கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, June 15, 2026

நிஜ கல்யாணமும் ராதா கல்யாணமும்

நிஜ கல்யாணமும் ராதா கல்யாணமும்

சென்ற வருடம் இங்கு ஒரு வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இந்த வருடம் ஒரு திருமணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இது ஒரு ஃப்யூஷன் வெட்டிங். தமிழ் ஐயர் பையன், ஸ்ரீலங்காவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணை மணந்து கொண்டான். இரண்டு வீட்டு சம்பிரதாயங்களையும் கலந்து நடந்த கல்யாணம். 

Marriage hall

காசியாத்திரைக்கு(கனடாவிலிருந்து காசிக்கு..??!!) கிளம்பிய மணமகனை தடுத்து மணமகளின் அப்பா அழைத்து வர அவன் மாலை மாற்றுவதற்காக காத்திருக்க, மணமகள் கைகளில் விளக்கேந்தி, அதைப்போலவே விளக்கேந்திய உறவுப் பெண்கள் புடை சூழ நடந்து வர, அவளைத் தொடர்ந்து பெண் வீட்டைச் சேர்ந்த பெண்கள் சீர் வரிசை தட்டுகளை சுமந்து ஊர்வலம் போல வந்தது பார்க்க மிக அழகாக இருந்தது. 

தமிழ் ஐயர் கல்யாணங்களில் இப்படி மணமகள் பிரவேசிப்பது பழக்கம் இல்லை. ஆனால் இந்த மணமகள் அவர்கள் பழக்கப்படி இப்படித்தான் மணமகளுக்கு பிரத்யேக பிரவேசம் இருக்க வேண்டும் என்று விரும்பியதால் இந்த ஏற்பாடு. அதைப் போல ஊஞ்சல் முடிந்து அவர்கள் இருவரும் மணமேடைக்குச் சென்றபொழுது காலடியில் டிரை ஐஸ் கொண்டு புகை வரவழைத்ததில் ஏதோ மேகக்கூட்டத்தில் நடந்து வந்ததைப் போல இருந்தது. அம்மி மிதிப்பதற்காக சிறு க்ரானைட் கல்லை வைத்திருந்தார்கள்.

மணமகள் மடிசார் கட்டிக் கொண்டு வர ஒரு மணி நேரத்திற்கும் மேலானது. அந்த இடைப்பட்ட நேரத்தில் மணமக்களுடைய தோழர்கள், தோழிகள் எல்லோரும் சாயி பக்தர்கள், நன்றாக பாடக் கூடியவர்கள், அவர்கள் பாடினார்கள். செவிக்குணவு அற்புதம்! இதற்கு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக ஒத்திகை நடந்தது. 

திருமண சடங்குகளை கவனித்த இலங்கைப் பெண்மணி ஒருவர் என்னிடம்,"என்ன இவ்வளவு நேரம் எடுக்கிறது? நிறைய சடங்குகள், டயர்டாகிவிட மாட்டார்களா?" என்று கேட்டார். 



 

பெண் வீட்டார் ஸ்ரீலங்காவை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் சாப்பாட்டில் பூண்டு,வெங்காயம் இல்லாமல் இருக்காதாம். பிள்ளை வீட்டார் அது ஆகாது என்று சொல்லி விட்டதால் பூண்டு,வெங்காயம் சேர்த்த உணவு  தனியாகவும், அவை இல்லாத உணவு தனியாகவும் இருந்தன. நமக்கு கல்யாண சாப்பாடு என்றால், அதுவும் முகூர்த்தம் முடிந்த பிறகு இலையில் பரிமாறி சாப்பிட்டுதானே பழக்கம், இங்கு பஃபே..! வித்தியாசமாக இருந்தது. நம் ஊர் சாப்பாட்டில் இருக்கும், பருப்பு உசிலி, அவியல், லட்டு அல்லது ஜாங்கிரி போன்ற இனிப்பு, பச்சடி போன்றவை மிஸ்சிங். டெசர்டாக வழங்கப்பட்ட ஃப்ரூட் சால்ட், ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம், கஸ்டர்ட் வித் ஜெல்லி எல்லாம் மிகவும் நன்றாக இருந்தன. 




காலை ப்ரேக்ஃபாஸ்டில் கூட கிச்சடி, இட்லி, வடை, பைனாப்பிள் கேசரி தவிர குழிப்பணியாரம் ஆப்பம், சம்பல், சொதி போன்ற ஸ்ரீலங்கா ஐட்டம்களும் இருந்தன. 

