கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, March 20, 2025

இழந்த பொக்கிஷங்கள்

 இழந்த பொக்கிஷங்கள்


இதைப்பற்றி எழுத எத்தனையோ விஷயங்கள் உண்டு. நான் முக்கியமாக குறிப்பிட விரும்புவது கிணறு,  ஜட்கா வண்டி ,எனப்படும் குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டி பயணங்களை.

அப்போதெல்லாம் தனி வீடுகள். பெரும்பாலும் எல்லா வீடுகளிலும்  கிணறு இருக்கும். அந்த கிணற்றில் நீர் இரைத்துதான் குளிக்க, குடிக்க, சமைக்க என்று எல்லாவற்றிர்க்கும் பயன் படுத்துவோம். கிணற்றுக்கு அருகில் நெல்லி மரம் இருந்தால் அந்த கிணற்று நீர் சுவையாக இருக்கும்.

கிணற்றடியில்தான் வீட்டு வேலை செய்பவர் பாத்திரங்களை துலக்குவார்.  கோடையிலும், வாடையிலும் குளிக்க இதமாக இருக்கும் கிணற்று நீரை இரைத்து குளிப்பது அலாதி சுகம்.

பாரதி ஆசைப்பட்டது போல எங்கள் வீட்டு கிணற்றுக்கு அருகில் தென்னை மரம் உண்டு, வளர்பிறை நாட்களில் நல்ல முத்துச் சுடர் போல நிலா ஒளி கிணற்று நீரில் பிரதிபலிக்கும்.

கிணறு இருந்தால் அதில் தவறுதலாக சாமான்கள் விழுவது சகஜம். அதை எடுப்பதற்கு பாதாள கரண்டி என்று ஒன்று உண்டு. அது யார் வீட்டில் இருக்கிறதோ அவர்களிடம் போய் கேட்டால் நம் வீட்டிலிருந்து ஒரு சாமானை வாங்கி வைத்துக் கொண்டுதான் பாதாள கரண்டியைத் தருவார்கள். அப்போதுதான் மறக்காமல் திருப்பித் தருவோமாம்.

இப்போது  வாஸ்துவிற்காக மீன் தொட்டி வைக்கச் சொல்கிறார்கள். அப்போது கிணறு அந்தப் பணியாற்றியது. இப்போது தனி வீடுகளில் கூட கிணறு இல்லை. பம்பு செட்தான். Gone are those days.

குதிரை வண்டி, மாட்டு வண்டி:



எழுபதுகளின் ஆரம்பம் வரையில் குதிரை வண்டிகள் இருந்தன. பழனியில் மட்டும் சமீப காலம் வரை குதிரை வண்டிகள் ஓடிக் கொண்டிருந்தன. 'குதிரை கிச்சா' கதையில் சுஜாதா எழுதியது போல குதிரை வண்டி ஸ்டாண்ட் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிதான் இருக்கும். அந்த இடத்திற்கென்று பிரத்யேகமான வாசனை உண்டு. திருச்சி உறையூரில் நாங்கள் இருந்த பொழுது அழகிரி என்பவர்தான் எங்கள் ஆஸ்தான குதிரை வண்டிக்காரர்.


பிள்ளையார் சதுர்த்தி,தமிழ் வருடப் பிறப்பு நாட்களில் மாணிக்க விநாயகர் கோவிலுக்குச் செல்லவும், பாட்டியை குஜிலித் தெருவில் இருந்த டாக்டர் வீட்டிற்கு அழைத்துச் செல்லவும் அழகிரியின் குதிரை வண்டிதான். கூலி எட்டணாவோ, பத்தனாவோ. அதை வண்டிச் சத்தம் என்பார்கள். அது என்ன பாஷை?

சென்னையில் கூட 1974 வரை குதிரை வண்டிகள் இருந்ததாமே? இப்போது இருக்கும் டிராஃபிக்கில் குதிரை வண்டிகளும் இருந்தால் எப்படி இருக்கும்? கார்கள், ஆட்டோக்கள், டூ வீலர்களுக்கிடையே குதிரை வண்டி.. நினைத்துப் பாருங்கள். இத்தனை ஆட்டோ மொபைல்களை பார்த்து குதிரை மிரளலாம், அல்லது குதிரையைப் பார்த்து டூ வீலர் குமரி மிரளலாம். அவளுடைய போனி டெய்லை புல் என்று நினைத்து குதிரை இழுத்து விட்டால் முடிந்தது கதை. எனிவே போன ஜட்கா வண்டி திரும்ப வரப்போவதில்லை.

