கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, May 5, 2022

எங்களையும் பீடித்த...

 எங்களையும் பீடித்த...

பள்ளியிலிருந்து வந்து என் பேத்தி 'நோஸ் ப்ளாக்' என்றாள். கொஞ்சம் இருமலும் இருந்தது. அவளும் நானும் ஒரே படுக்கையில் படுத்துக் கொள்வோம். எனக்கும் தொண்டையில் இரிடேஷன். உடனே உப்பு நீரில் கொப்பளித்தேன். மறுநாள் ஒன்றும் இல்லை, அதற்கடுத்த நாள் மீண்டும் தொண்டையில் இரிடேஷன். கடுமையான கை, கால் வலி சரியாக தூங்க விடாமல் செய்தது.

என் மாப்பிள்ளை வியாழன், மற்றும் ஞாயிறு ஸ்கார்பரோ ஸாயி சென்டருக்குச் செல்வார். அங்கு சிலர் இப்போதுதான் பாதிப்பிலிருந்து மீண்டிருந்தார்களாம். ஏப்ரல் 24 சாயி பாபாவின் ஆராதனை தினம். அதற்கு எல்லோருமே சென்றோம்.

மறுநாள் மாப்பிள்ளைக்கு தொண்டை கரகரப்போடு உடல் வலியும் சேர்ந்து கொண்டது. இந்த பாதிப்புகள் அடுத்த நாளும் நீடிக்க, கோவிட் டெஸ்ட் எடுத்து விடலாம் என்று டெஸ்ட் எடுத்ததில் அவருக்கு பாஸிடிவ் என்று வந்தது. 

உடனே என் மகள், நான் இருவரும் டெஸ்ட் எடுத்துக் கொண்டோம். மகள் பாஸிடிவ், எனக்கு நெகடிவ். ஆனால் மதியத்திற்கு மேல் எனக்கு நல்ல குளிர், கடுமையான தலைவலி எல்லாம் வந்து விட்டன. 

டைலனால் மாத்திரை, ஆவி பிடிப்பது, உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது என்று எல்லாவற்றையும் கடை பிடித்தோம். குழந்தையை பள்ளிக்கு அனுப்பவில்லை.

இரண்டு நாட்களுக்குப் பிறகும் எனக்கு மூக்கடைப்பு சரியாகவில்லை. வாசனை தெரியவில்லை. இதற்கிடையில் சின்ன குழந்தைக்கும் மூக்கு ஒழுகுவது, இருமல் போன்றவை வந்தன. வெள்ளியன்று காலை குழந்தை பால் குடிக்க கஷ்டப்படுவதை பார்த்த என் மகள்  மருத்துவரை டெலிபோனில் தொடர்பு கொண்டு, அவருடைய ஆலோசனையின் பேரில் அருகிலிருக்கும் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றாள்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் செஸ்ட் கிளியராக இருப்பதாகவும், குழந்தையின் சுவாசக் குழாய் 'குரூப்' என்னும் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதால் லேசாக வீங்கியிருப்பதாகவும் அதற்கு ட்ரீட்மெண்ட் இல்லை,  தானே சரியாகி விடும், நிறைய நீராகாரம் கொடுங்கள், என்று கூறிவிட்டு எதற்கும் ஸ்டீராய்டு கொடுக்கிறோம், இரண்டு மணி நேரம் அப்சர்வேஷனில் இருக்கட்டும், பிறகு பார்த்து விட்டு சொல்கிறேன் என்றாராம். இவை போதாதா? நம்மை கவலைப்    படுத்த? 

உடனே கூகுளாரை சரணடைந்தால் அவர் epiglottitis என்ற தலைப்பில் கிலியூட்டினார். மகளை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவள் ஃபோனில் சார்ஜ் குறைவாக இருந்ததால் டேட்டாவை துண்டித்திருக்கிறாள். மூன்று மணிக்கு அவள் வீடு திரும்பிய போது குழந்தை சாதாரணமாக விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தைக்கு சளி, இருமல் இருக்கிறதே என்று தயிரை கூட சூடு பண்ணி கொடுத்துக் கொண்டிருந்தோம். மருத்துவமனையில் தொண்டைக்கு இதமாக இருக்கும் என்று பாப்ஸிகல் எனப்படும் குச்சி ஐஸ் கொடுத்திருக்கிறார்கள்!!!

நாங்களும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறோம். அசதி அதிகமாக இருக்கிறது. எனக்கு இன்னமும் வாசனைத் தெரியவில்லை. 

சூரியனையும், சந்திரனையும் பிடிக்க வேண்டும் என்று துரத்திக் கொண்டு வரும் ராகுவிடமிருந்து தப்பித்து ஓடிக்கொண்டே இருக்கும் ரவியும், சோமனும் எப்போதோ ஒரு முறை அதனிடம் மாட்டிக்கொண்டு விடுவார்கள். சற்று நேரம் ராகுவின் ஆதிக்கத்திற்குள்  இருந்து பின்னர் வெளிப்படுவார்கள் என்று கிரகணத்தைப் பற்றி வேடிக்கையாக சொல்வார்கள். அப்படியே இந்த கொரோனா அனைவரையும் பீடிக்காமல் விடாது போலிருக்கிறது. 

அச்சுதானந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத் நஸ்யந்தி சகலா ரோகா சத்யம் சத்யம் வதாம்யஹம்
 

11 comments:

 1. கவனமாக இருங்கள்.  ஓய்வாக இருங்கள்.  தடுப்பூசி போட்டுக் கொண்டதால் அதிக பாதிப்பு இருக்காது என்று நம்புகிறேன்.  எனினும் இந்த உபாதைகளை தாங்குவது சற்றே கடினம்தான்.

  ReplyDelete
 2. அக்கா இது யாரையும் விட்டு வைக்காது. ஏதேனும் ஒரு ஸ்டேஜில் அதாவது உருமாறிக் கொண்டே ஒவ்வொரு அலையாக வருகிறதே அப்படி ஏதேனும் ஒரு அலையில் வந்து தொட்டுவிட்டுச் செல்கிறது.

  நீங்கள் 3 தடுப்பூசிகளும் போட்டுக் கொண்டதால் பிரச்சனை இருக்காது பானுக்கா. அதாவது பின் விளைவுகள் என்று நம்புவோம். நன்றாக ரெஸ்ட் எடுத்துக்கோங்க. இப்போது எல்லாரும் சரியாகி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்

  கீதா

  ReplyDelete
 3. விரைவில் நலம்பெற வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்
  தடுப்பூசி அனைவரும் போட்டு விட்டதால் விரைவில் குணமாகி விடும்.ஓய்வு எடுங்கள். குழந்தை இப்போது நலமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

  ReplyDelete
 4. விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.
  கவனமாக இருங்கள்.

  ReplyDelete
 5. விடாது கருப்பு என்று பெயர் வைத்துவிடலாம்.

  கீதா

  ReplyDelete
 6. வணக்கம் சகோதரி

  பதிவை படிக்கையில் வேதனையாக இருந்தது. கவனமாக இருங்கள். இப்போது உங்கள் அனைவருக்கும் குணமாகி வருவது மனதுக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது. நீங்கள் அனைவரும் பூரண நலத்துடன் ஆரோக்கியமாக இருக்க இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

  அன்புடன்
  கமலா ஹரிஹரன்

  ReplyDelete
 7. கவனமாக இருங்கள். விரைவில் நலம் பெற எனது பிரார்த்தனைகள். நல்லதே நடக்கட்டும்.

  ReplyDelete
 8. விரைவில் அனைவரும் நலமடைவீர்கள்

  ReplyDelete
 9. அன்பின் பானுமதி,
  எங்கள் வீட்டிலும் வந்து போயிருக்கிறது. எனக்கு
  நாக்கில் சுவை தெரியவில்லை.
  ஆனால் தொற்றுக்குப் பெயர் வைக்கவில்லை.

  நீங்களும் குழந்தைகளும் பூரண நலம் பெற வேண்டும்.
  நாராயண நாமம் வெல்லட்டும்.

  ReplyDelete
 10. அமெரிக்காவில் பள்ளிக் குழந்தைகள் மூலம்தான் மூன்றாவது நான்காவ்து அலைகள் பரவுவதால்- அதுவும் அவர்களுக்கு எந்த அடையாளமும் இல்லாமல்- எனது பயணத்தை மூன்று மாதங்கள் தள்ளிவைத்தேன். இப்போதும் அங்குமிங்கும் குறையாமல் வந்துகொண்டுதான் இருக்கிறது. நாங்கள் 1+1+1 ஆக மூன்று டோஸ்கள் போட்டுக்கொண்டாயிற்று. நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள். என்ன சொன்னாலும் சரி, மருந்துக் கம்பெனிகள் ஏற்கெனவே உற்பத்தி செய்துவைத்திருக்கும் எல்லா மருந்தும் விற்கப்பட்டலொழிய இந்தப் பெருந்தோற்று வந்துபோய்க் கொண்டேதான் இருக்கும் என்பத்தான் உலக மக்களின் கருத்தாக இருக்கிறது.

  ReplyDelete
 11. விஷயம் தெரியாது. நேற்று ஶ்ரீராம் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். கவனமாக இருக்கவும். விரைவில் அனைவரும் பூரண குணம் அடையப் பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete