கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, February 7, 2021

சித்திரமும்...

சித்திரமும்...

எனக்கும் நுண் கலைகளுக்கும் வெகு தூரம். அதுவும் ட்ராயிங்..?சுத்தம்!  பள்ளி நாட்களில் ட்ராயிங் வகுப்புகளில் பென்சில் சீவியே நேரத்தை ஓட்டுவேன். வரைய வேண்டியவைகளை எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருந்த ராதா என்னும் அக்கா வரைந்து கொடுப்பார். அவர் ஊர் மாறி மதுரைக்குச் சென்றதும் என் அக்காவிடம் கெஞ்சிக் கூத்தாடி வரைந்து கொள்வேன். சயின்ஸ் பரீட்சையில் படம் வரைந்து பாகங்களைக்குறி என்னும்  கேள்விகளை தவிர்க்கப் பார்ப்பேன். என் நினைவில் நானே வரைந்த முதல்படம் முதுகெலும்பின் படம். 

எனக்கு குழந்தைகள் பிறந்ததும்,"இவர்கள் பள்ளியில் ப்ராஜக்ட் பண்ண சொன்னால் என்ன செய்வது?" என்று கவலை வந்தது. ஆனால் என் குழந்தைகள் இரண்டு பேருமே நன்றாக வரைந்து என் கவலையைத் தீர்த்தார்கள். 

இந்த லட்சணத்தில் நான் போடும் கோலம் எப்படி இருக்கும்? ஒரு முறை நான் மஸ்கட் போய் விட்டு திரும்பியவுடன் என் வீட்டில் வேலை செய்த பெண்மணி,"பொண்ணு நல்லா கோலம் போடுதம்மா.." என்றாள். அதோடு நிறுத்திக் கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும், "நீ நல்லாவே போட மாட்ட.." என்று உண்மையைக்கூறி என்னை நோகடித்தாள்.கொஞ்சம் கொஞ்சமாக கோலம் போடுவதிலும் என் திறமையை வளர்த்துக் கொண்டேன். 

இவை நான் போட்ட ரங்கோலி, நீர் மேல் கோலம்,மற்றும் மாக்கோலம் 

இந்த வருடம் கொலு பொம்மையில் வைத்திருந்த வெங்கடாஜலபதி,பத்மாவதி தாயாரின் பொம்மைகள் கலர் மங்கியிருப்பதாக தோன்றியதால், அதை பெயிண்ட் பண்ணி வைத்தேன். பார்த்தவர்கள் அழகாக இருப்பதாக கூறினார்கள். 

சில நாட்களுக்கு முன்பு என் மகன் ஒரு மண் பானையில் தயிர் வாங்கி வந்தான். தயிர் தீர்ந்ததும் அதிலேயே மீண்டும் தயிர் தோய்க்க முயற்சி செய்தோம். இந்த பெங்களூர் குளிரில் அதில் தயிர் சரியாக தோயவில்லை. அழகாக இருந்த அந்த குட்டிப் பானையை தூக்கிப் போட மனமில்லை. அதில் பெயிண்ட் பண்ணி பூ ஜாடியாக பயன் படுத்தலாம் என்று தோன்றியது. எனக்கு தெரிந்த வகையில்  அதை கொஞ்சம் சிம்பிளாக பெயிண்ட் பண்ணினேன். எப்படி இருக்கிறது சொல்லுங்கள். 
 

22 comments:

  1. இப்...போதுதான் பேஸ்புக்கில் படித்து விட்டு இங்கே வருகிறேன்.  அருமை.  நல்ல அக்கற்பனை, கலையுணர்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. இன்னும் ஒரு சற்று பெரிய பானை இருக்கிறது. அதில் இன்னும் கொஞ்சம் கடினமான டிசைன்கள் வரைய முயற்சி செய்யலாம் செய்யலாம் என்று நினைத்திருக்கிறேன். glass painting செய்ய உபகரணங்கள் வாங்கி வைத்து விட்டேன். இன்னும் தொடங்கவில்லை.

      Delete
  2. அங்கே முகநூலிலும் படிச்சேன். இங்கேயும் படிச்சேன். பழகப் பழகக் கை திருந்தும். ஒரு காலத்தில் நன்றாக வரைந்து கொண்டிருந்த எனக்கு இப்போ முடியலை. குழந்தைகள் ப்ராஜெக்டில் கைவேலைகள் அனைத்தும் செய்து கொடுத்திருக்கேன். இப்போல்லாம் நவராத்திரிக்கு ஒரு தோரணம் கட்டுவதற்கு முடியறதில்லை. ஆகவே நீங்கள் விடாமல் பயிற்சியை நிறுத்தாமல் பழகிக் கொண்டே இருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. சிறு வயதில் விமர்சனங்களுக்கு பயந்து செய்யாமல் விட்டு விட்டேன். வீட்டில் மற்ற எல்லோரும் நம்மை விட அதிக திறமைசாலிகளாக இருக்கும் பொழுது தேரிம் வருவதில்லை. "எனக்காகவே நான் வாழ்கிறேன்" என்று தாமதமாகத்தான் தோன்ற ஆரம்பித்தது.

      Delete
    2. தைரியம் வருவதில்லை

      Delete
    3. உங்களால் முடியாதது உண்டோ? அதிலும் இதெல்லாம் வெகு எளிதானவை. பொழுதுபோக்கும் கூட. முகநூல் சிநேகிதியான திருமதி பத்மா மணி அவர்கள் செய்யும் கைவேலைகளைப் பார்த்து எனக்கு மயக்கமே வரும். அவர் வயது கிட்டத்தட்ட எண்பது அல்லது அதற்கு மேல்!

