கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, October 15, 2025

ஹ்ருதயபூர்வம்(மலையாள திரைப்படம்)

  ஹ்ருதயபூர்வம்(மலையாள திரைப்படம்)  


லன்ச் பாக்ஸ் என்னும் உணவகம் நடத்தி வரும் பிரும்மச்சாரியான மோகன்லாலுக்கு இதயத்தில் பாதிப்பு ஏற்பட, ் மூளைச்சாவு அடைந்த ஏர்ஃபோர்ஸ் கர்னல் ஒருவரின் இதயத்தை பொருத்துகிறார்கள். தந்தை மீது அதிக பாசமாக இருந்த அவருடைய மகள்(மாளவிகா மோகனன்) தன்னுடைய நிச்சயதார்த்ததிற்கு தந்தை ஸ்தானத்தில் கண்டிப்பாக வர வேண்டும் என்று மோகன்லாலுக்கு அழைப்பு விடுக்க தன் உதவியாளரோடு புனே செல்கிறார். அங்கு கடைசி நிமிடத்தில் நிச்சயதார்த்தத்தை மாளவிகா நிறுத்திவிட, அங்கு ஏற்படும் கலாட்டாவில் மோகன்லாலுக்கு முதுகில் அடிபட்டுவிட, அவர் இரண்டு வாரங்கள் பயணம் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்பட புனேயிலேயே அவர் இரண்டு வாரங்கள் தங்க நேரிடுகிறது. அந்த காலகட்டத்தில் அவருக்கு மாளவிகா தன்னை காதலிக்கிறாரோ என்று தோன்ற லேசாக தடுமாறுகிறார். மாளவிகாவின் தாயாக வரும்  சங்கீதா தன் கணவரிடம் இல்லாத மென்மையை இவரிடம் கண்டு இவர்பால் ஈர்க்கப்பட, இவருடைய உதவியாளர், “அம்மாவா? பெண்ணா?” என்று கேட்கிறார். இந்த தர்மசங்கடத்தை மோகன்லால் எப்படி சமாளித்தார்? என்பதை நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறது இந்தப்படம்.  

கொஞ்சம்கூட ஆரவாரமிலாமல் மிக மிக இயல்பாக நடித்திருக்கிறார் லாலேட்டன்! பல காட்சிகளில் அவர் கொடுக்கும் ரியாக்ஷன் பிரமாதம்! நான் சாதாரணமாகவே மோகன்லாலின் ரசிகை, இந்தப் படம் பார்த்த பிறகு பரம ரசிகை ஆகி விட்டேன். மாளவிகா மோகனன்..இதற்கு முன் இவரை சில தமிழ்ப் படங்களில் பார்த்திருக்கிறோம். அழகாக இருப்பதோடு கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார். இந்தப் படத்தை பொருத்தவரை யாருமே பெரிதாக கஷ்டப்பட்டு நடிக்கத் தேவையில்லை. அதுவும் மலையாளப் படம், சொல்லணுமா? இருந்தாலும் மோகன் லாலின் உதவியாளராக வரும் சங்கீத் பிரதாப் கலக்கல்.  

நிச்சயதார்த்ததின் பொழுது வரும் பாடல் ரசிக்க வைக்கிறது. புனேயின் அழகை படம் பிடித்திருக்கிறது காமிரா. அந்த சண்டைக் காட்சியை மறந்து விடலாம். சத்யன் அத்திக்காட்டின் இயக்கத்தில் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய படம்.  

 

Friday, October 3, 2025

நவராத்திரி நினைவுகள்

நவராத்திரி நினைவுகள்

நல்லபடியாக நவராத்திரி-2025 நிறைவு பெற்றது. இந்த வருடம் இந்தியாவில் பத்து நாட்களும், கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒன்பது நாட்களும் கொண்டாடப்பட்டது. சாதாரண நாள்கள் இந்தியாவில் முன்பே உதித்து விடும், அங்கு இரவாகும் பொழுதுதான் இங்கு பொழுது விடியும். ஆனால் பண்டிகைகள் இந்தியாவில் கொண்டாடப்படும் நாளுக்கு முதல் நாளே இங்கு கொண்டாடி விடுகிறார்கள். இது எப்படி என்பதை ஜோதிடர்கள்தான் விளக்க வேண்டும். 

