கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, April 27, 2022

நடிகர்களும், அரசியலும்

 நடிகர்களும், அரசியலும்


தமிழ்நாட்டில் சினிமா நடிகர்கள் அரசியலில் பிரவேசிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் திராவிட கட்சிகள் நாடகம், சினிமா இவற்றை அரசியலுக்கு பயன்படுத்தியதாக இருக்கலாம். குறிப்பாக எம்.ஜி.ஆருக்கு கிடைத்த வரவேற்பு பலருக்கும் அந்த ஆசையைத் தூண்டியது. ஆனால் என்னதான், "ராமசந்திரன் கட்சிக்கு ஒரு விலாசம்" என்று அண்ணாவால் புகழப்பட்டாலும், அவருடைய முக விலாசத்தை பயன்படுத்திக் கொண்ட அந்த கட்சி அவருக்கு கட்சியில் பெரிய இடத்தை கொடுத்து விடவில்லை. அவரை கட்சியிலிருந்து வெளியேற்றும் தவறான செயலை தி.மு.க. செய்ததுதான் எம்.ஜி.ஆரை புது கட்சியை ஆரம்பிக்க வைத்தது. "ஜாடிக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பூதத்தை கருணாநிதி திறந்து விட்டு விட்டார்" என்று சோ அதை வர்ணித்தார். 

எம்.ஜி.ஆர் அடைந்த வெற்றியைப் பார்த்து கட்சி தொடங்கிய சிவாஜி நஷ்டப்பட்டதுதான் மிச்சம்.  ஏன் அதற்குப் பிறகு கட்சி ஆரம்பித்த விஜயகாந்த், சரத்குமார் போன்ற யாருமே அந்த அளவு வர முடியவில்லை. கட்சி ஆரம்பித்த கார்த்திக் காமெடி பீஸாகி விட்டார். 

எதிர் கட்சி தலைவராகும் அளவிற்கு உயர்ந்த விஜயகாந்த் ஏனோ சோபிக்கவில்லை. உடல் நலமும் ஒத்துழைக்கவில்லை.  கமல்ஹாசன் மையமாக ஏதோ செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். 

எம்.ஜி.ஆரால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர் ஜெயலலிதா. சினிமா கவர்ச்சி அவருக்கு 1% கூட உதவவில்லை. எதிர்வினைதான் ஆற்றியது.   அவரும் ஒரு முழுமையான அரசியல்வாதியாகத் தான் இருந்தார்.  அரசியலுக்கு வந்த வைஜயந்தி மாலா, ஜமுனா, ஹேமமாலினி,  ஜெயபாதுரி, ஜெய் ப்ரதா போன்றவர்களை விட அவர் சிறப்பாகவே செயல்பட்டார். 

எம்.ஜி.ஆருக்குப் பிறகு மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தைப் பெற்றவர் ரஜினி காந்த்.  அவருக்கும் அரசியலில் ஆர்வம் இல்லை, அவர் ரசிகர்களும் அதை எதிர்பார்க்கவில்லை. அவருடைய மாஸ் அப்பீலையும், கரீஷ்மாவையும் பயன் படுத்திக்கொள்ள அரசியல்வாதிகள் குறிப்பாக பி.ஜே.பி.யினர் விரும்பினர். 
அதற்காக அவரை அரசியலுக்கு இழுக்க வாஜ்பேயி முதல் மோடி வரை பல முயற்சிகள் எடுத்தனர். சோ, குருமூர்த்தி போன்ற அறிவுஜீவிகளும் தயானந்த சரஸ்வதி போன்ற ஆன்மீக பெரியவர்களும் கூட அதற்கு முயன்றனர். (1996 தேர்தலில் சுவாமி தயானந்த சரஸ்வதி கேட்டுக் கொண்டதன் பேரிலேயே ரஜினிகாந்த்,"இந்த தேர்தலில் அ.தி.மு.க.விற்கு ஓட்டளித்தால் பிறகு தமிழ்நாட்டை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது" என்று செய்த பிரசாரம் அ.தி.மு.க.வின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.) ரஜினியால் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவர முடியும் என்று இவர்கள் எல்லோரும் அவர் ரசிகர்கள் களை விட அதிகமாக நம்பினர். 

ரஜினியை அரசியலுக்கு இழுக்க பத்மவிபூஷன், பத்மவிபூஷன் போன்ற  மதிப்பு மிக்க விருதுகள் வழங்கப் பட்டன.  ஏன்? தான் சார்ந்திருக்கும் சினிமா உலகின் முன்னேற்றத்திற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத அவருக்கு தாதா சாகிப் பால்கே விருது கூட வழங்கப்பட்டது.  நடிகர்களின் சம்பளத்தை லட்சங்களிலிருந்து கோடிக்கு உயர்த்தியதுதான் திரையுலகில் இவர் சாதனை.  ஆனாலும் ரஜினி மதில் மேல் பூனையாகவே இருந்தார். சீர்கெட்டு வரும் அவருடைய உடல் நலம் அரசியலுக்கு வர வேண்டாம் என்று அவரை முடிவெடுக்க வைத்திருக்கிறது. ரஜினி ஒதுக்கிய பிறகு அஜீத்துக்கு வலை வீசத் தொடங்கி யிருக்கிறார்கள். இதையெல்லாம் செய்வது அயசியல்வாதிகள் தானேயொழிய ரசிகர்கள் அல்ல.

மற்றபடி உதயநிதி அரசியலில் ஈடுபடுவது வாரிசு அரசியல். வசதி இருப்பதால் சினிமா எடுத்து அதில் நடிக்கவும் செய்கிறார். மற்றபடி
உதயநிதியையெல்லாம் நடிகர் என்று சினிமா பார்க்காதவர்கள் வேண்டுமானால் கருதலாம். அவரை விட அவர் கஸின் அருள்நிதி பெட்டர் ஆக்டர். அவர் ஆசைக்கு அவர் நடிக்கிறார் அவர் அபாபா வின் பேராசை அவரை அரசியலுக்கு உந்தி தள்ளியிருக்கிறது. இதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்ல வேண்டும். 



21 comments:

  1. இங்கு எம் ஜி ஆரும், ஆந்திராவில் என் டி ஆரும் விதிவிலக்குகள், ஆளுமைகள்.  கமலஹாசன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறாரா?  எங்கே? 

    விஜயகாந்த் நன்றாய் வந்திருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. என்டிஆர் தெலுகு மக்களின் உணர்வைப் பயன்படுத்திக்கொண்டார், ஆனால் புகழ் அவரைவிட்டு விலகிவிட்டது. எம்ஜிஆர் கடைசிவரை புகழோடு இருந்தார். விஜயகாந்த் வல்லவர் நல்லவர், இரண்டாவது தேர்தலில் தவறான முடிவெடுத்து பேராசையால் தன் முன்னேற்றத்தைக் காவுகொடுத்துவிட்டார்.

      Delete
  2. இப்போதுதானே பி ஜெ பி, தி மு க எல்லாம்/  ஏன், தி மு க முயற்சிக்கவில்லையா? ரஜினியை பி ஜெ பி யை விட முதலில் அரசியலில் தனித்து அழைத்து வர நினைத்தவர் சோ.  அதுவும் கருப்பையா மூப்பனாரோடு சேர்ந்து த மா கா வோடு என்று நினைக்கிறேன்.  அப்போது ரஜினி பிரவேசம் நிகழ்ந்திருந்தால் வெற்றி அடைந்திருப்பார்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் அப்போ அவர் வந்திருப்பார். ஆனால் அவரால் வெற்றிகரமாக இருந்திருக்க முடியாது. அதற்கான திறமை அவரிடம் இல்லாத்தால் காலம் அதற்கான வாய்ப்பை வழங்கவில்லை என நினைக்கிறேன்.

      Delete
    2. இவருக்கு தொடர்ந்து நிலைத்து நிற்க திறமை இருக்காது என்று காலம் அந்த வாய்ப்பை அவருக்கு வழங்கவில்லை என்கிறீர்களா?  அவர் அல்லது நம் விதி.

      Delete
    3. Whoever is fit will only get that chance, unless someone has விபரீத ராஜ யோகம்

      Delete
  3. சினிமா உலகின் முன்னேற்றத்துக்கு துரும்பு கிளிப் போட்டால்தான் தாதா சாஹேபா?  அவரால் திரையுலகம் வணிக ரீதியில் நிமிர்ந்தால் கிடையாதா?  அந்த வகையில் அவர் திரையுலகின் மாபெரும் போஷகர்.

    ReplyDelete
    Replies
    1. இந்தமாதிரி விருதுக்கெல்லாம் தகுதியான சிவாஜிக்கே அரசியல் காரணங்களுக்காக பலதும் மறுக்கப்பட்டதே

      Delete
    2. ஆம். அது வடநாட்டு, தென்னாட்டு சினிமா அரசியல்.

      Delete
  4. //இதையெல்லாம் செய்வது அயசியல்வாதிகள் தானேயொழிய ரசிகர்கள் அல்ல.//

    இதுவும் சரியான கருத்து அல்ல என்றே நினைக்கிறேன்.  ரசிகர் மன்ற செயலாளர்களுக்கெல்லாம் முதலமைச்சர், அமைச்சர் கனவுகள் இருக்கின்றன.

    ReplyDelete
  5. மையத்தை விட அதிக ஒப்பனை செய்தது + செய்து கொண்டிருப்பது யார்...?

    ReplyDelete
  6. ரானா காந்துகிட்டே விசியம் ஒன்னுங் கிடியாது.. சும்மா பாவ்லா தான்!..

    ReplyDelete
  7. அர்சீலுக்கு ரஸ்னி வராததே அவ்ரு செஞ்ச நல்ல கார்யம் நா பாத்துகயேன்!.. பட்டாஸ் சவுண்டு உட்ட மாதிரி தான்

    ReplyDelete
  8. அன்பின் நெல்லை..

    // இந்தமாதிரி விருதுக்கெல்லாம் தகுதியான சிவாஜிக்கே அரசியல் காரணங்களுக்காக பலதும் மறுக்கப்பட்டதே.. //

    உண்மை.. உண்மை..

    ReplyDelete
  9. எம்ஜி ஆருக்குப் பிறகு அரசியலில் இறங்கிய இறங்க நினைத்து செயல்களில் ஈடுபட்ட எந்த நடிகரும் பரிமளிக்கவில்லை என்பதே நிதர்சனம். விஜயகாந்த் வெளிப்படையாகப் பேசியவர். நல்லது செய்வார் என்றும் தோன்றியது. வந்திருந்தால் கொஞ்சம் மாற்றம் வந்திருக்குமோ என்னவோ ஆனால் அவராலும் முடியாமல் போய்விட்டது.

    துளசிதரன்

    ReplyDelete
  10. அக்கா எனக்கு இந்தத் தலைப்பு பற்றி எதுவும் சொல்லத் தெரியவில்லை. அத்தனை அறிவு கிடையாது! ஆனால் நம்மூரில் அரசியலும் சினிமாவும் இரண்டறக் கலந்த ஒன்று (கல்வித்துறையிலேயே இருக்கிறதே) என்பது மட்டும் தெளிவு.

    கீதா

    ReplyDelete
  11. வந்து கருத்திட்ட எல்லோருக்கும் நன்றி.

    ReplyDelete
  12. Bhanumathy VenkateswaranApril 28, 2022 at 4:33 PM

    ஆஹா! இன்னிக்கு கமெண்ட் போகிறதே..:))

    ReplyDelete
  13. அரசியலும் சினிமாவும் இரண்டற கலந்து விட்டது. சாக்கடைகள் குறித்து பேசாமல் இருப்பது உடலுக்கு நல்லது. :)

    ReplyDelete
  14. இதில் கருத்துச் சொல்லும் அளவுக்கு எதுவும் தெரியாது.

    ReplyDelete
  15. வணக்கம் சகோதரி

    இந்த மாதிரி விஷயங்களில் கருத்தேதும் சொல்ல எனக்கும் தெரியவில்லை. பதிவையும், வந்த கருத்துகளையும் ரசித்து மட்டும் படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete