கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, July 8, 2018

வாகன விசேஷங்கள்


வாகன விசேஷங்கள்


இந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு வாகனம் உண்டு. கோவில்களில் அந்தந்த கடவுளுக்கான வாகனமும் ஒவ்வொரு சன்னிதியிலும் ப்ரதிஷ்டை செய்யப் பட்டிருக்கும். அவை பெரும்பாலும் ஸ்வாமியை நோக்கியே நிறுவப் பட்டிருக்கும். மேலும் அந்த சன்னிதியில் இருக்கும் கடவுளர் எந்த திருக்கோலத்தில் இருக்கிறார்களோ, அதற்கேற்றார் போலத்தான் வாகனங்கள் இருக்கும். 


ஸ்ரீரெங்கத்தில் பெருமாள் அரிதுயில் கொண்டிருக்கிறார். அவர் எப்போது கூப்பிட்டாலும் புறப்பட தயாராக கருடன் காத்திருப்பதால் மற்ற கோவில்களைப் போல நின்ற கோலத்திலோ, வீராசனத்திலோ இல்லாமல் வித்தியாசமாக அமர்ந்த கோலத்தில் இருக்கிறார்.   
சமீபத்தில் கீதா அக்கா அவர்கள் ‘கருடா சௌக்கியமா?’ என்னும் பதிவில் இதை குறிப்பிட்டிருந்தார்.

இதன்படி அந்தந்த கோவிலின் தல வரலாற்றுக்கேற்றபடி வாகனங்கள் இருக்கும் நிலை மாறுகிறது. அப்படி வித்தியாசமாக வாகனங்கள் அமைந்திருக்கும் சில கோவில்களை பார்க்கலாமா?

சாதாரணமாக முருகனுக்கு வாகனமாக மயில்தான் எல்லா கோவில்களிலும் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் எங்கெல்லாம் தேவயானை தனி சன்னிதியில் இருக்கிறாளோ அங்கெல்லாம் யானைதான் வாகனமாக முருகன் சன்னிதியின் முன் ப்ரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். காரணம், இந்திரன் தன் மகளான தேவயானையை முருகனுக்கு மணம் முடித்து கொடுத்த பொழுது, தன்னுடைய யானையான ஐராவதத்தையும் அனுப்பி வைத்தாராம்(காரோடு பெண்ணை அனுப்பி வைப்பதை போல). திருத்தணியில் அந்த யானை முருகனை நோக்கி இராமல், தன் எஜமான் தேவேந்திரன் எப்பொழுது வருவார்? என்று எதிர்பார்த்தபடி வாயிலை நோக்கி இருக்கும்.


எங்கள் சம்பந்தியின் குல தெய்வமான, மாயவரத்திற்கு அருகில் இருக்கும் பெரம்பூர் என்னும் ஊரில் இருக்கும் சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் தேவயானைக்கு தனி சன்னிதி உண்டு. எனவே,அங்கு கோவில் உள்ளே யானை வாகனமும், பிரதான வாயிலில் மயில் வாகனமும் காணப்படும். 


சென்னையில் இருக்கும் திருமுல்லைவாயிலில் உறையும் மாசிலாமணீஸ்வரர் குறும்பர்களை போரில் வெல்ல தொண்டைமானுக்கு உதவுவதற்காக நந்தியம்பெருமானை அனுப்பி வைத்தாராம். அதனால் அங்கு சிவனுக்கு எதிரே இருக்கும் நந்தியும் வாயிலை நோக்கிதான் இருக்கும்.


திருப்புங்கூரில் நந்தனாருக்காக நந்தியை விலகியிருக்கச் சொன்ன சிவ பெருமான், பட்டீஸ்வரத்தில், ஞானசம்பந்தர், பக்தர்கள் புடை சூழ தாளமிட்டு பாடிக்கொண்டே வரும் அழகை கண்டு ரசிக்க விரும்பி, அந்த காட்சியை மறைக்காமல் நந்தியை கொஞ்சம் விலகச் சொன்னாராம். அதனால் அங்கும் நந்தி சிவனுக்கு நேராக இல்லாமல் சற்று விலகி இருக்கும்.

