கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, September 9, 2021

விநாயகரின் பதினாறு பெயர்கள்

 விநாயகரின் பதினாறு பெயர்கள் 


நாம் தொடங்கும் செயல்கள் எந்தவித தடங்கலும் இல்லாமல் நடைபெற வேண்டுமென்றால் நாம் வணங்க வேண்டியது விநாயக பெருமானை என்பது எல்லோருக்குமே தெரியும்.  மனித வாழ்க்கையின் முக்கியமான கட்டங்களான கல்வி கற்க தொடங்குவது, திருமண வாழ்க்கையை தொடங்குவது, பயணங்களை தொடங்குவது, போர் காலங்கள் போன்ற எல்லா காலங்களிலும் விநாயகரை இந்த சிறப்பான பதினாறு பெயர்களை சொல்லி வணங்கி விட்டு தொடங்கினால் அந்த செயல்கள் எல்லாவற்றிலும் எந்தவித தடங்கல்களும் வராது. 

சுமுகஸ்ச்ச ஏக தந்தஸ்ச கபிலோ கஜகர்ணக 

லம்போதரஸ்ச விகடோ விக்நராஜோ விநாயக 

தூமகேதூர் கணாத்யக்ஷ பாலச்சந்த்ரோ கஜானந 

வக்ரதுண்ட: சூர்ப்பகர்னோ ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ:

ஷோடசைச்ச நாமானி ய: படேத் ஸ்ருணுயாதபி 

வித்யாராம்பே விவாஹே ச பிரவேசே நிர்கமே ததா

ஸங்க்ராமே ஸர்வ கார்யேஷு விக்நஸ்தஸ்ய ந ஜாயதே   

  • மங்கள முகம் வாய்ந்த சுமுகர், 
  • ஒற்றைக் கொம்பை உடைய ஏக தந்தர், 
  • கபில நிறம் வாய்ந்த கபிலர், 
  • யானைக் காதுகள் உள்ள கஜ கர்ணகர், 
  • பெரும் வயிற்றோடு கூடிய லம்போதரர், 
  • குள்ளத் தோற்றமுள்ள விகடர்,  
  • சகல விக்கினங்களுக்கும் ராஜாவான விக்கினராஜர்,  
  • எல்லா விக்கினங்களையும் அழிக்கக்கூடிய விநாயகர் 
  • நெருப்பை போல் ஒளி வீசக்கூடிய தூமகேது, 
  • பூத கணங்களுக்கு தலைவராக விளங்கும் கணாத்யக்ஷர், 
  • நெற்றியில் பிறைச் சந்திரனை சூடிய பால சந்திரன், 
  • யானைத் தோற்றமுள்ள கஜானனர், 
  • வளைந்த தும்பிக்கையை கொண்ட வக்கிரதுண்டர் 
  • முறம் போன்ற அகலமான காதுகள் கொண்ட சூர்ப்பகர்ணர், 
  • தம்மை வணங்கி நிற்கும் அடியவர்களுக்கு அருள் புரியும் ஹேரம்பர்
  • கந்த பெருமானுக்கு மூத்தவரான ஸ்கந்த பூர்வஜர் 
  • என்னும் பதினாறு பெயர்களையும் வித்தைகளை கற்க தொடங்கும் பொழுதும்,  
  • வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுதும் போர் காலத்திலும்      
  • யாராவது வாசித்தாலும் அல்லது செவி குளிர கேட்டாலும் அவர்களுக்கு எந்தவித விக்கினங்களும் சம்பவிக்காது. 
இதற்கான விளக்கத்தை என்னுடைய யூ டியூபில் பார்க்கலாம். சுட்டிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன 

https://studio.youtube.com/video/pIMta8SrHBk/edit

https://studio.youtube.com/video/fopb_iPlv-g/edit

https://studio.youtube.com/video/UjV0BIBJLPs/edit

https://studio.youtube.com/video/TS1Hl1RWtYs/edit

https://studio.youtube.com/video/dp9XogvkB7Y/edit




Monday, September 6, 2021

பார்த்தேன், ரசித்தேன்..

 பார்த்தேன், ரசித்தேன்..


கொடைகானலில் சாட்டிலைட் அமைக்கப்பட்டதும் திருச்சியில் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை காண முடிந்தது. அப்போதெல்லாம் நேஷனல் கவரேஜில் ஹிந்தி நிகழ்ச்சிகளைத்தான் பார்க்க முடியும். ஹிந்தி திணிக்கப்படுகிறது என்று புலம்பிக் கொண்டே எல்லோரும் அந்நிகழ்ச்சிகளை பார்த்தோம். அப்போது பெரும்பாலும் கருப்பு வெள்ளை டி.வி.தான். ஷட்டர்ஸ் வைத்த சாலிடேர், மற்றும் டயனோரா கோலோச்சிய காலம். சிலர் கிரௌன் டி.வி.கூட வைத்திருந்தார்கள்.  

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஒரு சீரியல் இருக்கும். திங்களன்று பார்த்த நுக்கட், புதனன்று மால்குடி டேஸில் ஆர்.கே. நாராயணனின் ஸ்வாமி அண்ட்  ஹிஸ் பிரெண்ட்ஸ்  புத்தகத்திலிருந்து கதைகள்  வியாழனன்று ஏக் கஹானி என்னும் அருமையான சீரியல். ஒவ்வொரு வியாழனும் இந்திய மொழிகளின் சிறந்த சிறு கதைகள் குறும் படங்களாக்கப் பட்டன. (அப்போது குறும்படம் என்னும் கான்செப்ட்டே கிடையாது. வெள்ளியன்று கர் ஜமாய் என்னும் நகைச்சுவை தொடர். அதைத் தவிர சத்யஜித்ரே இயக்கிய கதைகள். ஒவ்வொரு வாரமும் ஒரு கதை. மிக அருமையாக இருக்கும்.

ஞாயிறன்று காலை 'சீக்ரெட்ஸ் ஆஃப் தி சீ' என்னும் நல்ல, ஆனால் மெதுவாக நகரும் டாகுமெண்டரி. ஞாயிறு இரவு சித்தார்த் பாசு நடத்தும் க்விஸ் எல்லாம் பார்த்திருக்கிறேன். தினசரி இரவில் 'jewel on the crown' என்னும் ஆங்கில சீரியல் ஆங்கிலேயர்களுக்கும், இந்தியர்களுக்கும் இருந்த நல்ல உறவை சித்தரித்த சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவை பிரதிபலித்த கதை. 

1987ல் நான் வெளிநாடு சென்று விட இங்கே ரீஜினல் ஒளிபரப்பும் தெரிகிறது என்றார்கள்.  அங்கே செட் டாப் பாக்ஸ் என்னும் விஷயம் வரும் வரை வீடியோ காசெட்தான். ராமாயணம், மகாபாரதம் போன்றவைகளை வீடியோ காசெட்டில் பார்த்தோம். செட் டாப் பாக்ஸ் வந்ததும், என் குழந்தைகளோடு சேர்ந்து 'ஸ்மால் ஒண்டெர்' , 'டீன் ஏஜ் மியூடென்ட் நிஞ்சா டர்ட்ல்' போன்றவை களோடு  டெரிக் ஓ ப்ரெய்ன் நடத்திய போர்ன்விடா க்விஸ் கான்டெஸ்ட்டும் தவற விட்டதில்லை. அவர்களோடு சேர்ந்து  கிரேஸி மோகனின் சீரியல்களை அப்போது விரும்பி பார்த்திருக்கிறோம். ரமணி VS ரமணி மிகவும் ரசித்து பார்த்த சீரியல். அந்த நகைச்சுவை, வாசுகியின் நடிப்போடு மறக்க முடியாத சீரியல்.  அதே போல 'வீட்டுக்கு வீடு லூட்டி' என்னும் சீரியலும் சிறப்பான நகைச்சுவை தொடர். அதுவரை சினிமாக்களில் அழுமூஞ்சியாகவே பார்த்திருந்த சரண்யா இதில் நகைச்சுவையில் கலக்கியிருப்பார். 

குழந்தைகள் வளர,வளர அவர்கள் விரும்பி பார்த்த 'ஃபிரண்ட்ஸ்', 'டூ அண்ட் ஹாஃப் மென்' போன்ற சீரியல்களை அவ்வப்பொழுது பார்த்ததுண்டு. 

பின் 1998ல் இந்தியா திரும்பிய பொழுது, மதியம் ஒரு மணிக்கு சன் டி.வி.யில் ஒளிபரப்பப்பட்ட 'சொந்தம்' என்னும் சீரியலை விடாமல் பார்த்தேன். சிவசங்கரியின் கதையான இதில் மௌனிகா  நடித்திருந்தார். எங்கேயாவது வெளியே சென்றால் ஒரு மணிக்குள்  வீடு திரும்ப வேண்டும் என்று மனம் 
பரக்கும்.அல்லது இந்த சீரியல் முடிந்ததும் கிளம்புவேன். "சே! கேவலம் ஒரு சீரியல் நம்மை முடக்குவதா?" என்று தோன்ற சீரியல்களை பார்ப்பதை நிறுத்தினேன்  ஆயினும் வீட்டில் மற்றவர்கள் பார்த்ததால் நானும் சித்தி, அண்ணி,சஹானா போன்ற சீரியல்களை பார்க்க நேர்ந்தது. எனக்கு ராதிகாவின்    நடிப்பு மிகவும் பிடிக்கும்.  தினசரி சீரியங்களில் அவரைப் பார்த்து எங்கேயாவது அவர் நடிப்பு அலுத்து விடப் போகிறது என்பதால் அவர் நடித்த அண்ணாமலை, வாணி,ராணி போன்ற சீரியல்களை பார்ப்பதை தவிர்த்து விட்டேன். 

எனக்கு ஒரு ராசி, நான் ஏதாவது சீரியலை பார்த்தால் அதன் முடிவை பார்க்க முடியாமல் போய் விடும். சமீபத்தில் ரேவதிக்காக அழகு என்னும் சீரியலை பார்த்தேன், அதை அவர்களே நிறுத்தி விட்டார்கள். ஹாஹா! எப்படி என் ராசி?   
--------------------

என்னுடைய சென்ற பதிவில் உணவின் பெயர் கொண்ட உணவகங்களின் பெயர்கள் கேட்டிருந்தேன். நிறைய பேர் அதை சாய்சில் விட்டு விட்டார்கள். எனக்குத் தெரிந்தவற்றை சொல்கிறேன்.
தலப்பாக்கட்டி பிரியாணி 
Coffee day
Chai point
99 Dosa
Pizza hut
Pizza inn
Dominos Pizza
Arun Ice creams
Burger King
முருகன் இட்லி கடை 
மதுரை இட்லி 



Wednesday, September 1, 2021

மசாலா சாட்

மசாலா சாட் 


கம்சன் தன் தங்கை தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என தெரிந்தவுடன் கணவன் ,மனைவி இருவரையும் சிறையில் அடைத்தான்...*

இவர்களுக்கு  குழந்தை பிறக்கும் சமயம், ஒரு கழுதையை சிறை வாசலில் கட்டி வைத்தான்.சிறைக்காவலர்களை அவன் நம்பவில்லை.கழுதைக்கு நுகரும் சக்தி மிக அதிகம்..குழந்தை பிறந்ததும் கத்த துவங்கி விடும்.கம்சன் வந்து கொன்று விடுவான்.இப்படி ஏழு குழந்தைகள் இறந்தன..*

எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் பிறக்கிறார் ..உடனே தேவகி கணவன் வசுதேவன்...தயவு செய்து கத்தி விடாதே என கழுதை காலில் விழுந்து கெஞ்சினான்..கழுதையும் கத்தவில்லை..கிருஷ்ணர் அவதாரம் நிகழ்ந்தது

எனவேதான் காரியம் ஆகனும்னா கழுதையானாலும் காலை பிடி என்ற பழமொழி வந்தது..!!*

கர்நாடகாவில் அமிர்தாபுரத்து அமிர்தேஷ்வரான கோவிலில் வெளிச்சுவரில் வசுதேவர் கழுதை காலில் விழும் சிற்பம் உள்ளது.

மேற்படி செய்தி வாட்ஸாப்பில் வந்தது. 

ஜென்மாஷ்டமிக்காக என் மாப்பிள்ளையும், பேத்தியும் பாடியிருக்கும் கிருஷ்ணாஷ்டகம் 


ஞாயிறன்று மதிய உணவருந்திய பின் ஐஸ் க்ரீம் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று எனக்கு மட்டுமல்ல, என் மருமகளுக்கும் தோன்ற ஸ்விக்கியில் ஐஸ் க்ரீம் ஆர்டர் கொடுத்தாள். ஐஸ்க்ரீமோடு ஒரு சிறிய பாட்டில் கோக்க கோலா, ஒரு பார் சாக்லேட், நாலு பலூன்கள் எல்லாம் வந்தன. அன்று ஸ்விக்கிக்கு பிறந்த நாளாம், அதனால் இந்த எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ். 


நூறாவது நாள் படம் வெளியான பொழுது நான் திருச்சியில் இருந்தேன். அந்தப் படத்திற்கு சென்றபொழுது(சிவாலயா காம்ப்ளெக்ஸ்) இயக்குனர் மணிவண்ணன் ரசிகர்கள்,"நூறாவது நாள் படத்திற்கு இன்று நூறாவது நாள் என்று இனிப்பு வழங்கியது நினைவிற்கு வந்தது.  

'யவனிகா என்னும் சுஜாதாவின் கதை தொடராக விகடனில் வந்ததை சேகரித்து பைண்ட் பண்ணிய புத்தகம் கிடைத்தது. அப்பொழுது விகடன் குட்டியாக இருந்திருக்கிறது. எந்த வருடத்திலிருந்து இந்த பெரிய சைஸுக்கு மாறியது என்று நினைவில் இல்லை. அதில் ஒரு குட்டி கதை. 