விடுமுறைக்கு கிராமத்திற்கு போகும் பொழுதெல்லாம் மாட்டு வண்டியில் நிறைய பயணித்திருக்கிறோம். எங்கள் வீட்டில் தஞ்சை மாவட்டத்திற்கே உரிய மோழை மாடுகள் என்னும் கொம்பில்லா மாடுகள் நிறைய உண்டு. வில் வண்டி, மொட்டை வண்டி எனப்படும் மேற் கூரையில்லாத வண்டி இரண்டுமே இருந்தன. அந்த மொட்டை வண்டியின் மீது வளைவான கூரையை பொறுத்தி விட்டால் அது கூண்டு வண்டியாகி விடும். நிறைய பேர் சாமான்களோடு பயணிக்கலாம். பெரும்பாலும் ஊருக்குத் திரும்ப ரயில் நிலையத்திற்கு வருவதற்கு கூண்டு வண்டிதான். அது உயரமாக ஏறுவதற்கு கஷ்டமாக இருக்கும் என்பதால் ஒரு நாற்காலியை போட்டு ஏறச் சொல்வார்கள். வைக்கோல் பரப்பி, அதன் மீது ஜமக்காளம் விரித்து மெத்தென்று உட்காரும்படி செய்திருப்பார்கள்.

என்ன இருந்தாலும் வில் வண்டியின் கெத்து வருமா? வில் வண்டி வைத்திருப்பதே ஒரு அந்தஸ்தான விஷயம். எங்கள் ஊரில் இரண்டு வீடுகளில்தான் வில் வண்டி இருந்தது. அதில் ஒன்று எங்கள் மாமா வீடு. எங்களுடைய இரண்டாவது மாமாவுக்கு மாடுகள், வண்டிகள் இவற்றில் அதிக ஈடுபாடு. மாடுகளையும், வண்டியையும் விதம் விதமாக அலங்கரிப்பார். வில் வண்டியில் உட்கார மெத்தை, தலை இடிக்காமல் இருக்க குஷன் எல்லாம் இருக்கும். அதில் கடைசியில் உட்கார்ந்து கொண்டு பாதுகாப்பு கம்பியை லாக் செய்து கொண்டு,காலை தொங்க போட்டுக் கொண்டு ஸ்டைலாக உட்கார்ந்து வர ரொம்ப ஆசை. ஆனால் அந்த வாய்ப்பு கிடைப்பது துர்லபம்.முன்பாரம், பின்பாரம் என்றெல்லாம் சொல்லி எங்களை(குழந்தைகளை) நடுவில் தள்ளி விட்டு விடுவார்கள். ஒரே ஒரு முறை வண்டி ஓட்டுனருக்கு அருகில் முன்னால் உட்காரும் சான்ஸ் கிடைத்தது. காலை தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். எங்கேயாவது மாடு சாணம் போட்டு பாவாடையை நாசமாக்கிவிடப் போகிறதே என்று பயமாக இருந்தது. அப்படிப்பட்ட பயத்திற்கெல்லாம் இப்போது இடமில்லை. கிராமங்களில் கூட எந்த வீட்டிலும் மாட்டு வண்டிகள் இல்லை. அதன் இடங்களை டிராக்டர்களும், கார்களும் பிடித்துக் கொண்டு விட்டன. மாடுகள் என்னவாயின?

Friday, March 14, 2025

நந்தீஸ்வரர் கோவில் நந்திவரம்(கூடுவாஞ்சேரி)

நந்தீஸ்வரர் கோவில் நந்திவரம்(கூடுவாஞ்சேரி)

சென்னையில்  ஒரு சிவன் கோவில் இருக்கிறது, நரம்பு, எலும்பு வியாதிகளுக்கு அங்கிருக்கும் சிவனை வழிபடுவது நல்லது என்று யாரோ எங்கள் கேரள விருந்தினருக்கு கூறினார்களாம், எனவே அந்த கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினார். அவர் குறிப்பிடும் கோவில் கூடுவாஞ்சேரியில் நந்திவரம் என்ற இடத்தில்தான்  இருக்கிறது, நந்திவரம், நந்தீஸ்வரர் கோவில் என்று என் அக்கா பையன் கூறினார். ஆலயம் காப்போம் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கும் அவருக்கு கோவில் பற்றிய விவரங்கள் தெரியும். 

சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் கூடுவாஞ்சேரியில் மெயின் ரோடிலிருந்து இடதுபுறம் நந்திவரம் என்று பெயர்ப்பலகை தென்படுகிறது, அந்தப் பாதையில் உள்ளே சென்றால், சிறிது தூரத்திலேயே நந்தீஸ்வரம் கோவிலை அடைந்து விடலாம்.

