கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, February 25, 2021

மந்திரச்சொல்

 மந்திரச்சொல்

வேலை செய்யும் பொழுது யூ ட்யூபில் இசை,அல்லது சொற்பொழிவுகள் கேட்பது என் வழக்கம். அப்படி சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவை கேட்ட பொழுது, ஒரு சொற்பொழிவில் அவர் சிலர் வாழ்க்கையில் சில சமயங்களில் யாரோ ஒருவர் கூறிய சில வார்த்தைகள் அவர்கள் வாழ்க்கையையே  மாற்றி விடும் என்று கூறி விட்டு, அதற்கு உதாரணமாக திருநீலகண்ட  நாயனார்  வாழ்க்கை, அருணகிரி நாதர் வாழ்க்கை முதலியவற்றை குறிப்பிட்டார். அதைக் கேட்ட பொழுது என் வாழ்க்கையில் நடந்த இரண்டு சம்பவங்கள் நினைவுக்கு வந்தன.

என் கடைசி அக்காவுக்கு முதல் குழந்தை பிறந்திருந்த நேரம். அப்போதெல்லாம் கார்ப்பரேட் ஆஸ்பத்திரிகள் வரவில்லை. எனவே ஆஸ்பத்திரியில் இருப்பவர்களுக்கு நாம்தான்  உணவு கொண்டு போக வேண்டும். என் அக்காவுக்கு நான் சாப்பாடு எடுத்துக் கொண்டு சென்று என் அம்மாவை வீட்டிற்கு அனுப்பினேன். 

நான் அங்கிருந்த நேரத்தில் யாரோ ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி எடுத்து, லேபர் வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பிரசவ வலியை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவர் எழுப்பிய  சத்தம் என் அக்காவின் அறை வரை கேட்டது. அதை கேட்டு விட்டு நான் என் அக்காவிடம், " பொறுத்துக் கொள்ள முடியாமல்  இப்படி கத்தும் அளவிற்கு வலிக்குமா?"  என்றதும் என் அக்கா, "அப்படி எல்லாம் இல்லடி, பொறுத்துக்கணும்னா பொறுத்துக்கலாம், கத்தறதுனா கத்தலாம்" என்றாள்.  எனக்கு அது ஒரு மந்திரச் சொல்லாகப் பட்டது. எந்த விஷயமாக இருந்தாலும் பொறுத்துக் கொள்வது என்றால் பொறுத்துக்  கொள்ளலாம், கத்தறது என்றால் கத்தலாம் என்று தோன்றும். நாம் எத்தனை பேரை பார்த்திருக்கிறோம் ஒரு சின்ன விஷயத்திற்கு கூட என்ன ஆர்ப்பாட்டம் பண்ணுவார்கள்! வெகு சிலரே பொறுமையாக சகித்துக் கொள்வார்கள். எனக்கு பிரச்சனைகள் வரும் பொழுதெல்லாம் இதைத்தான் நினைத்துக் கொள்வேன். பொறுத்துக்கொள்வது என்றால் பொறுத்துக்கொள்ளலாம், கத்துவது என்றால் கத்தலாம். 

இதைப்போன்ற இன்னொரு மந்திரச்சொல் உண்டு.

 மந்திரச்சொல் -2  

அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள், வாசல் போர்டிகோவில் அமர்ந்து பரீட்சைக்கு படித்துக் கொண்டிருந்த என்னிடம், பக்கத்து வீட்டு மாமி  "நீ இப்போது உன் மனதில் எதைப் பற்றி நினைத்துக்  கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார். நான், "நாளைக்கு எக்ஸாம், என்ன மாதிரி கேள்விகள் வரும் என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்" என்றேன். உடனே அவர், "ராமகிருஷ்ணா பரமஹம்சர், யாராவது நம்மிடம் வந்து நீ எதைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டால், நானா? ஒரு பூவைப் பற்றி நினைத்துக்  கொண்டிருக்கிறேன் என்று வெளியே சொல்லக் கூடிய  விதத்தில் நம் எண்ணம் தூய்மையாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார், அதை உன்னிடம் சோதிக்கலாம் என்று கேட்டேன்" என்றார்.  எவ்வளவு அருமையான அறிவுரை! மனது கொஞ்சம் தாறுமாறாக போகும் பொழுதெல்லாம் இதைத்தான் நினைத்துக் கொள்வேன். 

