கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, May 18, 2018

மஹா நடி(விமர்சனம்)


மஹா நடி(விமர்சனம்)



மஹா நடிகையாகிய சாவித்திரி கோமாவில் விழுவதில் துவங்கும் படம், தொய்யாமல், துவளாமல் சீராக ஓடுகிறது.

ஒரு பத்திரிகையில் நிருபராக பணியாற்றும் சமந்தாவிடம் கோமாவில் இருக்கும் சாவித்திரியைப் பற்றிய செய்தியை கவர் செய்யச் சொல்லி பணிக்கிறார் அந்த பத்திரிகை ஆசிரியர். வேண்டா வெறுப்பாக அந்தப் பணியை ஏற்றுக் கொள்ளும் சமந்தா  சாவித்திரி பற்றி திரட்டும் தகவல்கள் அழகான ஓவியமாக திரையில் விரிகிறது.

பயோ பிக் என்பது சற்று சவாலான விஷயம். அதுவும் மிகச் சமீபத்தில் மறைந்த ஒருவரைப் பற்றி, இன்னும் மக்கள் மனதிலும், நினைவிலும் இருக்கும் ஒருவரைப் பற்றி திரைப் படம் எடுக்க வேண்டும் என்பது கயிற்றில் நடக்கும் வித்தை. ஜாம்பவான்களே இடறி விழும் இதில் அனாயசமாக நடந்திருக்கிறார் இளம் இயக்குனர் நாக் அஸ்வின்.

செட்(சில இடங்களில் செட் என்று தெரிந்தாலும்), உடைகள், அந்த காலத்திய வாகனங்கள், நட்சத்திர தேர்வு என்று அத்தனையிலும் டிஸ்டிங்ஷன் வாங்கியிருக்கிறார்.

குறிப்பாக நட்சத்திர தேர்வை சொல்ல வேண்டும். இதுவரை பெரிதாக நடிப்பில் எதுவும் சாதிக்காத சின்னப் பெண் கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாகவா? குருவி தலையில் பனங்காய் வைத்தது போல் ஆகி விடாதா? என்ற எண்ணத்தை உடைத்து, சாவித்திரியாகவே வாழ்ந்திருக்கிறார் கீர்த்தி. அந்த குழந்தை சிரிப்பு, கையை ஆட்டி, கால்களை சற்றே அகட்டி வைத்து நடக்கும் கொஞ்சம் ஆண்பிள்ளைத்தனமான நடை, முகத்தில் படரும் மெல்லிய சோகம் இதையெல்லாம் பார்க்கும் பொழுது கீர்த்திதான் நடித்திருக்கிறாரா? அல்லது சாவித்திரியின் ஆன்மா இந்தப் பெண்ணின் உடலுக்குள் புகுந்து கொண்டு விட்டதா என்று தோன்றுகிறது. இந்த வருடம் விருதுகளை அள்ளப் போகிறார்.அவருடைய திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல் கல் இந்தப் படம்.

சாவித்திரியின் பெரியப்பாவாக நடித்திருக்கும் நடிகர் சிறப்பாக நடித்திருக்கிறார்.

ஜெமினி கணேசனாக நடித்திருக்கும் துல்கர் சல்மானும் தன் பங்கை நன்றாக செய்திருக்கிறார். ஜெமினி, சாவித்திரி காதல் காட்சிகள் க்யூட்!. சாவித்திரியின் வெகுளித்தனம், அவரும் அவர் பெரியப்பா சம்பந்த்தப்பட்ட சினிமாவில் வாய்ப்பு தேடும் ஆரம்ப காட்சிகள் ஸ்வாரஸ்யம்! ஜெமினியும், சாவித்திரியும் பிரியும் காட்சிகள் சற்று வேகமாக நகர்ந்து விடுகின்றன. பெரும்பாலான தெலுங்கு நடிகர்களுக்கிடையே பானு ப்ரியா, ப்ரகாஷ் ராஜ், மனோபாலா போன்ற நமக்கு தெரிந்தவர்களும் இருக்கிறார்கள். சிறு வேடமென்றாலும் மனதில் நிற்கிறார்கள். பாடல்கள் அவ்வளவாக கவரவில்லை. ஆனால் பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது.