பல்லவர்கள் ஆட்சி காலத்தில் நந்திவர்மன் என்ற அரசன் பெயரால் 'நந்திவரம்' என்று அழைக்கப்பட்ட ஊர். வெகுகாலம் அப்படித்தான் அழைக்கப்பட்டதாம். கூடுவாஞ்சேரி இதன் பக்கத்து கிராமம். ஆனால் காலப்போக்கில் கூடுவாஞ்சேரியின் ஒரு பகுதியாக நந்திவரம் மாறிப் போனது இந்தப்பகுதி மக்களுக்கு ஒரு குறைதானாம். 

கோவிலுக்குள் செல்லலாம், மிகப்பெரிய கோவிலும் இல்லை, மிகச்சிறிய கோவில் என்றும் கூறிவிட முடியாது. சாதாரணமாக கிராமங்களில் இருக்கும் ஆலயங்கள் போல இருக்கிறது. சுத்தமாக பராமரிக்கப்படுகிறது.

கிழக்கு பார்த்த லிங்கத் திருமேனி, அம்பாள் தெற்கு பார்த்து எழுந்தருளியிருக்கிறாள். செளந்தர்யநாயகி என்னும் பெயருக்கேற்றார் போல் அழகாக நம் மனதை கவர்கிறாள். 

பிரகாரத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் தனி சன்னதி கொண்டருளுகிறார். பிரகாரத்தை சுற்றி வரும் பொழுது பின்பக்கம் ஸ்தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது. சூரிய பகவானுக்கு தனி சன்னதி. அந்த கோபுரத்தில் தேரில் சூரிய பகவானின் அழகான சிற்பம். சூரியனுடன் தேருக்கு ஒற்றைச் சக்கரம்தான் என்பார்கள், அதை அழகுற வடித்திருக்கிறார்கள். 


முன் பகுதியில் நாகலிங்க மரத்தடியில் ஒரு நந்தி இருக்கிறது. கோவில் திருப்பணிக்காக தோண்டிய பொழுது கிடைத்ததாம். நல்ல நிலையில் இருந்ததால் வெளியே வைத்து விட்டார்களாம். அதையும் வழிபடுகிறார்கள். அதற்கு பின்பக்க சுவரில் சித்தர்களின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. நாகலிங்க மரத்தடியிலும், அதை ஒட்டி இருக்கும் சிமெண்ட் பெஞ்சிலும் சிலர் அமர்ந்து ஜபம், தியானம் செய்து கொண்டிருந்தார்கள். அந்தப்பக்கம் செல்லும் பொழுது அவசியம் சென்று தரிசியுங்கள். அர்ச்சகர் நன்றாக விளக்கங்கள் சொல்கிறார்.

கோவிலுக்கு எதிரே ஒரு ஏரி இருக்கிறது. ஊரப்பாக்கம் உட்பட இந்த பகுதிகளின் தண்ணீர் தேவைக்கு பயன் படுமாம். நம் முன்னோர்களின் நீர் மேலாண்மை வியக்க வைக்கிறது. சென்னை, பெங்களூர் போன்ற ஊர்களில் எத்தனை ஏரிகள்! இன்று எல்லாவற்றையும் தூர்த்து வீடுகள் கட்டிவிட்டு, தண்ணீர் இல்லை என்று நிலத்தடி நீரை உறிஞ்சுகிறோம்.  

தல வரலாறு(அர்ச்சகர் கூறியது):

இந்த ஊரில் மாடுகள் வைத்திருந்த ஒரு இடையர் அவருடைய ஒரு காராம்பசு, தினசரி ஒரு இடத்தில் பால் சொரிவதை கண்டு ஊர் பெரியவர்களிடம் சொல்கிறார். அவர்கள் அந்த இடத்தை தோண்ட, சிவலிங்கம் புலப்படுகிறது. அதை எடுத்து வழிபடுகிறார்கள். பின்னர் பல்லவ மன்னன் நந்திவர்மன் கோவில் கட்ட உதவி, நிவந்தங்களும் அளித்திருக்கிறார்.

ஒரு முறை மூலவரான சிவலிங்கம் பிளந்து அர்த்தநாரீஸ்வர கோலத்தில் காட்சி அளித்ததால், பின்னமான லிங்கத்தை வைக்கக்கூடாது என்னும் மரபை மீறி அதை இணைத்து மீண்டும் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அதனால் திருமணத்தடை நீங்கவும்,ஸ குடும்ப ஒற்றுமைக்கும் வழிபடலாம்.


அப்பர் பெருமான் நந்திவரத்தை தாண்டிச் சென்ற பொழுது அவருக்கு, மூட்டு வலி இருந்ததால் ஊருக்குள் நடந்து வந்து சிவபெருமானை வணங்க முடியவில்லை, தொலைவில் இருந்தபடியே மனதால் சிவனை நினைத்து வணங்கினாராம். அதனால் இது வைப்புத்தலம் எனப்படுகிறது. அப்போது அவர் இந்த கோவிலுக்கு வந்து வணங்கும் பக்தர்களுக்கு எலும்பு, நரம்பு சம்பந்தமான நோயைகள் வரக்கூடாது என்று வேண்டிக் கொண்டாராம், அதனால் இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் எலும்பு மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.

