கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, February 22, 2018

நீடித்த சந்தோஷம் எது?

நீடித்த சந்தோஷம் எது?


முகநூல்(face book) தோழி திருமதி காயத்ரி  சுந்தரேசன் சமீபத்தில் ஒரு கேள்வி எழுப்பி இருந்தார். 

Pleasure- what is it that gives one pleasure? Physical?mental?emotional? which is lasting pleasure? 

நான் தமிழில் சிந்திப்பதால் இதை தமிழ் படுத்துகிறேன். ஒருவருக்கு எது சந்தோஷத்தை கொடுக்கிறது? புலனின்பமா? அறிவு சார்ந்த இன்பமா? இல்லை உணர்வு சார்ந்த இன்பமா? எந்த இன்பம் நீடித்திருக்கும்?

நல்லது! முதலில் புலனின்பத்தை எடுத்துக் கொள்வோம். கண்டு,கேட்டு, உற்று,உணர்ந்து.முகரும் இந்த ஐவகை இன்பங்களும் பெண்ணிடம் உண்டு. சாப்பாட்டிலும் உண்டு. இந்த இரண்டு வகை இன்பங்களை தேடித் தேடி ஓடாதவர்கள் உண்டா? இதனால் கிடைக்கும் இன்பம் நிச்சயமாக நிலையானது கிடையாது. 

மேலும் இந்த புலனின்பத்தை அனுபவித்து தீர்த்து விட முடியாது. மகாபாரதத்தில் வரும் யயாதி கதையில் யயாதி கூறியதைப் போல, உலக இன்பங்களை அனுபவித்து தீர்த்து விடலாம் என்று நினைப்பது எரிகின்ற கொள்ளிக்கு நெய் வார்த்து அதை அணைத்து விடலாம் என்று நினைப்பதற்கு ஒப்பானது. எனவே நீடித்த இன்பத்தை ஒரு போதும் தராது. அதனால்தான் நம் முன்னோர்கள் இது ஒரு வரம்பிற்குள் இருக்க வேண்டும் என்பதர்காகத்தான் அவ்வப்பொழுது விரதங்களை அனுஷ்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 

அடுத்து அறிவார்ந்த சந்தோஷம்: அறிவார்ந்த சந்தோஷம் என்று ஒன்று உண்டா என்று தெரியவில்லை. ஏனென்றால் அறிவு செயல் பட ஆரம்பிக்கும் பொழுது சந்தோஷம் விடை பெற்று விடும். சிறு வயதில் மயலின் இறகை நோட்டு புத்தகத்தில் வைத்து அது குட்டி போடும் என்று நம்பும் சந்தோஷம் வளர்ந்த பிறகு இருக்குமா?  

மணிக்கொடி எழத்தாளர்களில் ஒருவரான கு.ப.ராஜகோபால் ஒரு அருமையான சிறு கதை எழுதி உள்ளார்.  அதில் சித்தார்த்தன் என்னும் இளவரசன் ஏன் புத்தனானான்  என்பதற்கு ஒரு காரணம் கூறியிருப்பார். 

இரவில் மனைவி யசோதராவோடு சுகிக்கிறான் சித்தார்த்தன். அதற்குப் பிறகு அவள் உறங்கி விட, இவ்வளவுதானா? இதற்குத்தானா? என்னும் கேள்விகள் அவனை வாட்ட, அன்றிரவே அரண்மனையை விட்டு வெளியேறுகிறான். என்று  முடித்திருப்பார்.

அடுத்தது உணர்வு பூர்வமான சந்தோஷம்: இது சற்று உயர்ந்த ரகம்: மேலே சொன்ன இரண்டு ரகங்களும் அனுபவிக்கும் ஒருவருக்கு மட்டும் சந்தோஷத்தை தரும் என்றால், இதில் நாம் மற்றவரையும் சந்தோஷப்படுத்தலாம். எப்படி என்றால் ஒருவர் பாடுகிறார். அது அவருக்கு சந்தோஷம், அது நன்றாக இருக்கும் பட்சத்தில் கேட்பவருக்கும் சந்தோஷம். எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி  இன்று இல்லை. ஆனால்  அவருடைய சங்கீதம் இன்றும் நம்மை சந்தோஷப் படுத்துகிறது. 

ஸ்வாமி ஏ.பார்த்தசாரதியின் உரையில் ஒரு முறை குறிப்பிட்டார். இந்த உலகில் மூன்று  விதமான உதவிகள் உண்டு. ஒன்று பணத்தால் ஒருவருக்கு உதவுவது. இது அதமம் (கடைசி). இரண்டாவது உடலால் ஒருவருக்கு உதவுவது இது மத்யமம்(இடை நிலை). மூன்றாவது உணர்வு பூர்வமாக ஒருவருக்கு உதவுவது, இதுதான் உத்தமம் (உயர்ந்த நிலை). 

