கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, April 12, 2018

வீட்டை மாற்றிப் பார்!

வீட்டை மாற்றிப் பார் 











கல்யாணம் பண்ணிப்பார், வீட்டைக் கட்டிப் பார் என்று சொன்னவர்கள் ஏனோ வீட்டை மாற்றிப் பார் என்று சொல்லவில்லை.

அவர்களுக்கென்ன வீடு மாற்றும் தேவை இல்லாத பாக்கியவான்கள். எந்த ஊரில் பிறந்தார்களோ அதே ஊரிலேயே இறுதி வரையில் வாழ முடிகிறவர்கள்  புண்ணியம் செய்தவர்கள். பல வருடங்கள் வாழ்ந்த வீட்டைஒழிப்பது என்பது, அதுவும் இனிமேல் எங்கேயும் போகப் போவதில்லை என்று நினைத்துக் கொண்டு சேர்த்த சாமான்களை மூட்டை கட்ட வேண்டும் என்றால் முழி பிதுங்குகிறது.



பழைய ஃபைல்கள் இருக்கும் பெட்டியை ஒழித்த என் கணவர் ஒரு ஃபைலை என் முன் போட்டார். "இது வேண்டுமா பார்.." நான் மஸ்கட் போன புதிதில் என் அம்மா எனக்கு எழுதிய கடிதங்கள். எழுதி பழக்கம் இல்லாததால் சிறு குழந்தையின் கையெழுத்தைப் போல, "உன் உடம்பு ஏன் இளைத்தாற்போல் இருக்கிறது? " உடம்பை கவனித்துக் கொள்.." என்று ஆதுரத்துடன் அம்மா எழுதிய கடிதத்தை எப்படி கிழிப்பது?

"இது யார் கல்யாண செலவு அப்பா?  ஒரு சீமந்தமும் நடந்திருக்கிறது? நாலு நாள் சத்திர வாடகை நாலாயிரம் ரூபாயா? இன்டரெஸ்டிங்..! வைத்துக் கொள்ளலாம். " என் மகன் ஒரு  ஃபைலை எடுத்து வைத்தான்.

என் குழந்தைகளின் ரிப்போர்ட் கார்டுகள். ஹெல்த் ரெகார்டுகள். இவையெல்லாம் என் பொக்கிஷங்கள் இல்லையா? இதைத் தவிர இன்சூரன்ஸ ஃபைல்கள். இவற்றில் எதையும் களைய முடியாது.

நான் சேமித்த புத்தகங்களில் சிலவற்றை ஆர்வமுள்ளவர்களுக்கு அளித்து விட்டேன். மற்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சமயலறைக்குள் வந்தால் 1987 லிருந்து என்னோடு பயணிக்கும் ஸ்ரீரங்கத்தில் வாங்கிய தோசைக்கல். அதைப் போன்ற கனமான கல் இப்போது கிடைப்பது இல்லை. கல் சட்டியை விட முடியுமா? நல்ல வேளை பரணி எனப்படும் பீங்கான் ஊறுகாய் ஜாடிகள் என்னிடம் கிடையாது. வீட்டு வேலை செய்த பெண்ணிடம் கொடுத்த ஒரு பிரெஸ்டிஜ் ஐந்து லிட்டர் குக்கர் மற்றும் சிறிய குக்கர் தவிர இன்னும் இரண்டு குக்கர்கள் இருக்கின்றன.
"எவ்வளவு குக்கர்கள் வைத்துக் கொள்வாய் அம்மா?"
"மஸ்கெட் ஜாகைக்காக ஒன்று, சென்னை ஜாகைக்காக ஒன்று.."
இதைத் தவிர திவசம் போன்ற விசேஷங்களுக்காக சமைப்பதற்காக வாங்கப்பட்ட பித்தளை, வெண்கலப்  பாத்திரங்கள். நல்ல வேளை கண்ணாடி பாத்திரங்களை முன்பே என் மருமகளிடம் கொடுத்து விட்டேன்.

இதைத் தவிர கொலு பொம்மைகள் மற்றும் ஷோ கேஸ் கிரிஸ்டல் பொம்மைகள். இவற்றை நல்லபடியாக உடையாமல் கொண்டு போக வேண்டும்.

ஷூ ராக்கை திறந்தால் என் கணவரின் காலணிகள்தான் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. வீட்டில் போட்டுக் கொள்ளும் செருப்பு நான்கு ஜோடி, வாக்கிங் செல்லும் போது அணிந்து கொள்ள நாலு அல்லது ஐந்து ஜோடி(வாக்கிங் செல்வதே கிடையாது என்பதுதான் ஹை லைட்).

