கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, August 16, 2023

குருவாயூர் கோவில் - முத்தரசநல்லூர், திருச்சி

முன் குறிப்பு: இது ஆலயம் சம்பந்தப்பட்ட பதிவு. இதில் ஈடுபாடு இல்லாதவர்கள் தயவுசெய்து நகர்ந்து சென்று விடுங்கள் 


குருவாயூர் கோவில் - முத்தரசநல்லூர், திருச்சி

 


சமீபத்தில் வாட்சாப், ஃபேஸ்புக், எல்லாவற்றிலும் திருச்சிக்கு அருகில் கரூர் மார்க்கத்தில் இருக்கும் முத்தரசனல்லூர் என்னும் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் குருவாயூரப்பன் கோவிலைப் பற்றி செய்திகள் வந்தது. அவைகளை படித்ததிலிருந்து அடுத்த முறை திருச்சிக்கு செல்லும் பொழுது அங்கு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். என் மன்னிக்கும் அந்த விருப்பம் இருந்ததால், நாங்கள் இருவரும் என் பேத்தியோடு அண்ணா வீட்டிற்கு தெரிந்த ஆட்டோவில் கிளம்பினோம். கரூர் டர்னிங்கில் வலதுபுறம் திரும்பி கரூர் சாலையில் பயணித்தால், முதலில் வருவது கம்பரசம்பேட்டை. அதைக் கடந்ததுமே ஆங்காங்கே குருவாயூரப்பன் கோவில் 3கி.மீ., 2.கி.மீ என்ற அறிவிப்பு பலகைகள் நாம் சரியாகத்தான் சென்று கொண்டிருக்கிறோம் என்ற தைரியம் தருகின்றது.


முத்தரசநல்லூர் ஊருக்குள் நுழைந்ததுமே குருவாயூரப்பன் கோவில் வந்து விடுகிறது. கேரள பாணியில் கட்டப்பட்ட விஸ்தாரமானகோவில். உள்ளே நுழைந்ததும் கொடி மரத்தின் கீழே வேண்டிக்கொண்டு காணிக்கையாக செலுத்தப்பட வேண்டிய பொருள்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதைத்தாண்டி உள்ளே சென்றால் குழந்தை கண்ணனை தரிசிக்கலாம். உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அழகு! தரிசித்துக் கொண்டு வெளியே வந்தால் வெளிச்சுற்றில் ஐயப்பன், வேட்டைகொருமகன் சன்னதிகளும், துலாபாரம் பிரார்த்தனை செலுத்துவதற்காக பெரிய தராசும் இருக்கின்றன. உள் சுற்று சுவர்களில் குருவாயூர் கோவிலில் இருப்பது போலவே மியூரல் ஓவியங்கள் வரைந்து கொண்டிருக்கிறார்கள். மாலையில் விளக்கேற்றுவதற்காக வெளிப்பிரகார சுவற்றை ஒட்டி பித்தளை சட்டங்களில் விளக்குகள். அங்கு போலவே இங்கும் ஆண்கள் மேல் சட்டை அணிந்து கொள்ள அனுமதி இல்லை.  





குளத்தின் முகப்பு 

கோவிலுக்கு எதிரே அழகான பெரிய குளம். நிறைய மின்சார விளக்கு அலங்காரங்கள் இருந்தன. பக்கத்தில் நாராயணீய மண்டபம் என்று பெரிய ஹால். விசேஷ நாட்களில் நாராயணீய பாராயணம், பஜனை போன்றவைகள் நடத்தவும், பூணூல், ஆயுஷ ஹோoமம் போன்ற விசேஷங்களுக்கு வாடகைக்கும் விடப்படும் என்ற அறிவிப்பை காண முடிகிறது.



 


நாராயணீய ஹாலின் மேடையில் இருக்கும் சிற்பம்

குளத்தைச் சுற்றி மஹாபெரியவருக்கும், ஷிர்டி சாய்பாபாவுக்கும் சன்னிதிகள் வரப்போகின்றன. மஹா பெரியவரின் அனுக்ரஹத்தால்தான் இந்தக் கோவில் கட்டப்பட்டதாம். நாங்கள் பார்க்கவில்லை. அன்று கோவிலில் இரண்டு குழந்தைகளுக்கு அன்னப்பிராஸனம் நடந்தது. ‘குருவாயூருக்கு வாருங்கள், ஒரு குழந்தை சிரிப்பதை பாருங்கள். ஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன் உட்கார்ந்திருப்பதை பாருங்கள்’ என்னும் கண்ணதாசன் பாடல் நினைவுக்கு வந்தது. இனி அதற்கு குருவாயூருக்கு போக வேண்டாம், திருச்சியிலேயே பார்க்க முடியும். பார்த்து அனுபவியுங்கள். ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!


Sunday, August 13, 2023

போனேனே ஊர்கோலம் பேத்தியோடு…

 

போனேனே ஊர்கோலம் பேத்தியோடு…


வெளிநாட்டில் வசிக்கும் என் மகள் வயிற்று பேத்திக்கு ஜூலையில் கோடை விடுமுறை தொடங்கியது. நான்கு வருடங்களுக்குப் பிறகு இந்தியாவிற்கு வந்திருக்கும் பேத்தியை திருச்சிக்கு அழைத்துச் சென்று கோவில்களை காண்பிக்க நினைத்தேன். ஏன் திருச்சி என்கிறீர்களா? திருச்சிதானே எங்கள் ஊர், எங்கள் ஊர் பெருமையை பேத்திக்கு சொல்ல வேண்டாமா?

23.7.23 அன்று தேஜசில் திருச்சிக்கு புறப்பட்டோம். எங்கள் இருவருக்கும் அடுத்தடுத்த சீட் அமையாமல், முன்னும், பின்னுமாக அமைந்தது. ஆனாலும், நான் தனியாக உட்கார மாட்டேன் என்றெல்லாம் படுத்தாமல், தனியாக அமர்ந்து கொண்டாள். ஸ்ரீரங்கத்தில் என் சகோதரர் வீட்டிற்குச் சென்று, உணவருந்தி, ஒரு குட்டித் தூக்கம் போட்டு விட்டு, மாலை அவளை திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு அழைத்துச் சென்றேன். போகும் வழியில் அவளுக்கு அந்தக் கோவிலின் *தல புராணத்தை சொன்னேன்.

கதையை கேட்டு விட்டு, “ஐ ஸ்டில் டோண்ட் அண்டெர்ஸ்டான்ட் வொய் டிட் த ஸ்பைடர் கில் த எலிஃபெண்ட்?” என்று கொக்கி போட்டாள்.

“நம்ப, சாமி மேல வெயில் படக்கூடாதுனு வெப் கட்டினா, அதை அந்த எலிஃபெண்ட் கலைத்து விடுகிறதேனு யானை மேல ஸ்பைடருக்கு கோபம், அதான்”

“வொய் இட் டுக் ரீ பர்த் ஆஸ் எ கிங்க்?”

“நாம சாமிக்கு கொஞ்சமா ஏதாவது கொடுத்தால் கூட, அவர் அதை நமக்கு மல்டிபில்ஸா திருப்பி கொடுப்பார். ஸ்பைடரா இருந்தப்போ சாமி மேல வெயில் படக்கூடாதுனு அது வெப் கட்டித்து இல்லையா? தனக்கு நிழல் கொடுத்த அந்த சிலந்தியை அடுத்த ஜென்மத்தில் ராஜாவா பொறக்க வெச்சார். அதுவும் அந்த ஜென்மாந்திர ஞாபகத்தாலா ராஜாவா பொறந்ததும் நிறைய கோவில்களை கட்டினார்”.

என்னுடைய இந்த பதில் அவளுக்கு எவ்வளவு தூரம் புரிந்தது என்று தெரியவில்லை. அதற்குப் பிறகு கேள்வி எதுவும் வரவில்லை. அது மாலை நேரம் என்றதால் அகிலாண்டேஸ்வரி வெள்ளை ஆடை உடுத்தி சரஸ்வதி ரூபத்தில் காட்சி. பேத்தியிடம்,”பார் இப்பொழுது அம்பாள் சரஸ்வதி ரூபத்தில் இருக்கிறாள், நன்றாக படிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்” என்றதும், “மொத்தம் எத்தனை ரூபம்?” என்றாள்.

“மூன்று, காலையில் துர்கா, மதியம்(உச்சி காலத்தில்) லட்சுமி, மாலையில் சரஸ்வதி” என்றேன். தீபாராதனை காட்டும் வரை நிற்க அனுமதித்தார்கள். தரிசித்துக் கொண்டு, பிரகாரத்தை வாம் வரும் பொழுது அங்கிருக்கும் சுப்பிரமணியரின் போர்க்கோல சிற்பத்தின் அழகை அவளுக்கு இந்த வயதில் ரசிக்கத் தெரியாமல் போகலாம், இருந்தாலும் காட்டினேன்.

ஸ்வாமி சன்னதிக்குச் செல்லும்பொழுது அந்தக் கோவில் பஞ்சபூத தலங்களில் தண்ணீருக்கானது என்றதும், “அதனால்தான் என்ட்ரென்சில் தண்ணீராக இருந்ததா?” என்றாள். பிரதான நுழைவு வாயிலுக்கு அருகில் தரையோடு பதிக்கப்பட்டிருந்த குழாயிலிருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. அதைத்தான் குறிப்பிட்டாள். பிறகு, “ஃபயருக்கான டெம்பிள் எது?” என்று கேட்டாள். திருவண்ணாமலை என்றதும், “வென் ஆர் யூ கோயிங் டு டேக் மீ தேர்?” என்றாள். “பார்க்கலாம்” என்றேன். ஜம்புகேஸ்வரரை வணங்கி, பிரகாரத்தை வலம் வந்து, நவகிரகங்களை வணங்கி, அழகான கால பைரவரை வணங்கி, தட்சிணாமூர்த்தியை வணங்கி, வெளியில் கொடிமரத்திற்கு அருகில் இருக்கும் வெகு அழகான சோமாஸ்கந்தர், சிவன் பார்வதி சிற்பங்களுக்கு முன் புகைப்படம் எடுத்துக் கொண்டு வீடு திரும்பினோம்.



