கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, July 22, 2016

மழையில் நனைந்தபடி மலை நாட்டிற்கு - 2


மழையில் நனைந்தபடி மலை நாட்டிற்கு - 2


பார்த்தசாரதி பெருமாளை தரிசித்தப் பிறகு நாங்கள் மம்மியூர் மஹாதேவன் கோவிலுக்குச் சென்றோம். குருவாயூர் கோவிலுக்குச் சென்றவர்களுக்கு நினைவுக்கு வரலாம்... அங்கு பகவதியை தரிசித்து விட்டு ப்ரதக்ஷிணமாக வரும்பொழுது, ஒரு மூலையில் ஒரு மரத்தடியில் இங்கு நின்றபடி மம்மியூர் மகாதேவன் இருக்கும் திசை நோக்கி வணங்கவும் என்ற அறிவிப்பை காணலாம். அப்படி என்ன விசேஷம் மம்மியூர் மஹாதேவன் கோவிலில் என்று கேட்கலாம்.

குரு பகவானும், வாயு பகவானும் தங்களுக்கு கிடைத்த கிருஷ்ண விக்கிரஹத்தை எங்கே பிரதிஷ்டை செய்வது என்று பொருத்தமான இடத்தை தேடி அலைகிறார்கள். அவர்கள் குருவாயூரை அடைந்த பொழுது, அந்த குளக்கரையில் அமர்ந்து நெடு நாட்களாக தவம் செய்து கொண்டிருந்த சிவ பெருமான் இங்கே குருவாயூரப்பனுக்கு கோவில் கட்ட இடத்தை விட்டு கொடுத்து விட்டு பார்வதி தேவியோடு தான் பக்கத்துக்கு ஊருக்கு நகர்ந்து சென்றாராம், அவருடைய அந்த பெருந்தன்மைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே மம்மியூர் மகாதேவனை வழிபட வேண்டும் என்கிறார்கள். மம்மியூர் மகாதேவனை தொழுதால்தான் குருவாயூர் யாத்திரை முழுமை பெரும் என்பதும் ஒரு நம்பிக்கை. சிவபெருமானின் மஹிமை பெற்ற ஊர், 'மஹிமையூர் ' என்பதே மருவி மம்மியூர் ஆகி விட்டதாம். 

நாங்கள் அங்கு சென்ற நேரம் உச்சிகால பூஜை நேரம். தீபாராதனை முடிந்தவுடன் உள்ளே தரிசனத்திற்கு அனுமதித்தார்கள், சிவன் சந்நிதியில் வணங்கி, பிரகாரம் சுற்றிக் கொண்டு மஹாவிஷ்ணு சந்நிதியில் வணங்கி அங்கிருந்த ஒரு வாசல் வழியே வெளியே வந்து விட்டோம். உடனே நடை அடைத்து விட்டார்கள். சிவன் சந்நிதிக்கு, மஹாவிஷ்ணு சந்நிதிக்கும் இடையே இருந்த பார்வதி தேவியின் சந்நிதியை தரிசனம் செய்ய முடியவில்லை. வெளியில் இருந்தபடியே வணங்கினோம்.

மம்மியூரைத் தொடர்ந்து குருவாயூர் தேவஸ்தானம்(அங்கு தேவோஷம் என்கிறார்கள்) பராமரிக்கும் 'ஆன கூட்டா'  சென்றோம். நுழைவு கட்டணம் தலைக்கு ரூ.20/- வசூலிக்கிறார்கள். காமிரா உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை, ஆனால் செல் போன் அனுமதிக்கிறார்கள். 

இருக்கும் யானைகளில் பெரும்பான்மை ஆண் யானைகள்தான். இந்த யானைகளெல்லாம் ஏன் சோனியாகவும் கொஞ்சம் சோகமாகவும் இருக்கின்றன? என்ற அனுவின் கேள்வி நியாயமாகத்தான் பட்டது.

அங்கிருந்து குருவாயூர் சென்று தேவஸ்தான கெஸ்ட் ஹவுசில் வசதியான சூட் ஒன்று கிடைத்தது. பள்ளிகள் திறந்து விட்டன, மழை வேறு, எனவே கும்பல் அதிகம் இருக்காது என்ற கணக்கெல்லாம் பொய்த்து கும்பல் இருந்தது. ஆனால் நகர்ந்து கொண்டே இருந்ததால் சீக்கிரம் பார்த்து விட  முடிந்தது. மாலை தரிசனம் முடித்து,  மறுநாள் காலை நிர்மால்ய தரிசனத்திற்க்காக இரவு 2:00 மணிக்கு நாங்கள் கோவிலை அடைந்த பொழுது, மிக நீண்ட வரிசையைப் பார்த்து பயந்து விட்டோம். காலை 3:00 மணி முதல், 3:20 வரைதான் நிர்மால்ய தரிசன நேரம் என்றார்கள். 20 நிமிடத்திற்குள் இத்தனை பெரும் பார்த்து விட முடியுமா? என்று பயம் வந்தது. ஆனால் கிடு கிடுவென்று வரிசை நகர்ந்ததால் எல்லோராலும் பார்க்க முடிந்தது.