அந்தப் பக்கத்து வீட்டு மாமி யார் தெரியுமா? இந்த வருடம் கலைமாமணி விருது வாங்கியிருக்கிறாரே திருச்சி  கே.கல்யாணராமன், அவருடைய தாயார். 

21 comments:

  1. முதல் மந்திரச் சொல் புதிது..

    இரண்டாவது மந்திரச் சொல்
    என மனதில் பதிந்த ஒன்று.. ஐம்பது வருடங்களாக ஒளிதரும் சொல்.. அப்படியும் மனக்குரங்கு தத்திக் குதிக்கும் போது என்னை ஆற்றுப் படுத்தும் அமுத வாக்கு...

    ReplyDelete
    Replies
    1. ராமகிருஷ்ண பரமஹம்சரின் மொழிகள் எல்லாம் அமுதம். வருகைக்கு நன்றி. 

      Delete
  2. தஞ்சையம்பதியில் - இந்தப் பதிவுக்கு முந்தைய பதிவில் மகமாயியைக் குறித்து சில வரிகளைப் பற்றிக் கேட்டிருந்தீர்கள்.. அவை எளியேன் எழுதியவை தான்... தங்களது அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

    ReplyDelete
    Replies
    1. ஓ அப்படியா! நன்று. அன்னையின் அருள்!

      Delete
  3. இந்த மந்திரச்சொற்கள் அவரவருக்கேற்றவாறு மாறும் என்று தோன்றுகிறது.  சொல்லப்படும்போது அல்லது கேட்கும்போது எது மனதில் பதிகிறதோ அது!

    ReplyDelete
    Replies
    1. சொல்லப்படும் பொழுது, கேட்கப்படும்பொழுது மட்டுமல்ல, கேட்பவரின் தன்மைக்கும் பெரும் பங்கு உண்டு. பாலைவனத்தில் விழுந்த விதை முளைக்காது, பாறையில் விழுந்த விதை முளைக்கலாம்,முளைக்காமல் போகலாம், உழுத  மண்ணில்   விழுந்த விதை கண்டிப்பாக முளைக்கும் என்பது பைபிள் வாசகம்.

      Delete
  4. ஏற்கெனவே முகநூலில்/மத்தியமரில் படித்தேனோ? கருத்துச் சொல்லவில்லை, இந்தப் பொறுத்துக்கொள்ளும் விஷயம் பற்றிச் சொல்வதானால் எங்க குட்டிக் குஞ்சுலு எந்த வலியையும் குழந்தை முதலே பொறுத்துக்கொள்ளுகிறது. எங்க மருமகளுக்குக் கொஞ்சம் ஆச்சரியம்/வருத்தம் இரண்டும் கலந்து. மருத்துவர் ஊசி போட்டாலும் சோதனை செய்யும்போதும் எந்தவித எதிர்ப்பும் காட்டாது. முழுமையாக ஒத்துழைக்கும். இது பிறவியிலேயே வரும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. என் கணவர், மகன்,மகள் மூவருமே வலியை பொறுத்துக்க கொள்வார்கள். என் அண்ணன் மகள் சாதாரண ஊசி போட்டாலே கதறி ஊரைக் கூட்டி விடுவாள். 

      Delete
  5. பிரசவ வலியைப் பொறுத்துக்கலாம். குழந்தையைப் பார்த்தால் மறந்துடும். ஆனால் எனக்கு/பலருக்கும் மூலத்துக்கான அறுவை சிகிச்சை முடிந்ததும், உடல் இயல்பு நிலைக்குத் திரும்புகையில் ஏற்படும் வலி! கடவுளே! அது தான் நரகம்! நான் கத்தித் தீர்த்து இருக்கேன். வீட்டில் எல்லோருக்கும் ஆச்சரியம் கலந்த வருத்தம்.