கோவில் வாசலில் உட்கார்ந்து கொண்டிருந்த பிச்சைக்காரர்களின் யாசகத்தை நான் கண்டு கொள்ளாமல் வந்ததும், “பாட்டி, வொய் யூ ஆர் நாட் மைண்டிங் த பெக்கர்ஸ்?” என்று கேட்டாள். “ஒருவருக்கு கொடுத்தால், நிறைய பேர்கள் வருவார்கள்” என்றேன். “பட் தே ஆர் புவர் பெக்கர்ஸ்” என்றாள். குழந்தைகளோடு கோவிலுக்கு வரும்பொழுது சில்லறையாக மாற்றிக் கொண்டுவர வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

மறுநாள் முத்தரசநல்லூர் குருவாயூர் கோவிலுக்கும், மலைக்கோட்டைக்கும் சென்ற அனுபவங்களை பார்க்கலாம்

*ஜம்புகேஸ்வரர்(ஆகிலாண்டேஸ்வரி) கோவிலின் தல புராணம் சுருக்கமாக:

இந்த இடம் வெண்நாவல் மரங்கள் நிறைந்த காடாக இருந்த பொழுது, சிவலிங்கம் ஒன்று நாவல் மரத்தினடியில் இருந்தது. சிலந்தி ஒன்று அந்த சிவலிங்கத்தின் மேல் வெய்யில் படாமல் வலை கட்டும். அதே சிவலிங்கத்திற்கு தன் தும்பிக்கையில் நீர் நிரப்பிக் கொண்டு வந்து, அதனால் அபிஷேகம் செய்து, பூவை சாற்றி வழிபடும். அந்த யானை சிலந்தி வலையை அசிங்கம் என்று கருதி கலைத்து விடும். மறு நாள் சிலந்தி மீண்டும் வலை பின்னும், யானை கலைக்கும். இது தொடர்ந்தது. தான் பின்னிய வலையை யார் அழிக்கிறார்கள்? என்று கவனித்த சிலந்தி, அந்த வேலையை செய்வது ஒரு யானை என்பதை தெரிந்து, ஒரு நாள் அதன் தும்பிக்கைக்குள் நுழைந்து கடித்து விடுகிறது. அந்த போராட்டத்தில் இரண்டுமே இறந்து விடுகின்றன. அந்த சிலந்திதான் கோசெங்கட்ச்சோழனாக மறு பிறவி எடுத்து, சிவபெருமானுக்கு 100 கற்றளிகளை எடுப்பித்தார். யானை முனிவராக பிறந்தது.

Sunday, August 6, 2023

விதியின் கைகள்

 விதியின் கைகள்

“என்னங்க, இந்த வருஷம் லீவுக்கு பெங்களூர் போலாமா? சங்கர் கூப்பிட்டுக்கிட்டே இருக்கான்|” சந்திரா, கணேஷிடம் கேட்டாள்.

சோபாவில் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்த கணேஷ், தன் மடியில் தலை வைத்து உறங்கிய மகனை தூக்கி கட்டிலில் கிடத்தி, குழந்தைக்கு போர்வையை போர்த்தி, மின் விசிரியை நிதானமாக சுழலவிட்டு, மின்சார கொசு விரட்டியை ஆன் செய்து விட்டு மீண்டும் வந்து சோஃபாவில் அமர்ந்து,

“லீவு எப்போ தொடங்குது?” என்றதும் சந்திராவை முந்திக் கொண்டு மகள், “அடுத்த வாரம்பா” என்றாள்.

மகளின் ஆர்வத்தை ரசித்த கணேஷ், சிரித்துக் கொண்டே, “மொதல்ல உங்க மாமா அந்த சமயத்தில் பெங்களூரில் இருக்கணுமே.? அவங்க எங்கேயாவது போகாம இருக்கணும்” என்றதும், சந்திரா, “ அவங்க எங்கேயும் போகல, எனக்குத் தெரியும்” என்றாள்.

“எதுக்கும் நீ அவங்ககிட்ட கேட்டுட்டு சொல்லு, டிக்கெட் பாக்கறேன்” என்றதும், ஆர்வக் கோளாறில் உடனே செல்ஃபோனைக் கையில் எடுத்தாள்.

“என்ன அவசரம்? கார்த்தால கேளேன்” என்றான். ஆனால் அவள் உடனே தம்பியை அழைத்து, அவர்களின் வசதியைக் கேட்டு, “அவங்க அங்கதான் இருக்காங்க, நீங்க டிக்கெட் பாருங்க” என்றாள்.

“பாக்கறேன், ஆனா, என்னால பத்து நாள் இருக்க முடியாது. ஒரு மூணு நாள் இருந்துட்டு வந்துடுவேன். நீ குழந்தைகளை அழைச்சுகிட்டு ஜாக்கிரதையா வந்துடுவதானே?”

“என்னங்க இப்படி சொல்றீங்க? நீங்க இல்லாம நாங்க எப்படி ஊர் சுத்திப் பாக்கறது?

“நம்ப ஊர் போனதும் மைசூர், சாமுண்டி ஹில் எல்லாம் பார்த்துடலாம். லோக்கலா பாக்க வேண்டிய இடங்களுக்கு உன் தம்பி கூட்டிக்கிட்டு போக மாட்டானா?”

சந்திரா பதில் சொல்லாமல் மௌனமாக இருக்க, அதை சம்மதமாகக் கொண்டு கணேஷ் பெங்களூருக்கு ரயிலில் டிக்கெட் புக் பண்ணினான். தம்பி மனைவிக்கும், குழந்தைக்கும் உடைகள் வாங்கிக் கொண்டார்கள். அங்கு குளிருமோ என்று குழந்தைகளுக்கு ஸ்வெட்டெர் வாங்கினார்கள். இப்படி ஊருக்குச் செல்ல வேண்டிய ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் பொழுது அவர்கள் குடியிருப்பில் இரண்டு திருட்டுகள் நடந்தன.

அவர்கள் இருந்தது கம்பெனி குடியிருப்பு. வாசலில் ஒரு செக்யூரிடி உண்டே தவிர, இப்போது போல செக்யூரிடி காமிராக்கள் எல்லாம் வராத காலம். ஏன் ஆண்ட்ராய்டு ஃபோன்கள், ஓலா, ஊபர் போன்றவை வரவில்லை. அவர்கள் குடியிருப்பில் இரண்டு திருட்டுகள் நடந்தது, இரண்டுமே பட்ட பகலில், வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்டு, கதவை லாகவமாக திறந்து, வீட்டிர்க்குள் வைத்திருந்த நகைகளையும், பணத்தையும் எடுத்துச் சென்றிருக்கின்றனர். இந்த சம்பவங்கள் கணேஷ், சந்திரா இருவரையுமே பயப்படுத்தியது.

எதற்கு வம்பு என்று தங்களிடமிருந்த பத்து பவுன் நகைகளை வீட்டில் வைக்க வேண்டாம் என்று முடிவு செய்து, அவைகளை தனியாக ஒரு குட்டி பையில் போட்டு, தங்கள் பெட்டியில் துணிகளுக்கு நடுவில் வைத்து விட்டார்கள். அவர்கள் பெங்களூரை அடைந்து, ஒரு ஆட்டோ பிடித்து, சந்திராவின் தம்பியின் வீட்டை அடைந்த பொழுது, இரவாகி விட்டது.

இறங்க வேண்டிய இடம் வந்ததும் குழந்தைகளும், சந்திராவும் முதலில் இறங்கி விட்டார்கள். சந்திராவின் தம்பியின் வீட்டு வாசலில் இருந்த மரம் தெரு விளக்கின் வெளிச்சத்தை குறைத்தது. பர்சிலிருந்து பணத்தை எடுப்பதற்காக வெளிச்சம் தேடி சற்று நகர்ந்த கணேஷ் ஆட்டோவிலிருந்து பெட்டியை இறக்காதது கவனப் பிசகா? அல்லது அதீத நம்பிக்கையா? அந்த ஆட்டோ டிரைவர் தன்னுடைய கூலியை எதிர்பார்க்காமல் சட்டென்று யூ ட்ர்ன் எடுத்து இவர்கள் சுதாரிப்பதற்க்குள் பறந்து விட்டான். பெட்டிக்குள் வைத்திருந்த பத்து பவுன் நகை மட்டுமல்லாமல், மாற்றுடை கூட இல்லாமல் அத்தனையையும் கண நேரத்தில் தவற விட்டார்கள். போலீஸ் கம்ப்ளெய்ண்ட் கொடுத்தாலும், ஆட்டோவின் ரிஜிஷ்ட்ரேஷன் எண், ஆட்டோ டிரைவரின் பெயர், போன்ற தகவல்கள் இல்லாததால் பிடிப்பது கஷ்டம். என்றார்களாம். அந்த திருடன் அகப்படவேயில்லை. வீட்டில் வைத்தால் திருட்டுப் போய் விடுமோ என்று பயந்து, கையோடு கொண்டு சென்ற பொருள், வெளியூரில் திருட்டுப் போக வேண்டும் என்பது விதி போலிருக்கிறது.  

இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.  

Friday, July 21, 2023

மாவீரன் (சினிமா விமர்சனம்)

 மாவீரன் (சினிமா விமர்சனம்)


சிவகார்த்திகேயனின் பரம ரசிகையான என் பேத்தியின் ஆசையை நிறைவேற்ற அவளை மாவீரன் சினிமாவுக்கு அழைத்துச் சென்றேன். 

தினத்தீ என்னும் செய்தி தாளில் அறுபது வருடங்களாக வந்து கொண்டிருக்கும் மாவீரன் என்னும் தொடருக்கு படம் வரையும் சத்யா (SK) என்னும், யார் வம்புக்கும் போக விரும்பாத இளைஞன் எப்படி நிஜமாகவே மாவீரனாக மாறுகிறான் என்பதுதான் கதை.

சேரியில் வசிக்கும் பல குடும்பங்களை அடுக்கு மாடி குடியிருப்பில் குடியேற்றுவதாக கூறி ஆளும் கட்சியின் அடியாட்கள் வெளியேற்றுகிறார்கள். புது வீடு பார்க்க நன்றாக இருந்தாலும் குடியேறிய சில நாட்களிலேயே பாத்ரூம் தாழ்ப்பாள் கையோடு வருகிறது. சமைக்கும் பொழுது சாம்பாரில் மேல் சுவற்றிலிருந்து பூச்சு விழுகிறது. இதையெல்லாம் தட்டிக் கேட்க வீறு கொண்டு எழும் தாயை அடக்குகிறான். தங்கை குளிக்கும் பொழுது பாத்ரூமில் எட்டிப்பார்ப்பவனை கண்டிக்கும் தாய் தாக்கப்படும் போது அம்மாவின் இழிவான பேச்சால் மனம் நொந்து தற்கொலைக்கு முயல்கிறான். அப்போது காதில் அடிபட, அவனுக்கு ஒரு அமானுஷ்ய குரல் கேட்கத் துவங்குகிறது என்னும் ஃபேண்டஸி கதைதான். அதை ரசிக்கும்படி செய்திருக்கும் சுவாரஸ்யமான திரைக்கதை படத்தின் பலம்.