என்னுடைய நவராத்திரி அனுபவங்களை நாங்காக பிரிக்கலாம். திருமணத்திற்கு முன்பு திருச்சியில் அம்மா வீட்டில், பின்னர் மஸ்கட்டில், அதற்குப் பிறகு சென்னையில், பின்னர் பெங்களூரில்.

திருச்சியில் அம்மா வீட்டு கொலு பெரியது. கொலு படி என்று கிடையாது, நாங்களாக் கட்டுவதுதான். மேஜை,பென்ச், பலகைகள், டின்கள் என்று பலவற்றை வைத்து கட்டப்படும். அவைகளின் உயரத்தை சரி செய்ய எங்களுடைய நோட்டு,புத்தகங்கள் கூட அடியில் வைக்கப்படும். அப்போதெல்லாம் ஹாலிடே ஹோம் ஒர்க் அவ்வளவாக கிடையாது, என்பதால் நோட்டு புத்தகங்களும் படியாவது குறித்து கவலை இல்லை. ஆனால் அவற்றை சலவை வேட்டியால் கவர் செய்து விட்டால் ரெடிமேட் படி போலத்தான் தோற்றமளிக்கும்.

பெரும்பாலும் பெரிய பொம்மைகள்தான். எங்கள் வீட்டில் இருந்த நாய் பொம்மைகள் இரண்டும், பூனை மொம்மைகள் இரண்டும் அசல் நாய், பூனை போலவே தோற்றமளிக்கும். ஊஞ்சலாடும் ராதா கிருஷ்ணன் பொம்மை எனக்கு மிகவும் பிடிக்கும்.  அதைத்தவிர வெள்ளைக்கார பொம்மைகள் என்றழைக்கப்பட்ட் பீங்கான் பொம்மைகள் நிறைய உண்டு. பார்க்கில் வைக்க எக்கச்சக்க பிலாஸ்டிக் பொம்மைகள்.

அம்மா எங்களுக்கு மடிசார் கட்டி விடுவது, ஒரு நாள் ஐயர் கட்டு, ஒரு நாள் ஐயங்கார் கட்டு. ஒரு நாள் கிருஷ்ணர் வேஷம் என்று அலங்காரம் செய்து விடுவாள். நாங்கள் இருந்தது திண்ணை, ரேழி, கூடம், என்ற பழங்காலத்து வீடு. கூடத்தில் தொட்டி முற்றம் என்று ஒரு திறந்தவெளி இருக்கும். அதில் பாத்திரங்கள் தேய்ப்பார்கள். ஒரு முறை முற்றத்தின் சாக்கடையை அடைத்து விட்டு, அங்கு ஃபவுண்டன் அமைத்திருந்தோம். ஒரு மாலையில் எல்லோரும் வெளியே போய் விட, அன்றைக்குப் பார்த்து நல்ல மழை. தொட்டி முற்றம் நிரம்பி தண்ணீர் வெளியே வந்து, கீழ் மூன்று படிகளை நனைத்து விட்டது. பொம்மைகளை துடைத்து உள்ளே வைத்து விட்டோம். அடுத்த வருடம் கொலுப் பெட்டியைத் திறந்தால்... ஒரே கரையான். நிரைய பொம்மைகள் பாழாகி விட தூக்கிப்போட நேர்ந்தது.   

மஸ்கட்டில் வெகு சிலரே கொலு வைப்பார்கள், ஆனால் நிறைய பேர் அழைப்பார்கள். எல்லா வீடுகளிலும் பார்த்தவர்களையே மீண்டும் மீண்டும் பார்க்க நேரிடும். பெரும்பான்மையான வீடுகளில் பாதாம் கேக் இருக்கும்.  அதனுடன் சுண்டல் மற்றும் ஜூஸ் சாப்பிட கொடுத்து விட்டு கிஃப்ட் மட்டும் கையில் தருவார்கள். 

சென்னைக்கு வந்ததும் முதலிரண்டு வருடங்கள் கொலு வைக்கவில்லை. அதன் பிறகுதான் கொலு வைக்க ஆரம்பித்தேன். முதல் வருடம் கே.கே.நகர், ஐயப்பன் கோவில் வாசலில்தான் பொம்மைகள் வாங்கினேன். மூன்று படிகள் மட்டுமே கட்டி சிறிய கொலு. அடுத்த வருடம் இன்னும் கொஞ்சம் பொம்மைகள் வாங்கி ஐந்து படிக்கு உயர்த்தினேன். ஸ்டீல் படியும் வாங்கி விட்டோம். என் கணவர் குறளகம் அழைத்துச் சென்று நிறைய பொம்மைகள் வாங்கித்தந்தார். அங்கு எங்கள் குடியிருப்பில் நவராத்திரிக்கு நான் தரும் பரிசுப் பொருள்களை ஒரு பெண்மணி மிகவும் வியந்து பாராட்டுவார். என் மகன், மகள், மருமகள் எல்லோருக்குமே கொலு வைப்பது, அலங்கரிப்பது, கிஃப்ட் வாங்குவது எல்லாமே ரொம்ப பிடிக்கும்.

எங்கள் வளாக சென்ற வருட பூஜை 

பெங்களூருக்குச் சென்றதும் கொலு வைப்பது தொடர்ந்தது. நாங்கள் இப்போது இருக்கும் குடியிருப்பில் லலிதா சஹஸ்ரநாம பாராயண க்ரூப் என்று ஒன்று வைத்திருக்கிறோம். அதில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசுகிறவர்கள் என்று எல்லோரும் இருக்கிறோம். தினசரி ஒருவர் வீட்டில் காலை 10 மணிக்கு லலிதா சஹஸ்ரநாம பாராயணம் இருக்கும், பிரசாதம் அவர்கள் வீட்டிலேயே இருக்கும். தினசரி சர்க்கரைப் பொங்கல், சுகியன், பால் பாயசம், வடை என்றெல்லாம் சாப்பிட்டு கணிசமாக எடை கூடிவிடும். மாலையில் எங்கள் வளாகத்திர்கு எதிரே இருக்கும் விநாயகர் கோவிலில் பாராயணம் இருக்கும். அதைத்தவிர ஞாயிற்றுக் கிழமை கிளப் ஹவுஸில் அம்மனை பிரதிஷ்டை செய்து லலிதா சஹஸ்ரநாமம், லக்ஷ்மி அஷ்டோத்திர குங்கும அர்ச்சனை, ஸ்ரீ சுக்தம் போன்றவை வாசித்து, எல்லோருக்கும் பிரசாதம் வழங்குவோம். இரண்டு வருடங்களாக கன்யா பூஜையும் செய்கிறோம். மாலையில் குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள், மாறுவேடப்போட்டி போன்றவைகளும் நடத்தப்படும்.  இதைத் தவிர பெங்காலிகளின் பண்டல், குஜராத்திகளின் தாண்டியா போன்றவைகளும் இருக்கும். இந்த வருடம் நான் கனடாவில் இருப்பதால் இவை எல்லாவற்றையும் நழுவ விட்டேன்.

இங்கு(கனடாவில்) என் மகள் வீட்டில் கொலு வைத்தோம். அவள் சென்ற வருடம் இந்தியா வந்திருந்தபொழுது பொம்மைகள் வாங்கி வந்தாள். இங்கு கிடைக்கும் stair raiser மற்றும் மரச்சட்டங்கள் வாங்கி படி கட்டினோம். தினமும் ஒருவருக்காவது வெற்றிலை பாக்கு தர வேண்டும் என்று என் மகள் விரும்பினாள். அதன்படி அழைத்தாள்.  சனிக்கிழமை நாங்கள் வெளியே சென்றோம். ஞாயிற்றுக் கிழமையன்று எங்கள் வீட்டிற்கு நிறைய பேர்கள் வந்தார்கள். சாப்பிட்டு விட்டு, வெற்றிலை பாக்கு வாங்கிச் சென்றார்கள். ஒரு நாள் பக்கத்து வீட்டில் இருக்கும் இந்த ஊரைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கு கொலு காண்பித்து, கிஃப்டும் கொடுத்தனுப்பினாள். 

அதில் ஒரு குழந்தையின் தாயும் வந்து, கொலுவைப் பார்த்து ரசித்தார். அவருக்கு கொலுவின் தாத்பர்யத்தைச் சொல்லிவிட்டு, "ஸெலிபிரேட்டிங்க் உமன் ஹூட் ஃபார் நைன் டேஸ், எக்ஸ்க்லுசிவ்லி ஃபார் அஸ்" என்றேன். "வீடிசர்வ்" என்றார் அவர். உண்மைதானே? 

இங்கு நான் பார்த்த சில கொலுக்கள்:






எங்களுக்கு கிடைத்த நவராத்திரி பரிசுகள்:


என் சிறுவயதில் இப்படி கிஃப்ட் கொடுக்கும் பழக்கம் கிடையாது. வெற்றிலை பாக்கு, பழம், சுண்டல் மட்டும்தான். சரஸ்வதி பூஜையன்று மட்டும் தேங்காயும், ரவிக்கைத்துணியும் கொடுப்பார்கள். சிலர் நல்ல ரவிக்கைத்  துணி தராமல் அவை சுற்றி வந்த காரணத்தால் அதற்கு பதிலாக எவர்சில்வர் பாத்திரங்கள், பெரும்பாலும் கிண்ணங்கள் தர ஆரம்பித்தார்கள். இரும்பு தரக்கூடாது என்று சொன்னதால் இப்படி கிஃப்ட் தருவது என்று ஒரு பழக்கம் வந்தது. அவை பெரும்பாலும் பிளாஸ்டிக் தட்டுகள், சுவாமி விக்கிரகங்கள், கன்றோடு கூடிய பசுமாடு, அன்னபூரணி போன்றவைதான். அவை எவ்வளவு வைத்துக்கொள்ள முடியும்? வெற்றிலைப், பழம், சுண்டல் போதாதா? சென்ற வருடம் ஒரு மாமி, "இந்த வருடம் நான் எதுவும் வாங்கப்போவதில்லை, வந்த கிஃப்ட் நிறைய இருக்கு, அதையே கொடுத்துவிடப் போகிறேன்" என்று வெளிப்படையாகவே சொல்லி விட்டார். நாம் கொடுத்ததே நமக்கு திரும்பி வந்துவிடக்கூடாதே என்று கவலையாக இருந்தது.

Gifts created by my daughter

அதைப்போல நான் அவ்வளவாக விரும்பாத, சமீப கால ட்ரெண்ட் நவராத்திரியில் கலர்கோட். இதை யார்,எந்த அடிப்படையில் கிளப்பி விட்டது என்று தெரியவில்லை. நவராத்திரி என்பது வண்ணங்களைக் கொண்டாடும் விழா. பலரும்,பல வண்ணங்களில் உடையணிந்து வந்தால்தானே பார்க்க அழகாக இருக்கும்? 






  

Thursday, October 2, 2025

ஹவுஸ் மேட்ஸ்(திரை விமர்சனம்)

 ஹவுஸ் மேட்ஸ்(திரை விமர்சனம்)



அனுவை(ஆர்ஷா சாந்தினி பாய்ஜு) திருமணம் செய்து கொள்வதற்காக கஷ்டப்பட்டு எப்படியோ ஒரு பழைய அபார்ட்மென்டை விலைக்கு வாங்கி, அதில் தன் காதல் மனைவியோடு குடியேறுகிறார் கார்த்திக்(தர்ஷன்). அங்கு அமானுஷ்யமான விஷயங்கள் நடக்கின்றன. யாரும் போடாமலேயே டி.வி. ஆன் ஆகிறது, ஃபேன் சுற்றுகிறது, லைட் எரிகிறது. இன்னொரு வீட்டிலும் இப்படியே நடக்கிறது.  சுவற்றில் இங்கே யாராவது இருக்கிறீர்களா? என்று கேள்வி வருகிறது.இவர்கள் பதில் எழுதினால் மீண்டும் ஒரு கேள்வி வருகிறது. ஏதாவது பிசாசு வேலையாக இருக்குமோ என்று நினைத்தால், இல்லை, சயின்ஸ் சமாசாரமாம். 