நடிப்பைத் தவிர சாவித்திரியின் கார் ஓட்டும் திறமை, பெரிதாக கொலு வைப்பது, ராணுவ வீரர்களுக்காக தன் நகைகளை கழட்டி கொடுப்பது, தான் கஷ்டப்படும் பொழுதும் ஏழைகளுக்கு உதவுவது, பெரிய நடிகையாக இருந்த போதும், ஒட்டடை அடிப்பது போன்ற வேலைகளை செய்யும் சாதாரண குடும்ப பெண்ணாக வாழ்ந்தது, பின்னாளில் மதுவுக்கு அடிமையானது போன்ற பல விஷயங்களை காண்பித்தவர்கள் அவருக்கும் சந்திரபாபுவுக்கும் இருந்த நட்பையும் கோடிட்டாவது காட்டியிருக்கலாம்.  
அதே போல சாவித்திரி என்றாலே நம் நினைவுக்கு வரும் நவராத்திரி, கை கொடுத்த தெய்வம் போன்ற படங்கள் இடம் பெறாதது கொஞ்சம் குறை.

சமந்தாவை இன்னும் கொஞ்சம் அழகாக காண்பித்திருக்கலாமோ? திக்கு வாய் பெண்ணாக சித்தரிக்கபடும் அவர் சில சமயம் அப்படியும், சில சமயங்களில் சாதாரணமாகவும் பேசுகிறார். அவருடைய காதலனாக நடித்திருக்கும் நடிகர் கச்சிதம்.

ஜெமினி கணேசனுக்கு இன்னும் கொஞ்சம் கௌரவம் கொடுத்திருக்கலாம்.

சாவித்திரிக்கு மரணம் கிடையாது, அவர் படங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் என்று முடித்திருப்பது நன்றாக இருக்கிறது.

26 comments:

  1. குட்மார்னிங்.

    பற்பல விமர்சனங்கள் படித்துவிட்டேன். எல்லோரும் ஒரு மனதாகப் பாராட்டுகிறார்கள். இது போன்ற வா.வ படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெறுவது கஷ்டம். இது ஜெயித்திருக்கிறது போல. ஆனால் துல்ஹரைப் பார்த்தல் ஜெமினி வாசனையே இல்லை என்றும், தமிழ்ப் படங்களின் பங்களிப்பை சுத்தமாக மறந்து விட்டார்கள் என்றும் விமர்சனங்களில் படித்தேன். சமந்தா காதல் காட்சிகளை வேண்டாம் என்று சொன்னவர்கள் கணிசமான அளவு.

    ReplyDelete
    Replies
    1. //தமிழ்ப் படங்களின் பங்களிப்பை சுத்தமாக மறந்து விட்டார்கள்//
      "இது தெலுங்கில் எடுக்கப்பட்ட படம். தமிழ் ரசிகர்களுக்காக தெலுங்கில் டப் செய்திருக்கிறார்கள்.எல்லாவற்றையும் எடுக்க வேண்டுமென்றால் மூன்று மணி நேரம் போதாது" என்று விஜய சாமுண்டீஸ்வரி கூறியிருக்கிறார்.
      துல்கர் சல்மானை பொறுத்தவரை வேஷப் பொருத்தம் எப்படியிருந்தாலும் நடிப்பு சூப்பர்!

      Delete
  2. நல்லதொரு விமரிசனம். பெரும்பாலோர் பாராட்டி உள்ளார்கள். படம் எங்கே பார்த்தீர்கள்? தியேட்டரிலா? எனக்குத் தியேட்டரில் போய்ப் பார்க்கும் அளவு எருமை, சேச்சே, அதிராவோட பாஷை இங்கே எங்கே வந்தது? பொறுமை இல்லை. யூ.ட்யூபில் பார்க்கலாமா? சொல்லுங்க! இதுவும் எஸ். பாலச்சந்தரின் பொம்மைப் படமும் பார்க்கணும். தேடினால் கிடைக்கவே இல்லை. :(

    ReplyDelete
    Replies
    1. // போய்ப் பார்க்கும் அளவு எருமை, சேச்சே, அதிராவோட பாஷை இங்கே எங்கே வந்தது? பொறுமை இல்லை. //

      ஹா... ஹா... ஹா... அதிரா எல்லோரையும் பாதிக்கிறார்!