சிவகார்த்திகேயன் கச்சிதம். அவருடைய ஜோடியாக வரும், இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அசப்பில் சுப்ரமணியபுரம் ஹீரோயின் ஸ்வாதியை நினைவூட்டுகிறார். நிறைவான நடிப்பு. எஸ்.கே.யின் தங்கையாக வரும் பெண், பாத்திரத்தோடு கச்சிதமாக பொருந்தி, சிறப்பாக நடித்திருக்கிறார். அம்மாவாக சரிதா. எத்தனை நாட்களாயிற்று இவரைத் திரையில் பார்த்து? சரிதாவிடமிருந்து நடிப்பு பிரவாகமாக பொங்கி வரும், அதை கண்ட்ரோல் செய்ய இயக்குனருக்கு தெரிந்திருக்க வேண்டும். இந்த இயக்குனருக்குத் தெரிந்திருக்கிறது.‌ 

நடிக்க வந்திருக்கும் மற்றொரு இயக்குனர் மிஷ்கின்! இத்தனை நாட்களாக ஸ்டைலிஷாக நாம் பார்த்திருந்த மிஷ்கின் கதர் வேஷ்டி, சட்டை, காட்சியோடு அரசியல்வாதி வில்லனாக மிரட்டியிருக்கிறார்.

பாடல்கள் பெரிதாக கவரவில்லை. முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாம் பாதியில் கொஞ்சம் குறைகிறது. காதில் பூ தான், வாசமும் இருக்கிறது.

 





Tuesday, July 4, 2023

பதிலாகும் பதிவு! பிருந்தாவனமும் அதிஷ்டானமும்

 பதிலாகும் பதிவு! பிருந்தாவனமும் அதிஷ்டானமும்


நேற்று(ஞாயிறன்று) எ.பி.யில், "ஸ்ரீரெங்கத்தில் ராமானுஜரின் உடல் பதப்படுத்தபட்டு வைக்கப்பட்டிருப்பதால் அந்த சன்னதிக்குச் சென்றால் குளித்து விட்டுதான் கோவிலுக்குச் செல்ல வேண்டுமா? என்று ஜெயகுமார் சார் கேட்டிருந்தார்.

ஜெயகுமார் சாரின் கேள்விக்கு பதில்: ஆம்! ஸ்ரீரெங்கம் கோவிலுக்குள் தசாவதார சன்னிதிக்குள்தான் ராமானுஜரின் திருமேனி இருக்கிறது. ஆனால் அதை தரிசிப்பது அத்தனை சுலபம் இல்லை. என்னதான் மகானாக இருந்தாலும், ஜீவனைப் பிரிந்த உடல் இருக்கும் இடம் என்பதால் அங்கு சென்று விட்டு கோவிலுக்குள் செல்லக் கூடாது என்றுதான் சொல்வார்கள். பெருமாளை ஏளப் பண்ணும் பொழுது(ஊற்சவர் திருவீதி வலம் வருவதை வைணவர்கள் ஏளப் பண்ணுவது என்பார்கள்) அந்த வழியாக வர மாட்டார். தவிர்க்க முடியாமல் அந்த சன்னதியை கடக்க நேர்ந்தால் வாத்தியங்கள் இசைக்கப்படாது. பெருமாள் உள்ளே சென்றதும் தீர்த்தவாரி நடக்கும். தீர்த்தவாரி என்பது அபிஷேகம். அதாவது பெருமாளே குளிப்பதாக ஐதீகம். இவையெல்லாம் கோவில் ரகசியங்களாக இருந்தவை.

அந்த ராமானுஜரின் திருமேனிக்கு வருடத்தில் ஒரு நாளோ, அல்லது சில குறிப்பிட்ட நாட்களோ குங்குமபூவால் அபிஷேகம் நடக்கும். சிலர் குங்குமப்பூவால் உடலை ஒத்தி எடுப்பார்கள் என்றும் கூறுகிறார்கள். அந்த அபிஷேகத்திற்கு குங்குமப்பூ வாங்கித் தந்து, பிரசாதமாக அந்த குங்குமப்பூவை பெற்று, நரம்பு சம்பந்தமான வியாதி உடையவர்கள் சாப்பிட, வியாதி குணமாகும் என்பது நம்பிக்கை.  

ராகவேந்திர ஸ்வாமிகள் பிருந்தாவனம்

மஹாபெரியவா அதிஷ்டானம்

ராமானுஜரின் உடல் அடக்கம் செய்யப்படாமல் இருப்பதால்தான் அங்கு சென்று விட்டு பெருமாளை தரிசனம் செய்ய செல்லக் கூடாது என்பார்கள். மற்றபடி மகான்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்கள் பூஜிக்கத்தகுந்தவை. உதாரணமாக ராகவேந்திர ஸ்வாமிகளின் பிருந்தாவனம், கோவிந்தபுரம் போதேந்திராள் அதிஷ்டானம். நெரூர் சதாசிவ பிரும்மேந்திராள் அதிஷ்டானம் இவற்றைக் கூறலாம். ரமண மகரிஷி, சேஷத்திரி ஸ்வாமிகள், ஞானானந்தா, யோகி ராம்சூரத்குமார், அரவிந்தர், அன்னை, ஷிர்டி மற்றும் புட்டபர்த்தி சாயிபாபா போன்ற பல மகான்களின் சமாதிகள் வணங்கப்படுபவை. சமீபத்தில் நம்மிடையே வாழ்ந்து மறைந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானதிற்கு ஒவ்வொரு மாதமும் அனுஷ நட்சத்திரதன்று வருகை சென்று வழிபடுவதை சிலர் வழக்கமாக வைத்துக் கொண்டுள்ளனர். 

மகான்களின் சமாதி மேல் துளசி செடி வைக்கப்பட்டால் அது பிருந்தாவனம் என்றும், சாளகிராமம் வைக்கப்பட்டால் அதிஷ்டானம் என்றும் அழைக்கப்படும்.

சன்னியாசிகள் மறைந்து, அடக்கம் செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள் அந்த இடத்தை தரிசிப்பது மிகவும் சிறப்பாம். எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு ஒரு முறை கிடைத்தது. ஸ்ரீரங்கதில் இருந்த அஹோபிலம் மடத்து ஜீயர், மறைந்து ஒரு வாரத்திற்குள் அந்த இடத்தை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு கிட்டியது. ஸ்ரீரெங்கதில் கொள்ளிடக்கரைக்கு அருகில் ஒரு தசாவதார சன்னிதி உண்டு. அங்குதான் ஜீயரின் திருமேனி அடக்கம் செய்யப்பட்டிருந்தது. என் அப்பா அப்போது அங்குதான் இருந்தார். அவரைப்பார்க்கச் சென்றிருந்த என்னை, அப்பாவின் நண்பர் அழைத்துச் சென்று, ஜீயரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடத்தை சேவிக்க வைத்தார். அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அன்று அங்கு வருகை தரவிருந்தார். அவருக்காக, மரத்தில் சரிவு பாதை அமைத்து, அதன் மீது கம்பளம் விரிக்கும் வேலை ஜரூராக நடை பெற்றுக் கொண்டிருந்தது. பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது, ஏகப்பட்ட கெடுபிடி.. இருந்தாலும் அப்பாவின் நண்பருக்கு அங்கு பல பேரை தெரிந்திருந்ததால் என்னை சுலபமாக அழைத்துச் சென்றார். எல்லாம் குருவருள்!. குரு பூர்ணிமாவாகிய இன்று இந்த கட்டுரையை எழுத நேர்ந்ததும் ஒரு இனிய கோயின்சிடென்ஸ்!

Friday, June 23, 2023

குழந்தை சொன்ன பொய்...

 குழந்தை சொன்ன பொய்...


சனிக்கிழமையன்று(17.6.23) தினசரியில் படித்த ஒரு செய்தி மிகவும் அதிர்ச்சியளித்தது. பெங்களூரு, எலக்ட்ரானிக் சிட்டியில் எட்டு வயது பெண் குழந்தை ஒன்றை வீட்டில் தனியாக விட்டு விட்டு, வீட்டை விட்டு எங்கும் வெளியே செல்லக்கூடாது, ஆன் லைனில் படிப்பைத் தொடர வேண்டும் என்று எச்சரித்து விட்டு அந்த்க் குழந்தையின் தாய் பள்ளியிலிருந்து மகனை அழைத்து வர சென்றிருக்கிறார்.

அம்மா அந்தப் பக்கம் சென்றதும், குழந்தை இந்தப் பக்கம் விளையாடுவதற்காக வெளியே ஓடி விட்டது. அம்மா, திரும்பி வந்த பொழுது வெளியே நின்று கொண்டிருந்த மகளிடம், “ஏன் வெளியே நிற்கிறாய்?” என்று கேட்ட அம்மாவிடம் உண்மையைச் சொன்னால் என்ன நடக்குமோ என்று பயந்த அந்தக் குழந்தை, அங்கு ஒரு வீட்டிற்கு டெலிவரி கொடுக்க வந்த பையனை சுட்டிக் காட்டி, “இந்த ஆள் என்னை கடத்திப் போக முயற்சி செய்தான். அவனிடமிருந்து தப்பித்து இங்கே நின்று கொண்டிருக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறது, உடனே அந்தக் குழந்தையின் தாய், மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த டெலிவரிபாயை அடித்திருக்கிறார்கள். ஆனால் அங்கிருந்த சி.சி.டி.வி. காமிரா ஃபுட்டேஜை பார்த்ததில் அப்படியோரு சம்பவம் நடக்கவில்லை, என்று தெரிந்திருக்கிறது. பிறகு அந்த்ப் பையனிடம் மன்னிப்பு கேட்டார்களாம்.

