கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, March 1, 2021

பெயர் சூட்டும் வைபவம்

பெயர் சூட்டும் வைபவம் 


என் மருமகளுக்கு பேறு காலம் பிப்ரவரி கடைசி வாரத்திலிருந்து, மார்ச் முதல் வாரத்திற்குள் என்றுதான் முதலில் கூறினார்கள். ஆனால் ஜனவரியில்,  பிப்ரவரி 16லிருந்து எப்போது வேண்டுமானாலும் எதிர்பார்க்கலாம் என்று சொல்லி விட்டதால், நானும் என் மகனும் பிப்ரவரி 14 பெங்களூரிலிருந்து, டில்லிக்கு பயணப்பட்டோம். அதன்படியே பிப்ரவரி 17 காலை அவளுக்கு பனிக்குடம் உடைந்துவிட, மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்கு அவளை அப்சர்வேஷனில் வைத்து, ட்ரிப் ஏற்றி, இயற்கையான முறையில் பிரசவம் நிகழுவதற்காக வலி வரவழைக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யத் தொடங்கினார்கள். 

ஆஸ்பத்திரிக்கு கிளம்பும் பொழுது நான் குளித்து விட்டுதான் கிளம்பினேன். ஆனால் என் மருமகளின் தாயார் குளிக்காமல் வந்து விட்டார். அவரிடம்,"குழந்தை பிறப்பதற்கு எப்படியும் இன்று இரவு, அல்லது நாளைக்  காலை ஆகி விடும்,ஆகவே நீங்கள் வீட்டிற்குச் சென்று குளித்து விட்டு வாருங்கள்" என்றேன். அவர் குளித்து, சமையல் செய்து விட்டு வருவதாக கூறிச் சென்றார். மாடியில் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் நானும், கீழே வெளியே போடப்பட்டிருந்த ஷாமியானாவில் என் மகனும் காத்திருந்தோம். நான் கீழே சென்று என் மருமகளை பார்த்து விட்டு மேலே வந்து பத்து நிமிடங்கள் ஆகியிருக்கும், என் மகன் கைபேசியில் அழைத்தான்.  குழந்தையின் இதயத்துடிப்பு குறைந்து கொண்டே வருகிறது, இந்த நிலையில் சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுப்பதுதான் நல்லது. வெய்ட் பண்ணி பார்ப்பது கொஞ்சம் ரிஸ்க், உங்கள் மனைவியோடு டிஸ்கஸ் செய்து விட்டு கூறுங்கள் என்றார்களாம். டிஸ்கஸ் பண்ண என்ன இருக்கிறது? சிசேரியன் செய்து விடுங்கள் என்றார் கூறி விட்டேன்" என்றான். நான் உடனே கீழே இறங்கி வந்தேன். சற்று நேரத்தில் எங்களை உள்ளே அழைத்தார்கள். "பெண் குழந்தை, பாருங்கள்"என்று ஹிந்தியில் கூறி துணியை விலக்கி காண்பித்து, "உங்களுக்கு வேண்டுமென்றால் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்" என்றார்கள். என் மகன் தன் மகளை செல் போனில் படமெடுத்து செல்(ல) மகளாக்கினான். 

என் மருமகளுக்கு பிள்ளைதான் பிறக்கும் என்று எல்லோரும் கூறியதால் அவர்கள் ஆண்  குழந்தைக்கான பெயர்களை மட்டும் யோசித்து வைத்திருக்கின்றனர். இப்போது பெண் என்றதும் என்ன பெயர் வைப்பது என்று யோசிக்க ஆரம்பித்தோம்.  என் ஒரு அக்கா, "சியாமளா நவராத்திரியில் பிறந்திருக்கிறாள், சியாமளா நவராத்திரி சரஸ்வதி தேவிக்கானது எனவே  சரஸ்வதியின் பெயர் ஏதாவது வையுங்கள்" என்றார். இன்னொரு அக்கா, "சியாமளா நவராத்திரியில் பிறந்திருப்பதால் பெயரில் ஸ்ரீ வரும்படி பார்த்துக் கொள்ளுங்கள்" என்றார். 

என்னை பொறுத்தவரை "எங்கள் ஊர் பெண் தெய்வம் ஹேமாம்பிகா, அதை அப்படியே வைத்தாலும் சரி, ஹேமா என்று சுருக்கமாக வைத்தாலும் சரி, என்று கூறி விட்டேன். அவர்கள் ஹேமாம்பிகா என்பதை தேர்ந்தெடுத்தார்கள். "உன்னுடைய கோட்டா முடிந்து விட்டது, ஒதுங்கிக்கொள்" என்றாள் மகள். 

சரஸ்வதி அஷ்டோத்திரத்தை டவுன்லோட் செய்து பார்த்தோம். அதில் 'ரிதன்யா' என்னும் பெயர் எனக்குப் பிடித்தது. இப்போ இருக்கும் ட்ரெண்ட் ,"பெயரை ஒரு முறை கேட்டால் புரியக் கூடாது, அந்த வகையில் ரிதன்யா ஓகே" என்று மகன் கிண்டலடித்தான். இருந்தாலும் ஷார்ட் லிஸ்ட் செய்தார்கள். 

அம்பாளின் பெயர்களில் எனக்கு மிகவும் பிடித்த பெயர் 'த்ரயீ' விசேஷமான பொருள் கொண்டது. ஆனால் மருமகளின் பெரியப்பா பேத்திக்கு த்ரயீ என்றுதான் பெயர். எனவே மறுதலிக்கப்பட்டது. 'வாகீஸ்வரி' என்று நான் கூறியதும், என் மகன்,"நான் வைத்து விடுவேன், கொஞ்ச நாள் கழித்து,  தந்தையே ஏன் எனக்கு இப்படி ஒரு பெயரை வைத்தீர்கள்? என்றால் என்ன செய்வது?" என்றான். மருமகளோ, "இப்படியெல்லாம் பெயர் வைத்தால் அவள் மாற்றிக் கொண்டு விடுவாள்" என்றாள். "நித்யஸ்ரீ?" நல்ல பெயர்தான். ஆனால்  பழசு" நித்யஸ்ரீயே பழசு என்பவர்கள் மருமகளின் பாட்டி கூறிய ஸ்ரீவித்யாவை ஏற்பார்களா? 

மிதாலி என்று என் மருமகள் கூறிய பெயர் ரொம்பவும் வட இந்திய வாடை வீசியதால் எனக்குப் பிடிக்கவில்லை. வேறு சில பெயர்கள் ஆந்திர பெயர்கள் போலவும், சில பெயர்கள் மலையாள பெயர்கள் போலவும் தோன்றின. என் சம்பந்தி 'அக்ஷரா' என்னும் பெயரை பரிந்துரைத்தார். என் மகன்,"பெயர் நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் கமலஹாசன் மகள் பெயரை வைக்க வேண்டுமா?" என்றான். இது அம்பாள் பெயர் என்று அவனை கன்வின்ஸ் செய்தோம். அதுவும் ஷார்ட் லிஸ்டில் சேர்ந்தது. 

நிரஞ்சனா என்று ஒரு பெயர் சஜஸ்ட் செய்யப்பட்டது. "நான் இந்த புனை பெயரில்தான் ஆரம்பத்தில் எழுதி கொண்டிருந்தேன். இந்த பெயர் வைத்தால் ஒரு வகையில் பாட்டி பெயரை வைத்தது போல்" என்றேன். அதனாலோ என்னவோ அதை ஏற்கவில்லை. நிஹாரிகா என்று என் மகன் கூறியதும் நாங்கள் யாரும் பதில் பேசவில்லை. 

ஒரு பெயருக்கு இவ்வளவு யோசனையா? முன்பெல்லாம் வீடுகளில் பெரியவர்கள் இருப்பார்கள், அவர்கள் என்ன பெயர் சொல்கிறார்களோ அந்த பெயரை மறு வார்த்தை பேசாமல் ஏற்றுக் கொள்வார்கள். அது பெரும்பாலும் குல தெய்வத்தின் பெயராக, அல்லது அவர்கள் ஊர் கோவிலில் குடி கொண்டிருக்கும் சாமியின் பெயராக, அல்லது குடும்பத்தில் இருந்த யாராவது பெரியவர்களின் பெயராக, இருக்கும். இப்படி மண்டையை உடைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். 

எப்படியோ பல பெயர்களை அலசி, ஆராய்ந்து சாமியின் பெயரான ஹேமாம்பிகா, சியாமளா நவராத்திரியை முன்னிட்டு அக்ஷரா, தாயும், தந்தையும் சேர்ந்து தேர்ந்தெடுத்த நவ்யா என்னும் பெயரோடு ஸ்ரீ சேர்த்து நவ்யாஸ்ரீ என்னும் பெயர்களை சூட்டினோம். இதில் நவ்யாஸ்ரீ என்னும் பெயர்தான் பிறப்பு சான்றிதழுக்கு கொடுக்கப் போகிறார்கள். நவ்யா என்றால் இளமையானவள், போற்றத்தகுந்தவள் என்று பொருளாம். 

இந்த பெயர் சூட்டும் வைபவத்திற்கு என் அழைப்பை ஏற்று நம் வெங்கட் அவர்கள் வந்து கௌரவித்தார். 

 

35 comments:

  1. பேத்தி நவ்யாஸ்ரீக்கு வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்

    //நவ்யா என்றால் இளமையானவள், போற்றத்தகுந்தவள் என்று பொருளாம்.//

    என்றும் இளமையாக பலராலும் போற்றப்படும் குழந்தையாக எல்லோருக்கும் மகிழ்ச்சியை தரட்டும் குழந்தை.
    ஆசீர்வாதங்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கோமதி அக்கா! 

      Delete
  2. வணக்கம் சகோதரி

    உங்களுக்கு மகன் வழி பேத்தி பிறந்திருப்பதற்கு முதலில் என் மனம் நிறைந்த வாழ்த்துகள். உங்கள் மகனுக்கும், மருமகளுக்கும் இனிய வாழ்த்துக்களை தெரிவியுங்கள். குழந்தை சீரும் சிறப்புமாக பல கலைகள் பயின்று பல்லாண்டு காலம் ஆயுள் ஆரோக்கியத்தோடு நீடூழி வாழ வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    பெயர்கள் செலக்ஷன் நன்றாக இருக்கின்றன. நீங்கள் அதை குறிப்பிட்ட விதத்தை படித்து ரசித்தேன்.

    /நிரஞ்சனா என்று ஒரு பெயர் சஜஸ்ட் செய்யப்பட்டது. "நான் இந்த புனை பெயரில்தான் ஆரம்பத்தில் எழுதி கொண்டிருந்தேன். இந்த பெயர் வைத்தால் ஒரு வகையில் பாட்டி பெயரை வைத்தது போல்" என்றேன். அதனாலோ என்னவோ அதை ஏற்கவில்லை/

    இந்த இடத்தில் நீங்கள் நகைச்சுவையாக எழுதியது எனக்கு சிரிப்பு தாங்கவில்லை. பாட்டி, தாத்தாவின் பெயர்கள், இல்லை பாட்டி, தாத்தா தேர்ந்தெடுத்த பெயர்கள் என்றுதான் தேர்வின் கணக்குக்கு வந்திருக்கிறது. அந்த காலங்கள் எப்போதோ மலையேறி கண்ணுக்கு புலப்படாமல் சென்று மறைந்தே விட்டது.

    நீங்கள் வைத்த பெயர்களில் (பேத்தி)
    அவள் வளர்ந்து பெரியவளானதும் ஒன்றை செலக்ட் செய்து கொள்வாள். கடைசியில் வெளியுலகிற்கு அறிமுகமாகும் நவ்யாஸ்ரீ என்ற பெயர் நன்றாக உள்ளது.

    பெயர் சூட்டும் விழாவிற்கு சகோதரர் வெங்கட் நாகராஜன் வந்திருந்து சிறப்பித்தமைக்கு மகிழ்ச்சி. எங்களுடன் தங்கள் வீட்டு வைபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வழக்கம் போல மிகவும் ரசித்து விமர்சனம் செய்திருக்கிறீர்கள். அதற்கும், உங்கள் வாழ்த்துகளுக்கும் நன்றி. 

      Delete
  3. ஆகா... மகிழ்ச்சி...

    பெயருக்கு ஏற்றார்போல
    என்றும் இளமையும் புகழும் கொண்டு வாழ்வாங்கு வாழட்டும்..

    அம்பிகை அருள் புரிவாளாக...

    ReplyDelete
  4. நவ்யாஸ்ரீ அழகான பெயர் .வாழ்த்துக்கள் குட்டி இளவரசிக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் .

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏன்ஜல், வாழ்த்துக்களுக்கு நன்றி. 

      Delete
  5. நவ்யாஸ்ரீக்கு எங்கள் அன்பும், வாழ்த்துகளும்.

    ReplyDelete
  6. என் பெரிய மகனுக்கு ஒரு பிடிவாதம் காரணமாக நான்தான் பெயர் தெரிவு செய்தேன்.  என் இளைய மகனுக்கு என் பெரிய மகன் சஜஸ்ட் செய்த பெயரையே வைத்தோம்!  அப்போது பெரியவனுக்கு நான்கு வயது!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முதல் மகனுக்கு பெயரை தேர்ந்தெடுத்த பொழுது உங்கள் மனைவியை கன்சல்ட் பண்ணவே இல்லையா? வெரி பேட்! என் கணவரும் என் மகன் பிறந்த பொழுது இப்படித்தான் நடந்து கொண்டார். எனக்கு வருத்தம்+கோபம். 

      Delete
  7. எங்களுடைய பேத்திகளுக்கு நாங்கள் பெயர்களே தேர்ந்தெடுக்கவில்லை. எல்லோருமே அம்பேரிக்கா என்பதால் இரண்டு பெயர்களை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொடுத்திருந்தார்கள். அந்த வகையில் பிள்ளை வயிற்றுப் பேத்திக்கும் முன்னரே "துர்கா" என்னும் பெயரை மருமகள் தேர்வு செய்திருந்தாள். பிரசவத்தில் அவளுக்கு அடுத்தடுத்து ஏற்பட்ட பிரச்னைகளில் அவள் துர்கையைத் தான் தனக்கு அரணாக நின்று காக்கும்படி வேண்டிக் கொண்டிருந்தாள். ஆகவே துர்கா!

    ReplyDelete
    Replies
    1. எங்களுக்குத் தெரிந்தவர் ஒருவர்,"குழந்தைகளுக்கு நாம் பெயர் வைக்கிறோம் என்று நினைக்கிறோம், ஆனால் என்ன பெயர் அமைய வேண்டும் என்பது கூட முன்னரே தீர்மானிக்கப் பட்ட விஷயம்" என்பார்.  

      Delete
  8. பெயர் தேர்வு செய்த விதம் அருமையாக விவரித்திருக்கிறீர்கள். இத்தனை எல்லாம் நாங்கள் யோசித்தது இல்லை. எங்கள் குழந்தைகளுக்குக் குடும்பத்தீன் பெரியவர்களே பெயர் சூட்டி விட்டார்கள். என் பெண்ணிற்கு "ஷோபனா" என்று அழைக்கும் பெயராக வைத்திருந்தும் அவள் பெயர் "மீனாக்ஷி" என்றே ஆகி விட்டது. பின்னர் தான் புரிந்தது, மீனாக்ஷியின் பெயரை வைத்துவிட்டு நம்மால் மாற்ற முடியாது என்பது. அவளும் எப்போதுமே மீனாக்ஷியின் ராஜ்யம் தான்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஜெனெரேஷனில்,ஏன் என் ஜெனரேஷன் வரை பெரியவர்கள் தீர்மானிக்கும் பெயர்தானே? என் மகள் பெயரும் மீனாக்ஷிதான். Official name Subhashini. கருத்துக்கு நன்றி. 

      Delete
  9. நவ்யாஸ்ரீயும் அம்பிகையின் பெயர்தான் என நினைக்கிறேன். இப்போதெல்லாம் ஆண் குழந்தைகள் எனில் சுரேஷ், ரமேஷ், விக்னேஷ், முருகேஷ், ஆதர்ஷ், மகேஷ், குமரேஷ் என்றே வரும்படி பார்த்துக்கொள்கிறார்கள். அதே போல் பெண் குழந்தைகளுக்கும் ஸ்ருதிகா, கிருத்திகா, பூர்விகா, ரசிகா என்றெல்லாம் வருமாறு பார்த்துக்கொள்கிறார்கள்.
    நவ்யாஸ்ரீக்கும் அவள் பெற்றோர்களுக்கும் எங்கள் ஆசிகள்/வாழ்த்துகள்/பிரார்த்தனைகள். உங்களை எல்லாம் விட எனக்குத் தான் "பேரன்" இல்லை என்றதும் ஏமாற்றம். நான் பேரன் தான் என்றே நம்பிக் கொண்டிருந்தேன். :))))))) குழந்தை ஆரோக்கியத்துடனும், ஆயுசுடனும் நன்றாக இருக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. ரமேஷ்,சுரேஷ்,விக்னேஷ் காலம் மலையேறி விட்டது. இப்போது அஸ்வின், அஸ்வத், அனிருத், ஆதித்தியா காலம். பெண்கள் பெயர்கள் நீங்கள் சொல்லியிருப்பது சரி. 

      Delete
  10. மிக அருமையாகப் பெயர் சூட்டும் வைபவம் நடந்திருக்கிறது.
    எத்தனை அருமையாக விவரித்திருக்கிறீர்கள்.
    எங்கள் முதல் பேரனுக்குத்தான் நான் பெயர் சூட்டினேன்.
    மற்ற குழந்தைகளுக்கு பெற்றோர் பார்த்துக் கொண்டார்கள்.

    இன்னோரு குழந்தை ஆணாக இருக்கட்டும்.
    இப்போது நவ்யாஸ்ரீ சீரும் சிறப்புமாக
    அனைத்து ஆசிகளுடன் வளரட்டும்.

    எதிர்காலம் பெற்றோருக்கும் பாட்டிகளுக்கும்
    இனிமையாக இருக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கமெண்ட் பார்க்க முடிகிறதே. வாழ்த்துக்களுக்கு நன்றி. 

      Delete
  11. பெயர் சூட்டும் வைபவம் குறித்த உங்கள் பதிவு சிறப்பு. பெயர் சூட்டும் வைபவத்திற்கு என்னையும் அழைத்தமைக்கு நன்றி. உங்களைச் சந்திக்கவும் வாய்ப்பு கிடைத்ததில் கூடுதல் மகிழ்ச்சி. பெயர் வைக்க நிறைய யோசிக்கிறார்கள்! அந்த நேரத்தில் என்ன தோன்றுகிறதோ அந்தப் பெயரை வைப்பது இப்போது அறவே கிடையாதே! :) ஆங்காங்கே தெளித்திருக்கும் நகைச்சுவை ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட். அந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் வந்து சிறப்பித்தது எங்கள் எல்லோருக்குமே மகிழ்ச்சி அளித்தது. உங்களோடு அதிகம் பேச முடியாததுதான் வருத்தம். 

      Delete
  12. பேத்தி நவ்யாஸ்ரீக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  13. பெயர் சூட்டும் வைபவத்தை மிக அழகாய் விவரித்திருக்கிறீர்கள். பேத்தி நவ்யாஸ்ரீ என்றும் நலமுடன் வளமுடன் வளர என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. குழந்தை நவ்யாஸ்ரீக்கும் அவரது வருகையால் குதூகலத்தில் இருக்கும் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கும் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  15. தங்களது பெயர்த்தி நவ்யாஸ்ரீக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. பெயர்த்தி என்னும் சரியான தமிழ் வார்த்தையை  உபயோகித் திருக்கிறீர்கள். வாழ்த்திற்கு நன்றி. 

      Delete
  16. நவ்யாஸ்ரீ அழகான பெயர் ...

    மிக மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் மா ...

    எங்க பசங்களுக்கு பெயர் வைக்க இப்படி தான் நிறைய யோசித்தேன் ..ஆனால் பெரியவன் பெயர் கீர்த்திநாத் மாமனார் டக்கு ன்னு வைத்த பெயர் ..

    சின்னவர் புரட்டாசி சனிக்கிழமை பிறந்ததால் ...மாமியார் தேர்வு பிரசன்னா

    ReplyDelete
    Replies
    1. கீர்த்தி நாத், புதுமையான, அழகான பெயர். கருத்துக்கு நன்றி அனு.

      Delete
  17. தலைப்புப் பார்த்து, ஆருக்குப் பெயர் சூட்டுகிறார்கள் என வந்தேன் பார்க்க.. ஓ பேத்திக்கோ பானுமதி அக்கா... பெரிய பெயர்ப்பட்டியலுக்குப் பின், அழகிய பெயர்தான் வைத்திருக்கிறார்கள். எனக்கு ரிதன்யா வும் அழகான பெயராக இருக்குது..

    குட்டிக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  18. நன்றி அதிரா. உங்களை யாரவது பெயர் வைக்கச் சொன்னால்  ரிதன்யா என்னும் பெயரை கூறி விடுங்கள், ஆனால் அதற்கு முன்னால் பெண் குழந்தைதான் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். 

    ReplyDelete