கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, July 10, 2020

You are cordialy invited....

You are cordialy invited....



திருமணத்தில் ஒரு முக்கியமான அம்சம் அழைப்பிதழ்கள். லக்கின பத்திரிகை எழுதுவது என்பது ஒரு முக்கியமான சடங்கு. குடும்பத்தில் இருக்கும் பெரியவர் அழைப்பதாகத்தான் பத்திரிகைகள் அச்சிடப்படும். 

கல்யாண பத்திரிகைகள் மஞ்சள் மற்றும் பிங்க் நிறத்தில்தான் இருந்தன. பத்திரிகையின் முதல் பக்கத்தில் ஆங்கிலத்திலும், உள்ளே தமிழிலும் அச்சிடப்பட்ட அந்த அழைப்பிதழ்களில் வாக்கியங்களும் ஒரே மாதிரிதான் இருக்கும். இப்போதோ பத்திரிகைகள் மட்டுமல்ல அதில் இடம் பெறும் வாசகங்களும் பலவிதம். மணமக்கள் தாங்களே அழைப்பது போன்றவை, மணமக்களின் சகோதரன் அல்லது சகோதரன் தங்களின் நண்பர்களுக்காக தனியாக பத்திரிகைகள் அடிக்கின்றனர். 


என் பெற்றோர்கள் திருமணம் நடந்த காலம் இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயம் என்பதால் கெஸ்ட் கண்ட்ரோல் இருந்ததாம். அதனால்(இந்த கோவிட் காலத்தில் 20 பேர்களுக்குத்தான் அனுமதி என்பது போல) அதனால் எங்கள் பெற்றோரின் திருமண அழைப்பிதழில் பத்திரிகையில் கீழே 'தாங்கள் வரும்பொழுது தங்கள் ரேஷனை கொண்டு வரவும்' என்று அச்சிடபட்டிருந்தது.  அதாவது ஊரிலிருந்து வந்தவர்கள் தங்களுடைய ரேஷனை கொண்டு வந்து அதைத்தான் சமைத்து சாப்பிட்டார்கள் என்று காட்டுவதற்காக இந்த ஏற்பாடு. 

கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முந்தைய பத்திரிகை கிடைத்தால் பாருங்கள் அதில் 'நான்கு நாட்கள் முன்னதாகவே வந்திருந்து' என்று போட்டிருப்பார்கள். அது கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து, முகூர்த்தத்திற்கு மட்டும் அழைக்கும் ஒரு பத்திரிகை, ரிசப்ஷனுக்கு மட்டும் அழைக்கும் பத்திரிகை என்று நம்முடைய விருந்தோம்பல் தேய்ந்து விட்டது.  


இப்போதைய கொரோனா காலத்தில் இருபது பேர்களைத்தான் திருமணத்திற்கு அழைக்க முடியும், மற்றவர்கள் ஆன் லைனில் பார்க்கும் வண்ணம் லைவ் ஸ்ட்ரீமிங்கிற்கு ஏற்பாடு செய்து விடுகிறார்கள்.இப்போது பத்திரிகைகளில் லைவ் ஸ்ட்ரீமிங்க்கான கோடை அச்சிட்டு வருகின்றன. அதை ஸ்கேன் பண்ணினால் லைவ் ஸ்ட்ரீமிங் பார்க்க முடியும். 



பட்டணத்தில் பூதம் படத்தில் செய்தித் தாளிலேயே 'நான் ஆணையிட்டால்,அது நடந்து விட்டால்..' பாடலையும், 'பாட்டும் நானே, பாவமும் நானே ..' பாடலையும் ஜீ பூம் பா ஓட்டுவார். அது போல எதிர்காலத்தில் திருமண அழைப்பிதழிலேயே திருமணத்தை ரசிக்கும் பாக்கியம் கிடைக்கலாம்.  

 


37 comments:

  1. ம்.... நவீனம் என்று சொல்லி கொண்டே நம் அடையாளங்களை இழந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். வருகைக்கு நன்றி.

      Delete
  2. என்னென்னவோ மாற்றங்கள் வந்துவிட்டன! இதுவும் ஒண்ணு! ஆனாலும் கல்யாணங்களுக்குப் போகவோ, அங்கே கொடுக்கும் சாப்பாடைச் சாப்பிடவோ கொஞ்சம் யோசனையாத் தான் இருக்கு. இங்கே குடியிருப்பு வளாகத்திலேயே நடந்த விழாவுக்கு நாங்க போகலை.

    ReplyDelete
    Replies
    1. மாற்றங்கள் ஒன்றேதான் மாறாதது,இல்லையா?