அப்பர் பெருமானின் பாடல்:

 




Friday, March 7, 2025

சென்னை டைரி - 3

சென்னை டைரி - 3

சென்ற மாதம் என் அக்காவின் பேரனுக்கு பூணூல் என்பதற்காக சென்னைக்கு வந்தேன். அது முடிந்ததும் பெங்களூர் திரும்பி விடலாம் என்று நினைத்தேன். ஆனால் 17,18 தேதிகளில் மாதா அமிர்தானந்தமயி சென்னை விஜயம் என்பதால் பெங்களூர் திரும்புதலை ஒத்தி போட்டேன். 

அமிர்தானந்தமயி மடத்தில் இருக்கும் ஒரு பெண்மணி அம்மா எங்கெல்லாம் போகிறாரோ, அங்கெல்லாம் செல்வாராம். அதோடு மட்டுமல்லாமல் அந்தந்த ஊர்களில் இருக்கும் முக்கியமான கோவில்களுக்குச் செல்வாராம். அதுவும் பிராசீனமான கோவில்கள்தான் அவருடைய விருப்பம். இந்த முறை சென்னையில் இருக்கும் புராதனமான கோவில்களில் சிலவற்றை பார்க்க விரும்பினார். அவரை அந்த கோவில்களுக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை என் பெரிய அக்காவின் பெண் ஏற்றுக் கொண்டாள். அவர்களோடு கைடு போல நானும் சென்றேன். 

முதலில் அவரை திருவேற்காட்டில் இருக்கும் வேதபுரீஸ்வரர் ஆலயத்திற்கு அழைத்துச் சென்றோம். அகத்தியருக்கு திருமண கோலத்தில் சிவ பெருமான் காட்சி தந்த இடம் என்பதால் லிங்கத் திருமேனிக்கு பின்னால் சிலா ரூபத்தில் சிவ பெருமானும், பார்வதி தேவியும் காட்சி அளிக்கிறார்கள். திருமணத் தடை நீக்கும் ஆலயம்.*

அங்கிருந்து திருவேற்காடு சென்று அம்மனை தரிசித்தோம். கோவிலில் நிறைய மாற்றங்கள். கருவறை என்னும் அமைப்பே இல்லை. நிறைய கும்பல் வருவதால் எல்லோரும் தரிசிக்க ஏதுவாக இருக்கலாம்,ஆனால் இதை ஆகம விதிகள் அனுமதிக்கிறதா என்று தெரியவில்லை.  

அங்கிருந்து மாங்காடு சென்றோம்.  கோவில் நடை அடைக்கும் நேரத்தை நெருங்கி கொண்டிருந்தாலும் நன்றாக தரிசனம் செய்ய முடிந்தது. கோவூரில் இருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் நவகிரகங்களில் புதனுக்குரியது, கஜ பிருஷ்ட விமானம் போன்ற விஷயங்களை கேரள விருந்தினரிடம் சொல்லியிருந்ததால் அங்கு செல்ல விரும்பினார், ஆனால் நேரமில்லாமல் போய் விட்டது. 

அடுத்த நாள் சென்ற கோவில்கள் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

*வேதபுரீஸ்வரர் கோவில் பற்றிய ஏற்கனவே என் வலைப்பூவில் பதிவாக எழுதியிருக்கிறேன் அதன் சுட்டி: https://thambattam.blogspot.com/2018/01/blog-post_29.html?m=1


   




Monday, February 24, 2025

செளதடுகா கணபதி

செளதடுகா கணபதி

ஜனவரி 25, 26 தேதிகளில் குக்கே சுப்ரமண்யா, தர்மஸ்தலா சென்று வரலாம் என்று முடிவு செய்து கிளம்பினோம். 

வீட்டில் செய்த தக்காளி தொக்கை பிரட்டில் தடவி காலை உணவிற்காக எடுத்துக் கொண்டோம். அதை காரிலேயே சாப்பிட்டோம். வழியில் MTRல் காபி மட்டும் குடித்து விட்டு பயணத்தை தொடர்ந்தோம். வழியெங்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை அழகை ரசித்தபடி சுகமான பயணம். 