ஒரு காக்கை மரத்தின் உச்சிக்கிளையில் எந்த வேலையும் செய்யாமல் ஒரு நாள் முழுவதும்  அமர்ந்திருந்தது. அதை பார்த்த ஒரு குட்டி முயல்,"நானும் உன்னைப் போல எந்த வேலையும் செய்யாமல் அமர்ந்திருக்கட்டுமா?" என்று கேட்டது. அதற்கு காகமும் "சரி" என்றது. அந்த முயல் குட்டி மரத்தின் அடியில் பேசாமல் உட்கார்ந்திருந்தது. திடீரென்று எங்கிருந்தோ வந்த ஒரு நரி அந்த முயலை கவ்விக் கொண்டு போய் விட்டது. மாரல் ஆஃப் தி ஸ்டோரி: எந்த வேலையும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருக்க வேண்டுமென்றால் நாம் ரொம்ப ரொம்ப உயரத்தில் இருக்க வேண்டும்.   

வெட்டியாக ஒரு கேள்வி:

உணவின் பெயரைக் கொண்ட உணவகங்களை குறிப்பிடுங்கள் பார்க்கலாம் உதாரணம் 'தலப்பாகட்டி பிரியாணி'   

சந்திக்கலாம். 







👇

Monday, August 23, 2021

உலகம் சுற்றிய யுவதியோடு ஓர் நேர்காணல்

உலகம் சுற்றிய யுவதியோடு ஓர் நேர்காணல் 


 
நடுவில் நிற்பவர்தான் திரு.ஜெயராமன்(ஜெயா அவர்களின் கணவர்) 

93 வயதாகும் திருமதி ஜெயா ஜெயராமன் அவர்களின் கணவர் இந்திய வெளியுறவுத் துறையில் பணியாற்றியதால் பணி நிமித்தமாக பல்வேறு நாடுகளுக்கு பயணப்பட்டிருக்கிறார். எனவே திருமதி ஜெயா அவர்களுக்கும் பல்வேறு நாடுகளில் வசிக்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது. அவருடைய அந்த அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார். 

வணக்கம்! உங்களுடைய இளமைப் பருவத்தைப் பற்றி கூறுங்களேன்

ஜெ.ஜெ.: இளமைப் பருவத்தைப் பற்றி சிறப்பித்து கூற பெரிதாக ஒன்றும் இல்லை.

எ.பி.: நீங்கள் பிறந்தது எந்த ஊர்? என்ன படித்திருக்கிறீர்கள்?

ஜெ.ஜெ.: பிறந்தது திருவையாறு அருகில் இருக்கும் ஈச்சங்குடி. *பள்ளிக்குச் சென்று படித்ததில்லை(சிரிப்பு)

நான்: அப்படியா? ஏன்? 

ஜெ.ஜெ.: என்னுடைய தாத்தா கோயம்புத்தூரில் டீச்சர் டிரைனிங் ஸ்கூலில் ஆசிரியராக இருந்தார். அவர் ரிட்டையர்ட் ஆகி வந்தவுடன் எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார்.

எ.பி.: உங்களுக்கு எத்தனை வயதில் திருமணம் ஆனது?

ஜெ.ஜெ.: 18 வயதில் நான் என் அம்மாவின் தம்பியை, அதாவது என்  மாமாவையே திருமணம் செய்து கொண்டேன். 

நான்: திருமணத்திற்கு ஜாதகம் பார்த்தார்களா? 

ஜெ.ஜெ.  எங்கள் தாத்தா பார்த்தார். 

எ.பி.:  அப்போது உங்கள் கணவர் என்ன செய்து கொண்டிருந்தார்?

ஜெ.ஜெ.: மினிஸ்டரி ஆஃப் எக்ஸ்டெர்னல் அஃபர்ஸில் டில்லியில் பணியாற்றினார். 

எ.பி.: நீங்கள் முதலில் டில்லிக்குத்தான் சென்றீர்களா? 

ஜெ.ஜெ.: இல்லை, டில்லிக்கு போகவேயில்லை. மாமாவுக்கு சைகோனுக்கு மாற்றல் ஆகி விட்டது. என்னை என் பெற்றோர்கள் கல்கத்தாவுக்கு அழைத்துச் சென்றனர். மாமா, டில்லியிலிருந்து கல்கத்தா வந்தார். அங்கிருந்து கப்பலில் சைகோனுக்கு கிளம்பினோம். கல்கத்தாவிலிருந்து முதலில் சிங்கப்பூர் சென்று அங்கு ஒரு வாரம் தங்கி, பின்னர் அங்கிருந்து சீன கப்பலில் சைகோன் சென்றோம். 

எ.பி.: கப்பல் பயணம்  இருந்தது? சீ சிக்னெஸ் வந்ததா?

ஜெ.ஜெ.: கப்பல் பயணம்  மிகவும் ரசிக்கும்படி இருந்தது. சீ சிக்னெஸ் எதுவும் எனக்கு வரவில்லை. சிங்கப்பூரிலிருந்து சைகோன் சென்ற கப்பல்தான் மிகவும் மோசம். சாப்பிட எதுவும்  கிடைக்கவில்லை. கிடைத்த அவலில் ஊறுகாயை பிசைந்து சாப்பிட்டு காலத்தை ஓட்டினோம். நல்ல வேளை, இரண்டு நாட்கள்தான். 

எ.பி.: மொத்தம் எத்தனை நாட்கள் பயணம்?

ஜெ.ஜெ.: கல்கத்தாவிலிருந்து சிங்கப்பூர் பத்து நாட்கள்.  அங்கிருந்து சைகோன் மூன்றரை நாட்கள். சைகோன் போய் இறங்கிய அடுத்த நாளே எனக்கு  ஆபரேஷன். 

எ.பி.: ஐயையோ! என்னாச்சு?

ஜெ.ஜெ.: வயிற்று வலி வந்தது. டாக்டர் வந்து பார்த்து விட்டு ஹெர்னியா ஆபரேஷன் பண்ண  வேண்டும் என்று ஆபரேஷன் செய்தார். அவர்தான் நான் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறினார்.

எ.பி.: அப்படியா? பிரசவத்திற்கு ஊருக்கு வந்தீர்களா? 

ஜெ.ஜெ.: இல்லை, அங்குதான் பிரசவம் ஆச்சு. 

எ.பி.:  மருந்து,பத்திய சாப்பாட்டிற்கு என்ன செய்தீர்கள்?

ஜெ.ஜெ.: பத்தியம் எல்லாம் கிடையாது. அந்த ஊர் குருக்கள் மனைவி பருப்பு துவையல், ரசம் செய்து கொடுத்தனுப்புவார். எனக்கு உதவி செய்வதற்காக ஒரு வியட்நாம் பெண் இருந்தது, அதற்கும் பதினெட்டு  வயதுதான். விளையாட்டுத்தனமாக இருக்கும். 

எ.பி.: சைகோனில் நம்முடைய காய்கறிகள், மளிகை சாமான்கள் கிடைக்குமா? 

ஜெ.ஜெ.: காய்கறிகள் கிடைக்கும். மளிகை சாமான்களில் உளுத்தம் பருப்பு, வெண்ணை  போன்றவை கிடைக்காது. 

எ.பி.: புளி?

ஜெ.ஜெ.: புளி கிடைக்கும், மீன் உலர்த்தும் பாயில் போட்டு வைத்திருப்பான்.

எ.பி.: சைகோனில் இந்தியர்கள் இருந்தார்களா? 

ஜெ.ஜெ.: வட இந்தியர்களில் சிந்திக்காரர்கள் நிறைய பேர்கள் இருந்தார்கள். தென் இந்தியர்களில் முஸ்லிம்கள் இருந்தார்கள். நாட்டுக்கோட்டை செட்டியார்கள் இருந்தார்கள். பிராமணர்கள் கிடையாது. கோவிலில் அர்ச்சகர் ஒருவர் இருந்தார். 

எ.பி.: ஓ! அங்கு கோவில்கள் உண்டா? 

ஜெ.ஜெ.: உண்டே! இந்தியர்களுக்கு பொதுவாக ஒரு கோவிலும், தமிழர்களுக்கு நகரத்தார் கட்டிய முத்து மாரியம்மன் கோவிலும் இருந்தது. அங்கு நவராத்திரியில் ஒன்பது நாட்களும் தினசரி கோவில் வளாகத்திலேயே அம்மன் புறப்பாடு நடக்கும். அந்த கோவிலுக்கு சைனாக்காரர்கள் நிறைய பேர் வருவார்கள். 

எ.பி.: சைகோனிலிருந்து எங்கு சென்றீர்கள்? 

ஜெ.ஜெ.: சைகோனிலிருந்து பாண்டிச்சேரி

எ.பி.: பாண்டிசேரியில் எத்தனை வருடம் இருந்தீர்கள்? 

ஜெ.ஜெ.: ஒன்றரை வருடம் இருந்தோம். அங்கிருந்து பாரீஸுக்கு மாற்றல் ஆனது. பாண்டிச்சேரியிலிருந்து பம்பாய் சென்று அங்கிருந்து கப்பலில் பாரீஸுக்கு புறப்பட்டோம். 

எ.பி. கப்பலிலா? ஏன் அப்போதெல்லாம் விமானம் கிடையாதா?

 ஜெ.ஜெ.: விமானம் உண்டு. ஆனால் மாமாவுக்கு கப்பல் பயணம்தான் பிடிக்கும். அந்தக் கப்பலும் அத்தனை நன்றாக இருக்கும். அதில் இல்லாத வசதிகள் கிடையாது.  நாங்கள் சூயஸ் கால்வாய் வழியாகச் சென்றோம். நாங்கள் சென்ற கப்பல் சூயஸ் கால்வாயை கடந்த பிறகு அந்தக் கால்வாயை மூடி விட்டார்கள். மூன்று வருடங்கள் கழித்துதான் திறந்தார்கள். என் தம்பி கேப் டவுனை சுற்றிக் கொண்டு சென்றான். 

எ.பி.: பாரீஸ் உங்களுக்கு பிடித்ததா?

ஜெ.ஜெ.: ஓ! இப்போது கொண்டு விட்டாலும் நான் அங்கு இருப்பேன். மிகவும் அழகான ஊர். 

எ.பி.: பிரெஞ்சுக்காரர்கள் கர்வம் பிடித்தவர்கள் என்பார்களே?

ஜெ.ஜெ.: அப்படியெல்லாம் இல்லை. மிகவும் நட்பாகவும், மரியாதையாகவும் பழகுவார்கள்.  

எ.பி.: அங்கு நம்ம ஊர் கறிகாய்கள் கிடைக்குமா? 

ஜெ.ஜெ.: கிடைக்காது. லண்டனிலிருந்து வரவழைக்க வேண்டும். வெண்டைக்காயெல்லாம் காய்ந்து மாலையாக கட்டி வரும். அதை வெந்நீரில் ஊற வைத்து சமைப்போம். 

பிரான்சிலிருந்து துருக்கிக்கு மாற்றல் ஆகியது. அங்கு சென்றதும் மாமாவுக்கு ப்ளூரசி வந்து விட்டதால் திரும்பி வந்து விட்டார். பின்னர் 1969ல் ஜப்பானுக்குச் சென்றோம். எக்ஸ்போ 70 நடந்த பொழுது ஜப்பானில்தான் இருந்தோம். 


எக்ஸ்போ 70க்கு தயாராகிக் கொண்டிருக்கும் பெவிலியன்கள் 

எ.பி.: எக்ஸ்போ 70 சமயத்தில் ஜப்பானில் இருந்தீர்களா? அந்த சமயத்தில்தான்  உலகம் சுற்றும் வாலிபன் படம் எடுக்கப் பட்டது.

ஜெ.ஜெ.: தெரியும். உலகம் சுற்றும் வாலிபன் ஷூட்டிங்  சமயத்தில் எம்.ஜி.ஆர்., "வீட்டு சாப்பாடு சாப்பிட வேண்டும் போலிருக்கிறது, தயிர் சாதம் எங்கேயாவது கிடைக்குமா?" என்று மணியனிடம் கேட்டிருக்கிறார். மணியன் உடனே என் கணவரிடம் சொல்லி, எம்.ஜி.ஆரை எங்கள் வீட்டுக்கு சாப்பிட அழைத்து வந்தார்.

எ.பி.: இந்த நிகழ்ச்சியை மணியன் இதயம் பேசுகிறது புத்தகத்தில் எழுதியிருக்கிறார். புகைப்படம் கூட போட்டிருந்தார். அந்த புகைப்படம் இருக்கிறதா?

ஜெ.ஜெ.: இல்லை, அந்த புகைப்படங்களை மணியன் எடுத்துச் சென்றார், திருப்பித் தரவே இல்லை. பல புகைப்படங்கள்,பலர் எடுத்துச் சென்று விட்டார்கள் எதுவும் திரும்பி வரவில்லை. 

அதற்குப் பிறகு டாக்கா சென்றோம். 

எ.பி.: பங்களாதேஷ்..?

ஜெ.ஜெ.: அப்போது அது ஈஸ்ட் பாகிஸ்தான். நாங்கள் அங்கு இருந்த பொழுதுதான் வார் தொடங்கியது. அதெல்லாம் மிகவும் கடினமான காலங்கள். ஹவுஸ் அரெஸ்ட் போல கதவை சாத்திக் கொண்டு வீட்டிற்குள் இருக்க வேண்டும். தேவையான சாமான்களை செக்யூரிட்டி வாசலில் வைத்து விடுவார்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். 

அங்கிருந்து கொழும்பு, அதுதான் கடைசி போஸ்டிங், கொழும்பிலிருந்து இந்தியா திரும்பி விட்டோம். என் கணவர் இருபத்தெட்டு வயதில்தான் இந்த வேலையில் சேர்ந்தார். அதனால் நாங்கள் அதிகம் நாடுகளுக்குச் செல்லவில்லை. என் தம்பி பதினெட்டு வயதிலேயே இந்த வேலையில் சேர்ந்ததால் இன்னும் அதிகமான நாடுகளில் பணி புரிந்தான். 

எ.பி.: எம்.ஜி.ஆர். தவிர வேறு வி.ஐ.பி.க்கள் யாரையாவது மீட் பண்ணியிருக்கிறீர்களா? 

ஜெ.ஜெ.: நிறைய பேர்களை பார்த்திருக்கிறேன். வெளி நாடுகளுக்கு வரும் செலிபிரிட்டிஸ் பலர் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். கொழும்புவில் இருந்த பொழுது நடிகை சாவித்திரி எங்கள் வீட்டிற்கு வந்து காபி குடித்திருக்கிறார். 



எ.பி.: இத்தனை நாடுகள் பார்த்திருக்கிறீர்கள், எந்த நாடு உங்களுக்கு மிகவும் பிடித்தது?

நான் முதலில் சென்றது சைகோன், அதனால் அது மிகவும் பிடித்தது. பிறகு பிரான்ஸ். அங்கிருந்தபொழுது ஐரோப்பா முழுவதும் சுற்றி பார்த்தோம். குழந்தைகளும் ஆரம்ப கல்வியை அங்குதான் படித்தார்கள். அவர்களுக்கும் அந்த ஊர் மிகவும் பிடித்தது. 

எ.பி.: வெளி நாட்டில் வசித்து விட்டு இந்தியா வந்த பொழுது எப்படி உணர்ந்தீர்கள்? 

ஜெ.ஜெ.: இரண்டையும் ஒப்பிட முடியாது. வேறு வேறு நிலை. இப்படி கூறினாலும் அவருக்கு நம் நாட்டின் சுகாதாரமற்ற சூழலை ஏற்றுக் கொள்வது  கடினமாகத்தான் இருந்தது. 

எ.பி.: உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு  மிக்க நன்றிமா.

* பள்ளிக்கூடமே சென்றதில்லை என்று கூறும் திருமதி ஜெயா அவர்கள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி இந்த மூன்று பாஷைகளும் பேச,எழுத,படிக்க தெரிந்தவர். அதை தவிர இருந்த நாடுகளின் பாஷைகளை வீட்டில் வேலை செய்தவர்கள் மூலம் கற்றுக் கொண்டாராம். இப்போதும் தினமும் செய்தித்தாள் மற்றும்  வாராந்தரிகளை படிக்கிறார்.  அவருக்கு இன்று (ஆகஸ்ட் 23) பிறந்த நாள். எங்கள் பிளாகின் சார்பாக அவருக்கு பிறந்து நாள் வாழ்த்துக்களை கூறி வணங்கி விடை பெற்றேன். 


Sunday, August 15, 2021

சேமிப்பு

சேமிப்பு


சேமிப்பு என்பது நம் ரத்தத்திலேயே உள்ள ஒரு விஷயம். 90களில் உலகமே மிகப் பெரிய பொருளாதார சரிவை சந்தித்த பொழுது, இந்தியா மட்டும் காப்பாற்ற்ப் பட்டதற்கு நம்முடைய சேமிக்கும் பழக்கம்தான் காரணமாக இருந்து வந்தது. 

ஊதாரித்தனத்தை கண்டித்தும், சேமிப்பை வலியுறுத்தியும் விதம் விதமான கதைகளும், பாடல்களும் சிறு வயது முதற்கொண்டே நமக்கு கற்றுக் கொடுக்கப் பட்டிருக்கின்றன. அவற்றுள் பிரதானமானது 

ஆனா முதலில் அதிகம் செலவானால் 
மானம் இழந்து மதிகெட்டு போனதிசை 
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்  
நல்லாருக்கும் பொல்லனாம் நாடு 

என்னும் ஒளவையாரின் நல்வழி வெண்பா. அதைப் போலவே கம்ப ராமாயணத்தில் இறுதியில் கலக்கமுற்று நிற்கும் ராவணன் நிலையை "கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்" என்று கடன் பட்டவர்களோடு இலங்கேஸ்வரனை ஒப்பிட்டு பேசியிருப்பதிலிருந்தே கடன் வாங்குவது எத்தனை தவறு என்று புரிய வைத்திருக்கிறார்கள். 

நம் பெரியவர்கள் சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள். எங்கள் பாட்டி அடிக்கடி,"ஒண்ணொன்னா சேர்த்தா காசா? ஒருமிக்க சேர்த்தா காசா?" என்று கேட்பார். காசை சேர்ப்பது பற்றி நிறைய பேர்கள், நிறைய விஷயங்கள் எழுதி விட்டார்கள். நான் சேமிப்பின் அடுத்த கட்டத்தைப்பற்றி பேச விரும்புகிறேன். 

பேச்சிலும், எழுத்திலும் சிக்கனத்தை கடைபிடிப்பது நமக்கு மட்டுமல்ல நம் பேச்சை கேட்பவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் கூட நிலம் பயக்கும். திருக்குறளின் பெருமை என்ன? சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்தானே?  மற்றவர்கள் ஒரு பாராவில் எழுதும் விஷயத்தை ராஜாஜி ஒரே வரியில் சொல்லி விடுவார் என்பது அவருடைய பெருமைகளில் ஒன்று. 

நாம் எல்லோரும் கண்டிப்பாக செய்ய வேண்டியது, நம் சக்தியை வீணாக்காமல் இருத்தல். நம்முடைய எனர்ஜி ஒன்பது துவாரங்கள் வழியே மிகவும் பொறுப்பற்ற முறையில் நம்மால் வீணடிக்கப் படுகிறது. அதை நெறி படுத்தவும், சேமிக்கவும்தான் நம்முடைய மதம் உண்ணா நோன்பு, மௌன விரதம் போன்றவற்றை வலியுறுத்துகிறது. 

எந்த புலனை சிக்கனமாக பயன்படுத்துகிறோமோ அந்த புலன் தன்னுடைய வீர்யத்தை இழக்காது. மஹாபாரதத்தில் தன்னுடைய கண்களை கட்டிக்கொண்டதால் காந்தாரியின் பார்வைக்கு மிகுந்த தீட்சண்யம் உண்டாகிவிடுகிறது. அதனால்தான் தன்னுடைய மகனான துரியோதனனின் உடலை தான் பார்ப்பதன் மூலம் வஜ்ஜிரம் போல் உறுதியாக்குகிறாள். 

மூச்சு பயிற்சிகளில் கற்றுக் கொடுப்பது என்ன? நிதானமான மூச்சு!
ஒருவன் தன வாழ் நாளில் இவ்வளவு மூச்சுதான் விட வேண்டும் என்று இருக்கும், பிராணாயாமம் போன்ற பயிற்சிகளின் மூலம் நமக்கென்று வழங்கப்பட்டிருக்கும் மூச்சை வைத்துக் கொண்டே அதிக நாட்கள் வாழ முடியும். உதாரணமாக நீங்கள் ஒரு நாளைக்கு நூறு முறை ஸ்வாசிக்கிறீர்கள் என்றால் அதை எண்பதாக உங்களால் குறைக்க முடியும் என்னும் பொழுது நீங்கள் ஒரு நாளைக்கு இருபது மூச்சுகளை சேமிக்கிறீர்கள்,அதற்கேற்றார் போல் உங்கள் ஆயுள் நீட்டிக்கப்படும்.  கோபப்படும் பொழுதும், காம வசப்படும் பொழுதும் மூச்சு தாறுமாறாக போவதால் அவற்றை குறைக்க வேண்டும் என்கிறார்கள்.  இதற்காகத்தான் நம் நாட்டில் ஆரோக்கியமான வாழ்விற்கு நாளிரண்டு, வாரம் இரண்டு, மாதம், இரண்டு, வருடம் இரண்டு என்ற பழக்கத்தை பின்பற்ற வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள். 

அதாவது ஒரு நாளைக்கு இரண்டு முறை மலம் கழிக்க வேண்டும், வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும், மாதத்திற்கு இரண்டு முறைதான் தாம்பத்ய கொள்ள வேண்டும், வருடத்திற்கு இரண்டு முறை வயிற்றை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். 

நம் மதத்தை பொறுத்த வரை நாம் இந்த பிறவியில் வாழ்வதற்கு தேவையான செல்வத்தை சேர்ப்பதுஎவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அடுத்த பிறவிக்கான புண்ணியங்களை தேடுவதும். அதையும் நாம் இப்போதே சேர்க்க வேண்டும். 

பெரியாழ்வாரின் சரித்திரத்தில் வரும் ஒரு சுவையான சம்பவம் பொற்கிழி அறுத்தல். பெரியாழ்வார் அவதரித்தது பாண்டிய நாடு. அவர் வாழ்ந்த காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் ஒரு முறை நகர் வலம் வந்த பொழுது,வடக்கிலிருந்து வந்த பைராகி ஒருவர் ஒரு பாடலை பாடிக் கொண்டு செல்கிறார். அதில், "இரவிற்கான உணவை பகலிலேயே தயார் செய்து கொள்ள வேண்டும், மழை காலத்திற்கு தேவையான உணவை வெய்யில் காலத்திலேயே தேடிக்கொள்ள வேணும், முதுமைக்கு தேவையான  செல்வத்தை இளமையிலேயே சம்பாதித்துக் கொள்ள வேண்டும். அடுத்த பிறவியில் சுகத்தை பெறுவதற்கு இந்த பிறவியியிலேயே புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும்" என்று பொருள்பட அமைந்திருக்கிறது. அதைக் கேட்ட அரசனுக்கு மற்ற விஷயங்கள் புரிந்தாலும், அடுத்த பிறவிக்கான புண்ணியத்தை இந்த ஜென்மத்திலேயே எப்படி சேர்த்துக் கொள்வது என்பதில் சந்தேகம் வர, அதற்கான வழியை சொல்பவர்க்கு பரிசாக  வழங்குவதற்காக பொற்காசுகளை ஒரு மூட்டையாக கட்டி, சரியான விடை சொல்பவருக்கு அது பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கிறான். அதை பெரியாழ்வார் சரியான விடை கூறி பெற்றுக் கொண்டார் என்று கதை செல்லும். இங்கே விஷயம், அடுத்த பிறவிக்கான புண்ணியத்தை இந்த பிறவியிலேயே தேடிக் கொள்ள வேண்டும் என்பதுதான். 

அந்த புண்ணியத்தை எப்படி சேர்ப்பது என்று திருமூலர் மிகவும் சுலபமாக வழி காட்டுகிறார்.
யாவர்க்குமாம் இறைவனுக்கொரு பச்சிலை 
யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை 
யாவர்க்குமாம் உண்ணும் உணவில் ஒரு கவளம் 
யாவர்க்குமாம் இனிய வார்த்தை கூறுதல் 
எவ்வளவு எளிய முறை! தினசரி கடவுளுக்கு ஒரு அருகம் புல்லோ, துளசி தளமோ, வில்வ தளமோ சாற்றலாம். பசுவிற்கு ஒரு கையளவு புல் கொடுக்கலாம், (இங்கே பசு என்பதை கால்நடை என்று கொண்டு ஏதாவது ரூ விலங்கிற்கு உணவளிக்கலாம்), பெரிய அளவில் அன்னதானம் செய்ய வேண்டும் என்பதில்லை, நாம் சாப்பிடும் சாப்பாட்டில் ஒரு கவளத்தை யாருக்காவது தரலாம், இவை எதுவுமே செய்ய முடியாதென்றால் இனிமையாக பேசலாம் என்கிறார். செய்ய முடியாதா என்ன? 

சில வாரங்களுக்கு முன்பு மத்யமரில் சேமிப்பு என்பதை பற்றி எழுதச் சொல்லியிருந்தார்கள். மற்றவர்கள் ஆர்.டி., இன்சூரன்ஸ், நகைச்சீட்டு என்பவை பற்றி எழுதிய பொழுது நான் சேமிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல விரும்பி இந்த கட்டுரையை எழுதினேன். குறைவான பேர்களே வாசித்திருந்தார்கள் ஆனாலும் POTW( Post of the week) கிடைத்தது.

Sunday, August 8, 2021

மாறும் சரித்திரங்கள்!

மாறும் சரித்திரங்கள்!

சில நாட்களுக்கு முன்பு என் சிநேகிதி அவருடைய மாமா ஒரு அட்டைப் பெட்டி நிறைய புத்தகங்கள் கொடுத்திருப்பதாகவும், அதில் எனக்கு தேவையானவற்றை எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தார். ஆனால் அந்தப் புத்தகங்களை படித்து விட்டு திருப்பித் தர வேண்டும் என்பது நிபந்தனை. 

சென்ற வாரம் சென்னைக்கு ஒருபறவைப் பயணம் அதாங்க ஃபிளையிங் விசிட் அடிக்க வேண்டி வந்தது. திரும்பி வரும் பொழுது அந்த சிநேகிதியின் வீட்டிற்குச் சென்று சில புத்தகங்களை  தேர்ந்தெடுத்துக் கொண்டு வந்தேன். அவற்றில் நான் தேடிக் கொண்டிருக்கும் எஸ்.ஏ.பி., பி.வி.ஆரின் புத்தகங்கள் இல்லை. இனி, அவ்வப்பொழுது ஸ்ரீராமுக்கு போட்டியாக பொக்கிஷ பதிவுகள் போடலாம் என்று ஒரு எண்ணம் எட்டிப்  பார்க்கிறது.ஆனால் நினைப்பதை எல்லாம் செயல் படுத்தும் செயல் வீராங்கனை கிடையாது என்பதால் ஸ்ரீராம் தைரியமாக இருக்கலாம்.  அவற்றுள் ஒன்று ரா.கி.ரங்கராஜன் அவர்கள் அண்ணா நகர் டைம்ஸில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு புத்தகத்தின் பெயர் 'நாலு திசையிலும் சந்தோஷம்'. மிகவும் ஸ்வாரஸ்யமான கட்டுரைகள்.  


ஒரு முறை குமுதத்தில் பிரபலமானவர்களின் தொலைபேசி எண்ணை வெளியிட்டு, வாசகர்கள் அவர்களை அழைத்து அந்த பிரபலங்களோடு உரையாடலாம் என்று அறிவித்தார்களாம். அப்போது நடிகை லட்சுமி திரை வானில் ஜொலித்துக் கொண்டிருந்த நேரமாம். அவரை  தொலை பேசியில் அழைத்தால் அவர் வீட்டிலிருந்து உங்களோடு அவர் உரையாடுவார் என்று அறிவித்திருந்தார்களாம். ஆனால் லட்சுமி வீட்டின் எண்ணிற்குப் பதிலாக வேறு ஒரு எண் தவறாக அச்சாகி விட்டதாம். என்ன செய்வது என்று யோசித்த பொழுது, எஸ்.ஏ.பி. அவர்கள் ஒரு ஐடியா சொன்னாராம், அதன்படி அந்த தவறான எண்ணை தொடர்பு கொண்டார்களாம், நல்ல வேலையாக அது ஒரு அலுவலக எண்ணாக இல்லாமல் ஒரு மத்தியதர குடும்பத்தின் எண்ணாம். அவர்களிடம், "நடிகை லட்சுமி உங்கள் வீட்டிற்கு வந்து இரண்டு மணி நேரங்கள் இருந்து நேயர்களோடு உரையாடுவார், உங்களுக்கு சம்மதமா?" என்று கேட்டதும் அவர்கள்  மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டார்களாம். லட்சுமியும் அதற்கு சம்மதித்தாராம், திட்டமிட்டபடி அந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்ததாம். அதற்கு பிறகு அந்த வீட்டிற்கு நடிகை லட்சுமி இருக்காங்களா? அவங்களோடு பேசணும்" என்று எத்தனை கால்கள் வந்ததோ?


எஸ்.ஏ.பி. இப்படி என்றால் வேறொரு பத்திரிகையாசிரியர் இக்கட்டை சமாளித்த விதத்தையும் சொல்லியிருக்கிறார். அதை பின்னொரு சமயம் பார்க்கலாம். இந்த கட்டுரையில் இணைப்பதற்காக இளம் வயது லட்சுமி டெலிபோனில்  பேசுவது போல் புகைப்படம் ஏதாவது கிடைக்குமா? என்று இணையத்தில் தேடினேன். கிடைக்கவில்லை. actress Lakshmi என்றுடைப்பினால் அதுவாகவே  actress Laksmi daughter என்று அடித்து அவர் மகளின் புகைப்படங்களை காட்டுகிறது. திருத்தினால் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், லட்சுமி ராய் இவர்கள்... காலம் இரக்கமற்றது, எப்பேர்ப்பட்ட சாதனையாளர்களையும் மறந்து விடுகிறது.

****************************************
பாரசீக கவிஞராகிய உமர் கய்யாமின் பெயர் உமர்தானாம். கய்யாம் என்றால் பாரசீக மொழியில் கூடாரம் அடிப்பவன் என்று பொருளாம். அந்த தொழில் செய்யும் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் உமர்கய்யாம் என்று அழைக்கப் பட்டாராம். ஒரு வகையில் ஜாதிப் பெயர் என்று கூறலாம். இதிலிருந்து ஜாதிப் பெயரை வைத்துக் கொள்வது உலகம் முழுமைக்கும் பொதுவானது என்பது புரிகிறது. இந்தியாவில் தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் இன்னமும் ஜாதிப் பெயரை போட்டுக் கொள்கிறார்கள். தமிழகத்தில் பெயரளவில் அதை ஒழித்துவிட்டோம். 

தமிழ் நாட்டு பாடநூல் நிறுவனம் தமிழ் பாடங்களில் இடம் பெறும்  அறிஞர்களின் பெயரில் இருக்கும் ஜாதிப் பெயரை நீக்க பரிந்துரைக்க, தமிழகம் அப்படியே உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, மகாவித்வான்.மீனாட்சி சுந்தரம் பிள்ளை போன்றவர்களின் பெயர்களுக்கு பின்னால் இருக்கும் ஜாதி அடையாளங்கள் நீக்கப்பட்டு விடும். இதில் ஒரே ஒரு பிரச்சனைதான்,இன்னும் 25 வருடங்களுக்குப் பிறகு ஆராய்ச்சி செய்யும் யாராவது உ.வே.சாமிநாத அய்யர் வேறு, சாமிநாதன் வேறு, இந்த சாமிநாதன்தான் தமிழ் தாத்தா, அவர் வெறும் வைதீகர் என்று கிளப்பி விடாமல் இருக்க வேண்டும். சரித்திரங்கள் இப்படித்தானே திரிக்கப்படுகின்றன.  

***************

Monday, August 2, 2021

வாழ்க்கையும் கிரிக்கெட்டும்

 வாழ்க்கையும் கிரிக்கெட்டும் 


ஜெயராம சர்மா தன்னுடைய உபந்யாஸத்தில் வாழ்க்கையை கிரிக்கெட்டோடு ஒப்பிட்டு  வேதாந்த கிரிக்கெட் என்று ஒன்று கூறுவார். சமீபத்தில் நான் கேட்ட யூ டியூப் ஒன்றில் சுகி சிவம் அவர்களும் வாழ்க்கையை கிரிக்கெட்டோடு ஒப்பிட்டு பேசியிருந்தது சிறப்பாக இருந்தது. 


முதலில் ஒருவன் பேட்டை எடுத்துக் கொண்டு வருகிறான், அவனை அவுட் ஆக்க இன்னொருவன் பந்தை எடுத்துக் கொண்டு வருகிறான், இது ஒத்தைக்கு ஒத்தை சரி,  அவனை ஒழித்துக் கட்ட சுற்றி ஒரு பதினோரு பேர்கள்  நிற்கிறார்களே..? நாம் வெற்றி அடையக் கூடாது என்று பலபேர் முயற்சி செய்வார்கள். 

நம்மோடு சேர்ந்து ஆட வந்திருக்கும்  இன்னொரு பேட்ஸ்மேன் நம்மை அழைக்கிறானே என்று ஓடத் துவங்குவோம், அவன் ஓடி வராமல் திரும்ப போய் தன்னிடத்தை  ஸ்திரப்படுத்திக்  கொண்டு விடுவான், நாம் அவுட் ஆகி விடுவோம். நம் எதிரிகளால்தான் நமக்கு தோல்வி என்று கூறி விட முடியாது, சில சமயங்களில் நம்மைச் சேர்ந்தவனே நம்மை கவிழ்த்து விடுவான்  என்பதற்கு உதாரணமாக இதைச் சொல்லலாம். 

இந்த பதினோரு பேர் வந்தது இருக்கட்டும், ஒரு பத்தாயிரம் பேர்கள் வந்திருக்கிறார்களே? அவர்கள் நான்கு ரன்கள் அடித்தாலும் ஆரவாரம் செய்கிறார்கள், அவுட் ஆனாலும் ஆரவாரம் செய்கிறார்கள். 'வாழ்ந்தாலும் பேசும், தாழ்ந்தாலும் ஏசும்..'  என்று ஒரு திரைப்பட பாடல் உண்டு. அதற்கு உதாரணம் இதுதான். நாம் என்ன செய்தாலும் கருத்து சொல்ல காத்திருப்பார்கள்.  ஆனால் அந்த பத்தாயிரம் பேர்களும் சேர்ந்து அவுட் என்று கத்தினாலும், அம்பயர் என்ற ஒற்றை ஆள் நாட் அவுட் என்று சைகை காட்டி விட்டால் அந்த பத்தாயிரம் பேர்களின் கூச்சலும் அடங்கி விடும். அசத்தியத்தின் குரல் எத்தனை வலிவுடையதாக  இருந்தாலும்,சத்தியத்தின் மெல்லிய குரல் அதை அடக்கி விடும் என்னும் அருமையான தத்துவம் இங்கே நிலை கொள்கிறது. 

Tuesday, July 20, 2021

அபார்ட்மெண்ட் அலப்பறைகள்!

அபார்ட்மெண்ட் அலப்பறைகள்!

அளவற்ற காற்று, அருகாமையில் அங்காடி 
பத்துநிமிட நடையில் பேருந்தில் பயணிக்கலாம் 
நிலத்தடியில் நீருக்கு பஞ்சமில்லை என்று 
பல கூறி  அடுக்குமாடி குடியிருப்பில் 
வீடொன்றை விற்று விட்ட     
வித்தகன் சொன்னது பொய்யில்லை 
சொல்லாமல் விட்டது 
இசையென்ற பெயரில் இரைச்சலாய் ஓசை 
விரும்பினாலும் வெறுத்தாலும் வறுபடும் மீன்வாசம்
பால் பாக்கெட் திருட்டு, பறிபோகும் செய்தித்தாள் 
இன்னும் ஜாதிச்சண்டை, இனச்சண்டை,மொழிச்சண்டை 
இத்தனையும் உண்டு எங்கள் குடியிருப்பில்  

இது எப்போதோ அப்பார்ட்மெண்ட் வாசம் பற்றி நான் எழுதியது.

பெரிய குடியிருப்பு வளாகங்களில் வசிப்பதில் பல சௌகரியங்கள் உண்டு.  குழந்தைகள் வெளி நாட்டிலோ, வெளி ஊர்களிலோ இருக்க, இங்கே தனியாக இருக்கும் முதியவர்களுக்கு பாதுகாப்பு,பொழுதுபோக்கு எல்லாம் கிடைத்துவிடும். சிறு குழந்தைகளுக்கு தோழர்களும் கிடைத்து, விளையாட இடமும் கிடைக்கும். அவ்வப்பொழுது வாயை மெல்ல அவலும் கிடைக்கும்.

அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் ஒத்துழைக்காவிட்டால் சமயங்களில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடியிருப்புகளில் வசிப்பவர்கள் நாய் வளர்த்தால் அதனால் வரும் சண்டைகள்... எங்கள் குடியிருப்பில் இந்த செல்லங்களால் அடிக்கடி சண்டை வரும். அதனால் சில சமயங்களில் போலீசும் வரும். 

அன்று நடைப் பயிற்சிக்குச் சென்ற பொழுது ஒரு பிளாக் முன்பு கொஞ்சம் கும்பல், சில போலீசும் நின்று கொண்டிருந்தார்கள். விசாரித்ததில் யாரோ ஒருவன் பொண்டாட்டியை அடித்திருக்கிறான், சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசை வரவழைத்து விட்டனர் என்று தெரிந்தது. அப்போது இரண்டு பேர் பேசிக் கொண்டது காதில் விழுந்தது:

"என்ன சார்? வழக்கம் போல நாய் தகறாரா?" 

"இல்லையில்லை, எவனோ ஒருத்தன் பொண்டாட்டிய போட்டு அடிச்சிருக்கான்."

"ஓ! அந்த நாயா?" 

இதைக் கேட்டு எனக்கு சிரிப்பு வந்தது. அதே சமயத்தில் இந்த உரையாடல் எங்கேயாவது நிஜமான நாயின் காதில் விழுந்து, அது கோவித்துக் கொண்டு விடப்போகிறது என்றும் கவலையும் வந்தது.

தமிழ் சினிமாக்களில் இன்னும் கதாநாயகியை, கதாநாயகன் பொது இடத்தில் பளீரென்று அறைவது போன்ற காட்சிகளை வைக்கிறார்கள்.  நல்ல வேளை, அறை வாங்கிய நாயகி கன்னங்களைத் தடவியபடி,'சுகம்,சுகம்,அது இன்பமான துன்பமானது..' என்று பாடுவதில்லை. 

**************************************

மற்றொரு சுவாரஸ்யம் டெலிகிராம் க்ரூபில் நடந்தது. எங்கள் வளாகத்தில் டெலிக்ராமில் நிறைய குழுக்கள் இருக்கின்றன. பொதுவாக ஒரு க்ரூப், ஆண்கள் க்ரூப்,பெண்கள் க்ரூப், இதைத்தவிர அந்தந்த மாநில குழுக்கள். இதில் பொதுவான பெண்கள் குழுவில் எல்லா மாநிலத்தை சேர்ந்தவர்களும் உண்டு. அப்படியிருக்க அதில் தகவல்கள் பரிமாறிக்கொண்டிருக்கும் பொழுது ஹிந்தி பேசும் பெண் ஒருத்தி ஹிந்தியில் ஏதோ ஒரு ஜோக்கை டைப் செய்து அனுப்பியிருக்கிறாள். அது புரியாததால், ஹிந்தி தெரியாத, கோபமும்,குறும்பும் கொண்ட தமிழ்ப் பெண் ஒருத்தி தமிழில் ஒரு செய்தியை டைப் செய்து அனுப்பி விட அவளுக்கு அங்குஒரே கை தட்டல், தமிழ் க்ரூப்பில் "வெரி குட்! இப்படித்தான் இந்த ஹிந்திகாரர்களுக்கு  புகட்ட வேண்டும்" என்று ஏக பாராட்டுகள். 

"எல்லோருக்கும் ஹிந்தி புரியும், என்பதால்தான் அவள் ஹிந்தியில் ஜோக் அனுப்பினாள்" என்று ஹிந்திக்காரர்கள் கூற, "எங்களுக்கு ஹிந்தி தெரியும் நீங்களாக எப்படி அனுமானம் செய்து கொள்ளலாம்? பலரும் இருக்கும் இடத்தில் எல்லோருக்கும் தெரிந்த மொழியில் செய்திகளை பரிமாறிக் கொள்வதுதானே அடிப்படை சபை  நாகரீகம்?" என்று தமிழ்க்காரர்களும் கேட்க, சபை களை கட்டியது. 

****************************************

சமீபத்தில் எனக்கு வந்த வாட்சாப் செய்தி:




Saturday, July 10, 2021

நவாப்பழம் வாங்கலையோ..நவாப்பழம்...

நவாப்பழம் வாங்கலையோ..நவாப்பழம்...


அன்று காய் வாங்குவதற்காக வெளியே சென்ற பொழுது, ஒருவர் வண்டியில் நாவல் பழங்களை வைத்து விற்றுக் கொண்டிருந்தார். அது எத்தனையோ பழைய நினைவுகளை கிளறி விட்டது. பள்ளிக்கூட நாட்களில் ஸ்கூல் வாசலில் ஒரு கூடையில் நாவல் பழங்களை விற்றுக் கொண்டிருக்கும் கிழவி நினைவுக்கு வந்தார் . ஒரு கூறு பத்து பைசா. மந்தார இலையில், அல்லது நீயூஸ் பேப்பரில் கட்டித் தருவார். இப்போதெல்லாம் கூறெல்லாம் கிடையாது கால் கிலோதான் தருவேன் என்றார். 

விநாயகருக்கும், கிருஷ்ணருக்கும் மிகவும் பிடித்தது என்று நம்பப் படுகிறது. விநாயக சதுர்த்தி அன்றும், கோகுலாஷ்டமி அன்றும் முக்கியமான நைவேத்தியம். "ஜம்பு பலஸார பக்ஷிதம் .." என்று ஸ்லோகத்தில் வருகிறது. ஜம்பு பலம் என்பது நாவல் பழம்தான்.

நாவல் மரத்தை ஸ்தல விருட்சமாக கொண்ட கோவில் திருச்சிக்கும், ஸ்ரீரெங்கத்திற்கும் இடையில் இருக்கும் திருவானைக்கோவில். அங்கிருக்கும் ஸ்வாமி ஜம்புகேஸ்வரர் என்றும், அந்த ஷேத்திரமே ஜம்புகேஸ்வரம் என்றும் வழங்கப் படுகிறது. 

இந்த நாவல் பழம் பல நல்ல மருத்துவ குணங்களை கொண்டது.  நாவல் பழம் உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மிகவும் உதவும் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். நாவல் பழத்தின் கொட்டைகளை காய வைத்து இடித்து,அந்த பொடியை நீரில் கொதிக்க வைத்து சர்க்கரை நோயாளிகள் காலையில் வெறும் வயிற்றில் அருந்துவார்கள். இப்போதெல்லாம் அந்த பொடியே கிடைக்கிறது. இதைத் தவிர பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இதயத்திற்கும் நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், இதில் இரும்புசத்து நிறைய இருப்பதால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ரத்தத்தை சுத்தமாக்கும்.எனவே தோல் மினுமினுப்பு பெறும், இதில் இருக்கும் வைட்டமின்கள் 'ஏ' மற்றும் 'சி ' கண்களுக்கு நல்லது என்று நன்மைகளை பட்டியல் இடுகிறது கூகுள். இதுதான் சீசன், வழியில் வண்டியில் யாரவது நாவல் பழம் விற்றுக் கொண்டிருந்தால் வாங்கி நீங்களும் சாப்பிடுங்கள், குழந்தைகளுக்கும் கொடுங்கள்.   

Friday, June 25, 2021

ஒரு ஊரின் கதை

 ஒரு ஊரின் கதை 


இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு திரு.துரை செல்வராஜூ அவர்களின் 'அந்த  காலத்துல' என்னும் கதை எங்கள் பிளாகில் பிரசுரமாகியிருந்தது. அதில் வளர்ச்சி என்ற பெயரில் நம் ஊர்கள் எப்படி பாழடிக்கப்படுகின்றன என்று ஆதங்கப் பட்டிருந்தார். அதற்கு தில்லையகத்து கீதா தன்னுடைய பின்னூட்டத்தில்,"வளர்ச்சி தவிர்க்கப் பட முடியாதது, ஆனால் வளர்ச்சிக்காக நாம் ஊரின் அழகு பாதிக்கப்படுவது சோகம் என்று எழுதியிருந்தார். இதை படித்த பிறகு எனக்கு ஓமான் நினைவு வந்தது. அந்த நாடு ஒரு பருவப் பெண்ணைப் போல் வெகு அழகாக வளர்ந்தது. 

என் கணவர் 1979இல் அங்கு சென்ற பொழுது பாலைவனம் என்றால் பாலைவனம்தான். எங்கும் மொட்டையாக நிற்கும் மலைகளும், மணலும்தானாம். ஏன் நான் 1987 அங்கு சென்ற பொழுது கூட சில முக்கியமான சாலைகளைத் தவிர பெரும்பான்மையான சாலைகள் கச்சா ரோடாகத்தான் இருந்தன. அப்போதுதான் அல் குவைர் எனப்படும் குடியிருப்பு பகுதி உருவாக ஆரம்பித்தது. அப்போதெல்லாம் அங்கிருந்த பி.ஹெச்.எஸ். எனப்படும் ஒரு வட்ட வடிவ கட்டிடம், ஐஸ் ஸ்கேட்டிங் ரிங் எனப்படும் போன்றவை அடையாளங்கள். நாளடைவில் அல்-குவைர்  பிரம்மாண்டமாக  வளர்ந்து விட்ட பிறகு இவை இருக்கும்  இடம் தெரியவில்லை. 

அதைப்  போலத்தான் வாடி கபீர் என்னும் இடமும். ஆரம்பத்தில் வெறும் கச்சா ரோடாக இருந்த இடத்தில் இருட்டிய பிறகு செல்வதற்கு பயப்படுவார்களாம். ஓரளவு வளர்ந்த பிறகு கூட நெருப்புத் துண்டுகளாக ஜொலிக்கும் கண்களோடு நரிகள் ஓடுவதை பார்த்திருக்கிறேன். பின்னர் அந்த இடம் எப்படிப்பட்ட அழகான,பாதுகாப்பான இடமாக மாற்றப்பட்டது!

ஆரம்பத்தில் அங்கு ரியாம் பார்க் என்று ஒரு பார்க் மட்டுமே நகருக்குள் உண்டு. கொஞ்சம் தள்ளி நசீம் கார்டன் என்று ஒரு இடம் உண்டு. அங்குதான் விடுமுறை நாட்களில் பிக்னிக் செல்வோம். நாளடைவில் வாடி கபீர் பார்க், டார்செய்ட் பார்க்,கல்பூ பார்க், குரம் என்னும் இடத்தில் மிகப் பெரிய ரோஸ் கார்டன். விதம் விதமான ரோஜாக்களை அந்த பாலைவனத்தில் பூக்க வைத்தார்கள். அங்கு ஒரு செயற்கை நீர் வீழ்ச்சி வேறு உண்டு. விடுமுறை நாட்களில் மியூஸிக்கல் பவுண்டன் உண்டு.

அதே போல பீச் என்றால் மத்ரா என்னும் இடத்தில் இருந்த கார்னிஷ்தான். அங்கு சமுத்திரத்தில் இறங்கி காலை நனைக்க முடியாது. பேவ்மெண்ட்டில் நடக்கலாம், ஆங்காங்கே போடப்பட்டிருக்கும் பெஞ்சுகளில் உட்காரலாம். விடுமுறை நாட்களில் கண்டாப் என்னும் இடத்திற்குச் செல்வோம். அங்கு போட்டிங் போகலாம். மற்றபடி பெரிதாக எதுவும் கிடையாது. அழ-ஸவாதி என்னும் பீச்சிற்கும் பிக்னிக் செல்வதுண்டு. அங்கு கடலுக்கு நடுவில் அமைந்திருக்கும் ஒரு திட்டிற்குச் சென்று, கையில் கொண்டு சென்றவற்றை சாப்பிட்டு விட்டு வருவோம். அந்தக் கடலில் ஜெல்லி பிஷ் நிறைய இருக்கும். என்பதால் காலை நனைக்க பயமாக இருக்கும். ஒரு முறை பிக்னிக் சென்றபோது நிறைய பேருக்கு காலில் ஜெல்லி பிஷ்ஷின் முட்கள் அடையாக அப்பிள் கொள்ள, அதை மருத்துவரிடம் சென்று எடுக்க வேண்டியதாக போய் விட்டது. அதெல்லாம் அந்தக் காலம், 2000குப் பிறகு அந்த பீச்சை வெகு அழகாக மாற்றி விட்டார்கள். 



எட்டி பீச் என்றொரு இடம் உண்டு. தொன்னூறுகளின் இறுதியில் அப்படி ஒரு இடம் இருக்கிறது என்று கேள்விப்பட்டு நண்பர்களோடு அங்கு சென்ற பொழுது அது ஒரு பயமுறுத்தும் அனுபவமாக இருந்தது. ஏனென்றால்  ஒரு குறிப்பிட்ட தூரம் வரைதான் நல்ல பாதை, அதன் பிறகு மேடும், பள்ளமும், சரளைக் கற்களும், வண்டி குதித்து குதித்து, குழந்தைகள் பயந்து விட்டார்கள். நாங்களும்தான், எங்கேயாவது வண்டி பஞ்சராகிவிடப் போகிறதே என்று நடுக்கம். ஆனால் ஒரே வருடத்திற்குள், அருமையான பாதி அமைத்து விட்டார்கள். பீச்சும் வெகு அழகு. வின்டரில் பல நாடுகளிலிருந்தும் பல அபூர்வ பறவைகள் வரும். 


இவைகளைத் தவிர இன்டர் கான்டினென்டல் பீச், குரம் பீச் போன்ற நகருக்குள் இருந்த கடற்கரைகளில் , வாக்கிங் போவதற்கு நடைபாதை அமைத்து மிகவும் அழகாக்கி விட்டார்கள். அங்கெல்லாம் சிறிய காபி கடைகள் உண்டு, ஆனால் அவற்றில் அடுப்பில் எண்ணெய் சட்டியை வைத்து எதையும் பொரிக்க அனுமதி கிடையாது. எண்ணெய் வாடை சுற்றுப்புறத்தை பாழ் படுத்திவிடக் கூடாது என்பதுதான் காரணம். அங்கு செல்லும் போதெல்லாம் எனக்கு நம்முடைய மெரீனா பீச் நினைவுக்கு வரும். எத்தனை அழகான கடற்கரை!ஆனால்...?

ஸீப்(Seeb) என்னும் கடற்கரை சாலைக்குச் சென்றால் வெகு அழகான பங்களாக்களை காண முடியும்.  நவம்பரிலிருந்து பிப்ரவரி வரை ஓமானுக்கு வருகை தரும் டால்ஃபின்களை காண  சிதாப் என்னும் பீச்சிலிருந்து படகில் அழைத்துச் சென்று நடுக்கடலில் முக்கால் மனை நேரத்திற்கும் மேல் நிறுத்துவார்கள். நமக்கு லைஃப் ஜாக்கெட் தருவார்கள்,அதை அணிந்து கொண்டு விருப்பப்பட்டால் கடலில் குளிக்கலாம். ஆனால் நம் ஊர்க்காரர்கள் டிபன் பாக்ஸை திறந்து விடுவோம். ஐரோப்பியர்கள்தான் குளிப்பார்கள். 

இந்த சிதாப் பீச்சில் கந்தசாமி படத்தில் வரும் "எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி.." பாட்டு படமாக்கப்பட்டிருக்கிறது. பீமா படத்தில் ஒரு பாடல்(விக்ரம்,திரிஷா) ஸீப் பீச்சில் படமாக்கப்பட்டதாக  சொன்னார்கள்.  

ஒரு கிராமமாக இருந்த ஸீப், பொட்டலாக இருந்த காலா(Ghala) என்னும் இடங்களையெல்லாம் மிகவும் சிறப்பாக,அழகாக மாற்றி விட்டார்கள். அங்கெல்லாம் ஒரு இடத்தை நிர்மாணிக்கும் பொழுதே வாட்டர் கனெக்ஷன், ட்ரைனேஜ், டெலிபோன், மற்றும் மின்சார இணைப்புகளையும் முடித்து விடுவார்கள். அதனால் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக தோண்டும் வேலை கிடையாது.

நம் நாட்டின் மக்கள்தொகை, மக்களின் ஒத்துழையாமை, ஊழல் போன்றவை நம் தேசத்தின் அழகை குலைக்கின்றன.   

பி.கு.: என்னிடம் இருந்த புகைப்படங்களை தேட முடியாததால் இணையத்திலிருந்து எடுத்து போட்டிருக்கிறேன். 

Sunday, June 6, 2021

என் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள்

என் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் 

வின்சென்ட் சர்சில் என்றால் சுருட்டு, நேரு என்றால் புஷ் கோட்,

தொப்பி, எம்.ஜி.ஆர் என்றால் கருப்பு கண்ணாடி, குல்லா எப்படி

எல்லோருக்கும் நினைவுக்கு வருமோ? அப்படி உன்னைத்

தெரிந்தவர்களுக்கு பானு என்றால் புத்தகங்கள்தானே நினைவுக்கு

வரும்? நீண்ட வருடங்களுக்குப் பிறகு உன்னை சந்திக்கும் உன்

உறவினர்களும், நண்பர்களும்,”சிறு வயதில் பானு எப்போதும்

புத்தகமும்,கையுமாகத்தானே இருப்பாள்?” என்றுதானே உன்னை

நினைவு கூர்வார்கள்? புஸ்தகம் ஹஸ்த பூஷணம் என்பதற்கு

இணங்க எப்போதும் கையில் என்னோடுதானே காட்சி

அளிப்பாய்?


உன் புக்ககத்து மனிதர்கள், “பொருள்காட்சிகளில் பானுவை

காணும் என்றால் தேடுவது ரொம்ப சுலபம், ஏதாவது புத்தக

ஸ்டாலில்தான் இருப்பாள்” என்பார்கள். அப்படி ஒரு புத்தக

பைத்தியம்.


ஏன் ஒரு முறை நீ புத்தக கண்காட்சியில் புத்தகங்களை வாங்கி

குவித்ததை பார்த்த உன் மகன், ”பாரதி படத்தில் பாரதியாருக்கு

அரண்மனையில் வேலை கிடைத்ததும் வீட்டிற்கு தேவையான

சாமாங்களை அவர் வாங்கி வரப் போகிறார் என்று அவர்

மனைவி நினைத்திருக்க அவர் வண்டி நிறைய புத்தகங்களை

வாங்கிக் கொண்டு வருவார். நீ கூட அப்படித்தான்” என்றானே

ஞாபகம் இருக்கிறதா?

 

அதற்கு இப்பொதென்ன? என்கிறாயா? இந்த வருடமும்

நீ புத்தக கண்காட்சிக்குச் சென்றாய், சுற்றிப் பார்த்தாய், சாருநிவேதிதாவோடு புகைப்படம் எடுத்துக் கொண்டாய், ஆனால்எத்தனை புத்தகங்கள் வாங்கினாய்? ரெண்டே ரெண்டு, கேட்டால் எனக்குப் பிறகு உன்னை யார் பராமரிப்பார்கள்? என்கிறாய். 


இந்த ஆண்ட்ராய்ட் ஃபோன் வந்தாலும் வந்தது, நீ என்னை எங்கே மதிக்கிறாய்? 
இப்போதுதான் எல்லாமே ஆன்லைனில் கிடைக்கிறதே?எல்லாவற்றையும் அதிலேயே படித்து விடுகிறாய். போதும் போதாதற்கு இந்த மத்யமர் வந்தாலும் வந்தது, என்னைத் தீண்ட உனக்கெங்கே நேரம்? புத்தகமும் கையுமாக இருந்த நீ இப்பொது என்னை எங்கே சீண்டுகிறாய்? ஒரு புத்தகத்தை தொட்டால் முடிக்காமல் கீழே வைக்க மாட்டாய், அப்படிபட்டவள் இப்போதெல்லாம் புத்தகங்களை பிரித்து, கொஞ்சம் படிக்கிறாய், புக் மார்க் வைத்துவிட்டு சென்றால்.. எப்போது தொடர்வாய் என்பது நிச்சயமில்லை. புக் மார்க்கால் என் பக்கங்கள் புண்ணானதுதான் மிச்சம்.  

என்னை உன்னிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாமல்  இணைபிரியா பந்தத்தோடு நாம் இருந்தோம். ஹூம் அதெல்லாம்ஒரு காலம்..!

 

Monday, May 24, 2021

இண்டலக்சுவல் குண்டா!

இண்டலக்சுவல் குண்டா!


இந்த முறை புத்தக கண்காட்சியில் சோ எழுதிய 'ஓசாமாஅசா' என்னும் புத்தகம் வாங்கினேன். இப்போதுதான் படித்து முடித்தேன். அதென்ன ஓசாமஅசா என்று தோன்றுகிறதா? "தலைப்பைக் கண்டு திகைக்க வேண்டாம், புரியும்படியாக எதையும் எழுதிவிடக் கூடாது என்னும் என் வைரக்கியத்தை ஒட்டி இந்த தலைப்பை கொடுதிருக்கிறேன்" என்று முன்னுரையில் கூறியிருக்கிறார். 

நாடகம், சினிமா, பத்திரிகையுலகம், அரசியல் என்ற பல்வேறு துறைகளிலிலும் அவர் பழகிய பலதரப்பட்ட மனிதர்களின் நல்ல குணாதிசயங்களை விவரித்திருக்கிறார். குமுதத்தில் தொடராக வந்ததாம். 

சிவாஜி கணேசனிடம் இவர் துக்ளக் பத்திரிகை ஆரம்பிக்கப் போவதாக சொன்னதும், "ஏற்கனவே உன்னுடைய கிறுக்குத்தனத்தைப் பற்றி கேட்க வேண்டாம், பத்திரிகை வேற ஆரம்பிக்கப் போற.. ஒரு குரங்கு கள்ளை குடிச்சு, அதுக்கு தேளும் கொட்டி, அது கண்ணிலே மிளகாய்ப் பொடியையும் தூவிகிட்டா என்ன ஆகுமோ அப்படி இருக்கப் போவுது உன் பத்திரிகை" என்றாராம். 

ஒரு முறை சிவாஜி அழுது நடித்த காட்சி மிகையாக இருந்தது என்று இவர் கூற, இவருக்கு அந்தக் காட்சியில் கதறி அழாமல் சட்டிலாக(subtle) எப்படி நடிப்பது என்று நடித்துக் காண்பித்த பொழுது தனக்கு உடல் சிலிர்த்தது என்கிறார்.

காமராஜைப் பற்றியும், மொரார்ஜி தேசாயைப் பற்றியும் இவர் எழுதியிருப்பதை படித்த பொழுது கண்கள் கலங்குகின்றன. எப்படிபட்ட தலைவர்கள்!

முகமது பின் துக்ளக் நாடகத்தை பார்த்த திரைப்பட இயக்குனர் பீம்சிங், அந்த நாடகத்தில் சமஸ்கிருதம் இறந்து விட்டது என்று வரும் வசனம் எழுதியது மிகவும் தவறு, அதில் எத்தனை தத்துவங்கள் இருக்கின்றன, எத்தனை விஷயங்கள் இருக்கின்றன? மரியாதையா அந்த வசனத்தை எடு என்று கோபப்பட்டராம். 

அந்த நாடகத்தை திரைப்படமாக எடுத்த பொழுது நிறைய பிரச்சனைகளை சந்தித்தார்களாம். இருபத்தியாறு முறைக்கு மேல் காமிராமேன்கள் மாற்றப்பட்டர்களாம். இத்தனை இடஞ்சல்களையும் மீறி படம் முடிக்கப்பட்டு சென்சாருக்கு அனுப்பினால் அங்கு 22 கட் கொடுத்தார்களாம். அதை ஒப்புக் கொண்டு வெளியிட படம் ஹிட்டாம். இத்தனைக்கும் அந்தப் படத்தை எடுத்தது  எம்.ஜி.ஆரின் மானேஜராக இருந்த நாராயணன் என்பவராம்.  

அவருடைய சில நாடகங்களில் சித்தரிக்கப்பட்டிருந்த சில சம்பவங்கள் அப்படியே நிஜமானதாம். 

சோ என்னதான் வலதுசாரியாக இருந்தாலும் கம்யூனிஸ்டுகளை பற்றி, "கம்யூனிஸ்டுகளுடைய சித்தாந்தத்தை நான் சுத்தமாக ஒப்புக் கொள்ளவில்லை.கம்யூனிசம் சுத்தமாக பிடிக்காது,ஆனால் கம்யூனிஸ்டுகள் நேர்மையானவர்கள்" என்கிறார்.

ஜோதி பாசுவை இவர் சந்தித்ததை இவர் விவரித்திருப்பது மிகவும் சுவாரஸ்யம். 

எம்.ஜி.ஆர். உடல் நிலை சரியில்லாமல் போன பொழுது ஜானகி இவரை அழைத்து எம்.ஜி.ஆரின் ஜாதகத்தை இவரிடம் கொடுத்து, "உங்களுக்குத் தெரிந்த நல்ல ஜோசியரிடம் இவருடைய உடல் நிலை பற்றி கணித்து சொல்லச் சொல்லுங்கள், அது மற்றவர்களுக்கு தெரிய வேண்டாம், எனக்கு ரொம்ப கவலையாக இருக்கிறது " என்று கேட்டுக் கொண்டாராம்.  இத்தனைக்கும் அது சோ, எம்.ஜே.ஆரை கடுமையாக விமர்சித்து வந்த நேரமாம்.   

கருணாநிதியை கடுமையாக விமர்சித்த பொழுதும் அவரோடு இருந்த நட்பு பாதிக்கப் படவில்லை என்கிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ் கோயங்கா இவரை இன்டலக்சுவல் குண்டா என்பாராம்.  ஜெயலலிதாவையும், ரஜினியையும் பற்றி பேசும்பொழுது சற்று பட்சபாதமாக பேசுகிறாரோ என்று தோன்றுகிறது.

சுவையான அனுபவங்களின் தொகுப்பு. 

*********

என்னுடைய முந்தைய பதிவில் மேலே இருக்கும் புகைப்படத்தில் இருக்கும் அரசியல்வாதி யார் என்று கேட்டிருந்தேன், அதற்கு மனோ சுவாமிநாதன் அவர்கள் எல்.கே. அத்வானி என்ற சரியான விடையைக் கூறி விட்டார். அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. 

Tuesday, May 11, 2021

மசாலா சாட்

மசாலா சாட் 

அதைப் பற்றி பேச வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஊடகங்களில் இதை தவிர வேறு பேச்சு இல்லை.  எங்கேயோ இருக்கிறது, அங்கே இருக்கிறது, இங்கே இருக்கிறது என்ற நிலை மாறி நம் நெருங்கிய உறவுகளையும், நட்புகளையும் பீடிக்கும் பொழுது கவலை, இப்போது எங்கள் அப்பார்ட்மெண்டிலேயே எங்கள் வீட்டிற்கு நேர் கீழே, இரண்டு மாடிகளுக்கு கீழே ஒருவரை பாதித்து விட்டது என்று அறிந்தவுடன் அச்சம்! ஜன்னல் கதவை திறக்கலாமா? வேண்டாமா? என்று தோன்றுகிறது.  ஆனால் இப்பொழுது கூட முகக்கவசம் அணியாமல் சந்தைகளில் கூடும் மக்களையும், வியாபாரிகளையும் பார்க்கும் பொழுது என்ன சொல்வது என்று தெரியவில்லை.  

என்னதான் லாக் டவுன் என்றாலும் பால், மளிகை சாமான்கள், கறிகாய்கள், இறைச்சி போன்றவை விற்கும் கடைகள் காலை ஆறு மணி முதல் பத்து மணி வரை கர்நாடகாவிலும், மதியம் பன்னிரெண்டு மணி வரை தமிழகத்திலும் திறந்திருக்கும் என்று அரசு அறிவித்திருக்கிறது. அப்படியிருக்க ஞாயிறு அன்று ஏன் கடைகளை முற்றுகை இடவேண்டும் என்று புரியவில்லை. 

--------------------------------------

அன்றொரு நாள் பாலை அடுப்பில் வைத்தவுடன் டொப்,டொப் என்று சப்தம் கேட்டது. பால் திரிந்து விட்டது. அதை இன்னும் சற்று நேரம் அடுப்பில் வைத்து, கிளறி, கோவாவாக செய்து கொண்டேன். கொஞ்சமாக பயத்தம் பருப்பை வறுத்து, ஊற வைத்து அரைத்துக் கொண்டேன். வெல்லத்தில்  பாகு வைத்துக் கொண்டு, அதில் கொஞ்சம் தேங்காய் துருவல், அரைத்த பயறு விழுது, மற்றும் கோவாவையும் சேர்த்து கிளறியதில் ஒரு நல்ல இனிப்பு கிடைத்து விட்டது. அதற்கு பெயர்தான் கிடைக்கவில்லை. 

வாணலியில் வறுபடும் பயத்தம் பருப்பு 

அரைத்த விழுது, தேங்காய், பால் கோவா 



வெல்லம் பாகாகிறது 

End product

------------------------------


இந்த படத்தில் இருப்பவர் யார் என்று யூகிக்க முடிகிறதா? ஒரு நல்ல அரசியல் தலைவரின் இளம் வயது புகைப்படம்.  

---------------------------


பூஜ்யஸ்ரீ ஓம்காரானந்தா இன்று மாலை(10.05.21) மஹாசமாதி அடைந்தார் என்னும் செய்தி இடியாக இறங்கியது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் மதுரையில் சிகிச்சை பெற்று வந்தார், விமானத்தில் சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்ட நிலையில் அவர் இறைவனடி சேர்ந்து விட்டார். இவர் மஸ்கெட்டிற்கு வருகை தந்த பொழுது இவரது கீதை உரைகளை கேட்டிருக்கிறேன். எளிமையாக இருக்கும். சமஸ்க்ருதம், தமிழ் இரண்டிலும் நிபுணர்.  திருக்குறளிலிருந்து நிறைய மேற்கோள் காட்டுவார். திருக்குறளுக்கும், பகவத் கீதைக்கும் இருக்கும் ஒற்றுமைகளை விளக்கி உரைகள் நிகழ்த்தியிருக்கிறார். திருக்குறளை பள்ளி மாணவர்களுக்கு முழுமையாக கற்றுத் தர வேண்டும் என்பதில் மிகுந்த ஆவல் கொண்டவர்.    ஓம் சாந்தி!

---------------------------------------------

நானும் தில்லையகத்து கீதாவும் இணைந்து எங்கள் பிளாகில் எழுதிய 'நானும் நீயும் சேர்ந்தே செல்லும் நேரமே....'  என்னும் கதை  கிண்டலில் புத்தகமாக வெளியாகியிருக்கிறது. அதோடு ஒரே கருவிற்கு நாங்கள் இருவரும் தனித்தனியாக எழுதிய இரு வேறு கதைகளும் படிக்க கிடைக்கும். திரு. வெங்கட் தன்னுடைய வேலைப்பளுவிற்கு இடையிலும் இதற்கு நேரம் ஒதுக்கி உதவியிருக்கிறார். 


இந்த புத்தகத்தை படித்துக் கொண்டிருங்கள், அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

  









Monday, April 26, 2021

சில விமர்சனங்கள்

சில விமர்சனங்கள்

கர்ணன்

பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசைப் பட்ட படம் பிரம்மாண்டமான தயாரிப்பு. நடிகர்களின் தேர்வும் சிறப்புதான். அவர்களும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். பாடல்கள் சற்று அதிகம் தான் இருந்தாலும் இனிமை. என்ன? கொஞ்சம் அசந்தால் கதாநாயகியின் தோழிகள் கையில் ஒரு தட்டோடு நடனமாட வந்துவிடுகிறார்கள். இத்தனை சிறப்புகள் இருக்கும் இந்த படத்தினை கொஞ்சம் உண்மையாகவும் எடுத்திருந்தால் நன்றாக ரசித்திருக்கலாம் என்ன செய்வது பெரிய ஹீரோக்களை போட்டு படங்கள் எடுக்கும் பொழுது கதைகள் அவர்களுக்கு ஏற்றார் போல் மாற்றப்படுகின்றன. 

