கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, May 14, 2022

திரைப்படங்கள் சொல்லும் செய்திகள்.

திரைப்படங்கள் சொல்லும் செய்திகள்.

திரைப்படம் என்பது சக்தி வாய்ந்த ஒரு ஊடகம். நம் நாட்டைப் பொறுத்தவரை அரசியல், சமூக மாற்றங்களுக்கே திரைப்படங்கள் காரணமாக இருந்திருக்கின்றன. என்னதான். தொழில் நுட்ப வளர்ச்சி சினிமாவின் நடப்பவை நிஜமல்ல என்னும் தெளிவை ஓரளவுக்கு மக்களுக்கு அளித்தாலும் இன்றும் தங்களுடைய அபிமான கதாநாயகன் நடித்த படத்தை முதல் காட்சி பார்க்க வேண்டும் என்பதற்காக 1500 ரூபாய் வரை செலவழிக்க தயாராக இருக்கும் ஒரு கூட்டம் இருந்து கொண்டு தான் இருக்கிறது அப்படி இருக்கும் பொழுது சினிமாக்கள் சொல்லும் செய்திகளில் கவனமாக இருக்க வேண்டாமா?

இங்கும் அங்குமாக நடக்கும் விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டும் பொழுது பலருக்கு அந்த கதாநாயகன் செய்யும் செயலை தானும செய்யலாம் தவறில்லை என்னும் எண்ணம் வந்துவிடாதா?

இப்போது வரும் திரைப்படங்கள்,  அவை சொல்லும் செய்திகள் மிகவும் அச்சமூட்டுகின்றன. நற்பண்புகளக்கு
 உறைவிடமானவன்தான் கதா நாயகன் என்னும் நிலை மாறி எல்லா துர்குணங்களும் கொண்டவன்தான் கதாநாயகன் என்னும் நிலைக்கு வந்து விட்டது. 

குறிப்பாக வெங்கட் பிரபு படங்களில் கதாநாயகனும், அவன் தோழர்களும் மது அருந்தாத காட்சி கிடையாது. 

சமீபத்தில் வெளியாகியிருக்கும் அவருடைய 'மன்மத லீலை' படத்தில் கதாநாயகன் பாத்திரப் படைப்பு மிகவும் வருத்தம் கொள்ள வைத்தது. 

திருமணத்திற்கு முன்பே ஆர்குட் மூலம் நட்பு கொள்ளும் ஒரு பெண்ணின் அழைப்பின் பேரில் அவளைக் காணச் செல்லும் அஷோக் செல்வன் கை நிறைய பியர் பாட்டில்களை எடுத்துச் செல்கிறார். இருவரும் எல்லை மீறும் தருணத்தில் அந்தப் பெண்ணின் தந்தை (ஜெய பிரகாஷ்) வந்து விடுகிறார். அவர் அவளுடைய தந்தை இல்லை, கணவர் என்பது தெரிய வருகிறது. அசோக் செல்வனுக்கும் ஜெய பிரகாஷிற்கும் நடக்கும் கை கலப்பில் ஜெ.பி. இறந்து விட, அதை தற்கொலை என்பது போல
 ஜோடித்து, அவர் பணத்தை திருடிக் கொண்டு, தன்னோடு வரும் அந்தப் பெண்ணையும் கொலை செய்து விட்டு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஜாலியாக இருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகாவது திருந்தினாரா? என்றால் இல்லவே இல்லை. அவருடைய மன்மத லீலை தொடர்கிறது. இவருடைய வீக்னெஸை தெரிந்து கொண்ட, அவரால் கொலை செய்யப்பட்ட பெண்ணின் முன்னாள் காதலன் அவரை பழி வாங்குவதற்காக,  ஒரு பெண்ணை அனுப்பி அவரோடு பழக வைத்து, அதை செல் ஃபோனில் படமெடுத்து அவரை பிளாக் மெயில் செய்கிறான். கில்லாடியான அஷோக் செல்வன் அவர்களையும் தன்னுடைய ஃபார்ம் ஹவுஸிற்கு அழைத்துச் சென்று கொலை செய்து, அங்கேயே புதைத்து விட்டு ஜாலியாக இருப்பதை தொடர்கிறார். 

என்னவிதமான பாத்திரப் படைப்பு இது? என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எதற்கும் தண்டனை கிடையாது. தவறு செய்தவன் வாழ்க்கையில் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருப்பான் என்று கூறும் படங்கள் என்னவிதமான செய்தியை கடத்துகின்றன? 

வெங்கட் பிரபு போன்ற திறமையான இளைஞர்கள் இதை யோசிக்க வேண்டும். அவருடைய மங்காத்தாவும் நெகடிவ் மெசேஜைத்தான் தந்தது. நளன் குமாரசாமியின் சூது கவ்வும் படமும் இந்த வகையைச் சேர்ந்தது தான். இந்தப்படங்கள் மிகவும் ஸ்வாரஸ்யமாக எடுக்கப் பட்டிருந்தன என்பதில் சந்தேகம் கிடையாது. மிகவும் ருசியான விஷம் என்பதை உண்ண கொடுக்கலாமா? பொழுது போக்கைத் தாண்டி சமுதாயப் பொறுப்பு கலைஞர்களுக்கு இருக்க வேண்டாமா?

ஆண்கள்தான் கெட்டழிய வேண்டுமா?  பெண்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுவது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது  என்று நினைத்து எடுத்தது போல் 'அச்சம், மடம்,நாணம், பயிர்ப்பு' என்னும் படம். 

மூன்று இளம் பெண்களில் ஒருத்தி அப்பர் மிடில் கிளாஸை சேர்ந்த பிராமணப் பெண்(அக்ஷரா ஹாசன்), வீட்டின் கண்டிப்பு, கட்டுப்பாடுகளால் மன உளைச்சலுக்கு உள்ளாகிறாளாம். பெற்றோர்கள் வீட்டில் இல்லாத ஒரு நாளில் காதலனோடு உறவு கொள்ள தூண்டுகிறாள் தான் ப்ளஸ் டூ படித்த காலத்திலிருந்தே பல நண்பர்களோடு உறவு கொண்டிருப்பதாகக் கூறும் அவள் தோழி. பாதுகாப்பான உறவிற்கு காண்டெமும் வாங்கித் தருகிறாள். 

ஒரு நாள் மீன் சாப்பிட்டு விட்டதால் குற்ற உணர்ச்சியில் தவிக்கும் அவளை,"எனக்கு பிடிக்காது நான் சாப்பிடவில்லை. உனக்கு பிடித்திருந்தால் நீ தாராளமாக சாப்பிடு" என்று கூறி தேற்றும் பாட்டி இன்னொரு நாள் மீன் பரிமாறுகிறார். ஒரு தளை உடைகிறது. 

ஆனால் முதல் முறையாக அசைவம் சாப்பிட்ட பொழுது வந்த குற்ற உணர்ச்சி கூட திருமணத்திற்கு முன்பே காதலனோடு உறவு கொள்ளும் பொழுது அவளுக்கு வரவில்லை. தளைகள் உடைந்த சந்தோஷத்தில் திளைக்கிறாள். என்னவொரு முற்போக்கு! 

"டோண்ட் ஜட்ஜ் மீ...  ஃபிஷ்ஷையும், சிக்கனையும் வெஜிடேரியின் லிஸ்டில் சேர்க்க மனு போடப் போகிறேன்.." என்று அவள் பாடி ஆடுவதோடு படம் முடிகிறது. இதுதான் பெண்ணியம் என்று வலியுறுத்துவதைப் போன்ற கருத்து. 

டீன் ஏஜ் என்பதே உணர்வுகள் அறிவை மழுங்கச் செய்யும் பருவம் அந்த நேரத்தில் இப்படிப்பட்ட படங்கள் எப்படிப் பட்ட மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை படைப்பாளிகள் உணர வேண்டும்

11 comments:

 1. ஆபாசப் படங்களை எடுப்பதே சிம்பு, வெங்கட்பிரபு ஆகியோரின் திறமை. அதனால் மற்றவர்கள் நல்ல படம் எடுப்பதாக அர்த்தமில்லை. எல்லாவற்றிற்கும் காரணம் அமெரிக்கப் படங்களும் அமெரிக்க நாவல்களும்தான். இவற்றின் போட்டி காரணமாக, இதே ஆபாசக் கருத்துக்களை உள்ளடக்கிய படங்கள் உலக மொழிகளில் வருகின்றன. உலகமயமாக்கப்பட்ட இன்றைய பொருளாதாரத்தில் இம்மாதிரி படங்களைத் தடுக்க வழியில்லை. குறிப்பிட்ட வயதுக்குக் கீழ்பட்டவர்கள் பார்க்காதபடி சென்சார் சர்டிபிகேட் 'ஏ' வழங்கலாம். அவ்வளவே.

  ReplyDelete
 2. பணம் எதையும் செய்யும்... ஆனாலும் இன்றைய இளம் தலைமுறை தெளிவாக இருக்கிறார்கள்...