      Delete
    2. ஆமாம், பானு அக்கா நல்லா விமர்சனம் எழுதி இருக்கார். படம் ரசித்துப் பார்த்திருக்கிறார்.

      Delete
    3. எனக்கு என்னவோ தியேட்டரில் போய் பார்த்தால்தான் நிறைவு. வருகைக்கு நன்றி.

      Delete
  3. மேலுள்ள இரு படங்களுக்கும் நகை, உடை, தலைப்பூ, நெற்றிப் பொட்டு ஆகியவற்றில் வித்தியாசம் இல்லைனாலும் சாவித்திரி அதில் கடைக்கண்களால் ஜெமினியைப் பார்க்கிறார். ஜெமினியும் அதே! ஆனால் கீர்த்தி சுரேஷும், துல்கரும் நேர்ப்பார்வை பார்க்கின்றனர். காதல் பார்வை மிஸ்ஸிங்! :)))))

    ReplyDelete
    Replies
    1. //சாவித்திரி அதில் கடைக்கண்களால்
      ஜெமினியைப் பார்க்கிறார் ஜெமினியும் அதே.ஆனால் கீர்த்தி சுரேஷும், துல்கரும் நேர்ப்பார்வை பார்க்கின்றனர். காதல் பார்வை மிஸ்ஸிங்! :)))))// அக்கா உங்கள் பார்வை சூப்பர்! நான் இதை கவனிக்கவே இல்லை.

      Delete
  4. மேலே உள்ள படத்தில் இருக்கும் கீர்த்தி அப்படியே அவர் அம்மாவைப் பிரதிபலிக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. அது யாரு அவர் அம்மா??????????????????? மீ மக்கு சினிமாச் செய்தியில். :)

      Delete
    2. ஓஓ, நீங்க சொன்னதும் மறுபடி பார்த்தேன். சின்ன வீடு மேனகாவா? கொஞ்சம் கொஞ்சம் சாயல் இருக்கோ! தெரியலை எனக்கு! மேனகா நிறையப் படத்தில் நடிச்சதாத் தெரியலையே!

      Delete
    3. சின்னவீடா? OMG... அதுல அவங்க இல்லையே... நெற்றிக்கண், சாவித்ரி (அறிமுகம்) போன்ற படங்கள்.

      Delete
    4. பாக்யராஜுக்குச் சின்ன வீடா நடிச்சது மேனகா இல்லையா? மனைவியாக நடிச்சவங்க ஊர்வசியின் அக்கா! இப்போ இல்லைனு நினைக்கிறேன்.

      Delete
  5. பார்க்க தூண்டும் விமர்சனம்...

    ReplyDelete
  6. குறையே காணாமல் நான் முழுமையாக ஆர்வத்தோடு அண்மையில் பார்த்த படம். கீர்த்திசுரேஷைப் பார்த்தால் இனி நம் முன் சாவித்திரிதான் தோன்றுவார். அசாத்திய நடிப்பு. ஒவ்வொரு காட்சியையும் ரசித்துப் பார்த்தேன். ஆரம்பக்காட்சி மனதை உலுக்கியது. விமர்சித்த விதம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. //கீர்த்திசுரேஷைப் பார்த்தால் சாவித்திரிதான் இனி நம் முன் தோன்றுவார்//
      ஆமாம். இது ஒரு வகையில் பாதிப்புதான். வருகைக்கு நன்றி.

      Delete
  7. பார்க்க ஆவலைத் தூண்டும் விமர்சனம்.

    ReplyDelete
  8. அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள் இன்னும் பார்க்கவில்லை பார்த்துவிடுவேன் வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி. கண்டிப்பாக பாருங்கள்.

      Delete
  9. நல்ல விமர்சனம்,.
    அத்தனையும் உண்மை. பார்த்துவிட்டு மீதி விமர்சனம் சொல்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. அவசியம் பாருங்கள்.

      Delete
  10. அருமையான கண்ணோட்டம்
    தொடருவோம்

    ReplyDelete