அரபிக் கடலோரம் ஓர் அழகைக் கண்டேனே - II
ஆட்டுக்கால் பகவதி கோவிலில் தரிசனம் முடித்துக் கொண்டு நாங்கள் ரூமிற்கு திரும்பி குளித்து, உடை மாற்றி அனந்த பத்மநாபசுவாமி கோவிலை அடையும் பொழுது மணி ஏழே காலாகி விட்டது. கோவில் வாசலில் என் கணவர் சட்டையை கழற்றி, அங்கவஸ்திரம் அணிந்து கொண்டு, செல் போன், செருப்பு போன்ற உடைமைகளை ஆட்டோ ஓட்டுனரிடம் ஒப்படைத்து விட்டு, பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்பட்டு கோவில் உள்ளே பிரவேசித்த பொழுது பிரகாரத்தில் ஒரு மூதாட்டி, "சீக்கிரம் சீக்கிரம் ஓடுங்கள், நடை அடைத்து விடப் போகிறார்கள்" என்று எங்களை துரிதப் படுத்தினர். நாங்கள் எந்த வாயில் வழியாக உள்ளே செல்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் அலைந்து நேரம் விரயம் செய்ததில் நடை அடைக்கப் பட்டு விட்டது.அடுத்த தரிசனம் எட்டே காலுக்குத்தான் என்றார்கள். பொது தரிசனமும் இல்லை, சிறப்பு தரிசனமும் இப்போது கிடையாது. ஐம்பது ரூபாய் கட்டண தரிசனம்தான் இருந்தது. ஐம்பது ரூபாய் டிக்கெட் வங்கிக் கொண்டு அந்த வரிசையில் நின்று கொண்டிருந்த ஐயப்பமார்களோடு சேர்ந்து கொண்டோம். கிட்டத் தட்ட எட்டு மணிக்கு ஸ்ரீரங்கம் அரையர் போல அலங்கரித்துக் கொண்ட மூன்று அர்ச்சகர்கள் உள்ளிருந்து உற்சவ விக்கிரகங்களை தங்கள் தலையில் சுமந்த வண்ணம் வெளிப்பட்டனர். அவர்களும், அவர்களை பின் தொடர்ந்து கையில் விளக்கு ஏந்திய பெண்களும், ஹரே ராம,ஹரே ராம,ராம ராம ஹரே ஹரே. ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண,கிருஷ்ண ஹரே ஹரே என்னும் மஹா மந்திரத்தை ஜபித்த வண்ணம் ஒரு சில பக்தர்களும் செல்ல, கோவிலை மூன்று முறை வலம் வருகிறார்கள். அவர்கள் உள்ளே சென்றதும் நடை திறக்கப்படுகிறது.
வரிசையில் நின்று கொண்டிருந்த எல்லோரையும் உள்ளே விட்டார்கள். ஒற்றைக்கால் மண்டபத்திற்கு இந்த பக்கம் நின்று கொண்டுதான் பெருமாளை தரிசனம் செய்ய வேண்டிய நிர்பந்தம். ஒரு பக்கம் முண்டி அடிக்கும் கும்பல், மறு பக்கம் இருட்டுக்கு பழகாத கண்கள்.. பெருமாள் ஒரு சில்ஹௌட் போல தெரிந்தார். திருவடியை தரிசனம் செய்ய முடியவில்லை. காலையில் ஒரு முறை வந்து நன்றாக தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டோம்.
மறுநாள் அமிர்தபுரி(வள்ளிக்காவு) சென்று அமிர்தானந்தமயியை தரிசனம் செய்து கொண்டோம். அடுத்த நாள் திங்கள் கிழமை காலை மீண்டும் அனந்தபத்மநாப சுவாமி கோவிலுக்குச் சென்றோம். 180 ரூபாய்க்கு நுழைவு சீட்டு பெற்றுக் கொண்டோம். இதற்கு இரண்டு பேர்களை அனுமதிக்கிறார்கள்,இரண்டு டின் அரவணை பாயசமும் ப்ரசாதமாக கிடைக்கும்.
அர்த்த மண்டபத்தில் நுழையும் முன் ருத்ர நரசிம்மரை வணங்கிக் கொள்கிறோம். உள்ளே ஒற்றைக் கால் மண்டபம் தாண்டி,தெற்கே தலை வைத்து,வடக்கே காலை நீட்டி, தொப்பூழிளிருந்து எழும் தாமரையில் பிரம்மா வீற்றிருக்க, இடது கரத்தில் தாமரை பூவை ஏந்தி,வலது கை கீழே சிவலிங்கத்தின் மீது இருக்க, அனந்தன் என்னும் ஐந்து தலை பாம்பின் மீது பள்ளி கொண்டிருக்கும் பெருமாளின் அற்புத கோலத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது.
சுவாதி திருநாள் ம்யூசியம் முன் |
உள் பிரகாரத்தில் சீதா,லக்ஷ்மண சமேத ஆஞ்சநேய சன்னிதி ஒன்று இருக்கிறது. வெளி பிரகாரத்தில் கோவில் கொண்டுள்ள திருவம்பாடி கிருஷ்ணன் சன்னிதி தமிழ் நட்டு கோவில் போல இருக்கும் அனந்த பத்மநாப சுவாமி கோவிலுக்குள் முழு முழுக்க கேரளா பாணியிலேயே அமைந்துள்ள சிறு தனி கோவில். இதற்கு முன் இருக்கும் மண்டபத்தின் மரத்தால் ஆன விதானத்தில் மிக அழகான தசாவதார சிற்பங்கள் உள்ளன.
அனந்த பத்மநாபசுவாமி கோவில் முன்பு |
கோவிலின் மடப்பளியில் இருக்கும் அக்ர சாலை கணபதியையும் தொழுது வெளி வந்து கொடிமரத்தின் முன் வணங்கி வெளி வருகிறோம். கேரள கோவில்களைப் போல இல்லாமல் அகன்ற பெரிய பிரகாரம், நாயக்கர், பிற்கால சோழர்கள் கால சிற்பங்களைப் போல பெரிய பெரிய சிற்பங்கள் என்று தமிழக கோவில்களைப் போல இருக்கிறது பத்மநாப சுவாமி கோவில். கோபுரம் கூட நம்மூர் பாணியிலேயே அமைந்துள்ளது. பிரகாரத்தில் இரண்டு புறமும் ஒவ்வொரு தூணுக்கு முன்பும் இருக்கும் விளக்கு நாச்சியார் சிலைகளின் கைகளில் அந்தக் காலத்தில் நிஜமான விளக்கு ஏற்றி வைத்திருப்பார்கள், இன்றோ..? எல்லாவற்றிலும் மின்சார விளக் குகள்!!!
திருவனந்தபுரம் பெருமாளின் திருமேனி ஆரம்ப காலத்தில் இலுப்ப மரத்தால்தான் செய்யப்பட்டிருந்ததாம், பின்னாளில்தான் தற்போதிருக்கும் 12008 சாளிக்ராமங்களால் ஆக்கபட்டிருக்கும் திருமேனியை ப்ரதிஷ்டை செய்திருக்கிறார்கள். 108 சாளிக்ராமங்களை ஒரு சேர தரிசிப்பதே புண்ணியம் என்னும்போது 12008 சாலிக்ராமங்களை ஒரு சேர தரிசிக்க முடிவது ஒரு சிறப்பு ன்றால், சயனித்துக் கொண்டிருக்கும் விஷ்ணு, அவரது தொப்பூழிலிருந்து பிரம்மா, கீழே கை தொட்டுக் கொண்டிருக்கும் சிவ லிங்கம், என்று மும்மூர்த்திகளையும் ஒரே இடத்தில் தரிசிக்க முடிகிற வாய்ப்பையும் தருகிற தரிசனம் இன்னொரு சிறப்பு!
- தொடரும்
No comments:
Post a Comment