    ReplyDelete
  6. மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகும் கடுமையான வை இருக்கும் என்கிறார்கள். 

    ReplyDelete
  7. *கடுமையான வலி என்று படிக்கவும்.

    ReplyDelete
  8. மந்திரச் சொற்கள் - சிறப்பான விஷயத்தினைச் சொல்லி இருக்கிறீர்கள் பானும்மா.

    பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  9. மந்திரச் சொற்கள் இரண்டுமே அருமையானவை தான்! முதலாவதைப்பற்றி நிறைய சொல்லலாம். வலி என்பது அவரவர் அனுபவிக்கும் அளவு, மனத்திண்மை, பயம், அனுபவங்களைப் பொறுத்தது. அன்போடு கவனிக்க ஒரு கூட்டமே அருகில் இருந்தால் கத்தல் தானாகவே வரும். எதையும் த‌னித்தே அனுபவித்து துன்பங்களோடு பழகியவர்களுக்கு சில சமயங்களில் முனகல் கூட வராது. எங்கள் நண்பர் ' வலிகளிலேயே மிகவும் கொடுமையான வலி பல் வலி தான்!" என்று சொல்லுவார்.

    ReplyDelete
  10. வணக்கம் சகோதரி

    சிறப்பான பதிவு. மந்திரச் சொற்கள் உண்மைதான். ஒருவர் சொல்லும் வார்த்தைகள் நம் அடி மனதில் தங்கிக் கொண்டு அது சம்பந்தமான நிகழ்வுகள் வரும் போது, நினைவுக்கு வந்து நம் மனதின் உறுதியை பலப்படுத்துவது உண்மைதான்.

    வலிகள்..வலிகளை தாங்கும் என் உள்ளத்திற்காகத்தான் இறைவன் நிறைய வலிகளேயே பரிசாக தருகிறானோ என எனக்கு அடிக்கடித் தோன்றும். ஆனால் அந்த வலிகளை சகித்துக் கொள்ளும் உள்ளத்தையும் அவன்தானே தந்திருக்கிறான் என திருப்தியடைந்து கொள்வேன். இதுவும் அந்த நேரத்தில் தோன்றுவதும் ஒரு மன மாற்றத்திற்காகத்தான்.. சிறுவயதிலிருந்தே இதற்கு அவன் "சொல்படி" மனம் வளர்ந்து விட்டது. இப்போது என பேத்தியும் (மகள் வயிற்று) எவ்வளவு வலியையும் பொறுத்த படி இருக்கிறாள். இறைவன் அவளுக்கு மென்மேலும் வலியெனும் பரிசுகளை தராமல் இருக்க வேண்டும். தினமும் "அவனிடம்" பிரார்த்தனை செய்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. பொறுத்து கொள்கிறவர்களுக்கு கடவுள் சோதனைகளைத் தரலாம், ஆனால் சிறப்பான வெகுமதிகளையும் அளிப்பார். ஷீர்டி பாபா வலியுறுத்தும் இரண்டு விஷயங்கள் ஷ்ரத்தா,சபூரி. அதில் சபூரி. இதில் சபூரி என்பது பொறுமையைக் குறிக்கும். ஆகையால் உங்கள் பேத்திக்கு நல்லதே நடக்கும்,கவலைப் படாதீர்கள்.

      Delete
  11. அருமையான மந்திரச் சொற்கள்.
    ஆனால் பொறுத்தே பழகி விட்டது. கத்த முடியாத அளவு கூச்சம்.
    என் முதல் பிரசவத்தின் போது , அம்மாவோ அப்பாவோ இல்லை.

    பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டி இருந்தது.

    மனத்தில் தங்கும் வார்த்தைகள் புனிதமாக இருந்தால் வாயில் வரும் வார்த்தைகளும்
    நலமாக இருக்கும்.
    மிக நன்றி பானு மா.

    ReplyDelete
  12. //மனத்தில் தங்கும் வார்த்தைகள் புனிதமாக இருந்தால் வாயில் வரும் வார்த்தைகளும்
    நலமாக இருக்கும்.// நீஜம்தான், அதையும் பழகிக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete