கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, December 3, 2021

பெயரில் என்ன இருக்கிறது?

பெயரில் என்ன இருக்கிறது?

ஒரு ரோஜாவை எந்த  பெயரிட்டு  அழைத்தால் என்ன?  அது  ரோஜாவாகத்தனே இருக்கும்  என்னும் ஷேக்ஸ்பியரின் பிரபலமான
வாசகத்தை எல்லோரும் ஒரு முறையாவது மேற்கோள் காட்டாமல்
இருக்க மாட்டோம். ஆனால் பெயர் அவ்வளவு சாதாரணமான விஷயம்
கிடையாது என்பது 18 .3 .12 அன்று 'நீயா நானா'வில் விவாதிக்கப்பட பொழுது
புரிந்தது. ராஜரத்தினம்,  புகழேந்தி  என்ற ஆண் பெயரைக்  கொண்ட  பெயரைக் கொண்ட பெண்களும், சிந்து,தேன்மொழி என்றெல்லாம் 
பெயர் கொண்ட ஆண்களும் விவாதத்தில் கலந்து கொண்டனர்.

பொதுவாக ஆண் பெயெர் கொண்ட பெண்களெல்லாம் தங்கள் பெயரால்
தங்களுக்கு நேர்ந்த அவமானத்தை கூறும் பொழுது அதிகம் உணர்ச்சி
வசப்படாமல் இயல்பாக பேசினார்கள்.மேலும் ஆண் பெயரைக்  கொண்டிருப்பது தங்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கிறது
என்று கூட கூறினார்கள். இதற்க்கு நேர் மாறாக பெண் பெயரைக் கொண்டிருக்கும் ஆண்கள் பேச்சில் கழிவிரக்கமும், கோபமும், தாபமும் 
வெளிப்பட்டன.

ஒரு இளைஞர் தனக்கு பெண் பெயரை வைத்த  தன் பெற்றோர்  மீது  வெறுப்பு  வருகிறது என்றார். மற்றொருவருக்கு பேசும் பொழுது துக்கம் தொண்டையை
அடைத்தது.

சிறப்பு விருந்தினராக வந்திருந்த சாரு நிவேதிதா(இவர்  நீயா  நானாவின்  நிலைய வித்வான்) இப்பொழுது பெயர்கள் தம் அடையாளங்களை இழந்து
விட்டன என்றார். உண்மைதான். முன்பெல்லாம் பெயரை  வைத்து  அவர்  தென் இந்தியரா, வட இந்தியரா என்று  கணிக்க  முடியும்.  ஏன்  தமிழ் நாட்டை  எடுத்துக் கொண்டாலே பெயரை வைத்து அவர் தமிழ் நாட்டின்  எந்த  பகுதியைச்  சார்ந்தவர்,  எந்த  குலத்திர்க்குரியவர்  என்றெல்லாவற்றையும்  அறிந்து கொண்டுவிட முடியும்.

குருசாமி, குருநாதன், சுவாமிநாதன் போன்ற பெயர்களை கொண்டவர்கள் என்றால் அவர்களுக்கு சுவாமி மலை முருகன் குல தெய்வமாக இருக்கும்.
மன்னார்குடியை சேர்ந்தவர்கள் ராஜகோபாலன், விமலா என்றெல்லாம் பெயர்
வைப்பார்கள்.  மாது என்னும் மாத்ருபூதம்,  சுகந்தா/சுகந்தி,  ஜம்புநாதன்,  அகிலா போன்ற பெயர்கள் திருச்சி மாவட்டகாரர்களுக்கு    உரியவை.  சப்த ரிஷி, ஸ்ரீமதி போன்ற பெயர்கள்  லால்குடி  வட்டத்தில்  உண்டு.  காந்திமதி, கோமதி, நெல்லையப்பன் போன்ற பெயர்கள்  நெல்லை  மாவட்டதிற்குரியவை  என்று  சொல்லத் தேவை இல்லை. 

தாங்கள் வைணவர்கள் என்று அப்பட்டமாக வெளிப்படுத்தும் கமலவல்லி, வேதவல்லி, குமுதவல்லி,உப்பிலி, கேசவன்,போன்ற பெயர்களும் மற்றும் ஆராவமுதன், வகுளாபரணன் என்ற அழகான தமிழ் பெயர்களும் போனதெங்கே?

உறவில் ஒரு குழந்தைக்கு இவியான் என்று பெயர். கூகுளில் தேடி வைத்திருக்கிறார்கள். இவியான் என்றால் சிவா என்று பொருளாம். நமக்கு இவியான் என்றால் வைட்டமின் இ மாத்திரைதான் நினைவுக்கு வரும். நிகிதா என்றால்  ரஷ்ய  மொழியில் 'சாந்தி' என்று  பொருளாம், அதனால்  தன்  மகளுக்கு நிகிதா என்று பெயர் வைத்திருப்பதாக எங்கள் நட்பு வட்டத்தில் ஒரு பெண்மணி கூறினார். சாந்தி என்றே வைத்திருக்கலாமே! எந்த ரஷ்யரும் சாந்தி என்று  பெயர்  வைப்பதாக  தெரியவில்லை.  ஏன்   நாம்  வட  இந்திய  பெயர்களை ஸ்வீகரித்திருக்கும்  அளவிற்கு அவர்கள்  செய்வதாக தெரியவில்லை. நாம்தான் நம் அடையாளங்களை தொலைத்து  விட்டு நிற்கிறோம்.

இந்திய பெயர்கள் வெளிநாடுகளில் படும் பாடு...! நான் அரபுநாடுகள் ஒன்றில்  மினிஸ்டரியில் பணிக்கு சேர்ந்த பொழுது உன் பெயர் என்ன என்று கேட்ட என் மேலதிகாரியிடம்,"பானுமதி" என்றதும்,"ஓ டிபிகல்ட்! இந்டியன் நேம்ஸ்" என்றார் அஹமத் பின் அப்துல் காதர் அல் கசானி" என்று பெயர் வைத்துக் கொண்டிருந்த அவர். 

பானுமதியே கஷ்டம் என்றால் கோவிந்தராஜபுரம் கிருஷ்ணமூர்த்தி வெங்கடேஸ்வரன் என்ற என் கணவரின் பெயரை நினைத்துப் பாருங்கள். ஜொவிந்தா ராகா என்பதற்கு மேல் தொடர முடியாமல் கஷ்டப்பட்ட அவர்கள் என் கணவரின் பெயரில் அவர்களுக்கு உச்சரிக்க சுலபமாக இருந்த மூர்த்தி என்பதை மட்டும் எடுத்துக் கொண்டார்கள்.  

இதற்காகவே சில நண்பர்கள் தங்கள் பெயரை சுருக்கிக்கொண்டார்கள். நீலகண்டன் நீல் ஆனதும் , பத்மநாபன் பாடி(Paddy) ஆனதும் ஓகேதான் தண்டபாணி டான் ஆனதுதான் மனதிற்கு கஷ்டமாக இருந்தது.   

எனிவே, ஒரு  ஜோக்கோடு  இதை  முடிக்கலாம்  என்று  நினைக்கிறேன்.  அருணஜடை என்னும் வித்தியாசமான பெயர்  கொண்ட  ஒரு நண்பர்  சொன்ன ஜோக் இது. 
ஒருவனுக்கு முதலில் பிறந்த பெண் குழந்தைக்கு பூஜா என்று பெயர்  வைத்தானாம் , இரண்டாவதாக பிறந்த பெண்ணுக்கு ஆர்த்தி என்று பெயர்  சூட்டி  விட்டான்.  மூன்றாவதாக  பிறந்தது  ஆண் குழந்தை,  என்ன  பெயர் வைக்கலாம்  என்று  நண்பரிடம்  ஆலோசனை  கேட்க,  குறும்புக்கார  அந்த  நண்பன்,  பேசாமல்  குருக்கள்  என்று  வைத்து  விடேன் என்றானாம். 

இது ஒரு மீள் பதிவு. மத்யமரில் உங்கள் பெயர் உங்களுக்கு கொடுக்கப்பட்டதன் காரணம் என்ன? நீங்கள் யாருக்காவது பெயர் வைத்திருக்கிறீர்களா? உங்களுக்கு பிடித்த ஐந்து பெயர்களை எழுதுங்கள் என்றெல்லாம் கேட்டிருந்தார்கள், அப்பொழுது நான் பெயரில் என்ன இருக்கிறது என்னும் தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது. மத்யமரில் நான் எழுதியது கீழே:

"உனக்கு யார் பானுமதி என்று பெயர் வைத்தார்கள்?" என்று ஒருவர் என்னை கேட்டபொழுது என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் எனக்கு இந்தப் பெயரை வைக்க வேண்டும் என்று யோசித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். 

நான் என் வீட்டில் ஏழாவது குழந்தை, ஐந்தாவது பெண், என்னைப் பெற்றது என் அம்மாவுக்கு ஹை ரிஸ்க் டெலிவரி. அம்மா பிழைத்ததே தெய்வ அனுகிரஹம். குழந்தையின் முகத்தையே ஒரு மாதம் கழித்துதான் பார்த்தாளாம். இப்படியிருக்க எனக்கு என்ன பெயர் வைப்பது என்றெல்லாம் யோசித்திருப்பார்களா என்ன?  என் அக்காக்கள் யாராவது அப்போது பிரபலமாக இருந்த பானு என்று அழைத்திருக்க வேண்டும். பள்ளியில் சேர்த்தபொழுது அது பானுமதி ஆகிவிட்டது. வகுப்பில் எப்போதும் இரண்டு மூன்று பானுமதிகள் இருப்போம். 

இப்போது முதல் பாராவின் கேள்விக்கு வரலாம். "உனக்கு யார்  பானுமதி என்று பெயர் வைத்தார்கள்?" என்ற கேள்விக்கு பதில் இல்லாததால் "ஏன்?" என்று எதிர் கேள்வி கேட்டேன் 

"பானுமதி என்பது துரியோதனின் மனைவியின் பெயர், அந்தப் பெயரை வைக்கக்கூடாது" என்றதும் நான்," பானுமதி என்றால் துரியோதனன் மனைவி என்று ஏன் நினைக்க வேண்டும்? பானு என்றால் சூரியன், மதி என்றால் அறிவு, சூரியனைப் போல் பிரகாசிக்கும் அறிவை உடையவள் என்று எடுத்துக் கொள்ளலாமே? அல்லது பானு என்பதை ஒளி என்று கொண்டால் பானுமதி என்பதற்கு ஒளியுடையவள் என்று அர்த்தம் கொள்ளலாம்" என்றேன். அவர் "உடனே அதெப்படி?" என்கிறார்.
"ஸ்ரீமதி என்றால் செல்வம் உடையவள், வசுமதி என்றால் வளம் உடையவள்(பூமாதேவி) என்றெல்லாம் பொருள் கூறுகிறார்கள், அதனால் பானு என்பதை ஒளி என்று கொண்டால் பானுமதி  என்றால் ஒளி உடையவள் என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும்" என்றேன். 

அன்று முதல் எனக்கு என் பெயர் மிகவும் பிடித்து விட்டது. பானுமதி - ஒளியுடையவள் ஆஹா! எத்தனை பொருள் பொதிந்த பெயர்! அதுவும் எப்படிப்பட்ட ஒளி? தான் மாறாமல், தன் ஓளி எதன் மீது படுகிறதோ அந்தப் பொருளை தன் இயல்புக்கு மாற்றும் தன்மை கொண்டதாம் பானு என்னும் ஒளி என்று வேளுக்குடி கிருஷ்ணன் ஒரு முறை கூறினார். என் பெருமை இன்னும் கூடிவிட்டது. 

எங்களுக்கு மகன் பிறந்த பொழுது, என் கணவர் அவருடைய தந்தையின் பெயரான கிரிஷ்ணமூர்த்தியிலிருக்கும் கிருஷ்ணனோடு  சாயி பக்தர்களானதால்  சாய் என்பதை சேர்த்து சாய்கிருஷ்ணன்  என்னும் பெயரை தேர்ந்தெடுத்து விட்டு, வினு என்று கூப்பிடலாம் என்றார். அதற்கு அவர் கூறிய காரணம் வெங்கடேஸ்வரனில் இருக்கும் வி, பானுவில் இருக்கும் னு இரண்டையும் சேர்த்து வினுவாம். என்னிடம் உன் விருப்பம் என்ன? உனக்கு இந்த பெயர் பிடித்திருக்கிறதா? என்ற ஆலோசனை யெல்லாம் கிடையாது. அது எனக்கு கொஞ்சம் வருத்தம்தான். அதை சொல்லிக்கொண்டே இருந்ததால் மகள் பிறந்த பொழுது பெயரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை என்னிடமே விட்டு விட்டார். 

எனக்கு பொன்னியின் செல்வனில் வரும் நந்தினி கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும். அதனால் நந்தினி என்று பெயர் வைக்க விரும்பினேன். ஆனால் நியூமராலஜி கைகொடுக்காததால் சுபாஷிணி என்னும் பெயரை தேர்ந்தெடுத்தேன். சுபாஷிணி என்றால் இனிமையாக பேசுகிறவள் என்று பொருள். அவள் அப்படிதான். மிகவும் தன்மையாகவும்,இனிமையாகவும் பேசுவாள். கோபத்தில் கூட நிதானமிழந்து வார்த்தைகளை கொட்ட மாட்டாள். 

அவளுடைய முதல் மகள் பிறந்தபொழுது அந்த குழந்தைக்கு சாய் ஷிவானி என்ற பெயரை  அவளுடைய மானார் தேர்ந்தெடுத்தார். காரணம் என் மகள் முதல் முதலாக வங்கியில் வேலை கிடைத்து சென்ற ஊர் திருவண்ணாமலை. திருமணமாகி சில மாதங்கள் அங்குதான் இருந்தாள். அதனாலோ என்னவோ என் மகளுக்கு  திருவண்ணாமலை மீது ஒரு தனி பற்று உண்டு.  குழந்தையின் நட்சத்திரம் சிவனுக்குகந்த  திருவாதிரை. எனவே சாய் ஷிவானி! 

என் மகனுக்கு சென்ற வருடம் சியாமளா நவராத்திரியில் பெண் குழந்தை பிறந்ததால் சரஸ்வதியின் பெயரோடு ஸ்ரீ சேர்த்து இருக்க வேண்டும் என்று நினைத்தோம். சரஸ்வதி அஷ்டோத்திரத்தை  படித்த பொழுது ரிதன்யா என்னும் பெயர் எனக்கு பிடித்தது. அதற்கு முன்பே நான் பேத்தியாக இருந்தால் எங்கள் ஊர் தெய்வமான ஹேமாம்பிகா என்னும் பெயரை வைக்க வேண்டும் என்றும், பேரனாக இருந்தால் ஹேமந்த் என்று பெயரிட வேண்டும் என்றும் நினைத்திருந்தேன்.  அக்ஷரா என்னும் பெயர் என் மருமகளின் பெற்றோர்களுக்குப் பிடித்தது. மருமகளின் தேர்வு நவ்யா. ஆக நான் விரும்பிய ஹேமாம்பிகா, சம்பந்திகளின் தேர்வான அக்ஷரா, என்ற இரு பெயர்களோடு மகன் மருமகளின் விருப்பமான நவ்யா என்பதோடு ஸ்ரீ சேர்த்து நவ்யாஸ்ரீ என்று மூன்று பெயர்களிட்டோம். நவ்யாஸ்ரீதான் அஃபிஷியல்!

பிடித்த பெண் பெயர்கள் 
ஹேமா 
பூர்ணா
அபர்ணா 
ராதிகா  

ஆண் பெயர்கள் 
க்ருத்திவாசன் 
வகுளாபரணன் 
ஆராவமுதன் 

        
 
  
      


                                

27 comments:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. பெயர் காரணங்கள் குறித்து தங்களது ஸ்வாரஸ்யமான அலசல்களை நானும் ஸ்வாரஸ்யமாக படித்து ரசித்தேன்.

    /பானுமதி என்றால் துரியோதனன் மனைவி என்று ஏன் நினைக்க வேண்டும்? பானு என்றால் சூரியன், மதி என்றால் அறிவு, சூரியனைப் போல் பிரகாசிக்கும் அறிவை உடையவள் என்று எடுத்துக் கொள்ளலாமே? அல்லது பானு என்பதை ஒளி என்று கொண்டால் பானுமதி என்பதற்கு ஒளியுடையவள் என்று அர்த்தம் கொள்ளலாம்" என்றேன். /

    நல்ல விளக்கம். இறுதியில் உங்களுக்கு பிடித்த ஆண், பெண் பெயர்களும் நன்றாக உள்ளது.

    அந்த காலத்தில் தங்கள் பெற்றோர்களின் பெயரை வைத்து பின் அதைச் சொல்லி அழைக்க முடியாமல், அழைப்பதற்காக வேறு பெயர்களை செலக்ட் செய்வார்கள். இப்போது காலங்கள் மாறி விட்டன. குழந்தைகளின் பெயர்களை தேர்ந்தெடுப்பது அக் குழந்தையின் அன்னை தந்தையின் விருப்பமாக ஆகி விட்டது. பெயரில் என்ன இருக்கிறது..? நல்ல வளங்களோடு குழந்தைகள் சுபிட்ஷமாக வாழ்ந்தால் நல்லதுதானே.... என்பதுதான் என் கருத்தும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. முன்பெல்லாம் அதாவது நம் தலை முறை வரை வீட்டு பெரியவர்கள் தான் பெயரை முடிவு செய்வார்கள். இப்போது நமக்கு ஒரு சாய்ஸ் கொடுக்கிறார்கள், ஆனாலும் அஃபிஷியல் பெயரை அவர்கள்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி கமலா.

      Delete
  2. பெயர் விளக்கம் வெகு சுவாரஸ்யமாக இருந்தது மேடம்.

    எனது ஐயா எனக்கு கில்லர்ஜி என்று நாமம் சூட்டி இருப்பதின் அர்த்தத்தை ஆராய தோன்றுகிறது...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜி. கில்லர்ஜி என்பது உங்கள் குலதெய்வத்தின் பெயர் என்று நீங்கள் முன்னர் எழுதியிருந்தது போல நினைவு.

      Delete
  3. பெயர் பற்றிய பதிவு நல்லா இருக்கிறது.

    பெரும்பாலும் கூப்பிடும் பெயர்தான் பெற்றோர்கள் வைக்கறாங்க. சர்மா, அவரவர் பெற்றோரின் பெயராக ஆகிவிடுகிறது. என் அப்பா, தன் பெயரை வைக்காமல் திருக்கோஷ்டியூர் பெருமாள் நினைவாக (அதில் பாதி அப்பா பெயர்) அவர் பெயரை வை என்று சொன்னார்.

    அது சரி... உங்களுக்குப் பிடித்த ஆண்கள் பெயரெல்லாம் ஐயங்கார்கள் வைக்கும் பெயராக இருக்கிறதே

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லை. க்ருத்திவாசன் என்பது சிவனின் பெயர். பாலசந்தர் என்னும் விநாயகரின் பெயரும் பிடிக்கும்.வகுளாபரணன், ஆராவமுதன் என்பவை பெருமாளின் அழகான தமிழ் பெயர்கள்.

      Delete
  4. ஒரு நண்பன், அவனது பெண் குழந்தைக்கு கணிணிஸ்ரீ என்று பெயர் வைத்தானாம் (அவன் computer field. வித்தியாசமான பெயராக இருக்கணும்னு).

    என் பெண், சின்ன வயசில் அவள் தம்பியோடு விளையாடும்போது, அவளுக்கு ஸ்வேதா டீச்சர், பையனுக்கு பாலு என்று வைத்து விளையாடுவாள் (எல்லாம் ஒட்டுக்கேட்டதுதான்)

    ReplyDelete
    Replies
    1. கணிணிஸ்ரீயா? நல்ல வேளை கணிணி.காம் என்று பெயர் வைக்கவில்லை. அவர் சமையல்காரராக இருந்திருந்தால் வெங்கலப்பானை, அடுப்பு என்று பெயர் வைத்திருப்பாரோ?

      Delete
  5. எனக்கெல்லாம் யாருக்கும் பெயர் வைக்கும் வாய்ப்பேக் கிடைக்கலை. பெண்ணும் சரி, பிள்ளையும் சரி அவரவர் குழந்தைகளுக்கு அவங்க அவங்க தேர்ந்தெடுத்த பெயர் தான். பெரிய பேத்திக்குப் பூஜா, அப்புவுக்கு அஞ்சலி என்று பெயர் பெண்ணும், மாப்பிள்ளையும் தேர்ந்தெடுத்தது. குட்டிக் குஞ்சுலுவுக்கு துர்கா என்னும் பெயர் குழந்தையை துர்கை அரணாக இருந்து காப்பாற்றித் தர வேண்டும் என்பதற்காக எங்க மருமகள் தேர்வு செய்த பெயர். எல்லோருக்கும் அந்த ஒரு பெயர் தான்.

    ReplyDelete
    Replies
    1. பெண்ணும் சரி, பிள்ளையும் சரி அவரவர் குழந்தைகளுக்கு அவங்க அவங்க தேர்ந்தெடுத்த பெயர் தான்// இப்போதெல்லாம் அப்படித்தான்.

      Delete
  6. முன்னர் ஒரு தரம் வலைப்பக்கங்களின் பெயரையும், பெயர்க்காரணங்களையும் பற்றி எழுதும் தொடர் பதிவு சுற்றிக் கொண்டிருந்தது சில மாதங்களுக்கு. அநேகமாய் எல்லோரும் எழுதினோம். ரேவதி அவங்களுக்கு வைச்ச பெயர் "ஆண்டாள்" எனவும் பள்ளியில் அவங்களாகப் பெயரை ரேவதி என மாற்றிக் கொண்டதாகவும் சொல்லி இருந்த நினைவு.

    ReplyDelete
    Replies
    1. வல்லி அக்காவின் நாச்சியார் என்ற பெயரும் எனக்கு பிடிக்கும். என் பாட்டியின் பெயர் நாச்சியார். என் பாட்டி பிறந்த ஊரான பூதலூரின் காவல் தெய்வம் நாச்சியார் அம்மன் அதனால் அப்பொழுது அந்த பெயரிட்டார்கள்.

      Delete
    2. பூதலூர் என்றதும் நினைவில் வந்தது. இப்போது என் தம்பி பிள்ளையின் மாமியார் பூதலூர் கிருஷ்ணமூர்த்தி (வித்வான்)அவர்களின் சொந்தப் பேத்தியாம். இன்னும் சில உறவினர்களும் பூதலூரில் இருக்கின்றனர்.

      Delete
  7. என்னடா, மத்யமரில் கட்டுரை வேறு மாதிரி படித்தோமே என்று பார்த்தேன்.  முற்சேர்க்கையாக கொஞ்சம் இணைத்திருக்கிறீர்களா?

    ReplyDelete
    Replies
    1. எங்கள் ப்ளாகில் இணைவதற்கு முன்பு நான் எழுதிய கட்டுரை அது. மீள் பதிவு என்று குறிப்பிட்டிருக்கிறேனே?

      Delete
  8. வித்தியாசமான பெயர்கள் கொண்டவர்கள் பற்றி எங்கள் பிளாக்கில் நான் கூட ஒன்று எழுதி இருந்தேன் முன்பு.  கோமேதகவேலும் ராவணன் என்றெல்லாம் நண்பர்கள் இருந்தார்கள்.  பதினெட்டு என்று ஒருவர்.  போதும்பொண்ணு என்று ஒருவர்...  இப்படி...

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீரங்கத்தில் கூட ராவணன் என்று ஒரு பால்காரர் உண்டு. என் தோழியின் மாப்பிள்ளை பெயர் ராவணேஷ்.

      Delete
  9. என்  இரண்டாவது பையன் பெயரை பெரிய பையன்தான் வைத்தான்.  அவன் பேயோரோடு அது ரைமிங்காக இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. ராகுல்,கோகுல்.//என் இரண்டாவது பையன் பெயரை பெரிய பையன்தான் வைத்தான்.// பெரும்பாலும் அப்படித்தான்.

      Delete
  10. ஆறாவது என்பதால் முருகனுக்குப் பதிலாக பாலன் என்று ஆரம்பித்து, அம்மாவின் (தனலட்சுமி) 'தன'த்தையும் சேர்த்து தனபாலன் ஆகி விட்டார்கள்...

    ReplyDelete
    Replies
    1. தனத்தின் மகன் என்றும் பொருள் வருகிறதே..? நல்ல தேர்வு.

      Delete
  11. பானுக்கா பதிவு சூப்பர்.

    என் பெயர்க்காரணத்தை ஏற்கனவே ஓரிரு கருத்துகளில் சொல்லியிருப்பதால் மீண்டும் இங்கு ரிப்பீட்டு பண்ணவில்லை.