மூன்று பரிமாணங்களைத் தாண்டி நான்காவது பரிமாணத்தில் ஒரே இடத்தில் வெவ்வேறு காலங்களில் வசிப்பவர்கள் மீண்டும் சந்தித்துக் கொள்ள முடியுமாம். புரிந்து கொள்வது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் படம் சுவாரஸ்யமாக இருக்கிறது. 

பெரிய நடிகர்கள் கிடையாது, ஆடம்பரமான செட், வெளிநாட்டு லொகேஷன் எதுவும் கிடையாது, சண்டை, தனி காமடி டிராக் கிடையாது.  நடித்திருப்பவர்கள் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். 

சிவகார்த்திகேயன் தயாரித்து, ராஜவேல் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தர்ஷன், ஆர்ஷா சாந்தினி பாய்ஜூ, காளி வெங்கட், வினோதினி மாஸ்டர் ஹென்ரிக் நடித்திருக்கிறார்கள். இளைஞர்கள் இப்படிப்பட்ட புதிய சிந்தனைகளோடு வரும்பொழுது நாம் அதை வரவேற்க வேண்டும். 


 

Saturday, September 20, 2025

கண்டுகொண்டேன் மனிதர்களை

கண்டுகொண்டேன் மனிதர்களை

தோல்வி, மரணம், விபத்து, திருட்டு போன்ற சில விஷயங்கள்,  நமக்கு வேண்டியவர்களுக்கோ அக்கம் பக்கத்திலோ நடக்கும் பொழுது நமக்கும் கஷ்டமாகத்தான் இருக்கும், ஆனால் அதன் முழு பாதிப்பையும் உணர மாட்டோம். நம் வீட்டில்/நமக்கு அவை நேரும்பொழுதுதான் அதன் முழு பாதிப்பும் தெரியும். அப்படி ஒரு அனுபவம் எனக்கு வாய்த்தது.

நான் எழுதிய 'என் மகன் யார் முகம்' என்னும் கதையில் சிலவற்றை சேர்த்து தன்னுடைய கதை என்று கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு சிறுகதைப் போட்டி-2025 க்கு அனுப்பி பரிசு வாங்கியிருக்கிறார் லீலா ராமசாமி என்பவர். மேற்படி கதையை நான் முகநூலின் மத்யமர் தளத்தில் 2023ல் பகிர்ந்திருக்கிறேன். அங்கு அந்தக் கதையை பாராட்டியிருக்கிறார். புஸ்தகா மூலம் வெளியிடப்பட்ட 'மாங்காய் நெக்லெஸ்' என்னும் சிறுகதை தொகுப்பிலும்  இந்தக்கதை  இருக்கிறது.

கல்கி ஆன்லைனில் லீலா ராமசாமி எழுதியிருந்த கதையைப் படித்ததும் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அதை தி.கீதாவிடமும், ஸ்ரீராமிடமும் பகிர்ந்து கொண்டபொழுது அவர்கள் உடனே கல்கி ஆன்லைனுக்குச் சென்று லீலா ராமசாமியின் எழுதியிருக்கும் பிரும்மாவின் ஒரிஜனல் பிரும்மா பானுமதி வெங்கடேஸ்வரன்தான் என்று சான்றோடு தெரிவித்து விட்டார்கள். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் __/\__ __/\__ 

ஸ்ரீராம் லீலா ராமசாமி பகிர்ந்திருந்த கதையில், "இது பானுமதி வெங்கடேஸ்வரன் எழுதியது" என்று குறிப்பிட்டு அதற்கு அப்போது லீலா எழுதயிருந்த கமெண்டுகள ஸ்கிரீன் எடுத்து பகிர்ந்திருந்தார். இதனால் அவருக்கு கிடைக்கப் போவது எதுவுமில்லை இருந்தாலம் அவர் மெனக்கெட்டது நெகிழ்ச்சியூட்டியது. 

கீதா ரங்கனும் என்கதையின் சுட்டிகளை தேடி எடுத்து இணைத்திருந்தது மிகவும் சிறப்பு. 

அமெரிக்காவில் வசிக்கும் நீலா சந்திரசேகர் என்பவர் விஷயத்தை தெரிந்து கொண்டு, இதை மத்யமரில் "எழுதியே ஆக வேண்டும், நீங்கள் எழுதாவிட்டால் நான் எழுதுகிறேன்" என்று மத்யமரில் முன் வைத்தார். அதன் பிறகு எனக்கு, "நமக்காக இத்தனை பேர் மெனக்கெடும் பொழுது நாம் பேசாமல் இருப்பது சரியாகாது" என்று தோன்றியதால் என் வருத்தத்தை முன் வைத்தேன்.  அத்ற்கு பலர் அதிர்ச்சி அடைந்ததாக கருத்திட்டதும் லீலா ராமசாமி தன் கருத்தை கூறினார். அதில் அவரையும் அறியாமல் தான் என் கதையை காபி அடித்ததை ஒப்புக் கொண்டிருந்தார் :)) 

இதில் பலர் என் பதிவில் "அதிர்ச்சி" என்றும் அவர் பதிவில், "கவலைப்படாதீர்கள்", "தொடர்ந்து எழுதுங்கள்", "வீ ஆல் லவ் யூ" என்று தப்பிலும் வாசித்து, தவிலிலும் வாசிக்கும் செயலை செய்தாலும்,    திருமதி. செல்வி சங்கர் என்பவர் மட்டுமே இரண்டு இடங்களிலும் இல்லை, நீலாவின் பதிலயும்  சேர்த்து மூன்று இடங்கள் லீலா ராமசாமி இப்படி செய்திருக்க வேண்டாம் என்று நியாயத்தை நியாயமாக, அதே நேரத்தில் பக்குவமாக கூறியிருந்தார்.   

மத்யமர் குழுத்தலைவர் சங்கர் ராஜரத்தினம் நீலாவின் பதிவில், "மத்யமரில் வரும் பதிவுகளைத் தவிர மற்றவைகளையும் படிக்கிறார்கள் என்று ஆச்சர்யமாக இருக்கிறது. நீலாவுக்கு நிறைய டைம் இருக்கிறது போல" என்று நீலா அக்கப்போருக்கு  அலைகிறார் என்பது போல எழுதியிருந்தார். 

சங்கர் அவர்கள் பாதிக்கப்பட்ட நான் எழுதிய பதிவை எட்டிக்கூட பார்க்கவில்லை, லீலா ராமசாமியின் பதிவில் "தவறை ஒப்புக் கொண்டு விட்டீர்கள் தொடர்ந்து எழுதுங்கள்" என்று சர்ச்சில் பாவமன்னிப்பு கொடுக்கும் ஃபாதர் ரேஞ்சுக்கு கருணை வழிந்தது. 

இவையெல்லாவற்றையும் விட மிகவும் உறுத்தலாக இருக்கும் விஷயம், தார்மீகம், பத்திரிகை தர்மம் என்பதற்கு உதாரணமாக விளங்க விரும்பும் கல்கி பத்திரிகை குழுமத்திற்கு பலர் மெஸேஜ் அனுப்பியும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதுதான். 

ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்த ஒருவர் மற்றவரின் படைப்பை தன்னுடையது என்று பத்திரிகைக்கு அனுப்புகிறார், அவர் சார்ந்திருக்கும் குழுத் தலைவர் அதை கண்டு கொள்ளாமல் சுட்டிக் காட்டியவரை கேலி செய்கிறார், திருட்டு கதைக்கு பரிசு கொடுத்த பத்திரிகை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெளனம் சாதிக்கிறது :((

ஹீம்! வருத்தமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும்  இந்த நேரத்தில் எனக்காக குரல் கொடுத்த எல்லா நல்ல அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்க கடமைப் பட்டிருக்கிறேன்.