சாதரணமாக குழந்தைகள் பொய் சொல்லாது என்பார்கள். இந்தக் குழந்தை பொய் சொன்னது மட்டுமல்லாமல், தான் செய்த தவறை மறைக்க ஒரு பாவமும் அறியாத வெறொருவர் மீது பழி சுமத்தியிருக்கிறது. இதற்கு காரணம், அந்தக் குழந்தையை அதன் பெற்றோர்கள் விளையாடவே அனுமதிக்க மாட்டார்களாம். அதனால் பெற்றோர்கள் வீட்டில் இல்லாத பொழுது குழந்தை விளையாடுவதற்காக வெளியே ஓடுவதை வழக்கமாக வைத்திருக்கிறது. அன்று அம்மாவைப் பார்த்ததும் பயத்தில் அந்த டெலிவரி பாய் மீது அபாண்டமாக பழி சுமத்தி விட்டது. இதில் அந்த்க் குழந்தையை விட, அந்த தாயின் மீதுதான் அதிகம் தவறு இருப்பதாத தோன்றுகிறது. குழந்தை பருவத்தில் விளையாட்டு என்பது மிகவும் முக்கியம். அதற்கு அனுமதிக்காமல் இருப்பது சரி இல்லை. சாப்பாடு, தூக்கம், படிப்பு, இதர ஆக்டிவிடீஸ் எவ்வளவு அவசியமோ அவ்வளவு விளையாட்டும் அவசியம். விளையாட அனுமதிக்காததே இந்தக் குழந்தையின் தவறுக்கு காரணம். குழந்தைகளை குழந்தைகளாக இருக்க அனுமதிக்க வேண்டும். திரும்ப கிடைக்காத அந்த அழகான பருவத்தை பெற்றோர்கள் பறித்துவிடக் கூடாது.

Wednesday, June 14, 2023

அருகி வரும் பழக்கங்கள்

 அருகி வரும் பழக்கங்கள்

 

சென்ற திங்களன்று நெருங்கிய உறவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எனக்கு ஒரு பேரதிர்ச்சி! டிரஸ்ட் மீ அங்கு ஒரு பெண் தாவணி அணிந்து கொண்டு வந்திருந்தாள். “பாவாடை தாவணியில் பார்த்த உருவமா?..” என்று ஒரு பழைய பாட்டு உண்டு. இப்போது அதை, “பாவாடை தாவணியில் பார்க்க முடியுமா?..” என்றுதான் பாட வேண்டும். தாவணி என்பது வழக்கொழிந்து போய் விட்டது. கிராமங்களில் கூட இளம் பெண்கள் தாவணி அணிவதில்லை. சூடிதார்தான்”. என்றேன்.

 

அந்தப் பெண்ணின் தாய், “ஆமாம், கடைகளில் தாவணி கிடைப்பதில்லை. ஒன்று மிகவும் ட்ரான்ஸ்பரெண்டாக இருக்கும் அல்லது ஜகஜகவென்று இருக்கும். நான் புடவை வாங்கி, அதை தாவணியாக கிழித்துத் தருகிறேன். உங்களுக்கு ஏதாவது தாவணி கிடைக்கும் கடை தெரிந்தால் சொல்லுங்கள்” என்றார். யாரவது தெரிந்தால் சொல்லுங்கள்.

 

அப்படி வழக்கொழிந்துகொண்டே வரும் ஒரு நல்ல பழக்கம் பெரியவர்களை வணங்குவது. என் அம்மாவுக்கு பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டுமே ஒரே ஊர். தெற்குத் தெருவில் பிறந்த வீடு, வடக்குத் தெருவில் புகுந்த வீடு. ஆனாலும், புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம் இங்கிருக்கும் பெரியவர்கள் எல்லோரையும் நமஸ்கரித்து விட்டுதான் செல்வார். அம்மா நமஸ்காரம் பண்ணும் பொழுது, கூடவே நாங்களும் நமஸ்காரம் செய்வோம்.

 

தீபாவளி அன்று, எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு, புத்தாடை அணிந்து கொண்டதும், ஸ்வாமிக்கு நமஸ்காரம் செய்து விட்டு, வீட்டு பெரியவர்களை வணங்கிய பிறகுதான் பட்டாசு வெடிக்கச் செல்வோம். கார்த்திகை அன்று விளக்கேற்றியதும் பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்வோம். காரடையான் நோன்பு அன்றும் நோன்பு சரடு கட்டிக் கொண்டதும் பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்வதுண்டு. கனுப்பொங்கல் அன்று மஞ்சள் கீறிக் கொண்டதும், மஞ்சள் கீறி விடுபவர்களுக்கு நமஸ்காரம் செய்வோம். பிறந்த நாள், திருமண நாட்களில் நிச்சயம் நமஸ்காரம் செய்வோம். வெளியூர்களுக்குச் செல்லும்பொழுது ஸ்வாமிக்கும், வீட்டுப் பெரியவர்களுக்கும் நமஸ்காரம் செய்து விட்டுதான் கிளம்புவோம். என் அக்காவின் ஸ்நேகிதியின் வீட்டில் தினமுமே அம்மாவிடம் தலை பின்னிக் கொண்டதும் நமஸ்கரித்து விட்டுதான் எழுந்திருப்பார்கள்.

 

நம் வீட்டுக்கு வரும் பெரியவர்களுக்கும், நாம் செல்லும் வீடுகளில் உள்ள பெரியவர்களுக்கும் நமஸ்காரம் செய்வதுண்டு. எங்கள் அத்தைப்பெண் வேடிக்கையாக, “ யாரோ கல்யாணத்தில் என் அப்பா, தூரத்து சொந்தக் காரரை அறிமுகப்படுத்தி, அவருக்கு நமஸ்காரம் பண்ணச் சொல்றார், அது சரியா தாலி கட்டும் நேரம், எல்லோரும் தூவும் அட்சதையெல்லாம் என் தலையில் விழுகிறது” என்பாள்.


இப்போது நமஸ்காரம் செய்யும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. இதற்கு காரணம் நாம்தானோ? நாம் நடுத்தர வயதில் இருக்கும்பொழுது யாராவது நமஸ்கரிக்க வந்தால், “சீ சீ! நமஸ்காரமெல்லாம் வேண்டாம்” என்று மறுத்து, அந்த நல்ல பழக்கத்தை வேரறுத்து விட்டு, எல்லோரும் ஹை, ஹை என்று மாடு மேய்க்கிறோம் வட இந்தியயர்களிடம் பெரியவர்களை வணங்கும் பழக்கம் இன்னும் இருக்கிறது. 

Tuesday, May 30, 2023

Mrs Chatterjee vs Norway(திரை விமர்சனம்)

 Mrs Chatterjee vs Norway

(திரை விமர்சனம்)


ராணி முகர்ஜி முக்கிய ரோலில் நடித்து, ஆஷிமா சிப்பெர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம். உண்மை சம்பவங்களை அடிபடையாகக் கொண்ட கதை.

நார்வேயில் வசிக்கும் இந்திய இளம் தம்பதியினர் அனிருத்தோவும், தீபிகாவும். அவர்களுக்கு சுபா என்னும் மகனும், சுசி என்னும் ஐந்து மாத பெண் குழந்தையும் இருக்கின்றன. அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி விஜயம் செய்யும் நார்வீஜிய குழந்தைகள் நல அமைப்பின் உறுப்பினர்கள் திடீரென்று ஒரு நாள் தீபிகா,அனிருத்தாவின் வீட்டில் குழந்தைகள் வளருவதற்கான சரியான சூழல் இல்லை கூறி குழந்தைகளை தூக்கிச் சென்று விடுகின்றனர். அதற்கு காரணமாக அவர்கள் “தீபிகா குழந்தைகளுக்கு கையால் உணவூட்டுகிறாள் அது ஆரோக்கியமான பழக்கம் கிடையாது, அனிருத்தா வீட்டு வேலைகளில் எந்த உதவியும் செய்வது கிடையாது, சுபாவுக்கு ஆடிஸம் பாதிப்பு இருப்பது போலத் தோன்றுகிறது ஆனால் அதை குணப்படுத்த எந்த நடவடிக்கையும் அவர்கள் முன்னெடுக்கவில்லை” என்றெல்லாம் குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள். அவர்களுக்காக வாதாடிய இந்திய வக்கீல், முதலில் ஜெயித்தாலும், அவர் இந்தியராக இருப்பதால் இந்த கேஸை உணர்வு பூர்வமாக அணுகுகிறார் என்று ஸ்டே ஆர்டர் வாங்குகிறது குழந்தைகள் நல வாரியம். அதற்குப் பிறகு அந்த நாட்டைச் சேர்ந்த ஒரு வக்கீலை அரசாங்கமே நியமிக்கிறது. அந்த சமயத்தில் குழந்தைகள் நல வாரியம் என்ற போர்வையில் இப்படி அப்பாவி தம்பதியரிடமிருந்து குழந்தைகளை பறித்து, குழந்தை இல்லாதவர்களுக்கு விற்று விடுகிறார்கள், அரசாங்கம் நியமிக்கும் வக்கீலும் அதன் கையாள் என்ற விவரங்கள் அவளுக்குத் தெரிய வருகின்றன. ஒரு கட்டத்தில் அவள் கணவனே அவளுக்கு எதிராக திரும்பி விடுகிறான். தீபிகா குழந்தையை மீட்டெடுக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அவளுக்கு வெற்றியை தந்ததா? என்பதே திரைப்படம்.  

தீபிகாவாக ராணி முகர்ஜி. அவரது பூனைக் கண்ணும், கரகர குரலும் எனக்குப் பிடிக்கும். கொஞ்சம் பூசினார்போல் ஆகி விட்டார், அதனால் என்ன? மத்தியத்தர குடும்பத் தலைவி பாத்திரத்திற்கு நன்றாகவே பொருந்துகிறது  அந்த தோற்றம். நடிப்பிலும் குறை வைக்கவில்லை. நீதிபதியிடம் வார்த்தைக்கு ஒரு சார் போட்டு பேசும் இடத்தில் மனதை உருக்குகிறார். அவரது கனவராக அனிர்பன் பட்டாசார்யா, வெளியுறவுத் துறை அமைச்சராக நீனா குப்தா.

கதாநாயகன் பாத்திரம் சற்று வீக்காக இருக்கிறது. கதையில் நந்தினி என்றொரு பாத்திரம், அவள்தான் தீபிகாவிடம் குழந்தை நல வாரியம் என்ற பெயரில் நடக்கும் மோசடியை தெரியப்படுத்துகிறாள், ஆனால் அவள் பெயரைச் சொன்னாலே அநிருத்தோவுக்கு எல்லையில்லா கோபம் வருகிறது. தன் மனைவி அவளோடு பேசக்கூடாது என்று தீவிரமாக தடுக்கிறான். யார் இந்த நந்தினி? அவள் மீது அநிருத்தோவுக்கு ஏன் இத்தனை வன்மம்? என்பதெல்லாம் சரிவர தெளிவு படுத்தப்படவில்லை.

