கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, July 10, 2016

வேலை வேலை வேலை

வேலை வேலை வேலை 

"வித்யா வந்தாச்சு, நீ பேசறயா, நான் பேசட்டுமா"? கணேஷ் தன் மனைவி கீதாவிடம் மெல்லிய குரலில் கேட்டார்.

"நானே பேசறேன், நீங்க ஏதாவது சொல்லப் போக பிரச்சனை ஆகிடப்போகுது.." பேசிக்கொண்டே ஒரு தட்டில் வித்யாவுக்காக ரெண்டு பிஸ்கேட், கொஞ்சம் மிக்சர் எடுத்து வைத்துக் கொண்டு, காபியும் கலந்து எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வருவதற்கும், வித்யா உடை மாற்றி, முகம் அலம்பிக் கொண்டு வருவதற்கும் சரியாக இருந்தது.

அம்மாவிடமிருந்து தட்டை வாங்கி கொண்டு, டி.வி. ரிமோட்டை கையில் எடுத்துக் கொண்டு சேனலை மற்றது துவங்க, அருகில் அமர்ந்து கொண்ட கீதா,
"உனக்கு கல்யாணம் நிச்சயமாகி விட்டது"

"ஆமாம்"

"இனிமே கொஞ்சம் பொறுப்பா இருக்கணும்"

"என்ன பண்ணனும்"?

"வீட்டு வேலையெல்லாம் செய்ய கற்றுக் கொள்"

"என்ன வேலை"?

"வீட்டை க்ளீன் பண்ணுவது, மாப் போடுவது, வாஷிங் மெஷினில் துணி துவைக்க போடுவது, துணி உலர்த்துவது, இப்படி சின்ன சின்ன வேலைகள் எல்லாம்"

"இதுக்கெல்லாம் வேலைக்காரி கிடைக்க மாட்டாளா"?

"என்னதான் வேலைக்காரி இருந்தாலும் நமக்கும் செய்யத் தெரியணும்"

"ஓ.கே."

"அப்புறம் இப்படி ஆபிசிலிருந்து வந்தவுடன் அம்மா காபி கலந்து நீட்டுவது போல கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. காபி போட கத்துக்கோ, அதோட மட்டுமில்ல, குக்கர் வைக்க, சிம்பிளா ஒரு வற்றல் குழம்பு, ரசம் வைக்க கற்றுக் கொள்".

அம்மா சொல்வதை எல்லாம் புன்னகையோடு கேட்டுக்கொண்டு, "அது சரிம்மா, எல்லா வேலையையும் நானே செய்து விட்டால் வீட்டில் பெண்டாட்டி என்று ஒருத்தி இருப்பாளே,அவள் என்னதான் செய்வாள்"? என்றான் வித்யா என்னும் வித்யாசாகர்.

"ரெண்டு பேரும் வேலைக்கு போறீங்க, உனக்கு எவ்வளவு டயர்ட் நெஸ் இருக்குமோ அவளுக்கும் அதே அளவு ட்யர்ட்னெஸ் இருக்கும்டா, புரிஞ்சு நடந்துக்கோ" என்றாள் கீதா.

"சரி, சரி இப்போ இந்த காபி கப்பை நான்தான் கொண்டு போய் சிங்கில் போட வேண்டுமா"?

"முடிந்தால் கழுவி வைத்து விடேன்" என்றால் 21ம் நூற்றாண்டு  பிள்ளையைப் பெற்ற அம்மா. 


14 comments:

  1. உண்மைதான். எல்லாம்
    கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நான்லாம் அந்தக் காலத்திலேயே கற்றுக்கொண்டவனாக்கும்!

    வித்யாசாகர் என்பதை நான் வித்யாபதி என்று யூகித்திருந்தேன்!!

    ReplyDelete
    Replies
    1. நிறைய படிப்பபவர்கள் சுலபமாக யூகிக்கக் கூடியதுதான். வருகைக்கு நன்றி!

      Delete
    2. நல்ல அம்மா. வாழ்த்துகள்.

      Delete
    3. வீட்டில் சமையலறையே வேண்டாம் என்று ஒருவர் பதிவிட்டிருக்கிறார் ஆணுக்குப் பெண் சமம் என்பது போய் பெண்ணுக்கு ஆண் சமம் என்றாகும் .

      Delete
    4. பல ஆண்கள் ஏற்கெனவே மனைவிமாருக்குப் பல வகையிலும் உதவிக் கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால் இன்றைய இளைஞர்கள் முன் கூட்டியே பேசி வைத்துக் கொள்கின்றனர். நீ இந்த வேலையைச் செய், நான் இந்த வேலையைச் செய்கிறேன் என்று! ஆகவே பிரச்னை ஒன்றும் வராது! :)

      Delete
    5. @வல்லி சிம்ஹன்: வருகைக்கு நன்றி!

      Delete
    6. @GMB:ஆணுக்கு பெண்ணோ,பெண்ணுக்கு ஆணோ, இருவரும் சமமாக இருப்பது நலம்தானே? வருகைக்கு நன்றி!

      Delete
    7. @கீதா சாம்பசிவம்: நீங்கள் சொல்வதை முழுமையாக ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை,மறுக்கவும் முடியவில்லை. வருகைக்கு நன்றி!

      Delete
    8. எனக்குத் தெரிஞ்சு இப்போதைய ஆண்கள் எல்லாவற்றுக்கும் ஈடு கொடுக்கின்றனர். தெரிந்த ஒரு குடும்பத்தில் கணவனுக்குச் சரியான வேலை இல்லை. கிட்டத்தட்ட நான்கு வருஷமாக அவ்வப்போது கிடைக்கும் வேலைகளை வீட்டில் இருந்தவண்ணம் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் மனைவிக்கு நல்ல வேலை, நல்ல சம்பளம். இவர் வீட்டையும் பார்த்துக் கொள்வதால் மனைவி வேலைக்குச் செல்கையில் மன நெருடல் இல்லாமல் செல்ல முடிகிறது என்று சொல்லலாம். குழந்தையைப் பார்த்துக் கொள்வதிலிருந்து எல்லாமும் கணவன் பொறுப்பே! நூற்றுக்கு எழுபது சதம் இளைஞர்கள் இப்போது இந்த மனோநிலையில் தான் இருக்கிறார்கள் என்பது என் கருத்து. :)

      Delete
    9. என்னைப் பொறுத்தவரை இந்த சமம் என்பதெல்லாம் அவரவர் மனதில் தான். என்றானாலும், எப்படியானாலும் பெண் பெண் தான். ஆண் ஆண் தான்! அவரவருக்கு என உள்ள இயற்கை நியதிகளை எவராலும் மாற்ற முடியாது. பெண் தன்னைப் பெண்ணாக உணர்ந்து நடந்து கொண்டாலே போதும். அதே போல் ஆணும் தன்னை ஒரு மனிதனாக உணர வேண்டும். ஆணாக உணரக் கூடாது! :) அப்போது தான் மனைவியை மதிப்பான்.

      Delete
    10. உண்மைதான்! எந்த காலத்திலும், எந்த இடத்திலும் பெண் பெண்தான், ஆண் ஆண்தான். அந்த இயற்கை நியதியை மாற்ற முடியாது, மாற்றக் கூடாது. ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருந்தால் இயங்க முடியுமா? ஆனால் ஒன்று உயர்வு, ஒன்று தாழ்வு என்பது கிடையாது. வேற்றுமையை மதிக்க கற்றுக் கொள்வதுதான் வாழ்க்கை. பெண்ணின் வேலையை ஆண் பகிர்ந்து கொள்ளும் போது பெண் இரட்டை குதிரை சவாரி செய்யத் தேவை இருக்காது.

      Delete
  2. அருமை, உண்மையை யதார்த்தமாக தங்கள் பாணியில் கதையாகக் கூறியுள்ளீர்கள். இப்படி வித்யா ஆணாக மாறுவாள் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. எழுத்தில் நடையோட்டமிருக்கிறது, சிறுகதை எழுதினால் சிறப்பாக இருக்கும். வாழ்த்துகள்!

    வாழ்க்கைக்கு வேண்டியதைக் கற்றுக் கொள்வதில் தவறே இல்லை. இன்றைய ஆண்பிள்ளைகளுக்கு நிச்சயம் அவசியம்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி! சிறு கதைக்கான சில கருக்கள் மனதில் இருக்கின்றன. எழுத ஆசை, பார்க்கலாம்..!

      Delete
    2. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி! சிறு கதைக்கான சில கருக்கள் மனதில் இருக்கின்றன. எழுத ஆசை, பார்க்கலாம்..!

      Delete