எங்கள் பிரயாணத்தைப் பற்றி எங்கள் வீட்டில் வேலை செய்யும் லட்சுமியிடம் சொன்ன பொழுது, "குக்கே சுப்ரமண்யாவிற்கும், தர்மஸ்தலாவிற்கும் இடையில் ஒரு கணபதி கோவில் இருக்கிறது. அங்கு கணபதி கட்டிடம் ஏதும் இல்லாமல் வெட்ட வெளியில்தான் இருப்பார். மிகவும் சக்தி வாய்ந்தவர், அவரையும் தரிசனம் செய்துவி்ட்டு வாருங்கள்" என்றாள். ஆனால் அவளுக்கு அந்த இடத்தின் பெயர் சொல்லத் தெரியவில்லை. 

குக்கேயிலிருந்து தர்மஸ்தலா வந்து ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த பொழுது மாலையில் மத்யமர் சகோதரி உமா மூர்த்தி கைபேசியில் அழைத்தார். 

நாங்கள் தர்மஸ்தலாவில் தங்கியிருப்பதை சொன்னதும், " தர்மஸ்தலாவில் இருக்கிறீர்கள் என்றால் அங்கிருந்து செளதடுக்கா கணபதி கோவிலுக்கு அவசியம் செல்லுங்கள்" என்று கூறியதோடு, கோவில் பற்றிய விவரங்கள், செல்லும் வழி எல்லாவற்றையும் விவரமாக சொன்னார். எங்கள் பணிப்பெண் குறிப்பிட்டு, நாங்கள் செல்ல விரும்பிய கோவில் அதுதான். விநாயகரே உமா மூர்த்தி மூலம் விவரங்கள் சொல்லியிருக்கிறார் என்று தோன்றியது. 

தர்மஸ்தலா மஞ்சுநாதா ஸ்வாமி கோவிலில் எதிர்பார்த்ததை விட சீக்கிரமாக தரிசனம் கிடைத்தது. அங்கிருக்கும் அம்மனின் நாமம் கன்யாகுமரி என்பது ஆச்சர்யமாக இருந்தது. அம்மனுக்கு இருபுறமும் தர்ம தேவதைகளாம்.

மறுநாள் காலை செளதடுகா கணபதியை தரிசிக்கச் சென்றோம். ஒரு தோப்பில் வானமே கூறையாக அமர்ந்திருக்கிறார். கோவிலாக கட்ட முயன்ற பொழுதெல்லாம் கட்ட முடியாமல் தடை வந்ததால் அப்படியே விட்டு விட்டார்களாம். திருச்சி உறையூர் இருக்கும் வெக்காளி அம்மன் கோவில் நினைவுக்கு வந்தது. 





ஒரு மேடையில் விநாயகர் எழுந்தருளியிருக்கிறார். இரண்டு பக்கங்களிலும் கம்பி கட்டி விட்டிருக்கிறார்கள். அர்ச்சனை செய்பவர்கள் ஒரு பக்கம், தரிசனம் மட்டும் செய்பவர்கள் ஒரு பக்கம் விடுகிறார்கள். அந்த கம்பிகளில் வெவ்வேறு அளவுகளில் மணிகள் கட்டப்பட்டு அவை ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. 

இந்தக் கோவிலின் சிறப்பு இது. தங்கள் விருப்பங்கள் நிறைவேற வேண்டும் என்று நேர்ந்து கொள்ளும் பக்தர்கள், அவை நிறைவேறியதும் மணியை இந்த கோவிலில் கட்டுவார்களாம். அதற்காக பல்வேறு சைசில் மணிகள் இங்கிருக்கும் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

இந்தக் கோவிலின் மற்றுமொரு சிறப்பு அங்கு பிரசாதமாக வழங்கப்படும் வெல்ல அவல். பெரிய பாத்திரத்தில் கொண்டு வைத்து நைவேத்தியம் செய்த பிறகு எல்லோருக்கும் ஒரு பையில் அள்ளி,அள்ளி போட்டுக் தருகிறார்கள். இந்த மாதிரி ஒரு வெல்ல அவல் வேறு எங்கேயும் சுவைக்க கிடைக்காது. நாம் வீடுகளில் வெல்ல அவல் போல பிசுக்கென்று கையில் ஒட்டாமல், வேற லெவல் டேஸ்ட்!

இங்கு வெள்ளரிக்காயும் விசேஷமான நைவேத்தியமாம். இங்கிருக்கும் விவசாயிகள் தங்கள் கொல்லைகளில் விளையும் வெள்ளரிக் காய்களை இந்த விநாயகருக்கு படைப்பார்களாம். 

எதிரிகளால் அழிக்கப்பட்ட கோவிலில் இருந்த விநாயகர் விக்கிரகத்தை இடையர்கள் எடுத்துச் சென்று, வெள்ளரிக்காய்கள் விளையும் வயல்காட்டின் நடுவில் இருந்த புல்வெளியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டிருக்கிறார்கள். பின்னாளில் ஆலயம் கட்ட முயன்றபொழுது தடைகள், விநாயகரே சம்பந்தப்பட்டவர்கள் கனவில் தோன்றி தான் வெட்டவெளியில் இருப்பதையே விரும்புவதாக கூற அப்படியே விட்டு விட்டார்கள். கன்னடத்தில் 'செள' என்றால் வெள்ளரிக்காய் என்றும், 'தடுகா' என்றால் புல்வெளி என்றும் பொருளாம், அதனால்தான் இவர் செளதடுகா கணபதி. 

