கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, July 26, 2018

மேகங்கள் விலகும் - 2


           மேகங்கள் விலகும் - 2

வேலைகளை முடித்துக் கொண்டு படுக்க வந்த பொழுது, கணக்கு நோட்டை பிரித்து வைத்துக் கொண்டு அவள் கணவன் படுக்கையில் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு தினமும் கணக்கு எழுத வேண்டும்.

“கார்தால ஐநூறு ரூபாய் கொடுத்துட்டு போனேன், என்ன செலவு? எவ்வளவு மீதி?”

கொஞ்சம் யோசித்த ஸ்வர்னா, “இருபது ரூபாய்க்கு பூ வாங்கினேன்..” என்றதும் மணிகண்டனுக்கு எரிச்சல் வந்தது.

“நான் ஐநூறு ரூபாய்க்கு கணக்கு கேட்டால், நீ இருபது ரூபாய்க்கு கணக்கு சொல்ற..” 

“ரோஹித்துக்கு ஒரு நூறு ரூபாய் கொடுத்தேன்”

“நூறு ரூபாயா? டேய் ரோஹித், எதுக்குடா நூறு ரூபாய்?”

“நூறு ரூபாய் இல்லப்பா, ஐம்பதுதான் கேட்டேன், அம்மாதான், நூறு ரூபாய் கொடுத்தா, ஸ்கூல் கார்டன் போட கேட்டாங்க..” அவன் மீதி ஐம்பது ரூபாயை எடுத்து நீட்டினான்.

“ம்.. அவன் ஐம்பது ரூபா கேட்டா, நீ நூறு ரூபா கொடு, பாக்கியும் வாங்காத, உருபட்டுடுவான்.."

அவள் ஒவ்வொன்றாக நினைவுபடுத்தி சொல்லி விட்டாலும், ஒரு அருபதைந்து ரூபாய்க்கு கணக்கு வரவே இல்லை.

கணக்கு தவறாக போட்டுவிட்டு ஆசிரியரின் தண்டனையை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவனை காப்பாற்றும் வகுப்பு முடிந்து விட்டதை அறிவிக்கும் மணியைப் போல அவனுடைய செல் அழைத்து அவளை காப்பாற்றியது.

அவன் பேசி முடித்து விட்டு வரும் பொழுது அவள் உறங்கியிருந்தாள். 

எரிச்சலோடு கணக்கு நோட்டை மூடி வைத்தவன், விளக்கை அணைத்துவிட்டு படுத்துக் கொண்டான்.

மறு நாள் காலை சிற்றுண்டி அருந்தும் பொழுது மீண்டும் அதே பேச்சை தொடங்கினான்.

“நீ இன்னும், அந்த அறுபதைந்து ரூபாய்க்கு கணக்கு கொடுக்கவில்லை”

“கேவலம் ஒரு அறுபத்தஞ்சு ரூபா.. நான் செலவழிக்கக் கூடாதா?”

“அறுபத்தஞ்ஜாயிரம் கூட செலவழிக்கலாம். ஆனா, எதுக்கு செலவழிக்கிறோம்னு தெரியணும். கேவலம் அறுபதஞ்சு ரூபாயா..? சம்பாதிச்சால்தான் அதன் அருமை தெரியும்.. வீட்டில் உக்கார்ந்து சாப்பிடுகிரவங்களுக்கு என்ன தெரியும்?” என்று தொடங்கியவன், “நீ ஒரு தண்ட சோறு” என்னும் ரேஞ்சுக்கு பேசி முடித்து, அலுவலகதிற்கு கிளம்பிச் சென்றுவிட, இவளுக்கு மனது விண்டு போனது.

“சே.. என்ன வாழ்க்கை இது? நானும் வேலைக்குச் சென்றிருக்க வேண்டும்., ஒரு அறுபத்தஞ்சு ரூபாய்க்கு இவ்வளவு பேச்சா? எனக்கு மரியாதை இவ்வளவுதானா?”

கோபத்தில் சாப்பிடும் நேரம் வந்த பொழுது, மாமியருக்கு மாத்திரம் தட்டு வைத்தாள்.

“அவன் ஏதோ கோவத்தில் கத்தி விட்டு போனால், நீ ஏன் சாப்பாட்டில் கோபித்து கொள்கிறாய்? ஆண் பிள்ளைகள் அப்படித்தான், சாப்பிட வா..”

“கோவம் வந்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?”

“விடேன், இதையெல்லாம், காதுல போட்டுக்கொள்ள கூடாது, உன் ஸ்னேகிதாள பார்க்கப் போணும்னு சொன்னியே, சாபிட்டு விட்டு கிளம்பினா சரியா இருக்கும்.”

சாப்பிட்டு விட்டு, முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டு ரேவதி வீட்டிற்கு கிளம்பினாள்.

அங்கு அவள்தான் முதல் வரவு.

“என்னப்பா..? எப்போதும் நீதான் கடைசியா வருவ.. இப்போ, முதலில் வந்துட்ட..? ஞாபகம் இருக்கா..? ஒரு தடவ ஏதோ ஒரு அஜித் படத்திற்கு அட்வான்ஸ் புக் பண்ணிய கூப்பனை நீ வைத்துக் கொண்டு, லேட்டாக வந்தாய்.. நாங்களெல்லாம் உனக்காக தியேட்டர் வாசலில் காத்துக் கொண்டிருந்தோம்.. ப்ரபா பயங்கர டென்ஷனாயிட்டா..” 

ரேவதி பழைய கதையை அவிழ்த்து விட ஸ்வர்னா சிரித்துக் கொண்டே, “அதெல்லாம் ஏன் இப்பொ சொல்லி டாமேஜ் பண்ற?” என்றாள். பிறகு, “என் ஹஸ்பெண்ட் ரொம்ப பன்சுவல், ஆறு மணிக்கு ஒரு நிகழ்சின்னா ஐந்தே முக்காலுக்கு அங்க இருப்பார். ஸோ, நானும் மாறிட்டேன்.”

“வேற என்னவெல்லாம் மாறியிருக்கு? நல்லா வெய்ட் போட்டுட்ட..”
“நீ மட்டும் என்னவாம்?”

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே, ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். பெரும்பான்மையோர் குண்டாகி, லேசாக நரைக்கத் துவங்கி, கண்களின் கீழ் கருவளையம் விழுந்து, சிலர் பளிச்சென்றாகி.. அந்த இடமே மாறிப்போனது.

எல்லோரும் தங்கள் வயதை மறந்து பேசி சிரித்து, பழைய நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து, உற்சாகம் கொப்பளித்தது.

கூட்டத்தின் நம்ப முடியாத அதிசயம் காயத்ரி. படிக்கும் பொழுது மீடியாக்கர் ஸ்டூடண்ட். முதல் வருடம் அரியர்ஸ் கூட இருந்தது. ஆனால் இரண்டாம் வருடத்திலிருந்து ஒரு வேகம் எடுத்து, முதல் வகுப்பில் தேறி, வங்கித் தேர்வு எழுதி, அதிலும் தேர்ச்சி பெற்று வங்கியில் சேர்ந்ததுதான் இவர்களுக்குத் தெரியும். அவள் அதற்குப் பிறகு எம்.பி.ஏ. முடித்து, தனியார் நிறுவனத்திற்கு மாறி, இன்று அதில் முதன்மை அதிகாரியாம். விடாமல் கைபேசி அழைத்துக்கொண்டே இருந்தது. நம்பத்தான் முடியவில்லை.

கல்லூரி காலத்தில் பல ரோமியோக்களை தன் பின்னால் சுற்ற விட்ட மாலா இப்போது அடையாளமே தெரியாமல் பருமனாகி, முடியெல்லாம் கொட்டி, நிறமிழந்து.. ஏதொ மெடிசன் அலர்ஜியால் இப்படி ஆகி விட்டதாம்.

ஆனால் கட்டுப்பெட்டியாக, இறுக பின்னிய தலை, பாவாடை, தாவணி என்று இருந்த பிரேமா பாண்ட், குர்தா, குட்டையாக வெட்டப் பட்ட தலை முடி, பொட்டில்லாத நெற்றி என்று ஆச்சர்யப்படுத்தினாள். பார்க்கும் எல்லோரையும் அணைத்துக் கொண்டாள்.

அடையாளமே தெரியவில்லை. நீயே இவ்ளோ மாடர்ன்னா? உன் குழந்தை..? என்று நான் ஆரம்பிக்க, ரேவதி கண் ஜாடை காட்டினாள். உடனே பேச்சை மாற்றினேன்.

எல்லோருக்கும் ஜூஸ் கொடுக்க உள்ளே சென்றவள் என்னை அழைத்து,”ப்ரேமவுக்கு குழந்தைகள் இல்லை. அடாப்ட் பண்ணிக்கத்தான் இங்கு வந்திருக்கிறாள்" என்றாள்.

"அது சரி ஏன் லக்ஷ்மி வரவில்லை?"

"அது ஒரு பெரிய ட்ராஜிடி.."

"என்னாச்சு?" என்றாள் காயத்ரி செல் போனை துண்டித்தபடி.

"ரெண்டு வருஷம் முன்னால ஒரு ரோடு ஆக்ஸிடெண்டில் அவள் கணவருக்கு அடி பட்டு, படுத்த படுக்கையா இருக்கார், அதனால லக்ஷ்மியால எங்கேயும் நகர முடியல.."

ஹாலில் சட்டென்று ஒரு அமைதி கவிந்தது.

அதை மாற்ற “ஏய்! சுதா நீ நன்னா பாடுவியே.. ஒரு பாட்டு பாடு”
இப்பொல்லாம் பாட்டு கேட்பதோட சரி, என்று கொஞ்சம் அலட்டி விட்டு பாடத்தொடங்கிய சுதா வார்தைகள் மறந்து போய் பாதியில் நிறுத்த, அதைத் தொடர்ந்து வேறு பாடலைப் பாடிய வித்யா அதையே அந்தாக்ஷரியாக மாற்றினாள். எல்லோரும் பாடிக் கொண்டிருக்கும் பொழுது, “நீங்க கண்டினியூ பண்ணுங்க, நான் கிளம்பரேன்..” என்றபடி உமா எழுந்து கொண்டாள்.

“இன்னும் ஹாஃப் அன் அவர்தானே..? எல்லோரும் கிளம்ப வேண்டியதுதான்.”

“இல்ல, என் பையன் ஸ்கூலிலிருந்து வந்துடுவான்”

அரை மணி நேரம் தனியா இருக்க மாட்டானா?

யாரோ கேட்க, அரை நொடி தாமதித்த வித்யா, “அவன் ஸ்பெஷல் சைல்ட், அதனால் தனியா விட முடியாது” என்று கூறி விட்டு எல்லாரையும் மீட் பண்ணியதில் ரொம்ப சந்தோஷம், அடிக்கடி பார்க்கலாம்” என்று கிளம்பியதும், ஒவ்வொருவராக கிளம்பத் தொடங்கினர். 

கூட்டத்தில் அதிகம் பேசாமல் உட்கார்ந்திருந்த நித்யா, “ரொம்ப தாங்க்ஸ் ரேவதி, இந்த ரெண்டு மணி நேரம் நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன். அடுத்த கெட் டு கெதெர் நம்ம வீட்ல வெச்சுக்கலாம்”.

“ஷுயர்”

“ஆறு மாசம் முன்னாடி இருந்ததற்கு இப்போ, பெட்டரா இருக்கா இல்லையா?”

“ம்..ம்.., புத்ர சோகத்திலிருந்து மீள்வது அவ்வளவு ஈசியா?”

வீடு திரும்பும் பொழுது ஸ்வர்னாவின் மனசுக்குள் இந்த சந்திப்பு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. என்ன என்ன துன்பங்களை ஒவ்வொருவரும் சந்திக்கிறார்கள்? குழந்தை பிறக்காத சோகம், பிறந்த குழந்தை நார்மலாக இல்லாத சோகம், அழகான குழந்தை இறக்கும் சோகம்,  வாழ்க்கையை ஒரு விபத்து புரட்டிப் போடும் சோகம். இதையெல்லாம் பார்க்கும் பொழுது நான் எவ்வளவு கொடுத்து வைத்தவள்?

வீட்டிர்க்குள் நுழையும் பொழுது, “நாலு மணிக்கு வரேன்னு சொல்லிட்டு போன, இப்போ மணி என்ன? பால் கூட குடிக்காமல் ரோஹித் டென்னிஸுக்கு போய் விட்டான், நான் இன்னும் காபி குடிக்கல..”மாமியார் கடுகடுத்தார்.

“பால், டிகாஷன் எல்லாம் இருக்கே..?”

காபி கலந்து குடிங்கோனு சொல்லிட்டு போனாயா? நீ வந்து கலந்து தருவாய்னு இருக்கேன்..உனக்கு அங்க கிடைச்சிருக்கும்.” நிஷ்டூரமாக பேசிய மாமியார் காபி குடித்தவுடன், "ராத்திரி நீங்கள் வெளியே போய் விடுவீர்கள், எனக்கு என்ன?" என்றார்.

“தோசை மாவு இருக்கு”

“வேண்டாம், நேத்திக்கும், தோசை, இன்னிக்கும் தோசையா? சாதம் வைத்து விடு, மோருஞ்சாதம் சாப்பிட்டுக் கொள்கிறேன்”

கொஞ்சம் தேங்காய் தொகையலும் அரைத்து வைத்து விடலாம் என்று ஸ்வர்னா நினைத்துக் கொண்டாள். இந்த தெளிவு சிறிது நாட்கள் இருக்கும்.

31 comments:

  1. இந்தத் தெளிவு இன்னும் அதிக நாட்களுக்கு இருக்கட்டுமாக!...

    ReplyDelete
  2. நான் இன்னும் காபி குடிக்கல.. - மாமியார் கடுகடுத்தார்.

    பால், டிகாஷன் எல்லாம் இருக்கே..?

    காபி கலந்து குடிங்கோ..ன்னு சொல்லிட்டு போனாயா?...

    அதானே...

    காபி கலந்து குடிங்கோ..ன்னு சொல்லிட்டு போகனுமா இல்லையா!..

    ஒரு பெண்ணை இன்னொரு பெண்ணே கடுப்பேத்தலை...ன்னா
    எப்படி!?...

    ReplyDelete
    Replies
    1. //ஒரு பெண்ணை இன்னொரு பெண்ணே கடுப்பேத்தலை...ன்னா
      எப்படி!?...//
      இன்னும் கூட இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன துரை சார். வருகைக்கும், வாசிப்புக்கும், கருத்துக்கும் நன்றி.

      Delete
  3. //இந்த தெளிவு சிறிது நாட்கள் இருக்கும்.//

    இந்த முத்தாய்ப்புதான் நிதர்சனம். மனசை கலைக்க அவவ்ப்போது ஏதாவது வந்து கொண்டே இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம். முதலில் வேறு மாதிரி முடித்திருந்தேன், அது செயற்கையாக தோன்றியதால் மாற்றினேன்.

      Delete
  4. இருகோடுகள் தத்துவம் நல்லவற்றுக்கும் உதவுகிறது!

    ReplyDelete
    Replies
    1. // இருகோடுகள் தத்துவம் நல்லவற்றுக்கும் உதவுகிறது!//
      அதென்ன நல்லவற்றுக்கும் உதவுகிறது? நல்லவற்றுக்குத்தான் பெரும்பான்மையாக உதவும்.

      Delete
    2. ஸ்ரீராம் இரு கோடுகள் தத்துவம் தான் நான் அடிக்கடி சொல்லுவது அது போல உனக்கும் கீழேஉள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு...

      நமக்கே ஒரு பிரச்சனை வரும் போது அதை நினைத்துக் கொண்டிருக்கும் போதே அடுத்த பிரச்சனை வந்தால் முதல் பிரச்சனையை விட இரண்டாவது பெரிதாக இருந்தால் இரு கோடுகள் தத்துவமே தான்...வீட்டிலிருந்து நாடு வரை...ஹா ஹா ஹா

      கீதா

      Delete
  5. அருமையாக கொண்டு செல்லப்பட்ட கதை .இதுதான் நிதர்சனம் .எல்லாருமே வீட்டுக்குள் உட்கார்ந்து தங்கள் கவலைகள் தங்கள் பிரச்சினைகள்தான் உலகிலேயே பெரிதுனு நினைக்கிறாங்க ஒரு கதவைத்திறந்து ஸ்டெப் முன்னே வச்சிப்பார்த்தாதான் தெரியும்..
    எல்லாவற்றிலும் குற்றம் பார்த்தால் குற்றம் மட்டுமே பிரதானமா தெரியும் ..

    ReplyDelete
  6. மிக அருமையான கதை...

    அடுத்தவர் கஷ்டங்களை காணும் போது அட நம்ம இது எவ்வளோ பராவில்லை இன்னு தோணினாலும்...

    அது கொஞ்ச நாள் தான்..திரும்ப பழையபடி யோசிக்கும்


    நிதர்சன வாழ்வில் காணும் எண்ணங்களை கதை யாக..

    ReplyDelete
  7. வாழ்கையின் யதார்த்தத்தை பிரதிபலிக்கும் அருமையான கதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மகேஷ். முதல் முறையாக என் தளத்திற்கு வருகை தந்திருக்கிறீர்கள்(மேகங்கள் விலகும் 1 & 2) மீண்டும் வருக.

      Delete
  8. என்ன தான் தவறாய் எடுத்துக் கூடாது என நினைத்தாலும் மாமியார் மருமகள் வரும்வரை காஃபி குடிக்காமல் இருந்திருக்க வேண்டாம். மாமியாருக்கு ஏன் திடீர்னு இந்த நிஷ்டூரம்? மருமகள் தாமதமாக வந்ததாலோ? அவங்க தானே சமாதானப்படுத்தி சிநேகிதிகளைச் சந்திக்க அனுஅது? ஆனால் ஸ்வர்ணாவுக்கு இருந்த மகிழ்ச்சியான மனோநிலையில் இதை எல்லாம் பொருட்படுத்தவில்லை.

    ReplyDelete
  9. //என்ன தான் தவறாய் எடுத்துக் கூடாது என நினைத்தாலும் மாமியார் மருமகள் வரும்வரை காஃபி குடிக்காமல் இருந்திருக்க வேண்டாம்.//
    இப்படிப்பட்ட மாமியார்கள் இப்போதும் இருக்கிறார்கள். தனக்கு காபி கொடுக்க வேண்டியது மருமகளின் வேலை, அதை ஏன் தான் செய்து கொள்ள வேண்டும்? அவளை கெட் டு கெதற்கு அனுப்பியதே தான் அவளுக்கு செய்யும் உதவி என்ற எண்ணம்.

    ReplyDelete
    Replies
    1. // மாமியாருக்கு ஏன் திடீர்னு இந்த நிஷ்டூரம்? மருமகள் தாமதமாக வந்ததாலோ?//
      ஆமாம், சிலர் அவர்களுடைய வேலை தடையில்லாமல் நடக்கும் வரை பேசாமல் இருப்பார்கள், அதில் சிறு சுணக்கம் வந்தாலும் கோபம் வந்துவிடும்.

      Delete
  10. 'மேகங்கள் விலகும்' கதையின் முதல் பகுதிக்கும் வந்து, படித்து, உற்சாகப்படுத்திய எல்லோருக்கும் நன்றி

    ReplyDelete
  11. //இதையெல்லாம் பார்க்கும் பொழுது நான் எவ்வளவு கொடுத்து வைத்தவள்?///

    சே..சே.. ஒரு புரட்சிப் பெண்ணா மாறுவா எனப் பார்த்தால் இப்பூடி புஸ்ஸ்ஸ் என அடங்கிட்டா... திடீர் ஞானம் பிறந்து கர்ர்:)) ஸ்வர்ணா என்னை ஏமாத்திட்டா:)) ஹா ஹா ஹா ... ஊர் உலகக் கதைகளை எல்லாம் சொல்லி கணவனை மாறப்பண்ணியிருக்கோணும் ஹையோ ஹையோ:)) சரி விடுங்கோ இம்முறை முடிவு என் முடிவிலிருந்து தப்பிபோச்ச்ச்ச்:)).. இது ஒண்ணும் புதிசிலே நேக்கு:)).. மீ அப்போ போட்டு வரட்டே?:)

    ReplyDelete
    Replies
    1. வாங்க அதிரா. நான் நினைத்த முடிவை நான் எழுதி விட்டேன், நீங்கள் நினைக்கும் முடிவை எழுதி அனுப்புங்கள். போடலாம்.

      Delete
    2. பூஸாரே அக்கா வைத்திருக்கும் முடிவு யதார்த்தம். நீங்கள் சொல்லுவது ட்ரமாட்டிக் முடிவு என்று எனக்குத் தோன்றுகிறது. அப்படி எல்லாம் சட்டென்று புரட்சிப் பெண்ணாவது எல்லாம் சினிமாவில் தான் "ஒரு தென்றல் புயலாகியதே " அப்படினு ஒரு பாட்டு கூட உண்டுல்ல? இப்படியான ப்ராப்ளம் பல பெண்களுக்கும் உண்டுதான். இதைவிடப் பெரிய ப்ராப்ளம் எல்லாம் எத்தனையோ பெண்களுக்கு ஏற்படுகிறதே! அப்ப கூடப் புயலாக மாறாத பெண்கள் உண்டே அதிரா!!!

      கீதா

      Delete
  12. இரண்டாம் பகுதியும் படித்து முடித்தேன். பல இடங்களில் இந்தப் பிரச்சனைகள்.

    கடைசியில் முடித்த விதம் - இந்த தெளிவு இன்னும் சில நாட்கள் இருக்கும் - நன்று. அவ்வப்போது இந்த மாதிரி ப்ரேக் அனைவருக்குமே தேவை.

    ReplyDelete
  13. கதை உண்மையை சொல்கிறது. இதுதான் வாழ்க்கை.
    மற்ற்வர்களை விட நம் கஷ்டம் பெரிது இல்லை என்ற நினைப்பு வரும் போது கொஞ்சம் தெளிவு. மனம் மீண்டும் ஏதாவது நினைத்து ஏங்கும்.மேகங்கள் கலைந்து , மூடி விளையாடும்தானெ!
    தலைப்பு அருமை.

    ReplyDelete
  14. மேகங்கள் விலகும் சரிதான் ஆனால் திரும்பக் கூடுமே!! ஹா ஹா ஹா அதான் பாஸிங்க் க்ளவுட்ஸ். அப்பப்ப வரும் கூடும் கலைந்து போகும்...இதுதான் நிதர்சனம். முடிவு நன்றாக இருக்கிறது அக்கா. உண்மைதான் பலருக்கும் எத்தனையோ பிரச்சனைகள் என்றாலும் கடைசியில் கை கொடுப்பது "உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு" வரிகள் தான்.

    யெஸ் அக்கா நம்மை விட இன்னும் கஷ்டத்தில் இருப்பவர்களை நினைத்து நாம் நம்மைத் தேற்றிக் கொண்டு அப்படியே அடுத்த தொய்வு வரும் வரை போய்விட வேண்டியது இதுதான் யதார்த்தம். நல்லாருந்துச்சுக்கா...ரொம்ப அழகான கதை.

    ரசித்தேன் அக்கா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மேகங்கள் கூடும், கலையும், சில சமயங்களில் டிப்ரெஷன் ஆகி புயலாக மாறும், இதுதானே வாழ்க்கை! வருகைக்கும்,மீள் வருகைக்கும் நன்றி கீதா.

      Delete
  15. மிகச் சரியையே ...நிஜமாகவே பலரின் வாழ்க்கையையும் படும் அவதிகளையும் பார்த்தால்தான் நம் நிலை பற்றிய ஒரு தெளிவு பிறக்கிறது

    ReplyDelete
  16. வணக்கம் சகோதரி

    நல்ல கதை. இரண்டு பகுதிகளையும் வசித்து விட்டேன். நம்மை விட பிறரின் நிலைகள் சற்று வேதனை தருவதாக இருக்கும் சமயம் நம் மளவேதனைகள் கொஞ்சம் மறைந்தாள் போலத்தான் தோன்றும். ஆனால் எத்தனைக் காலத்திற்கு?

    இந்த /தெளிவு சிறிது நாட்கள் இருக்கும்./

    கடைசி வரிகளில் மனித சுபாவங்களை அருமையாக விளக்கி விட்டீர்கள். கதை அருமை.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  17. வாசித்து விட்டேன்.. கொஞ்சம் மறைந்தது எனப் படிக்கவும். தவறாக எழுத்துப் பிழைகள் தோன்றி விட்டன. மன்னிக்கவும். நன்றி.

    ReplyDelete
  18. உள்ளத்தைத் தொடும் சிறந்த பதிவு

    ReplyDelete