட்டிய மொழியில் மொழி பெயர்த்தார். ஆனால் அந்த உபநிஷத்தின் உட்பொருளை அவர் உணராததால் அவருடைய   மொழிபெயர்ப்பு அவருக்கே திருப்தி அளிக்கவில்லை. அதை குறித்து பல அறிஞர்களோடு விவாதித்தும் அவருக்கு முழு திருப்தியளிக்கும் விளக்கம் அவருக்கு கிடைக்கவில்லை. ஆத்மானுபூதி அடைந்த ஒருவரே இதற்கு சரியான விளக்கம் அளிக்க முடியும் என்று கருதிய அவர்  ஷீர்டி சாய் பாபாவை தேடி வருகிறார். பாபாவிடம் தனது வேண்டுகோளை வைக்க, அவர்,"இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. நீ வீட்டிற்கு திரும்பி போகும் வழியில் வில்லபார்லாவில் காகா சாஹேப் தீக்ஷித் வீட்டு வேலைக்காரி உன்னுடைய சந்தேகத்தை தீர்த்து வைப்பாள்" என்று கூறினார். இதைக் கேட்டு சிலர், படித்த ஒரு அறிஞரின் சந்தேகத்தை படிப்பறிவில்லாத ஒரு வேலைக்காரி எப்படி தீர்க்க முடியும்? என்று நினைத்துக் கொண்டார்களாம், ஆனால் தாஸ்கணுவோ பாபாவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து பம்பாயின் புறநகரான வில்லபார்லாவில் இருந்த காக்கா சாஹேப் தீக்ஷித்தின் வீட்டில் தங்குகிறார். 

அங்கு சிறுதுயில் கொண்டிருந்த அவரை தீட்சித் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த பெண் பாடிய பாடல் எழுப்பி விடுகிறது. கிழிந்த உடையை அணிந்து கொண்டிருந்த அச்சிறு பெண், 'கருஞ்சிவப்பு நிற உடை, அது எவ்வளவு நன்றாக  இருக்கிறது! அதன் எம்ப்ராய்டரி எவ்வளவு நேர்த்தியாய் இருக்கிறது! அதன் முந்தானையும், கரையும் எவ்வளவு அழகாய் இருக்கிறது!.." என்னும் பொருள்படும் பாடலை மிகவும் சந்தோஷமாக பாடுவதைப் பார்த்த அவர் அந்தப் பெண்ணிற்கு ஒரு பாவாடை, தாவணி வாகித் தர செய்கிறார். 

புது ஆடையை அணிந்து கொண்டு வந்த அந்தப் பெண் மிகவும் மகிழ்ச்சியோடு தன் தோழிகளோடு விளையாடுகிறாள், கோலாட்டம் ஆடுகிறாள். ஆனால் மறுநாள் அந்த புது ஆடையை  வீட்டில் பெட்டியில் வைத்து விட்டு, தன்னுடைய பழைய கந்தல் ஆடையையே அணிந்து கொண்டு வந்தாள். ஆனால் அப்போதும் அவள் மகிழ்ச்சி சிறிதும் குறையவில்லை. பழைய கந்தலை உடுத்தியும் எள்ளளவும் துன்பமோ,மனச்சோர்வோ இல்லாதபடி அவற்றை அவள் தாங்கிக் கொண்டாள். இதிலிருந்து நமது இன்ப,துன்ப உணர்ச்சிகள் எல்லாம் நமது மனத்தின் பாங்கைப் பொறுத்தே இருக்கின்றன என்பதை அவர் உணர்ந்தார். 

மேலும் இந்நிகழ்ச்சியைப் பற்றி தீவிரமாக யோசித்து இச்சந்தர்ப்பத்தில் ஏழைச்சிறுமியின் வறுமை நிலை, அவளது கந்தல் உடை, புது ஆடை, அதை அன்பளிப்பாக கொடுத்தவர்,  அதை பெற்றுக் கொண்டவள், அதனை ஏற்றுக் கொள்ளுதல் எல்லாம் கடவுளின் கூறுகளே, அவரே எல்லாவற்றிலும் ஊடுருவி பரந்து இருக்கிறார், எது நேரினும் அது கடவுளின் ஆணையே என்றும், இறுதியில் அது நமக்கு நன்மை அளிக்கும் என்று தமக்குரியவைகளிடம் திருப்தி  கொள்ளுதல் நலம் என்னும்   உபநிஷத பாடத்தின் நடைமுறைச் சான்று விளக்கத்தினை தாஸ்கணு பெற்றார். 

அன்று ஈசாவாஸ்ய உபநிஷத் பற்றிய கேள்வி, அதற்கு சாய் சத் சரிதாவில் பதில் என்று நடந்ததால் இதை இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மற்றபடி தாஸ்கணு அவர்கள் உணர்ந்ததை நம்மால் உணர முடியுமா? என்று தெரியவில்லை. ஆகவே இது குறித்து உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் அதை பகவான் பாபா தீர்த்து வைப்பார். ஓம் சாய்ராம்! 