பரசுராமரிடம் பாடம் கற்கச் சென்ற கர்ணன் அவரிடம் சாபம் பெற்று திரும்பும் வரை ஒழுங்காக சென்றுகொண்டிருந்த கதை  சுபாங்கி(தேவிகா)யை கர்ணன்(சிவாஜி)  சந்தித்ததும் அவர்கள் பின்னால் சென்று விடுகிறது. காதல் டூயட் கல்யாணம் குழந்தை பிறப்பு என்று கதை பாதை மாறி விடுகிறது. 

கர்ணனும் குந்தியும் சந்திக்கும் இடம் நெகிழ்ச்சி. சிவாஜி நடிப்பதற்கு என்ன நம் கண்களை குளமாக்கி விட்டார். அதேபோல  இந்திரனுக்கு தன் கவச குண்டலங்களை தானமாக கொடுக்கும் இடத்திலும் சிவாஜியின் நடிப்பு சிறப்பு, ஆனால் மாமனாரால் அவமானப் படுத்தப்படும் பொழுது சிங்கம் போல் கர்ஜித்தார், அந்த காட்சியை அந்த காலத்தில் அவருடைய ரசிகர்கள் கைதட்டி ரசித்திருப்பார்கள் இப்பொழுது அரங்கமே கொல்லென்று சிரிக்கிறது. 

என்டிஆர் கொஞ்ச நேரம்தான் வருகிறார் ஆனால் ஆனால் கருத்தைக் கவர்ந்து விடுகிறார்.  "செத்த பாம்பை அடித்து விட்டு நான் அடித்தேன்,நான் அடித்தேன் என்கிறாயே" போன்ற வசனங்கள் ஷார்ப்.

எதிர்பார்ப்புகள் அதிகம் நிறைவேறியது குறைவு

பி.கு.

தனுஷ் நடித்த கர்ணனை பார்க்க முடியாததால்,சிவாஜி நடித்த கர்ணனுக்கு விமர்சனம் எழுதி விட்டேன். ஹி ஹி!

−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−

பரமபதம் விளையாட்டு


கதாநாயகியாக நடித்த நடிகைகளுக்கு வயது ஆக ஆக வாய்ப்புக் குறைகிறது. தங்களை நிலை நிறுத்திக் கொள்ள தங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் நடிக்க விரும்புகிறார்கள். அப்படி திரிஷா நடித்திருக்கும் ஒரு படம்தான் பரமபத விளையாட்டு. முதல் பாதியில் ஆங்கிலப் படத்திற்கு இணையாக விறுவிறுப்பாகவும் புத்திசாலித்தனமாகவும் செல்லும் இந்த படம் இரண்டாம் பாதியில் தொப்பென்று கீழே விழுந்து விடுகிறது. படத்தின் குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் இதுவரை காமெடி நடிகராக இருந்த சாம்ஸ், இந்தப் படத்தில் காமெடி வில்லனாக மாறி இருக்கிறார். 

இடைவேளைக்குப்பிறகு தேவையே இல்லாமல் ஒரு குத்துப்பாட்டோடு ஆரம்பிக்கும் அந்த படம் காட்டில் சுற்றி சுற்றி வருகிறது பெரும்பாலும் சேசிங் என்பதுதான் காட்சிகள் என்பதால் அதை திறமையாக கொண்டு செல்ல முடியாமல் திணறி இருக்கிறார் இயக்குனர் ஒரு அரசியல் படமாக ஆரம்பித்து திரில்லர் படமாக மாறி காட்டிற்குள் காணாமல் போய்விடுகிறது கதை. வில்லன் யார் என்பதையும் யூகிக்க முடிந்து விடுவதால் நமக்கு மிஞ்சுவது அலுப்பும், ஆயாசமும். 



Wednesday, April 21, 2021

ஸ்ரீராமநவமி உற்சவம்

ஸ்ரீராமநவமி  உற்சவம் 



என் சிறு வயதில் திருச்சி உறையூரில் நாங்கள் வசித்த பஞ்சு அய்யர்  ஸ்டோர் என்னும் இடத்தில் வெகு விமரிசையாக ராம நவமியைத் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு உற்சவம், நடத்தப்பட்டு, சீதா கல்யாணமும், கடைசி நாளன்று ஆஞ்சநேய உற்சவமும் நடந்து நிறைவு பெறும். 


ஸ்டோர் என்றதும் ஒண்டு குடித்தனம், காமன்  டாய்லட்  என்றெல்லாம் கற்பனை பண்ணிக்க கொள்ளாதீர்கள். ஒரு காம்பவுண்டுக்குள் பதினேழு தனித் தனி  வீடுகள். ஒவ்வொரு  வீட்டிற்கும் ஒரு குட்டித்திண்ணை, ஒரு பெரிய திண்ணை, ரேழி, முற்றம் எல்லாம் உண்டு. சில்ட்ரன்ஸ் பிளே ஏரியா கூட உண்டு. இப்போதைய பாஷையில் அதை கேட்டட் கம்யூனிட்டி எனலாம். 

ஒவ்வொரு வருடமும் ராம நவமி வருவதற்கு முன் அந்த கொண்டாட்டங்களுக்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு செலவுகள் திட்டமிடப்படுமாம். எங்களுக்கு அதெல்லாம் தெரியாது. ராம நவமிக்கு நான்கு நாட்களுக்கு முன்பே பந்தல் போடுவதற்கு ஆட்கள் வந்து விடுவார்கள். எங்களுக்கு ஒரே சந்தோஷம் தினமும் அந்த பந்தக் காலில் நாலு மூலை தாய்ச்சி விளையாடலாமே! 

செலவுகளை எல்லோரும் பகிர்ந்து கொள்வார்கள். அக்கம் பக்கத்திலும், தெரிந்தவர்களிடமும் வசூல் செய்வதும் உண்டு. ஒரு முறை என் அம்மாவும் அவரின் தோழியான  ஐய்யங்கார் மாமியும் அதிக பட்சம் வசூல் செய்து கொடுத்து பாராட்டு பெற்றார்கள். 

தோரணங்கள் கட்டுவதற்கு என் அப்பா, உஷா என்று ஒரு அக்கா இவர்கள்தான்  பொறுப்பு. அவர்கள் கட் பண்ணி கொடுப்பதை நாங்கள் ஒட்டுவோம்.  எங்கள் வீடு கடைசி வீடு என்பதால் எங்கள் வீட்டுத் திண்ணையில்தான் சாமி படங்கள் வைக்கப்படும். எங்கள் எதிர் வீட்டில் இருந்த தஞ்சாவூர் ராமர்  பட்டாபிஷேக  படம் பிரதான இடத்தைப் பிடிக்கும். இன்னொருவர் வீட்டிலிருந்து ராதா,ருக்மணி சமேத கிருஷ்ணர், இதுவும் தஞ்சாவூர் படம்தான்.எங்கள் வீட்டு ராமர் படமும் இரண்டாவது படியில் இடம் பெறும். 

தினசரி காலையும்,மாலையும் விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் உண்டு.  அதை தவிர தினசரி பூஜை நைவேத்தியமாக பாயசம், வடை. அதை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் ஏற்றுக் கொண்டு செய்வார்கள். அந்த பாயசத்தை போன்ற ஒரு பாயசத்தை வேறு எங்கும்  இன்று வரை நான் சாப்பிட்டதில்லை.  

நடுவில் ஒரு நாள் அகண்ட ராம நாமம் இருக்கும். எங்கள் வீட்டுத்  திண்ணையில் சுவாமி வைத்திருப்பதால், அதற்கு எதிர் திண்ணையில் அமர்ந்து பேட்ச் பேட்ச்சாக ராம நாமம் சொல்வோம். அலுவலகம் பள்ளி செல்ல வேண்டியவர்களுக்கு காலை நேர பேட்ச் ஒதுக்கப்படும். பின்னர் குடும்பத்தலைவிகள், வீட்டில் இருக்கும் பெரியவர்கள் ராம நாமம் கூறுவார்கள். அதில் மதிய நேர பேட்ச்தான் கொஞ்சம் டல் அடிக்கும் என்று கேள்விப்  பட்டிருக்கிறேன். மாலை மீண்டும் சூடு பிடிக்கும். இரவில்  இளைஞர்கள் பங்கேற்பார்கள். ஒரு வருடம் என் மூத்த சகோதரி பொறுப்பு எடுத்துக் கொண்டு  வெவ்வேறு ராகங்களில் ராம  நாமத்தை சொல்ல வைத்ததை பாராட்டி ராமைய்யா மாமா என்றவர் என் அக்காவுக்கு ராம நாமம் பொறிக்கப்பட்ட ஒரு வெள்ளி மை கூடு பரிசளித்தார். 

சீதா கல்யாணத்திற்கு முதல் நாள் இரவு பூப்பந்தல் போடுவது எங்கள் கடைசி மாமா, எங்கள் அம்மா, பஞ்சு வாத்தியார் என்னும் ஒருவர் இவர்களின் வேலை. சீதா கல்யாணத்தன்று முத்து குத்துதல் என்னும் ஒரு நிகழ்ச்சியில் சிறு பெண்களின் கையில் தங்க மோதிரம் அணிவித்து அரிசியை ஒரு உரலில் போடச் சொல்வார்கள். நாங்கள் ஆவலாக காத்திருப்போம். தங்க மோதிரம் அணிந்து கொள்ளலாமே..!

அன்று எல்லோருக்கும் கல்யாண விருந்து. அன்றைய சாப்பாடு எங்கள் வீட்டு உபயம். எங்கள் வீட்டில்தான் சமையல். சமைப்பது, பரிமாறுவது, சுத்தம் செய்வது என்று அத்தனை வேலைகளையும் எல்லோரும் பகிர்ந்து செய்வார்கள். 

தினமும் மாலையில் கச்சேரி இருக்கும். பாடகர்களுக்கு டிபன்,காபி பெரும்பாலும் எங்கள் வீட்டில்தான்.  பஞ்சு வாத்தியார் என்பவர் என் அம்மாவிடம்,"மாமி கச்சேரி பார்ட்டி வந்து விட்டது, அவர்களுக்கு டிபன்,காபி கொடுக்க வேண்டுமே"  என்பார்.  எங்கள் அம்மா உடனே அவல் கேசரி, உப்புமா, ரவா கேசரி, கிச்சடி, சேமியா கேசரி பஜ்ஜி + தேங்காய் சட்னி செய்து விடுவார். அதை சாப்பிடுபவர்கள் எங்களிடம்,"நீ சாப்பிடலையா?" என்றால் நாங்கள் " நாங்கள் அப்பொழுதே சாப்பிட்டு விட்டோமே" என்று சமத்தாக பொய் சொல்லுவோம்.  

கடைசி நாள் மாலை குழந்தைகள் பங்கு பெரும் நடனம், நாடகம், மகளிர் பங்கேற்கும் பின்னல் கோலாட்டம் போன்றவை நடக்கும். எங்களுக்கு நடனம் பயிற்றுவிப்பது உஷா அக்காதான். இதில்  என்ன ஒரு விஷயம் என்றால் அப்போது முழு பரீட்சை(annual exam) சமயமாக இருக்கும். ஒரு பக்கம் பரிட்சைக்கு படித்துக் கொண்டு, இன்னொரு பக்கம் இவை எல்லாவற்றிலும் பங்கேற்போம். எங்கள் பெற்றோர்கள், "பரீட்சை சமயத்தில் என்ன பாட்டும், டான்ஸும்" என்று எங்களை கோபித்ததில்லை. 

வீடு விருந்தினர்களால் நிரம்பி வழியும். மாமாக்கள், அத்தைகள், அவர்கள் குழந்தைகள், இன்னும் தூரத்து சொந்தங்கள், நண்பர்கள், என்று எத்தனை பேர்கள்!.  எங்கள்  மட்டுமல்ல அந்த ஸ்டோரில் வசித்த எல்லோரும் ஏதோ தங்கள் வீட்டு பெண்ணுக்கு கல்யாணம் என்பது போல் தினசரி புத்தாடை அணிந்து, அலங்கரித்துக் கொண்டு,பக்தியோடு சந்தோஷமாக  அனுபவித்த அந்த நாட்கள் மறக்க முடியாதவை. 

ஒவ்வொரு வருடமும் சீதா கல்யாணம் முடிந்த பிறகு அந்த ஸ்டோரில் திருமண வயதில்  இருந்த பெண்களுக்கு திருமணம் நடந்தததாக அம்மா சொல்லியிருக்கிறார்.  அங்கு பாராயணம் செய்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தை கேட்டதனாலேயே அது மனப்பாடம் ஆனவர்கள் உண்டு. என் மூன்றாவது அக்கா ஐந்து வயதிலேயே விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பிழையில்லாமல் சொல்வாளாம். என் சகோதரிகளுக்கு அஷ்டபதி  பந்ததியும்  இதனால்தான் தெரிந்தது. 

அவையெல்லாம் பொற்காலங்கள். கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் திரும்ப கிடைக்காது.  சீதாராமன் அருளால் அப்போது கிடைத்தது. ஜெய் ஸ்ரீ ராம்!

Monday, April 19, 2021

அறியாமையும், அலட்சியமும்

 அறியாமையும், அலட்சியமும் 

பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நன்கு குறைந்திருந்த தீ நுண் கிருமி தொற்று மார்ச்சிலருந்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து இப்போது பழைய தீவிரத்தை அடைந்துள்ளது. இதற்கு மக்களின் அறியாமை மட்டுமல்ல அரசியல் தலைவர்களின் அலட்சியமும்தான் காரணம். 

தேர்தல் அறிவித்து, நடத்தியது தவறு என்று கூற முடியாது. ஆனால் பிரச்சாரத்தை ஊடகங்கள் மூலம் மட்டுமே நடத்தியிருக்க வேண்டும். தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு வந்திருந்த மக்களில் பெரும்பான்மையோர் மாஸ்க் அணிந்திருக்கவில்லை, சமூக இடைவெளியா? அப்படி என்றால் என்ன? என்று கேட்கும்படியாகத்தான் இருந்தது நிலைமை.

நான் சென்னையிலிருந்து ஊர் திரும்பி, வீட்டிற்கு வந்த ஆட்டோ டிரைவரிடம், "இங்கு(பெங்களூர்) கொரோனா தீவிரம் எப்படி இருக்கிறது?" என்று கேட்டேன். அதற்கு அவர், "நானும் ஒரு வருஷமா தேடிக்கொண்டிருக்கிறேன் மேடம், எங்க இருக்கு கொரோனா?" என்றாரே பார்க்கலாம். 

"என்னங்க இப்படி சொல்றீங்க? உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள், இப்படி கேட்கிறீர்களே?"

"இதுக்கு முன்னால வியாதி வந்து யாரும் சாகலையா? அவங்க கொரோனாவினால்தான் செத்தார்கள் என்று என்பது என்ன நிச்சயம்?" கடவுளை கண் முன் வரச்சொல் அப்போதுதான் நம்புவேன் என்பது போல கூறினார். மேலும் இது மருத்துவர்கள் பணம் சம்பாதிக்க செய்த சதி என்று அபாண்டமாக பழி கூறினார். 

"எல்லாத்தையும் முடக்கிப் போட்டு எங்கள பிச்சை எடுக்க வைத்ததுதான் மிச்சம் இன்னிக்கு கார்த்தாலேர்ந்து இதுதான் ரெண்டாவது சவாரி"  என்ற அவரின் ஆத்திரத்தைக் கூட புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் படித்தவர்கள் செய்யும் அட்டூழியம்..!

வீட்டில் சில பொருள்களை மாற்ற வேண்டியிருந்தது. என் மகன் ஆன் லைனில் தேடி ஒரு கடையைத் தேர்ந்தெடுத்திருந்தான்.   அந்த ஷோ ரூம் இருக்கும் சந்தில் ஒன்றிரண்டு பப்கள்(Pub) இருந்தன. அவற்றிலிருந்து இரைச்சலான இசை பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. தெரு முழுவதும் இளைஞர்கள்.. ஒன்றிரண்டு இளைஞிகளும்.. ஒருவரும் மாஸ்க் அணிந்திருக்கவில்லை. எல்லோரும் படித்து வேலையில் இருபவர்களாகத்தான் இருக்கும். இந்த நேரத்தில் பப்பிற்கு செல்ல வேண்டியது ரொம்ப அவசியமா?   

நடிகர் விவேக் மரணமடைந்தது மிகவும் வருத்தமளிக்கும் செய்திதான். ஆனால் அதற்காக அவருடைய இறுதி ஊர்வலத்தில் இத்தனை பேர்கள் கலந்து கொள்ள வேண்டுமா? இவர்களில் எத்தனை பேர்கள் தங்கள் உறவினர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டிருப்பார்கள்? இங்கிலாந்து ராணியின் கணவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முப்பது பேருக்குத்தான் அனுமதியாம். எம்.ஆர்.ராதா இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார் என்று யோசித்துப் பார்க்கிறேன். 

இதற்கிடையில் மக்களை கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தாமல் அதனால்  பலன் ஏதும் கிடையாது என்பது போல மீம்ஸ்! இவர்களையெல்லாம் என்ன செய்தால் தேவலை? நல்ல புத்தியைக் கொடு கடவுளே என்று வேண்டிக் கொள்ளகிறேன். சப்பகோ சன்மதி தோ பகவான்! 


    




Thursday, April 1, 2021

பக்தவத்சல பெருமாள் கோவில் - திருநின்றவூர்

பக்தவத்சல பெருமாள் கோவில் - திருநின்றவூர்


ஒரு முறை கணவராகிய திருமால் மீது ஊடல் கொண்ட திருமகள் கீழே இறங்கி வந்து நின்றதால் இந்த இடம் திரு நின்றவூர் எனப்படுகிறது. 

தன்  மகளாகிய ஸ்ரீதேவியை சமாதானப்படுத்தி மீண்டும் கணவரோடு சேர்த்து வைக்க சமுத்திர ராஜன் முயல்கிறார். "நீ என்னுடைய மகள் இல்லையம்மா, எண்ணெய் பெற்ற தாயாரே நீதான்" என்று புகழ்ந்ததில் மனம் மாறி தாயார் வைகுந்தம் திரும்புகிறாள். அதனால் இங்கு உறையும் தாயாருக்கு 'என்னைப் பெற்ற தாயார்' என்று வாத்சல்யமான பெயர். பெயருக்கு ஏற்றாற்போல் குபேரன் இழந்த செல்வங்களை அவனுக்கு மீட்டுத் தந்த வைபவ லட்சுமி.  தாயார் இத்தனை கருணையோடு இருக்கும் பொழுது, பெருமாள் பக்தர்களுக்கு அருள் செய்யும் பக்தவத்சல பெருமாளாகத்தானே இருக்க முடியும்?


சிறிய கோவில். கொடிமரத்தையும், பலி பீடத்தையும் தாண்டி, நான்கு படிகள் ஏறி கருடனை வணங்கி உள்ளே சென்றால் ஸ்ரீதேவி,பூதேவி தாயார்களோடு நின்ற திருக்கோலத்தில் புன்னகை தவழும் வதனத்தோடு நம் கண்ணையும்,கருத்தையும் கவர்கிறார் பக்தவத்சல பெருமாள். உற்சவர் பக்தராவி பெருமாள் என்று அழைக்கப் படுகிறார். 


எல்லா வைணவக்  கோவில்களையும் போல ஆஞ்சநேயர், ஆண்டாள் சன்னதிகளோடு மற்ற கோவில்களில் காணப்படாத அதிசயமாக ஆதிசேஷனுக்கு தனி சந்நிதி இருக்கிறது. அங்கு புதன் கிழமைகளில் நெய் விளக்கேற்றி பால் பாயசம் நைவேத்தியம் செய்ய ராகு,கேது, தோஷங்களும், சர்ப்ப தோஷமும் நீங்குமாம். ஆதிசேஷனுக்குரிய ஆயில்ய நட்சத்திரத்தில் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் வயிற்று வலி, பல் வலி, கால் வலி போன்ற உபாதைகள் நீங்குமாம். 


108 வைணவ திருப்பதிகளுள் 58வது திருப்பதி. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. இந்த வழியே சென்ற திருமங்கையாழ்வார் இந்த கோவிலில் குடி கொண்டிருக்கும் பெருமாளை பாடாமல் தாண்டிச் சென்று விடுகிறார். தாயார் அவரிடம் பாடல் பெற்று வரும்படி பெருமாளை பணிக்கிறார். பெருமாள் அவரைத்  தேடி செல்வதற்குள் திருமங்கையாழ்வார் திருவிடந்தை தாண்டி, மாமல்லபுரம் சென்று விடுகிறார். அவரிடம் பெருமாள் பாடலை வேண்ட, அவர் ஒரே ஒரு பாடல் எழுதிக் கொடுக்கிறார். அதை பெருமையோடு தாயாரிடம் காட்ட, தாயாரோ,"ஐயோ இவ்வளவு அசடாகவா இருப்பீர்கள்? எல்லா தலங்கள் மேலும் பத்து பாடல்கள் இயற்றும் கலியன், இந்தக் கோவில் மீது ஒரே ஒரு பாடல்தான் எழுதிக் கொடுத்திருக்கிறான், நீங்களும் மறு பேச்சில்லாமல் வாங்கி கொண்டு வந்திருக்கிறீர்கள்.. உங்களை என்ன செய்தால் தேவலை? கலியனிடமிருந்து மிச்ச ஒன்பது பாசுரங்களையும் வாங்கி வாருங்கள்" என்று பெருமாளை துரத்த, அப்பாவி பெருமாள் திருமங்கை மன்னனைத் தேடிச் செல்லும் பொழுது அவர் திருக்கண்ணமங்கை சென்று விடுகிறார். அங்கு பக்தவத்சல பெருமாள் நிற்பதை ஓரக்கண்ணால் பார்த்து விட்ட திருமங்கை ஆழ்வார் அவரையும் மங்களாசாசனம் செய்தாராம். 

பக்தவத்சலப்பெருமாளையும், என்னைப் பெற்ற தாயாரையும் வணங்கி நம் விருப்பங்கள் ஈடேறப்  பெறுவோம். 



Friday, March 26, 2021

ஹ்ருதயாலீஸ்வரர் கோவில் -- திருநின்றவூர்

 ஹ்ருதயாலீஸ்வரர் கோவில் -- திருநின்றவூர் 


கோவிலின் கட்டுமான பணிகள் முடிந்து விட்டன. தான் நினைத்தபடியே சிறப்பாக கோவில் அமைந்து விட்டதில் மகிழ்ந்த மன்னன் கும்பாபிஷேகத்திற்கு நாள் குறித்து விட்டு மகிழ்ச்சியோடு  உறங்கச் சென்றான் பல்லா அரசனான ராஜ சிம்மபல்லவன்.  அவன் கனவில் வந்த சிவ பெருமானோ அவன் கும்பாபிஷேகத்திற்கு குறித்திருக்கும் நாளில் பூசலார் என்னும்  தன்னுடைய பக்தன் திருநின்றவூரில் கட்டியிருக்கும் கோவிலில்  தான் எழுந்தருளப் போவதால் இங்கே காஞ்சிபுரத்தில் அவன் கட்டியிருக்கும் கோவிலில் அன்று எழுந்தருள இயலாது என்று கூறி விடுகிறார். 

மன்னனுக்கு அதிர்ச்சி. அரசனான தான் கட்டிய கோயிலை விட சிறப்பாக வேறு ஒரு கோவிலா? அப்படி என்ன சிறப்பு அந்தக் கோவிலில்? என்று அதைக் காண விரும்பி திருநின்றவூருக்கு வருகிறார். எதிர்பாராமல் மன்னனைக் கண்ட ஊர் மக்கள் திகைக்கிறார்கள். பூசலார் கட்டிய கோவில் எங்கே இருக்கிறது என்று மன்னன் கேட்டதும் மேலும் திகைக்கிறார்கள். பூசலார் கோவில் கட்டியிருக்கிறாரா? இது என்ன புது கதை? கோவில் காட்டும் அளவிற்கு எந்த வசதியும் இல்லாதவராயிற்றே?    ஊருக்கு வெளியே இருக்கும் இலுப்பை மரக்காட்டில் காட்டில் எப்போதும் கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்திருக்கும் அவர் எங்கே எப்படி  கோவில் கட்டுவார்? என்று ஊர் மக்கள் பயத்தோடும், தயக்கத்தோடும், கூற மன்னன் அவரை சந்தித்தே ஆக வேண்டும் என்று அவரைத் தேடிச் செல்கிறான். அங்கு ஊர் மக்கள் சொன்னபடி கண்களை மூடி  அமர்ந்திருக்கிறார் பூசலார். மன்னர் வந்திருப்பதைக் கூறி அவரை உலுக்கி எழுப்புகின்றனர் மக்கள். 

பூசலாரைப் பார்த்ததுமே அவர் சாதாரண மனிதர் இல்லை என்பது புரிந்து விட, அவரைப் பணிந்து," ஐயா, தாங்கள் கட்டியிருக்கும் கோவில் எங்கே? நீங்கள் நாளை அதற்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்திருக்கிறீர்களாமே? நான் கட்டிய கோவிலை புறக்கணித்து, உங்களுடைய கோவிலில் எழுந்தருளுவதில்தான் சிவ பெருமானுக்கு விருப்பம், நான் அந்தக் கோவிலை கான் முடியுமா?" என்று வினவ, பூசலார் விக்கித்துப் போய் விடுகிறார். கண்கள் நீரைப் பெருக்க, "நான் கோவில் கட்டியது என் மனதில் அல்லவா? அதை என் சிவன் ஏற்றுக் கொண்டு விட்டாரா?" என்று புளகாங்கிதத்துடன் தான் மனதில் கோவில் கட்டிய விவரத்தைக் கூற, மானசீகமாக கட்டிய கோவிலை இறைவன் அங்கீகரிக்கிறார் என்றால் அவர் எத்தனை விசுவாசத்தோடு அதை செய்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்த மன்னன் அவர் விரும்பிய வண்ணம் ஒரு கோவிலை நிர்மாணித்து தருகிறான். பூசலார் தன்  இதயத்தில் கோவில் கட்டியதால், இக்கோவில் ஹ்ருதயாலீஸ்வரர் கோவில் என்று அறியப் படுகிறது. 



சென்னையிலிருந்து முப்பத்திமூன்று கிலோ மீட்டர் தொலைவில் திருவள்ளூர் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது. சிறிய கோவில்தான். கிழக்கே பார்த்த ஸ்வாமி சன்னதியும், கருவறைக்குள்ளேயே பூசலாரின் சிலையும் அமையப் பெற்றிருப்பது சிறப்பு. மரகதாம்பாள் என்ற திரு நாமத்தோடு தனி சன்னிதியில்  தெற்கு நோக்கி குடிகொண்டிருக்கும் அம்பிகை.  மூலவர் ஹ்ருதயாலீஸ்வரர் என்பதால் இங்கு வந்து வழிபட இதயக் கோளாறுகள் சரியாகும் என்பது நம்பிக்கை. 

தொண்டை மண்டல கோவில்களுக்கே உரிய கஜபிருஷ்ட விமானம். கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி,  மஹா விஷ்ணு, மற்றும் பிரும்மா.  பிரதான வாயிலின் இரு புறங்களிலும் சூரிய சந்திரர். நவகிரக சந்நிதியை ஒட்டி பல்லவ ராஜாவான ராஜசிம்மனுக்கும் சிலை இருக்கிறது. வெளி பிரகாரத்தில் மேற்கு வாசலைப் பார்த்தபடி அமர்ந்திருக்கும் விநாயகர் கண்ணையும்,கருத்தையும் கவர்கிறார். 




ஒரு முறை சென்று வணங்கிவிட்டு வாருங்களேன்.