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் ஏதோ புண்ணியம் செய்தவர்கள் என்று ஒரு எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு, வெளிநாட்டு வாழ்க்கையின் கடினமான இன்னொரு பக்கத்தை காட்டியிருக்கும் படம். இப்படி ஒரு கதையை எடுத்துக்கொண்டதோடு அதை சண்டை, நகைச்சுவை போன்ற இடைச்செருகல்கள் இல்லாமல், பெரும்பாலும் வெளிநாட்டில் படமாக்கப் பட்டிருந்தாலும் ஃப்ளாஷ் பேக்கில் கூட ஒரு டூயட்டை சேர்க்காமல் கதையில் மட்டும் கவனம் செலுத்தியிருக்கும் இயக்குனரை பாராட்டலாம்.

இந்த ஒரு கேஸ் படமாகி விட்டது. இதைப்போல இன்னும் 150 வழக்குக\ள் நிலுவையில் இருக்கிறதாம். கேட்கவே சங்கடமாக இருக்கிறது.

Saturday, May 20, 2023

ஒடிஷா யாத்திரை – 6

 ஒடிஷா யாத்திரை – 6

கோனார்க், லிங்கராஜ், பிமலாம்பாள் கோவில்கள்  




எங்கள் பயணத்தின் மூன்றாம் நாள், கடைசி நாளும் கூட என்பதால் காலை சிற்றுண்டி சாப்பிட வந்த பொழுதே அறையை காலி செய்து பெட்டிகளை கீழே கொண்டு வந்து விட்டோம். சிற்றுண்டியை சாப்பிட்டு விட்டு எல்லோரும் சொன்னபடி எட்டு மணிக்கெல்லாம் கிளம்பி விட்டோம். அங்கிருந்து கிளம்பி, ஒரு பெட்ரோல் பங்கில் வண்டிக்குத் தேவையான டீசலை நிரப்பிக்கொண்டு ஹைவேயில் விரைந்தது வண்டி. திடீரென்று வண்டியின் அடி பாகத்திலிருந்து ஏதோ சப்தம் வந்தது. டயர் பஞ்சராகியிருக்கும் என்று நினைத்தோம். வண்டியை ஓரம்கட்டி நிறுத்திவிட்டு, டிரைவர் இரங்க, வண்டியிலிருந்த சில ஆண்களும் இறங்கினார்கள். அவர்கள் சொன்ன தகவல் அதிர்ச்சி அளித்தது. டயர் எதுவும் பஞ்சராகவில்லை, டீசல் நிரப்பியிருந்த டீசல் டாங்கை தாங்கி பிடித்திருந்த க்லாம்பின் திருகாணி கழன்று விட்டதால், டீசல் டாங்க் கீழே விழுந்து டீசலை சிந்தியபடியே உருண்டிருக்கிறது. கிட்டத்தட்ட ½கி.மீ. உருண்ட டீசல் டாங்க் தீ பிடிக்காமல் இருந்தது இறையருள்தான். பஸ் கம்பெனிக்கு ஃபோன் பண்ணி வேறு ஒரு பேருந்து வரவழைத்தார்கள். இதில் ஒரு மணி நேரம் வீணானது. வெய்யிலுக்கு முன்னால் கோனார்க் சென்று விடலாம் என்று நினைத்தது நடக்கவில்லை. ஆனால் இங்கும் தலைக்கு குல்லா, செல்ஃபி ஸ்டிக் போன்றவை வாடகைக்கும், விலைக்கும் கிடைக்கின்றன.

 

மெயின் கேட்டிலிருந்து கோனார்க் சூரியன் கோவிலுக்கு செல்லும் வழியில் இரண்டு பக்கங்களிலும் பூங்கா, அழகான சிலைகள்.. ஆனால் அவற்றையெல்லாம் நிதானமாக ரசிக்கவோ, புகைப்படமெடுக்கவோ முடியவில்லை. ஏனென்றால் நல்ல கும்பல், கைடு வந்து விட்டார். எல்லோரும் சேர்ந்து வாருங்கள் என்றார்கள், உள்ளே செல்ல நுழைவு டிக்கெட் உண்டு. அதிலும் இரண்டு பேர் புகைப்படமெடுக்க சற்று நேரம் எடுத்துக் கொண்டதில் எங்களோடு உள்ளே வர முடியாமல் போய் விட்டது. பிறகு எங்கள் குழுவில் ஒருவரை தொடர்பு கொண்டு, டூர் ஆபரேட்டர் போய் அழைத்துக் கொண்டு வந்தார்.

 

சபா மண்டபம் 

சூரியன் கோவிலுக்கு முன்பு ஒரு மண்டபம் இருக்கிறது. அதை சபா மண்டபம் என்கிறார்கள். அந்த காலத்தில் தேவதாசிகள் எனப்பட்ட நடனமாதர்களின் நடனம் இங்குதான் நடைபெறுமாம். அதைத் தாண்டி பிரதானமான சூரியன் கோவில். பன்னிரெண்டு சக்கரங்கள் மற்றும் ஏழு குதிரைகள் பூட்டிய பிரும்மாண்டமான தேர் வடிவ கோவிலின் மத்தியில் உள்ளே சூரிய பகவான் திருவுரு இருக்குமாம். ஆனால் கோவிலுக்குள் நுழையும் வாசல்கள் போர்ச்சுகீசியர்களால் அடைக்கப்பட்டு விட்டதாம். காரணம் இந்தக் கோவில் தஞ்சை பெரிய கோவிலைப் போல  எந்த பூச்சு வேலை இல்லாமல் கற்கள் ஒன்றோடொன்று பொருத்திக் கொள்ளும்படி(inter-locking system) கட்டப்பட்டது. இடையில் இரும்புத் துண்டுகளும், கோபுரத்தின் மேலே 50 டன் எடையுள்ள காந்தமும் பொருத்தப் பட்டிருப்பதால் அந்த காந்தத்தின் ஆகர்ஷணத்தால் கோவில் சிதையாமல் காக்கப்படுகிறதாம். இந்த காந்த சக்தியால் கடலில் சென்ற கப்பல்கள் திசை தவறின. இதனால்தான் போர்ச்சுகீசியர்கள் இந்த கோவிலின் வெளிப்புரத்தை சிதைத்தார்களாம். ஆனால் கருவரைக்கு மேலே இருக்கும் பெரிய 50 டன் காந்தம் அப்புறப்படுத்த பட்டால் கோவில் இடிந்து விடும் என்பதால் அங்கு யாரும் நுழைய்க் கூடாது என்று வாயில்கள் அடைக்கப்பட்டதாம்.

 

கோவில் முழுவதும் கருப்பு நிற கிரானைட் கற்களாலும், சிவப்பு நிற பாறைகளாலும் கட்டப் பட்டிருக்கிறது. கோணம்+அர்க்கன் = கோனார்க் என்று பொருள் கூறுகிறார்கள். அர்க்கன் என்பது சூரியனின் மற்றொரு பெயர். சூரியனுக்கான இந்த கோவில் முழுக்க முழுக்க ஜியானெண்ட்ரி அடிப்படையில் அமைக்கப் பட்டுள்ளதால் இந்த பெயர். சூரியனின் சுழற்சி, அதன் விளைவான நேரம், வாரம், மாதம், அயணம் இவைகளை குறிக்கும் விதமாகத்தான் இங்கு சக்கரங்கள், அதில் இருக்கும் ஆரங்கள் எல்லாம் அமைக்கப்பட்டிருக்கின்றன.



 

தேரின் ஒவ்வொரு பக்கத்திலும் மனித வாழ்க்கை சம்பவங்களை விளக்கும் சிற்பங்கள். ஒரு பக்கத்தில் மனிதனின் வாழ்க்கையில் மூன்று பருவங்களான குழந்தைப் பருவம், இளமைப் பருவம், முதுமைப் பருவ  காலங்களில் அவர்கள் ஈடுபடும் செயல்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டிருக்கின்றன. குழந்தை பருவ விளையாட்டுகளை குறிக்கும் சிற்பங்கள் கீழ் பகுதியிலும், இளமைப் பருவ (காம)கேளிக்கைகள் சிற்பங்கள் நடுப் பகுதியிலும், முதுமைப் பருவ இறை வழிபாடுகளை காட்டும் சிற்பங்கள் மேற் பகுதியிலும் செதுக்கப்பட்டுள்ளன. இவைகளில் இளமைப் பருவ கேளிக்கை சிற்பங்களே சுலபமாக பார்க்கக் கிடைக்கின்றன. இதற்கு அந்த கைட் கூறிய காரணம், கலிங்கப் போரில் நிறைய உயிரிழப்புகள். ஜனத்தொகை மிகவும் குறைந்து விட்டது. மக்களின் உணர்வைத் தூண்டி மக்கள் தொகையை அதிகரிப்பதற்காகவே இந்த சிற்பங்கள் இப்படி அமைக்கப்பட்டிருக்கின்றனவாம்.  

 



இன்னொரு பக்கம் பெண்களின் வாழ்க்கை முறை, அம்மியில் அரைப்பது, உரலில் இடிப்பது, துணி துவைப்பது போன்ற சிற்பங்கள் ஏன் மாமியார் மருமகள் சண்டை கூட சிற்பமாக.

 

கொனார்கிலிருந்து புவனேஷ்வர் செல்லும் வழியில் பிப்பிலி என்னும் கிராமத்தில் ஷாப்பிங் செய்வத்ற்காகவே ஒரு மணி நேரம் நிறுத்துவதாக இருந்தது. அங்கு வரிசையாக கடைகள், எல்லாவற்றிலும் ஒடிஷாவின் கைவினை பொருள்கள். ஆனால் காலையில் டீசல் டாங்க் கீழே விழுந்ததால் ஒரு மணி நேரம் வீணாகி விட்டது. எனவே இங்கு, 15 நிமிடம் மட்டுமே கொடுத்தார்கள். முடிந்த அளவு ஷாப்பிங் செய்து கொண்டோம். வழியில் மதிய உணவை முடித்துக் கொண்டு புவனேஷ்வரில் லிங்கராஜ் கோவிலுக்குச் சென்றோம்.

 

லிங்கராஜ் ஆலயம் 

லிங்கராஜ் கோவில் புவனேஷ்வரில் அமைந்திருக்கும் பழமையான கோவில். இங்கு இருக்கும் சிவலிங்கம் சுயம்பு லிங்கம் எங்கிறார்கள். அது மட்டுமில்லை, சிவனும்,விஷ்ணுவும் சேர்ந்த அம்சம் என்கிறார்கள். பூரியில் பிரசாதம் தயாரிக்க ஏழு பானைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி சமைப்பது போல இங்கு ஐந்து பானைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி சமைப்பார்களாம். அங்கு போலவே இங்கும் மேலே இருக்கும் பானையில் இருக்கும் உணவுதான் முதலில் வேகுமாம். கோவிலில் எக்கச்சக்க கும்பல். ஜெகன்னாதர் கோவிலைப் போலவே இங்கும் கும்பலில் நசுங்கி வெளியே வந்தோம்.