தர்மஸ்தலாவிலிருந்து குக்கே சுப்ரமண்யா செல்லும் வழியில் 16 கி.மீ. தொலைவில் உள்ளது. காரில் சென்றால் அரைமணிக்கும் குறைவான நேரம்தான் ஆகும். அந்தப்பக்கம் செல்வதாக இருந்தால் தவற விடாதீர்கள்.


Thursday, February 20, 2025

சென்னை டயரி - 2

சென்னை டயரி - 2

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு கோரிக்கைக்காக பிராது கட்டிவிட்டு வந்தேன். அந்த கோரிக்கை நிறைவேறியதால் அதை வாபஸ் வாங்கி, சுவாமிக்கு அர்ச்சனை செய்து விட்டு வர வேண்டும் என்பது முறை. அதற்காக13.2.25 வியாழனன்று  விருத்தாசலம் சென்றேன். 



என்னோடு என் பெரிய அக்காவின் பெண்ணும், கடைசி அக்காவும் வந்தார்கள். ஆறு மணிக்கு வீட்டை விட்டோம். வழியில் நல்ல மூடுபனி. சென்னை திருச்சி ஹைவேயில் Only Coffee உணவகத்தில் காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டோம். அங்கு பொங்கலும், வடையும் நன்றாக இருக்கும், of course Coffee too.  சிற்றுண்டியைத் தவிர ஆர்கானிக் உணவுப் பொருட்கள், காட்டன் புடவைகள்,பெட் ஷீட்டுகள் போன்றவையும் விற்பனைக்கு இருக்கிறது. சாலையின் எதிர் புறத்தில் இதன் கிளை இருக்கிறது.


முதலில் விருத்தாசலம் பழமலைநாதர் (விருத்தகிரீஸ்வரர்) கோவிலுக்குச் சென்றோம். இங்குதான் சுந்தரர் பதிகம் பாடி பரவை நாச்சியாருக்காக பொன் பெற்று அதை இங்கிருக்கும் மணிமுத்தா நதியில் இட்டு, அதை திருவாரூரில் இருக்கும் குளத்தில் எடுத்துக் கொண்டார். அதை ஒட்டியே *'ஆற்றில் போட்டதை குளத்தில் தேடுவது' எனினும் பழமொழி வந்தது. 


அங்கிருக்கும் ஆழத்து விநாயகர் சன்னதி தனி கோவில் போல தனியாக கொடிமரத்தோடு இருக்கிறது. விநாயகருக்கான ஆறுபடை வீடுகளில் இதுவும் ஒன்று. அவரைத் தொழுது விருத்தகிரீஸ்வரர், பாலாம்பிகையையும் வணங்கி கொளஞ்சியப்பர் கோவிலுக்குச் சென்றோம். 


அங்கு நம் வேண்டுதல் நிறைவேறி விட்டால், பிராது வாபஸ் பெற வேண்டும். அதற்காக ரூ200/- கட்டினால் ஒரு form தருகிறார்கள். அதை கொளஞ்சி யப்பருக்கு முன்னால் வைத்து அர்ச்சனை செய்து, பின்னர் அந்த சீட்டை முனீஸ்வரர் சன்னதிக்கு முன் இருக்கும் பிராது கட்ட வேண்டிய மரத்தின் அடியில் கிழித்து போட்டுவிடச் சொல்கிறார்கள். நான் சென்ற முறை சென்றபோது அங்கிருக்கும் சுதை சிற்பங்கள் புதிதாக வண்ணம் தீட்டப்பட்டுஜொலித்தன, இப்போது அந்த வண்ணங்கள் உதிர்ந்து விட்டன. அதைப்போல சென்ற முறை சென்றபோது கப்பும் கிளையுமாக செழிப்பாக இருந்த மரத்தின் கிளைகளை கழித்து விட்டிருக்கிறார்கள். 


அங்கிருந்து பாண்டிச்சேரியில் இருக்கும் அரபிந்தோ,அன்னை அஸ்ரமம் மற்றும் மணக்குள சென்று வணங்கி விட்டு வீடு திரும்பினோம். வழியில் Only Coffee ல் மசாலா பால் அருந்தி விட்டு பயணத்தை தொடர்ந்தோம்.  வீடு வந்து சேரும் பொழுது இரவு 8:30.

