செளதடுகா கணபதி
ஜனவரி 25, 26 தேதிகளில் குக்கே சுப்ரமண்யா, தர்மஸ்தலா சென்று வரலாம் என்று முடிவு செய்து கிளம்பினோம்.
வீட்டில் செய்த தக்காளி தொக்கை பிரட்டில் தடவி காலை உணவிற்காக எடுத்துக் கொண்டோம். அதை காரிலேயே சாப்பிட்டோம். வழியில் MTRல் காபி மட்டும் குடித்து விட்டு பயணத்தை தொடர்ந்தோம். வழியெங்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை அழகை ரசித்தபடி சுகமான பயணம்.
எங்கள் பிரயாணத்தைப் பற்றி எங்கள் வீட்டில் வேலை செய்யும் லட்சுமியிடம் சொன்ன பொழுது, "குக்கே சுப்ரமண்யாவிற்கும், தர்மஸ்தலாவிற்கும் இடையில் ஒரு கணபதி கோவில் இருக்கிறது. அங்கு கணபதி கட்டிடம் ஏதும் இல்லாமல் வெட்ட வெளியில்தான் இருப்பார். மிகவும் சக்தி வாய்ந்தவர், அவரையும் தரிசனம் செய்துவி்ட்டு வாருங்கள்" என்றாள். ஆனால் அவளுக்கு அந்த இடத்தின் பெயர் சொல்லத் தெரியவில்லை.
குக்கேயிலிருந்து தர்மஸ்தலா வந்து ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த பொழுது மாலையில் மத்யமர் சகோதரி உமா மூர்த்தி கைபேசியில் அழைத்தார்.
நாங்கள் தர்மஸ்தலாவில் தங்கியிருப்பதை சொன்னதும், " தர்மஸ்தலாவில் இருக்கிறீர்கள் என்றால் அங்கிருந்து செளதடுக்கா கணபதி கோவிலுக்கு அவசியம் செல்லுங்கள்" என்று கூறியதோடு, கோவில் பற்றிய விவரங்கள், செல்லும் வழி எல்லாவற்றையும் விவரமாக சொன்னார். எங்கள் பணிப்பெண் குறிப்பிட்டு, நாங்கள் செல்ல விரும்பிய கோவில் அதுதான். விநாயகரே உமா மூர்த்தி மூலம் விவரங்கள் சொல்லியிருக்கிறார் என்று தோன்றியது.
தர்மஸ்தலா மஞ்சுநாதா ஸ்வாமி கோவிலில் எதிர்பார்த்ததை விட சீக்கிரமாக தரிசனம் கிடைத்தது. அங்கிருக்கும் அம்மனின் நாமம் கன்யாகுமரி என்பது ஆச்சர்யமாக இருந்தது. அம்மனுக்கு இருபுறமும் தர்ம தேவதைகளாம்.
மறுநாள் காலை செளதடுகா கணபதியை தரிசிக்கச் சென்றோம். ஒரு தோப்பில் வானமே கூறையாக அமர்ந்திருக்கிறார். கோவிலாக கட்ட முயன்ற பொழுதெல்லாம் கட்ட முடியாமல் தடை வந்ததால் அப்படியே விட்டு விட்டார்களாம். திருச்சி உறையூர் இருக்கும் வெக்காளி அம்மன் கோவில் நினைவுக்கு வந்தது.
ஒரு மேடையில் விநாயகர் எழுந்தருளியிருக்கிறார். இரண்டு பக்கங்களிலும் கம்பி கட்டி விட்டிருக்கிறார்கள். அர்ச்சனை செய்பவர்கள் ஒரு பக்கம், தரிசனம் மட்டும் செய்பவர்கள் ஒரு பக்கம் விடுகிறார்கள். அந்த கம்பிகளில் வெவ்வேறு அளவுகளில் மணிகள் கட்டப்பட்டு அவை ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.
இந்தக் கோவிலின் சிறப்பு இது. தங்கள் விருப்பங்கள் நிறைவேற வேண்டும் என்று நேர்ந்து கொள்ளும் பக்தர்கள், அவை நிறைவேறியதும் மணியை இந்த கோவிலில் கட்டுவார்களாம். அதற்காக பல்வேறு சைசில் மணிகள் இங்கிருக்கும் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கோவிலின் மற்றுமொரு சிறப்பு அங்கு பிரசாதமாக வழங்கப்படும் வெல்ல அவல். பெரிய பாத்திரத்தில் கொண்டு வைத்து நைவேத்தியம் செய்த பிறகு எல்லோருக்கும் ஒரு பையில் அள்ளி,அள்ளி போட்டுக் தருகிறார்கள். இந்த மாதிரி ஒரு வெல்ல அவல் வேறு எங்கேயும் சுவைக்க கிடைக்காது. நாம் வீடுகளில் வெல்ல அவல் போல பிசுக்கென்று கையில் ஒட்டாமல், வேற லெவல் டேஸ்ட்!
இங்கு வெள்ளரிக்காயும் விசேஷமான நைவேத்தியமாம். இங்கிருக்கும் விவசாயிகள் தங்கள் கொல்லைகளில் விளையும் வெள்ளரிக் காய்களை இந்த விநாயகருக்கு படைப்பார்களாம்.
எதிரிகளால் அழிக்கப்பட்ட கோவிலில் இருந்த விநாயகர் விக்கிரகத்தை இடையர்கள் எடுத்துச் சென்று, வெள்ளரிக்காய்கள் விளையும் வயல்காட்டின் நடுவில் இருந்த புல்வெளியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டிருக்கிறார்கள். பின்னாளில் ஆலயம் கட்ட முயன்றபொழுது தடைகள், விநாயகரே சம்பந்தப்பட்டவர்கள் கனவில் தோன்றி தான் வெட்டவெளியில் இருப்பதையே விரும்புவதாக கூற அப்படியே விட்டு விட்டார்கள். கன்னடத்தில் 'செள' என்றால் வெள்ளரிக்காய் என்றும், 'தடுகா' என்றால் புல்வெளி என்றும் பொருளாம், அதனால்தான் இவர் செளதடுகா கணபதி.
தர்மஸ்தலாவிலிருந்து குக்கே சுப்ரமண்யா செல்லும் வழியில் 16 கி.மீ. தொலைவில் உள்ளது. காரில் சென்றால் அரைமணிக்கும் குறைவான நேரம்தான் ஆகும். அந்தப்பக்கம் செல்வதாக இருந்தால் தவற விடாதீர்கள்.
வணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. பதிவில் சொல்லப்பட்ட சௌதடுகா விநாயகர் கோவிலின் வரலாற்றை அறிந்து கொண்டேன். பிள்ளையாரின் பெருமைகளை சொல்வதரிது. என் இஷ்ட தெய்வம் பிள்ளையார்தான்.
அவரே வந்து தனக்கு மேற்கூரை வேண்டாமென கூறியதும், இதுவரை அவ்வண்ணமே கோவில் பிரசித்தி பெற்று திகழ்வதும் வியப்புக்குரியதுதான்.வெல்ல அவல் பிரசாதத்தை மனதளவில் பெற்றுக் கொண்டேன்.
படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. படங்களின் மூலமாக விநாயகரை தரிசித்துக் கொண்டேன். நாங்கள் ஒரு பனிரெண்டு வருடங்களுக்கு முன், ஹொரநாடு, சிங்கேரி தர்மஸ்தலா போன்ற கோவில்களுக்கு சென்றிருந்த போது, இங்கு திரும்பும் வழியில், நாங்கள் அமர்த்திக் சென்ற காரின் ஓட்டுனர் வழியின் நடுவில் ஒரு விநாயகர் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அது இதுவாவென்பது அவ்வளவாக இப்போது நினைவில் இல்லை. அப்போது நாங்கள் குக்கே சுப்பிரமணியர் கோவிலுக்குச் செல்ல நேரமின்றி நேரே இங்கு வந்து விட்டோம். மற்றொரு முறை தர்மஸ்தலா, குக்கே செல்ல வேண்டுமென நினைத்துக் கொண்டேயுள்ளோம் . "அவன்" அழைக்க வேண்டும். பார்க்கலாம்..! பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
Delete//அவன்" அழைக்க வேண்டும். பார்க்கலாம்..!//நாம் கோவில்களுக்குச் செல்கிறோம் என்பதை விட அங்கு குடி கொண்டிருக்கும் இறைவன் நம்மை அழைக்க வேண்டும் என்பார்கள். 'அவனருளால் அவன் தாள் வணங்கி' என்பதுதானே உண்மை. நன்றி
நல்ல விவரங்கள். அழகிய படங்கள். கணபதிக்கு வித்தியாசமான பெயர்.
ReplyDeleteநன்றி
Deleteஅழகான ஊரில் உள்ள அழகான கோவில்கள். இந்த இடங்கள் சுற்றி இயற்கைதான். சௌதடுகா கணபதி. வித்தியாசமான பெயர். படங்களும் சூப்பர் பானுக்கா.
ReplyDeleteதர்மசாலா? குக்கே பத்தி வேறு ஒன்றுமில்லையே? அனுபவங்கள்?
கீதா
நான் சென்ற வருடம் கர்நாடக யாத்திரை சென்ற போது குக்கே மற்றும் தர்மஸ்தலா சென்றேன். அதை எழுத ஆரம்பித்தேன் முடிக்கவில்லை. இந்த முறை சென்றபோது நிறைய கும்பல் இருந்தாலும் நம்மூர் கோவில்கள் போல இரைச்சல் இல்லாதது அச்சர்யமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது.
ReplyDelete