கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, October 11, 2017

ஷாஜஹானும், நந்தனாரும்

ஷாஜஹானும், நந்தனாரும் 

என்னடா இவள் அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் முடிச்சுப் போட பார்க்கிறாளே என்று நினைக்காதீர்கள். வரலாற்றில் எப்படியோ தவறாக புரிந்து கொள்ளப் பட்டிருப்பவர்களில் இந்த இரண்டு  பேரும் உண்டு. 

நேற்று நந்தனார் குரு பூஜை என்று என் மூத்த சகோதரி குறும் செய்தி அனுப்பி  இருந்தார்.  அதைப் பார்த்ததும் அவர் வரலாறு எவ்வாறு திரிக்கப்பட்டிருக்கிறது என்பது நினைவுக்கு வந்தது. அதைப் போலவே பெரிதாக திரிக்கப்பட்டிருக்கும் இன்னொரு வரலாற்று செய்தி தாஜ்மஹால் காதல் சின்னம் என்பதும். எனவே இந்த இரண்டு விஷயங்களைப் பற்றியும் எழுதலாம் என்று தோன்றியது.



முதலில் நந்தனாரை எடுத்துக் கொள்வோமா? உண்மையில் பெரிய புராணத்தில் அவர் திருநாளைப் போவார் என்றுதான் குறிப்பிடப் படுகிறார். காரணம் அவர் எப்போதும் நான் "நாளைக்கு தில்லை செல்வேன்" என்று கூறிக் கொண்டிருப்பாராம். அவருக்கு கொடுமைக்காரராக ஒரு அந்தண எஜமானர் இருந்தார் என்பதற்கும், அவர் நந்தனாரை தில்லை செல்ல விடாமல் தடுத்தார் என்பதற்கும்  பெரிய புராணத்தில் எந்தவித ஆதாரமும் கிடையாது. 

நந்தன் சரித்திரத்தை இசை நாடகமாக எழுதிய கோபாலகிருஷ்ண பாரதியார் அந்த காலத்தில் நிலவிய ஜாதிக் கொடுமைக்கு எதிராக நந்தன் சரித்திரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சேர்த்து விட்ட விஷயம்தான் அந்தண ஆண்டை. 

தான் எழுதிய நந்தன் சரிதத்திற்கு மஹாவித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை முன்னுரை எழுதி கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதிய கோபாலகிருஷ்ண பாரதி அவரை அணுகி கேட்ட பொழுது, நந்தன் சரித நாடகம் மூலத்திலிருந்து மாற்றி எழுதப்பட்டிருப்பதால் மகா வித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை அதற்கு மறுத்து விட்டாராம். மேலும் நந்தன் சரித பாடல்களில் 'வருகலாமோ ஐயா..' என்று ஒரு பாடல்  உண்டு. வருகலாமோ என்பது இலக்கண பிழையான சொல் என்பதால் அதுவும் பிள்ளையவர்களை கோபப் படுத்தி முன்னுரை எழுதவொட்டாமல் தடுத்ததாம். 

இருந்தாலும் எப்படியாவது மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையிடம் முன்னுரை எழுதி வாங்கிவிடுவது என்று முடிவு கட்டிய கோ.கி.பாரதியார், சுந்தரம் பிள்ளையின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது பிள்ளையவர்கள் சாப்பிட்டு விட்டு சற்று ஓய்வெடுக்கும் நேரம். அவர் உள்ளே ஓய்வெடுத்துக் கொண்டிருக்க, திண்ணையில் அமர்ந்திருந்த பாரதியார் தன் நாடகத்திலிருந்து சில பாடல்களை மனமுருகி பாடிக்கொண்டிருந்தாராம், அதை உள்ளிருந்து செவி மடுத்த பிள்ளையவர்கள் அந்த பாடல்கள் பாடப்பட்ட விதத்தில் உருகி, வெளி வந்து, அவருடைய நந்தன் சரிதத்திற்கு முன்னுரை எழுதி கொடுத்தாராம்.

கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தன் சரிதம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக ஜாதிக்கொடுமையில் முன்னணியில் இருப்பது பிராமணர்கள்தான் என்ற எண்ணம் வலுப்பட்டு விட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் நந்தன் சரிதத்தை எழுதிய கோபாலகிருஷ்ண பாரதி ஒரு பிராமணர்.



அடுத்தபடியாக இப்போது பெரிதும் செய்திகளிலும், வலைப்பூக்களிலும் பேசப் படும் தாஜ் மஹால் விவகாரம். தாஜ் மஹாலை யாராவது காதல் சின்னம் என்றால் எனக்கு கோபம்தான்  வரும். ஏனென்றால் மும்தாஜ் மீது ஷாஜஹானுக்கு இருந்தது காதல் கிடையாது, காம வெறி. 

ஷாஜஹானின் அமைச்சர்கள் ஒருவரின் மனைவியான அர்ஜுமான்ட் பானு பேகம் என்பவளின் அழகால் வசீகரிக்கப்பட்டதால், அந்த அமைச்சரை கொன்று விட்டு அவளை தன்  மனைவியாக்கிக் கொள்கிறான் ஷாஜஹான். அவளோடு வாழ்ந்த பதிமூன்று வருடங்களில் பன்னிரெண்டு குழந்தைகள். வாழ வேண்டிய  இளம் வயதில் அநியாயமாக ரத்த சோகையில் இறந்து போன பரிதாபத்திற்குரிய பெண் மும்தாஜ். மனைவியை நேசிக்கும் யாராவது  இப்படி செய்வார்களா? அவனுக்கு மும்தாஜிற்கு முன்னாலேயே ஆறு மனைவிகள். மும்தாஜ் இறந்த பிறகும் அவன் திருமணம் செய்து கொள்வதையும், ஆசை நாயகிகள் வைத்துக் கொள்வதையும் நிறுத்தி விடவில்லை.  வயோதிகத்தில் கூட இதற்காக ஏதோ பச்சிலைகளையும், லேகியங்களையும் சாப்பிட போக அதனால் அவன் சிறுநீரகம் பாதிக்கப்பட, அரண்மனை மருத்துவர்கள் எச்சரித்ததால் கொஞ்சம் குறைத்துக் கொண்டானாம். இப்படிப்பட்டவன் மனைவி மீது கொண்ட காதலை போற்றும் விதமாக தாஜ் மஹாலை கட்டினான் என்றால் அதை விட அபத்தம் வேறு ஏதாவது இருக்க முடியுமா?

தாஜ் மஹாலை வேறு ஒரு விதத்தில் காதல் சின்னம் என்று சொல்லலாம். கட்டிட கலையின் மீது ஷாஜஹானுக்கு இருந்த காதல்.! அந்த காதல்தான் அவனை தாஜ் மஹாலை கட்ட வைத்தது. அந்த சமயத்தில் நாடெங்கிலும் கடும் பஞ்சம் நிலவிய பொழுதும் அவன் அதைப் பற்றியெல்லாம் கவலைப்  படாமல் மக்களுக்கு அதிக வரி விதித்து வசூலான பணத்தை எல்லாம் தாஜ் மஹால் கட்ட பயன்  படுத்திக்க கொண்டான். இது முடிந்த பிறகு டில்லியில் தாஜ் மஹாலைப் போலவே கருப்பு மார்பிளில் மற்றுமொரு கட்டிடத்தை கட்ட தீர்மானித்திருந்தான். இவனை இப்படியே விட்டால் கஜானா காலியாகி விடும் என்ற அச்சத்தில்தான் அவ்ரங்கசீப் அவனை பதவியில் இருந்து இறக்கி விட்டு தான் முடி சூட்டிக் கொண்டான் என்பதுதான் நிஜமான வரலாறு.

பி.கு.
நான் இப்படி எழுதி இருப்பதால் தாஜ் மஹாலின் அழகை மறுக்கிறேன் என்று பொருள் கிடையாது. தாஜ் மஹால் ஒரு கட்டிட கலை அற்புதம் என்பதில் இரண்டாவது கருத்து  இருக்க முடியாது. ஆனால் அதை காதல் சின்னம் என்று ஒப்புக் கொள்ள முடியாது. 



25 comments:

  1. ஷாஜஹான் பற்றிய விடயங்கள் எனக்கு புதிதாக இருக்கிறது.

    தாஜ் கோரமண்டல் கட்டி முடித்ததும் மேசன் கைகளை வெட்டி விட்டதாக சொல்லும் தகவல் உண்மையா ?

    இவ்வளவு பெரிய காமகொடூரனைத்தான் உலகம் காதலுக்கு எடுத்துக்காட்டாக சொல்லி வந்ததா ?

    ஒருக்கால் மும்தாஜ் அந்த அமைச்சரோடு வாழ்ந்து மறைந்திருந்தால் உலகம் அறியாமலேயே போயிருப்பாள்.

    இருப்பினும் உலக அதிசயங்களில் ஒரு இடத்தை இந்தியா பிடித்துக் கொண்டதற்கு நண்பர் ஷாஜஹானே காரணம் அதற்கு நன்றி சொல்வோம்.

    மும்தாஜ் என்றால் அரபு மொழியில் "அழகு" என்று அர்த்தம் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ.

      //தாஜ் கோரமண்டல் கட்டி முடித்ததும் மேசன் கைகளை வெட்டி விட்டதாக சொல்லும் தகவல் உண்மையா ?//

      தாஜ் மஹால் தாஜ் கோரமண்டல் ஆகி விட்டதா? நீங்கள் குறிப்பிடும் விஷயம் புரளி என்றுதான் நினைக்கிறேன்.

      Delete
    2. கில்லர்ஜி நானும் கேள்விப்பட்டிருக்கேன் நாம் கேட்டிருப்பது உண்மையோ பொய்யோ எனக்கும் அக்காவின் கருத்தே...தாஜ்மஹாலை ஏனோ என்னால் எல்லோரும் அத்தனை புகழ்வது போல் காதல் சின்னமாகப் பார்க்க முடியலை. அது போல அது ஒன்றும் அத்தனை வியத்தகு ஆர்ட் வொர்க்கும் கொண்டது இல்லை. அதைவிட இன்னும் மிகச் சிறப்பான மொகலாய ஃபோர்ட்கள் எல்லாம் மிக அழகாக இருக்கும்...எனக்கு தாஜ்மஹால் மீது மதிப்போ மரியாதையோ கிடையாது ஆனால் அதைக் கட்ட உழைத்தார்களே பாவம் அந்த வல்லுனர்கள், கட்டுமானப் பணி செய்தவர்கள் அவர்கள் மீது மதிப்பு அதிகம் உண்டு...

      கீதா

      Delete
  2. இந்தக் கதையைப் படமாக எடுத்தபோதும் மாற்றினால் (பெரியபுராணத்தின்படி) அப்போதிருந்த பிரச்சாரங்களின் விளைவாக, படம் எடுத்த ஜெமினி ஸ்டூடியோவுக்கு பழி வரும் என்பதற்காக மக்கள் மனநிலையைக் கருத்தில்கொண்டு கோபாலகிருஷ்ண பாரதியின் வழியில் எடுக்கப்பட்டது எனப் படித்திருக்கிறேன். (கோ.பாரதியின் சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா என்ற பாடல் புகழ்பெற்றது. அவருக்கும் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கும் கருத்தொற்றுமை இல்லை)

    மும்தாஜ் இறந்ததைத் தாங்கவொட்டாமல் அவளின் நினைவாக்க் கட்டப்பட்ட சமாதிதான் தாஜ்மஹால். அவுரங்கசீப்பிற்கு இயல்பாக தந்தைமீது இருந்த வெறுப்பு காரணமாகவும், இந்தமாதிரி தனிப்பட்ட முறையில் செலவழிப்பதில் இருந்த கஞ்சத்தனம் காரணமாக ஷாஜகானுக்கு தாஜ்மகாலிலேயே மும்தாஜ் அருகில் சிறிய சமாதி அமைக்கப்பட்டது.

    ReplyDelete
    Replies
    1. காவியச் சுவை வேறு, நாடகச் சுவை வேறு. வில்லன் இல்லாமல் காவியம் எழுதி விடலாம், ஆனால் வில்லன் இல்லாத நாடகம், அல்லது திரைப்படம் ருசிக்காது. (அந்த வில்லன் மனிதனாகத்தான் இருக்க வேண்டும் என்பது இல்லை, சந்தர்ப்ப, சூழ் நிலைகளாக கூட இருக்கலாம்). நாடகச் சுவையை கூட்டுவதற்காக கூட கோபாலகிருஷ்ண பாரதியார் ஒரு பண்ணையாரை ஸ்ரிஷ்டித்திருக்க வேண்டும்.

      வருகைக்கு நன்றி நெ.த.

      Delete
  3. தாஜ் மகால் பற்றிய விவரங்கள் முன்னரே தெரியும். நந்தனார் சரித்திரம் பற்றி இப்போதுதான் தெரியும்.

    ReplyDelete
  4. நந்தனார் சரித்திரம் பற்றி ஒரு காட்சி ராஜபார்ட் ரங்கதுரையில் வரும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், 'நாளை போகாமல் இருப்பேனோ நான்..' என்னும் பாடலை டி.எம்.எஸ். நன்றாக பாடியிருப்பார், அந்த காட்சியில் சிவாஜி மிக அழகாக நடித்திருப்பார். யூ டியூபில் தேடினேன் கிடைக்கவில்லை. :(

      வருகைக்கு நன்றி ஸ்ரீரா

      Delete
  5. http://sivamgss.blogspot.in/2007/02/212.html

    http://sivamgss.blogspot.in/2009/07/1.html

    http://sivamgss.blogspot.in/2009/07/blog-post_8190.html

    ஷாஜஹான், தாஜ்மஹல் குறித்த செய்திகளை இங்கே குறிப்பிடப் போவதில்லை! :) மேற்கண்ட சுட்டிகளில் நந்தன் சரித்திரம் குறித்த தகவல்களைக் காணலாம். கோபாலகிருஷ்ண பாரதியார் செய்த ஒரு சின்னத் தவறு எவ்வளவு பெரிய பகைமையை உருவாக்கி விட்டது என்பதை அவர் அறியவில்லை. இப்போதும் சிதம்பரத்தில் நந்தனாருக்காகத் தனியான விழா நடந்து வருகிறது. நந்தனாருக்காக நந்தி விலகிய ஊர் திருப்புங்கூர். பலரும் அதைச் சிதம்பரம் என நினைத்துக் கொண்டு விலகிய நந்தியை இப்போது மாற்றி வைத்துவிட்டார்கள் என்றும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் கீதா அக்கா! எழுதியவன் ஏட்டை கெடுத்தான், பாடினவன்
      பா ட்டை கெடுத்தான் என்று ஆகி விட்டது. Btw. நீங்கள் கொடுத்திருக்கும் லிங்கில் க்ளிக்கினால் ஓப்பன் ஆவதில்லை.

      Delete
    2. லிங்கைக் காப்பி, பேஸ்ட் செய்து பேஸ்ட் அன்ட் கோ கொடுத்தால் நன்றாகவே திறக்கிறது. அதிலேயே க்ளிக்கினால் எதுவும் வராது!

      Delete
  6. நந்தனார் தொடர்பான புதிய செய்தி அறிந்தேன். அவ்வாறே தாஜ்மகாலைப் பற்றியும். நந்தனார் கதையோடு தொடர்புடைய திருப்புன்கூர் சென்றுள்ளேன். அருமையான கோயில்.

    ReplyDelete
  7. எனக்கு என் எஸ் கிருஷ்ணனின் கிந்தனார் சரித்திரம் நினைவுக்கு வந்தது

    ReplyDelete
    Replies
    1. கிந்தனார் சரித்திரம் என்பது நந்தனார் சரித்திரத்தை கேலி செய்திருக்குமோ? வருகைக்கு நன்றி!

      Delete
    2. >>> கிந்தனார் சரித்திரம் என்பது நந்தனார் சரித்திரத்தை கேலி செய்திருக்குமோ?..<<<

      இல்லை..இல்லை..

      கிந்தன் என்ற ஹரிஜனச் சிறுவனை ஆசிரியர் புறக்கணிக்க அவன் பட்டணத்திற்கு வந்து படித்து பெரிய ஆளாகின்றான்..

      ஊருக்குத் திரும்பி வரும் அவனை ஆசிரியரே முன் நின்று வரவேற்று மகிழ்கின்றார்..

      கல்வியின் மேன்மையை கதாகாலட்சேபமாக நகைச்சுவையுடன் வழங்கியிருப்பார்..

      Delete
  8. அருமை....ஷாஜஹான் பற்றி அறிந்திருந்தேன் ஆனால், நந்தனார் பற்றிய செய்தி எனக்குப் புதிது !!! மேலும் சில எழுத்தாளர்களின் தவறு பிற்காலங்களில் எத்தனை பெரிய அபவாதங்களைத்தரும் என்பதற்கு இதொரு உதாரணம் !!!

    Shankar

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்! படைப்பாளிகளின் சுதந்திரம் பல சமயங்களில் விபரீதமாகி விடுகிறது. முதல் முறையாக வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி! மீண்டும் வருக!

      Delete
  9. அன்புடையீர்..

    திருமிகு தண்டபாணி தேசிகர் அவர்கள் நடித்த நந்தனார் படத்தில் நந்தனாரின் பாடுகள் மனதை உருக்கி விடும்..

    தாஜ்மஹாலைப் பற்றிய தங்கள் கருத்தே என்னுடையது..
    தாஜ்மஹால் கூட தேஜோ மஹால் என்னும் சிவன் கோயில் என்று கூட 70களில் ஒரு புத்தகம் வெளிவந்தது..

    ஔரங்கசீப் செய்த நல்லகாரியம் ஷாஜஹானைச் சிறையிலடைத்தது..

    ReplyDelete
  10. //ஔரங்கசீப் செய்த நல்லகாரியம் ஷாஜஹானைச் சிறையிலடைத்தது..//

    வரலாற்று ஆசிரியர்கள் அவுரங்கசீப்பை நல்லவனா கெட்டவனா எதில் சேர்ப்பது என்று தெரியாமல் விழிக்கிறார்கள். இந்துக்களுக்கு அதிக வரி வசூலித்தது, கலைகளுக்கு ஆதரவு அளிக்காமல் இருந்தது போன்ற செயல்கள் செய்தாலும், பொதுவாக அவன் ஆட்சியில், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன. அவனும் மற்ற மொகலாய சக்ரவர்த்திகள் போல் ஆடம்பர வாழ்க்கைக்கும், அந்தப்புர லீலைக்கும் அதிகம் செலவு செய்ததில்லை. மணிரத்தினம் இவரை கதாநாயகனாக வைத்து ஏன் படமெடுக்கவில்லை?

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஹா.. ஹா.. மணிரத்தினத்தின் இராவணனை கிண்டல் செய்வதுபோல் இருக்கிறதே...

      Delete
  11. Not only in Ravanan, in many of his other films also he glorifies villians.

    ReplyDelete
    Replies
    1. Started from Shivaji Ganesaan! :( He glorified Karnan and Veera Pandiya Katta Bomman! :(

      Delete
  12. பானுக்கா என்னவோ தெரியலை தாஜ்மஹால் என்னைக் கவரவில்லை. பார்த்திருக்கிறேன்...பார்க்கும் வரை ஆஹா ஓஹோ என்று நினைத்திருந்தேன்..ரொம்ப அழகா இருக்கும் போல அதுவும் படங்களில் எல்லாம் எப்படி இருக்குனு...ஆனா
    அதுவும் 28 வருடங்களுக்கு முன்னரே நேரில் பார்த்ததும் இவ்வளவுதானா இதுக்கா இத்தனை புகழ் என்றும் தோன்றியது...ஏனோ மனதைக் கவரவில்லை...

    கீதா

    ReplyDelete
  13. நந்தனார் பற்றிய தகவல் இப்போதுதான் தெரிந்து கொண்டோம்...

    ReplyDelete