பிளாக் டீ. பிளாக் காபி, மில்க் டீ, மில்க் காபி என்று தனித்தனியாக இருந்தன. அதைத் தவிர சிறிய பிளாஸ்டிக் குப்பைகளில் கொழுப்பு அதிகமுள்ள பால், கொழுப்பு குறைவான பால், வெள்ளை சர்க்கரை, ப்ரவுன் சர்க்கரை என்று தனித்தனியாக இருந்தன. 

நான் முதலில் மில்க் காபியை எடுத்துக் கொண்டேன். அதில் பால்தான் இருந்தது. எனவே அப்படியே வைத்து விட்டு தனியாக டிகாஷனை எடுத்துக் கொண்டு பால், சர்க்கரையை சேர்த்துக் கொண்டேன்.

முதல் வாரம் இந்த கல்யாணம், அடுத்த வாரம் ராதா கல்யாணம். 1976 ஆம் ஆண்டு ஹரிதாஸ்கிரி சுவாமிகள் கனடா வந்தபொழுது தொடங்கி வைத்த ஞானானந்தா பஜன் மண்டலியினர் 18 வருதங்களாக ராதா கல்யாண மஹோத்ஸவத்தை நடத்தி வருகின்றனர். இந்த வருடம் ஞானானந்தா பஜன் மண்டலி தொடங்கி 50வது வருடம் என்பதால் இன்னும் சிறப்பாக சுவாஸினி பூஜை, தம்பதி பூஜை, அஷ்ட வடுக்கள்(பூனூல் போடப்பட்ட சிறுவர்கள்) பூஜை, நவ கன்யா பூஜை போன்ற பூஜைகளும் செய்யப்பட்டன. சுவாசினிகளுக்கு ஒரே டிசைனில், வேறு வேறு நிறத்தில் வழங்கப்பட்ட புடவைகள் மிகவும் அழகாக இருந்தன.  எல்லோருக்கும் மாட்சிங்காக பிளவுஸ் அமைந்ததில் எல்லோருக்கும் மகிழ்ச்சி.

ராதா கல்யாணத்தை நடத்தி வைக்க கலிஃபோர்னியாவிலிருந்தும், பஃபெல்லோவிலிருந்தும் பாகவதர்கள் வந்திருந்தனர். அவர்களோடு கனடாவிலிருக்கும் பாகவதர்களும் சேர்ந்து கொள்ள சிறப்பாக நடந்தது.


ராதா கல்யாணத்தில் வைக்கப்பட்ட
சீர் வரிசை







மணமக்களுக்கு பரிசளிக்க என் மகள் செய்த லிப்பன் ஆர்ட் வால் ஹாங்கர்.

6 comments:

  1. எங்கள் வழக்கங்களில் காசி யாத்திரை நிறுத்தி மணமகன் திரும்பும்;போது மணமகள் எதிர்கொண்டு அழைப்பாள்.  அங்கேயே அப்போது மாலை மாற்றும் வைபவமும் கிண்டலும் கேலியாக விளையாட்டாக நடக்கும்.  அப்புறம் ஊஞ்சல்.

    ReplyDelete
    Replies
    1. பானுமதி.வெ.June 15, 2026 at 7:07 AM

      எங்கள் சம்பிரதாயத்திலும் மணமகள் எதிர்கொண்டு அழைத்து மாலை மாற்றுதல் நடக்கும்.

      Delete
  2. ட்ரை ஐஸ் போடும் திருமணங்களுக்கும் சென்றிருக்கிறேன்.  ட்ரை ஐஸ் படம் கூட எங்கள் தளத்தில் பகிர்ந்திருந்தேன்.  ஆமாம், ஏன் அதை படம் போடவில்லை?  முகத்தைக் காட்டாமல் மணமகன் மணமகள் பின்புற போஸ் கூட போட்டிருக்கலாமே...

    ReplyDelete
    Replies
    1. பானுமதி.வெ.June 15, 2026 at 7:09 AM

      அங்கு ஒரே கும்பல்.

      Delete
  3. பூண்டு வெங்காயம் இல்லாத சமையல்...  - பூண்டு சேர்க்க மாட்டார்கள்.  ஆனால் வெங்காயம் சேர்ப்பார்கள்.  வெங்காயம் சாப்பிட மாட்டோமே என்று தயங்கிய சிலருக்கு என் மகன் திருமணத்தில் அது சேர்க்காத சில உணவுகள் தனியாக செய்து கொடுத்தார் கேட்டரர்.

    ReplyDelete
  4. காணொளியில் வரிசை கட்டிய உணவு வகைகள் ஆவலைத் தூண்டின.   லிப்பன் ஆர்ட் வால் ஹேங்கர் அழகாயிருந்தது.

    ReplyDelete