கேதார்நாத்,விமலாம்பாள் கோவில் 



அங்கிருந்து கேதார்நாத் கோவிலுக்குச் சென்றோம். அங்கு குடிகொண்டிருக்கும் அம்மன் விமலாம்பாள், அவர்கள் பிமலாம்பாள் என்கிறார்கள். அது ஒரு சக்தி பீடம். அம்மனின் சுண்டுவிரல் விழுந்த இடமாம். அம்மன் அழகாக சான்நித்தியதோடு விளங்குகிறாள். தரிசனம் செய்து கொண்டோம். வெய்யில், அலைச்சல், லிங்கராஜ் கோவிலின் தள்ளு முள்ளு, எல்லோரும் மிகவும் ஓய்ந்து விட்டோம்.

 

வழியில் ஒரு பாலாஜி கோவில் இருந்தது. தரிசனம் செய்யலாம் என்றால் அங்கு திரை போடப்பட்டிருந்தது. நடை திறக்க காத்திருந்தால் விமான நிலையம் செல்ல நேரமாகிவிடும் என்பதால் கிளம்பி விட்டோம். இரவு உணவை கையில் கொடுத்து விட்டார்கள். விமான நிலையத்தில் ரசகுல்லா வாங்கிக் கொண்டேன். விமானம் ½ மணி நேரம் தாமதம். வீடு செல்ல இரவு 12 மணி ஆகி விட்டது. அக்காவும், அவர் கணவரும் கவலையோடு காத்திருந்தார்கள்.

ஒடிஷா யாத்திரையில் கலந்து கொண்டவர்கள்:


 இந்த குழுவில் பல் டாக்டராக ஹைதராபாத்தில் பணியாற்றும் சேலத்தை சேர்ந்த ஒரு பெண்ணும், பெற்றோர்களோடு வந்திருந்த ஒரு இளைஞனையும் தவிர பெரும்பான்மையோர் 60+, சிலர் 50+. நான் தனியாக செல்லப் போகிறேன் என்றதும் கேட்ட எல்லோரும், “தனியாகவா?” என்றார்கள். ஆனால் அப்படி தனிமையாக உணரவில்லை. இந்த பயணத்திற்குப் பிறகு உறவினர்களோடு செல்வதை விட, இப்படி தெரியாதவர்களோடு செல்வதே மேல் என்று தோன்றியது. யாரும் யாரையும் காக்க வைக்காமல் நேரத்திற்கு ரெடியாகி விட்டோம். எல்லோருக்கும் ஒரு கமிட்மெண்ட் இருந்தது.


இங்கு வந்திருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் அருணாசலம் என்னும் தொழில் முனைவர். நல்ல கலகலப்பாக இருந்தார். அடுத்ததாக திருமதி சுவர்ணா ஜெகன்னாதனும் அவர் கணவர் ஜகன்னாதனும். ஜ்கன்நாதன் பொதுவுடைமை வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணி ஓய்விற்குப் பிறகு நிறைய பயணிக்கிறார்களாம். அதைப் போல கிருத்திகா, சுரேஷ் தம்பதிகளும் நிறைய பயணம் செய்வார்களாம். அதிலும் இந்த யாத்ரிகா டிராவல்ஸ் மூலம்தான் உள் நாடு, வெளி நாடு சுற்றுலாக்கள் செல்வார்களாம். நிர்ப்பவர்களில் நடுவில் நீல நிறத்தில் கட்டம் போட்ட சட்டை  அணிந்தவரும், அவருக்கு அருகில் வெள்ளை நிற டி ஷர்ட் அணிந்தவரும் சகோதரர்கள். ஒருவருக்கு மனைவி இல்லை, இன்னொருவரின் மனைவி வெளியே எங்கேயும் வர மாட்டாராம், எனவே சகோதரர்கள் மட்டும் வந்திருந்தார்கள். மே மாதம் ஆஸ்திரேலியா செல்லப் போகிறார்களாம். ஹைதராபாத்தில் பணிபுரியும் பல் டாக்டர்தான் பேபி ஆஃப் த டீம். அவருடைய தாயாரோடு வந்திருந்தார். சேலத்திலிருந்து வந்திருந்த பவானி என்பவரின் பெண்ணும் இந்தப் பெண்ணும் ஒரே வகுப்பில் படித்தார்களாம். அதைப்போல என்னோடு அறையை பகிர்ந்து கொண்ட பத்மஜா என்பவருக்கு நம் ஆன்சிலாவைத் தெரியும் என்றார்(ஒரே வங்கி). எங்கள் இருவருக்கும் நன்றாக ஜெல் ஆகி விட்டது.

 

அவரவரை அறிமுகபடுத்திக் கொள்ளுங்கள் என்றபோது, நான்,”மத்யமரில் ஆக்டிவ் மெம்பர்” என்றேன், உடனே, சிவகாமி என்பவர், “மத்யமரில் இருக்கிறீர்களா? ராதை சாய்ராமைத் தெரியுமா?” என்றார். நான் உணர்சிவசப்பட்டு, “குஜராத்தில் இருக்கிறாரே, அவர்தானே?” என்றேன், “அது ராதா ஸ்ரீராமாக இருக்கும், இவள் பெங்களூரில் இருக்கிறாள், என் தங்கைதான்” என்றார். “நன்றாக ஓவியங்கள் வரைவாரே, அவர்தானே?” என்றதும் ஆமாம் என்று ஆமோதித்ததோடு என்னோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு தங்கைக்கு அனுப்பினார். அவரிடமிருந்து ராதையின் காண்டாக்ட் நம்பரை வாங்கிக் கொண்ட நான் தற்சமயம் ஃபோனில் பேசிக்கொண்டிருக்கிறேன், விரைவில் நேரில் சந்திப்பேன் என நினைக்கிறேன். சென்னையிலிருந்து வந்திருந்த ஒரு பெண்மணி, அவரது சகோதரி இருவரும் திருச்சி இந்திராகாந்தி கல்லூரியில் படித்தார்களாம். அங்கு பணி புரிந்த என் அத்தை பெண்ணை தெரியும் என்றார்கள். ஒரு நாள் இரவு உணவருந்தும் பொழுது சுரேஷ் என்பவர், மாயவரத்திர்கு அருகில் இருக்கும் பெரம்பூர்தான் எங்கள் பூர்வீகம்” என்றார், “அட! எங்கள் சம்பந்திக்கு அந்த ஊர்தான்” என்றேன். World is small, isn’t?

 

இவ்வளவும் சொல்லிவிட்டு, யாத்ரிகா டூர்ஸ் பற்றி சொல்லாமல் விடலாமா? எல்லா ஏற்பாடுகளையும் நன்றாக செய்து, நல்ல ஹோட்டலில் தங்க வைத்து, அருமையான, வயிற்றை பாதிக்காத சாப்பாடு போட்டு அழைத்துச் சென்ற யாத்ரிகா ட்ராவல்சுக்கு தாராளமாகா ஒரு ஜே போடலாம். சென்னை அண்ணாநகரிலிருந்து இயங்குகிறது இந்த நிறுவனம். இந்த பதிவுகளை தொடர்ந்து வாசித்து கருத்திட்ட அன்பர்களுக்கு நன்றி.  






Tuesday, May 9, 2023

பொன்னியின் செல்வன் -2

 பொன்னியின் செல்வன் -2



ஊர் உலகமே பார்த்து விட்ட பொ.செ.2 ஐ நான் பார்க்காவிட்டால் சாமி குத்தமாகிவிடாதா? அதற்குள் அதைப் பற்றி நெகடிவ் விமர்சனங்கள் வந்து விட்டன, இருந்தாலும் பார்க்க வேண்டும் என்று ஒரு எண்ணம். ரஞ்சனி நாராயணன் அவர்கள்,"நாம் சேர்ந்து போகலாமா?" என்று கேட்டதும் சரி என்று சொல்லி விட்டேன். இத்தனைக்கும் நான் இருப்பது ஒரு இடம், அவர் இருப்பது ஒரு இடம். இரண்டு பேரும் பார்த்துக் கொண்டதும் இல்லை என்பது ஸ்வாரஸ்யம்.  அது இருக்கட்டும், படத்துக்கு வரலாம்.

பொ.செ.1 வந்த பொழுது அது எப்படி இருக்குமோ? என்று சந்தேகம் இருந்தது, ஆனால் படம் பிடித்தது. இரண்டாம் பாகம் நிச்சயம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் எதிர்பார்த்தேன்.. ஹூம்..!

படத்தின் முதல் பகுதியில் என்னை மிகவும் கவர்ந்தவர் கேமிராமேன் ரவிவர்மன். இந்த பகுதியில் அவர் கூட பெரிதாக கவரவில்லை. தோட்டாத்ரணி ஏமாற்றவில்லை. பிரமாதமான செட்டுகள், அருமையான லைட்டிங். விக்ரம் வெளுத்து வாங்கியிருக்கிறார். கதையில் ஆதித்த கரிகாலன் பாத்திரம் ஒரு ஃப்ரீக் என்பது போல படைக்கப்பட்டிருக்கும். ஆனால் படத்தில் அவனை வீரனாகவும், கெட்டிக்காரனாகவும் காட்டியிருக்கிறார். அந்த அளவிற்கு மற்ற கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறதா என்றால், இல்லை என்பது சோகம். கதையில் ஆழ்வார்கடியான் வரும் பகுதிகள் நகைச்சுவையாக இருக்கும். ஆனால் அவன் சாதுர்யம் மிக்கவனாகத்தான் படைக்கப்பட்டிருப்பான். படத்திலோ அவன் கோமாளியாக்கப்பட்டு விட்டான். அவனுடைய பாஸான அனிருத்த பிரும்மராயர் எப்படிப்பட்ட ராஜ தந்திரி! இங்கே இரண்டு காட்சிகளில் வருகிறாரா? வந்தியத் தேவன் டம்மியாக்கப்பட்டு விட்டார். 

மந்தாகினியின் கதா பாத்திரம் மோசமாக சிதைக்கப்பட்டிருக்கிறது. மேக்கப்பை கலைத்த ஐஸ்வர்யாவின் தலையில் நரைத்த முடி விக்கை வைத்து ஒரே ஒரு காட்சியில் இங்கும் அங்கும் ஓடு என்று சொன்னது போல இருக்கிறது. கடைசியில் மதுராந்தகனுக்குப்பதிலாக முடிசூட்டப்பட வேண்டும் என்பதற்காகத்தான் சேந்தன் அமுதன் கதா பாத்திரமே, அப்படி செய்யப் போவதில்லை என்னும் பொழுது எதற்கு அந்தப் பாத்திரம்?  

