டொரண்டோ மிருகக்காட்சி சாலை
டொரண்டோவில் இருக்கும் மிருகக்காட்சி சாலைக்கு செல்ல ஆன் லைனில்
டிக்கெட் புக் பண்ணியிருக்கிறோம் என்று என் மகள் சொன்ன பொழுது, எனக்கு அதில் பெரிதாக விருப்பம் இல்லா விட்டாலும் ஒன்றும் சொல்லவில்லை. பொதுவாக மிருககாட்சி சாலைக்குச் செல்வதில் எனக்கு அத்தனை ஆர்வம் கிடையாது. ஆனால் நம்மை வெளியே அழைத்துச் செள்ள வேண்டும் என்று நினைப்பவர்களின் ஆசையைக் கெடுக்க வேண்டாமே என்று தோன்றியது. ஏற்கனவே நான் வீட்டிலேயே அடைந்து கிடைக்கிறேன் என்று என் மகள் சொல்லிக் கொண்டிருக்கிறாள். மேலும், இங்கு சம்மரில்தான் வெளியே செல்ல முடியும்.
காலை 9:30க்கு மிருககாட்சிசாலை திறக்கும், எங்கள் வீட்டிலிருந்து அங்கு செல்ல 45 நிமிடங்கள் பிடிக்கும் என்றது கூகுள். அங்கு உணவகம் இருந்தாலும் விலை மிகவும் அதிகமாக இருக்கும் என்பதால் வீட்டிலிருந்தே சாண்ட்விச், புளியோதரை, தயிர் சாதம், சிப்ஸ், ஐஸ் டீ, குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ், குடிக்க தண்ணீர் போன்றவை எடுத்துக் கொண்டு வீட்டிலிருந்து 8:30க்கு கிளம்பி விட்டோம். நாங்கள் சீக்கிரமாக சென்று விட்டோம் என்று நினைத்தால், எங்களுக்கு முன்பே நிறைய பேர்கள் வந்து விட்டார்கள். இந்த சாமான்களை வைத்துக் கொண்டு செல்ல வேகன், எனக்காக வீல் சேர் போன்றவைகளையும் ஆன் லைனில் நுழைவு சீட்டு வாங்கும் பொழுதே புக் பண்ணி விடலாம் இலவசம்தான். வீல் சேர் தேவையா என்று எனக்கு தோன்றியது. ஆனால் நிறைய தூரம் நடக்க வேண்டியிருந்ததால் அவ்வப்பொழுது வீல் சேரிலும் உட்கார்ந்தேன். அதையும் மீறி அடுத்த நாள் மிகவும் அசதியாக உணர்ந்தேன்.
பரந்து விரிந்திருக்கும் மிருகக்காட்சி சாலை இது.இயற்கை சூழலில் அமைந்திருக்கிறது. இந்தோ மலேயா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, கனடா, யூரோஸியா, ஆஸ்திரேசியா என்று பிரிவுகள். இதில் எங்களை மிகவும் கவர்ந்தது ஆப்ரிக்கா. யூரோஆசியா, ஆஸ்திரேலிசியா பிரிவுகளில் மிகவும் குறைந்த மிருகங்கள் இருந்தன.
ஒட்டக சிவிங்கியின் மண்டையோட்டின் மாதிரி. கருப்பாக தெரிவது அதன் நாக்கு. மாடுகளைப்போல அதுவும் இலைகளை முழுங்கி விட்டு பின்னர் அசைபோடுமாம் வயிற்றுக்கும் வாய்க்கும் தூரம் அதிகமிருந்தாலும். ஒட்டகசிவிங்கிக்கு இனிப்பான இலைகளுடன் பிடிக்குமாம்.
 |
வரிக்குதிரையின் மண்டையோடு
|
 |
நீர்யானையின் பல் |
 |
வான்கோழி முட்டை |
 |
உர்ராங்குட்டான் மற்றும் மனித மண்டையோடுகள்
|
மனிதனோடு 98% ஒத்துப் போகுமாம் உர்ராங்குட்டான். ஆனால் அதன் மண்டையோட்டின் பின் பகுதி மனித மண்டையோட்டைப் போல உருண்டையாக இல்லாமல்,தட்டையாக இருக்கிறது. அதனால் மூளையின் அளவு சிறியதாம். டொரண்டோ மிருககாட்சி சாலையில் இருக்கும் 58 வயதான உர்ராங்குட்டான்தான் வட அமெரிக்காவிலேயே சீனியராம். இப்போது பாட்டியாகிவிட்ட அதன் வாரிசுகள் இங்கே இருக்கிறார்களாம். இந்த விவரங்களை எங்களுக்கு கூறிய பெண்மணி உர்ராங்குட்டானை அவள் என்றே குறிப்பிட்டார்.
 |
இரட்டைத் திமில் கொண்ட ஒட்டகங்கள்
|
நான ஓமானில் வசித்திருந்தாலும் இப்படி இரட்டை திமில் கொண்ட ஒட்டகங்கள் இங்குதான் முதல் முறையாக பார்த்தேன்.
 |
திமிங்கலத்தின் எலும்புக் கூடு |
முகம் முழுவதும் மயிராக இருந்த இந்த விலங்கின் பெயர் தெரியவில்லை. புதிதாக மிருககாட்சி சாலைக்கு வந்திருப்பதாக சொன்னார்கள்.
அமெரிக்க பிரிவில் zip lineல் பயணித்து நான் மனதால் இளையவள் என்று நிரூபித்தேன் :))) ஆசைப்பட்டு வரிசையில் நின்று விட்டேன், அருகே செல்லச்செல்ல கொஞ்சம் பயமாக இருந்து. எனக்கு முன்னால் வீல் சேரில் வந்த ஒருவரை வீல் சேரிலிருந்து தூக்கி அதில் அமர்த்த வேண்டியிருந்தது. அவரே திடமாக போய் வந்ததும் எனக்கு தைரியம் வந்தது. அன்று மேகமூட்டம் இருந்ததால் சுற்றிப் பார்ப்பதில் சிரமம் தெரியவில்லை. நல்ல நாள், மறுநாள்தான்
மிகவும் அசதியாக உணர்ந்தேன்.
இனிய காலை வணக்கம்.
ReplyDeleteவிநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.
மிருகக்காட்சிசாலையில் அடைபட்டு இருக்கும் விலங்குகளை பார்ப்பதில் எனக்கும் அத்தனை விருப்பமில்லை. காட்டில் சுதந்திரமாக உழவும் இடங்களில் பார்ப்பதே பிடிக்கும்.
உங்கள் அனுபவங்களும் படங்களும் சிறப்பு.
தொடரட்டும் பதிவுகள்.
பாட்டிகளுக்கும் பேத்திகளுக்கும் போழுது போக செல்லுமிடம் மிருகக் கட்சி சாலை தான்.
ReplyDeleteசெத்த காலேஜும் உயிர் காலேஜும் ஒன்றாக வைத்து விட்டார்கள். வாழ்க்கை என்பது உடலில் உயிர் உள்ளவரையே என்று சொல்லாமல் சொல்கிறார்களோ?
Jayakumar