கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, July 10, 2017

பயணங்கள் முடிவதில்லை

பயணங்கள் முடிவதில்லை 


சிறு வயதில் பயணம் செய்ய மிகவும் ஆசைப்பட்டிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் திருச்சி, விடுமுறை நாட்களில் கண்டமங்கலம் தவிர அதிகம் பிரயாணம் செய்ய வாய்த்ததில்லை. மிகவும் நெருங்கிய உறவுக் காரர்கள் வீட்டு திருமணங்களுக்கு குழந்தைகளில் யாராவது ஒருவரைத்தான் அழைத்துச் செல்வார்கள். அந்த லக்கி டிராவில் நமக்கு வாய்ப்பு கிடைத்தால் உண்டு. அப்படி ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பில் ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது எங்களின் ஒன்று விட்ட மாமாவின் திருமணத்திற்க்காக முதன் முதலாக சென்னை (அப்போது மெட்ராஸ்) வரும் வாய்ப்பு கிடைத்தது. என் மூத்த சகோதரி திருமணமாகி புதுக்கோட்டையில் இருந்த பொழுது ஓரிரு முறைகள் புதுக்கோட்டை சென்றிருக்கிறேன். இரண்டாவது அக்கா, மூன்றாவது அக்காக்கள்  திருமணத்திற்குப் பிறகு அவ்வப்பொழுது சென்னை வந்தேன். என் திருமணத்திற்குப் பிறகு பயணங்கள் கொஞ்சம் அதிகம்தான். 

பயணத்தால் நமக்கு கிடைக்கும் அனுபவங்களை எந்த புத்தகத்திலும் படித்து பெற்று விட முடியாது. இப்போதும் பயணம் செய்ய விருப்பம் இருக்கிறது, ஆனால் உடல் சற்று அசந்து போகிறது. தவிர, பயணங்களுக்குப் பிறகு வீட்டை சீரமைப்பதை நினைத்தால், எங்கேயும் போக வேண்டாம் என்று தோன்றுகிறது. 

மூன்று வாரங்களாக புட்டபர்த்தி, திருவண்ணாமலை, திருப்பதி மயிலாடுதுறை என்று சற்று அலைச்சல். புட்டபர்த்தியில் முன்பு போல வெளிநாட்டவர் அதிகம் இல்லை. அங்கிருந்த வெஸ்டர்ன் கேண்டீன் மூடப்பட்டு விட்டது.  

 திருவண்ணாமலைக்கு இரண்டு வருடங்களுக்குப் பிறகு சென்றேன். பெரிதாக மாற்றமில்லை. நாங்கள் அங்கிருந்த பொழுது மளிகை சாமான்கள் உள்பட வாங்கி கொண்டிருந்த ரோஷன் மால் பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.  














கிரிவலம் வரும் பொழுது அடி அண்ணாமலையார் கோவிலிலிருந்து பார்த்தால் மலையின் இந்த பகுதியில் நந்தியின் முகம் போல தெரியும். இந்த படத்தில் இரண்டு செடிகளுக்கு இடையில் பாருங்கள் ஒரு முண்டு போல் தெரிகிறது. நேரில் பார்க்கும்பொழுது அமர்ந்திருக்கும் நந்தி போலவே தெரியும். என்னுடைய செல் போனில் இவ்வளவுதான் முடிந்தது.










நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் என்பது திருப்திக்குத்தான் முற்றிலும் பொருந்தும்.  நான்கு வருடங்களுக்குப் பிறகு திருப்பதி விஜயம். APTDC மூலம் முன் பதிவு செய்து கொண்டு சென்றோம். நாங்கள் புக் பண்ணிய பொழுது திருப்பதியில் தரிசனத்திற்க்காக ரூ.300க்கு டிக்கெட்,காலை சிற்றுண்டி, பகல் உணவு உட்பட நபர் ஒருவருக்கு ரூ.1600/- என்றார்கள். ஆனால் பயணம் செய்த அன்று ஜி.எஸ்.டி. வரியால் ஹோட்டல் கட்டணங்கள் உயர்ந்து விட்டன, எனவே சிற்றுண்டி, மதிய உணவு நீங்களே ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் என்று கூறி, ரூ. 200/- திருப்பி தந்து விட்டார்கள்.  எப்படியோ, ஒரு பெரிய கூடத்திற்குள் நுழைந்து, நீ...ள ... நடந்து, ஒரு இடத்தில் இடது புற கண்ணாடி ஜன்னல் வழியாக பார்த்த பொழுது கோபுரம் தெரிந்தது. இந்த இடத்திற்கு முன்பு வந்திருக்கிறோம் என்று தோன்றியது. பெரிதாக கும்பல் இல்லை, என்றாலும்  ஸ்வாமியை தரிசிக்க செல்லும் வாயில் அருகே ஏனோ தள்ளு முள்ளு. வித்தியாசமாக அலமேலுமங்காபுரத்தில் அதிக நேரம் வரிசையில் காத்திருக்க நேர்ந்தது. 





