கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, April 26, 2025

கனடா டைரி -1

 கனடா டைரி -1

சென்ற வருடம் செப்டம்பரிலேயே கனடா வந்திருக்க வேண்டும். சென்னையில் வீட்டை வாடகைக்கு விட்டதில் கொஞ்சம் சிக்கலாகி கோர்ட்,கேஸ் என்று இழுப்பறிகள் இருந்ததால் என் கனடா பயணம் ஒத்தி போடப்பட்டது. அந்த கேஸ் முடிவுக்கு வந்து விட்டதால் கனடாவுக்கு கிளம்பினேன். 

பெங்களூர்-ஃப்ராங்க்ஃப்ர்ட்-டொரண்டோ என்பது பயண திட்டம். என்னால் நடக்க முடியும், வீல் சேர் தேவையில்லை என்றாலும், என் மாப்பிள்ளை வீல் சேர் சர்வீஸுக்கு கோரியிருந்தார். டிஜி யாத்ரா ஆப்பின் QR கோட் அனுப்பியிருந்தார். அதனால் விரைவில் உள்ளே சென்றுவிட முடிந்தது. Digi yatra QR code ஐ விமான நிலையத்தில் ஸ்கேன் செய்பவர்களுக்கு தனி வரிசை. செக் இன் செய்யும் பொழுது டிக்கெட்டையெல்லாம் காட்ட வேண்டாம். செக் இன் ப்ராஸஸ் விரைவாக முடிந்து விட்ட்து. என்னை வீல் சேரில் அழைத்துச் சென்ற பெண் அமரவேண்டிய கேட்டின் முன் உட்காரச் சொல்லி விட்டு, "உங்களுக்கு மூன்று மணிக்குத்தானே விமானம், நான் இரண்டே முக்காலுக்கு வருகிறேன்" என்று கூறிச் சென்றாள்.

லவுஞ்சில் காத்துக் கொண்டிருந்த பொழுது, ஆஸ்லோவுக்கு செல்லும் ஒரு பெண், என் டெஸ்டினேஷனை கேட்டுவிட்டு, நான் தனியாக பயணப்படுவதற்கு ஆச்சரியப்பட்டாள். நான் தண்ணீர் குடித்து, கொஞ்சம் நடந்து, ஒரு கப்பிசீனோ காபி குடித்து நேரத்தை கடத்தினேன். சிறிது நேரத்தில் வீல் சேர் பெண் வந்து விட்டாள். விமானத்தில் ஏற மிக நீண்ட வரிசையில் நின்றிருக்கும் பயணிகளை பார்த்தபொழுதுதான் வீல் சேரின் மகிமை புரிந்தது. வீல் சேர் பயணிகளுக்கு முன்னுரிமை. 

விமானத்தில் எனக்கு பக்கத்து சீட்டில் வந்து அமர்ந்த இளம் ஜெர்மானிய பெண் இரண்டாவது முறையாக இந்தியா வந்து திரும்புகிறாராம். சென்ற முறை ஹரித்வார், ரிஷிகேஷ், ஆரோவில்(பாண்டிச்சேரி), போன்ற இடங்களுக்குச் சென்றாராம். இந்த முறை மைசூர் மட்டும் என்றார். அவரது ஆன்மீகத் தேடல் அவரை இந்தியாவுக்கு வரவழைத்திருக்கிறது. என் பெயர் என்னவென்று கேட்டதோடு நிற்காமல் அதற்கு என்ன பொருள் என்றும் கேட்டார்.

அரபு நாடுகள் வழியே சென்றால் இந்திய மொழிப் படங்கள் நிறைய பார்க்கக் கிடைக்கும்.  லுஃப்தான்ஸா என்பதால் ஒரிரு ஹிந்தி படங்கள் மட்டுமே இருந்தன. தமிழில் 'கருடன்' இருந்தது. ஃப்ராங்க்ஃப்ர்ட் விமான நிலையத்தில் இறங்கியதும் வீல் சேருக்கு கோரிக்கை வைத்தவர்களை ஒரு பாட்டரி காரில் ஏற்றிக் கொண்டு ஒரு இடத்தில் இறக்கி விட்டார்கள். அங்கிருந்து வேறொருவர் எங்களை விமான நிலைய மெட்ரோ ரயிலில் அழைத்துச் சென்று வேறொரு டெர்மினலில் இறக்கி விட்டார். அங்கிருந்து மீண்டும் ஒரு பாட்டரி காரில்(buggy) இமிக்ரேஷன் பண்ணும் இடத்தில் இறக்கி விட, அங்கு ஃபார்மாலிடிகளை முடித்து காத்திருந்த பொழுது பக்கத்தில் ஒரு பெண்மணி  அவர் வீட்டாரோடு செல்ஃபோனில் உரக்க உரையாடுவதை கேட்க நேர்ந்தது. ஆஹா தமிழ் குரல், விடுவேனா? ரயில் சிநேகம் போல ஒரு ஏர்போர்ட் சிநேகம். ஃப்ராங்க்ஃபர்ட் ஏர் போர்டில் வைஃபை தானே இணைத்துக் கொண்டு விட்டது. மகனோடும், மகளோடும் பேசினேன். 

அடுத்த கட்ட பயணத்தில் சாப்பிட ஏதோ கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். ஒரு ஹிந்தி சினிமா, கொஞ்சம் வீடியோ கேம், கொஞ்சம் தூக்கம் என்று பொழுது போனது.  டொரண்டோ விமான நிலையத்திற்கு என்னை வரவேற்க வந்திருந்த என் மகள் ஒரு ஜாக்கெட்டை கொடுத்து அணிந்து கொள்ள சொன்னாள். "குளிரவில்லை" என்றதற்கு, "இங்கே குளிராது, வெளியே சென்றதும் குளிரும்" என்றாள். மகள், மருமகன், பேத்திகள் எல்லோருமே ஜாக்கெட் அணிந்து கொண்டிருந்தார்கள்.

குளிர்தான் (-2டிகிரி). அந்த குளிர் தாங்காமல் எனக்கு இரண்டாம் நாள் தலை சுற்றல் வந்து விட்டது. திடீரென்று அதிகமான குளிருக்கு எக்ஸ்போஸ் ஆகும்பொழுது, நம் காதில் வேக்ஸ் அதிகமாகி விடுமாம், அதனால் வெர்டிகோ வரும். சென்னையிலிருந்து பெங்களூக்கு வந்த புதிதிலும் எனக்கு வெர்டிகோ வந்தது நினைவுக்குவந்தது. காதில் லேசாக சூடாக்கிய எண்ணையை விட்டுக் கொள்ளும் பொழுது அந்த வேக்ஸ் வெளியேறி விடும் என்று கூறிய என் மகள் என் காதில் எண்ணெய் விட்டாள். அந்த ட்ரீட்மெண்டுக்கு நிஜமாகவே நல்ல பலன் இருந்தது. அதன் பிறகு சில நாட்கள் காதில் பஞ்சு வைத்துக் கொண்டேன். :)) 

ஞாயிறு(30.03.25) சாயி பஜன் சென்ற பொழுது freezing rain. அன்று எங்கள் ஏரியாவுக்கு அருகில் மரங்களில் விழுந்த பனியால் மரங்கள் விழுந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டு கஷ்டப்பட்டிருக்கிறார்கள். மறுநாள் திங்களன்று பள்ளிகளுக்கு விடுமுறை. நம் ஊரில் மழை என்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தவுடன் மழை நின்று விடுவதைப் போலத்தான் இங்கும் நடந்தது. 

கன்யா பூஜை @ தேவி கோவில்

நான் அங்கு சென்றதும் வசந்த நவராத்திரி துவங்கியது. அஷ்டமி அன்று அங்கு ஒரு தேவி கோவிலில் கன்யா பூஜை செய்தார்கள். அதற்கு என் பெண்ணின் தோழியின் தாய் அழைத்துச் சென்றார். அங்கு ஒரு பெண்மணி என்னைப் பார்த்து புனகைத்தார், அவர் வேறு அதிரா மாதிரி இருந்தாரா நானும் ட்ரம்ப்பின் செகரெட்டரி என்று நினைத்து புன்னகைத்தேன், ஆனால் அவர் அதற்கு மேல் பேசவில்லை. யாரோ அவர் யாரோ?




இரண்டு நாட்களாகத்தான் குளிர் குறைந்து வருகிறது. சாதாரணமாக ஏப்ரலில் இவ்வளவு குளிர் இருக்காது என்று சிலர் சொல்கிறார்கள். சென்ற வாரம் லாங் வீக் எண்ட்! என் பெண்ணின் தோழி ஒருவர் அவர் வீட்டிற்கு அழைத்திருந்தார். மெனொபாஸில் இருக்கும் பெண்ணின் மூட் ஸ்விங்க்ஸ் போல வானம் திடீரென்று மழை, திடீரென்று வெய்யில் என்று மாறி மாறி படுத்தியது. அவர்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் jack darling என்னும் பார்க்கிற்கு அழைத்துச் சென்றார். அந்த பார்க்கை ஒட்டியிருக்கும் பெரிய ஏரியில் சமுத்திரத்தைப் போல அலை. காற்று, தூரலும் தொடங்க பற்கள் தந்தியடிக்க ஆரம்பித்ததால் புகைப்படங்கள் மட்டும் எடுத்துக்கொண்டு திரும்பி விட்டோம்.


இப்போதைக்கு இத்தோடு முடித்துக் கொள்கிறேன். பின்னர் சந்திக்கலாம். 







 

15 comments:

  1. கனடா பயண விவரங்களும், படங்களும் அருமை.
    வீல்சேர் சர்வீஸ் நல்லது . எனக்கு இரண்டு தடவையாக வீல்சேர் உதவி தேவைபட்டது, கால் வலி வேறு விரைவில் நம்மை அழைத்து சென்று விடுகிறார்கள் , அது ஒரு வசதி.

    காணொளிகள் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

      Delete
  2. Digi yatra QR code ஐ விமான நிலையத்தில் ஸ்கேன் செய்பவர்களுக்கு தனி வரிசை//

    ஆமாம்,

    freezing rain வாவ்!!! அழகோ அழகு, பானுக்கா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பார்க்க அழகு, அனுபவிக்க..? No

      Delete
  3. ட்ரம்பின் செக்கரட்டரிய பார்த்திருந்தீங்கனா, அவங்களுக்கே செக்யூரிட்டியோடத்தானே வந்திருப்பாங்க!!!!!ஹாஹாஹா...ட்ரம்ப் அப்படியான ஏதேதோ கொண்டு வந்துகொண்டிருக்கிறாரே!! ம் ஒரு சான்ஸ் விட்டுப் போச்சு ட்ரம்புக்கு நம்ம சார்பில் ஒரு தூது விட்டிருக்கலாம்!! நல்ல புள்ளைங்க விசால எல்லாம் கை வைக்காம இருக்கச் சொல்லி!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //நல்ல புள்ளைங்க விசால எல்லாம் கை வைக்காம இருக்கச் சொல்லி!!!!// ஹாஹா! அப்படியெல்லாம் செய்யமாட்டார் கவலைப்படாதீர்கள்!

      Delete
  4. அக்கா ஏர்போர்ட் அனுபவங்கள் சுவாரசியம்.

    ஏரி கண்ணைக் கட்டுதே!!! இல்லை தன் அழகால் நம்மைக் கட்டிப் போடுகிறது என்று சொல்கிறேன்!. இதுக்கு டார்லிங்க் எனலாம்.

    படங்கள் வீடியோக்கள் எல்லாமே ரொம்ப அழகா எடுத்திருக்கீங்க பானுக்கா! ரசித்துப் பார்த்தேன்.

    கீதா

    ReplyDelete
  5. வீல் சேர் ஏற்பாடு செய்த உங்கள் மாப்பிள்ளை அனுபவசாலி, மற்றும் புத்திசாலி என்று தெரிகிறது.

    வீல்சேரிலிருந்து எழுந்து நடப்பதை அந்தப்பெண்ணோ யாரோ பார்த்து விட்டால் 'அதான் நடக்கறீங்களே..  வீல் சேர் கிடையாது என்று கொண்டு சென்று விட்டால் என்ன ஆகும்!!!!

    ReplyDelete
    Replies
    1. என் மகனுக்கு நான் வீல் சேரில் செல்வது பிடிக்காது. "உன்னால நடக்க முடியாதா? இப்படி நடக்க முடிகிறவர்கள் வீல் சேர் வசதி கேட்பதால்தான் நம்மை மதிக்க மாட்டேனென்கிறார்கள்" என்பான். அப்படியும் நடக்கிறதாம். சென்னை, ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் சிலர் அவமதிக்கப்படுகிறார்கள் என்று கேள்வி பட்டேன்.

      Delete
  6. முதல் காணொளி ஓகே.  இரண்டாம் காணொளி மிகவும் அழகாயிருந்தது.  கடல் போலவே தோற்றம்.

    ReplyDelete
    Replies
    1. நேரில் பார்க்கும்பொழுதும் கடல் என்றே தோன்றியது.

      Delete
  7. ஏர்போர்ட்மற்றும் விமான இருக்கைகளில் ஏற்பட்ட அனுபவங்கள் சுவாரஸ்யம்.

    ReplyDelete
  8. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. கனடா பற்றிய பயண விபரங்களும், செய்திகளும் அருமை. தனியாக விமான பயணம் மேற்கொண்டு மகள் இருப்பிடம் சென்றமைக்கு வாழ்த்துகள். தங்கள் மாப்பிள்ளையும் தங்கள் பயணம் உணர்ந்து சிறப்பாக செயல்பட்டுள்ளார்.அங்கு குளிர் அதிகமானதால் சிரமபட்டிருப்பீர்கள். எனினும் மகள், மற்றும் பேத்திகளை கண்ட சந்தோஷம் குளிரை மறக்கடித்து இருக்கும். அங்குள்ள கோவில் நியதிகள், பூஜை என அனைத்தும் அருமையாக உள்ளது. படங்கள் அனைத்தும் நன்றாக எடுத்துள்ளீர்கள்.

    காணொளிகள் அருமை. ஏரியில் வரும் கடல் அலைகள் அழகாக இருக்கிறது. அதன் நீரும் மிக குளிரை தந்திருக்கும். ஆனால், பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    ReplyDelete
    Replies
    1. Bhanumathy VenkateswaranMay 5, 2025 at 5:51 AM

      மிக்க நன்றி கமலா! எல்லா பதிவுகளிலும் ஒவ்வொரு விஷயத்தையும் கவனித்து பாராட்டும் உங்களை தாராளமாக பாராட்டுகிறேன். உங்கள் கருத்துகள் எழுதுகிறவருக்கு மிகுந்த உற்சாகத்தை தருபவை.

      Delete