சாதாரணமாக எல்லா சிவாலயங்களிலும் சிவ லிங்கம், நந்தி, பலி பீடம், கொடி மரம் எல்லாம் ஒரே நேர் கோட்டில் அமைந்திருக்கும். ஆனால் வக்ர காளியம்மன் கோவில் என்று பிரபலமாக அறியப்படும் திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் பெயருக்கு ஏற்றார் போல் எல்லாமே வக்கிரமாக, ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருக்கும்.

காசிக்கு இணையான தலமான ஸ்ரீவாஞ்சியதில் இரண்டு நந்திகள் உண்டு.
ஒரு முறை மஹாவிஷ்ணுவிற்கும், ஸ்ரீதேவிக்கும் சிறு ஊடல். கணவனிடம் கோபித்துக் கொண்ட மஹாலக்ஷ்மி தன் சகோதரனாகிய சிவபெருமானைத் தேடி வந்து விடுகிறாள். பிரிவாற்றாமையில் வாடிய மஹாவிஷ்ணு, தன் மனைவியோடு தன்னை சேர்த்து வைக்க வேண்டி *ஸ்ரீவாஞ்சியம் வந்து சிவனைக் குறித்து தவம் இயற்றுகிறார். அதுவும் சிவனுக்கு நேரே அமராமல், அவருக்கு பின்புறம் அமர்ந்து தவம் செய்கிறார்(attention seeking?). மஹவிஷ்ணுவிற்கு அருளும் பொருட்டு பின்புறம் சென்று விடுகிறார் சிவ பெருமான். அதனால், ப்ரகாரத்தின் பின்புறம் இன்னொரு நந்தி உண்டு. முன்புறம் இருக்கும் நந்தி, பின்புறம் சென்றிருக்கும் சிவபெருமான் வருகிறாரா என்று எதிர்பார்த்தபடி முகத்தை பின்னால் திருப்பிக்கொண்டிருக்கும். 

*ஸ்ரீ ஆகிய மஹாலக்ஷ்மி மீது வாஞ்சையோடு அதாவது பிரியத்தோடு மஹாவிஷ்ணு இங்கு வந்ததால்தான் இத்தலம் ஸ்ரீவாஞ்சியம் என அழைக்கப்படுகிறது. கணவன், மனைவி ஒற்றுமை ஓங்கவும், பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேரவும் இங்கு வந்து வழிபடுவது நல்லது.  

20 comments:

  1. சுவாரஸ்யமான தகவல்கள். ஸ்ரீவாஞ்சியம் இந்த ட்ரிப்பில் சென்று வந்தோம். இரண்டு நந்தி பார்த்தோமா என்று நினைவில்லை. கோவிலில் விவரம், விளக்கம் சொல்லும்போது கையில் ஒரு ரெக்கார்டரை வைத்து பதிவு செய்துகொண்டிருக்க வேண்டும் என்று தோன்றியது.

    ஸ்ரீரங்கம் கருடன் படம் அபாரம்.

    ReplyDelete
    Replies
    1. // ஸ்ரீவாஞ்சியம் இந்த ட்ரிப்பில் சென்று வந்தோம். இரண்டு நந்தி பார்த்தோமா என்று நினைவில்லை.//
      பெரும்பாலானோர் பார்ப்பதில்லை. அங்கிருக்கும் அர்ச்சகரை பொறுத்ததுதான் தகவல்கள். படம் கூகிள் உபயம். நன்றி!

      Delete
  2. புராண விடயங்கள் நன்று.
    புகைப்படம் சமீபத்தில் கட்செவியில் வந்தது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ!. கட்செவி..??

      Delete
  3. ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  4. புதுத்தகவல்கள்..