      Delete
  3. ஜீ பூம்பா பிடித்த திரைப்படப் பாத்திரம். அந்தப் படத்தைத் திரை அரங்கிலும் பார்த்தேன். பின்னால் தொலைக்காட்சியில் வந்தப்போவும் பார்த்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆனா அந்த சைஸ் திருப்பதி லட்டை, திருப்பதியிலேயே நான் பார்த்ததில்லை.

      Delete
    2. படத்தின் பெயர் பட்டணத்தில் பூதம்! எப்போதும் பார்க்கக்கூடிய படம். நன்றி கீதா அக்கா.

      Delete
    3. @நெல்லைத் தமிழன்: ப.பூ.அறுபதுகளின் இறுதியில் வந்த படம். அந்த சமயத்தில் திருப்பதி லட்டு ஒரு வேளை இந்தப் படத்தில் காட்டும் சைஸில் இருந்திருக்கலாம். 1988இல் நாங்கள் திருக்கல்யாணம் செய்தோம், அப்போது பிரசாதமாக கிடைத்த லட்டு பெரியதாகத்தான் இருந்தது.

      Delete
    4. ஜீ பூம் பா பூதமாக நடித்தவர் ஜாவர் சீதா ராமன்,  எழுத்தாளர்.  அந்தப் படத்தின் கதையை ஒரு ஆங்கிலபபடத்தின் கதையின் இன்ஸ்பிரேஷனில் எழுதியவரும் அவரே.  புகழ்பெற்ற உடல் பொருள் ஆனந்தி நாவலை எழுதியவர்.

      Delete
    5. இஃகி,இஃகி, பட்டணத்தில் பூதம் என்னும் படப்பெயரும், ஜீ பூம்பா ஜாவர் என்பதும் ஏற்கெனவே தெரிந்த செய்தி. ஜாவர் ஜிவாஜியோடு "அந்த நாள்" படத்திலும் காவல் துறை அதிகாரியாக வருவார்.

      Delete
  4. பத்திரிக்கைகளில் R S VP என்றும் குறிப்பிட்ட ப்த்திரிக்கைகளும் உண்டு

    ReplyDelete
    Replies
    1. R S VP என்றால் என்ன?

      Delete
    2. Respondez sil vous plait. It is not in English, if I am right.

      Delete
    3. Yes. It is not English. Repondez s’il vous plait - French! அதற்கு அர்த்தம் Please Respond. On a lighter vein, பஞ்சாபியர்கள் இதற்கு வேறு வாக்கியம் சொல்வார்கள் - நகைச்சுவையாக! ரோந்தே சாரே வியா பீச்சே. ரோந்தே - அழுவார்கள். சாரே - எல்லோரும்! வியா - திருமணம். பீச்சே - பின்பு! சேர்த்து வாசித்துக் கொள்ளுங்கள் :)

      Delete
    4. Appostraphy யை விட்டிருக்கேன்! :))))))))

      Delete
  5. பத்திரிகைகளில் R S V P யும் இருந்ததுண்டு

    ReplyDelete
    Replies
    1. Guess பண்ண முடியாமல் (யார் யார் கண்டிப்பாக திருமணத்துக்கு வருவாங்க என்று) மற்ற செலவுகள் கன்னா பின்னா என்று ஆவதால், வர்றியா கன்ஃபர்ம் பண்ணு, அப்படீன்னா சோறு பொங்கி வைக்கறேன் போகும்போது ஒரு ஸ்வீட் பாக்கெட்டும் தர்றேன், வெட்டியா எனக்குச் செலவு இழுத்துவிடாதே, என்பதைச் சொல்வதற்கு RSVP. ஹா ஹா

      Delete
  6. //கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முந்தைய பத்திரிகை கிடைத்தால் பாருங்கள் அதில் 'நான்கு நாட்கள் முன்னதாகவே வந்திருந்து' என்று போட்டிருப்பார்கள். அது கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து, முகூர்த்தத்திற்கு மட்டும் அழைக்கும் ஒரு பத்திரிகை, ரிசப்ஷனுக்கு மட்டும் அழைக்கும் பத்திரிகை என்று நம்முடைய விருந்தோம்பல் தேய்ந்து விட்டது. //

    உறவுகள் சூழ கிண்டலும் கேலியுமாய் சிரிப்பும் கும்மாளமுமாய் இருந்த அந்தக்காலத்திருமணங்கள்...' அது ஒரு கனாக்காலம்' என்று தான் பாட வேண்டும்!!! ரொம்ப காலமாய் நான் வெளிநாட்டிலேயே வாழ்ந்து கொண்டிருப்பதால், பல வருடங்களுக்கு முன் இங்கு ஒரு திருமணத்திற்குப்போயிருந்த போது, திருமணம் முடிந்த‌துமே எல்லோரும் பந்திக்கு உடனேயே விழுந்தடித்துக்கொண்டு போனதைப்பார்த்து எனக்கு ஆச்சரியமாகி விட்டது. ' என்ன இது, யாருமே வந்து சாப்பிட வாருங்கள் என்று அழைக்கவேயில்லை!" என்று சொல்ல, ' யாருமே அழைக்கத்தேவையில்லாமல் பந்திக்கு முந்தி போவது தான் இப்போதைய வழக்கம்' என்று உறவுக்காரப்பெண்மணி என்னையும் சாப்பிட இழுத்துக்கொண்டு போனபோது தான் நம் தமிழ்நாட்டு விருந்தோம்பல் எப்படியெல்லாம் தேய்ந்து போய்விட்டது என்பது எனக்குப்புரிந்தது.

    ReplyDelete
    Replies
    1. //திருமணம் முடிந்த‌துமே எல்லோரும் பந்திக்கு உடனேயே விழுந்தடித்துக்கொண்டு போனதைப்பார்த்து எனக்கு ஆச்சரியமாகி விட்டது.// இந்த பழக்கம் சென்னையில்தான் அதிகம். கடனே என்று வந்து, பரிசை கொடுத்து விட்டு, சாப்பிடச் சென்று விடுவார்கள்.

      Delete
  7. திருமண அழைப்பிதழிலேயே திருமணத்தைக் கண்டு களிக்கலாம் என்று தீர்க்கதரிசி போல சொல்லியிருக்கின்றீர்கள்..

    கல்யாண சமையல் கூடத் தேவையில்லை...
    இட்லி சாம்பார், சட்னி - பழைய படங்களை அழைப்பிதழிலேயே அச்சிட்டு கல்யாண விருந்தையும் ஓட்டி விடலாம்...

    என்ன ஒரு பிரச்னை -
    தற்போதைய கல்யாண வீடுகளில் வாசலில் வரவேற்பது முதல் மற்ற எல்லா வேலைகளையும் செய்து தருகின்ற வட நாட்டுத் தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் போய் விடும்...

    ReplyDelete
    Replies
    1. //எல்லா வேலைகளையும் செய்து தருகின்ற வட நாட்டுத் தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல்//

      எல்லா வேலைகளையும் செய்து தருகின்ற, ஆனால் எந்த சாதி திருமணமோ அதற்கேற்றவாறு வேஷம் தரித்த, வட நாட்டுத் தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் - இப்படி இருந்திருக்கணுமோ?

      Delete
    2. //கல்யாண சமையல் கூடத் தேவையில்லை...
      இட்லி சாம்பார், சட்னி - பழைய படங்களை அழைப்பிதழிலேயே அச்சிட்டு கல்யாண விருந்தையும் ஓட்டி விடலாம்...// ஹா ஹா! உங்கள் கோபமும்,வருத்தமும் புரிகிறது சார். நன்றி.

      Delete
  8. திருமணச் சடங்குகள் என்ற நிலையைத் தாண்டி, திருமணக்காட்சி விழா என்றாகிவிட்டபிறகு, மாற்றங்கள் வரத்தானே செய்யும்.

    முன்னால ஒரிஜினல் சீர் பாத்திரங்கள் போன்றவற்றை காட்சிக்காக வைத்தார்கள். பிறகு வாடகைக்கு எடுத்து அவற்றை மண்டபத்தில் வைத்தார்கள். இப்போ நடக்கிற ரிசப்ஷன்லாம் சினிமா செட்டிங் மாதிரி ஆயிடுச்சு.

    இதுல விருந்தோம்பல் என்றெல்லாம் சொல்றீங்களே

    ReplyDelete
    Replies
    1. //திருமணச் சடங்குகள் என்ற நிலையைத் தாண்டி, திருமணக்காட்சி விழா என்றாகிவிட்டபிறகு,...// ஆமாம், இப்போதய திருமணங்களில் ஷோ கோஷன்ட் அதிகம்தான். நன்றி நெல்லை.

      Delete
  9. வலை ஓலையில் என்னுடைய தளமும் இணைக்கப்பட்டிருகிறது.

    ReplyDelete
  10. காலத்திற்கேற்ற மாறுதல்கள்..  அப்போது நேரமும் இருந்தது.  பணமு இருந்தது.  இப்போது இருக்கும் பணத்தை முடிந்தவரை காப்பாற்றி வைத்துக்கொள்வது நல்லது.  இன்னும் சில ஆண்டுகள் எபப்டிக் கடக்குமோ...

    ReplyDelete
    Replies
    1. அந்தக் காலத்தில் பணம் இருந்ததோ இல்லையோ, நினைவு கூறத்தக்க விஷயங்கள் நிறைய இருந்தன. இப்போது இருக்கும் இந்த இறுக்கம் தளரந்தவுடன் (நிச்சயம் ஒரு நாள் தளரும்) உடனடியாக திருமணங்கள் இப்போதை விட அதிக ஆடம்பரத்தோடு நடக்கும் என்று தோன்றுகிறது. நன்றி ஸ்ரீராம். 

      Delete
  11. எத்தனை எத்தனை மாற்றங்கள். எங்கள் பெரியம்மாவின் கல்யாணம் ஐந்து நாட்கள் நடந்தது என்று சொல்வார்கள். அம்மாவின் கல்யாணமே மூன்று நாட்கள் எனச் சொல்வதுண்டு. இப்போது அரை மணி நேர கல்யாணம் கூட வந்துவிட்டது! மாற்றங்கள் ஒன்று மட்டுமே மாறாதது.

    ReplyDelete
    Replies
    1. மாற்றங்களை தடுக்கவோ, தவிர்க்கவோ இயலாது. ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். நன்றி வெங்கட். 

      Delete
  12. முன்பை விட இப்போது மொய் பணம் கூட நிறைய வருகிறதாம்... ஆனால் உபயோகிக்க முடியாது... புலனத்தில் படம் மட்டும்...!

    ReplyDelete
  13. ஹாஹாஹா! நன்றி டி.டி.

    ReplyDelete
  14. அருமையான நினைவுகளோடு நல்ல
    பதிவு.
    ராஷன் கொண்டு வரச் சொன்ன செய்தியை
    மாமியாரும் சொல்லி இருக்கிறார்.
    நாத்தனார் திருமணத்துக்குத் தங்கமே
    வாங்க முடியவில்லையாம். மொரார்ஜி தேசாய்க் காலம்.
    பிறகு நிறைய நகை செய்து போட்டார்கள்.
    எல்லாமே ஆன்லைன் என்றாகிவிட்டது இப்போது.
    காலங்கள் மாற வேண்டும்.
    நம்பி இருப்போம்.
    பத்திரிக்கைகளின் படங்கள் மிக இனிமை.
    நன்றி பானுமா.

    ReplyDelete
  15. வணக்கம் சகோதரி

    நல்ல பதிவு. உண்மைதான்.. அந்த காலத்தின் கலாச்சாரங்கள் மாறி விட்டன. இப்போதுள்ள திருமண பத்திரிக்கைகள் நாகரீகம் என்ற பெயரில் அச்சிடப்படுகின்றன. சாஸதிரத்திற்கு மஞ்சள் கலரில் அச்சிட்டு முக்கியமானவர்களுக்கு கொடுப்பது போக மணமக்களுக்கு பிடித்தாக வெவ்வேறு விதங்களில் கையடக்கமாக (ஏன் விரலடக்கமாக என்று கூட.. )
    அச்சிட்டு அனுப்புகிறார்கள். அது கூட பரவாயில்லை. திருமணத்திற்கு அழைப்பதும் ஒரு நாகரீகமாக இருக்கட்டுமென்றோ, எங்களுக்கு வாட்சப்பிலேயே திருமண பத்திரிகையை போட்டோ எடுத்து அனுப்பி வைத்தனர். (இத்தனைக்கும் நெருங்கிய சொந்தம்.)

    நீங்கள் பதிவின் கடைசி பாராவில் கூறியது போன்ற நிலை இந்த கொரோனா புண்ணியத்தில் விரைவில் வந்தாலும் வரலாம். நாகரீகங்கள் வளர இந்த டெக்னாலஜியும் பயங்கரமாக உதவி புரிகிறதே..! பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  16. எழுதுவது ஒரு கலை என்றால், விமர்சிப்பதும் ஒரு கலைதான், அதில் நீங்கள் ஜித்தி (ஜித்தனுக்கு பெண்பால் ஹிஹி) நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஹா. ஹா.ஹா. புதிய விருது தந்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி சகோதரி.

      Delete
  17. எதிர்காலத்தில் திருமண அழைப்பிதழிலேயே திருமணத்தை ரசிக்கும் பாக்கியம் கிடைக்கலாம். ....ஆம் நிஜமாகவே உலகத்தில் எந்த மூலையில் கல்யாணம் நடந்தாலும் நம் வீட்டிலிருந்தே கல்யாணத்தை பார்க்க முடியும் ஆப் ஒன்று வற்னறது விடும் நாள் வெகு தொலைவில் இல்லை அதன் லிங்க் திருமண அழைப்பிலேயே இருக்கலாம்

    ReplyDelete