மயூரநாதர் கோவில் முகப்பு 
மாயவரத்திற்கு அருகில் இருக்கும் என் பெண் வீட்டாரின் குல தெய்வம் கோவிலுக்கு செல்லும் பொழுதெல்லாம் மாயவரத்தில் தங்குவோமே தவிர அங்குள்ள மயூரநாதர் கோவிலுக்குச் செல்வதில்லை. இந்த முறை மயூரநாதர் கோவிலுக்குச் சென்றோம். அன்று பௌர்ணமி என்பதாலோ என்னவோ நிறைய பேர் கோவிலை வலம் வந்து 
கொண்டிருந்தார்கள்.  அபயாம்பிகை சந்நிதியில் லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை நடந்து கொண்டிருந்தது. நின்ற நெடிய கோலத்தில் மனதை கொள்ளை கொண்டாள் அபயாம்பிகை. 

மறுநாள் என் மகள் வீட்டாரின் குலதெய்வமான சுப்ரமணிய சுவாமி கோவில் இருக்கும் பெரம்பூருக்கு சென்று அபிஷேக, ஆராதனைகளை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினோம். 

இன்னும் திருநெல்வேலி, உடுப்பி, சிருங்கேரி, பண்டரிபுரம், கோனார்க் சூரியன் கோவில், பத்ரிநாத் போன்ற ஆன்மீக பயணங்களும், சுற்றுலாவாக லண்டன்,பாரீஸ், ரோம், ஸ்விசர்லாந்து போன்ற நகரங்களுக்கும் செல்ல ஆசை. ம்ம்ம்ம்!

33 comments:

  1. கோவில் சுற்றுகள் முடிந்து ஊர் வந்தாச்சா? எனக்கு இப்போதைக்கு வெளியூர்ப்பயணம் எதுவும் ப்ராப்தமில்லை!

    கமெண்ட் கொடுப்பதற்குள் பதிவு காணாமல் போய்விட்டது!​ காத்திருந்து திரும்ப வந்ததும் பதிலிட்டு விட்டேன்!!

    ReplyDelete
    Replies
    1. எடிட் செய்வதற்காக முயன்றேன். ஏனோ எடிட் ஆகவில்லை. பதிவு காணாமல் போய் விட்டது. வேறு வழியில்லாமல் அப்படியே போட்டு விட்டேன். காத்திருந்து கமெண்ட் கொடுத்ததற்கு நன்றி!

      Delete
  2. படங்களுடன் பகிர்வு
    மிக மிக அருமை
    (தனித் தனிப் பதிவாக
    விரிவாக பதிவிட்டு இருக்கலாமோ)
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. பெரம்பூர் கோவிலைப்பற்றி தனியாக எழுதலாம் என்றிருக்கிறேன். வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

      Delete
    2. அன்னிக்கே கேட்கணும்னு இருந்தேன். மாயவரம் அருகே பெரம்பூர் என்னும் ஊர் எங்கே உள்ளது?

      Delete
    3. கந்தன் சாவடி என்னும் பெயரில் பேரளத்துக்கு அருகே ஓர் முருகன் கோயில் இருப்பதாகத் தெரியும். பெரம்பூர்?

      Delete
  3. உங்கள் ஆசைகள் விரைவில் நிறைவேறட்டும்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி!

      Delete
  4. ஜிஎஸ்டியின் மகாத்மியம் சொல்லவும் கூடுமோ?.. சமீபத்தில் ஜிஎஸ்டி பற்றி ஜிஎம்பீ சார் எழுதியிருந்ததைப் படித்ததினால் அவர் நினைவும் கூடவே வந்தது.

    கிரிவலம் வரும் பொழுது பார்த்தீர்களென்றால் திருவண்ணாமலை மலையே சிவபெருமானின் தோற்றம் போலத் தோன்றும் அதிசயத்தையும் பார்க்கலாம்.

    பயணங்கள் மட்டுமில்லை எதை எடுத்துக் கொண்டாலும் எதுவுமே முடிவில்லாமல் தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது.



    ReplyDelete
    Replies
    1. //பயணங்கள் மட்டுமல்ல எதை எடுத்துக் கொண்டாலும் எதுவுமே முடிவில்லாமல் தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது.// உண்மைதான். வருகைக்கு நன்றி

      Delete
  5. லண்டன், பாரிஸ், ரோம், ஸ்விட்சர்லாந்து போக வாய்ப்புக் கிடைக்கலை. இனியும் கிடைக்குமானு சந்தேகம்! மத்த இடங்கள் போயிட்டு வந்துட்டேன். பத்ரிநாத், கேதார்நாத் போன்ற வடமாநில க்ஷேத்திரங்கள் செல்வதற்கு ஆகஸ்ட், செப்டெம்பர் மாதம் சரியானது! அதிக வெயிலும் இருக்காது, மழைக்காலம் முடிந்திருப்பதால் அதிகக் குளிரும் இருக்காது. மே, ஜூன் மாதங்களில் சென்றாலோ ஜூலை 20 வரை சென்றாலோ மழை, வெள்ளத்தில் அகப்பட்டுக்கொள்ள நேரிடும்.

    ReplyDelete
    Replies
    1. பத்ரிநாத், கேதார்நாத் செல்ல முயல்கிறோம். எப்போது அந்த பாக்கியம் கிடைக்கும் என்று தெரியவில்லை.

      Delete
  6. உடல்நிலை சரியாக இருந்தால் திருக்கயிலை யாத்திரையும் இந்திய வழியில் செல்லலாம். எங்களுக்கு அவ்வழியே செல்ல அனுமதி கிட்டாது என்பதால் நேபாள் சென்று காட்மாண்டு வழியே சென்றோம்.

    ReplyDelete
    Replies
    1. கைலாயம் வரை சென்ற உங்களை வணங்குகிறேன்.👍

      Delete
  7. தொடரட்டும் இனிமையான பயணம்...

    ReplyDelete
  8. மேலும் பல அழகிய பயணங்கள்....தொடரட்டும்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

      Delete
  9. ஆம் பயணங்கள் முடிவதில்லை..தொடருங்கள் தங்கள் பயணத்தை...காண விரும்பும் இடங்களையும் காண ஆசை நிறைவேறட்டும்..

    .கீதா:.கைலாயப்பயணம் ஆசை உண்டு....எனக்குப் பயணம் செய்வது ரொம்ப பிடிக்கும்...உங்கள் ஆசை நிறைவேறட்டும்...பானுக்கா....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  10. "பயணத்தால் நமக்கு கிடைக்கும் அனுபவங்களை எந்த புத்தகத்திலும் படித்து பெற்று விட முடியாது." - உண்மை. நிறைய பயணிக்கும்போது நிறைய கற்றுக்கொள்ளலாம். நம் எண்ணவோட்டங்களும் விசாலமாகும்.

    நீங்கள் நினைத்த இடங்களுக்கெல்லாம் பயணிக்கும் வாய்ப்பு கிட்டட்டும்.

    ReplyDelete
  11. எங்க சுத்தியும் gst வந்துடுச்சு..
    உலகம் சுற்றும் உங்கள் ஆசை நிறைவேறட்டும்..

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா! வருகைக்கு நன்றி.

      Delete
  12. இப்பதிவைப் படிக்கும்போது மயிலாடுதுறையில் கோமதி அரசு தம்பதிகளுடன் கோவில்களுக்குச் சென்றது நினைவுக்கு வருகிறது

    ReplyDelete
  13. திருவண்ணாமலையில் காரிலேயே கிரி வலம் வந்ததும் நினைவில்

    ReplyDelete
    Replies
    1. யாரோ ஒரு அரசன் தன் குதிரையில் கிரி வலம் செய்தானாம். அவனுடைய குதிரை க்கு மோட்சம் கிடைத்ததாம், உங்களுடைய காருக்கும் கிடைக்கலாம்.

      Delete
    2. மானசரோவரில் நாங்கள் காரில் தான் வலம் வந்தோம். அங்கே எந்த இடம் பாதுகாப்பு என்பது சொல்ல முடியாது என்பதால் யாரையும் கீழே இறங்க அனுமதிக்கவில்லை.

      Delete
  14. பயணங்கள் தொடர வேணும்
    உளநிறைவு காண வேணும்

    ReplyDelete
  15. பயணத்தால் நமக்கு கிடைக்கும் அனுபவங்களை எந்த புத்தகத்திலும் படித்து பெற்று விட முடியாது//

    நீங்க்கள் சொல்வது சரி .
    மாயவரம் போனீர்களா ? பல வருடங்கள் அங்குதான் இருந்தேன்.
    இப்போது மதுரை.

    பாலசுப்பிரமணியம் சார் நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.

    நீங்கள் நினைத்த இடங்களுக்கு சென்று வர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ஓ அப்படியா? சமீபத்தில் மாயவரம் சென்று பார்த்தீர்களா?
      வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி

      Delete
    3. ஓ அப்படியா? சமீபத்தில் மாயவரம் சென்று பார்த்தீர்களா?
      வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி

      Delete