முன்பெல்லாம், எல்லா மகான்களும் பாடகர்கள், நடிகர்கள், கதாசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற செலிப்ரிடிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொழுது நான், "எல்லா இடங்களிலும் பெரிய மனிதர்கள் என்றால் ஒரு தனி கவனிப்புதான்" என்று நினைத்துக் கொள்வேன்.  ஆனால் அவர்கள் தங்கள் திறமையால் எத்தனை பேர்களை உணர்வு பூர்வமாக சந்தோஷப் படுத்துகிறார்கள்? அதற்கான அங்கீகாரம்தான் அவர்களுக்கு  கொடுக்கப்படும் முக்கியத்துவம். மேலும் இந்த உணர்வு பூர்வமான சந்தோஷத்தை தெய்வீகமாக மாற்றுவது எளிது. 

இதில் எதுவுமே நிலைத்த சந்தோஷத்தை தராது என்பதுதான் உண்மை. எதுவுமே நீடித்த சந்தோஷத்தை தராது என்பதை கண்டு கொள்வதுதான் சந்தோஷத்தை தரும்.  

யாதனின் யாதனின் நீங்கியாங்கு நோதல் 
அதனின் அதனின் இல 

எதில் எதில் இருந்தெல்லாம் விலகி இருக்கிறோமோ அவைகளால் துன்பம் கிடையாது என்று இதைத்தான் வள்ளுவர் சொன்னார். நீங்குதல் என்பது  புறக்கணித்தல் அல்ல எட்டி இருத்தல், டிடாச்மென்ட். இதை பழக்கிக் கொண்டோமானால் வாழ்கை இனிக்கும்! 

பி.கு.: இது ஒரு மீள் பதிவு. பழைய கடிதங்களை படிப்பதை போல, பழைய பதிவுகளை படிப்பதும் ஒரு சுகம்தான். 

27 comments:

  1. இந்தப் பதிவை நீங்கள் முதல் தரம் போட்டபோது நான் இந்த தளத்திற்கு வந்ததில்லை என்பதால் எனக்கு இது புதுசு.

    ReplyDelete
  2. படித்தேன். மறுபடி மறுபடி யோசிக்க வைக்கிறது. எதெது சட்டென நம் மனசுக்குப் பிடிக்கிறதோ, அதெல்லாம் தீது. எதெது சற்றுக் கடினம் என்று மனம் சொல்கிறதோ அதெல்லாம் நன்று. இது உணவு முறைக்கும் பொருந்தும். எனவே ரொம்ப யோசிக்காமல் வாழ்வை ஜாக்கிரதையாக அதன் போக்கில் வாழ்ந்து விடவேண்டியதுதான். ரொம்ப யோசித்தால் புத்தனாகி விடுவோம்!​

    ReplyDelete
    Replies
    1. எனவே ரொம்ப யோசிக்காமல் வாழ்வை ஜாக்கிரதையாக அதன் போக்கில் வாழ்ந்து விடவேண்டியதுதான். ரொம்ப யோசித்தால் புத்தனாகி விடுவோம்!​//

      ஹா ஹா சரியே..ரொம்ப யோசிச்சா மண்டை காயும் அதன் போக்கில் போய்ட்டா பிரச்சனையே இல்லை யெஸ்....

      கீதா

      Delete
    2. @ஶ்ரீராம்: ஜாக்கிரதை என்று நினைப்பதே யோசிப்பதுதானே.

      Delete
  3. தத்துவம்! என்னைப் பொறுத்தவரையில் சந்தோஷம் என்பது ஒரு சின்னக் குழந்தையைப் பார்த்துக் கொண்டே அதன் மூடிய கைகளுக்குள் நம் விரலைக் கொடுத்துவிட்டு அது இறுக்கிப் பிடித்துக் கொண்டே நம்மைப் பார்த்துப் பொக்கை வாயால் சிரிப்பதைப் பார்ப்பது ஒன்று தான்! உலகிலேயே சந்தோஷமான நிகழ்வும், கணமும் அதுவாத் தான் இருக்கும். :)

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். ஆனால் அது நீடித்த சந்தோஷமா?

      Delete
    2. ஆமாம், எத்தனை காலம் நினைச்சாலும் திரும்பத் திரும்ப சந்தோஷத்தைக் கொடுக்கும்! இல்லையா? மற்றபடி அதிராவும் கில்லர்ஜியும் சொல்லி இருப்பதைத் தான் எழுத நினைச்சேன். ஆனால் அதிலும் முழுமை என்பது இருக்கிறதா என்று தெரியவில்லை. மற்றபடி நம்மிடம் இருப்பதை தானம் கொடுப்பது என்பதை நான் சின்ன வயசில் இருந்தே செய்து வருகிறேன். :))))

      Delete
  4. பிறரை சந்தோஷப்படுத்தி மகிழ்வதே சிறந்த, உயர்ந்த சந்தோஷம் என்பது எனது எண்ணம்.

    காரணம் இந்த சிந்தை எல்லோருக்கும் வராது எல்லோராலும் முடியாது.

    மரணத்தின் தருவாயில் இருக்கிறோம் தனது பிள்ளை ஒரு தறுதலையாய் வாழ்கிறது தனக்குப்பிறகு சொத்துக்கள் அனைத்தும் பாழாகும் என்ற உறுதியான நிலைப்பாடு.

    பெற்ற பாவத்துக்காக அவனுக்கு பாதியும், அனாதைகளுக்கு பாதியும் எழுதி வைத்து போக யாரால் முடிகிறதோ... அவரை இறைவன் சொக்கத்துக்கு அனுப்பலாம் ???

    இந்த மனம் எனக்கு இருக்கிறது காரணம் நான் அடிக்கடி சொல்லி வரும் வார்த்தைகள்.

    சிந்தனையை கொடுத்த பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. //பிறரை சந்தோஷப்படுத்தி மகிழ்வதே சிறந்த, உயர்ந்த சந்தோஷம் என்பது எனது எண்ணம்.///

      இதே இதே இதுதான் எனக்கும் பிடித்த சந்தோசம்.. பிறரை மகிழ்ச்சியுற வைத்து அவர் மகிழும்போது கிடைக்கும் சந்தோசம் தான் பெரிதாக தெரியும்..

      Delete
    2. சரியாக சொல்லியிருக்கிறீர்கள் கில்லர்ஜி.

      Delete
  5. எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவமே அனைத்திற்கும் அடிப்படை என்பது என் கருத்து.

    ReplyDelete
    Replies
    1. மனம் பக்குவப்பட்டுவிட்டால் சந்தோஷத்தை நீட்டித்து கொள்ளலாம்.

      Delete
  6. பதிவு எங்களுக்கு புதுசுதான்..ஹாஹாஹா...ஆஜர்....வரோம்..ரொ
    நல்ல பதிவு...நிறைய சொல்லலாம்...சிந்திக்கலாம்..இதைப் பற்றி..வர்ப்பும் அப்பால்.நெட் நஹி...மொபைலில் இருந்து...

    கீதா

    ReplyDelete
  7. துளசி: தத்துவமிக்க பதிவாக இருக்கிறதே! நல்ல பதிவு. ஆனால் டக்கென்று சொல்லிவிட்டுப்போக முடியாதே..எதிலும் பட்டுக் கொள்ளாமல் இருந்தால் துன்ம்பம் இல்லை என்பது ரொம்பச் சரி...

    கீதா: அக்காவ்...கீதையின் தத்துவம் பாபா படப் பாடல் வடிவில் வர...தாமரை இலைமேல் நீர் போல நு முடிச்சுட்டீங்க!! சரிதான்..ஆன்மீக ஞானிகள் பேசுவதெல்லாம் இந்த சந்தோஷம் இல்லையே...பேரானந்தம்...நிறையப் பேர் அந்தப் பேரானந்தத்தை அடைய உதவுகிறோம் என்று பலர் இப்போது சொல்லி வருகிறார்களே பானுக்கா....

    ReplyDelete
  8. இந்த சந்தோஷம் எங்கிருக்கு என்ற வரிகளை யார் கேட்டாலும்..எனக்கு உடன் நினைவுக்கு வருவது ஜேசுதாஸ் கச்சேரியில் பாடியிருக்கும் பாடல்..."இல்லாததை நினைத்து வருந்துகிறான் அது எட்டாததை நினைத்து கொட்டாவி விடுகிறான்...எல்லாம் மனதுள் இருக்க இன்பம் அது எங்கே என்று தேடுகிறான் வெளியில் என்று அர்த்தம்...இவைதான் வரும் ஆனால் மிகச் சரியாக வரிகள் நினைவில் இல்லை...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நம் சந்தோஷம் வெளி விஷயங்களில் இல்லை என்பது முதல் தெளிவு. அடுத்தது அதை நீட்டித்துக் கொள்வது. ஆனால் இதெல்லாம் புரிவதற்குள் நமக்கு வயதாகி விடுகிறதே:((

      Delete
  9. கில்லர்ஜி உங்கள் எண்ணம் பலருக்கும் உண்டு. பிறரை சந்தோஷப்படுத்துவது கூட நாம் அவருக்கு நலல்து சந்தொஷம் தரும் என்று செய்வது பல சமயங்களில் அவர்களுக்கு அது வருத்தம் அளிப்பதாகவே இருப்பதும் நடக்கிறது...