  


18 comments:

  1. அருமை.  இப்படிப்பட்ட தத்துவ விளக்கங்கள்தான் இப்போதைக்கு என் மனதுக்கும் ஆறுதல் தரவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. பழைய பிரச்னை. புதிய வடிவில்..

      Delete
    2. என்னாச்சு ஶ்ரீராம்? துரை செல்வராஜு சார் பதிவிலும் இதையே போட்டிருந்தீர்கள்? எனிவே my prayers are with you.

      Delete
  2. நமது இன்ப,துன்ப உணர்ச்சிகள் எல்லாம் நமது மனத்தின் பாங்கைப் பொறுத்தே இருக்கின்றன//

    அதே பானுக்கா. அட்டிட்யூட் இஸ் எவ்ரிதிங்க்.

    நம் மனம் தான் காரணம் எல்லாவற்றிற்கும்.

    இந்தக் கதை நிறைய முறை வாசித்திருக்கிறேன். ஷீரடி சென்று வந்ததிலிருந்து என் உறவினர் இந்தப் புத்தகத்தை வாங்கிக் கொடுத்து வாசிக்கச் சொன்னார். சச்சரிதம் வாசித்திருப்பதால், வாசிப்பதால்...

    இப்போது ஆடியோவும் எல்லா மொழிகளிலும் இருக்கிறது தமிழ் உட்பட.

    அன்று எபி யில் உங்கள் கேள்வி அங்கு ஆசிரியர்கள் கொடுத்திருந்த பதிலைப் பார்த்ததும் நான் அங்கு சொல்ல நினைத்தேன் ஆனால் பெரிதாகிவிடுமோ என்று சுருக்கச் சொல்ல நினைத்து அதை வேர்டில் அடித்து அப்புறம் போட மறந்தே போய்விட்டது.

    இப்போது நீங்கள் சொல்லியிருப்பது அழகாகச் சொல்லிவிட்டீர்கள். நல்ல கருத்து. முடிந்தால் எல்லோரும் பின்பற்ற வேண்டிய ஒன்று. வாழ்வில் மகிழ்ச்சி வந்துவிடும்!

    சில இடங்களில் அவரது நேரடி ப்ரீச்சிங்க்ஸ் இருந்தாலும் பெரும்பாலும் எல்லாமே சம்பவங்கள் மூலம்தான் உட்பொருள் விளங்குவதாக இருக்கும். நம்பிக்கையும் உட்பொருளை ஆராயும் மனமும் இருந்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதா.விவரமாக விளக்கியிருக்கிறீர்கள்.சாய்ராம்.

      Delete
  3. அனைத்தும் மனதைப் பொறுத்தே... அருமை... உண்மை...

    ReplyDelete
  4. ஆமா சாயி சச்சரிதம் நானும் படிக்கிறேன் நல்ல விளக்கம் சாயிராம் 🙏

    ReplyDelete
  5. நல்ல விளக்கம். எல்லாமே மனதைப் பொறுத்துத் தானே!

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. அருமையான விளக்கங்களுடன் கூடிய பக்தி பகிர்வு. சாயி சத்சரிதம் படித்திருக்கிறேன். சாயிபாபாவின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி. சாய்ராம்.. சாய்ராம்...சாய்ராம்!

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  7. எனக்கு அந்த உபநிஷத் பற்றி எல்லாம் தெரியாது..

    பதிவு நன்றாக இருக்கின்றது..

    ReplyDelete
  8. சொன்னவன் கண்ணன்..
    சொல்லக் கேட்டவனும் கண்ணன்..

    இது எப்படியிருக்கிறது?..

    ReplyDelete
  9. அப்பர் ஸ்வாமிகள் -
    திரு ஐயாற்றுப் பதிகத்தில் ,

    எல்லாம் சிவனென நின்றாய் போற்றி!.. - என்கின்றார்..

    அப்படியெனில் எதிரில் இருப்பவர் யார்?..

    மன்னரும் நானே..
    மக்களும் நானே!..
    மரம் செடி கொடியும் நானே!..

    - கீதையின் சாரமாக கவியரசர்..

    மிக உயர்ந்த கருத்து..
    ஆனால், இந்த மட மனம் தான் அடிக்கடி தடுமாறுகின்றது..

    ReplyDelete
  10. இன்பமும் துன்பமும்
    இல்லானே.. உள்ளானே!..

    - மாணிக்கவாசகர் திருவாக்கு..

    இறைவனுக்கு ஏது துன்பம்?.. எது இன்பம்!..

    எல்லாமே நாம் தான்!..

    ReplyDelete