கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, November 26, 2016

தொடரும் நட்பு!

தொடரும் நட்பு!

நமக்கு அமையும் பெற்றோர்களை நாம் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால் நண்பர்களை தேர்ந்தெடுக்க முடியும். அப்படி அமையும் நண்பர்களுக்கு நம் வாழ்க்கையையே மாற்றும் வல்லமை உண்டு. 

உதவாக்கரை என்று வீட்டில் உள்ளவர்களால் கரித்து கொட்டப்பட்டவர் குடும்பத்தையே தூக்கி நிறுத்துபவராக மாறலாம், மிகச் சிறந்த குழந்தை என்று கொண்டாடப்பட்ட குழந்தை உதவாக்கரை ஆகலாம். இதைத்தான் பூவுடன் சேர்ந்த நாரும் மணம் பெரும், பன்றியுடன் சேர்ந்த கன்றும் மலம் தின்னும் என்னும் சொலவடை கூறுகிறது. 

ஆடை இழந்தவனுக்கு கைகளை போல நண்பனுக்கு ஆபத்து என்றல் ஓடி வந்து உதவ வேண்டும் என்று நட்புக்கு இலக்கணம் கூறுகிறது திருக்குறள். ஆனால் பெரும்பான்மையோர் நண்பனுக்கு ஆபத்து என்று தெரிந்தால் ஓடிப் போய் விடுவார்கள். 

நண்பர்களை மூன்று விதமாக பிரிக்கலாமாம். கடைசி வகை நண்பர்கள் வாழை மரம் போன்றவர்கள். வாழை மரத்திற்கு தினமும்  தண்ணீர் பாய்ச்ச வேண்டும், பூச்சி அரிக்காமல் பாதுகாக்க வேண்டும், கொஞ்சம் வேகமாக கற்று அடித்தால் வாழை மரம் சாய்ந்து விடும், சாயாமல் இருக்க முட்டு கொடுக்க வேண்டும். அப்பொழுதான் பலன் கொடுக்கும், அதுவும் ஒரு முறைதான். இது போல தினசரி பார்த்து, பேசி பழகி பராமரித்தால்தான் சிலருடைய நட்பை பாதுகாக்க முடியும். 






மத்திம வகை தென்னை மரம் போன்றவர்கள். தென்னை மரத்திற்கு அவ்வப்பொழுது தண்ணீர் பாய்ச்சினால் போதும். வருடக் கணக்கில் பலன் கிடைக்கும். இது மாதிரி சிலரோடு அவ்வப்பொழுது தொடர்பில் இருந்தால் போதும் நட்பு நீடிக்கும்.  

முதல் தர நண்பர்கள் பனை மரம் போன்றவர்கள். பனை மரத்தை யாரும் விதைப்பதில்லை. அதற்கு நீர் பாய்ச்ச வேண்டும் என்பதெல்லாமும் கிடையாது. பறவையின் எச்சத்தாலோ, அல்லது வேறு ஏதோ வகையில் தானே முளைக்கும் அது தன்னைத்தானே பராமரித்துக் கொள்ளும். இப்படி ஏதோ ஒரு சிறிய விஷயத்தில் தோன்றினாலும், எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி வளர்ந்து அபரிமிதமாக நன்மையையும் செய்வார்கள் இந்த வகை நண்பர்கள்.
எனக்கு மூன்று வகை நண்பர்களும் உண்டு. 

இராமாயணத்தில், நண்பனாக அறிமுகமான குகனையும், சுக்ரீவனையும், சகோதரனாகவே ஏற்றுக் கொள்கிறான் ராமன். வாலியை மறைந்து நின்று அவன் அம்பு எய்த பிறகு மரணப் படுக்கையில் இருக்கும் வாலி ராமனிடம் சில கேள்விகளை கேட்கிறான், அவற்றுள் ஒன்று, "உன் மனைவியை ராவணன் கவர்ந்து சென்று விட்டான், அவளை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக போயும் போயும் இந்த சுக்ரீவனோடு போய் நட்பு பூண்டிருக்கும் உன் சாதுர்யம் எனக்கு வியப்பாக இருக்கிறது. நான் ஒரு சொடக்கு போட்டால் ராவணன் உன் மனைவியை உன் காலடியில் கொண்டு வைத்து விடுவான், அப்படி இருக்க இந்த கோழையை எப்படி நண்பனாக்கிக் கொண்டாய்?" என்று கேட்க, அதற்கு ராமன், " உன்னோடு நான் எப்படி நட்பு பூண முடியும்? சுக்ரீவனும் நானும் ஒரே நிலையில் உள்ளவர்கள். நீயோ மாற்றான் மனைவியை கவர்ந்து வந்துள்ளவன், உனக்கு என்னுடைய வலியும் துயரமும் ஒரு போதும் புரியாது. நட்பு சமமான இருவருக்கிடையேதான் சிறப்பாக இருக்கும்." என்று பதில் கூறுகிறான்.   

அறிவு, அந்தஸ்து, சூழல், எண்ணம் போன்ற எதிலாவது சமமாக இல்லாத இருவர் நட்பு பூண்டால் அது நீடிக்காது என்பதற்கு புராணத்திலும், சரித்திரத்திலும் எண்ணற்ற சான்றுகள் உள்ளன. மிகச் சிறப்பான உதாரணம் மஹாபாரதத்தில் அரசன் துருபதனுக்கும், அந்தணர் துரோணருக்கும் இடையே இருந்த நட்பு. 

சிறு வயதில் குருகுலத்தில் ஒன்றாக படித்த பொழுது தோழர்களாகிறார்கள் இருவரும். பிரியும் பொழுது, அரசனான தன்னிடம் எந்த உதவி தேவை என்றாலும் அணுகலாம் என்று கூறி பிரிகிறான் துருபதன். கால் ஓட்டத்தில் வறியவராகி விட்ட துரோணர் தன மகனுக்காக ஒரு பசு மாட்டினை தன் தோழனான அரசன் துருபதனிடம் தானமாக பெற்று வரலாம் என்று அவனை நாடிச் செல்கிறார். நாடாளும் அரசனாக விளங்கும் தனக்கு ஏழையான பிராமணர் எப்படி நண்பராக இருக்க முடியும் என்று அவரை அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறான். இதனால் மனம் புண் பட்ட துரோணர், அர்ஜுனனிடம் குரு தக்ஷணையாக துருபதனை போரிட்டு வென்று, அவனை தேர்க்காலில் கட்டி இழுத்து வர வேண்டுகிறார். அர்ஜுனன் அப்படியே செய்ய, "நீ அரசன் என்ற மமதையில்தானே அன்று என்னை அவமதித்தாய், இன்று நீ என் அடிமை, நான் உனக்கு என் வசப்பட்ட ராஜ்ஜியத்தை பிச்சையாக போடுகிறேன், எடுத்துக் கொள்" என்று அவனை வேறு விதமாக அவமானப் படுத்த, அதை மனதில் வைத்து கருவிய துருபதன், அர்ஜுனனை மணந்து கொள்ள ஒரு மகளும், துரோணரை கொல்ல ஒரு மகனும் தனக்கு வேண்டும் என்று வேள்வி செய்து திரௌபதியையும், திருஷ்டதுய்மனையும் பெறுகிறார். 

ஆக மஹாபாரதத்தில் முக்கிய திருப்பங்களுக்கு காரணமாக அமைவது அந்தஸ்தில் சமமில்லாத இருவரிடையே உண்டான நட்பு.! அதே மஹாபாரதத்தில் சுயநல நோக்கோடு ஏற்பட்டது என்றாலும் கர்ணனுக்கும் துரியோதனனுக்கும் இடையே நிலவிய நட்பு ஒரு சிறப்பான இடத்தை வகிக்கிறது. தேரோட்டியின் மகனான கர்ணனை அரசனாக உயர்த்தி நண்பனாக்கிக் கொண்டு அதற்க்கு 100% நியாயம் கர்ப்பிக்கிறான் துரியோதனன்! அதற்கு விலையாக கர்ணன் தன் உயிரையே தருவது நட்பின் பரிமாணத்தை உயர்த்துகிறது.

