கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, January 4, 2018

வைகுண்ட ஏகாதசி 2017


வைகுண்ட ஏகாதசி 2017


பல வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி வைபவம் காணச் சென்றிருந்தோம். வெள்ளி அன்று காலை 10 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பிய நாங்கள் மாலை 4:30க்கு ஸ்ரீரெங்கத்தை அடைந்தோம். அங்கு கொஞ்சம் சிரமபரிகாரம் செய்து கொண்டு இரவு உணவையும் முடித்து விட்டு எட்டு மணிக்கு கோவிலுக்கு கிளம்பினோம். வடக்கு வாசலில் எங்களை இறக்கி விட்ட ஆட்டோக்காரர், என் அண்ணாவிடம் "ராத்திரி பதினோரு மணிக்கு வந்து விடலாம் சார் " என்றார். அவர் ஏதோ எங்களை பயமுறுத்துவதாக நினைத்தோம். ஆனால் பரமபத வாசலை நோக்கிச் சென்ற வரிசை கிழக்கு உத்திரவீதியின் ஆரம்பத்தில் தொடங்குவதை பார்த்ததும் அவர் சொன்னது உண்மைதான் என்று புரிந்து கொண்டோம். வந்து விட்டோம், பரமபத வாசலை மிதித்து விடலாம் என்று வரிசையில் சேர்ந்து கொண்டோம். வரிசை ஆங்காங்கு நின்று நகர்ந்தது. ஒலி பெருக்கியில் வேறு ஒன்பது மணிக்கு மூலவர் சந்நிதி அடைக்கப் பட்டு விடும், 10 மணிக்கு பரமபத வாசல் அடைக்கப் பட்டு விடும் என்று அறிவித்துக் கொண்டே இருந்தார்கள். 

நாங்கள் கருடாழ்வார் சந்நிதியை அடைந்த பொழுது மணி 9:50. எங்களை அனுமதித்து விடுவார்கள் என்று நினைத்தோம், ஆனால் அதுவரை நகர்ந்து கொண்டிருந்த வரிசை நின்று விட்டது. விடுவார்களா? மாட்டார்களா? என்று தெரியவில்லை. வெளியே சென்று கொண்டிருந்த பெண் போலீஸ் ஒருவரை கேட்ட பொழுது, "அங்கு ஒரே கும்பல்,அதனால்தான் இங்கு நிறுத்தி இருக்கிறார்கள் " என்றாரே தவிர வரிசையில் காத்துக் கொண்டிருக்கும் மக்களை அனுமதிப்பார்களா என்று சொல்லவில்லை. துப்புரவு பணியாளர் ஒருவர் பரமபத வாசல் அடைக்கப்பட்டு விட்டது என்றும், அது மீண்டும் திறக்கப்படும் என்றும் கூறினார். உள்ளேயோ மேலும் மேலும் மக்கள் அனுமதிக்கப்பட்டுக் புதுப் புது வரிசைகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்தன. நல்ல வேளை அதிகம் காக்க வைக்காமல் மக்கள் உள்ளே செல்லலாம் என்ற அறிவிப்பு வர எல்லோரும் திமுதிமுவென்று ஓடி, தேவை இல்லாமல் பரமபத வாசல் அருகே வரிசை என்பதே இல்லாமல் நெரிசலை உண்டாக்கினார்கள்.  பரமபத வாசலுக்கு அருகில் விதானத்தில் இருக்கும் இரண்டு தங்க பல்லிகளை பார்க்க வேண்டும் என்றார்கள். ஏன் என்று என் மகன் கேட்டதற்கு, "கெட்ட  சொப்பனங்கள் பலிக்காமல் இருக்க"(இது காஞ்சீபுரத்தில் இருக்கும் வரதராஜ பெருமாளின் கோவிலில் இருக்கும் பல்லிகளை பார்ப்பதற்கு சொல்லப்படும் பலன்) என்றேன், உண்மையில் எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். எப்படியோ பரமபத வாசலை மிதித்து விட்டு நாங்கள் வீடு வந்து சேர்ந்த பொழுது அந்த ஆட்டோக்காரர் கூறியபடி மணி பதினொன்று ஆகிவிட்டது.

கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் திருவானைக்கோயில் 

ஜம்புகேஸ்வரர் ஆலயத்தின் முகப்பு 


தூணின் மேற் பகுதியில் உள்ள அழகான யாளி
  
அகிலாண்டேஸ்வரி சந்நிதிக்கு செல்லும் வழியில் உள்ள மிக அழகான மகிஷாசுரமர்த்தினி ஓவியம் 
அடுத்த நாள் காலை திருவானைக்கோவில் சென்றோம். அங்கும் கும்பல்தான். இருந்தாலும் சௌகரியமாக தரிசனம் செய்ய முடிந்தது. ஸ்ரீரங்கம் கோவில் பெரிதாக இருக்கலாம், ஆனால் திருவானைக்கோவில்தான் அழகு! அங்கு இருக்கும் ஒவ்வொரு சிற்பமும் நல்ல தீர்க்கமாகவும் அழகாகவும் இருக்கும். 

மாலை மலைக்கோட்டை செல்ல விரும்பினான் என் மகன். மாணிக்க விநாயகரை தரிசித்துக் கொண்டு மலை ஏறத் தொடங்கினோம். நூற்றுக் கால் மண்டபம் வரை சென்றதும் அங்கேயே தங்கி விடலாம் என்று நினைத்தேன். ஆனால் என் மகன் அதுதான் இவ்வளவு படிகள் ஏறி விட்டாயே, மீதியையும் ஏறி விட முடியும் என்று உற்சாகப் படுத்தி மேலே கூட்டிக் கொண்டு சென்று விட்டான். அன்று சனி பிரதோஷமாக இருந்ததால் அங்கும் நல்ல கும்பல்.

தாயுமானவர் ஸ்வாமி சந்நிதியில் உள்ள இந்த சங்கிலியின் வளையங்கள் இரும்பு அல்ல, கருங்கல்!
மறுநாள் ஞாயிறு காலை திருப்பட்டூர் சென்றோம்.அதை தனி பதிவாக எழுத உத்தேசம். மதியம் மூன்று மணிக்கு மீண்டும் ரெங்கநாதர் கோவிலுக்குச் சென்றோம். இந்த முறை ஆயிரம் கால் மண்டபத்தில் சேவை சாதிக்கும் உற்சவரை தரிசித்து விட்டு, மூலவரின் முத்தங்கி சேவையையும் தரிசிக்க நினைத்தோம்.

ரெங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு செய்யப்பட்டிருக்கும் மலர் அலங்காரம்.
உற்சவரை கொட்டாரத்தில் தரிசித்தோம். அன்று பெருமாள் விமான பதக்கம் அணிந்திருந்தார். மூலவரை தரிசிக்க 250 ரூபாய் டிக்கெட் வாங்கலாம் என்றால் இங்கே அங்கே என்று அலைய விட்டார்கள். எப்படியோ தரிசித்துக் கொண்டு வந்தோம். பின்னர் தாயாரையும் சேவித்து விட்டு வெளியே வந்த பொழுது மாலை ஆறு மணி ஆகி விட்டது. பெருமாள் தரிசனம் எப்போதும் ஆனந்தம்தான். ஆனால் கூடவே சில நெருடல்களும் இல்லாமல் இல்லை. நாங்கள் மூலவர் அருகே சென்ற போது அங்கிருந்த ஒருவர் "மூணு நாள் லீவு சேர்ந்தாற்போல் வந்தாலும் வந்தது" என்று அலுத்துக் கொண்டார். இத்தனை கும்பல் வரும் என்று ஆலய நிர்வாகம் எதிர்பார்க்கவில்லையா? போலீஸ்காரர்களை  மட்டும் வைத்துக் கொண்டு கும்பலை சமாளிக்க வேண்டும் என்பது கொஞ்சம் கடினமான செயல்தான். காவல் துறை திணறியது. திருச்சியில் எத்தனை கல்லூரிகள், பள்ளிகள் இருக்கின்றன அவைகளிலிருந்து  ஸ்கவுட், NSS மாணவர்களை வரவழைத்து வாலன்டியர்களாக பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். 
உத்திர வீதியில் தண்ணீர் பாட்டில்கள் விற்றார்கள், கோவிலுக்கு உள்ளே எதுவும் இல்லை. குடி தண்ணீர் விநியோகத்திற்கு ஏதாவது ஏற்பாடு செய்திருக்கலாம். இது ஒரு பக்கம் என்றால், வருத்தப் படத்தக்க இன்னொரு நிகழ்வு, முத்தங்கி சேவை தரிசனத்திற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த பொழுது, ஜி.ஆர்.டி. நிறுவனத்தினர் ஒரு பையில் ஒரு பிஸ்கெட் பாக்கெட், மிக்ஸர் பாக்கெட், ஒரு சிறு தண்ணீர் பாட்டில் வைத்து விநியோகம் செய்தனர். அது கிடைத்தவர்கள் எல்லாவற்றையும் வரிசையில் நிற்கும் பொழுதே காலி செய்து விட்டு அந்த பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் மற்றும் தண்ணீர் பாட்டிலை அங்கேயே போட்டு விட்டு சென்றிருந்தனர். கோவிலுக்குள்ளே குப்பையை போடுகிறோமே என்ற குற்ற உணர்வு கொஞ்சம் கூடவா இருக்காது? அந்த GRT பையிலேயே போட்டுக் கொண்டு வழியில் இருக்கும் குப்பை கூடையில் போட்டிருக்கலாமே?!  இத்தனைக்கும் அந்த வரிசையில் நின்று கொண்டிருந்தவர்களில் பெரும்பான்மையோர் நாகரீகமாக உடை அணிந்து கொண்டிருந்தனர். எல்லோரும் படித்தவர்களைப் போலத்தான் தென்பட்டனர் என்றாலும் சுற்றுப்புறத்தை குறிப்பாக ஆலயத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

வெளியே வந்து டீ குடித்தோம். சுவையான இஞ்சி டீயை விற்பனை செய்து கொண்டிருந்தவர் தேநீரை எங்களுக்கு வழங்கி விட்டு," டீ குடித்து விட்டு கப்பை கீழே போட்டு விடாதீர்கள் நான் தனியாக பை வைத்திருக்கிறேன் அதில் போடுங்கள்" என்றார். இப்படியும் ஒருவர். 
பாராட்டலாம்.  

24 comments:

 1. பயணக் கட்டுரை என்றால் இதான். ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஜோராக இருந்தது. படங்கள் அழகு.

  ReplyDelete
  Replies
  1. பங்களூர் குளிரில் என் உச்சியை குளிர வைத்து விட்டது உங்கள் பாராட்டு. மனமார்ந்த நன்றிகள்🙏🙏

   Delete
 2. திருச்சியில் பல ஆண்டுகள் இருந்தபோதிலும் ஒரே ஒரு முறைதான் வைகுண்ட ஏகாதசி தரிசனம்

  ReplyDelete
  Replies
  1. வைகுண்ட ஏகாதசி ஶ்ரீரங்கத்தில் தரிசிக்க நிறைய ஆசை அதைப்போல இரண்டு மடங்கு பொறுமை வேண்டும். வருகைக்கு நன்றி!

   Delete
 3. அழகிய படங்களுடன் எங்களுக்கும் தரிசனம்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஶ்ரீராம்ன்! என்மகனின் செமி ப்ரொஃப்ஷனல் காமிராவை எடுத்துக் கொள்ளாதது ஒரு குறையாக இருந்தது. புகைப்படங்களை என் செல் ஃபோனில்தான் எடுத்தேன்.

   Delete
 4. துளசி: படங்களும் விவரணமும் நன்றாக இருக்கிறது.

  கீதா: பானுக்கா நல்ல ட்ரிப் போல...படங்கள் அழகா இருக்கு...குப்பை ஹையோ அதை ஏன் கேக்கறீங்க படிச்சவங்க ரொம்பவே இப்படி எல்லாம் பண்ணறாங்க...என்ன சொல்ல...இப்படி மக்கள் இருக்கும் போது இந்தியா க்ளீன் எல்லாம் எப்படி ??!! டீக்காரர் சூப்பர். அதே போல இப்பல்லாம் சின்ன கடை வைச்சுருக்கறவங்க கூட குப்பைக்குனு பெட்டியோ பக்கெட்டோ வைச்சுடறாங்க...

  ReplyDelete
  Replies
  1. நன்றி துளசிதரன்! நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள்.
   நன்றி கீதா! நாம் மாறாமல் நாட்டை மாற்ற முடியாது.

   Delete
 5. பரமபத வாசலைப் பதினோரு மணிக்கே மிதித்தீர்களா? புரியலை எனக்கு! நம்பெருமாள் காலங்கார்த்தாலே தானே அந்த வழியா பல மண்டகப்படிகளிலும் கலந்து கொண்டு விட்டுப் பின்னர் வெளியே வருவார்! ஆனால் நீங்க முதல் நாள் இரவே போனதாகச் சொல்வது புரியலை! மூலஸ்தானத்திலே இருந்து அவர் ரத்னாங்கி, கிளிமாலை, பாண்டியன் கொண்டை சகிதம் அலங்காரங்களுடன் கிளம்பறச்சேயே மறுநாள் மூணு மணி ஆயிடும். அப்புறம் சந்தனு மண்டபத்தில் கொஞ்ச நேரம் இருந்துட்டுப் பின்னர் பரமபத வாயிலை நோக்கிப் பிரதக்ஷிணமாகப் போவார். எதிரே அர்ஜுன மண்டபத்திலும், இந்தப்பக்கம் கிளிமண்டபத்திலும் கூட்டம் தாங்காது! பெருமாளின் கொண்டையைப் பார்க்க முடிந்தாலே பெரிய விசேஷம். நேத்திக்கும் அப்படித் தான் கிடைச்சது! ஒரே கூட்டம்! :(

  ReplyDelete
  Replies
  1. வெள்ளி அன்ற ஏகாதசி, அன்று காலைதான் சென்னையிலிருந்தே கிளம்பினோம். அன்று இரவு பரமபதவாசலை மிதித்தோம். தெளிவாகத்தான் எழுதியிருக்கிறேன். உங்கள் பின்னூட்டத்தை படித்துவிட்டு தவறாக குறிப்பிட்டு விட்டேனோ என்று பயந்து விட்டேன். நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல பெருமாளோடு சொர்க்க வாசல் மிதிக்க வேண்டும் என்றால் வியாழன் இரவு சென்றிருக்க வேண்டும்.

   Delete
  2. ஹிஹிஹி, அ.வ.சி. வைகுண்ட ஏகாதசிக்குப் பரமபத சேவைன்னா உடனே சொர்க்க வாசல் திறப்புக்குப் பெருமாளோடு போறது தானே நினைவில் வரும்! :)))) நான் தேதி, கிழமையைச் சரிபார்க்கலை! அதான் குழப்பம்! சரி, சரி, அதுக்காக நான் கொடுத்த சுட்டிகளின் பதிவைப் பார்க்காமல்/படிக்காமல் இருந்துடாதீங்க! அதுக்குத் தானே கொடுத்திருக்கோம்! :))))

   Delete
 6. http://sivamgss.blogspot.in/2012/12/1.html//

  இது கிட்டத்தட்ட ட்ரெயிலர் மாதிரி. போயிட்டு வந்த அனுபவங்கள் வேறே பதிவில்! :)

  ReplyDelete
 7. http://sivamgss.blogspot.in/2012/12/blog-post_28.html

  http://sivamgss.blogspot.in/2012/12/4.html

  http://sivamgss.blogspot.in/2012/12/blog-post_31.html

  ஹிஹிஹி, என்னோட வைகுண்ட ஏகாதசி அனுபவங்களை இங்கே காணலாம். எல்லாம் ஒரு விளம்பரந்தேன்! :))))

  ReplyDelete
  Replies
  1. அத்தனை கும்பலில் கோவிலுக்குள் சென்றிருக்கிறீர்களே...! நான் ஸ்ரீரெங்கத்தில் இருந்த வரை வைகுண்ட ஏகாதசி அன்று கோவிலுக்குள் செல்ல மாட்டேன். காலையில் கொட்டாரத்தில் பெருமாள் பத்தி உலாத்தும் பொழுது தரிசனம் செய்து விட்டு வந்து விடுவேன். அங்கு கும்பல் இல்லாமல் அதிகம் இருக்காது.

   Delete
  2. நீங்க வேறே! முந்தாநாள் அப்படித் தான் நினைச்சுப் போயிட்டுக் கூட்டம் தாங்கலை! எட்டி இருந்து முகத்தை மட்டும் பார்த்துட்டு வந்தேன். :)

   Delete
 8. அருமையான கோயில் அனுபவம்.

  ReplyDelete
 9. அருமையான அனுபவம்..எத்துனை முறை சென்றாலும் அலுக்காத அனுபவங்கள்...


  கீதா அம்மா சொன்ன சந்தேகம் எனக்கும் வந்தது...

  ஏகாதசி அன்னைக்கு பையன்னுக்கு காய்ச்சல் அதனால அன்னக்கி போக முடியல ...

  ஆன மோகினி அலங்காரம்...நம் பெருமாள் முத்தங்க்க்கி சேவையும் அருமையா கிடைத்தது...

  நாங்களும் உச்சி பிளையார்..தாயுமானவர் அனைவரையும் தரிசித்தோம்...

  ReplyDelete
  Replies
  1. அவன் ஆரா அமுதன் அல்லவா? பார்க்கப் பார்க்க திகட்டாதே. வருகைக்கு நன்றி! நீங்களும் கீதா அக்காவும் குழம்பி விட்டீர்கள். நான் வைகுண்ட ஏகாதசி வெள்ளிக்கிழமை இரவு பரமபத வாசலை மிதித்தேன்.

   Delete
  2. ஹெஹெஹெ, தான் கெட்டது போறாதுனு! ஹிஹிஹிஹி, நம்ம அதிரடி பாஷையிலே வெரி வெரி சொரி! சேச்சே! சரியா இல்லை. மன்னிக்கவும்! ம்ம்ம்ம், இதான் சரி! :)))))

   Delete
  3. பரவாயில்ல....எல்லா தரிசனமும் அப்பா உடன் என்பதால் எனக்கும் சரியா தெரியாது ...

   Delete
 10. உங்கள் மூலம் எங்களுக்கும் நல்ல தரிசனம். இங்கே ஒரு விஷயம் சொல்ல வேண்டும். நம் பக்கங்களில் இருக்கும் வழிபாட்டுத் தலங்களில் crowd management என்பது சுத்தமாக இல்லை. காசு சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கிறது. பக்தர்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுப்பதில் அக்கறை இருப்பதில்லை. பக்தர்களும் கோவிலை சுத்தமாக வைத்துக்கொள்ள நினைப்பதில்லை. அத்தனை கஷ்டப்பட்டு உள்ளே சென்ற பிறகு ஒரே நொடியில் இழுத்து வெளியே தள்ளிவிட்டு விடுகிறார்கள்......

  ReplyDelete
  Replies
  1. ஒரு பக்கம் லட்சக் கணக்கில் வரும் பக்தர்கள், மறு பக்கம் கோவில் நடை முறைகள் இரண்டுக்கும் இடையே கோவில் நிர்வாகம் தடுமாறுகிறது.
   மக்கள் நிறைய மாற வேண்டும்.

   Delete