கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, July 23, 2017

பெரம்பூர் என்னும் பிரம்மபுரி

பெரம்பூர் என்னும் பிரம்மபுரி


மாயவரத்திலிருந்து காவிரிப்பூம்பட்டினம் செல்லும் மார்கத்தில் உள்ளது. பெரம்பூர் என்னும் சிற்றூர். குத்தாலம் தாலுகா, நாகப்பட்டினம் டிஸ்ட்ரிக்ட். அங்கிருக்கும் சுப்பிரமணிய ஸ்வாமிதான் என் மகளின் புகுந்த வீட்டினர்க்கு குல தெய்வம். 

கோவில் சிறியது என்று கூறிவிட முடியாது. கருவறையில் மயில் மீது வலது காலை கீழே தொங்க விட்ட படியும், இடது காலை மடித்தும் அமர்ந்த கோலத்தில் எழிலாக முருகன், தனி சந்நிதியில் தெய்வயானை. இந்தமுறை என் மகள் வீட்டாருடன் அந்த கோவிலுக்குச் சென்ற பொழுது, கோவிலைப் பற்றிய சிறப்புகளை அங்கிருக்கும் அர்ச்சகரிடம் கேட்டறிந்தேன்.

தற்பொழுது பெரம்பூர் என்று அறியப்பட்டாலும், இந்த ஊருக்கு புராதன பெயர் ப்ரம்ம மங்களபுரம் அல்லது பிரம்மபுரி என்பதாகும். பிரம்மபுரி என்பதே பெரம்பூர் என்று மருவி இருக்கலாம். பிரம்மா தான் இழந்த பதவியை மீண்டும் பெற்ற தலமாம் இது. பிரம்மாவுக்கு பதவி பறி போனதா? எப்போது? ஓம் என்னும் பிரணவ மந்திரத்திற்கு பொருள் என்ன என்று முருகன் வினவ, அதற்கு பொருள் தெரியாததால் பிரம்மாவை சிறையில் தள்ளி *அவருடைய தொழிலான படைக்கும் தொழிலை முருகன் எடுத்துக் கொள்கிறார். பிரம்மா தன் தவறை உணர்ந்து முருகனிடம் மன்னிப்புக் கேட்க, அவருக்கு மீண்டும் படைக்கும் தொழிலை ஒப்படைத்த இடம்தான் இது. ஆக, பிரம்மாவிற்கு 
நல்லது(மங்களம்) நடந்ததால் இது ப்ரம்ம மங்களபுரம். 

அதே போல சூரனை சம்ஹாரம் செய்து, அவனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றி, சேவலை கொடியிலும், மயிலை வாகனமாகவும் ஏற்றுக்கொள்கிறார். மயிலாக மாறிய சூரபத்மன் தன்னுடைய அசுர குணம் அழிய வேண்டும் என்பதற்காக தவம் இயற்ற, அந்த மயிலின் தலையில் தன் இடது ஆள்காட்டி விரலை பதித்து உபதேசம் செய்கிறார் முருகன். பெரும்பாலான கோவில்களில் மயிலின் தலை பாகம் முருகனுக்கு வலது புறம் இருக்கும், அவ்வாறு அமைத்திருந்தால் அது அசுர மயில் எனப்படுமாம்.இங்கு முருகனுக்கு இடது புறம் மயில் தலை பக்கம் இருக்கிறது. மேலும் மயில் தன் தலையைத் திருப்பி முருகனை பார்த்த வண்ணம் இருக்கிறது, ஆகவே அது தேவ மயில் என அறியப்படுகிறதாம். முருகனும் தன் தலையை சற்றே வலது புறம் சாய்த்து மயிலை நோக்கிய வண்ணம் இருக்கிறார்.  அதே போல சாதாரணமாக எல்லா கோவில்களிலும் முருகனின் கையில் இருக்கும் வேல் வீர வீல் என்றுதான் அழைக்கப்படுமாம், இங்கு முருகனின் கையில் இருக்கும் வேலுக்கு வஜ்ஜிர வேல் என்று பெயராம். எங்கெல்லாம் தேவயானை தணி சந்நிதியில் குடி கொண்டிருக்கிறாளோ, அங்கெல்லாம் முருகனுக்கு முன் யானைதான் வாகனமாக இருக்கும் என்னும் வழக்கத்தை ஓட்டி இங்கும் முருகனுக்கு முன் யானை வாகனம் காணப்பட்டாலும், பிரதான நுழைவு வாயிலில் மயில் வாகனமும் காணப்படுகிறது. அந்த மயில் வாகனத்திற்கு அருகில் ஸ்வாமியை வணங்கிய நிலையில் ஒரு மனிதருக்கு சிறிய சிலை உள்ளது. அது, இந்த கோவிலை நிர்மாணித்த மிளகு செட்டியாரின் சிலை என்றார்.

இங்கிருக்கும் முருகனின் பக்தரான செட்டியார் ஒருவர் மிளகு வியாபாரம் செய்து வந்ததால் மிளகு செட்டியார் என்று அழைக்கப்பட்டாராம். தினமும் மிளகு சேர்த்த வெண் பொங்கலை மட்டும் அதுவும் ஒரு முறை மட்டுமே உண்டு வந்த அவர், தன மிளகு வியாபாரத்தில் ஈட்டிய பொருளைக் கொண்டு இந்த கோவிலை ஐந்து நிலை கோபுரம் கொண்டதாக நிர்மாணம் செய்கிறார். அது முடியும் தருவாயில் தனக்கு முடிவு நெருங்கி விட்டதை உணர்ந்த அவர் இங்கிருந்து நகர்ந்து சென்று விடுகிறார். ஆனால் இறக்கும் தருவாயில் இந்தக் கோவிலை காட்டியது தான்தான் என்று உலகுக்கு அறிவிக்க கூடாது என்றும், முருகனை எப்போதும்  தரிசனம் செய்து கொண்டிருக்கும் வண்ணம் தன் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும், வருடத்தில் ஒரு நாள், அதாவது பொங்கலன்று மட்டும் தனக்கு மிளகு கலந்த வெந்நீரால் அபிக்ஷேகம் செய்யப்பட வேண்டும் என்றும் அதுவும் முதலில் முருகனுக்கு அபிஷேகம் செய்த பிறகுதான் தனக்கு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு இறந்து போகிறார். அவருடைய விருப்பத்தின்படியே வாசலில் மயில் வாகனத்திற்கு அருகில் அவருக்கு ஒரு சிலை பிரதிஷ்டை செய்து, அதற்கு பொங்கலன்று மட்டும் மிளகு கலந்த வெந்நீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது என்றும் கூறினார்.

பிரகாரத்தை வலம் வரும் பொழுது, சிவன் கோவில்களில் கோஷ்டத்தில் தெற்கு முகமாக பார்த்து தக்ஷிணாமூர்த்தி இருப்பதை போல இந்த கோவிலில் தெற்கு முகமாக பார்த்து முருகனே 'குஹ தஷிணாமூர்த்தியாக' மயில் மீது இடது காலை மடித்து, வலது திருவடியை தொங்க விட்டு தக்ஷிணாமூர்த்தி கோலத்தில் அமர்ந்திருக்கிறார். பிரகாரத்தின் இடது கோடியில் விநாயகரும், வலது கோடியில் தனி சந்நிதியில் பிரம்மபுரீஸ்வரர் என்னும் திருநாமத்தோடு சிவ பெருமானும் குடி கொண்டிருக்கிறார்கள். சிவன் சந்நிதியில் அகத்தியரும் காணப்படுகிறார். சிவன் சந்நிதியின் கோஷ்டத்தில் தென் புறம் நோக்கியவண்ணம் தக்ஷிணாமூர்த்தியும் இருக்கிறார். சிறப்பான கோவில். அங்கிருக்கும் அர்ச்சகரும் சிரத்தையோடு பூஜைகளும், அலங்காரங்களும் செய்கிறார். தரிசிக்க வேண்டிய ஆலயம். 

ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்  

* ப்ரம்மாவிடமிருந்து படைப்புத் தொழிலை எடுத்துக் கொண்ட முருகன் ஒரு வாரம் படைப்புத் தொழிலை மேற்கொண்டாராம். ஆனால் ப்ரம்மாவைப் போல் மனிதர்களில் வித்தியாசம் காட்ட முடியாமல் எல்லோரையும் ஒரே மாதிரி படைத்தது விட்டாராம். அப்போது படைக்கப் பட்டவர்கள்தான் சீனர்களும், ஜப்பானியர்களும் என்று ஒரு செவி வழி கதை உண்டு.  

படங்கள்:  கூகிள், நன்றி!

How to reach Perambur?: மயிலாடுதுறையிலிருந்து நாகப்பட்டினம் வழியாக பொறையாறு செல்லும் எண் 440 வழித்தட பேருந்தில் சென்றால் பெரம்பூரில் இறங்கி கொள்ளலாம்.


19 comments:

  1. கேள்விப்படாத ஊர். சுவாரசியமான விவரம்.
    /அப்போது படைக்கப் பட்டவர்கள்தான் சீனர்களும், ஜப்பானியர்களும் ..

    அவர்களைக் கேட்டால் இந்தியர்களைப் பற்றி இதையே சொல்கிறார்கள். :-)

    ReplyDelete
    Replies
    1. அவர்களைக் கேட்டால் இந்தியர்களைப் பற்றி இதையே சொல்கிறார்கள். :-)// ஹா ஹா! இந்தியர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாகவா இருக்கிறோம்? நம் நாட்டில் தோற்றத்தை வைத்து, இனம், மொழி, ஜாதி, கண்டு பிடித்து விடலாமே.
      வருகைக்கு நன்றி!

      Delete
    2. தோற்றத்தை பார்த்து இனம் மொழி ஜாதி கண்டுபிடிக்க முடியுமா?

      Delete
  2. கோவில் படங்களைப் போடவில்லையே. முதல் முறையாகக் கேள்விப்படும் ஊர்.

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய செல்போனில் எடுத்த படங்கள் தெளிவாக இல்லை.. வருகைக்கு நன்றி!

      Delete
    2. மூலவரின் படம் இணைத்துள்ளேன். காண்க.

      Delete
  3. பிரம்மபுரி - இது வரை கேள்விப்பட்டது இல்லை. தகவல் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மாயவரத்தை சுற்றி இருக்கும் பல சிற்றூர்களில் பெரம்பூரும் ஒன்று. பிரம்மபுரி என்பது புராண பெயர். வருகைக்கு நன்றி!

      Delete
  4. அந்தப் பக்கம் எல்லா ஊர்களுக்கும் போயிருக்கேன். காவிரிப்பூம்பட்டினம் தவிர்த்து. ஆனால் இந்த ஊரைக் குறித்து முழுக்க முழுக்கத் தஞ்சை ஜில்லா வாசியான என் கணவருக்கே தெரியலை. அடுத்த முறை மாயவரம் போகும்போது இங்கே போகணும்னு என்று குறித்து வைத்துக் கொண்டிருக்கிறேன். கேள்விப் படாத தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மாயவரத்திலிருந்து நாகப்பட்டினம் வழியாக பொறையாறு செல்லும் எண் 450 வழித்தட பேருந்தில் சென்றால் பெரம்பூரில் இறங்கி கொள்ளலாம் என்று என் மாப்பிளை கூறுகிறார். To get map direction browse http://goo.gl/roxcPW

      Delete
  5. கேள்விப்படாத ஊர் பற்றிய சுவாரஸ்யமான கதைகள்....கோயில் படம் இல்லையோ ..பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. நான் எடுத்த படங்கள் சரியாக வரவில்லை. கூகுளார் காய் விரித்து விட்டார். வேறு எங்காவது தேடித் பார்க்கிறேன். வருகைக்கு நன்றி!

      Delete
    2. மூலவரின் படம் இணைத்துள்ளேன். காண்க.

      Delete
  6. முதலில் சென்னையில் இருக்கும்பெரம்பூரோ என்றுதான் நினைத்தேன் தன் பெயர் தெரியக்கூடாது என்று சொல்லியே ஆண்டுக்குஒரு முறை மிளகு நீரில் அபிஷேகம்வேண்டும் பெரியவர் .....!

    ReplyDelete
    Replies
    1. //தன் பெயர் தெரியக்கூடாது என்று சொல்லியே ஆண்டுக்குஒரு முறை மிளகு நீரில் அபிஷேகம்வேண்டும் பெரியவர் .....!// சாதாரணமாக கோவில் கட்டுபவர்கள் இன்னாரால் திருப்பணி செய்யப்பட்டது என்று கல்வெட்டில் பொறிப்பது பழக்கம் அல்லவா? அதைத்தான் வேண்டாம் என்று கூறியிருக்கிறார். வருகைக்கு நன்றி!

      Delete
  7. புதிய கோவிலும்...

    சிறப்பான தகவல்களும்....சிறப்பு..

    ReplyDelete
  8. //என் மகள் வீட்டாருடன் //

    மூன்றே வார்த்தைகள் தாம். நிறைய யோசனையைக் கிளப்பிய வார்த்தைகள். யதார்த்த உண்மையாக இருக்கலாம். இருந்தாலும்...


    ReplyDelete