கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, November 4, 2016

முருகன் அவதாரம் - தெரியாத கதை

முருகன் அவதாரம் - தெரியாத கதை 




பிரம்மாவின் மானஸ புத்திரர்கள் நால்வரில் ஒருவர் சனத் குமாரர்.(மானஸ புத்திரர் என்றால் ஆண், பெண் சங்கமம் இன்றி மனதால் சங்கல்பித்ததால் பிறந்தவர் என்று பொருள்).  அந்த நால்வருமே  இறை உணர்வையும் தாண்டி அத்வைத உணர்வாகிய  ப்ரம்மத்திலேயே நிலைத்திருப்பவர்கள். 

அப்படிப்பட்ட அவருக்கு ஒருமுறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஏற்பட்ட யுத்தத்தில் தேவர்களின் சேனாதிபதியாக அவர் நின்று போரிட்டு அசுரர்களை அழிப்பது போன்ற ஒரு கனவு வந்தது. இதற்கு என்ன பொருள் என்று தன் தந்தையாகிய பிரம்மாவிடம் கேட்டார். அதற்கு பிரம்மா, "நீ உன் முன் ஜென்மத்தில் வேத அத்யாயனம் செய்தாய், அதில் தேவாசுர யுத்தத்தை பற்றிய விஷயத்தை படித்த பொழுது வேதத்தை அழிக்க நினைக்கும் அசுரர்களை சம்ஹராம் செய்ய வேண்டும் என்று உன் மனதில் தோன்றியது. அந்த எண்ணமே இப்போது கனவாக வந்திருக்கிறது. இப்பொழுது நீ அத்வைத சிந்தனையில் லயித்து இருப்பதால் உன் கனவு இப்பொழுது பலிக்காது. ஆனால் உன்னுடைய மறு பிறவியில் தேவாசுர யுத்தத்தில் நீ தேவர்களின் சேனாதிபதியாக நின்று அசுரர்களை போரிட்டு அழிப்பாய்" என்றார். தந்தையின் பதிலால் திருப்தி அடைந்த சனத் குமாரர் மீண்டும் தன்னுடைய த்யான நிலையை தொடர்ந்தார். 

இதற்கு சில காலங்கள் கழித்து  பிரம்மாவை காண்பதற்காக சிவ பெருமானும் பார்வதி தேவியும் சத்யலோகம் வருகிறார்கள். அங்கு தியானத்தில் நிலைத்திருக்கும் சனத் குமாரரை காண்கிறார்கள். அவர் தங்களை வணங்கி வரவேற்பார் என்று எதிர்பார்க்கும் சிவ பெருமானுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. சனத் குமாரரிடம்," நீ ப்ரம்மஞானி என்ற கர்வத்தால்தானே ஆதி தம்பதியாகிய எங்களை அவமதிக்கிறாய், உன்னை சபிக்க போகிறேன்," என்கிறார். ஸநத்குமாரரோ சிவனின் கோபத்திற்கெல்லாம் அஞ்சாமல், உங்களுடைய சாபம் ஆத்மாவை ஒன்றும் செய்யாது" என்று கூறி விடுகிறார். ஸநத்குமாரரின் தெளிவு சிவ பெருமானை ஆச்சர்யப்படுத்துகிறது. "வயதால் சிறியவனாக இருந்தாலும் ஞானத்தால் மேம்பாட்டிற்கும் உனக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன். என்ன வரம் வேண்டுமோ கேள்" என்கிறார். 

சிவனின் கோபம் எப்படி சனத் குமாரரை பாதிக்கவில்லையோ, அப்படி இப்போது இந்த வாத்சல்யமும் அவரை பாதிக்கவில்லை. எனக்கு எந்த வரமும் தேவை இல்லை. நீங்கள் பேசுவதை கேட்டால், இந்த வரம் சாபம் இதிலெல்லாம் உங்களுக்குத்தான் அதிக நம்பிக்கை இருக்கும் போல தெரிகிறது, எனவே உங்களுக்கு வேண்டுமானால் கேளுங்கள் நான் ஒரு வரம் தருகிறேன் .." என்று கூறி விடுகிறார். 

இத்தனை ஞானத்தோடு ஒரு பிள்ளையா? என்று வியந்து போன சிவ பெருமான், "ப்ரம்மாவுக்கு கிடைத்த இந்த பாக்கியம் எனக்கும் கிடைக்க வேண்டும். நீ எனக்கு மகனாக பிறக்க வேண்டும். இந்த வரத்தை எனக்கு அளித்தால் போதும் " என்று வேண்டுகிறார். 