வரிசையில் நின்று கொண்டிருந்த பொழுது சுற்றுப் புறத்தை நோட்டம் விட்ட அனு, குருவாயூர் எப்படி மாறிப் போய் விட்டது? என்றாள். 
ஆமாம், எல்லா இடங்களும் மாறிக்கொண்டுதானே இருக்கின்றன..?
பக்தர்கள் அதிகமாக வராத தொடங்கும் பொழுது அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர வேண்டாமா?
வசதிகள் செய்து தரட்டும், அதற்காக அடைப்படை மாறிவிடக் கூடாது..
ஆரம்பித்து விட்டாயா? இங்கே என்ன அடிப்படை மாறி விட்டதாம்? 
உனக்கு நினைவில்லையா? முன்பெல்லாம் கிழக்கு நடையில் நின்று பார்த்தால் கோவிலை முழுமையாக தரிசிக்க முடியும். இப்போது டின் ஷீட்டில் பெரிதாக கொட்டகை போல போட்டிருக்கிறார்கள், அது வாசல் தோற்றத்தை மறைத்து விடுகிறது. கொடிமரம் பாதிதான் தெரிகிறது. 
நீ சொல்வதும் சில சமயம் சரியாகத்தான் இருக்கிறது.
இன்னொன்றும் கவனித்தாயா? முன்பெல்லாம் எல்லா கேரள கோவில்களை போலவே குருவாயூரும் அமைதியாகத்தான் இருக்கும். ஆனால் இப்போது யாத்ரீகர்கள் அதிகமாகி விட்டதாலோ என்னவோ சளசளவென்று பேச்சு..
சரி சரி, நீ பேச்சை நிறுத்து, நடை திறக்கப் போகிறார்கள்....

ஸ்வாமியை தரிசனம் செய்து விட்டு வரும் பொழுது, இத்தனை ப்ராசீனமான கோவில்.. ஏன் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்யவில்லை? அனுவிற்கு சந்தேகம்.  

எனக்கும் தெரியவில்லை.. தெரிந்தவர்கள் யாராவது பதில் சொன்னால் கேட்டுக் கொள்ளலாம்.

அங்கிருந்து பாலக்காடு செல்வதற்கு காலை 6:30க்கு கிளம்பி விட   வேண்டும் என்று தீர்மானித்ததால் அதற்குள் ஒரு குட்டி தூக்கம் போடலாம் என்று மற்றவர்கள் தூங்கி விட நான் மட்டும் மீணடும் ஒரு முறை கோவிலுக்குச் சென்று சந்தன காப்பு அலங்காரத்தில் கையில் குழலோடு கட்சி அளித்த அந்த குழந்தை கண்ணனை ஆசை தீர தப்பு தப்பு ஆசை தீருமா என்ன? மீண்டும் ஒரு முறை தரிசித்தேன்.  

அங்கிருந்து 7:30க்கு கிளம்பினோம். பாலக்காட்டை அடையும் பொழுது மணி 11 ஆகி விட்டது. என் கணவரின் சொந்த ஊரான கோவிந்தராஜபுரத்தில் இருக்கும் வரதராஜ பெருமாள் கோவிலிலும் 10:30க்கு நடை அடைத்து விடுவார்களாம். ஆகவே அங்கும் பெருமாளை தரிசிக்க முடியவில்லை. என் கணவரின் பூர்வீக வீட்டில் இப்போது வசிப்பவர்கள் ஊரில் இல்லாததால் அங்கும் உள்ளே சென்று பார்க்க முடியவில்லை. புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டோம்.

தொடர்ந்து செல்லலாம்.... 


6 comments:

 1. வரிசை கிடுகிடுவென நகர்ந்தால் வசதியாகத்தான் இருக்கும். சமீபத்தில் புட்லூர் அம்மன் கோவில் சென்ற போது குழுக்குழுவாக உள்ளே நின்று விட, வரிசையில் நிற்பவர்களுக்கு பொறுமை போனது!

  ReplyDelete
 2. நான் கடைசியாக குருவாயூர் சென்றது 2005 தொடர்கிறேன்.

  ReplyDelete
 3. நாங்கள் பாலக்காட்டில் கோவிந்தராஜபுர கும்பாபிஷேகத்துக்குச் சென்றுவந்தோம் ஒரு பதிவு எழுதி இருக்கிறேன் பூர்வீக வீட்டுக்குள்ளும் சென்று வந்தோம் பதிவின் சுட்டி வேண்டுமா. ?
  குருவாயூர்க் கோவிலில் எனக்குப் பிடிக்காத விஷயம் ஆடை அணியாமல் வெற்று மேலுடன் ஆண்கள் கூட்டத்தில் ஒருவரை ஒருவர் முண்டியடித்து முன்னேறுவதுதான்

  ReplyDelete
  Replies
  1. Pls.send me the link about govindarajapuram kumbabishekam.

   Delete
 4. நாங்க குருவாயூர் போனது 2001 ஆம் ஆண்டுனு நினைக்கிறேன். மம்மியூர் மஹாதேவன் பத்தி எல்லாம் அப்போத் தெரியாது. ஆனால் காலை நிர்மால்ய தரிசனத்துக்குப் போயிட்டுக் கேரளப் பெண்களும் ஆண்களும் பார்க்க விடாமல் மறித்துக் கொண்டு நின்றது மட்டும் நினைவில் இருக்கு! :) எப்படியோ பார்த்தோம்னு பெயர் பண்ணினோம். சாப்பாடும் சகிக்கலை! காப்பித் தண்ணி என்கிறார்கள். டீத்தண்ணி, கட்ட சாயா என்கிறார்கள். உண்மையிலேயே எல்லாமும் தண்ணீர் தான்! :) இப்போ சமீபத்தில் போகலை! போன வருஷம் திருவனந்தபுரத்தில் அனந்துவைப் பார்த்தது தான்! :)

  ReplyDelete
 5. இப்போதும் சாப்பாடு சகிக்கலைதான்.

  ReplyDelete