திரிஷாவிடம் இருக்கும் இயல்பான கம்பீரம் குந்தவையின் பாத்திர படைப்பிற்கு உதவியிருக்கிறது. பார்திபேந்திர பல்லவனாக நடிக்கும் விக்ரம் பிரபு நந்தினியாக நடித்த ஐஸ்வர்யா ராயிடம் பேசும் காட்சி, நந்தினியின் மோக வலையில் வீழ்ந்து கிடக்கும் ஒருவன் பேசுவது போல இல்லாமல், அம்மா பிள்ளை பேசுவது போல இருக்கிறது. ஐஸ்வர்யாவை விட அவரது குரல் நன்றாக நடித்திருக்கிறது. பாராட்டுகள் தீபா வெங்கட்!  ஜெயம் ரவியின் தோற்றமும் நடிப்பும் நல்ல கம்பீரம்! 

அகனக பாடலைத் தவிர மற்ற பாடல்கள் படத்தோடு ஒட்டவில்லை. ரவிதாசன்&கோவிற்கு காட்டுவாசி போல ஏன் இப்படி ஒரு ஒப்பனை? குறையையே சொல்ல வேண்டி வருமே என்பதால் விமர்சனமே எழுத வேண்டாம் என்று நினைத்தேன். 

இந்த படத்தால் ஒரு நன்மை என்னவென்றால் இப்போது யூ டியூபில் எக்கச்சக்க சோழர் காலத்தைப் பற்றிய பதிவுகள். 



Monday, May 8, 2023

ஓடிஷா யாத்திரை - 5

 ஓடிஷா யாத்திரை - 5

ஸிலிகா ஏரி, பூரி சங்கர மடம், ப்ளூ ஃப்ளாக் பீச்:

சிலிகா பீச்சில் என்னோடு அறையை பகிர்ந்து கொண்டவர்

ஒரு வழியாக ஹோட்டல் அறைக்கு வந்து கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டு சாப்பிடச் சென்றோம். சூப் தொடங்கி, ஐஸ் க்ரீம் வரையான சுவையான உணவு. என் அறைத் தோழி “கோவில் இரவு 11 வரை திறந்திருக்குமாம், மீண்டும் ஒரு முறை செல்லலாமா?” என்றார். எனக்கு தூங்கினால் போதும் என்றிருந்தது.

மறுநாள் காலை 7:30க்கு ப்ரேக்ஃபாஸ்ட் ரெடியாகிவிடும். ரெஸ்டாரெண்ட் வந்து விடுங்கள் என்றதால், குளித்து ரெடியாகி கீழே வந்தோம். ப்ரெட், பட்டர், ஜாம், சாண்ட்விச், கார்ன் ஃப்லெக்ஸ், சாக்கோ ஃப்லெக்ஸ், இட்லி, வடை, சட்னி, சாம்பார், ஆலு பரோடா, வாழைப்பழம், தர்பூசணி துண்டுகள். ஆரஞ்சு மற்றும் திராட்சை பழச்சாருகள், வேகவைத்த முட்டை, காபி, டீ என்று ப்ஃபே முறையில் ராஜபோக காலை உணவு. அதை முடித்துக் கொண்டு சிலிகா ஏரிக்கு கிளம்பினோம்.



சிலிகா ஏரி 1,100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய ஏரி. அங்கு படகு சவாரி செய்யும் பொழுது  வித்தியாசமான பறவைகளை பார்க்கலாம். அதிர்ஷ்டம் இருந்தால் டால்ஃபின்களும் கண்ணில் படலாம் என்றார்கள். போகும் வழி எங்கும் மா, பலா,வாழை தோப்புகள், அதிகமாக பலா மரங்கள் அதிகம் கண்ணில் பட்டதால் தஞ்சை, மாயவரம், கும்பகோணம் பகுதியில் பயணம் செய்கிறோமொ என்று தோன்றியது. பூரியிலிருந்து சிலிகா ஏரி 70கி.மீ. தொலைவில் இருக்கிரது, பயண நேரம் கிட்டத்தட்ட 11/2 மணி நேரம். அந்த நேரத்தில் எல்லோரையும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொன்னார். எல்லோரும் தங்களைப் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொண்டோம்.

சிலிகா எரியை அடைந்த பொழுது, அங்கிருக்கும் கடைகளில் பறவைகளுக்கு போடுவதற்கு உணவு  சிறிய பாக்கெட்டுகளில் விற்கிறார்கள். அதைத் தவிர படகில் செல்லும் பொழுது அணிந்து கொள்ள தொப்பி வாடகைக்கு கிடைக்கிறது. தொப்பி இல்லாதவர்கள் வாடகைக்கு எடுத்துக் கொண்டார்கள். எங்கள் குழுவினருக்கு மொத்தம் மூன்று படகுகள் தேவையாக இருந்தது. படகில் சென்ற பொழுது பறவைகளுக்கான உணவை நீரில் போட்டதும், அவற்றை சாப்பிட பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து பரவசமூட்டின. டால்ஃபின் எதுவும் எங்கள் கண்களில் படவில்லை.

அங்கிருந்து அந்த ஏரி வங்காள விரிகுடாவில் கலக்கும் முகத்துவாரத்திற்கு அருகில் படகை நிறுத்திய அந்த படகோட்டி ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வந்தான். சிப்பிகள் நிறைந்திருந்த அந்த பாத்திரத்திலிருந்து சிப்பிகளை எடுத்து தட்டி தட்டி உடைத்தான். சில சிப்பிகளுக்குள் முத்து இருப்பது தெரிந்தது. சில முத்துக்கள் வெண்மை நிறத்திலும், சில சிப்பிகளுக்குள் கருப்பு நிற முத்துக்களும் இருந்தன. வெண்மை நிற முத்துக்கள், ரூ.ஐநூறும், கருப்பு நிற முத்துக்கள் ரூ.ஆயிரமும் சொன்னான். நாங்களும் வாங்கினோம். முத்துக்கள் விற்பனையானபின் மண் கட்டி போல ஒன்றை(பவளப்பாறை?) கொண்டு வந்து அதை உடைத்து பவளங்களும், பளபளவென்று கற்களும்(அதை நவரத்தினம் என்றான்) எடுத்தான். அவைகளும் முறையே ரூ.ஆயிரதிற்கும், அயிரத்து ஐநூறுக்கும் விற்க்கப்பட்டன.

அங்கிருந்து அந்த ஏரி கடலில் கலக்கும் முகத்துவாரத்தை பார்க்கச் சென்றோம். நல்ல வெய்யிலில் கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ மீட்டர் மணலில் நடந்து சென்றோம். கடற்கரைக்குச் சென்றோமே தவிர முகத்துவாரம் எது என்று தெரியவில்லை.

பூரி சங்கர மடம் முகப்புத் தோற்றம்

பூரி சங்கர மடத்தில் இருக்கும் பழமையான கிணறு


ஆதி சங்கரர் உறங்கியதாக கூறப்படும் சலவைக்கல் படுக்கை

ஹோட்டலுக்கு திரும்பி, உணவு உண்டு விட்டு, கொஞ்சம் ஒய்வெடுத்துக் கொண்டு மாலை பூரி சங்கர மடம் சென்றோம். சங்கர மடம் என்பது அஜென்டாவில் இல்லாததால் விரும்பியவர்கள் தனித்தனி குழுவாக சென்றோம். செல்லும் வழியில் பூரியின் கடற்கரையைத் தாண்டித்தான் செல்ல வேண்டியிருந்தது. அது பப்ளிக் பீச். எங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டது ப்ளு ஃப்ளாக் பீச் என்ற தனியார் பீச். அதை பார்த்து விட்டு புடவை ஷாப்பிங்க் என்று நினைத்துக் கொண்டிருந்தோம்.


நாங்கள் சங்கர மடத்திற்கு ஒரு ஷேர் ஆட்டோவில் சென்று விட்டோம். அந்த தெரு குறுகலாக இருந்ததால் ஆட்டோ நிற்க முடியாது என்பதால் அனுப்பி விட்டோம். திரும்பும் பொழுது ஆட்டோ கிடைக்காமல் நடக்கத் தொடங்கினோம். எதிரே வந்த சில ஆட்டோக்களை நிறுத்தி, சந்திரபாகா பீச் போக வேண்டும் என்றதும், எல்லோரும் தலை தெறிக்க ஓடி விட்டார்கள். சந்திரபாகா பீச் என்பது பூரியிலிருந்து புவனேஷ்வர் செல்லும் வழியில் இருக்கிறது. மயிலாப்பூரிலிருந்து மெரீனா பீச் போக வேண்டும் என்பதற்கு பதிலாக கோவளம் பீச் போக வேண்டும் என்றால் எந்த ஆட்டோக்காரர் வருவார்?

தப்பாக சொல்கிறோமோ என்ற சந்தேகத்தில் எங்கள் ஐடனரியை செக் பண்ணிய ஒரு பெண் ப்ளூ ஃப்ளாக் பீச் என்று கூற அதன்பின் ஆட்டோ கிடைத்து ப்ளூ ஃப்ளாக் பீச் சென்றோம். அங்கு குளிக்க, நீந்த ஐம்பது ரூபாய் கட்டணம், இல்லாவிட்டால் இருபது ரூபாய் கட்டணம். நாங்கள் இருபது ரூபாய் டிக்கெட் எடுத்துக்கொண்டு சென்றோம். இந்தியாவின் சுத்தமான கடற்கரைகளுள் இதுவும் ஒன்றாம். கோல்டன் பீச் என்றழைக்கப்படும் இந்த கடற்கரை இந்தியாவின் பெருமைக்குரிய ப்ளூ ஃபளாக் சர்டிஃபிகேட் பெற்ற எட்டு கடற்கரைகளில் ஒன்றாம். நாங்கள் சென்றபொழுது இருட்டி விட்டது. கடல் உள்வாங்கியிருபது போல் தோன்றியது. கடலுக்குள் அதிக தூரம் செல்ல வேண்டாம் என்று அங்கிருந்த பணியாளர்கள் எச்சரித்தனர். சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு ஹோட்டலுக்குத் திரும்பினோம்.