    //ஆனால் எங்கெல்லாம் தேவயானை தனி சன்னிதியில் இருக்கிறாளோ அங்கெல்லாம் யானைதான் வாகனமாக முருகன் சன்னிதியின் முன் ப்ரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். //

    ஓ இப்போதான் காரணம் அறிகிறேன்..

    ReplyDelete
  5. அனைத்துத் தகவல்களும் மிகுந்த சுவாரஸ்யமாக இருந்தது மட்டுமல்லாமல் சில தகவல்கள் மிகவும் அரியதாய், இதுவரை அறியாததாய் இருந்தன.

    ReplyDelete
  6. அநேகமாகத் தெரிந்த செய்தி என்றாலும் நினைவூட்டிக் கொள்ள ஒரு வாய்ப்பு! ஶ்ரீவாஞ்சியம் நாங்கள் சில வருடங்கள் முன் போனோம்.

    ReplyDelete
  7. நாச்சியார் கோவிலில் வாகனம்கருடன் கல் கருடன் என்கிறர்கள் அதன்மேலா ஊர்வலம் தெரியவில்லை ஆனால் கருடன் மிகவும் கனமான வாகனம்

    ReplyDelete
    Replies
    1. http://garudasevai.blogspot.com/2008/10/3.html இந்தச் சுட்டியில் பாருங்கள் ஐயா! விபரங்களைத் தெளிவாய்க் கொடுத்திருக்கார் திரு கைலாஷி அவர்கள். நானும் நாச்சியார் கோயில் போயிட்டு வந்து எழுதினேன். ஆனால் அது கிடைக்கவில்லை.

      Delete
    2. நாச்சியார் கோவிலில் கல் கருடன்தான் வாகனம். அதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் கருடனின் பீடத்திலிருந்து புறப்படும் பொழுது அதை நான்கு பேர் சுமப்பார்களாம், முதல் வாசல்படியை தாண்டும் பொழுது எட்டு பேரும், வெளிவாசலுக்கு வரும் பொழுது 16 பேரும், தெருவில் 32 பேரும் சுமக்க வேண்டி வருமாம். அதனுடைய எடை படிப்படியாக அதிகரிக்கும் என்கிறார்கள். அதே போல திரும்பி வரும் பொழுது அதன் எடை படிப்படியாக குறைந்து விடுமாம். இன்றளவும் விஞ்ஞானம் விளக்க முடியாத ஒரு அதிசயம் இது.
      வருகைக்கு நன்றி.

      Delete
  8. ஸ்ரீ வாஞ்சியம் சென்றிருக்கிறேன்...
    இரட்டை நந்தி பார்த்ததாக நினைவில்லை.
    திரு ஆரூரில் வீதிவிடங்கர் முன்பாக நின்ற கோலத்தில் நந்தியைக் காணலாம்...

    தஞ்சாவூர் பெரிய கோயில் நந்தியின் கழுத்தில் சிவலிங்க மாலையைக் காணலாம்...

    இன்னும் நிறைய உள்ளன....

    நல்ல பதிவு.. வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. //திரு ஆரூரில் வீதிவிடங்கர் முன்பாக நின்ற கோலத்தில் நந்தியைக் காணலாம்...
      தஞ்சாவூர் பெரிய கோயில் நந்தியின் கழுத்தில் சிவலிங்க மாலையைக் காணலாம்...//

      இது போல அவரவர் தெரிந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதால்தான் எனக்கு தெரிந்து விஷயங்களை எழுதினேன். ஜி.எம்.பி. சார் நாச்சியார் கோவில் கருடன் பற்றி கூறியிருந்தார்.
      நன்றி!

      Delete
  9. அருமையான தகவல்கள்...

    ReplyDelete
  10. பானுமதி, உங்க புது போஸ்ட் வெளியாகி இருப்பதாக எ.பி. சொல்கிறது. இங்கே வந்தால் இல்லை! :(

    ReplyDelete