"சரி, அப்படியே ஆகட்டும். உங்களுடைய மகனாக நான் பிறக்கிறேன்" என்று ஒப்புக் கொண்ட சனத்குமாரர்,  "ஆனால் ஒரு நிபந்தனை, என்னிடம் வரம் கேட்டது நீங்கள் மட்டும்தான். பார்வதி தேவி அந்த வரத்தை கோரவில்லை எனவே, உங்களுக்கு மட்டுமே நான் மகனாக பிறப்பேன்" என்று ஒரு சப் கிளாசை போட்டு விடுகிறார்.

"கணவன் அடையும் விஷயங்களில் மனைவிக்கும் அதிகாரம் உண்டு" என்று பார்வதி தேவி  வாதிட, என்னதான் பிறவி எடுக்க ஒப்புக் கொண்டாலும், ஸ்த்ரீ புருஷ சங்கமம் மூலமாக கீழ் முகமாக பிறப்பதில் தனக்கு விருப்பம் இல்லை என்றுஸனத் குமாரர் மறுதலிக்க, இறுதியில் சிவபெருமானின் தேஜஸாக நெருப்பு பொறிகளாக அவர் வெளிப்பட்டதும்,அந்த பொறிகள் அம்பாளின் அம்சமான சரவண பொய்கயிலே உருக் கொள்ளும்  என்று தீர்மானம் செய்தனர். அதன் படியே சிவபெருமானின் கண்களிலிருந்து வெளிப்பட்ட ஆறு பொறிகளும் முன் முதலில் கங்கையில்தான் விடப்படுகின்றன, கங்கையால் அதன் வெப்பத்தை தா ங்க முடியாததால் அவை சரவணப் பொய்கையில் சேர்க்கப்பட்டு கார்த்திகை பெண்களால் வளர்க்கப் பட்டு முருகனாக உருக்கொண்டு தேவாசுர யுத்தத்தில் தேவா சேனாதிபதியாக பங்கேற்று அசுரர்களை சம்ஹாரம் செய்கிறார்,.

அந்த முருகனை கந்த சஷ்டியாகிய இன்று வழிபட்டு வீரமும்,வெற்றியும், ஞானமும் பெறுவோமாக! வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோஹரா!



பி.கு.
தெய்வத்தின் குரல் ஒன்றாம் பாகத்தில் படித்ததை கொஞ்சம் எளிமையாக தர முயற்சி செய்திருக்கிறேன். படங்களுக்கு கூகுளார்க்கு நன்றி!

11 comments:

  1. தேவர்களுக்கும் கனவா? த்யானம் செய்யும்போது கனவு வருமா? ஒருவரை ஒருவர் அவ்வப்போது விசிட் செய்து பார்ப்பார்களா? என்றெல்லாம் தோன்றினாலும் 'லார்ட் முருகா... லண்டன் முருகா' வை நானும் அரோகரா சொல்லித் துதிக்கிறேன். என் இஷ்ட தெய்வம் அவன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம்! கனவுகாண்பது உங்களுக்கு மட்டும் ஏக போக உரிமையா? வருகைக்கு நன்றி!

      Delete
  2. தெய்வத்தின் குரலிலும் படிச்சிருக்கேன்.

    ReplyDelete
    Replies
    1. தெய்வத்தின் குரலை எதிரொலிக்க கொஞ்சம் பயமாக இருந்தது. சரியாக எழுத வேண்டும் என்பதை விட, நாம் எழுதுவது சரியாக புரிந்து கொள்ளப்படும் விதமாக எழுத வேண்டுமே என்ற அச்சம். சரியாக இருக்கிறதா?

      Delete
  3. பதிவுலகம் கனவில் முழ்கி விட்டது

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லெர்ஜி! வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி! உங்களுக்கு ஏற்கனவே ஒரு முறை பதில் என் செல் போன் மூலம் அனுப்பினேன், அது பதிவாகவில்லை. ஏனென்று தெரியவில்லை. செல் போன் வழியாக அனுப்பும் பொழுது சில சமயம் இரண்டு தடவைகள் பதிவாகிறது, சில சமயம் வருவதே இல்லை. பிரச்சனை என்னிடம்தான் என்று நினைக்கிறேன்.

      Delete
  4. முருகனைப் பற்றி நிறைய அறிந்து வைத்திருப்பதாய் எண்ணியிருந்தேன்.
    இந்த கதை இப்போது தான் அறிகிறேன். நன்றி

    ReplyDelete
    Replies
    1. தெரிந்து கொள்வதில் அதுதானே சுவாரஸ்யம்! எத்தனை கற்றுக் கொண்டாலும், தெரிந்து கொள்ள இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கும். வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

      Delete