சாப்பிடும் பொழுது, “நாளை காலை அறையை காலி செய்து கொண்டு சீக்கிரம் கீழே வந்து விடுங்கள். ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டு விட்டு இங்கிருந்து எட்டு மணிக்குள் கிளம்பினால்தான் வெய்யிலுக்கு முன் கொனார்க் செல்ல முடியும்” என்றார் கைட். அதைப்போலவே எல்லோரும் சீக்கிரம் ரெடியாகி காலை உணவை முடித்துக் கொண்டு, டாணென்று எட்டு மணிக்கெல்லாம் ரெடியாகி விட்டோம். ஆனாலும் எங்களால் வெய்யிலுக்கு முன்னால் கோனார்க் செல்ல முடியவில்லை. ஏன் தெரியுமா?

-தொடரும்

Wednesday, May 3, 2023

பூரி ஜகன்னாதர் தல வரலாறு

 பூரி ஜகன்னாதர் தல வரலாறு

 

சத்ய யுகத்தில் அவந்தி நகரத்தை ஆண்டு வந்த ஒரு அரசன் இந்திரத்துய்ம்னன். மஹாவிஷ்ணுவின் பக்தனான அவர் மஹாவிஷ்ணுவின் மூர்த்தம் ஒன்றை பிரதிஷ்டை செய்ய விரும்பினார். அந்த சமயத்தில் நீலகிரியில் மஹாவிஷ்ணுவின் நீலமாதவ விக்ரகம் பூஜிக்கப்பட்டு வந்தது என்பதை கேள்விப்பட்ட இந்திரதுய்ம்னன் அந்தச் சிலையை தேடி நாலா திசைகளிலும் ஆட்களை அனுப்புகிறார். எல்லோரும் வெறும் கையோடு திரும்புகிறார்கள்.


வித்யாபதி என்பவர் தேடிக் கொண்டே விஷ்வாவசி என்பவரின் வீட்டை அடைகிறார். அங்கு அவர் மகள் லலிதாவின் அழகால் கவரப்பட்டு அங்கேயே சில நாட்கள் தங்குகிறார். அங்கு விஷ்வாவசியின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி அவர் பூஜிக்கும் நீலமாதவன் விக்கிரகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அவர் தன் நாட்டிற்குச் சென்று இந்திரதுய்ம்னனிடம் நீலமாதவன் விக்கிரகம் இருக்குமிடத்தை கூறுகிறார். உடனே இந்திரத்துய்ம்னன் நீல மாதவ விக்கிரகத்தை அடையும்பொருட்டு படை திரட்டிக் கொண்டு அவ்விடத்திற்கு வருகிறார், ஆனால் நீல மாதவன் விக்கிரகம் அங்கில்லை, அப்போது அவருக்கு, “பாங்கி நதிக்கருகில் உங்களுக்கு ஒரு மரக்கட்டை கிடைக்கும் அதை வைத்துக்கொண்டு விக்கிரகத்தை படைக்கவும்” என்று ஒரு அஸரீரி கேட்கிறது.

 

அதன்படியே அவருக்கு ஒரு மரக்கட்டை கிடைக்கிறது. அதைக்கொண்டு பலராமர், கிருஷ்ணர், சுபத்திரா தேவியின் மூர்த்தங்களை வடிவமைக்க சிற்பிகளை அழைக்கிறார். பலரும் மறுத்துவிட வயதில் மூத்த ஒரு சிற்பி தான் இருபத்தோரு நாட்களுக்குள் சிலைகளை வடித்துத் தருவதாக ஒப்புக்கொள்கிறார். அனால், தான் தனியாக ஒரு அறைக்குள் அமர்ந்து கொண்டு சிலைகளை வடிப்பதகவும், இருபத்தோரு நாட்களுக்குப் பிறகுதான் கதவை திறக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார். அரசனும் அதற்க்கு ஒப்புக்கொண்டு அவரை மரக்கட்டையோடு ஒரு தனியறைக்குள் அனுப்புகிறான்.

 

நாட்கள் செல்லுகின்றன. அறைக்குள் வேலை நடக்கும் அறிகுறி எதுவும் தென்படவில்லை. இது அரசிக்கு சந்தேகத்தை கிளப்ப, அவள் தூண்டுதலின்படி அரசன் ஒரு நாள் திடீரென்று அறைக்கதவை திறக்கிறான், உள்ளே சிற்பி யாரும் இல்லை, முழுவதும் முற்றுப் பெறாத பலராமர், கிருஷ்ணர்,சுபத்திரா தேவியின் சிலைகள் மட்டுமே இருக்கின்றன. அரசன் திகைத்து நிற்கும் பொழுது, அந்த சிலைகளையே பிரதிஷ்டை செய்யும்படி அவருக்கு தெய்வ வாக்கு கிடைக்கிறது. அத்ற்குட்பட்டு ஒரு கோவிலை நிர்மாணித்து, அந்த சிலைகளை பிரதிஷ்டை செய்கிறார்.

 

ஆனால், புராண கதையில் குறிப்பிட பட்டிருக்கும் கோவில் அல்ல தற்போது இருப்பது. கி.பி.1200ல் அந்தப் பகுதியை ஆண்ட அனந்தவர்மன் என்னும் அரசர் இந்தக் கோவிலை நிர்மாணிக்கும் பணியை துவங்கியிருகிறார். அது அவருடைய பேரன் மஹாமனா நரபதி அனங்க பீம்தேவ் காலத்தில் முடிவடைந்ததாம். கங்கை முதல் கோதாவரி வரையுள்ள சாம்ராஜியத்தின் வரியை இதற்காக செலவழித்ததாக கூறப்படுகிறது.

 

மரத்தாலான இந்த விக்கிரகங்கள் பழுதடைந்தால் அதை மாற்றுவதை ஜெகன்னாத பகவானின் புதிய தோற்றம் என்கிறார்கள். எந்த வருடத்தில் ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருகிறதோ அந்த வருடம் சித்திரை மாத பௌர்ணமி அன்று வாசேலி தேவியிடம் புதிய விக்கிரகம் அமைக்க உத்தரவு கிடைக்க வணங்குகிறார்கள். புதிய விக்கிரக அமைப்பிற்காக எங்கே வேப்ப மரம் கிடைக்கும் என்று தெரிந்து கொள்வதற்காக மங்கலா மா என்னும் தேவியை வணங்குகிறார்கள். கனவில் தேவியின் கட்டளை கிடைக்கிறது. பிறகு கோவிலைச் சார்ந்தவர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து மரத்தை தேடி புறப்படுகிறார்கள்.

 

பலராமர் விக்கிரகம் செய்ய்ப்படும் வேப்ப மரம் வெண்மையாக இருக்க வேண்டும் என்பது நியதி. அந்த மரத்தில் சங்கு சின்னம் இருக்குமாம். ஐந்து கிளைகளை கொண்ட மரமாக இருக்குமாம்.

 

கிருஷ்ணர் விக்கிரகம் செய்யப் பயன்படும் கிளையில் சக்கரம் சின்னம் இருக்கும் என்றும், அதில் ஏழு கிளைகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.       

 

ஸ்ரீரெங்கம் போலவும், மதுரை மீனாட்சி போலவும் இங்கும் வருடம் முழுவதும் உற்சவங்கள் கொண்டாடப்படுவதோடு, ஜெகன்னாதருக்கு விதம் விதமான அலங்காரங்களும் செய்யப்படுகின்றன.

 

அங்கிருக்கும் அத்தனை சன்னதிகளுக்கும் செல்ல முடியவில்லை. தரிசனத்தை முடித்துக் கொண்டு திரும்பினோம். வழியெங்கும் பிரசாத கடைகள். திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம் போல அந்த ஊரின் சிறப்பு பிரசாதம் காஜா எனப்படும் இனிப்பு. தெருவின் இரண்டு பக்கங்களிலும் கடைகளில் அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருக்கும் காஜா. அதைத்தவிர பெரிய உருளிகளில் கொதிதுக் கொண்டிருக்கும் ரச மலாய் மற்றும் ரசகுல்லா கடைகள். ரஸ்குல்லாவின் பிறப்பிடம் ஒடிஷாதனாம். இங்கிருந்துதான் கொல்கத்தா சென்றிருக்கிறதாம்.

 

கும்பலில் நசுங்கியதோடு, நடை வேறு.. எல்லோருக்கும் டீ குடித்தால் தேவலை என்றிருந்தது. தெருவோர கடையில் சர் சர்ரென்று ஆத்தி கொடுத்துக் கொண்டிருந்தார். அவரிடமே குடித்திருக்கலாம். ஒரு சின்ன ஜூஸ் கடையில் நுழைந்து காபி, டீ கிடைக்குமா? என்று கேட்டதற்கு அங்கிருந்த பெண் இல்லை என்று கூறி விட்டாள். நகர்ந்திருக்கலாம், முதலாளி போன்ற இளைஞன், “கொஞ்சம் வெய்ட் பண்ணுங்கள்” என்றதும், எங்களோடு வந்த ஒருவர் “இருபது டீ” என்று ஆர்டர் கொடுத்து எல்லோரையும் நிற்கச் சொன்னார். நாங்களும் நின்றோம், நின்றோம்.. உள்ளே நான்கு பேர்கள்தான் உட்கார முடியும். நேரம் ஓடிக் கொண்டிருந்தது. என்ன செய்கிறாள்? இதோ பால் டப்பாவை எடுத்து விட்டாள்.. ஐயையோ பால் பவுடர் டீயா? என்ற மைண்ட் வாய்ஸை அடக்கினேன். சும்மா நிற்கிறோமே என்று சாண்ட்விச்சும், ஃபிங்கர் சிப்சும் ஆர்டர் கொடுத்தார். சிலர் பக்கத்து கடையில் ரசமலாய் வாங்கி சாப்பிட்டார்கள். கடைசியில் டீ என்று ஒன்று வந்தது. அதில் சர்க்கரை இருந்தது, பால் இருந்தது, குங்குமப்பூ கூட போட்டிருந்தார்களாம். டீத்தூள்..?? அதை மட்டும் போட மறந்து விட்டார்கள்.

 

டீ குடித்துவிட்டு வாங்கித் தந்தவருக்கு ஒரு நன்றியை கூறிவிட்டு நாங்கள் நகர்ந்து விட்டோம். ஆர்டர் கொடுத்தவர் ஆயிரம் ரூபாயைக் கடைக்காரரிடம் கொடுத்து விட்டு, மிச்சம் கொடுக்கப் போகிறார் என்று எதிபார்த்திருக்க, அவன், “நீங்கள் இன்னும் இரண்டாயிரம் ரூபாய் தர வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார், ஏன் என்று கேட்டதற்கு, “ அந்த டீயில் குங்குமப்பூ போட்டிருக்கிறதே” என்றானாம். அவர் தொழிலதிபராக இருந்ததாலோ என்னவோ கேட்ட தொகையை கொடுத்து விட்டு வந்திருக்கிறார்.

- தொடரும்