நந்தீஸ்வரர் கோவில் நந்திவரம்(கூடுவாஞ்சேரி)
சென்னையில் ஒரு சிவன் கோவில் இருக்கிறது, நரம்பு, எலும்பு வியாதிகளுக்கு அங்கிருக்கும் சிவனை வழிபடுவது நல்லது என்று யாரோ எங்கள் கேரள விருந்தினருக்கு கூறினார்களாம், எனவே அந்த கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினார். அவர் குறிப்பிடும் கோவில் கூடுவாஞ்சேரியில் நந்திவரம் என்ற இடத்தில்தான் இருக்கிறது, நந்திவரம், நந்தீஸ்வரர் கோவில் என்று என் அக்கா பையன் கூறினார். ஆலயம் காப்போம் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கும் அவருக்கு கோவில் பற்றிய விவரங்கள் தெரியும்.
சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் கூடுவாஞ்சேரியில் மெயின் ரோடிலிருந்து இடதுபுறம் நந்திவரம் என்று பெயர்ப்பலகை தென்படுகிறது, அந்தப் பாதையில் உள்ளே சென்றால், சிறிது தூரத்திலேயே நந்தீஸ்வரம் கோவிலை அடைந்து விடலாம்.
பல்லவர்கள் ஆட்சி காலத்தில் நந்திவர்மன் என்ற அரசன் பெயரால் 'நந்திவரம்' என்று அழைக்கப்பட்ட ஊர். வெகுகாலம் அப்படித்தான் அழைக்கப்பட்டதாம். கூடுவாஞ்சேரி இதன் பக்கத்து கிராமம். ஆனால் காலப்போக்கில் கூடுவாஞ்சேரியின் ஒரு பகுதியாக நந்திவரம் மாறிப் போனது இந்தப்பகுதி மக்களுக்கு ஒரு குறைதானாம்.
கோவிலுக்குள் செல்லலாம், மிகப்பெரிய கோவிலும் இல்லை, மிகச்சிறிய கோவில் என்றும் கூறிவிட முடியாது. சாதாரணமாக கிராமங்களில் இருக்கும் ஆலயங்கள் போல இருக்கிறது. சுத்தமாக பராமரிக்கப்படுகிறது.
கிழக்கு பார்த்த லிங்கத் திருமேனி, அம்பாள் தெற்கு பார்த்து எழுந்தருளியிருக்கிறாள். செளந்தர்யநாயகி என்னும் பெயருக்கேற்றார் போல் அழகாக நம் மனதை கவர்கிறாள்.
பிரகாரத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் தனி சன்னதி கொண்டருளுகிறார். பிரகாரத்தை சுற்றி வரும் பொழுது பின்பக்கம் ஸ்தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது. சூரிய பகவானுக்கு தனி சன்னதி. அந்த கோபுரத்தில் தேரில் சூரிய பகவானின் அழகான சிற்பம். சூரியனுடன் தேருக்கு ஒற்றைச் சக்கரம்தான் என்பார்கள், அதை அழகுற வடித்திருக்கிறார்கள்.
முன் பகுதியில் நாகலிங்க மரத்தடியில் ஒரு நந்தி இருக்கிறது. கோவில் திருப்பணிக்காக தோண்டிய பொழுது கிடைத்ததாம். நல்ல நிலையில் இருந்ததால் வெளியே வைத்து விட்டார்களாம். அதையும் வழிபடுகிறார்கள். அதற்கு பின்பக்க சுவரில் சித்தர்களின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. நாகலிங்க மரத்தடியிலும், அதை ஒட்டி இருக்கும் சிமெண்ட் பெஞ்சிலும் சிலர் அமர்ந்து ஜபம், தியானம் செய்து கொண்டிருந்தார்கள். அந்தப்பக்கம் செல்லும் பொழுது அவசியம் சென்று தரிசியுங்கள். அர்ச்சகர் நன்றாக விளக்கங்கள் சொல்கிறார்.
கோவிலுக்கு எதிரே ஒரு ஏரி இருக்கிறது. ஊரப்பாக்கம் உட்பட இந்த பகுதிகளின் தண்ணீர் தேவைக்கு பயன் படுமாம். நம் முன்னோர்களின் நீர் மேலாண்மை வியக்க வைக்கிறது. சென்னை, பெங்களூர் போன்ற ஊர்களில் எத்தனை ஏரிகள்! இன்று எல்லாவற்றையும் தூர்த்து வீடுகள் கட்டிவிட்டு, தண்ணீர் இல்லை என்று நிலத்தடி நீரை உறிஞ்சுகிறோம்.
தல வரலாறு(அர்ச்சகர் கூறியது):
இந்த ஊரில் மாடுகள் வைத்திருந்த ஒரு இடையர் அவருடைய ஒரு காராம்பசு, தினசரி ஒரு இடத்தில் பால் சொரிவதை கண்டு ஊர் பெரியவர்களிடம் சொல்கிறார். அவர்கள் அந்த இடத்தை தோண்ட, சிவலிங்கம் புலப்படுகிறது. அதை எடுத்து வழிபடுகிறார்கள். பின்னர் பல்லவ மன்னன் நந்திவர்மன் கோவில் கட்ட உதவி, நிவந்தங்களும் அளித்திருக்கிறார்.
ஒரு முறை மூலவரான சிவலிங்கம் பிளந்து அர்த்தநாரீஸ்வர கோலத்தில் காட்சி அளித்ததால், பின்னமான லிங்கத்தை வைக்கக்கூடாது என்னும் மரபை மீறி அதை இணைத்து மீண்டும் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அதனால் திருமணத்தடை நீங்கவும்,ஸ குடும்ப ஒற்றுமைக்கும் வழிபடலாம்.
அப்பர் பெருமான் நந்திவரத்தை தாண்டிச் சென்ற பொழுது அவருக்கு, மூட்டு வலி இருந்ததால் ஊருக்குள் நடந்து வந்து சிவபெருமானை வணங்க முடியவில்லை, தொலைவில் இருந்தபடியே மனதால் சிவனை நினைத்து வணங்கினாராம். அதனால் இது வைப்புத்தலம் எனப்படுகிறது. அப்போது அவர் இந்த கோவிலுக்கு வந்து வணங்கும் பக்தர்களுக்கு எலும்பு, நரம்பு சம்பந்தமான நோயைகள் வரக்கூடாது என்று வேண்டிக் கொண்டாராம், அதனால் இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் எலும்பு மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.
அப்பர் பெருமானின் பாடல்:
இந்த கோவில் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன் மறைமலைநகரில் நான் வேலை பார்த்த போது போக வேண்டும் என்று நினைத்திருக்கிறேன் ஆனால் ஆபீஸ் போய்விட்டு வீட்டுக்கு வருவதற்கே சரியாக இருக்கும் நல்ல இன்பர்மேஷன் கொடுத்திருக்கிறீர்கள்
ReplyDeleteநான் போயிருக்கிறேன், பானுக்கா ஒரே ஒரு முறை சில வருடங்களுக்கு முன்னால். கூடுவாஞ்சேரியில் உறவினரின் வீடு இருக்கு.
ReplyDeleteஅழகான கோவில். படங்கள் நன்றாக இருக்கின்றன.
ஏரியை படம் எடுக்கலையா அக்கா?
கீதா