    அது நம் குழந்தைகளாக இருந்தாலும் சரி, உலகினராக இருந்தாலும் சரி. ஒரு அனாதை இல்லத்திற்கு ஒருவர் பல சொத்துக்களை எழுதி வைத்துவிட்டுப் போய்விட்டார். அந்த இல்லத்தை நிறுவியவர் ஒரு வயதுக்கு மேல் புலம்பியது....அவர் பாட்டுக்கு எழுதிவைத்த்துவிட்டுப் போய்ட்டார். இதை எலலம் கட்டிக் காத்துப் பராமரித்து ரொம்ப சிரமமா இருக்கு. அதுக்குத்தான் சொல்லிருக்காங்க போல எதுவுமே அளவா இருக்கணும்னு. ஒரு அளவுக்கு மேல போச்சுனா துன்பம்தான் அது தானமாகவே இருந்தாலும்...என்று சொல்லியது என்னைச் சிந்திக்க வைத்தது. இது இப்போது நடந்ததல்ல நான் கல்லூரி முடிந்து வேலை தேடிக் கொண்டிருந்த நேரத்தில்..நம்மைப் பொருத்தவரை அவர் கொடுத்துவிட்டுப்போனது எவ்வளவு நல்ல விஷயம்...மகிழ்வான விஷயம்...அதே போல் ஒரு வயதானவர் அவருக்கு யாரும் இல்லை. அவருக்கு உதவ பலரும் தயாராக இருந்தாலும் அவர் எல்லாவற்றையும் ஏற்கவில்லை. மிக மிகக் குறைவாகத் தனக்கு வேண்டியய்தை மற்றும் பெற்றுக் கொண்டார். வசதிகள் எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்... வயதாகிறதே ஒரு மெத்தை கூட வேண்டாமா என்று வாங்கிக் கொடுக்க ஆள் இருந்தும் அவரோ இல்லை தரையில்தான் பாயில் படுப்பார். அது போல ஃபேன் கூட இல்லாமல்.....ஸோ எதுவுமே ஜி நம் பார்வையில், எண்ணத்தில், மனப்பக்குவத்தில்தான் இருக்கிறது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ///கில்லர்ஜி உங்கள் எண்ணம் பலருக்கும் உண்டு. பிறரை சந்தோஷப்படுத்துவது கூட நாம் அவருக்கு நலல்து சந்தொஷம் தரும் என்று செய்வது பல சமயங்களில் அவர்களுக்கு அது வருத்தம் அளிப்பதாகவே இருப்பதும் நடக்கிறது...///

      ஹா ஹா ஹா அது கீதா, சந்தோசப்படுத்துகிறேன் பேர்வழி என வெளிக்கிட்டு ஓவர் டோச்சர் கொடுப்பது:)).. என்னைப் பொறுத்து சின்ன சின்ன விசயங்களில்.. ஒரு உதாரணத்துக்கு எனக்கு ஒரு கிஃப்ட் கிடைக்கும்போது நான் மகிழ்வதைக் காட்டிலும், அடுத்தவருக்கு ஒரு கிஃப்ட் குடுத்து அதை திறக்கும்போது அவர் முகத்தில் தெரியும் அந்த சந்தோசத்தைப் பார்க்கும்போது எனக்கு வரும் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும்... இது சும்மா சொல்லவில்லை உண்மையில் சொல்கிறேன்..

      எனக்கு நேரில் ஒருவரோடு பழகி பிடிச்சு விட்டால், உடனடியாக என் மனதில் தோணும் எண்ணம்.. அவர்களுக்கு பிடிச்ச ஸ்பெஷல் உணவு ஏதும் செய்து குடுப்பமே.. அது வாங்கி குடுப்பமே.. இது வாங்கிக் குடுப்பமே என்பதுதான்.

      Delete
  10. ஸ்ரீராமைப்போல எனக்கும் இது[போஸ்ட்] புதுசுதான் பானுமதி அக்கா.

    மிக அழகான அலசல்.

    ஆனா சந்தோசத்துக்கு வரையறை உண்டா?:).. இதுவும் இலக்கியத்துக்கு வரையறை உண்டா என்பதைப்போலவே இருக்கு.

    ஏனெனில் ஒவ்வொருவரின் மகிழ்ச்சியும் ஒவ்வொரு வகையாக இருக்கும். சிலருக்கு நல்ல சுவையான உணவு சாப்பிடுவதில் சந்தோசம்.. சிலருக்கு நன்கு நித்திரை கொள்வதில் சந்தோசம் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

    ReplyDelete
  11. ///Pleasure- what is it that gives one pleasure? Physical?mental?emotional? which is lasting pleasure?

    நான் தமிழில் சிந்திப்பதால் இதை தமிழ் படுத்துகிறேன். ஒருவருக்கு எது சந்தோஷத்தை கொடுக்கிறது? புலனின்பமா? அறிவு சார்ந்த இன்பமா? இல்லை உணர்வு சார்ந்த இன்பமா? எந்த இன்பம் நீடித்திருக்கும்?///

    என்னைப் பொறுத்து பிரித்துப் பிரித்துப் பார்ப்பதே தப்பாகப் படுது... இவை மூன்றும் ஒருவருக்கு சரியாக அமைந்திருந்தாலே அது இறுதிவரை மகிழ்ச்சியைக் குடுக்கும்:)

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் அதிரா! அடிச்சீங்க சிக்ஸர்!

      Delete
    2. கில்லர்ஜி முன் மொழிந்து, அதிரா வழி மொழிந்ததைப் போல பிறரை மகிழ வைக்கும் பொழுது கிடைக்கும் இன்பம் கொஞ்சம் நீடித்தது என்று தோன்றுகிறது.

      Delete
    3. இந்த விஷயத்தில் தி/கீதாவின் கருத்தே எனக்கும். ஏனெனில் நான் இதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்! பிறருக்குச் சமைத்துப் போட்டுச் சாப்பிடுகையில் அவங்க ரசிச்சும், நன்றாகவும் சாப்பிட்டால் அதில் மனதில் ஓர் திருப்தி! என் கணவரின் நண்பர் வீட்டில் மராமத்து வேலைகள் செய்த சமயம் சாப்பிட எங்க வீட்டுக்கு வந்தார். திடீரென வந்ததால் தோசை மாவு தான் இருக்குனு தோசை வார்த்துக் கொடுத்துக் காஃபி போட்டுக் கொடுத்தேன். அப்பாடா! இப்போத் தான் உயிர் வந்தது! என்று அவர் சொன்னப்போ மனதில் ஓர் நிறைவு. அது சந்தோஷமா! தெரியாது! ஆனால் அந்த நிறைவுக்கு ஈடு எதுவும் இல்லை.

      Delete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. 'நீடித்த' என்பது இப்படியான பதிலுக்காகவே சேர்த்துக் கொண்ட வார்த்தை போலிருக்கிறது. வாழ்க்கையில் நீடித்த என்று எதுவுமே கிடையாது. எல்லா சுகங்களுமே அதற்கு மேல் அதற்கு மேல் என்று எதிர்பார்க்கிற ஒன்று. ஒவ்வொன்று சுகமும் அது அளிக்கிற சுகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும். அப்படி நகர்வதற்கு அடிப்படை எதிலும் திருப்தி அடையாத மனப்பாங்கு. திருப்தி அடைகிறவர்களுக்கு நீடித்த என்று எதுவும் தோன்றாது. அதனால் திருப்தியை முக்கியப்படுத்தினால் நீடித்த என்பது அவசியமில்லாத ஒன்று.

      //எதில் எதில் இருந்தெல்லாம் விலகி இருக்கிறோமோ அவைகளால் துன்பம் கிடையாது.. //

      இது எஸ்கேபிஸம் இல்லையா?..

      Delete
    2. //'நீடித்த' என்பது இப்படியான பதிலுக்காகவே சேர்த்துக் கொண்ட வார்த்தை போலிருக்கிறது.//
      அப்படி இல்லை. என் தோழி முக நூலில் ஆங்கிலத்தில் கேட்டிருந்ததை தமிழில் மொழி பெயர்த்தேன்.

      //எதில் எதில் இருந்தெல்லாம் விலகி இருக்கிறோமோ அவைகளால் துன்பம் கிடையாது.. //
      இது எஸ்கேபிஸம் இல்லையா?..

      விலகி இருப்பது என்பது வெறுப்பதோ, விட்டு ஓடுவதோ இல்லை. பற்று இல்லாமல் இருப்பது.

      Delete
    3. மற்றவர்கை விட,வித்தியாசமாக யோசித்திருக்கிறீர்கள். வருகைக்கு நன்றி!

      Delete