      Delete
  3. கலையுணர்வு உள்ளவர்களுக்குதான் இப்படி சிறப்பாக செய்ய வரும்.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. கேட்க சந்தோஷமாக இருக்கிறது, மிக்க நன்றி.

      Delete
  4. சித்திரமும் கைப்பழக்கம்தான்... நல்லா வந்திருக்கு.

    எனக்கு இயல்பாகவே வரையும் திறமை உண்டு.... +2 வில் Zoologyல் அட்டையில் (பூச்சிகளைப் பிடித்து) பாடம் செய்த வெட்டுக்கிளி, தேனீ, ஈ, ...ஈறு போன்றவற்றை ஒட்டணும். அதற்கு ஃபைனலில் ஐந்து மார்க் உண்டு. நான் ஒட்டின பேன்கள் உதிர்ந்துவிட்டதால், கறுப்பு மை கொண்டு அட்ஜஸ்ட் செய்தது நினைவுக்கு வந்தது. ஆனால் ஆசிரியர், அதன் மேல் விரலால் தடவி கண்டுபிடித்துவிட்டார்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ஓவிய ஆற்றல் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். ரஞ்சனி அக்கா வீட்டிற்கு சென்றிருந்த பொழுது அவருடைய பேத்தியை அப்படியே வரைந்து விட்டீர்களாமே..?

      Delete
    2. +2வில் விலங்கியலா?? மருத்துவராக விரும்பினீர்களோ?

      Delete
    3. இல்லை... அப்போல்லாம் Zoo+bio ஒரு சப்ஜெக்ட், எஞ்சினீயரிங் போகறவங்களுக்கு. மருத்துவர் ஆகணும்னா, Zoo, Bio தனித்தனி சப்ஜெக்ட். அவங்களுக்கு மேத்ஸ் கிடையாது.

      என்ன ஆகணும் என்றெல்லாம் அப்போ யோசித்ததே கிடையாது. அவ்வளவு அறிவெல்லாம் எனக்கேது..ஹாஹா

      Delete
  5. கைவேலைகள் எல்லாம் மிக நன்றாக இருக்கிறது.
    நீங்கள் நினைத்தால் எல்லாம் செய்துவிடுவீர்கள்.
    கோலம் அழகு. மண்பானையில் வண்ணம் தீட்டியது அழகு.

    ReplyDelete
    Replies
    1. வந்து கருத்திட்டதற்கு மிக்க நன்றி. இடமாற்றம் மன மாற்றத்திற்கு உதவும் என்று நினைக்கிறேன்.  

      Delete
  6. மிக அருமை பானுமா.
    உங்களால் முடியாதது என்று ஒன்றும் இல்லை.
    நன்றாகப் பழகி வரையுங்கள்.

    கைகள் வேலை செய்தால் மூளையும் நன்றாக இருக்கும் என்று என்னை விட
    மிகச் சிறிய உறவு ஒருத்தர் சொன்னார்:)

    ReplyDelete
    Replies
    1. நன்றி அக்கா. //கைகள் வேலை செய்தால் மூளையும் நன்றாக இருக்கும் என்று என்னை விட
      மிகச் சிறிய உறவு ஒருத்தர் சொன்னார்:)// அவர் சொன்னது உண்மைதான். நம்முடைய இரண்டு கைகளாலும் வேலை செய்வது மூளையின் இரண்டு பகுதிகளையும் செயல்பட வைப்பதால் டிமன்ஷியா போன்ற வியாதிகள் வராது என்பார்கள். புள்ளி வைத்த கோலம் போடுவதும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.

      Delete
  7. குட்டிப் பானையில் உங்கள் கைவண்ணம் அழகு. நன்றாக இருக்கிறதும்மா...

    ஓவியங்களும் நீங்களும்! உங்கள் நினைவுகள் நன்று. எல்லோருக்கும் எல்லாமும் வந்துவிடுவதில்லையே! ஓவியம் என்ற பெயரில், சிறு வயதில் நானும் எதை எதையோ கிறுக்கியது நினைவுக்கு வருகிறது :)

    ReplyDelete
  8. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. கை வேலைகள் அழகாக இருக்கின்றன கொலு பொம்மைகளுக்கு பெயிண்ட் செய்வது சாதரண காரியமில்லை. கலர் பார்த்து அங்குமிங்கும் அசங்கி விடாமல் பெயிண்டிங் செய்ய வேண்டும்.அவ்வளவு கடினமான வேலையை செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    மண்ஜாடி ஓவியம் பிரமாதமாக உள்ளது. கோலங்கள் நன்கு போட்டுள்ளீர்கள். நானும் அப்படித்தான்.. என்னை விட மற்றவர்கள் செய்வது திறமையாக தோன்றும் போது நம் கை பழக்கங்கள் மீது ஒரு வித தாழ்வுணர்ச்சி தோன்றி விடும். எங்கே நம்மை கிண்டல் செய்து அவஸ்தைபடும்படி செய்து விடுவார்களோ என்ற எண்ணம். நீங்கள் அனைத்திலும் வல்லவராக இருக்கிறீர்கள். உங்களுக்கு சித்திரம் சிறப்பாக வரும்/ வந்திருக்கிறது. தொடர்ந்து கை வேலைகளை செய்து வாருங்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். நான்தான் தாமதமாக வந்துள்ளேன். மன்னிக்கவும். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  9. வாங்க கமலா. நீங்கள் வந்து கருத்திட்டதே மிக்க சந்தோஷம். மன்னிப்பெல்லாம் எதற்கு?

    ReplyDelete