இங்கே ஒரு விஷயம் சொல்லியாக வேண்டும், என் கணவருக்கு ஷாப்பிங் செய்வது மிகவும் பிடிக்கும்.  நான் எனக்கு ஒரு புடவை போதும் என்றால் கூட நாலு புடவைகள் வாங்கித் தரும் ரகம். (அதிரா காதில் புகை வருகிறதா?) அவரோடு கடைக்குச் செல்லும் பொழுது ஒரு கட்டத்தில் நானும் என் குழந்தைகளும் அவரை பிடித்து இழுத்து வர வேண்டும். அதனால் *அவருக்கு மனைவி மட்டும் ஒன்று. மற்ற எல்லாமே இரண்டுக்கு மேல்தான். இத்தனை சாமான்களையும் இப்போது மூட்டை கட்டி ஆக வேண்டும். சக்தி கொடு... இறைவா..!

*இதற்கு கில்லர்ஜியின் கேள்வி என்னவாக இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது.







    



48 comments:

  1. எங்கள் நண்பர்கள் வட்டத்த்தில் இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வீட்டை மாற்றுபவர்கள் இருக்கிறார்கள்.எப்படித்தான் மாற்றுகிறார்களோ என்று நினைத்துக்கொள்வேன்!

    ReplyDelete
  2. வாடகை வீட்டிலேயே நான் நிறைய குப்பைகள், பொருட்கள் சேர்த்து வைத்திருக்கிறேன். பின்னர் தெரியும் கஷ்டம்!

    ReplyDelete
  3. என்னை ஆர்வமில்லாதவர் என்று நினைத்து விட்டீர்கள் என்று தெரிகிறது. சோகம்!!!!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம் உங்கள் ஆர்வம் தெரியாதா? பெட்டி பெட்டியாக உங்கள் வீட்டில் நிரம்பி வழிகிறதே.. உங்களுடைய முந்தைய பின்னூட்டம் தெரிவிக்கும் நான் ஏன் உங்கள் ஆர்வத்திற்கு தீனி போடவில்லை என்பதை.

      Delete
  4. நடக்காத நடைப்பயிற்சிக்கு நாலு செட் காலணிகளா!! ஹா... ஹா... ஹா... நானும் கொஞ்சம் அவர் குணம்தான். கடைக்குப் போகமாட்டேன். போனால் என் செலவைக் கட்டுப்படுத்துவது கஷ்டம். பாஸ் என்னை நிறுத்த மாட்டார். ஆர்வமாக அழைப்பார். என் கஷ்டம் நான் லேசில் கிளம்ப மாட்டேன்!

    ReplyDelete
  5. பழைய ரெகார்ட்ஸ், அப்பா, அம்மா கடிதங்கள் போன்றவற்றை பத்திரமாக வைத்திருப்பதற்கு பாராட்டுகள். நான் பொறுப்பில்லாதவன். பொக்கிஷங்கள் அவை.

    ReplyDelete
  6. ஆனாலும் வெற்றிகரமாக மாற்றி, அங்கு செட்டிலும் ஆயாச்சா? அதாவது புது வீட்டில் பொருட்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டு விட்டனவா?

    ReplyDelete
    Replies
    1. ஒரு மாதிரி ஒரு பாதி செட் செய்திருக்கிறோம். அதாவது. பெங்களூரு வீட்டு சாமான்களை அடுக்கியாகி விட்டது. சென்னை வீடு இன்னும் காலி செய்யவில்லை. இனிமேல்தான் அந்த வீட்டு சாமான்கள் வந்து எல்லாவற்றையும் சரி செய்ய வேண்டும்.

      Delete
  7. ஹா ஹா ஹா பானுக்கா நாங்கள் திருன்வனந்தபுரத்தில் இருந்தப்ப அங்கு இருந்தது 8 வருடம் என்றால் 8 வீடுகள் மாற்றிய அனுபவம் உண்டு...ஒவ்வொரு வருடமும் சேர்ந்த சாமான்களை...தூக்கிக் கொண்டு அப்புறம் கோயம்புத்தூர், சென்னை, இன்னும் சில இடங்கள் என்று இப்போதுதான் சென்னையில் தொடர்ந்து வாசம்...சென்னையிலும் பல வீடுகள் மாறியய்துண்டு...இப்போது அதை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. என்ன சொல்றீங்க? எட்டு வருஷத்தில் எட்டு வீடா? படிக்கும்போதே கண்ணா கட்டுதே...

      Delete
  8. //என் கணவருக்கு ஷாப்பிங் செய்வது மிகவும் பிடிக்கும். நான் எனக்கு ஒரு புடவை போதும் என்றால் கூட நாலு புடவைகள் வாங்கித் தரும் ரகம்.// அட! நானும் தான். ஷாப்பிங் என்றாலே காத தூரம் ஓடும் ரகம். அங்கே போயும் ஒரு ஸ்டூல் அல்லது நாற்காலியைப் பார்த்து நிம்மதியா உட்கார்ந்துடுவேன். இவர் எல்லாத்தையும் முடிச்சுட்டுப் பேருக்கு என்னிடம் காட்டி ஒப்புதல் வாக்குமூலம் வாங்கிப்பார்! தலையை ஆட்டுவது மட்டுமே என்னோட வேலை! :) புடைவை வாங்கப் போனால் அதிக பட்சம் அரை மணி நேரம்! போகும்போதே எந்த ப்ளவுஸ் கலரில் புடைவை இல்லை என்பதைத் தீர்மானித்துக் கொண்டு என்ன ரகப் புடைவை என்பதையும் யோசித்துக் கொண்டு செல்வதால் அதிகம் நாழியாகாது!

    ReplyDelete
    Replies
    1. //போகும்போதே எந்த ப்ளவுஸ் கலரில் புடைவை இல்லை என்பதைத் தீர்மானித்துக் கொண்டு என்ன ரகப் புடைவை என்பதையும் யோசித்துக் கொண்டு செல்வதால் அதிகம் நாழியாகாது!// ஹாஹா! great people think alike.

      Delete
  9. புஸ்தகங்களைக் கொடுப்பது தெரிஞ்சிருந்தால் வீட்டுக்கு வந்திருப்பேனே! :)))))

    ReplyDelete
  10. வீடு மாறிச் செல்வது என்பது எளிதான செயல் அல்லவே

    ReplyDelete
    Replies
    1. வீடு மட்டும் மாற்றினால் பரவாயில்லையே, ஊரு விட்டு ஊரு மாறுவதால் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. வருகைக்கு நன்றி சார்.

      Delete
  11. முழுவதும் மாற்றியாச்சா அக்கா?

    எங்கள் வீட்டுச் சாமான்களை நினைத்தால்...என்னிடமும் பேக்கிங்க் சாமான்கள், பீங்கான் கண்னாடி சாமான்கள் அதிகம். நான் வாங்கியதில்லை ஆனால் என் ஆர்வம் கண்டு என் கஸின்கள் எனக்கு கிஃப்டாகக் கொடுத்தவை..அவர்களின் பெண்கள் அமெரிக்காவில் இருபப்வர்கள் எனக்கு அங்கிருந்து வாங்கித்தந்தவை என்று அவை அதிகம். அது போன்று பல வருடங்களுக்கு முன்பு வெல்த் ஃப்ரம் வேஸ்ட் என்று குப்பையில் தூக்கி எறிய வேண்டியவற்றை ஏதோ நான் ரொம்ப கலைத்திறன் படைத்தவள் போன்று அதில் பெயிண்டிங்க், மூரல் பெயிண்டிங்க் க்ளாஸ் பெயிண்டிங்க் அது இது என்று செய்து வைத்தவை....உங்களைப் போன்று வீடு ஷிஃப்ட் செய்த தோழிகள் அவர்களது க்ளாஸ் கப்ஸ், கிண்ணங்கள் என்று அவற்றை என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றது என்று சேர்ந்துவிட்டது ஹா ஹா ஹா....இவற்றையும், புத்தகங்களையும் தூக்கிப் போட மனசே வருவதில்லை...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இன்னும் இல்லை கீதா.ஒரு லாட் முடிந்திருக்கிறது, இன்னும் ஒன்று பாக்கி இருக்கிறது.

      Delete
  12. பழைய பொருட்களை என்னால் அவ்வளவு எளிதில் கலைந்துவிட முடியாது.

    எனக்கு விபரம் தெரிந்தநாள் முதல் இன்றைய தேதிவரையிலான பல வகையான பேப்பர்கள் பெட்டி, பெட்டியாக இருக்கிறது.

    நான் முதன் முதலாக திருநெல்வேலி சென்றபோது கட்டப்பொம்மன் போக்குவரத்து பேருந்து சீட்டைக்கூட ஒரு பொக்கிஷம் போல் பலவருடங்கள் காத்து வந்தேன். இன்று நினைத்தால் பார்க்க இயலுமா ?

    எனது அப்பா-அம்மா கல்யாண பத்திரிக்கையின் பின்புறம் கல்யாணச்செலவு விபரங்கள் எழுதி இருந்தது எல்லாமே "அனா" கணக்குதான் நீண்டகாலமாக வைத்திருந்தேன்.

    வெளிநாட்டு வாழ்க்கையில் எல்லாவற்றுக்குமே தனித்தனியாக ஃபைல்கள்.

    நான் என்றுமே பழமைவிரும்பி எனது குழந்தைகளுக்கு இதெல்லாம் பிடிப்பதில்லை. எனது மறைவுக்கு மறுநாளே இவைகள் குப்பைக்கு போய்விடும்.

    சரி... அதிராவின் காதில் புகை வருவதற்கான காரணம் என்ன ?

    புஸ்தகங்களை கொடுத்ததுபோல பழைய நூறுரூபாய் கட்டு கிடந்தால் சொல்லுங்கள் நான் வந்து வாங்கி கொள்கிறேன்.

    எனது பல நினைவுகளை மீட்டி விட்ட பதிவு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி. //நான் என்றுமே பழமைவிரும்பி எனது குழந்தைகளுக்கு இதெல்லாம் பிடிப்பதில்லை. எனது மறைவுக்கு மறுநாளே இவைகள் குப்பைக்கு போய்விடும்.// அப்படி நினைக்காதீர்கள். ஆஹா! எங்கள் அப்பா எத்தனை விஷயங்களை எப்படி பாதுகாத்து வைத்திருக்கிறார்? என்று கொண்டாடி அவர்கள் அதை காப்பாற்ற கூடும். அப்பாக்கள் இருக்கும்பொழுது பெரும்பாலும் அவர்களை காமெடி பீசாகத்தான் பார்க்கிறோம். அவர்கள் மறைந்த பின்தான் அவர்களின் பல நல்ல விஷயங்களை போற்றுகிறோம்.

      Delete
    2. // சரி... அதிராவின் காதில் புகை வருவதற்கான காரணம் என்ன ?//
      இப்படி ஏதாவது சொன்னால் சபை களை கட்டும் என்று நினைத்தேன். எங்கே ஆளையே காணவில்லையே..? தேம்ஸில் குதித்து விட்டாரா?

      Delete
    3. //புஸ்தகங்களை கொடுத்ததுபோல பழைய நூறுரூபாய் கட்டு கிடந்தால் சொல்லுங்கள் நான் வந்து வாங்கி கொள்கிறேன்.//
      நூறு ருபாய் கட்டு இல்லை. ஒரே ஒரு ஐநூறு ருபாய் நோட்டு இருக்கிறது. எந்த சாமிக்கோ வேண்டிக்கொண்ட என் மகனும், மருமகளும் அதை உண்டியலில் போடா மறந்து சாமி அலமாரியிலேயே வைத்திருக்கிறார்கள். விமானத்தை பிடித்து வந்து வாங்கிச் செல்லுங்கள், ஏலம் போட்டால் மதிப்பு எகிறி விடும்.ஹாஹா!

      Delete
  13. "சக்தி கொடு இறைவா!"

    சக்தி ஹோம் மூவர்ஸ் கம்பெனிக்கு போன் செய்தால் போதுமே...

    ReplyDelete
  14. வீடு மாற்றும் படலம் ரொம்பவே கஷ்டமான விஷயம் தான். ஒன்றிரண்டு முறை மாற்றியதிலேயே தாவு தீர்ந்துவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. This is not simply change of address, re-locating, so lot of work. Thanks Venkat!

      Delete
  15. உங்கள் ஆதங்கத்தை என்னால் முழுவதும் புரிந்துகொள்ள முடிந்தது. பாதி வீட்டை காலி பண்ணுவதற்குள் எவ்வளவு வேலை, எத்தனை பொருட்கள், எதையும் தூக்கி எறிய மனசு வரவில்லை. மூட்டை மூட்டையாக, தெரு முனையில் இருக்கும் 'துணி/புத்தகங்கள் சாரிட்டி' பாக்சில் முதலில் போட்டோம். எல்லா புத்தகங்களும் பில்டிங்கில் இருக்கும் குழந்தைகளை எடுத்துக்கச் சொன்னோம். எவ்வளவு டாகுமென்ட்ஸ், பேப்பர்ஸ், பசங்களோட நோட்டுகள், அவர்கள் எங்களுக்கு எழுதிய பேப்பர்கள் (அப்பா.. நீங்கள் வாங்கிக்கொடுத்த புதிய ஷூவை 2 வருடங்களுக்காவது வைத்துக்கொள்வேன் போன்று, அப்புறம், வரவேற்பு கடிதம்-வெல்கம் டாட்.. உங்கள் ஒரு வாரப் பயணத்துக்குப் பின்.. போன்று) எதைத்தான் தூக்கி எறிய மனம் வரும்? பசங்களின் சிறிய வயது டிரெஸ்கள் சில. அவற்றைத் தொட்டாலே பசங்களைத் தொடுவது போல். அவற்றைத் தூக்கி எறிய மனசே இல்லை. அப்புறம் பேக் செய்து ஊருக்கு அனுப்பிய பெட்டிகள். பல பொருட்களை விற்க முயல்தல்... இன்னும் எனக்கு வேலை முடியவில்லை.

    உங்கள் கஷ்டம் புரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. //பசங்களின் சிறிய வயது டிரெஸ்கள் சில. அவற்றைத் தொட்டாலே பசங்களைத் தொடுவது போல். அவற்றைத் தூக்கி எறிய மனசே இல்லை//
      உண்மை! உண்மை! இப்படித்தான் பல பொருள்கள் சேருகின்றன. Now we are sailing on the same boat.. இத்தனை வேலை பளுவிலும் பின்னூட்டமிட்டதற்கு நன்றி.

      Delete
  16. எனக்கு வீடு மாற்றும் அனுபவம் அவ்வளவாக இல்லை. ஒரே ஒரு முறைதான் மாற்றம். சொந்த வீடு எங்கள் ஊரில் என்பதால் அதேதான்...

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க சார்! நீங்கள் புண்ணியம் செய்தவர். வாழ்க! வருகைக்கு நன்றி!

      Delete
  17. போகும் இடத்தில் இடம் இருக்குமானால் எதையும் கழிக்க வேண்டாம் இப்போதெல்லாம் அதற்கென ஆட்கள் இருக்கிறார்கள் நாம் நினைத்தபடி பாக் செய்து மீண்டும் நாம் சொல்லும் படி வைத்துவிட்டுப் போவார்கள் என்ன கொஞ்சம் பணம் செலவாகும் இன்னொன்று நமச்க்கு பொக்கிஷமாய்த் தெரியும் பொருட்கள் நம்சந்ததிகளுக்கு வேஸ்ட் ஆகத் தெரியும்

    ReplyDelete
    Replies
    1. //நமக்கு பொக்கிஷமாய்த் தெரியும் பொருட்கள் நம்சந்ததிகளுக்கு வேஸ்ட் ஆகத் தெரியும் // உண்மை! அதனல்தான் நாமே தகுந்த ஆளைதப் பார்த்து கொடுத்து விட வேண்டும். வருகைக்கு நன்றி!

      Delete
    2. பழைய கடிதங்கள் புகைப்படங்கள் இவற்றை யார் பெற்றுக் கொள்கிறார்கள்

      Delete
  18. முக்கியமான வீடு மாற்றல் பற்றி எதுவும் சொல்லாமல் வந்திருக்கேனே! நாங்கல்லாம் மாநிலம் விட்டு மாநிலமே மாறி இருக்கோமே! அதுவும் எப்போ மாற்றலில் போனாலும் நாங்க் அபோற ரயிலுக்கு உடம்பு வந்து படுத்துடும். முதல் வகுப்பில் முன் பதிவு செய்துட்டு பதிவுகள் இல்லாப் பெட்டியில் கழிவறைக்கு அருகே சாமான்களை வைத்துக் கொண்டு அதிலே உட்கார்ந்து கொண்டு போவோம்!

    ReplyDelete
  19. இப்போ சென்னை அம்பத்தூரில் இருந்து ஶ்ரீரங்கம் வரச்சே எல்லாத்தையும் பாக்கர்ஸ் & மூவர்ஸ் கையிலே கொடுத்துட்டோம். அவங்களே பாக் பண்ணி வண்டியில் ஏற்றி மறுநாளே கொண்டு வந்து சேர்த்துட்டாங்க! பிரிச்சு வைச்சது கூட அவ்வளவு சிரமம் இல்லை. இரண்டே நாட்களில் முடிச்சோம்.

    ReplyDelete
  20. என்னோட கமென்ட் எல்லாம் காக்காய் வந்து நிஜம்மாவே தூக்கிக் கொண்டு போயிருக்கு என் கண் முன்னாடியே! :(

    ReplyDelete
  21. முதலில் நாங்க மாநிலம் விட்டு மாநிலம் மாற்றலில் செல்வது குறித்துச் சொல்லி இருந்தேன். சாமான்களை அனுப்பி வைச்சுட்டு நாங்க கையில் கொண்டு போக வேண்டிய சாமான்களுடன் முதல் வகுப்பு டிக்கெட்டில் போக வேண்டிய வண்டியைத் தவற விட்டுட்டு முன்பதிவு இல்லாத பெட்டியில் கழிவறைக்கு அருகே உட்கார்ந்து போவோம். :))))) இதைப் பற்றி நிறையவே எழுதிட்டேன். :))))

    ReplyDelete
  22. இப்போ ஶ்ரீரங்கம் வரச்சே அம்பத்தூர் வீட்டிலிருந்து பாக்கிங் செய்ய வேண்டிய வேலையைப் பாக்கர்ஸ்&மூவர்ஸிடம் கொடுத்துட்டோம். அவங்க வந்து பாக்கிங் செய்து மறுநாளே வீட்டில் கொண்டு வந்து வைச்சுட்டுப் போயிட்டாங்க! பிரிச்சு வைக்கிறதும் அவ்வளவு கஷ்டமா இல்லை. இரண்டே நாட்களில் முடிச்சோம்.

    ReplyDelete
  23. நாங்களும் இதைத்தான் செய்யப் போகிறோம். மீள் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  24. நாங்கள் இரண்டு முறை கீழ் வீட்டில் இருந்து மேல் வீட்டிற்கும் மேல் வீட்டிலிருந்து கீழ் வீட்டிற்கும் மாற்றி இருக்கிறோம்.அதுவே கஷ்டமாகத்தான் இருந்தது.பானு லக்கி,என் வீட்டில் எப்படி என்றால் இவர்களும் வாங்கி தரமாட்டார்கள்.வேறு யாராவது வாங்கி கொடுத்தாலும் ஏன் உன்னிடம் புடவையே இல்லையா உனக்கு எதற்கு புடவை என்பார்கள் என் மாமியார்.Even என் இரண்டு பெண்கள் வாங்கி கொடுத்தாலுமே இந்த பேச்சுதான்��

    ReplyDelete
    Replies
    1. ஹூம்..! உங்கள் மம்மியர் மனது மாறட்டும். வருகைக்கு நன்றி!

      Delete
  25. வீடு மாற்றும் போது ஏற்படும் அனுபவங்களை சுவாரஸ்யமாகச் சொன்னீர்கள். ஒரு இடத்தில் ரொம்ப காலம் இருந்து விட்டு இன்னொரு இடம் பெயரும்போது, பழகிய இடத்தையும், பழகிய நட்புகளையும் நினைத்து கண்ணீர் வராமல் இருக்காது. அதைப் பற்றி சொல்ல மறந்து விட்டீர்கள் என நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. //ரொம்ப காலம் இருந்து விட்டு இன்னொரு இடம் பெயரும்போது, பழகிய இடத்தையும், பழகிய நட்புகளையும் நினைத்து கண்ணீர் வராமல் இருக்காது.// வருத்தமாகத்தான் இருக்கிறது. இன்னும் சென்னை வீட்டை முழுமையாக காலி செய்யவில்லை. இறுதியாக வரும்பொழுது அழாமல் வர வேண்டும். இப்பொழுது வாட்ஸாப், முகநூல் போன்ற தொலை தொடர்பு சாதனங்களின் உதவியால் தொடர்பு விட்டுப் போகாமல் காப்பாற்றிக் கொள்ள முடிகிறதே.

      வருகைக்கு நன்றி!

      Delete
  26. அனைவரும் எதிர்கொள்ளும் நிகழ்வுதான். இருந்தாலும் பகிர்ந்த விதம் அருமை.

    ReplyDelete
  27. தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  28. ஹா.. ஹா.. சுவாரசியமான பதிவு .. வாழ்த்துக்கள்.

    ReplyDelete