  ReplyDelete
 3. தனபாலன் இன்றைய தலைமுறைகள் தெளிவாக இருக்கிறார்கள் என்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். இன்றைய தலைமுறைகள் மிகவும் குழப்பவாதிகளாக நீண்ட கால வாழ்வு பற்றி ஒரு தெளிவு இல்லாமல் இருப்பதாகத்தான் நான் கருதுகிறேன் இதுதான் நான் இங்கு பார்க்கும் நிலமை படிக்கிறார்கள் டிகிரி வாங்குகிறார்கள் என்பதால் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது

  ReplyDelete
  Replies
  1. மதுரை, நீங்கள் சொல்லியிருபப்து போல் குழப்பவாத இளசுகள் இருந்தாலும், நல்ல குடும்பங்களில் வரும் இளையவர்கள் நல்ல சிந்தனைகளுடன் இருக்கிறார்கள்தான். மீடியாவில் கெட்டதே முன்னிறுத்தப்படுவதால் நல்லது தெரியாமல் போகிறது.

   அப்துல் கலாம் அவர்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது எல்லாச் செய்தித்தாள்களும் முதல் பக்கம் நல்ல நேர்மறையான செய்திகளை வெளியிட வேண்டும் என்று ...

   கீதா

   Delete
 4. பானும்மா இன்றைய காலங்களில் யாரும் அன்றைய காலம் போல கட்டுப்பாடுகளுடன் வளர்க்கப்படுவதில்லை சுதந்திரம் கொடுத்துதான் வளர்க்கிறார்கள் என்று நான் நினைக்கின்றேன். சில வீடுகளில் கட்டுப்பாடுகளுடன் வளர்க்க முயற்சிக்கிறார்கள் பிள்லைகளும் கட்டுப்பாட்டுடன் இருப்பதாக நடிக்கிறார்கலே ஒழிய அவர்கள் கட்டுப்பாடுகளை உடைத்து ஏறிந்துவிட்டுதான் வாழ்கிறார்கள்

  ReplyDelete
 5. பானுக்கா வெங்கட்பிரபுவை எல்லாம் என்னால் இயக்குநர் என்று ஏனோ ஏற்க முடிவதில்லை. தொழில்நுட்ப சமாச்சாரங்கள், எடுக்கும் விதத்தில் நன்றாக இருக்கலாம் ஆனால் அவரது கதைகள் பிடிப்பதில்லை. அவர் சொல்ல வருவதும் பிடிக்கவில்லை.

  நல்ல கதைகள் எவ்வளவோ இருக்கின்றன திறமையான இயக்குநர்களும் இருக்கிறார்கள்தான் எடுக்கலாம் ஆனால் மக்கள் ரசனை ட்ரென்ட் என்று சொல்லி ஏமாற்றிக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

  கீதா

  ReplyDelete
 6. கருத்துப் போகுமானு தெரியலை. இப்படி எல்லாம் படங்கள் வந்திருப்பதும், நடிகர்கள் இருப்பதும் உங்கள் மூலமாகவே தெரிய வருகிறது. மிகவும் மோசமான கருத்துகள்.
  என்னோட பெயரைக் கொடுத்தாலும் கூகிள் அக்கவுன்ட் என்றாலும் ஏற்றுக்கொள்ளவே இல்லை. அனானியில் தான் ஏற்றுக்கொள்கிறது.

  ReplyDelete
 7. ஒரு வழியாப் போச்சு!

  ReplyDelete
 8. திரைப் படங்களில் இருந்து வெகு தூரம் வந்தாயிற்று.. யார் எப்படி இயக்கினால் என்ன?.. யார் எப்படி நடித்தால் தான் என்ன?..

  ReplyDelete
 9. இந்த மாதிரி சினிமா படங்களை பார்க்காமல் இருப்பதே மேல்! பொதுவாகவே சினிமா பார்ப்பதில்லை - அதிலும் வெங்கட் பிரபு படங்கள் என்றால் பார்க்க நினைப்பது கூட இல்லை.

  ReplyDelete
 10. எதற்கெல்லாமோ பொதுநல மனு போடுபவர்கள், இதுபோன்ற படங்களை தடை செய்ய ஏன் மனு போடுவதில்லை என்று தெரியவில்லை. படங்களில் புரட்சி கருத்து சொல்பவர்கள் எல்லாரும் ஒரு சாராரை / மதத்தவரை மட்டும் தங்கள் பண்பாட்டை மீறுமாறு தூண்டுவது சமூக ஒழுக்கத்தை சீர்குலைக்க செய்யப்படும் சதி அன்றி வேறு எதுவாக எடுத்துக்கொள்வது? தன் பண்பாடுகளை மறந்த சமூகத்தை அழிப்பது அல்லது மூளைச்சலவை செய்வது மிக சுலபம். அது தான் இங்கு திட்டமிடப்பட்டு சத்தமில்லாமல் சினிமா மூலம் செய்யப்படுகிறது.

  ReplyDelete