புராணத்தை விட்டு விட்டு சரித்திர காலத்திற்கு வந்தால், கம்பனுக்கும் குலோத்துங்கனுக்கும் இடையே நிலவிய நட்பிற்கு வில்லனாக வந்தது அவர்கள் வாரிசுகளின் காதல். இங்கேயும் அந்தஸ்துதான் தடை. ஆனால், இந்த அந்தஸ்து கிருஷ்ண தேவராயருக்கும் தெனாலி ராமனுக்கும் இடையேயும், அக்பருக்கும் பீர்பாலுக்கும் இடையேயும் வரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

ஒளவையாருக்கும் அதியமானுக்கும் இடையே நிலவிய நட்பு ஆச்சர்யமானது. அந்த காலத்திலேயே ஒரு பெண்ணும் ஒரு ஆணும் நட்பு கொள்ள முடியும் என்று நிரூபித்த நட்பு. இதைப் போல மற்றொரு ஆச்சர்யமான நட்பு பிசிராந்தையாருக்கும், கோப்பெருஞ் சோழனுக்கும் இடையே நிலவிய நட்பு. 


பாண்டிய நாட்டில் வாழ்ந்த பிசிராந்தையாரும், சோழ மன்னனான கோப்பெருஞ்சோழனும் ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே நட்பு கொள்கின்றனர்.  இறுதி காலத்தில் தன் புதல்வர்களின் செயலால் மனமொடிந்த கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்து உயிர் விடத் துணிகிறார். அப்போது, தான் வடக்கிருந்து உயிர் விடத் துணிந்திருப்பது தெரிந்தால் தன் நண்பரான பிசிராந்தையார் நிச்சயம் தன்னை காண வருவார், தன்னுடன் அவரும் வடக்கிருந்து உயிர் விடுவார் என்று தனக்கு அருகில் தன் நண்பருக்கும் ஒரு ஆசனத்தினை தயாராக வைத்து காத்திருக்கிறார். அதைப் போலவே இந்த செய்தியை கேள்விப் பட்ட பிசிராந்தையார் பாண்டிய நாட்டிலிருந்து உறையூருக்கு வந்து கோப்பெருஞ் சோழனோடு வடக்கிருந்து உயிர் நீக்கினார் என்பது ஆச்சர்யமூட்டும் விஷயம்.



மிகச் சமீபத்தில் மூதறிஞர் ராஜாஜியும், பெரியார் ஈ.வே.ரா.வும் கருத்தாலும்,கொள்கையாலும் மாறுபட்டாலும் சிறந்த நண்பர்களாகவே விளங்கினர். ராஜாஜி மரணமடைந்த பொழுது, அவருடைய இறுதிச் சடங்குகளை  தள்ளாத வயதிலும், வீல் சேரில் அமர்ந்தபடி கண்களில் தாரை தாரையாக நீர் வழிய பார்த்துக் கொண்டிருந்தார் பெரியார். அப்படிப் பட்ட தலைவர்களை இனிமேல் பார்க்க முடியுமா? 

ஒரு சீன பழமொழி உங்கள் குழந்தைகளை பத்து வயது வரை இளவரசனைப் போல நடத்துங்கள், பதினெட்டு வயது வரை அடிமையை போல நடத்துங்கள், அதற்குப் பிறகு நண்பனைப் போல நடத்துங்கள் என்கிறது. ஆனால் வேறு சிலர் குழந்தைகளுக்கு நண்பர்கள் வெளியில் நிறைய பேர் கிடைப்பார்கள், பெற்றோர்கள் ஒருவர்தானே இருக்க முடியும், எனவே நான் என் குழந்தைகளுக்கு பெற்றோராகவே இருக்க விரும்புகிறேன் என்கிறார்கள். என்னுடைய கேள்வி, நாம் நண்பர்களாக நடத்தினாலும் அவர்கள் நம்மை நண்பனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமே?
    
இந்து மதம் கடவுளிடம் செலுத்தும் பக்தியில் ஒன்பது விதங்களைக் கூறி, அதில் ஒன்று 'சக்யம்' என்கிறது. அதாவது கடவுளை தோழனாக கருதுவது. அர்ஜுனன் கிருஷ்ணனிடம் செலுத்திய பக்தி இந்த வகையைச் சார்ந்தது. சைவ சமய குரவர்கள் நால்வரில் சுந்தரர் இந்த வகை பக்தியைத்தான் சிவ பெருமான் மீது செலுத்தி தம்பிரான் தோழர் எனப்பட்டார்.

ஸோ, மனிதர்கள் முதல் கடவுள் வரை செல்லுபடியாகக் கூடிய நட்பு கொண்டாடப்பட வேண்டிய விஷயம்தானே ?    

என் வலைப்பூவில் நான் என் கணவரின் பள்ளித் தோழர்கள் சந்திப்பை பற்றி எழுதியிருந்தேன். அதைப் படித்து விட்டு 'எங்கள் ப்ளாக்' ஸ்ரீராம் நட்பை பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார். அதைப் படித்த பிறகு, நட்பை பற்றி யோசித்ததில் இந்த பதிவு உருவாயிற்று. மராத்தான் போல இது ஒரு ப்ளாகத்தான் ஆகி விட்டது. 

14 comments:

  1. ஒரு வியாசமே எழுதி விட்டீர்கள். நன்று. நான் 2009 இல் எழுதியதன் மீள் அது.

    ReplyDelete
    Replies
    1. எழுத தூண்டியது உங்கள் பதிவுதான். நன்றி!

      Delete
  2. நட்பு பற்றியும் உறவு பற்றியும் நிறையவே சிந்தித்திருக்கிறேன் பதிவும் எழுதி இருக்கிறேன் ஆனால் இப்போதெல்லாம் கண்ணில் படாத வரை நட்புகள் அரும்புவதில்லை. பல நட்புகளைக் கதைகளில் தான் காண முடிகிறது ஸ்ரீராம் எழுதி இருந்தார் நம்மைக் காணும்போது மகிழ்பவர் நண்பராய் இருக்கத் தோதுவானவர்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி!

      Delete
  3. விரிவான அருமையான
    தேவையான பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

      Delete
  4. நட்பு பற்றி விரிவான பகிர்வு. பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட்! நன்றி! வேலைச் சுமை குறைந்து விட்டதா?

      Delete
  5. தொடர் பதிவா? அது சரி, அம்பிகாபதி, அமராவதி காதல் உண்மைச் சம்பவமா? பல வருடங்களாக சந்தேகம்!

    ReplyDelete
  6. உண்மைதான். அம்பிகாபதி,அமராவதி,லைலா,மஜ்னு (சலீம்), ஆண்டனி,கிளியோபாட்ரா எல்லாமே உண்மைதான்.

    ReplyDelete
  7. நான் உன் சகோதரி. நீ எப்பொழுதும் சொல்லுவாய் நான் உன்னுடைய தோழி என்று. நம் நட்பை எதனுடன் ஒப்பிடுகிறாய்
    நட்பின் விளக்கம் Super

    ReplyDelete
  8. நான் உன் சகோதரி. நீ எப்பொழுதும் சொல்லுவாய் நான் உன்னுடைய தோழி என்று. நம் நட்பை எதனுடன் ஒப்பிடுகிறாய்
    நட்பின் விளக்கம் Super

    ReplyDelete
  9. Very Good.

    How to share this article in Whatapp?

    ReplyDelete