*'ஆற்றில் போட்டதை குளத்தில் தேடுவது' என்னும் பழமொழிக்கான விளக்கம் குறித்த என்னுடைய யூ ட்யூப் லிங்க்

https://youtu.be/hkeTKz85fqA?si=NLysRULJro1g62e8





Saturday, February 15, 2025

சென்னை டயரி

சென்னை டயரி

நீ...ண்...ட நாட்களுக்குப் பிறகு மெரீனா பீச் விஜயம். பேத்திக்கு பீச் காட்ட வேண்டும் என்பதுதான் நோக்கம்.

நான் மாலை நேரத்தில் கடற்கரைக்கு செல்வதைவிட, காலை நேரத்தில் செல்லவே விரும்புவேன். மாலை நேரத்தில்  கும்பல், பஜ்ஜி கடைகளின் எண்ணெய் வாசம் இல்லாத கடற்கரையை அப்போதுதான் ரசிக்க முடியும். 

எனக்கு புகைப்படத்திற்கு சிரிக்கவே வராது

நாங்கள் பீச்சுக்கு கிளம்பிய பொழுது காலை 5:45. சூரிய உதயம் பார்க்க முடியுமா? என்று கேட்டதற்கு என் அக்காவின் மாப்பிள்ளை,"போகும் வழியில் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்" என்றார். :))

பீச்சில் ஏகப்பட்ட வண்டிகள், பார்க்கிங் கிடைப்பது கஷ்டமாக இருந்தது. ஏகப்பட்ட காக்கைகள் "பெங்களூரில் புறாக்கள்தான்" என்று நான் சொன்னதும், "சென்னையில் மட்டும் என்னவாம்?" என்றார்கள். 

காக்கை கூட்டத்தை தாண்டியதும், கூட்டமாக சிலர் வட்டமாக அமர்ந்து கொண்டு ஒவ்வொருவரும் தனித் தனியாக ஒவ்வொரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார்கள். புக் க்ளப்பாம். இப்படிப்பட்ட புக் கிளப்புகள் பெங்களூரிலும் உண்டு லால் பாக், கப்பன் பாக்கில் இப்படி படிப்பார்கள் என்றான் என் மகன்.

கடலுக்குச் சென்றோம். சற்று முன்பு உதயமாகியிருந்த சூரியன், பெரிய சைஸ் ஆரஞ்சு பழம் போன்றிருந்தது, அதன் கிரணங்கள் பட்ட நீர் தங்கப் பாளமாய் ஜொலித்தது. 

கடலில் கால் நனைத்த பிறகு மணலில் வீடு கட்டினோம். அக்காவின் பேத்தியும், என் பேத்தியும் குதிரை சவாரி போனார்கள். பிறகு ஹோட்டலுக்கு திரும்பி, இருந்த பசியில் காம்ப்ளி மெண்ட்ரி ப்ரேக்ஃபாஸ்டை ஒரு கட்டு கட்டினோம்.

தை பூசத்திற்கு அடுத்த நாள் மாலை கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சென்றேன். அன்றைக்குத்தான் அங்கு தெப்பம் என்பது தெரிந்தது. தெப்பம் புறப்பட அதிக நேரம் ஆகும் என்பதால் புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டு வந்தேன்.




காலையில் அக்கா பேரனின் பூணூல், அதே நாள் தோழியின் மகனுக்குத் திருமணம்.  மாலையில் திருமண ரிசப்ஷனுக்குச் சென்றோம். ஆனால் அங்கு நான் ஒரு சமோசா சாப்பிட்டேன்,  என் அக்கா அதுவும் சாப்பிடவில்லை. 


ரிசப்ஷனில் DJ, முதலில் மெலடிகளை  இசைக்க விட்டார்கள். கேட்க சுகமாக இருந்தது. அப்புறம் போட்டார்கள் பாருங்கள் 'டங்கர டங்கர' என்று இரைச்சல் பாடல்கள். காதை பொத்திக் கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்து விட்டோம். இதய நோயாளிகள் யாராவது இருந்திருந்தால் அபாயம்தான்.


நடுவில் ஒரு நாள் பாண்டி பஜார் சென்றேன். அங்கு நாயுடு ஹாலில் தரை தளத்தில் வெயிட்டிங் ஏரியாவில் கேரம் போர்ட், செஸ் போன்றவை வைத்திருக்கிறார்கள். காத்திருக்கும் நேரத்தில் விளையாடலாம் போல. Good idea! கீழே வரைந்திருப்பது ஏரோபிளேன் பாண்டியா? அதற்கு சில்லாங்காய் தருவார்களா?





Tuesday, January 28, 2025

பத்மினி(மலையாளம்) திரை விமர்சனம்

பத்மினி(மலையாளம்)

 


அன்று நெட்ஃப்லெக்ஸில் ப்ரௌஸ் பண்ணிய பொழுது ‘பத்மினி’ என்ற படம் கண்ணில் பட்டது. 2023ல் வந்த் படம். அதில் அபர்ணா முரளி இருப்பதை பார்த்ததும் பார்க்க முடிவு செய்தேன்.

ரமேஷன்(குஞ்சாக்கோ போபன்) என்னும் மொழியாசிரியருக்கு திருமணமாகிறது. முதலிரவில் தன்னுடைய கவிதைகளை மனைவிக்கு வாசித்துக் காட்டுகிறான். அப்போது திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்பட, ஜன்னலருக்கருகில் நிற்கும் மனைவி நிலவொளியை ரசித்து, அந்த நிலவொளியில் ஒரு வாக் போகலாமா? என்று கேட்க, இருவரும் வெளியே வந்து நடக்கிறார்கள். சற்று தூரத்தில் ஹெட் லைட் வெளிச்சத்தை பாய்ச்சியபடி ஒரு பிரீமியர் பத்மினி கார் நிற்கிறது.

இந்த நேரத்தில் யார் இது? என்று அவன் குழம்ப, அவன்தான் தன்னுடைய காதலன், தங்கள் காதலை தன் வீட்டில் ஒப்புக்கொள்ளாததால் தனக்கு வேறு வழி தெரியவில்லை, என்னை மன்னித்து விடு என்று கூறி காதலனோடு அவள் பிரீமியர் பத்மினி காரில் ஏறி சென்று விடுகிறாள். அவன் திகைத்து நிற்க, அதை இரண்டு பேர் பார்த்து விடுகிறார்கள். அதன் பிறகு அந்த ஊரில் அவனை பத்மினி என்று அழைத்து கலாய்க்கிறார்கள்.

இந்த சமயத்தில் அவனுடைய கல்லூரிக்கு பத்மினி என்ற பெயரில் ஒரு ஆசிரியை(மடோனா செபாஸ்டியன்) வருகிறார். ரமேஷனுக்கும், பத்மினிக்குமிடையே காதல் அரும்புகிறது. அவளை பெண் கேட்டுச் செல்லும்போது அவளுடைய தாய் மாமன், “எல்லாம் சரி, நீங்கள் உங்கள் மனைவியை விவாகரத்து செய்து விட்டு வருவது நல்லது, பின்னால் பிரச்சனைகள் வராது” என்று கூற விவாகரத்து வாங்க வக்கீல் ஸ்ரீதேவியை (அபர்ணா பாலமுரளி) அணுகுகிறார். ஸ்ரீதேவிக்கு அப்போதுதான் மிகவும் மெட்டீரியலிஸ்டான பிசினெஸ்மேனும், சந்தேகப்பிராணியுமான ஜெயனோடு(ஸாஜின் செருகாயில்) திருமணம் நிச்சயமாகியிருக்கிறது.

விவாகரத்து கேஸை விசாரிக்கும் நீதிபதி, ரமேஷனின் மனைவியை ஆஜர்படுத்த உத்தரவிட, ரமேஷனும், ஸ்ரீதேவியும் ரமேஷனின் மனைவி சென்னையில் இருப்பதை கண்டுபிடித்து, அவள் வீட்டின் அழைப்பு மணியை அழுத்த, ஓடிவந்த காதலனோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கும் ஸ்மிருதி, கதவைத் திறந்து, வாசலில் நிற்கும் ரமேஷனைப் பார்த்ததும், “பார்த்தாயா, என்னை அழைத்துச் செல்ல, என் ரமேஷன் வந்து விட்டான்” எங்கிறாள். அதன் பிறகு என்ன ஆனது? ரமேஷனுக்கு அவளிடமிருந்து விவாகரத்து கிடைத்ததா? என்பது மீதி கதை.

படம் சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையாகவும் செல்கிறது. அபர்ணா பாலமுரளியும், மடோனா செபாஸ்டியனும் கச்சிதம். அபர்ணா தோற்றத்திலும் கச்சிதமாக இருந்தால் நன்றாக இருக்கும். ரமேஷனின் நண்பனாக வருபவரும், சாஜின் செருகாயிலும் சிறப்பு! குஞ்சாக்கோ போபன் அதிர்ச்சி, கோபம், சங்கடம் எல்லாவற்றிர்க்கும் ஒரே மாதிரி முக பாவம்.

ரத்தம் தெறிக்கும் வன்முறை, நம்ப முடியாத சண்டை காட்சிகள், இரைச்சலான இசை இதெல்லாம் இல்லாத குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படம். மலையாளத்தில் மட்டும் எப்படி வித்தியாசமாக, எளிமையாக யோசித்து படம் எடுக்கிறார்கள் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை