கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, January 22, 2024

சங்கப் பலகையில் இடம் பிடித்தேன்

 சங்கப் பலகையில் இடம் பிடித்தேன்


சென்னையில் இருந்தவரை புத்தக கண்காட்சியை தவற விட்டதில்லை. பெங்களூர் சென்ற பிறகு புத்தக கண்காட்சிக்கு செல்ல முடியாத ஏக்கம் வாட்டும். இந்த வருடமும் அந்த வருத்தம் இருந்தது. 

சென்ற வியாழனன்று நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்து விட்டார். பத்தாம் நாள் காரியங்களுக்காக சனிக்கிழமை சென்னை வர வேண்டிய நிர்பந்தம். அந்த வேலைகள் முடிந்து மதியம் வீடு திரும்பினோம். மாலையில், "புக்ஃபேர் போகலாமா?" என்று மகன் கேட்டதும் கிளம்பி விட்டேன். "சனிக்கிழமை மாலை, கும்பல் அதிகமாக இருக்கும்" என்றார்கள். நிஜம்தான். தேர்க்கூட்டம், திருவிழா கூட்டத்தை புத்தகத் திருவிழாவில் பார்த்தது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

என் மகன் நிதானமாக ஒவ்வொரு ஸ்டாலிலும் அலச,  நான் சற்று மேம்போக்காகத்தான் பார்வையிட்டேன். அதிக நேரம் செலவிட்டால், அதிக புத்தகம் வாங்கி விடுவேன் என்று பயம். 

ஒரு  ஸ்டாலில் பார்த்துவிட்டு வெளியே வரும் பொழுதுமணிமேகலை பிரசுரம் ரவி தமிழ்வாணனை சந்தித்தேன். அறிமுகப்படுத்திக் அவரோடு உரையாடிய பொழுது என்னைப் பற்றி விசாரித்தார். நான் இதுவரை நான்கு மின்னூல்கள், குவிகம் மூலமாக ஒரு சிறுகதை திரட்டும் வெளியிட்டிருப்பது கூறியதும், "நீங்கள் ஏன் மணிமேகலை பிரசுரத்திற்காக உங்களுடைய புத்தகம் ஒன்றை தரக்கூடாது?"(பார்ரா) என்று கேட்டு தன்னுடைய பிஸினஸ் கார்டை கொடுத்தார்(பானு.. என்ன நடக்கிறது இங்க?)


அவரிடம் "எங்கள் அப்பாவின் வாழ்க்கையில் ஒரு கடுமையான காலத்தை கடக்க வேண்டியிருந்த பொழுது உங்கள் தந்தை திரு.தமிழ்வாணன் எழுதிய 'துணிவே துணை' என்னும் கட்டுரைகள்தான் மிகப்பெரிய தூண்டுதலாக இருந்ததாம்" என்றதும், "அதனால்தான் நான் என் அப்பாவை எங்கே வைத்திருக்கிறேன் பாருங்கள்" என்று அவருடைய மார்பின் இடது பக்கத்தில் தன் தந்தையின் உருவத்தை(கல்கண்டு லோகோ) பச்சை குத்திக்கொண்டிருந்ததை காண்பித்தார். "என் அப்பாவின் வாசகரின் மகளை சந்தித்ததில் மகிழ்ச்சி" என்று விடை பெற்றார்.

நான் வாங்க நினைத்திருந்த நாராயணீயம் புத்தகத்தை கிரி டிரேடிங்கில் வாங்கிய பிறகு வேறு ஒரு ஸ்டாலில் நம் தோழர் ராய செல்லப்பா அவர்களின் நாராயணீயம் புத்தகம் கண்ணில் பட்டது. "அடடா! இதை வாங்கியிருக்கலாமே என்று தோன்றியது.

அதன் பிறகு சில பல ஸ்டால்களை பார்வையிட்டுவிட்டு  'விருட்சம்'(குவிகம்) ஸ்டாலை அடைந்தேன். அங்கு லா.ச.ரா.வின் புத்தகம் ஒன்றும், சுஜாதாவின் புத்தகம் ஒன்றும் வாங்கினேன். நம்முடைய 'கல்யாண கதைகள்' இருக்காதா? என்று ஒரு நப்பாசை. "வணக்கம்" என்று பின்னால் ஒரு குரல். திரும்பினால், குவிகம் பதிப்பகத்தை சேர்ந்த திரு.கிருபானந்தன்.(அவரோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள தவறி விட்டேன்) "உங்களுடைய புத்தகம் இருக்கிறதே? பார்த்தீர்களா?" என்றார்.  அட! ஆமாம், டிஸ்ப்ளேயில் என் புத்தகத்தையும் கண்டேன்! கண்டேன்! கண்டேன்!

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பானு.. என்று புகைப்படம் எடுத்துக் கொண்டேன்."அம்மா பரவாயில்லையே, புக் ஃபேரில் புத்தகங்கள் வாங்குவாய். இந்த வருடம் உன் புத்தகம் இடம் பெற்றிருக்கிறது. Congratulations!" என்று கை குலுக்கினான் மகன். ஆம்,  சங்கப் பலகையில் இடம் பிடித்து விட்டேன்,இல்லையா?

14 comments:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. பிரபலங்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டமைக்கு வாழ்த்துகள். புத்தக கண்காட்சியில் தங்களது புத்தகமும் வெளி வந்திருப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். மென்மேலும் பல புத்தகங்களை எழுதி அடுத்த வருட புத்தக கண்காட்சியில் சிறப்புற இறைவனை வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மனமார்ந்த பாராட்டிற்கு மிக்க நன்றி. :))

      Delete
  2. சங்கப்பலகையில் இடம் பிடித்தமைக்கு வாழ்த்துகள் மேடம்.

    ReplyDelete
  3. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.  இந்த சந்தோஷத்தை அனுபவிப்பதே தனி சந்தோஷம்.

    ReplyDelete
    Replies
    1. //இந்த சந்தோஷத்தை அனுபவிப்பதே தனி சந்தோஷம்.// உண்மைதான். நன்றி

      Delete
  4. இந்த முறை என்னால் புத்தகச்சந்தை செல்ல முடியவில்லை.  இந்த முறையும் என்றே சொல்லலாம்!!

    ReplyDelete
  5. மகன் என்னென்ன புத்தகம் வாங்கினார் என்று சொலல்வில்லையே...  எத்தனை பே பார்த்தீர்கள்.    சென்றதே மாலைதான் என்றால் அதிக பட்சம் மூன்று?

    ReplyDelete
    Replies
    1. தீவிரமாக பார்த்தது, மூன்றுதான் இருக்கும், மேலோட்டமாக ஐந்தாறு, நான் தனியாகவும், மகன் தனியாகவும் பார்த்தோம். குழந்தைகள் புத்தகங்கள் நிறைய கண்ணில் பட்டன. ஐயங்கார் சமையல் என்பதைத் தவிர வேறு சமையல் புத்தகங்கள் கண்ணில் படவேயில்லை,

      Delete
  6. குழந்தைக்கான சில புத்தகங்கள், ஜென் புத்தகம் ஒன்று, வேறு சில புத்தகங்கள்.

    ReplyDelete
  7. பானுக்கா சூப்பர் போங்க! அபப்டிப் போடுங்க. ரவி தமிழ்வாணன் அவர்களைச் சந்தித்தது அவர் பிரசுரத்திற்குக் கேட்டது...ஆஹா! சூப்பர் போங்க. உங்கள் புத்தகம் குவிகம்/விருட்ச்சம் ஸ்டாலில் டிஸ்ப்ளேயில் ...நல்லகாலம் பிறக்குது நல்லகாலம் பிறக்குது ஜக்கம்மா சொல்றா!

    வாழ்த்துகள் பானுக்கா. சங்கப்பலகையில் இடம் பிடித்ததுக்கும் அடுத்ததுக்கு அச்சாணி போட்டதுக்கும்!! வாழ்த்துகள் பானுக்கா!

    கீதா

    ReplyDelete
  8. செல்லப்பா சாரின் புத்தகங்கள் நிறைய இருக்கு போல! அவர் எல்லாக் கதைகளையும் பிரசுரம் செய்து விடுவார்.

    கீதா

    ReplyDelete
  9. சங்கப்பலகையில் இடம் பிடித்ததற்குப் பாராட்டுகள். கூடவே, சந்தித்த பிரமுகர்களுடனான அனுபவங்கள் அருமை. செல்லப்பா ஸாரின் புத்தகங்கள், நாராயணீயம் உரை எழுதிய புத்தகம் எல்லாம் புகைப்படத்துடன் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.

    துளசிதரன்

    ReplyDelete