என்கதையை கீழ்கண்ட தளங்களில் வாசிக்கலாம்:

https://www.facebook.com/share/p/19oK4agYpu/

Pustaka link:

https://www.pustaka.co.in/home/ebook/tamil/mangai-necklace

லீலா ராமசாமியின் கதையை kalki online ல் படிக்கலாம். கதையின் பெயர் 'பிரும்மா'

மத்யமரில் அவருடைய பதில்

அனைவருக்கும் வணக்கம்.

என்மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு வரும்படியாக என் கதை அமைந்தது பற்றி நான் மிகவும் வருந்துகிறேன்.

அடிப்படையில் நான் ஒரு விலங்கியல் முதுகலைப் பட்டதாரி. என்னுடைய பல கதைகளில் அறிவியல் புனைவுக் கதைகளும், detective and thriller கதைகளும்தான் அதிகம். அவற்றில் பல கதைகள் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 

இனியும் என்னுடைய பெரும்பான்மையான கதைகள் science fiction, thriller, and detective genre ல்தான் அமையும்.

கல்கி சிறுகதைப் போட்டிக்கு முன்பும் அதற்குப் பின்னரும்

பல சிறுகதைப் போட்டிகளில் என்னுடைய சிறுகதைகள் வெற்றி பெற்றுள்ளன.

இதுவரை நான் பத்துப் புத்தகங்கள் எழுதி வெளியிட்டு இருக்கிறேன்.

பானு மேடத்தின் இந்தக் கதைக்கரு அது எழுதப்பட்ட சமயத்தில் ஒரு Zoologist ஆக, genetic engineering படித்த என் மனத்தின் ஆழத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது உண்மை.

இந்தக் கதை எழுதிய அந்தக் காலகட்டத்திலேயே நானும் இங்கு ஒரு கதை இதே கருவை எடுத்து எழுதினேன். இன்னும் சிலரும் எழுதினார்கள். அப்போது யாரும் இதை ஒரு பிரச்சினையாக ஆக்கவில்லை.

இப்போது அதற்குப் பரிசு கிடைத்ததால்தான் இவ்வளவு ஆவேசம்.

கல்கி கதைப் போட்டி அறிவிப்பு வருவதற்கு முன்பே இந்தக் கதைக் கருவில் இந்தக் கதையை எழுதி வைத்திருந்தேன். இதில் பானு மேடத்தின் கதையின் தாக்கம் என்னையும் மீறி சில இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. இந்தத் தவறுக்கு நான் வருந்துகிறேன்.

கல்கி போட்டி அறிவிப்பு வந்தபோது, ஏற்கனவே பல போட்டிகளுக்கு நான் எழுதி வைத்திருந்த பல கதைகளை அனுப்பி விட்டதால் சட்டென்று இருப்பில் இருந்த இந்தக் கதையைக் கல்கிப் போட்டிக்கு அனுப்பி விட்டேன். 

அந்தப் போட்டிக்கு இதை நான் அனுப்புவதற்கு முன்பு கதையை நான் எடிட் செய்திருக்க வேண்டும். அதைச் செய்வதற்கு நேரமின்மை, உடல் நலக் குறைபாடு காரணமாக அப்படியே அனுப்பிவிட்டேன். இதுதான் நான் செய்த பெரும் தவறு. அது எனக்கு இவ்வளவு பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கு முன்பெல்லாம் என்னுடைய சிறுகதைகள், பொதுவான பதிவுகள், மீம்ஸ்கள் என்று உலகம் முழுவதும் யார் யாருடைய பெயரிலோ சுற்றி வந்திருக்கின்றன. வருகின்றன. 

அப்போது என் மனம் வருந்தியது போலத்தானே பானு மேடத்தின் மனமும் வருந்தும் என்பதை உணர முடிகிறது.

நன்றி 

வாழ்க வளமுடன் 🙏🙏🙏


Bhanumathy Venkateswaran  

@Neela Chandrashekar


                        ******