    சிறப்பு விருந்தினராக வந்திருந்த சாரு நிவேதிதா(இவர் நீயா நானாவின் நிலைய வித்வான்) //

    ஹாஹாஹா அதே. இவரும் புலம்பியிருந்தாரே பணம் ஒழுங்காகத் தருவதில்லை நள்ளிரவும் தாண்டி ப்ரோக்ராம் நீளும் என்றெல்லாம்...ஏதேதோ வழக்கமான புலம்பல்கள் சொல்லியிருந்தது வாசித்த நினைவு

    கீதா

    ReplyDelete
  12. உங்கள் பெயருக்கான விளக்கத்தை நான் சொல்ல நினைத்தேன் நீங்களே சொல்லியிருக்கீங்க. உங்கள் பெயர் ஏன் பானுமதி என்று கேட்டவர் ஏன் அப்படி நினைத்தாரோ தெள்ளத் தெளிவான பொருளுடன் இருக்கும் உங்கள் பெயரை!!

    கீதா

    ReplyDelete
  13. எங்கள் ஊரில் கண்டிப்பாக திருவாழி, பூதலிங்கம் (பூதப்பாண்டி கிராமம்) சங்கரன், தாணு, சிவதாணு (சுசீந்திரம் இறைவன் பெயர்) பத்மனாபன் (அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானம் அல்லவா), போன்ற பெயர்கள் கணிசமாக இருக்கும். குமரி, இசைக்கியம்மை போன்ற பெண் பெயர்கள். இப்போது எல்லாம் மாறிவிட்டது.

    அது போன்று கேரளத்தில் ஒரு சாரார் விஷ்ணுவின் பெயர்களையும் ஒரு சாரார் சிவனின் பெயர்களையும் வைப்பதுண்டு என்றாலும் விஷ்ணுவின்/குருவாயூரப்பனின் பெயர்கள் அதிகமாக இருக்கும் ஒரு காலத்தில். கேசவன், மாதவன், பத்மநாபன், கிருஷ்ணன் (அவரவர் சமூக அடையாளப் பெயர்களுடன்) என்றாலும் ஊரின் பெயரும் முதலில் தொடங்கும்படியும் பலருக்கும் இருக்கும். அது போல குட்டன் என்பது ஆணின் பெயரில் கடைசியில் இருந்தாலும் குட்டி என்பதும் ஆணிற்கும் பெண்ணிற்கும் பெயரின் முடிவில் இருக்கும்.

    எங்கள் வீட்டிலேயே கூட நாங்கள் ஒருவருக்கொருவர் குட்டி என்று விளித்துக் கொள்வது சகஜம்.

    கீதா

    ReplyDelete
  14. வெளிநாட்டில் நம் பெயர்கள் படும் பாடும் திரிபு ஆவதும் சகஜம். ராஜலக்ஷ்மி - ராஷ்மி. கிருஷ்ணன் - க்ருஷ். மூர்த்தி - மூர்ட்டி....சிலது நீங்களே சொல்லிவிட்டீர்கள். ஏனோ கஷ்டம் என்பார்கள். அவர்கள் பெயரை நாம் உச்சரிக்கக் கஷ்டப்படுவோமே.

    கீதா

    ReplyDelete
  15. நியூமராலஜி என்று சொல்ல வந்தேன் நீங்களே சுபாவின் பெயர்க்காரணம் சொல்லிவிட்டீர்கள்.

    உங்கள் பேத்திக்கு உங்களின் பெயர் சாய்ஸ் ரொம்ப ரொம்பப் பிடித்தது ஹேமாம்பிகா!!

    முன்பு வீட்டுப் பெரியவர்களின் பெரும்பாலும் தாத்தா பாட்டி பெயர்களை வைத்து அதை அஃபிஷியலாகவும் கூப்பிட வேறு இறைவன்/இறைவி பெயராகவும் வைப்பது வழக்கம்.

    ரொம்ப சுவாரசியமான பதிவு பானுக்கா.

    கீதா

    ReplyDelete
  16. வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி கீதா. சில தலைப்புகள் எல்லோரையும் யோசிக்க வைக்கும். மத்யமரில் கூட வழக்கத்தை விட அதிகமானவர்கள் பதிவிட்டிருக்கிறார்கள்.

    ReplyDelete