கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, June 10, 2016

பழையன விரும்பு!

பழையன விரும்பு!

ஒரு காலத்தில் புழக்கத்தில் இருந்து இன்று வழக்கொழிந்து போன சில விஷயங்கள், உங்களுக்கு பரிச்சயமா? பாருங்கள்..




வண்ணான் கூடை:

நான் சிறுமியாக இருந்த காலத்தில் பெரும்பாலும் பலர் வீடுகளில் இருந்த விஷயம் இது. சலவைக்கு போடா வேண்டிய துணிகளை இந்த கூடையில் சேர்த்து வைப்பார்கள். வண்ணான் ஒவ்வொரு புதன் கிழமை அல்லது சனிக் கிழமை வந்து சாவை செய்த துணிகளை கொடுத்து விட்டு, துவைக்க வேண்டிய துணிகளை எடுத்துச் செல்வார். 

கல் சட்டி: 



கச்சிட்டி என்று வழக்கு மொழியில் அறியப்படும் பொருள். இதில் வைக்கப் படும் வற்றல் குழம்பு தனி சுவை. அதைத் தவிர சாதாரண சாம்பார், அரைத்து விட்ட சாம்பார், கூட்டு போன்றவையும் சமைக்கலாம். கெமிகல் ரிஆக்ஷன் இல்லாததால் உணவு சுவை மாறாமல் இருக்கும். ஆனால் வாங்கியவுடன் உடனே அடுப்பில் ஏற்றி விட முடியாது,பழக்க வேண்டும். பழகிய கல் சட்டி பல வருடங்கள் இருக்கும். இப்படி மாமியார் பழக்கி பயன் படுத்தி வந்த கல் சட்டியை  மருமகள் உடைத்து விட்டால் உள்நாட்டு போர் மூளும் அபாயம் உண்டு. இப்பொழுதும் ஸ்ரீரங்கத்தில் கிடைக்கிறது. எப்பொழுது போய் கேட்டாலும், "கல் சட்டி எல்லாம் வரதே இல்லீங்க" என்றபடியே உள்ளே அடுக்கி வைத்திருப்பதிலிருந்து எடுத்து தருவார். 

இரும்பு தோசைக் கல்:

இப்போதெல்லாம் பெரும்பாலானோர் நான் ஸ்டிக் தாவாவில் தான் தோசை வார்கின்றனர். எங்கள் வீட்டில் தோசைக் கல்லில் வார்க்கப்படும் தோசைக்குதான் வரவேற்பு. தோசைக் கல்லும் ஸ்ரீரங்கத்தின் சிறப்பு ஐடெம். நானும் என் சகோதரிகளும் ஒவ்வொரு முறை ஸ்ரீரெங்கம் செல்லும் போதும் காவேரியில் குளிப்பது, ரெங்கநாதரை சேவிப்பது இவை தவறலாம், ஆனால் தோசைக் கல்லோ, இலுப்பை கரண்டியோ(தளிக்கும் கரண்டி), இரும்பு சட்டியோ வாங்குவது தவறாது. என் அண்ணா ஒரு முறை "நீங்கள் தோசை கல் வாங்குவதை இன்னும் நிறுத்தவில்லையா"?. என்று கேட்டார். 

வெண்கலப் பானை:

ஒரு காலத்தில் இதில்தான் சாதம் வடித்துக் கொண்டிருந்தோம். குக்கர் என்ற ஒன்று வந்ததும் இதை பரணில் போட்டு விட்டோம். அரிசி உப்புமாவை வெண்கலப் பானையில் செய்தால் அதன் ருசியே தனி..!

அம்மி:




முன்பெல்லாம் தேங்காய் துவையல் போன்றவற்றை இதில்தான் அரைத்துக் கொண்டிருந்தோம். அம்மியில் அரைப்பது என்பதெல்லாம் இந்த தலைமுறை அறியாத ஒன்று. 

இதையெல்லாம் பயன் படுத்துவதால் என்னை பழமைவாதி என்று கருதி விடாதீர்கள். 

3 comments:

  1. இப்போதும் பொங்கல் அன்று வெண்கலப்பானையில்தான் பொங்கல் வைப்பாள் என் மனைவி நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பொருள்கள் எல்லாமே பரிச்சயமானவை. உங்களுக்குத் தெரியுமா பதிவர்களில்பெரும்பாலோர் அறுபதுகளிலோ ஐம்பதுகளின் கடைசியிலோ இருப்பவர்கள் இந்தப் பொருட்கள் பற்றித் தெரிந்து வைத்திருப்பார்கள்

    ReplyDelete
  2. வாங்க அண்ணா! உண்மைதான்! இன்றைய இளைய தலை முறையினருக்கு இதெல்லாம் தெரியுமா என்பது சந்தேகம்தான்! டில்லியில் பிறந்து வளர்ந்த என் மருமகள் இதையெல்லாம் புதிதாக பார்த்தாள்.

    ReplyDelete
  3. ji are you aware that in certain star hotels even now AMMI KUZHAVI is being used for preparing dishes

    ReplyDelete